விதைகளை எப்போதும் கவனிப்பதில்லை நமது சமுதாயம் ஆனால் விளைச்சல் இல்லை என்று மட்டும் கவலை கொள்கிறது. சிறார்களை பள்ளியில் சேர்த்தல் மற்றும் அவர்களின் விருப்பங்களை அறிதல் என்பது ஒரு கலை. இது பற்றி விரியும் ஒரு பார்வை இதோ...
நமக்கு நம் சமூகத்தின் மீது சில வருத்தங்கள், கோபங்கள் இருக்கும் . என்னுடையது நம் சமூகத்தில் குழந்தைகளின் நிலைமை குறித்தது. என்னுடைய நிலைப்பாட்டை நான் நான்கு விசயங்களாக பிரித்து கொள்கிறேன்.
முதலாவது,
அன்று பாரதி பாடினான்,
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா"
இன்று நம் குழந்தைகள் தமிழ் கட்டாய பாடம் என்பதால் இதன் அர்த்தமே புரியாமல் தான் படிக்கின்றார்கள்!
தமிழின் அடையாளமான ஒரு புலவனின் பிறந்தநாளுக்கு குறுஞ்செய்தி அனுப்பாத நாம் மறுநாள் ரஜினியின் பிறந்த நாளுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொல்கிறோம்.யாருடைய தவறு இது?? தடதடவென பேசுகின்றன இன்றைய குழந்தைகள். ஆனால் நம் தமிழில் இல்லை. பெருமையாகத்தான் இதை சொல்கின்றனர் எல்லா பெற்றோரும்.
"மாமாவை சித்தப்பா என்றமைக்கு
அடி வாங்கினேன் நான்!!
சித்தியை அத்தை என்றமைக்கு
அடிவாங்கினாள் தங்கை!!
அம்மாவை அம்மா என்றமைக்கு
அடிவாங்குகிறது என் குழந்தை!! "
இன்று அந்த பிள்ளை அம்மா, அப்பா என்று அழைக்கும் முன்பே மிஸ், ஸ்கூல் என்று உளறுகிறது. 10 கிலோ குழந்தை 50 கிலோ பாட புத்தகத்தை தூக்கி செல்கிறது. அந்த பிள்ளைகளை ஒலிம்பிக்குக்கு அனுப்பி இருந்தால் பத்து தங்கமாவது கிடைத்து இருக்கும்!!.
Nursery,Pre KG, LKG, UKG எப்பா எவ்ளோ இருக்கு. இரண்டு வயதிலேயே குழந்தையை பள்ளியில் சேர்க்கிறார்கள். விட்டால் வருங்கால குழந்தைகள் நேரடியாக பள்ளியில்தான் பிறக்கும் போல. திருமணத்திற்கு வயது வரம்பு கொடுத்த அரசாங்கம் இந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் வயதை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் கொஞ்ச காலமாவது குழந்தைகளாக இருப்பார்கள்.
இரண்டாவது,
"நான் இப்படி ஆக நினைத்தேன் முடியவில்லை நீயாவது அப்படி ஆக வேண்டும்." உலகிலேயே மிகக் கொடுமையான எண்ணம் இதுதான். உங்களை போல வாழ்வதற்கு குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை வாழவில்லையே.
படம் வரையும் குழந்தையிடம் பயில்வான் ஆக சொல்லாதீர்கள். கொஞ்சம் தூரிகை வாங்கி தாருங்கள், வருங்கால பிக்காசோ என் குழந்தை என் சொல்லி கொள்ளுங்கள். ஏன் என்றால் பெரியவர்கள் மனம் இதற்க்கெல்லாம் உடைவது அல்ல.ஆனால் குழந்தைகள் உடைந்து விடுவார்கள். இது வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும் உங்களுக்கும் கூட இது இருக்கலாம்.
இப்போது நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் "என் தந்தை என்னை இப்படி ஆக்கவில்லை எனவே நான் என் பிள்ளையை இப்படி ஆக்கிடுவேன்."கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள் "என் தந்தையால் என் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் நான் என் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவேன்." அவ்ளோ தான் நண்பரே.
மூன்றாவது,
இன்று நிறைய குழந்தைகள் மேலே உள்ள பாரதியின் மூன்றாம் வரிக்கு செல்வதே இல்லை. ஆம் விளையாட்டு என்பதை கணினியும், தொலைக்காட்சியும் தான் நம் குழந்தைகளுக்கு காட்டுகின்றன.
"மாலை முழுவதும்
விளையாட நேரமில்லை
பேருந்துக்கு நிற்கும்
காலையின் சில
நிமிடங்களிலேயே முடிந்து
விடுகிறது பாதி
விளையாட்டு!
மீதிக்குத்தான் நாள் முழுவதும்
காத்திருகின்றன,
சூரியனும், சாலை ஓரமும்!!"
“எண்பது வயது வரை நன்றாக இருந்தார் என் தாத்தா!
அறுபது வயது வரை ஆடிப்பாடினார் என் தந்தை !
பெருமையாதான் உள்ளது,
கூடவே ஆச்சர்யம்!!
ஐந்து வயதிலேயே
மூட்டினை பிடித்த என் குழந்தையை பார்த்து!! "
தினமும் கொஞ்சம் நேரமாவது குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். இல்லாவிடில் நீங்கள் தான் குழந்தைகள் வாழ்க்கையோடு விளையாடுவதாக அர்த்தம். உங்களுக்கு யார் விளையாட்டு முக்கியம்??
நான்காவது,
"இன்னிக்கு
ஸ்கூல்ல என்ன
ஆச்சு தெரியுமா??..............
.
.
.
தாயிடம் சொல்லவேண்டியதை,
செல்ல நாயிடம்
கூறுகின்றன குழந்தைகள் !!!!"
நாம் இன்று நம்முடைய பரபரப்பான நாட்களில் குழந்தைகளுக்கு என்று நேரம் ஒதுக்குவதே இல்லை. உங்கள் உழைப்பு எல்லாம் பிள்ளைகளுக்கு என்றால் முதலில் பாசத்தை கொடுங்கள் பணத்தை பின்னர் கொடுக்கலாம். தினமும் ஒரு அரை மணி நேரம் உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். பேச்சின் முடிவில் நீங்கள்தான் குழந்தையாக இருப்பீர்கள்.
உங்கள் அம்மா, அப்பா இருந்தால் அவர்களுடன் இணைந்து பேசுங்கள். நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். இதில் ஏற்ப்பட்ட தவறுதான் இன்று முதியோர் இல்லங்கள் இருக்க காரணம்.
எனவே குழந்தைகளை கொஞ்ச காலம் குழந்தைகளாக இருக்க விடுங்கள். ஏனெனில் அந்த உலகத்தில் தான் கவலை இல்லை, கபடம் இல்லை. காத்திருக்கலாம் பழம் கனியும் வரை அப்போதுதான் அது சுவைக்கும்.
தெய்வமும் குழந்தையும் ஒன்று என்றே கூறுவார்கள். தெய்வத்தை கல்லாக்கி விட்டோம், குழந்தையை அந்த முயற்சியில் இருக்கிறோம் என்ற உண்மையே இன்றைய நிலைமை.
இந்த பதிவின் முடிவில் நான் ஒரு உறுதி எடுக்கிறேன்:
1 . என் குழந்தையை நான் 5 வயதில் தான் பள்ளியில் சேர்ப்பேன்.
2. அரசு பள்ளியோ, தனியாரோ கண்டிப்பாக தமிழ் வழி.....
நான் என் குழந்தைக்கு அப்பாவாக இருப்பேன். தப்பா இல்லை. என் குழந்தை தெய்வமாய் இருக்கும். என்னுடன் உறுதி எடுப்பவர் யாரேனும் இருந்தால் பெருமையுடன் சொல்லுங்கள், "நாங்கள் குழந்தைகளை தெய்வமாக வைப்போம் என்று"
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
7 comments:
yes, parents and education method should change!
குழந்தைகளை அது பெண் குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வோம்.ஆண் குழந்தையாக இருந்தால் பணம் சம்பாதிப்பதை மட்டும் குறியாகக் கொண்ட இயந்திரமாக உருவாக்குவோம். இது தானே இன்றைய தமிழ் சமூகத்தின் நிலை
அருமையான கருத்துக்கள் சகோ...இந்த பதிவு இன்ற இளைய தலைமுறைப் பெற்றோருக்கு அவசியம் தேவை...
தினமும் ஒரு அரை மணி நேரம் உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். பேச்சின் முடிவில் நீங்கள்தான் குழந்தையாக இருப்பீர்கள்.
அசத்தல்...
தெய்வமும் குழந்தையும் ஒன்று என்றே கூறுவார்கள். தெய்வத்தை கல்லாக்கி விட்டோம், குழந்தையை அந்த முயற்சியில் இருக்கிறோம் என்ற உண்மையே இன்றைய நிலைமை.
சூப்பர்...பதிவை மிகவும் ரசித்தேன்...அதோடு உங்கள் உறுதிமொழியில் நானும் பங்கேற்கிறேன்....
// காலை முழுவதும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா"//
என்று இருக்கும் பாரதி கவிதையில்
//காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! //
என திருத்தம் செய்யவும் .
நன்று .
பூங்கொத்து!
@ நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றி நண்பரே. தவறுக்கு நான் தான் காரணம். மன்னிக்கவும்.
அருமையான பதிவு. அனைத்து வரிகளும் உண்மை.
Post a Comment