Monday, July 25, 2011

ஆட்சி மாற்றமும் - விலைவாசி ஏற்றமும்..!!!




ஜனநாயக நாட்டில் ஒரு தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் கட்சியை படுதோல்வி அடையச்செய்து எதிர்க்கட்சியை அரியணை ஏற்றுகின்றார்கள் மக்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? கடந்த ஆட்சியின் செயல்பாடுகளில் மக்களுக்கு பலமான அதிருப்தி இருந்திருக்கின்றது. அது தானே?! சரி. அப்படியானால் புதிய ஆட்சி எப்படி இருக்கவேண்டும்? கடந்த ஆட்சியால் மக்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களை, தீர்ப்பதாகவோ அல்லது குறைப்பதாகவோ தானே இருக்க வேண்டும்.?

தமிழகத்தில் ஜெயலலிதாவின் புதிய ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் முற்றாக முடிந்துவிட்டன. ஒரு புதிய ஆட்சி பதவியேற்று 100 நாட்கள் வரையிலும் அதைவிமர்சிக்கக் கூடாது என்று ஏதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதியிருப்பது போல சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சியின் அவலநிலைஅப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. அதைச் சீர் செய்ய இவர்களுக்கு 100 நாட்கள் என்ன 200 நாட்கள் கூட அவகாசம் தரலாம்! அதுவரையிலும் எந்த விமர்சனமும் செய்யாமல் புதிய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரலாம்!.

ஆனால் இன்றைய நிலையில் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது???

பழைய ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்களுக்கு இருந்தது இரண்டே காரணங்கள் தான். தங்களை நேரடியாகப் பாதித்த அந்த இரண்டு முக்கிய பிரச்சினைகள் 1.விலைவாசி உயர்வு, 2. மின் வெட்டு. இந்த இரண்டு காரணங்களாலும் தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பொழுது ஆட்சிமாற்ற தீர்மானத்தை மனதில்போட்டு வைத்துவிட்டார்கள்! தங்கள் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் கூட்டணிகளாகத்தான் இலங்கைப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், குறுநிலமன்னர்கள்... இத்தியாதிகளையெல்லாம் சேர்த்துக் கொண்டார்கள். 

அந்த இரண்டு "ஒன்று"களுக்கும் பக்கத்தில் சேர்ந்து மதிப்பைக் கூட்டிய பூஜ்ஜியங்கள் தான் இவையெல்லாம். அந்த இரண்டு ஒன்றுகளும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பூஜ்ஜியங்களுக்கு எல்லாம் மதிப்பில்லாமல் போயிருக்கும்!! 

அந்த நேரத்தில் மின்வெட்டுக்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் திமுக அரசு சொன்ன காரணங்கள் எதுவும் மக்கள் காதில் விழவே இல்லை. அதே சமயம் இந்த இரண்டு பிரச்சினைக்குமே முக்கிய காரணம் ஊழலால் வந்த தரம் குறைந்த நிலக்கரியும், அளவுக்கு அதிகமான இலவசத் திட்டங்களும் தான் என்ற காரணத்தையும் கூறி.., இதை ஒரு நல்ல அரசு நினைத்தால் எளிதில் சரிசெய்துவிடலாம்..!! என்று பிரச்சாரம் செய்த அதிமுக-வின் மீது மக்கள் தங்களுடைய "குரு பார்வை"யைத் திருப்பினார்கள். 
ஆட்சி மாற்றமும் அமோகமாக அரங்கேறியது. நரேந்திரமோடி பதவியேற்புக்கு வந்ததையடுத்து, "அம்மா எல்லாத்தையும் பேசி முடித்துவிட்டார், இன்னும் ஒருவாரத்தில் குஜராத் கரண்ட் குதித்து வரும்" என்றார்கள். ஆனால் இன்று வரையிலும், "மின்வெட்டு என்பது மக்களைப் பார்த்து குத்தாட்டம் போடுவது" நின்றபாடில்லை! முன்பாவது 2 அல்லது 3 மணி நேரம் காலை நேரங்களில் மட்டும் நிறுத்தினார்கள். ஆனால் இப்பொழுதோ மாலையில் கூட நிறுத்துகிறார்கள். இரவிலும்அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.  

இத்தனைக்கும், விவசாயப்பணிகள் முழுமையாக துவங்கப்படுவதற்கு முன்பே, அதுவும் ஆறு, வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாத நிலையிலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டு, நீர் மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அதிகமான மின்வெட்டுக்கு என்ன காரணம்? 

ஆட்சிக்கு வந்து அறுபதே நாட்களில் எப்படி சரிசெய்ய முடியும்? என்று சிலர் கேட்பது புரிகிறது. ஆனால் இதையே தான் கருணாநிதியும் அன்று சொன்னார். யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்கள் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு, செயல்வடிவம் பெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றாக முழுமை அடைந்து, ஒவ்வொன்றாக அதன் உற்பத்தியை துவக்கும் பொழுது, இன்னும் 6 மாதத்திலிருந்து ஒன்றரை வருடங்களுக்குள், தமிழகத்தின் மின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு,உபரியாகவும் மின்சாரம் இருக்கும் என்று! 
அதையும் மக்கள் காதில் வாங்கி மூளையில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உடனடி நிவாரணத்திற்கு நாங்கள் உத்திரவாதம் என்ற உங்கள் வாக்கை நம்பித்தான் வாக்களித்து அரியணை ஏற்றியிருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்திலிருந்து படிப்படியாக மின்பற்றாக்குறை குறைய ஆரம்பித்து ஒன்றரை வருடங்களில் மின்வெட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால், கலைஞர் சொன்னது உண்மைதான் என்பதை மக்களின் மூளை அவர்களின் மனதுக்கு காட்டிக் கொடுத்துவிடும்! 

அதிமுக-வின் வெற்றிக்கு அடுத்த முக்கிய காரணியான விலைவாசி ஏற்றம் பற்றியும் பார்த்துவிடலாம். அதற்கும் கருணாநிதியிடமிருந்து நிறைய விளக்கம் தரப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஒரு தினக்கூலி தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம் என்பது வெறும் 100 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலும் இருந்தது. ஆனால் இந்த 5 வருட இடைவெளியில் அதுவே 250 லிருந்து 500 வரையிலும் உயர்ந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் எந்தவொரு 5 வருட இடைவெளியிலும் இப்படியொரு கூலி உயர்வு சாத்தியப்பட்டது இல்லை. இந்த ஊதிய உயர்வு என்பது அனைத்து துறைகளிலுமே எதிரொலித்திருக்கிறது.  

அதேசமயம் இந்த ஊதிய உயர்வு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப சம அளவில் விலைவாசி உயராத வண்ணம், வரிவிதிப்புகளில் எந்த உயர்வையும் அறிவிக்காமல்,மக்களின் வாங்கும் சக்தி மிகுதியாக இருக்கின்ற வகையிலேயே தான் நிலைமை இருக்கின்றது என்ற விளக்கமும் திமுக-வால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தவிளக்கமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அவர்களை சமாதானப்படுத்தவும் இல்லை.

அதேசமயம் இந்த விலைவாசி உயர்வை மிகப்பெறும் பிரச்சினையாகக் கையிலெடுத்த அதிமுக, இந்த விலைவாசி உயர்வுக்கு ஒரே காரணம் கருணாநிதி அரசின் நிர்வாகச் சீர்கேடும், மிகமுக்கியமாக அளவுக்கு அதிகமான இலவச மற்றும் தேவையற்ற மக்கள நலத்திட்டங்களும் தான் என்று கடுமையாக விமர்சித்து,  அதைப் புள்ளி விவரங்களுடனும் விவாதப் பொருளாக்கியது. இந்த இலவச திட்டங்களால் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் வந்து அதற்கு பத்தாயிரம் கோடி ஆண்டு வட்டி கட்டுவதாகவும் பிரபல ஆடிட்டர்களை பேட்டி காண்பதும், விவாதம் செய்வதுமாக தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் பரப்புரை செய்யப்பட்டன.

மக்களும் இதை காது கொடுத்துக் கேட்டார்கள், மனதிற்குள் தேக்கி வைத்துக் கொண்டார்கள். ஜெயலலிதா உண்மையை உணர்ந்து பேசுகிறார், பொருட்களின் விலைவாசி எதனால் கொதிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார், ஆகவே அவரை ஆட்சியில் அமர்த்தினால் எரிவதை (இலவச திட்டங்களை) இழுத்து விட்டு, கொதிப்பதை (விலைவாசி உயர்வை) அடக்கிவிடுவார் என்று நம்பினார்கள்.

ஆனால் இன்று நடப்பது என்ன? முன்பு ஒரு டீவி என்றால் இவர்கள் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் என மூன்று தருகிறார்கள்! முன்பு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்றால் அதையும் இலவசமாகத் தருகிறார்கள்! பழைய அரசு கொடுக்காத லேப்-டாப், ஆடுகள், கறவை மாடுகள் எல்லாம் தருகிறார்கள். முன்பு ஒரு லட்சத்திற்கு காப்பீடு என்றால் இவர்கள் நான்கு லட்சத்திற்கு காப்பீடு தருகிறார்கள்! இதேபோல் இன்னும் நிறைய...!! 

இதையெல்லாம் கொடுத்துவிட்டு பட்ஜெட்டுக்கு பதினைந்து நாட்கள் முன்பே, முன்னறிவிப்பு இல்லாமல் 4000 கோடிக்கு நேரடியாகவும், மேலும் பல்லாயிரம் கோடிக்கு மறைமுகமாகவும் மக்கள் தினசரி பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் மேலும் வாட் வரியை உயர்த்தி வரலாறு காணாத விலையேற்றத்திற்கு வாய்க்கால் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்!! யார் தந்தது உங்களுக்கு இந்த அதிகாரம்? விலைவாசியைக் குறைப்பதற்குத் தானே உங்களை அதிகாரத்தில் அமர்த்தினோம்? 

எங்களுடைய இந்த இரண்டு அத்தியாவசிய தேவைகளையும் என்ன விலை கொடுத்தாவது பூர்த்தி செய்வீர்கள் என்றுதானே, புதிய தலைமைச் செயலகத்தை புழக்கடையில் தள்ளியதற்குப் பேசாமல் இருந்தோம், பாதி முடிந்த மெட்ரோ ரயிலை அந்தரத்திலேயே தொங்கவிட்டதை அமைதியாக ஏற்றுக் கொண்டோம், ... ஏன் ஐம்பது நாட்களாக எங்கள் பிள்ளைகள் பாடநூல் இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் அவலத்தையும் மௌனமாக மனதுக்குள் பூட்டிக் கொண்டோமே? 

ஆனால் இந்த இரண்டு "ஒன்று" களையும் முன்பை விட பூதாகரமாக வளர்த்துவிட்டு விட்டீர்கள். மேலே சொல்லியிருப்பது போல் பல பூஜ்ஜியங்களையும் தந்து கொண்டிருக்கின்றீர்கள் முதல்வர் அவர்களே! அதன் மதிப்பு கூடுகிறது. இன்னும் நாலரை வருடங்கள் என்று நினைக்க வேண்டாம். அடுத்தது உள்ளாட்சி தேர்தல். அதற்கடுத்த ஒன்றரை ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல். மக்கள் உடனுக்குடன் கணக்கை தீர்த்துவிடுவார்கள்!! 
காப்பீட்டுத் திட்டத்திற்கு முன்பை விட அதிகம் செலவிடவிருக்கும் தொகையை மிச்சப்படுத்தினாலே, இப்பொழுது உயர்த்திய வரியின் அளவிற்கு ஈடான வரி அளவை குறைத்து, வரலாறு காணாத விலைவீழ்ச்சியை வாக்களித்த மக்களுக்கு பரிசாகத் தந்திருக்கலாமே? கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் வாழ்த்தியிருப்பார்களே?! 

அம்மையார் அவர்களே இந்தமுறை தங்கள் வாக்கை மிடில்கிளாஸ் மாதவர்கள் மாற்றிப்போட்டதால் தான் நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கின்றீர்கள். முந்தைய ஆட்சியின் இலவசங்களை அனுபவித்தவர்கள் போட்ட வாக்கினால் அல்ல! இனி நடுத்தர வர்க்கத்தினரின் மாத பட்ஜெட்டில் சிறிய துண்டு விழுந்தாலும், உங்கள் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையே விழுந்துவிடும்!! புரிந்து கொள்ளுங்கள்.  
இந்த வரி உயர்வினால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால்..., யூனிட் மின்சாரம் ஆறு ரூபாய்க்காவது வாங்கி மின் தடையையும் போக்காவிட்டால்.... இப்பொழுது நீதிமன்றம் உங்கள் சட்டத்திருத்தத்தை நிராகரித்து தூக்கியெறிந்திருக்கிறது, அதேப் போன்று மக்கள் மன்றமும் உங்களிடம் கொடுத்த செங்கோலை கைமாற்றத் தயங்காது!!!

கழுகிற்காக




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



 


11 comments:

Anonymous said...

ஆனால் இன்று நடப்பது என்ன? முன்பு ஒரு டீவி என்றால் இவர்கள் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் என மூன்று தருகிறார்கள்! முன்பு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்றால் அதையும் இலவசமாகத் தருகிறார்கள்! பழைய அரசு கொடுக்காத லேப்-டாப், ஆடுகள், கறவை மாடுகள் எல்லாம் தருகிறார்கள். முன்பு ஒரு லட்சத்திற்கு காப்பீடு என்றால் இவர்கள் நான்கு லட்சத்திற்கு காப்பீடு தருகிறார்கள்! இதேபோல் இன்னும் நிறைய...!!

same tricks...........

வைகை said...

மக்களுக்காக(?) அயராது உழைத்த தீர்க்கதரிசி கலைஞர்! அவர் அளவுக்கு அம்மாவால் முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! இதே போல் தொடர்ந்து எழுதுங்கள்!

Bala said...

நான் திமுகவில் ஆயுட்கால உறுப்பினராக சேர விரும்புகின்றேன். உறுப்பினர் படிவம் எங்கு கிடைக்கும்? கழுகு குழுமத்தில் இணைந்தால் கிடைக்குமா? இல்லை கட்டுரை ஆசிரியர் கொக்கரக்கோ கொடுப்பாரா?

Karthick Chidambaram said...

நல்ல பதிவு.

கொக்கரக்கோ..!!! said...

@பாலா..,

//நான் திமுகவில் ஆயுட்கால உறுப்பினராக சேர விரும்புகின்றேன். உறுப்பினர் படிவம் எங்கு கிடைக்கும்? கழுகு குழுமத்தில் இணைந்தால் கிடைக்குமா? இல்லை கட்டுரை ஆசிரியர் கொக்கரக்கோ கொடுப்பாரா?//

நான் திமுக உறுப்பினர் இல்லையாதலால், எனக்கு அதுபற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் நம் இணையத்தில் புதுகை அப்துல்லா என்ற திமுக வின் பொ.கு.உறுப்பினர் இருக்கிறார். அவரிடம் கேட்டால் உங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள ஆவண செய்வார்!

அடுத்து, கழுகில் திமுக எதிர்ப்பாளர்கள் தான் அதிகம் இருப்பதாக நினைக்கிறேன். அதனால் அங்கு வந்தால் உங்கள் எண்ணம் ஈடேறாது!

Venkat said...

நல்ல பதிவு.மக்கள் சிந்திக்க வேண்டும்.

Bala said...

"நான் திமுக உறுப்பினர் இல்லையாதலால், எனக்கு அதுபற்றி அதிகம் தெரியவில்லை"


ஹ ஹ ஹ
ஹா ஹா ஹா
ஹி ஹி ஹி
ஹீ ஹீ ஹீ
ஹு ஹு ஹு
ஹூ ஹூ ஹூ
ஹெ ஹெ ஹெ
ஹே ஹே ஹே
ஹை ஹை ஹை
ஹொ ஹொ ஹொ
ஹோ ஹோ ஹோ
ஹௌ ஹௌ ஹௌ......

சரி அப்புறம்......?

koodal kanna said...

ஆனால் இன்று நடப்பது என்ன? முன்பு ஒரு டீவி என்றால் இவர்கள் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் என மூன்று தருகிறார்கள்! முன்பு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்றால் அதையும் இலவசமாகத் தருகிறார்கள்! பழைய அரசு கொடுக்காத லேப்-டாப், ஆடுகள், கறவை மாடுகள் எல்லாம் தருகிறார்கள். முன்பு ஒரு லட்சத்திற்கு காப்பீடு என்றால் இவர்கள் நான்கு லட்சத்திற்கு காப்பீடு தருகிறார்கள்! இதேபோல் இன்னும் நிறைய...!!

அபி அப்பா said...

ஆகா பாலாவின் வாதம் என்னை புல்லரிக்கை வைக்குது. இத்தனை வாதத்திறன் கொண்ட உங்களுக்கு கார்திக் கட்சியிலே கதவு பப்பரக்கான்னு திறந்து இருக்கும் போது ஏன் திமுகவுக்கு வரனும்னு ஆசைப்படுறீங்க?

Bala said...

அபி அப்பா......@ நம்ம கொக்கரக்கோ எம்புட்டு கஷ்டப்பட்டு ஒரு 'சோக்கு' அடிச்சிருக்காரு. அதுக்கு சிரிச்சா, வாதம்ன்னு சொல்றீங்க நீங்க. உலகத்துலேயே ஒடம்பிறப்புகள் மட்டும்தான் அறிவாளிங்க. மத்த எல்லாரும் முட்டாப்பசங்க. அதுனால ஒங்க கட்சில ஒடம்பொறப்பா சேந்தா உங்ககிட்ட ஒட்டிக்கிட்டு இருக்குற 'அறிவு' கொஞ்சமாவது எனக்கும் வராதா அப்படின்னு ஒரு நப்பாசைதான்....!

முதல்ல கொக்கரக்கோ வந்தாரு. அடுத்தது நீங்க வந்திருக்கீங்க. நம்ம கட்சியோட இணைய அலுவலகத்துல வரிசையா ஒடம்பிறப்புகள் வர்றத பாத்தா, அடுத்தது விருச்சிககாந்தும் வந்து குந்திக்கிடுவாறுன்னு நெனைக்கிறேன். வருக! வருக! ஒடம்பிறப்புகளே வருக!

கழுகு said...

// நம்ம கட்சியோட இணைய அலுவலகத்துல //

பாலா @ உமது நகைச்சுவையில் மெய் சிலிர்த்துப் போனோம்.

சந்தோசத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறோம் எவ்வளவு அழகான புரிதலுக்கு தாங்கள் சொந்தக்காரர் என்று வாழ்த்துக்கள்!

அடிக்கடி வருக எம்மை களிப்பூட்டுக தோழமை!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes