கழுகு தோழமைகளே.. வணக்கம். நம் மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும் தீபாவளி பக்கமா வந்திட்டுது..நம்மில் பலர் வேலை செய்கிறோம்,கை நிறைய போனஸ் வரலாம். சுய தொழில் புரிபவர்க்கும் ஓய்வு என்ற வகையில் குடும்பத்தோடு உறவாட ஒதுக்கப்போகிற மகிழ்ச்சியான தருணங்கள் நமக்காக காத்திருக்கின்றன. இந்த வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் உண்மையாகவே மகிழ்வாக இருக்கிறோமா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதன்பின் வரும் நாட்களில் ஏன் அதுபோல் மகிழ்வாக உணர்வதில்லை என்பதையும் சற்று உள்நோக்கிப்பார்ப்பது அவசியமாகத்தான் தெரிகிறது..:)
நமது மனதில் வரும் சஞ்சலங்களுக்கு, துன்பங்களுக்கு பல்வேறு காரணம் இருக்கலாம்.பணம், உறவுகள், நட்புகள் குடும்பம் வேலை என காரணம் பலவாக இருந்தாலும் அத்தனையிலும் அடிநாதமாக மறைந்து இருக்கும் முக்கிய காரணத்தைப்பற்றிப் பார்ப்போம்.
அதாவது நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம், என்ன உணர்கிறோம் என்கிற விழிப்புணர்வு இல்லாததே நமது இத்தகைய துன்பங்களுக்கு காரணம்.அதாவது எந்த பிரச்சினையின்போதும் நாம் போதுமான விழிப்புணர்வுடன் இருப்பதில்லை என்பதை உணராததே முக்கிய காரணம். இதனால்தான் நம்முடனே நாம் முரண்பட்டுக்கொண்டே இருக்கிறோம்:(
நமது செயல் ஒரு திசையில் செல்கிறது. சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது. உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது.இந்த சூழ்நிலையில் நாம் இயங்கும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. இதை ஒருங்கிணைக்க தேவை விழிப்புணர்வு. இது இல்லாததே எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை ஆகும். இந்த புரிதல் நமக்குள் முதலில் வரவேண்டும்.
விழிப்புணர்வின்மையை சரிசெய்தால் நாம் எளிதில் பிரச்சினைகளில் பாதிப்புகளில் இருந்து நாம் வெளிவர இயலும். இதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு விசயம். கவனம் நிறைந்திருத்தல், சுயபிரக்ஞையோடு இருத்தல்தான், அப்படி என்றால் என்ன? அதை நாம் எப்படி செயலுக்கு கொண்டு வருவது?
நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள்.மிகச்சிறிய அசைவுகளைக்கூட அதாவது நடத்தல் பேசுதல் சாப்பிடுதல் குளித்தல் ஆகிய எந்த ஒரு சிறிய செயல்/அசைவுகளைக் கூட கவனியுங்கள். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருங்கள்...
சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிடுங்கள். கவனம் நிறைந்து சாப்பிடுங்கள். இது அபரிதமான திருப்தியைக் கொடுக்கும்.ருசியும் அற்புதமாக இருப்பதும் தெரியும். அதேபோல் நுகர்தல், தொடுதல், காற்றை உணர்தல் என கவனித்தலோடு இருங்கள்.
உங்கள் மனதில் கடந்து செல்லும் ஒவ்வொரு எண்ணத்தையும் கவனியுங்கள்.
உங்களை ஆட்கொள்கிற ஒவ்வொரு ஆசையையும் கவனியுங்கள்.அந்த , ஆசைகள் எண்ணங்கள் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நாம் செய்ய வேண்டியது கவனித்தல் மட்டுமே.,
இதை மீண்டும் மீண்டும் நீங்கள் மறக்கலாம். கவனித்தல் அற்றுப்போய் மனம் எங்கோயோ ஓடிவிடலாம். அதற்காக துளிகூட மனம் வருந்தாதீர்கள். அது இயல்பானது. உங்களுக்கு மீண்டும் தவறிவிட்ட உணர்வு வந்தவுடன் மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள். மறந்துபோனோம் என்ற கடந்தகாலத்தை நினைத்து அதை மீண்டும் உருவாக்கி மனம் வருந்தாதீர்கள். எத்தனை முறை தவறினும் மறுபடியும் கவனித்தலைத் தொடர்வதே நீங்கள் செய்ய வேண்டியது:)
இந்த நொடிப்பொழுதில் வாழுங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு கவனித்தலோடு இருக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களது செயல்,சிந்தனை,உணர்வுகள் ஒருங்கிணைய ஆரம்பித்துவிடும். உங்களது அவசரத்தனம் குறையும். நீங்கள் அப்படி கவனிக்கும்போது எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்ற உங்களது மனம் தனது பேச்சைக் குறைத்துவிடும்.ஏனெனில் பேச்சாக மாறிவந்த அதே சக்தி இப்போது கவனித்தலுக்கான சக்தியாக, நிறைகவனமாக மாறிவிடும்.
நீங்கள் உங்கள் உடல் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதோடு செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடல் குறித்த நிறைகவனம்தான் முதல்படி. இதேவிதமாக நாம் நமது ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும்.
பின்னர் உங்களது எண்ணங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள் உங்கள் உடல்மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்கள் எணணங்கள் மீது செலுத்த தொடங்குங்கள். இதை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களின் அனுபவங்களை கொஞ்ச நாள் கழித்து பகிர்ந்து கொள்ளுங்கள்...
கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
8 comments:
hmmm... interesting
செயல், சிந்தனை மற்றும் உணர்வு இவை ஒருமித்தால் நிச்சயமாக நாம் சாதனையாளரே!
நாம் நம்முடனேயே முரண்படுகிறோம். பின்னர் அவன் சரியில்லை அது சரியில்லை என்று புகார் புராணம் பாடுகிறோம்.
விவேகானந்தர் கூறுவது போல "விழுமின்" விழித்திருப்போம்.
முதலில் நம்மை ரசிப்போம். பிறகு நம்மை சுற்றியுள்ளவர்களையும் ரசிப்போம். நாம் நமக்காக பெருமையடைவோம். முகத்தில் எப்போதும் புன்னகையோடு காட்சியளிப்போம்.
ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ரசித்து நாம் நமக்காக வாழ்வோம்.
மிகவும் அருமையாக பதிவிட்ட சிவாவுக்கு என் பிரத்யேகமான நன்றிகள் பல!
நல்ல பகிர்வு ...நன்றி ....
பலர் இன்னும் சூடாக இருந்தால் தான் சுவையாக இருக்கும் என்று மூக்கை நம்பி நாக்குக்கு வேலை கொடுக்க மறந்து, அவசர கதியில் இயங்கி கொண்டிருக்கிறார்கள்... பலருக்கு புரியாது.. புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் தனி பதிவு போட வேண்டும்
// நீங்கள் அப்படி கவனிக்கும்போது எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்ற உங்களது மனம் தனது பேச்சைக் குறைத்துவிடும்.ஏனெனில் பேச்சாக மாறிவந்த அதே சக்தி இப்போது கவனித்தலுக்கான சக்தியாக, நிறைகவனமாக மாறிவிடும்.///
இந்த வரிகளுக்கு நன்றி..... இவற்றை நான் பின்பற்றவேண்டும் என நினைக்கிறேன் .....
(அருமையாக இருந்தது நன்றி ... )
உங்களது எண்ணங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள் உங்கள் உடல்மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்கள் எணணங்கள் மீது செலுத்த தொடங்குங்கள்@
நிச்சயமாக இது எம்மில் பாரிய மாற்றத்தை உண்டுபண்ணும். அரோக்கியமான கருத்துப் பகிர்வு. நன்றி
//இந்த நொடிப்பொழுதில் வாழுங்கள்//
அருமையான சிந்தனை....
//இந்த நொடிப்பொழுதில் வாழுங்கள்.//
ஆழ்ந்து படிக்க சொல்கிறது வரிகள் ஒவ்வொன்றும்...! சுலபமாக புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிப்பூச்சு எதுவும் இன்றி இயல்பாக இருக்கிறது கட்டுரை.
மிக அருமையான பதிவு. பாராட்டுகள் சிவா.
நல்ல கருத்துக்கள்.
Post a Comment