பதிவுகள் மூலமாக விழிப்புணர்வூட்டும் கழுகின் சீரிய பயணத்தில் நாம் ஆங்காங்கே சில வாழ்வியல் யதார்த்தங்களையும் மனிதர்களையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்
செய்திகளை பரிமாறி அதன் மூலம் உண்மையை உணரச் செய்வதோடு மட்டுமில்லாமல், மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் எமது வாசகர்களுக்கு எடுத்துக் காட்டி, அதற்கு எமது பங்களிப்பு என்ன என்கிற அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம்......
சகோதரி அமுதா தூத்துக்குடியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் கணிணித் துறை இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். மேற்கல்வி கற்பதற்கு ஏற்றதொரு புறச்சூழல் அமையப் பெறாத காரணத்தால் சகோதரி வங்கியில் கல்விக் கடனாக ஒவ்வொரு செமஸ்டருக்கும் ரூபாய். 28,000/ பெற்று வருகிறார், ஆனால் அவரின் ஒரு செமஸ்டருக்கான செலவு ரூபாய் 45,000 ஆகிறது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ரூபாய் 17,000 செலுத்தி படிப்பை தொடர சிரமப் படும் சூழலில் இருக்கிறார்.
எமது குழுமத் தோழமை கெளசல்யாவின் மூலம் இச்செய்தியை அறிய முடிந்தது. இதனை கழுகு குழுமத்தில் பகிர்ந்து இயன்றவர்களை வலியுறுத்தல்கள் எதுவும் இன்றி சுயவிருப்பத்துடன் உதவிகளை ச் செய்யச் சொன்னோம். மேலும் இதனை வலைப்பூவில் இட்டு மிகைபட்ட பேர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று தீர்மானித்ததின் விளைவு இந்த கட்டுரையாய அமைந்துள்ளது.
கல்விக்காய் போராடும் போது அங்கே வறுமை வந்து வழக்கு தொடுப்பதை எப்படியான பார்வையாக பதிவது என்ற கவலையில் வார்த்தைகள் எல்லாம் தயங்கி தயங்கி களமிறங்குகின்றன. தாய் மட்டுமே உள்ள சகோதரி அமுதாவின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு கூட பொருள் ஈட்டும் படியாக வேறு யாரும் இல்லை என்ற கூடுதல் செய்தி நம் இதயத்தை கனக்க வைக்கத்தான் செய்தது.
வறுமை என்பதின் சீற்றம் இளமையில் வந்து மோதும் போது அதனை முழுத் தெம்புடன் எதிர் கொள்வது சிரமம் என்று அறிந்துதானோ அவ்வை பாட்டி...
" கொடிது கொடிது வறுமை கொடிது...
அதனினும் கொடிது இளமையில் வறுமை "
என்று எழுதி வைத்து சென்றிருப்பாரோ என்ற எண்ணம் நம்மை சம்மட்டியால் அடிக்கத்தான் செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் ஓராயிரம் அமுதாக்கள் இப்படி இருக்கலாம், எல்லோருக்கும் சென்று உதவும் புறச்சூழலையும், வசதியையும் வாழ்க்கை எல்லோருக்குக் கொடுத்து விடவும் செய்யாது.
நமது வாழ்வின் போக்கில் எதிர்படும் இது போன்ற செய்திகளை உள்வாங்கிக் கொண்டு நம்மால் ஆன உதவிகளை சிறு சிறு தொகையாக இருந்தாலும் சக்திக்கு ஏற்றவாறு கொடுத்து சிலரின் வாழ்க்கையின் வெளிச்சத்தை உண்டாக்கும் ஒரு காரணியாக நாம் இருக்கலாம்.
சகோதரி அமுதாவின் கல்வி உதவிக்கு இயன்ற உதவியை செய்ய விரும்புபவர்கள் கழுகி ற்கு மின்னஞ்சல் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவிப்பதன் பேரில் எங்கள் குழும தோழமையின் வங்கி கணக்கு விபரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதன் பிறகு நீங்கள் பணம் அனுப்பிய விபரத்தை கழுகு மின்னஞ்சலுக்கு தெரிவித்து விட்டீர்களேயானால், மொத்தமாய் பணத்தை சகோதரி அமுதாவின் கல்லூரியில் நேரிடையாக நாம் அதை செலுத்தி விட்டு அதற்கான ரசீது மற்றும் பணம் அனுப்பியவர்கள் விபரம் எல்லாவற்றையும் ஒரு தனிப்பதிவில் இட்டு முழுவிபரங்கள் தெரிவிக்கிறோம்.
இப்போது கூட இந்த செமஸ்டர் வரைக்குமான அவரின் தடங்கலை சரி செய்யவே கழுகு முயல்கிறது. மீதமுள்ள செமஸ்டருக்கான பணத்தை இன்னும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடையாளம் காட்டி அவர்கள் மூலம் செய்து முடிக்கவும், தற்போது கிடைக்கும் கூடுதல் பணத்தை கல்லூரியில் முன்பணமாக செலுத்தவும் கழுகு திட்டமிட்டு இருக்கிறது.
கழுகு மின்னஞ்சல் முகவரி: kazhuhu@gmail.com
உள்ளன்போடு இதனை வாசித்து உதவி செய்யப் போகும் அனைவருக்கும் கழுகின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
6 comments:
கடவுளின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். என்னால் முடிந்த உதவியை செய்வதற்காக காத்திருக்கிறேன். விவரங்களை தெரிவிக்கவும்.
முயற்சி திருவினையாக்கும்....
கழுகின் ஒவ்வொரு பயணமும் அருமையாக இருக்கிறது.. உதவ முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது
அடியிற்கண்ட சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
கல்விக்கு உதவி செய்யுங்கள்.
இந்த பதிவை படித்துப் பாருங்கள்.
நன்றி.
இந்த மாணவி எந்தக் கல்லூரியில் பயில்கிறார் என்ற தகவல் தர முடியுமா ? . இதே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவள்தான் நானும் . என்னால் ஆன உதவிகளைச் செய்ய தயாராய் உள்ளேன் .
Post a Comment