Friday, December 30, 2011

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் II




நீ உன் பெற்றோர்களை கொல்லாதவரை..நீ சுதந்திரமடைய முடியாது- புத்தர்

அதிர்ச்சியாக இருக்கிறதா? இருக்கத்தானே செய்யும்.. ஆனால், புத்தர் ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் என்று யோசித்தால் விஷயங்கள் புரிபடும். நீங்கள் இப்போது வருத்தப்பட்டுகொண்டிருக்கும் 99 சதவிகித விஷயங்கள் உங்களுக்கானதே அல்ல. அது எதோ ஒருவகையில், உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் சிறுவயதிலிருந்தே திணித்த எண்ணங்கள் தான். அதாவது, அவர்களின் எண்ணங்களை சரிவர நிறைவெற்ற முடியவில்லையே என்றுதான் நீங்கள் வருந்திகொண்டிருக்கிறீர்களே தவிர..அது உண்மையில் உங்களுடைய சொந்த எண்ணமாய் இருப்பதற்கு 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருக்கிறது.

இன்னும் ஆழமாய் போவோம்.. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது ஒரு வெறும் வெள்ளைத்தாளாய் தூயமனத்தோடு பிறக்கிறது. அதனால்தான் குழந்தைகளிடம் அவ்வளவு கவர்ச்சி. அப்படி தூயமனத்தோடு பிறக்கும் குழந்தைகள் தன்னகத்தே ஏகப்பட்ட தனித்தன்மையையும், திறமைகளையும் கொண்டிருக்கும். அதை எல்லாம் வெளிகொண்டுவர முடியாதபடி, நம் பெற்றோர்களும், சமுதாயமும் அவர்களை அடக்கி, முடக்கிப்போட்டு, அவர்களை மிரட்டி, தங்கள் கருத்துக்களை திணித்து, அந்த கருத்துக்களை மீறும்போது, அவர்களை கண்டித்து தண்டித்து, அவர்களின் வெள்ளைத்தாளில் கிறுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.

அவர்களுக்கு வீடு வாங்க ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு படாடோபமாய் வாழ ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு பெரிய சம்பளங்களில், கௌரவங்களில் ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு அழகழகான ஆடைகளில் ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை மீது பயம்- உங்களிடம் திணித்தாயிற்று.

அவர்களின் இயலாமையால், அவர்களின் கருத்துக்களை உங்கள்மீது திணித்துவிடுகிறார்கள். இப்போது, அவர்களின் ஆசைகளை உங்கள் ஆசை என்று நம்பிக்கொண்டு, நீங்கள் வாழ்வோடு போராடுகிறீர்கள், உங்களாலும் முடியவில்லையா? எதற்கு இருக்கின்றன பிள்ளைகள்.. திணி..அதுவும் பைத்தியமாய், திணித்ததை தன்னுடையது என்று நம்பி திரியட்டும்.

இப்படி, திணிக்கப்பட்ட கருத்துகளுக்காக ஓடியதில் ஒரு சிலர், திடீரென்று நின்று நிதானித்து, தங்களின் நிஜமான முகத்தை கண்டுகொண்டனர். தான் ஒரு வெள்ளைத்தாள் என்பதையும், தன்மீது பெற்றோர் உட்பட அனைவரும் கிறுக்கிதள்ளி இருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்டனர். அப்படிப்பட்டவர் சொன்னதுதான் அந்த முதல் வரி.

அதற்காக நிஜ தந்தைதாயை கொல்ல சொல்லவில்லை. அதில் ஒரு லாபமுமில்லை. அவர் உங்களுக்குள் இருக்கும் அவர்களின் திணிக்கப்பட்ட எண்ணங்களை கொல்லச் சொல்கிறார். அப்படி அந்த கிறுக்கல்களை அழித்தாலே ஒழிய..நீங்கள் நிம்மதியடைய முடியாது.


இப்படி, தன்னுடைய சுயநலத்திற்காக, உங்களை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டிருக்கும் அவர்களின் எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள். உங்களுக்கான ஒரு வாழ்வை வாழுங்கள்..

உங்கள் கடைசி மூச்சுவரை, இயற்கை அன்னை உங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறாள். நீங்கள் உங்கள் சொந்த இயல்புக்கு திரும்பிவிடுவீர்கள். நீங்கள் உங்களுக்கான ஒரு வாழ்வை சிறப்பாக வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை..நம் உயிர்பிரியும் அந்த கடைசி கணம் வரை அவளுக்கு இருக்கிறது. அப்போதும் நீங்கள் இதை உணரவில்லை என்பதால்..சோகமாய் உங்களிடமிருந்து விடைபெறுகிறாள்.


 
ழுகிற்காக  
உங்கள் ரங்கா




(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)

5 comments:

saidaiazeez.blogspot.in said...

நான் என் மகளுக்கு ஒரு கரடி பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவள் அதை பயன்படுத்தவேயில்லை. நான் அந்த கரடியை வாங்கியதின் முக்கிய காரணம், நான் சிறுவனாக இருக்கும்போது அந்த பொம்மைக்காக ஏங்கியவன். அந்த ஏக்கம் என் மகளுக்கு வரக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனால் அவளுக்கோ ஏக்கம் மடிக்கணனியின் மீது. அது புரியாமல் நான் கொடுத்ததோ கரடி பொம்மை! அவளுக்கு எது தேவையோ அதை கொடுப்போம். மேலும் அவளுக்க் முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து வழிநடத்துவோம்

cheena (சீனா) said...

ரங்ஆவின் பக்கங்கள் அருமை - நம் மீது திணிக்கப்படும் கருத்துகள் கொள்கைகள் எல்லாமே நமக்குப் பெரும்பாலும் பிடிக்காதவை தான். இவற்ரைப் புறந்தள்ள அறிவுறுத்தும் இவ்வுரை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

பின்தொடர்பவதற்காக

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

SURYAJEEVA said...

பெற்றோர்களின் கருத்துக்களும் சமூகத்தின் கருத்துக்களும் தான் நம்மை வடிவமைக்கின்றன... சுயமாய் சிந்திப்பது என்றால் நாம் கானகத்திலேயே குழந்தையாய் தொலைந்து போயிருக்க வேண்டும்.. அப்பொழுதும் அனைத்து மிருகங்களையும் நாம் காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவோம்.... வித்தியாசமாய் ஆரம்பித்து உள்ளீர்கள்... முடியும் பொழுது விரிவாய் விவாதிப்போம்..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes