அத்து மீறி அடுத்தவர் வாழ்க்கையிலும் விருப்பு வெறுப்பிலும் மூக்கு நுழைத்து கருத்துக்களை திணிப்பது நமது கலாச்சாரமாய் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம்...! பக்கத்து வீட்டுக்காரன் என்ன சம்பாதிக்கிறான்...அவன் பையன் +2 வில் எத்தனை மார்க்? அவரது மகள் யாரையும் காதலிக்கிறாளா.. என்று எத்தனை எத்தனை அத்துமீறல்கள் நடக்கின்றன நமது சமுதாயத்தில்...!
தன்னைப்பற்றி சிந்திக்க திராணியில்லாமல் தான் தோன்றித்தனமாக அடுத்தவரை பற்றி சிந்திக்கவும் விமர்சனம் செய்யவும் ரொம்ப வசதியாய் பழகிக் கொண்ட ஒரு வக்கிரபுத்திதான் அடுத்தவன் கதை பேசுவது..... அது அலுவலகம் ஆகட்டும் டீக்கடை ஆகட்டும்... வீட்டு வாசலில் அமர்ந்து பேசும் பெண்களாகட்டும், குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் அந்த நேரத்தில் பத்து வீட்டு சமாச்சாரத்தை பலகாரம் செய்யாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராமல் போனது வியாதியா? இல்லை சமுதாயத்தை பிடித்துள்ள பிணியா?
நண்பர்கள் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி விடுமுறை தினத்தில் ஒரு பெண் அவளுக்குப் பிடித்த ஆடையை...ஒரு ஸ்கர்ட்டும் டி-சர்ட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய கணவனுடன் ரோட்டில் செல்கிறாள்.. கையிலும் இடுப்பிலுமாக இரண்டு குழந்தைகள் ...பக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்கிறார்....ஒரு கேவலமான வார்த்தையை கூறி இவள் கண்டிப்பாய் அப்படி பட்டவள் என்று அடித்து சொல்வேன் என்று...... !
ஏன் அவள் உடுத்தி செல்லும் ஆடை அவளது கணவனுக்கு ஒத்துக் கொள்கிறது....அவளும் அது பற்றி ஒரு அக்கறை இல்லாமல் சாதரணமாய் அந்த பெண்ணும் சென்று விட்டாள் ஆனால் சமுதாயம் அது பற்றி ஒரு பார்வை வைத்திருக்கிறது....இப்படி உடுத்தினால் இப்படி பட்டவள் ...அப்படி உடுத்தினால் அப்படிபட்டவள் என்று அடுத்தவரின் பிரைவசி என்று சொல்லக்கூடிய தனி உரிமையில் அத்து மீறி நுழைந்து ஆர்ப்பாட்டமாய் சோபா போட்டு உட்கார்ந்து கொள்வது என்று அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பல நேரங்களில் திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கையில் தனது மூக்கை நுழைத்து மீடியாவும் காசு பார்த்து இருக்கிறது. அரசியல்வாதிகள் கூட கருத்துப்போரை மறந்து அடுத்தவரின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கும் போக்கில்தான் பெரும்பாலும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். அடுத்தவன் வாழ்க்கை பற்றி .. ஏன் இவ்வளவு அக்கறை நமது மக்களுக்கு? ஒருவனின் சொந்த விசயங்கள் அடுத்தவனையோ அல்லது சமுதாயத்தையோ பாதிக்காத போது திரையை விலக்கிப்பார்த்து உள்ளே இருக்கும் விசயங்களை விமர்சிப்பது....அநாகரீகம் என்று எப்போது இந்த சமுதாயம் உணரும்?
கணவன் மனைவியாய் இருந்தாலும்...அல்லது பெற்றோர் குழந்தைகளாய் இருந்தாலும் சரி... நட்பு வட்டாரமாய் இருந்தாலும் சரி... அவர் அவருக்கு இருக்கும் அந்த வெற்றிடத்தை அவர்களின் சந்தோசத்தை கலைக்க முயலாமல்....அந்த வெற்றிடத்தால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏதும் இல்லை எனும் பட்சத்தில் அதை ரசித்து அல்லது பிடிக்கவில்லையெனில் விலகி வாழ்ந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்!
அத்துமீறலும் அனுமதியின்றி நமக்கு எது தேவையென அடுத்தவர் கூறுவது...... நமக்கு பிடித்ததை விமர்சிப்பது..மற்றவருக்கு பிடித்ததை நம் மீது திணிப்பதும் வலியுறுத்துவது....உடனடியாக யாரும் நிறுத்தப் போவதில்லை...இருந்தாலும்...இந் தக் கட்டுரை அதற்கான முயற்சியை செய்திருக்கிறது என்ற மட்டில் கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
தேவா S
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
3 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களுக்கு அடுத்த கதவில் (next door) வாழ்பவர்கள் யார் என்பதே தெரியாது. ஆனால் கிராமத்தில் யாராவது வெளியாள் வந்தால், அவனது வரலாறு பூகோளம் அனைத்தும் பிரித்து கொட்டப்படும். நிச்சயமாக நகர வாழ்க்கை என்பது "நரக" வாழ்க்கையே! அடுத்தவனைப் பற்றி கேலி பேசுவது அல்லது கவலைப்படுவது இரண்டுமே நடப்பது கிராமங்களில் மட்டுமே!
நிச்சயமாக தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நீட்டாமல், சமுதாயத்தோடு ஒன்றி வாழ்ந்தால்...
நாமும் நம் சமுதாயமும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும்.
ஒருவரை தேவை இல்லாமல் தரக்குறைவாக புரளி பேசுவது கிராமம் நகரம் என்ற வேறு பாடின்றி அனைத்து இடங்களிலும் வேருன்றி கிடக்கிறது..... அவரவர் திருந்தனும்......
Post a Comment