எத்தனையோ பண்டிகைகளை இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாய் கொண்டாடி வந்தாலும் தமிழ்த் தேசத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்னும் தமிழர் திரு நாள் விழா மற்றர் எல்லா விழாக்களையும் விட வித்தியாசமானதுதான்...
மதத்தின் வெளிப்பாடாய், சாதியின் வெளிப்பாடாய், பல்வேறு கடவுளர்களையும், பலதரப்பட்ட மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதமாகத்தான் மனிதர்களின் பண்டிகைகள் வடிவமைக்கப்ப்பட்டது, ஆனால் பொங்கல் பண்டிகை என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் கலாச்சார விழாவாக, தொன்மையை விளக்கும் ஒரு ஆத்மார்த்த நிகழ்வாக பாகுபாடுகளை எல்லாம் களைந்தெறிந்து ஒரு இனத்தின் விழாவாய் எப்போதும் மிளிர்கிறது.
விவசாயத்தை சார்ந்த ஒரு இயற்கை வாழ்வினை வாழ்ந்து அதை சிறப்பித்து நன்றி கூறும் ஒரு ஒப்பற்ற நிகழ்வாய் தமிழர்களுக்கு பொங்கல் அமைந்ததோடு மட்டுமில்லாமல் அவனது கலை, வீரம், பண்பாடு எல்லாவற்றையும் ஒன்று சேர உலகத்திற்கே எடுத்தியம்பும் ஒரு அற்புதமான மனித அளாவல் இது. மனிதர்கள் மனிதர்களை நேசிப்பதும், தெய்வங்கள் என்று தத்தம் மதங்கள் போதித்தவற்றை போற்றி புகழ்ந்து கொண்டாடுவதும்தான் உலகத்தின் வழமையான கொண்டாடல்.
சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்த பூமி இறுகி குளிர்ந்து மண்ணாய் மாற்றமடைந்து அந்த மாற்றத்தில் அதாவது மண்ணில் இருந்து இன்று செழித்து வளர்ந்து நிற்கும் பல்வேறு பரிணாம மாற்றங்களின் வெளிப்பாடுதான் மனிதன். மண்ணிலிருந்து வந்த உயிர்கள் எல்லாம் மண்ணைச் சார்ந்து வாழ்ந்து, வெளிச்சம் தரும் சூரிய ஒளியினை சக்தியாகப் பெற்றும் விண்ணிலிருந்து பொழியும் மழை நீரையும், மண்ணிலிருந்து கிடைக்கும் நீரினையும் உட்கொண்டு செழித்து வளர்ந்துதான் இந்த பூமி பல்கிப் பெருகியது.
மண்ணோடு மண்ணாக மனிதன் உறவாடி உழவு செய்து மானுடர்க்கு எல்லாம் உணவு கொடுக்கும் உலகின் ஆதி தொழிலான விவசாயத்தை செய்வதற்கு அவன் சார்ந்திருந்த எல்லா அசையும் அசையா பொருட்களுமேதான் உதவி செய்தன என்ற மிகப்பெரிய நன்நோக்கில் அதை ஒரு நன்று நவிழலாக, உழைத்து, உழைத்து அந்த உழைப்பில் தான் விளைவித்த தானியங்களை எல்லாம் அறுவடை செய்து, அந்த மகிழ்ச்சியை தன் சமூகத்தாரோடு கலந்து கொண்டாட தீர்மானித்த போது....
மனிதர்களைக் கடந்து எப்போதும் ஒளி தந்து தாம் விளைவித்த பயிர் பச்சைகளுக்கு உயிர் கொடுத்து காத்தருளிய அந்த ஆதவனை உயிராய் பாவித்து நன்றி செய்யவும், தனக்கு விவசாயத்தின் போது உதவிய மாடு, ஆடுகளை நெஞ்சார நேசித்து காலமெல்லாம் அவை செய்த விசுவாசத்துக்கு நன்றி சொல்லவும்.....
தன் இனத்தின் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்ள ஏறு தழுவுதல் என்னும் விழாவின் மூலம் காளைகளை துன்புறுத்தாமல் அவற்றை சீற்றமுடன் வளர்த்து அவற்றினை அருகில் சென்று எந்த வித ஊறும் செய்யாமல் அவற்றின் திமிழினைப் பிடித்து விளையாடும் வீர மாடு பிடித்தலை ஒரு மகிழ்ச்சி விளையாட்டாயும்....அவன் விளையாடிக் களித்து மகிழ்ந்து தான் வாழ்ந்து வளர்ந்த மண் சார்ந்த எல்லா நிகழ்வுகளையும் பெரு விழாவக்கி பார்த்தான்...
தமிழர்களின் கலாச்சார விழாவான பொங்கல் திருவிழா வெறும் (உறவுகள் கூடிக் களிக்கும் ஒரு விழா மட்டுமல்ல அது உணர்வுகளின் சங்கமம். மண்ணை எடுத்து அந்த மண்ணில் பாண்டம் செய்து அந்த பாண்டத்தில் பொங்கல் செய்து அவன் மகிழ்ந்த போது இயற்கையின் முழுச்சுற்றையும் தன் விழாவிற்காக அவன் பயன் படுத்தி முடித்திருந்தான். பஞ்ச பூதங்களும், இயற்கையும், மனிதரும் கால்நடைகளும், சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாய் அகில உலகத்திலேயே தமிழர்களின் பொங்கல் விழா மட்டுமே இருக்க முடியும்.
சிறப்புகளை கைக் கொண்டு விழாவை விழாவாய் நகர்த்தி இதன் மூலம் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உலகோர் அறியத்தான் நாம் செய்யவேண்டும். தமிழ்ப் புத்தாண்டாய் இருக்கட்டும் அல்லது தமிழர் திருநாளாய் இருக்கட்டும் அல்லது உழவர் திருநாளாய் இருக்கட்டும்....
எல்லா பெயர் அரசியல்களையும் புறம்தள்ளி விட்டு பொங்கல் என்னும் தமிழர்களின் உணர்வுத் திருநாளை நாம் அனைவரும் ஒற்றுமையாய் சிறப்பாய் கொண்டாடுவோம்....! விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல அது நமது ஆதி பண்பாடு என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்...!
வரப்போகும் காலங்களில் விவசாயம் இன்னமும் செழித்தோங்கி வளர அரசு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்....மிகுதியான இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு......நம் தமிழ் தேசம் செழிக்க வேண்டும்...!
கழுகின் வாசகர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)
1 comments:
சக்கரைப் பொங்கலைப் போன்ற தித்திக்கும், தமிழர் பண்பாட்டை எடுத்தியம்பிய அருமையான பதிவு.
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Post a Comment