Wednesday, January 04, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (4.1.2012)

டீ கடையில் தனியாக நின்று கொண்டிருந்த கனகு, நெடு நாட்களுக்குப் பிறகு ரெங்கு வருவதைப் பார்த்தார்..

கனகு : என்னய்யா ரெங்கு ஆளையே காணோம் எங்க போய் இருந்த... புது வருசத்துக்கு ஏதாவது காசி ராமேஸ்வரம் போயிட்டியா..??

ரெங்கு : அட நீ வேறப்பா! நானே மாமியார் வீட்டுக்கு போய்ட்டு.... இருந்த பணமெல்லாம் இப்படி செலவாகிடுச்சேன்னு நொந்து போய் வந்திருக்கேன். 

கனகு : அட செலவா..? அதுவும் நீ பண்ணுனியா..!! சரி சரி மாமியார் வீட்டுல என்ன பரிசு கொடுத்தாங்க 

ரெங்கு : ஆமா ” பரிசு" இப்போ அதுதான் ஒரு குறைச்சல்.. நானே புயல்ல  மாட்டி பீதியாகி வந்து இருக்கேன்.. இதுல பரிசு வேறயா..?? 

கனகு : சரி சரி நீ எவ்வளவு செலவு பண்ணியோ அதை அம்மா கிட்ட கேட்டு வாங்கிக்கோ.. அவங்க தான் 800 கோடி ஒதுக்கி இருக்காங்களே...

ரெங்கு : ஆமா அம்மா ஒதுக்கிட்டாங்க ஆனா நம்ம மக்கள் கையில போக்கும் போது அது 500ரூபாய் தான் போய் சேரும்.. என்ன பண்றது..?? 

கனகு :  ஆமா ஆமா சாமி வரம் கொடுத்தாலும் நம்ம பூசரிங்க வரம் தரமாட்டாங்க..!! சரி சரி இனி உங்க மாமியார் வீட்டுக்கு போக மாட்டேன் சத்தியம் பண்ணு...

ரெங்கு : அடப்பாவிங்களா இந்த வருஷம் என்ன? எல்லாம் சத்தியம் பண்ணு... சத்தியம் பண்ணுன்னு திரியுறீங்க.

கனகு : யாருப்பா அது கனக விட அறிவாளி இந்த உலகத்துல..

ரெங்கு : அட உனக்கு தெரியவே தெரியாதா.. எல்லாம் நம்ம ராமதாஸ் அண்ணாச்சி தான் சத்தியம் வாங்குறார்.. தன் கட்சில சேரும் புதிய உறுப்பினர்களிடம் பாமகவுக்கு தான் ஓட்டு போடணும்னு  குல தெய்வம் மேல சத்தியம் வாங்குறாராம்..

கனகு : இதுக்கு மேல இவங்க கட்சிகாரங்கள யாராலும் அசிங்கப்படுத்த முடியாது...இனி யாரயும் இவர் கட்சில சேர விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டார் போல...  எதிர்க்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான்... 

ரெங்கு : இவரே சத்தியம் வாங்குறேன்னு சொல்லிக்கிட்டு எல்லோரையும் கட்சியவிட்டு துரத்திடுவார் போல 

கனகு : ஆமா ஆமா துரத்துறார்.. எல்லோரும் போய் வேல் முருகன் கட்சில சேருங்கப்பா..

ரெங்கு : அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசுப்பா! புது வருஷம் அதுவுமா போனஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க 

கனகு : ஆமா ஆமா கொடுத்துட்டாங்க கஜானா காலியா இருக்கு... தமிழ்நாடு அரசுத்துறை திவால் ஆகிடும்னு சொல்லிட்டு.. மக்கள் மண்டையில கொட்டி, அந்த ரத்தத்தை எடுத்து போனஸ் கொடுக்குறாங்க.. 

ரெங்கு : அதெல்லாம் விடுய்யா மக்கள் நலப் பணியாளர்களுக்கு எல்லாம் போனஸ் கொடுத்து இருக்காங்க ரொம்ப பெரிய மனசு தானே..??

கனகு : ஆமா ஆமா! ரொம்பப் பெரிய மனசு தான்... ஒரு நாள் வந்து, அவங்க வேலையே செய்யலயே ஏன் வேலைக்கு வைச்சு இருக்கணும்னு கேட்பாங்க.. ஹ்ம்ம்ம்...அவராவது வேலை செய்யாதவங்களுக்கு சம்பளம் மட்டும் தான் கொடுத்தார், இவங்க போனஸும் சேர்த்து கொடுத்திட்டாங்க.. இன்னைக்கு போனஸ் நாளைக்கு..?? உசாரய்யா உசாரு  

ரெங்கு : புத்தாண்டு அன்னைக்கு டாஸ்மார்க் கடைய திறந்து போட்டுட்டு, சரக்கு வித்த பணத்தை எல்லாம் விட்டுட்டு சரக்கு அடிச்சிட்டு போய்ட்டாங்க டாஸ்மார்க் ஊழியர்கள்.. அரசு துறை எப்படி எல்லாம் வேலை செய்யுதுனு, பாருய்யா கனகு 

கனகு : என்ன கடைய திறந்து போட்டுட்டு போயிட்டாங்களா... சரக்கு சும்மா கிடைச்சா குளிச்சுட்டே போவானுங்க.. நம்ம ஏரியாவில் இருக்கும் கடையும் இருக்கே என்னைக்காவது இப்படி திறந்து போட்டுட்டு போறாங்களா நமக்கு வசதியா இருக்கும்.. 

ரெங்கு : என்ன ஒரு ஆசையா உனக்கு... ஏற்கனவே அரசுத்துறை எல்லாம் ஆடிட்டு இருக்குன்னு அம்மா சொல்றாங்க.. இதுல இப்படியா..?? 

கனகு : ஓஹோ... அரசுத்துறை ஆடுதுன்னு சொன்னது இது தானா? இப்படி தான் எல்லா அரசுத்துறையும் ஆடுதா.. ஐயோ ஐயோ.. எல்லா கடையும் திறந்து வையுங்கப்பா மக்களுக்கு 142 கோடி கிடைக்கும்.

ரெங்கு : ஜெயலளித்தாக்கு பரதம் சொல்லி கொடுத்தவங்க இறந்து போய்ட்டாங்களாம் கனகு உனக்கு தெரியுமா..??

கனகு : ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான செய்தி பாரு.. போய்யா உன்ன மாதிரி எடிட்டர் எல்லாம் இருக்குறதால தான் இப்படி நியூஸ் வருது... விசைத்தறி தொழிலாளர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்றாங்க அத பத்தி ஏதாவது சொன்னியா யா?

ரெங்கு : ஆமா கனகு சம்பள உயர்வு, மின்வெட்டு மாதிரியான காரணத்துகாக அவங்க வேலை நிறுத்தம் செய்றாங்களாம்.. 

கனகு : இப்படி பட்ட செய்திய மக்களுக்கு சொல்லுய்யா ரெங்கு.. உன்ன எடிட்டர்ன்னு ஒத்துக்குறேன். அதைவிட்டுட்டு அந்த அம்மா பாதுகாப்பு அதிகாரிய மாத்துறது, அமைச்சரை மாத்துறதுன்னு நியூஸ் சொல்ற.. உன் நியூஸ் வரும் போது அந்த ஆளையும் மாத்தி இருப்பாங்க அந்த அம்மா... போய்யா போ ஒழுங்கான நியூஸ் போடு 

ரெங்கு : சரி சரி டென்சன் ஆகாத கனகு ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்து இருக்கேன் டீ சொல்றேன் குடிக்கிறியா .?? 

கனகு : அதையாவது உருப்படியா சொல்லுய்யா.. 
     

  கழுகு 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes