Thursday, March 17, 2011

குழந்தைகளா....??? இல்லை பொம்மைகளா????



 ஒரு மெல்லிய மலரினை ஒத்ததாய் இருக்கும் மழலைகளின் மனதிலே போட்டி மனப்பான்மையை மட்டும வளர்க்கிறது சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அதற்காக அவர்கள் செய்யும் உழைப்பும், வருத்திக் கொள்தலும் வார்த்தைகளுக்குள் கொண்டு அடக்க முடியாத துயரங்கள். ஆர்வங்களால் ஈடுபடும் குழந்தைகளை விலக்கி விடலாம், அவர்களின் பெற்றோர்களை கூட மன்னித்து விடலாம் ஆனால் அடுத்த குழந்தையைப் போல என் குழந்தையையும் ஆக்குவேன் என்று பயிற்சிகளில் பிஞ்சுகளை நசுக்கும் கொடுமைகளை என்ன செய்வது....?


சில அரசியல் தலைவர்கள் சேர்ந்து கொண்டு மக்களின் மூளையை மழுங்கடிப்பது போலவே.. நாம் எல்லோரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சேர்ந்துகொண்டு இந்த தலைமுறை குழந்தைகளின் மூளையை மழுங்கடித்து வருகிறோம்! என்ன?  ஆரம்பமே அதிர்ச்சியாக உள்ளதா?ஆனால் அதுதான் உண்மையும்கூட.. இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன், முன்பெல்லாம் நமக்கு தெரிந்து மலரும் மொட்டும், அரும்பும் தளிர் போன்ற சிறுவர்களுக்கான நிகழ்சிகள்தான் வரும், ஆனால் இப்பொழுது அவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறேன் என்று அவர்களை மலரும் முன்னே காய்த்து வெம்ப வைக்கும் நிகழ்ச்சிகள்தான் அதிகம் வருகின்றன! பெற்றோர்களை கேட்டால் என் பிள்ளைக்கு திறமை இருக்கு வெளிப்படுத்துகிறோம் என்று பொறுப்பில்லாமல் பதில் வரும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை கேட்டால் இது போன்ற நிகழ்சிகள்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைக்கும் என்பார்கள்! ஆனால் எவருமே அந்த பிஞ்சு மனதில் விழும் கீறலை மறந்தும்கூட நினைப்பதில்லை!

குழந்தைகளை வைத்து பாடல் நிகழ்ச்சி நல்ல விசயம்தான்.. ஆனால் நல்ல திறமையை வெளிக்காட்டும் போட்டியைவிட பரிசுகளை தட்டி செல்லும் போட்டியே இங்கு அதிகம் நடக்கின்றது! அவர்களுக்கு பரிசு கொடுப்பது அவர்களை ஊக்குவிக்கும்தான்..ஆனால் அவர்கள் திறமையை விட அதிக பரிசு என்பது வியாபாரிகளின் விளம்பர வலையில் அவர்களை அறியாமல் தள்ளப்படுகின்றனர்! இதற்க்கு பெற்றோர்களும் உடந்தை.. பரிசு வாங்கிய குழந்தை பற்றி கவலை இல்லை, ஆனால் ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் குழந்தைகளை பார்த்தால் அவர்களின் மனநிலையை உணர முடியும்! அவர்கள் ஏமாற்றத்தில் அழுவதை பல நிமிடங்கள் காட்டி..அவரின் பெற்றோரும் கூட அழுது..அந்த போட்டிக்கு பிறகு அந்த பிள்ளையால் எத்தனை சீக்கிரம் மீண்டு வர முடியும்? அந்த போட்டியின் நடுவர்கள் வேறு ஏதோ வானத்தில் இருந்து வந்ததைப்போல் வார்த்தைகளால் அந்த பிள்ளையை வறுத்தெடுக்கும் படலமும் உண்டு! பரிசு வாங்கும் குழந்தையை பார்த்து பல பெற்றோர்கள் தன் குழந்தையிடம் அவர்களை ஒப்பீடு செய்யும் அவலமும் நடக்கும்! போட்டிகள் நல்லதுதான் அதன் நோக்கம் உண்மையாக இருக்கும் வரையில்! மாறாக பெற்றோர்களின் வெட்டி பெருமையும்  தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் குழந்தைகளை பலியிடாதவரை!

அடுத்த கொடுமையின் உச்சகட்டம் குழந்தைகளை வைத்து நடக்கும் நடன நிகழ்சிகள்! தொலைக்காட்சி நிறுவனங்களின் நோக்கம் அவர்களின் வியாபாரம்.. ஆனால் இந்த குழந்தைகளின் பெற்றோர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கே வெளிச்சம்.. இதில் விதி விலக்காக சில உண்மையான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உள்ளது.. அவற்றை விடுங்கள்.. ஆனால் அதை நீங்கள்கூட பார்ப்பதில்லை! ஆனால் பல நிகழ்ச்சிகள் அருவருக்கத்தக்க வண்ணமே உள்ளது! இந்த நிகழ்சிகளில் இவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடலும் அவற்றிற்கு அந்த குழந்தைகளின் உடல் அசைவும் எந்த ஒரு நல்ல குடும்பமும் இதை அனுமதிக்காது! சமீபத்தில் நான் பார்த்தவரையில் அதிக பேர் நடனமாடியது எந்த பாடலுக்கு தெரியுமா? வரலாற்று சிறப்பு மிக்க "டேடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்லை.." இதில் உள்ள வரிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? இதற்க்கு அந்த குழந்தைகள் அர்த்தம் கேட்டால் அந்த பெற்றோரால் விளக்க முடியுமா? குழந்தைகளின் கவனத்தை ஒரு தவறான வழியில் திருப்பி கொண்டிருக்கிறது இந்த சமூகம்! தன்னை அறியாமலே!


இதற்கு நடுவராக இருப்பவர்கள் செய்யும் கூத்து அதைவிட கொடுமை.. அந்த குழந்தைகள் ஏதோ சொல்லிக் கொடுத்தபடி ஆடுவார்கள்.. ஆனால் இந்த நடுவர்கள் அதை குறை சொல்லி.. உங்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி இல்லை பிசிக்ஸ் இல்லைன்னு..  இதுவும் பத்தாதுன்னு அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்து கேட்பார்கள்.. அந்த குழந்தையின் அம்மா சளைக்காமல் அந்த பையன் என் பெண்ணோட இடுப்ப பிடிக்கும்போது சரியா பிடிக்கல.. இப்படி போகும் இவர்களின் கருத்து! உண்மைலே இதெல்லாம் இந்த நிகழ்ச்சிகளில் நடக்குது! அந்த குழந்தைகளுக்கு அந்த வயதில் என்ன தெரியச் கூடாதோ அதை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன இதைப்போன்ற நடன நிகழ்ச்சிகள்! அதுபோக மூணு கணவனை மாற்றிய நடிகையும்.. நாலாவது திருமணம் செய்த நடிகனும் நடுவராக இருக்க அந்த குழந்தைகள் அவர்கள் காலில் விழுவது கொடுமையுளும் கொடுமை! இதை அந்த பெற்றோர்கள் ரசிப்பதும்.. ம்ம்..எங்கு செல்கிறது குழந்தைகளின் உலகம்? அவர்கள் திருமணத்தை குறைசொல்லவில்லை.. மாறாக குழந்தைகளின் முன்னால் அதை நியாயப்படுத்த வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்!


சமீபத்தில்  ஒரு நிகழ்ச்சியை எதார்த்தமாக பார்த்த பொழுது ஒரு பெண் குழந்தை.. அதற்க்கு மிஞ்சினால் பத்து அல்லது பதினொன்று வயது இருக்கும்.. நடிகை சுகாசினி நடுவர் என்று நினைக்கிறேன்! அந்த குழந்தை ஏதோ பேசும்பொழுது சமீபத்தில் வந்த ஒரு படத்தில் காமெடி நடிகர் பேசும் வசனத்தை பேசுகிறது..அதுவும் எப்படி? வயது வந்தவர்களே பெற்றோர்கள் முன் பேச கூச்சப்படும் வார்த்தைகளை! அதை சுகாசினியும் மிகவும் ரசித்து பாராட்டி பேசுகிறார்.. அவரை சொல்லி குற்றமில்லை..அந்த குழந்தையின் பெற்றோர்கள் அந்த குழந்தையை என்னவாக ஆக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை? மக்கள் இதுபோன்ற நிகழ்சிகளை புறக்கனிக்கும்வரை தொலைக்காட்சி நிறுவனங்களின் இதுபோன்ற வக்கிர நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! அரசாங்கமும் இதை கவனத்தில் கொண்டு குழந்தைகளை வைத்து தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு கட்டுப்பாடை கொண்டுவரலாம்! குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்! சாதனைகளை அவர்களாகவே செய்வார்கள்! நீங்கள் புகை போட்டு பழுக்க வைக்க வேண்டாம்.. தானாக கனியட்டும்!
கழுகுகுழுமத்தில் இணைய....


கழுகிற்காக
வைகை  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

21 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

Im totally against this ..

நல்லா சொன்னீங்க..

குழந்தைகளை குழந்தைகளா வாழ விடுங்க..

எண்ணங்கள் 13189034291840215795 said...

எப்பவும் நம் திறமையை காண்பிக்கலாம்.. ஆனால் எப்பவும் குழந்தையாக மாற முடியுமா?..


இனிமையான அந்த குழந்தைப்பருவம் மீண்டும் வராது...


//புகை போட்டு பழுக்க வைக்க வேண்டாம்.. தானாக கனியட்டும்!//


ஒரு தாயாக அதே என் கருத்தும்...


நல்ல அலசல் வைகை...

Anonymous said...

நாய் காசு குரைக்காது என்ற மனப்பான்மையால் அதான் இது போன்ற கொடுமைகள் நடக்கின்றன்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல அலசல் வைகை...

சமுத்ரா said...

உண்மை தான்..

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

மச்சி! பின்னிட்ட. நல்லா எழுதி இருக்க. பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கு பெற்றோர் பலர் கண்ணில் இது கண்டிப்பாபடும். திருந்த முயற்சி பண்ணட்டும்...

(இதுக்கும் ரோட்ல இரங்கி போரடனும் யாராவது கேப்பாங்களோ)

Pranavam Ravikumar said...

Well written!

அம்பிகா said...

\\அந்த குழந்தையின் பெற்றோர்கள் அந்த குழந்தையை என்னவாக ஆக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை? \\
மிக மிக தேவையான இடுகை. இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை யென்றாலும், எப்போதாவது கண்ணில் படும் நேரங்களில் இதே எரிச்சல் தான் எனக்கும் வரும்.

செல்வா said...

அண்ணா தெளிவா சொல்லிட்டீங்க. இந்த நிகழ்சிகள் எங்க கொண்டு போய் முடிக்கும்னு தெரியல . அதுல பங்கெடுக்கிற குழந்தைகள் மட்டும் இல்ல. வீட்டுல பாக்குற குழந்தைகள் கூட அவுங்களோட பெற்றோர் சிலர் " பாரு அந்தப் பையன் என்னமா ஆடுறான் , நீயும் தான் இருக்கியே " என்று ஒப்பிடுவதும் நடக்கிறது.

இதுல கொடுமை என்னன்னா அந்த நடுவர்கள் பண்ணுறது தான். நீ அப்படி ஆடிருக்கலாம் , இப்படி இருக்கலாம் , அப்புறம் பாட்டு செலேச்சன். ஆனா டிவி காரங்களா குறை சொல்லுறத விட்டுட்டு அந்தக் குழந்தைகளோட பெற்றோர்கள தான் குறை சொல்லணும்!!

Kousalya Raj said...

எல்லா பெற்றோரும் இதை உணரவேண்டும்.

அந்த மாதிரியான போட்டிகளில் ஏன் பாரதியார் பாட்டு, பாரதிதாசன் பாடல்கள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்ககூடாது ? இதன் மூலம் அந்த பாடல்கள் குழந்தைகளின் மனதில் சுலபமாக சென்று பதியுமே...

சினிமா பாடல்கள் மனதில் பதிந்து அதனால் ஏற்படக்கூடிய கேடுகள் ஏன் சிலருக்கு புரிவதில்லை ?

இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யகூடிய தொலைக்காட்சி தயாரிப்பாளர்களை விட அதில் தன் குழந்தைகளை ஈடுபடுத்துகிற பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்.

Kousalya Raj said...

நல்ல கட்டுரை பகிர்ந்த வைகை உங்களுக்கு என் பாராட்டுகள். நன்றி.

Unknown said...

(இதுக்கும் ரோட்ல இரங்கி போரடனும் யாராவது கேப்பாங்களோ)...Terror Thalamiyil veraivil nadaiperum....

Unknown said...

பாரட்ட வயதில்லை அண்ணா
ஏன் என்றால் நானும் ஒரு குழந்தைதான்
இருந்தாலும் அருமை
யோசிக்க வேண்டிய விசியம்
வெறும் பதிவுகளோட போய்விட கூடாது

எஸ்.கே said...

நிகழ்ச்சி நடத்துறவங்க குழந்தைங்க மன நிலைமையை புரிஞ்சிக்காம கடுமையா நடந்துக்கிறப்ப ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க! தொலைக்காட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் இவைகளை!

ஜீவன்பென்னி said...

பள்ளிகளில் சுதந்திரத்துக்காக போரடின தலைவர்களோட வாழ்க்கை வரலாற்றையும், கருந்த்தாழம் மிகுந்த பாடல்களையும் கொண்டு நிகழ்ச்சிகள் நடந்த காலம் கடந்து முழுதும் சினிமாவே ஆக்கிரமித்துள்ளது வருந்தத்தக்க விசயம். இந்த தொலைக்காட்சிகள் வரும் இது போன்ற நிகழ்ச்சிகள் சமுதாயத்தினை சிராழிவுக்கு கொண்டுபோகக்கூடிய வாய்ப்புகள் அதிகமா இருக்கு. எளிமையா சொல்லனும்னா silent poison.

Kousalya Raj said...

@@ எஸ்.கே
// தொலைக்காட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் இவைகளை!//

தொலைக்காட்சிக்கு தேவை விளம்பரம், ரேட்டிங்...அதனால் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இந்த விசயத்தில் பெற்றோர்கள், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை நிறுத்தவேண்டும்.

தொலைகாட்சி வற்புறுத்தி யாரையும் கலந்துகொள்ள சொல்லமுடியாது...இவர்களாக விரும்பி போய் சேருகிறார்கள்.

எஸ்.கே said...

@கௌசல்யா
உண்மைதான். இங்கு பெற்றோர்களிடம்தான் பெரும் பொறுப்பு உள்ளது. ஆனால் எல்லாமே புகழ் மோகம் இங்கே. ஏதேதோ சொல்லி மீடியாக்களும் செய்வதால் ஆசை அவர்களுக்கு அதிகமாகி தவறு செய்கின்றனர். இங்கே இரண்டு பக்கமும் மாற வேண்டும் அப்போதுதான் இடையில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் குழந்தைகளின் நிலை மாறும்.

Asiya Omar said...

குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்! சாதனைகளை அவர்களாகவே செய்வார்கள்! நீங்கள் புகை போட்டு பழுக்க வைக்க வேண்டாம்.. தானாக கனியட்டும்!

- இதுவும் சரி தான்.

இம்சைஅரசன் பாபு.. said...

வைகை மக்கா பின்னிடீங்க .மற்றுமொரு அருமையான பதிவு வைகை அவர்களிடமிருது .புகழ் வலையில் பெற்றோர்கள் விழுது விட்டார்கள் ..என் புள்ள இப்படி வரணும் ..அப்படி வரணும்ன்னு ..தங்களோட எண்ணத்தை திணிக்கிறார்கள் ...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Angel said...

அருமையான பதிவு .வாழ்த்துக்கள் .
ஒட்டு மொத்தமாக பெற்றோர் புறக்கணித்தால்
யாருக்கும் இத்தகைய நிகழ்சிகளை ஒளிபரப்பவோ, தயாரிக்கவோ
முன்வர மாட்டார்கள்.
வார்த்தைகளின் அர்த்தம் புரியாமலே பிள்ளைங்க ஆடுவது
தாங்க முடியல

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes