தேர்தல் நோக்கிய நகர்வில் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் நடத்தும் காட்சி மாற்றங்கள்தான் எத்தனை? எத்தனை? தனியாக நின்றால் தோற்றுப் போய்விடுவோமோ என்ற பயத்தில் நடக்கும் நாடக அரங்கேற்றகள் எல்லாம் மக்களை ஏமாற்றும் வேசங்கள்தானே....
இந்த கட்டுரையின் போக்கில் இதை புரிந்து கொள்வீர்கள்..
யாருக்கும் வெட்க்கமில்லை! இன்றைய அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது! கூட்டணிக்காக அடித்துக்கொள்வதும் பிறகு சேர்ந்துகொள்வதும் அவர்களே சேர்ந்துகொண்டு மக்களை கொல்வதும்..இப்படி ஒரு கண்ணாம்பூச்சி நடந்து கொண்டிருக்கிறது நம் நாட்டில்! ஆனால் கூட்டணிக்காக திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை ஒரு சாமானியனால் புரிந்துகொள்ள முடியாது இங்கே! அவர்கள் ஏதோ மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கூடிக்கூடி பேசுவதாக நீங்கள் நினைத்தால்.. மன்னிக்கவும் நீங்கள் ஒரு மன நல மருத்துவரை உடனே நாடவும்! கடந்த ஆறுமாதங்களாக நடந்த கூட்டணி குழப்பங்கள் கடந்த ஆறு நாட்களில் இன்னும் அதிகமானது.. உங்களைப்போல் நானும் இவர்கள் மக்களுக்காக ஏதாவது கோரிக்கை வைப்பார்கள் என்ற நப்பாசையுடன் கவனித்தேன்.. எனக்கு ஏமாற்றமே..
கூட்டணிக்காக திமுக துடிக்கும் துடிப்பை பார்த்தால் எனக்கே பாவமாக வருகிறது! இவர்கள் ராஜினாமா பண்ணும் நாடகத்தில் இருபது A4 சைஸ் பேப்பரும் விமான டிக்கெட்டும் செலவானதுதான் மிச்சம்! ஒருவேளை முதல்வர் அடிக்கடி சொல்லும் சுயமரியாதை இதுதானோ? தீர்மானம் போட்டு வெளியில் தள்ளிய பாமகவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும்போதே தெரிந்துவிட்டது தலைவரின் சுயமரியாதை...மக்களே.. சுயமரியாதைக்கான விளக்கத்தை யாரும் இன்றைய அரசியல் தலைவர்களிடம் தேடாதீர்கள்! அது பதவிகளில் புதைக்கப்பட்டு அரை நூற்றாண்டு ஆகி விட்டது! பெயர் தெரியாத சாதிக்கட்சிகள் எல்லாம் இன்று அவசரக்கூட்டம் போட்டு ஆதரவு சொல்லி தலைவரிடம் சீட் வாங்கும் காட்சியைப்பார்த்தால்.. என் சாதியை நான் மறந்தது தவறோ என தோன்றுகிறது! காங்கிரஸ் இவர்களை அடிப்பதும் இவர்களும் வலிக்காத மாதிரியே நடித்து பேட்டி கொடுப்பதும்.. அவர்கள் எட்டி உதைத்து விட்டு டெல்லி செல்வதும் இவர்கள் அங்கு போய் காலில் விழுவதும்.. நல்லவேளை அண்ணாவும் பெரியாரும் உயிரோடு இல்லை..
இந்த நேரத்தில் ஒரு சாமானியனுக்கும்(நானும் ஒரு சாமானியன்தான்) வரும் சந்தேகம் எனக்கும் வந்தது, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம்... பல நல திட்டங்கள் செய்துள்ளோம்... என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் மக்களை நம்பாமல் மற்றவர் காலில் விழ வேண்டும்? அப்ப இதெல்லாம் வெறும் விளம்பரத்திற்க்காக சொல்வதா? அவர்கள் திட்டங்களின் மேல் நம்பிக்கை இல்லையா? இன்னொரு கேள்வியும் வருகிறது.. இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்கள் கூட ஏன் இந்த தேர்தலில் தொகுதி மாற வேண்டும்? தொகுதிக்கு நல்லது செய்தவர்கள் சுயேட்சையாக கூட வெற்றிபெற்ற வரலாற்றை பார்த்திருக்கிறோம்! கண்டுகொள்ளாதவர்கள் முதலமைச்சராக இருந்தும் தோற்றதை பார்த்திருக்கிறோம்! இப்போதைய முதலமைச்சர் கூட தொகுதிமாறி சொந்த ஊர்க்காரன் என்ற போர்வையில் வெற்றிபெற பார்க்கிறார்! இதுவும் அண்ணா சொல்லித்தந்த அரசியலோ? ஊழல் குற்றச்சாட்டில் ஒரு முதலமைச்சரின் மகளும் மனைவியும் விசாரிக்கப்படுகிறார்.. ஆனால் அவருக்கு இது சாதாரணம்! விசாரிப்பதாலேயே ஒருவர் குற்றவாளி இல்லை என்பார்..மீறி கேட்டால் இருக்கவே இருக்கார் ஜெ.. அவர் செய்யாததா என் மகள் செய்தார் என்பார்! தொண்டன் எப்போதும்போல் மனைவி மகளுக்கு மானத்தை மறைக்க துணியில்லை என்றாலும் கடனுக்கு கொடி வாங்கி கட்டிக்கொண்டு திரியட்டும்!
மேலே விளம்பரம் என்று சொன்னதும் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது.. இவ்வளவு நாள் அவர்கள் தொலைக்காட்சிகளில் மட்டும் திமுக அரசின் சாதனைகள் என்று சொல்லி விளம்பரம் வரும்போது..அது அவர்களின் கட்சி பணத்தில் எடுத்திருப்பார்கள் அதனால்தான் அது அவர்கள் தொலைக்காட்சியில் மட்டும் வருகிறது என்று நினைத்தேன்.. ஆனால் அதில் உள்ள உண்மைகள் தெரிந்தபோது சோறுடைத்த இந்த நாட்டு விவசாயி சோறில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும்போது அவர்கள் விளம்பரத்திற்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் வயிறு எரியுது.....ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும்! சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் -முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் -முதல்வரின் துணைவியும் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக்கொடுத்தார்கள் ?இதில் விநோதம் என்னவென்றால் -அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை !(அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அதுபோக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விளம்பரமும் அரசு செலவில் எடுக்கப்பட்டு இதே இரண்டு தொலைக்காட்சிகளுக்கு மட்டும் இதே கட்டண விகிதத்தில் கொடுக்கப்படுகிறது! இவையெல்லாம் குறை சொல்லும் நோக்கில் ஏனோ தானோவென்று எழுதப்படுவதில்லை! இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டு அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டது! இவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து வாதாடிப்பெற்ற சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம் அவர்களுக்கு நன்றி! ஒரு அரசாங்கம் இப்படி வாக்களித்து வரிகட்டும் மக்களுக்கு எதுவும் தெரியாமல் மூடிமறைத்து தற்புகழ்ச்சி செய்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன? அதையும் மீறி ஆசையிருந்தால் சொந்த பணத்தில் அல்லது கட்சி பணத்தில் செய்துகொள்ளட்டுமே? மக்கள் வரிப்பணத்தில் செய்ய வேண்டிய அவசியமென்ன?
ஆகவே மக்களே.. இந்த தேர்தலிலாவது கொஞ்சம் சிந்தித்து வாக்களியுங்கள்.. கடன் வாங்கி கொடுக்கப்படும் இலவசங்களில் மயங்காமல்.. வாங்கிய கடனும் அதன் வட்டியும் உங்கள் தலையில்தான் வரியாக விடியும்! மாறாக இருபது ரூபாய் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் நாற்பது ரூபாய் வரியை குறைக்க சொல்லுங்கள்.. அனைத்து விலைகளும் தானாக குறையும்.. அதில் மீதம் உள்ள பணத்தை சேர்த்து வைத்தால் உங்கள் தேவைகளை நீங்களே நிறைவேற்றிக்கொள்ளலாம் அரசாங்கத்தை நம்பாமல்!
இந்த கட்டுரையை மட்டும் படித்துவிட்டு கழுகு ஏதோ திமுகவுக்கு மட்டும் எதிரானது என்று என்ன வேண்டாம்.. சந்தேகமிருந்தால் இதற்க்கு முந்தய கட்டுரைகளையும் படிக்கவும்! மக்களுக்கு சேவை செய்யோம் என்று பதவிக்கும் அதிகாரத்திற்கும் வந்த ஆளும்கட்சியைதான் கேள்வி காக்க முடியும்! எதிர்க்கட்சிகளிடம் கேட்டால் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஒத்துழைக்க வில்லை என்று பதில் வரும்! இருந்தும் அவர்களைப்பற்றியும் கட்டுரை வரும்.. தொடர்ந்து கழுகோடு இணைந்திருங்கள்!
கழுகுகுழுமத்தில் இணைய....
6 comments:
இன்னும் நூறு ஆண்டுகளில் தமிழகம் வல்லரசு ஆகிவிடும்
கட்டுரை அருமை
நம் இயலாமை நிஜமாவே மன உளைச்சல் தருது.. கண்முன்னாலேயே கொள்ளையர்கள்.. ஆனால் அவர்களை வழிபடும் நம் அப்பாவி ஜனங்களின் நிலைமை..
:((
தெளிவான விளக்கங்கள்.
good article.
நானும் உள்ளேன் ஐயா.....
தேர்தல் அறிக்கை 2011 கதாநாயகி (கதாநாயகன்)
http://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html
Post a Comment