வாழ்க்கையின் ஒட்டம் பொருளீட்டும் திசையில் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவசரமான வாழ்க்கை முறையில் நாம் உடல் நலனையும் பேண வேண்டியிருக்கிறது என்ற உண்மையினை மறந்து விட்டு...உடலில் வரும் சிறு சிறு வலிகளைக் கூட நாம் அசட்டையாக கவனிக்காமல் விட்டு விடுகிறோம். சாதரணமாய் ஒன்றும் நிகழாது என்ற எண்ணம் எல்லோரிடமு மேலொங்கி இருக்கும்...ஆனால் மிகப்பெரிய விடயங்களின் ஆரம்பம் கவனக் குறைவின்று நாம் கடந்து செல்லும் ஆரம்ப நிலைகள்தான் என்பதனை இக்கட்டுரை வாயிலாக உங்களிடம் பகிர்கிறோம்.
பொதுவாக நமக்கு தலைவலி போன்ற வலிகள் வரும் ஒரு மாத்திரை போடுவோம்...வலி குறைந்ததும் அடுத்து வலி வரும் வரை இதை மறந்துவிடுவோம். ஆனால் எந்த வலி/நோயாக இருந்தாலும் சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்க வேண்டும். நோய் முற்றியபின் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும். சிறிதாக இருக்கும் போதே எப்படி கண்டுபிடிக்கலாம், அறிகுறிகள் என்ன என்ன...!!? சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
தலை வலி
காலம் போகிற போக்கில் நம்மில் பல கை வைத்தியர்கள் உருவாகி விட்டனர். நம்மை அடிக்கடி வந்து பார்த்து செல்லும் விருந்தாளிகளில் ஒருவர் தான் தலைவலி. பெரும்பாலும் தலைவலிகள் சாதாரணமாய் வந்து செல்லக் கூடியவை என்றாலும் அடிக்கடி மருத்துவரின் ஆலோசனைகள் இன்றி அதிகமாக மாத்திரைகள் உட்கொள்வது நல்லது அல்ல. தொடர் தலைவலிகள் இருப்பின் மருத்துவரை கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டும். சில அறிகுறிகளின் மூலம் தலைவலிகளால் வரும் பெரிய விளைவுகளை முன்னரே கண்டு சரி செய்து கொள்ளலாம்.
அறிகுறிகள்:
வலதுபக்கம் தலைவலி இருந்தால் இடது பக்கம் கை கால்கள் மரத்து போய் உணர்ச்சிகள் குறைந்து விடும், கை கால்கள் வலி இருக்கும், இடது தோள்பட்டை வலி இருக்கும், வாந்தி மயக்கம், இடது கண் பார்வை குறைபாடு வரும். என்ன சாபிட்டாலும் வாந்தி வந்து விடும் தண்ணீர் குடித்தால் கூட, வலிப்பு (பிட்ஸ்) வரும்.
இடது பக்கம் தலை வலி வந்தால் அதே போல் வலது பக்கம் அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நிச்சயம் தலையில் கட்டி இருக்கலாம்...!
என்ன செய்யலாம்: எந்த மாத்திரைகளையும் உங்களின் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளாமலும், கைப்பக்குவங்களைப் பின்பற்றாமலும் உடனடியாக மருத்துவரை பார்த்தல் அவசியமாகிறது.
தோள் பட்டை வலி
வண்டி ஓட்டும் பலரும் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய ஒன்று இந்த தோள் பட்டை வலி. சிலருக்கு தோள் பட்டை வலி இருக்கும் ஆனால் அது தோள் பட்டையால் ஏற்படுவது இல்லை, நமது கழுத்து வலி தான் தோள்பட்டை வலியாக உணரப்படும், முதுகுதண்டு எலும்புகளை டிஸ்க் 1,டிஸ்க் 2 என்று சொல்வார்கள்.கழுத்தில் இருக்கும் ஒரு டிஸ்க் மூலம் ஏற்படுவது தான் இந்த வலி. தோள்பட்டை வலி வந்தால் அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால், ஒரு பக்கம் கை தளர்ந்து விடும் எதையும் அந்த கையால் பிடிக்க முடியாது. தோள் பட்டைவலியை அறுவை சிகிச்சை செய்யாமலும் சரி செய்ய முடியும்.
அறிகுறிகள்: கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்து இருந்தால் மரத்து போய், அது தன்னை மீறி கீழே விழுந்து விடும், கை விரல்கள் செயலிழந்து போகும், வாந்தி, மயக்கம், குனிந்து கீழே பார்க்க முடியாது.
என்ன செய்யலாம்:
கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். வண்டி ஓட்டி முடித்த பிறகு தலை மற்றும் கைகளை கொஞ்சம் ஆஸ்வாசபடுத்திக்கொள்வதும் சிறப்பு. இப்படி செய்தால் தோள் பட்டை வலி வராமல் தவிர்க்கலாம்
முதுகு வலி
இது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் பிரச்னை முதலில் சிறு வலியாக இருக்கும். அதை நாம் கவனிக்க தவறினால் பெரிய பிரச்னை ஆகிவிடும், மேல்முதுகுவலி, கீழ்முதுகு வலி, என்ற இரண்டு வகைகள் மிகவும் கவனிக்கபடவேண்டியவை, அனைவருக்கும் சாதாரணமாக வரும் முதுகு வலி என்றால், உடனே சரி ஆகிவிடும், ஆனால் தொடர்ந்து சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.
அறிகுறிகள் :
இரவில் தூக்கமின்மை, கால் மரத்து போய் விடும், கால் பெருவிரல் தானாக அசையும், தன்னால் சிறுநீர் வந்து விடும் அடக்க முடியாது, கீழே குனியமுடியாது, எப்போதும் கால்கள் மரத்தது போல் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தும், பிசியோ தெரபிஸ்ட் செய்தும் வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யவேண்டியது வரும்.
ஆனால் அறுவை சிகிச்சை செய்தால், ஒருவேளை பக்கவிளைவுகள் ஏற்படலாம், சில சமயம் அறுவை சிகிச்சையில் தவறு நடந்தாலும், (முடக்குவாதம்) இடுப்புக்கு கீழே உணர்ச்சி இல்லாமல் போய்விடும். கால்களை அசைக்க முடியாது. அதனால் முதுகு வலி தொடர்ந்து இருந்தால் உடனே கவனிப்பது நல்லது....
என்ன செய்யலாம்:
* தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்
* உறங்கும் போது நேராக படுக்க வேண்டும். முதுகு நன்றாக படுக்கையில் படுமாறு நேராக இருக்கவேண்டும். சிறிய ஒரே ஒரு தலையணை மட்டும் வைத்தால் நல்லது (தரையில் உறங்கவும்.)
* இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகதடை, மற்றும் மேடு பள்ளத்தில் வேகம் குறைவாக செல்லவேண்டும்
* கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்
* எடை அதிகம் உள்ள பொருளை தூக்க கூடாது
முதுகு வலி குறைய :
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.
எல்லா பிரச்சினைகளின் மூலமும் கவனக்குறைவு மட்டுமல்ல அலுப்புப் பட்டுக் கொண்டு மருத்துவரை நாம் பார்க்காமல் காட்டும் அலட்சியம்தான். சிறு சிறு விசயங்களையும் விழிப்புணர்வோடு அணுகி நோயற்ற பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
7 comments:
Good and sweet article. It is very useful for us.
Perungulam Ramakrishnan Josiyar.
அருமையான பதிவு. அதுவும் தேகப் பயிற்சி சொல்லி இருப்பது மிக மேன்மை.
அருமையான பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.
'வலி'மையான பதிவு
உடல் நலம் குறித்து அக்கறையான இடுகை.,
வாழ்த்துகள்
நிகழ்காலத்தில் சிவா
அருமையான பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.
Wow.. Useful post.. with necessary exercise picture..! Great work!
Best wishes!!
Post a Comment