Monday, August 01, 2011

விழித்துக் கொள்ளுங்கள் கட்சித் தொண்டர்களே...!


உணர்ச்சியின் அடிப்படையில் எம்மக்களை ஆட்டுவித்து வரும் அரசியல் கட்சிகளின் சுயநல போக்குகள் பற்றி இன்னும் எம்மக்கள் அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு கட்சியின் பின்னால் தன்னை தன்மானத் தொண்டனாய் ஒப்புக் கொடுத்து விட்டு அதன் மனோவசிய ஆளுமைக்குள் அகப்பட்டு தான் என்ன செய்கிறோம் என்று உணரமால் செயல் செய்யும் அளவிற்கு சீரழிந்து போயிருப்பது நாமறிந்த விடயம்.

இந்தக் கட்டுரை கூட.. எந்த கட்சியினரையும் சாராமல் அந்த அந்த கட்சியினை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று ஓடிக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டனின் மீதுதான் பாய்கிறது. கட்டுரையின் தெளிவுகளில் இருக்கும் சத்தியங்கள் நடுநிலைமை என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆக்ரோச கருத்துக்களை பகின்றிருப்பதை வாசித்து முடித்த பின் நீவீர் அறிவீர்கள்.
இரண்டு நாட்கள் முன்னர் தமிழகம் முழுவதுமே ஒருவித பரபரப்புடனே இருந்தது. காரணம் என்ன என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். மு.க.ஸ்டாலின் கைது என்ற அந்த பரபரப்பு செய்தி தேன் ஈக்கள் போல பரவ ஆங்காங்கே இருந்த தி.மு.க., ஆதரவாளர்கள் சாலை மறியல், கண்ணாடி உடைப்பு போன்ற அரும் பெரும் செயல்களை செய்து தமிழகத்தை பெருமைக்கு உள்ளாக்கினர்.

என்னதான் நடக்கிறது? இல்லை என்ன தான் நடந்தது? கடந்த ஜூலை 29.,ம் தேதி சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்த தி.மு.க., அனைத்து பள்ளி மாணவ, மாணவியரையும் அழைத்திருந்தது. ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த இந்த போராட்டம் ஆடி காத்துல பத்த வச்ச தீக்குச்சு போல தொடங்கிய நெருப்பு புஸ்ஸென புஸ்வாணமானது.

இருந்தாலும் 5 வருடம் தமிழகத்தையே ஆட்டி படைத்த ஒரு கட்சி சார்பில் தொடங்கப்பட்ட போராட்டம் இந்த அளவிலே முடங்கிடுமா என்ன.? திருவாரூர் மாவட்டம் கொரடச்சேரி என்னும் இடத்தில் அரசு பள்ளியை மூட சொல்லியதால் பள்ளிக்கு விடுமுறை விட்டனர். இதை தொடர்ந்து மாணவர்கள் பஸ்ஸில் பயணித்து வீடுகளுக்கு செல்ல முற்பட்ட போது ஒரு பஸ் எதிரில் வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 12வயது சிறுவன் ஒருவன் பலியானான் மேலும் 19 பள்ளி மாணவர்கள் காயத்துக்கு உள்ளாகினர்.இது நம்மில் பலருக்கு தெரிந்த விடயம் தான். தெரிந்தோ தெரியாமலோ எங்கோ ஒரு மூலையில் இந்த விபத்துக்கு இந்த போராட்டமும் ஒரு சிறிய காரணமாகி போனது.!!!

இந்த விபத்து சம்பவம் தான் ஒரு விதத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நடந்த சாலை மறியலுக்கு காரணம் என கூறலாம். இந்த சமயத்தில் மன்னார்குடி பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.க.ஸ்டாலின் கொரடச்சேரி பகுதிக்கு சென்று இறந்த மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி விட்டு திரும்பினார்.விபத்துக்கு காரணம் பள்ளிகளை போராட்டத்துக்கு அழைத்த திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தான் காரணம் என்று போலீஸார் ஒரு அருமையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக திருத்துறை பூண்டிக்கு சென்று கொண்டிருந்த ஸ்டாலின் காரை வழிமறித்து உடனிருந்த கலைவாணனை கைது செய்ய முயற்சித்து இருக்கின்றனர். சரியான ஆதராம் இல்லாமல் கைது செய்ய விடமாட்டேன் என அதிரடியாக ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட கலைவாணனை கைது செய்யும் முன்னர் என்னையும் கைது செய்யுங்கள் என்று வாதம்செய்திருக்கிறார் . உடனே அவரையும், கலைவாணன், பழனிமாணிக்கம், ஏ.கே.எஸ்.விஜயன் முதலானோரையும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 2 மணி அளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தான் விடயம்.! இது நாம் அனைவரும் அறிந்தது.பொதுவாக சாலை மறியல், ஒப்புமை வாங்காத போராட்டம் போன்ற செயல்கள் நடைபெற்றாலே பாதுகாப்பு காரணமாக போலீஸார் அவர்களை கைது செய்து அங்கே நிகழ இருந்த பரபரப்பு சூழலை தடுப்பர் இது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்த விடயம் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக காட்டுத்தீ போல பரவ தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்தது. சாலை மறியல் செய்யப்பட்டு பல மக்களுக்கு இது இடையூரா(றா)கி போனது.எனக்கு ஒன்று புரியவில்லை.! திமுக மக்களுக்காக போராடுகிறது என்று கலைஞர் சொல்கிறாரே இது மக்களுக்கான போராட்டமா இல்லை அவரது கட்சிக்கான போராட்டமா.? உண்மையில் மக்கள் மீது அக்கறை இருப்பவர் என்ன செய்யவேண்டும்.? ஜெ., தான் தீராத பகை கொண்டவர் போல கலைஞரால் கொண்டு வரப்பட்டதை நான் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். பொதுநலவாதி கலைஞராவது விட்டு தரலாம் அல்லவா.? விட்டு தருவது என்றால் அவருடைய சுயத்தை இங்கு யாரும் விட்டு தர சொல்லவில்லை. போட்டி இல்லை என்றால் ஏதோ ஒரு முடிவு பிறக்கும் தானே.! போட்டி போட்டு கொண்டு ஜெ.,வும் சமச்சீர் கல்வியை விட மாட்டேன் என சொல்வதும், கலைஞரும் அதை கொண்டு வராமல் விடமாட்டேன் என துடிப்பதும் ஆஹா ஆஹா இரண்டு ஓங்கிய கைகளிலும் சரமாரியான கொட்டு ஓங்கி ஓங்கி விழுகிறது படிக்க துடிக்கும் என் மாணவன் தலையில்.


உங்கள் இருகட்சிகளின் அரசியல் போராட்டத்தில் ஏன் மாணவர்களை பலி கடா ஆக்குகிறீர்கள்?படிக்க போகும் மாணவனை அழைத்து படிக்க போகாதே உனக்கு அருமையான படிப்பு காத்திருக்கு என்று ஆசை காட்டுகிறது ஒரு பக்கம். ஒழுங்கா படிக்க போயிடு அடுத்த வருசம் தான் உனக்கு அதெல்லாம் கிடைக்கும் என்று பயம் காட்டுகிறது இன்னொரு பக்கம்.!!! ஒன்றுமே புரியாமல் விழிபிதுங்கிய மாணவர்கள் திகைத்து போய் நிற்கின்றனர். சமச்சீர் கல்வி வருகிறதோ இல்லையோ இங்கே தமிழகத்தின் அமைதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு தான் வருகிறது. இதற்கு யாரை குறை சொல்வது என்பதே ஒரு பெரிய கேள்வி குறியாகி போகிறது...!!!கலைஞர் போன இடத்தில் ஒய்யாரமாக அமர்ந்த ஜெ., எந்த ஒரு விமர்சனத்திற்கும் அஞ்சாமல் தெளிவாக குழப்பமான முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு யாரை குறை சொல்வது.? சமச்சீர் கல்வி ஒரு பக்கம் அமைதியை அழித்தால் இன்னொரு பக்கம் நில மோசடி போன்ற பூசல்கள். ஜெ., ஆட்சிக்கு வந்ததும் தனிக்குழு அமைத்து நில மோசடி புகார்களை கண்காணிக்க செய்யப்பட்டது நாம் அறிந்ததே.!!அதற்கு காரணம் என்ன.? திமுக ஆட்சி காலத்தில் மிரட்டி நிலத்தை வாங்கும் செயல் தலை விரித்து ஆடியது என்பது பலருக்கு தெரியாத உண்மை. இதில் நேரடியாக திமுகவின் பெரும் புள்ளிகள் ஈடுபட்டனர். திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியை திமுக.,வின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கேட்டு மிரட்டியது முதல் சென்னைக்கு அப்பாற்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களை மிரட்டி வாங்குவது போன்ற செயல்கள் போன ஆட்சியில் குறிப்பிடப்பட வேண்டியவை.இதை தோண்டி எடுத்தால் திமுக.,வின் பெரும் புள்ளிகள் பலரை சிறையில் அடைத்து சுகம் காணலாம் என்று ஜெ., நினைத்தார். அச்செய்கையில் சிறிய வெற்றியையும் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சமீபத்தில் இதன் விவகாரமாக கைது செய்யப்பட்டார். இதுவும் ஆங்காங்கே பதற்றம் ஏற்பட காரணம் ஆகி போனது. சரி., ஜெ., கலைஞருக்கு எதிராக செயல்பட்டாலும் இந்த விடயத்தில் ஒரு சிறப்பான செயல்பாட்டை தானே செய்கிறார் என்று உங்களுக்கு தோன்றலாம்...!!!சமீபத்தில் அதிமுக.வின் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் அதிமுக அமைச்சர் மீது நில மோசடி புகார் அளித்துள்ளார். அதுவும் அம்மையார் ஆரம்பித்த அதே சிறப்பு குழுவிடம். இந்த மனு அப்படியே கை மாறி கை மாறி இறுதியில் திருவண்ணாமலை பார்ட்டி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கும்மு கும்முனு கும்முவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அலறி அடித்து ஓடிய திருவண்ணாமலை பார்ட்டி அங்கு சென்றதும் தெரியாமல் கேஸ் கொடுத்துவிட்டேன் என்று தலை தெறிக்க ஓடி இருக்கிறார்.ஒரே குழப்பமாக இருக்கிறதே.!! இந்த குழு நில மோசடி காரர்களை கண்டுபிடிக்க கொண்டுவரப்பட்டதா இல்லை திமுக.,காரர்களை தாக்க கொண்டுவரப்பட்டதா.? ஒன்றுமே புரியவில்லையே.!!!

இது மாதிரி சமாச்சாரங்களை பார்த்து தமிழகத்தின் குழந்தை முதல் பெரியவர்கள் வரை கையை எடுத்து கன்னத்தில் வைத்து சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.!!!

அரசியல் செய்யும் மும்முரத்தில் தன் குழந்தைகளின் கல்வியை பாழ்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்பது இரு கழக தொண்டர்களுக்கு புரியவில்லையா என்ன.?

தொண்டனே உன் கட்சி விழிக்காது... ஆனால் நீ விழித்துக்கொள்ளலாம்..!! விழித்தெழு தொண்டனே!!! உன் கட்சியின் கொள்கையில் அவிழ்த்துவிடப்பட்ட கோவணம் போல காற்றில் பறக்கிறது. உன் கட்சியின் கோவணம் உன் குடும்பத்தாரின் கழுத்தை நெரிக்கிறது. அதன் கொள்கையை காப்பாற்ற வேண்டாம், அதன் அநியாயத்திற்கு துணை போகாமல் இரு..!!


உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் உன் குடும்பத்துக்கு தொண்டனாக இரு..!! உன் கட்சி தானாக உன் வழி தேடி வரும்... தொண்டனே மறியல்களில் ஈடுபட்டு வன்முறையில் திளைத்து மற்றவர்களையும் வன்முறைக்கு இழுக்காதே!!!!

விழித்துக்கொள் தொண்டனே!! உன் கொள்கையை சீண்டி செயல்படும் உன் கழக கட்சிகளுக்கு எதிராக குரலை எழுப்புவதற்கு கிஞ்சித்தேனும் தயங்காதே...!!!
மலரட்டும் தன்மான தமிழகம் அதில் அழிந்தொழியட்டும் சுயநல அரசியல்.
கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

13 comments:

Chitra said...

அசிங்கரசியல் கட்சிகள் தான் மாறி மாறி வருகின்றன. தொண்டர்கள் மட்டும் அல்ல ...தமிழர்களும் விழித்துக் கொள்ள வேண்டும்.

Rathnavel said...

இவர்களுக்கு பிரச்னையைப் பற்றி கவலையில்லை. இவர்களைப் பற்றி செய்திகள் தினமும் செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் வரவா வேண்டும். அவ்வளவு தான்.
அவர்களுக்கு ஏதாவது அவசரமான பிரச்னை என்றால் ஆளுநர் மாளிகைக்கு ஓடுவார்கள். சாலை மறியல் செய்ய வேண்டியது தானே?
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

பலே பிரபு said...

உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி...

kkk said...

In the samacheer kalvi issue ,Jayalalitha and the public are fighting each other.Pl refer the High court and supreme court cases, no where dmk is fighting. The fact is if Karunanidhi has taken this particular stand of Jayalalitha in the case of Samacheer kalvi , then all the media ,court, and public would have criticized karunanidhi as the worst man.But here Jaya is doing the most careless act and still Karunanidhi is being criticized by you, for no fault of him in samacheer kalvi issue.

ராஜ நடராஜன் said...

//சமீபத்தில் அதிமுக.வின் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் அதிமுக அமைச்சர் மீது நில மோசடி புகார் அளித்துள்ளார். அதுவும் அம்மையார் ஆரம்பித்த அதே சிறப்பு குழுவிடம். இந்த மனு அப்படியே கை மாறி கை மாறி இறுதியில் திருவண்ணாமலை பார்ட்டி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கும்மு கும்முனு கும்முவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அலறி அடித்து ஓடிய திருவண்ணாமலை பார்ட்டி அங்கு சென்றதும் தெரியாமல் கேஸ் கொடுத்துவிட்டேன் என்று தலை தெறிக்க ஓடி இருக்கிறார்.//

கடந்த கால ஆட்சி தி.மு.கவினுடையதென்பதால் பதிவுலகில் நிறைய தி.மு.க சார்ந்த எதிர்வினைகளே அதிகம்.அ.தி.மு.கவும் அதே தவறுகளை செய்கிறதென்றால் பெயர் முதற் கொண்டு அம்பலப்படுத்துவதும் அவசியமான ஒன்று.

தேவையற்ற போராட்டங்கள் இல்லாத தமிழகம் தி.மு.க,அ.தி.மு.க என்ற இரண்டு ரவுடி பயில்வான்கள் இருக்கும் வரை சாத்தியமில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் செய்யும் போராட்டங்களுக்கும்,தி.மு.க தற்போது செய்த போராட்டத்துக்குமுள்ள வித்தியாசத்தை தமிழகம் உணர்வது அவசியம்.

நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.

ரேவா said...

விட்டு தருவது என்றால் அவருடைய சுயத்தை இங்கு யாரும் விட்டு தர சொல்லவில்லை. போட்டி இல்லை என்றால் ஏதோ ஒரு முடிவு பிறக்கும் தானே.! போட்டி போட்டு கொண்டு ஜெ.,வும் சமச்சீர் கல்வியை விட மாட்டேன் என சொல்வதும், கலைஞரும் அதை கொண்டு வராமல் விடமாட்டேன் என துடிப்பதும் ஆஹா ஆஹா இரண்டு ஓங்கிய கைகளிலும் சரமாரியான கொட்டு ஓங்கி ஓங்கி விழுகிறது படிக்க துடிக்கும் என் மாணவன் தலையில்.


உண்மைதான் சகோ...இருவருக்குள்ளும் இருக்கும் போட்டியால், பாதிக்கப் படுவது என்னவோ மாணவர்கள் தான், பள்ளி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் கல்விக்கான முடிவில் இன்னும் மாற்றம் வராதது மக்கள் மத்தியில், மாணவர் மத்தியில் ஏமாற்றத்தைத் தான் விட்டுச்செல்கிறது....இந்த அரசியல் என்னும் கவட நாடகத்தில், வேஷம் போடுபவர் பிழைத்துக் கொள்கிறார்...வேடிக்கை பார்ப்பவரே மாட்டிக் கொள்கிறார்....
கடந்த ஐந்தாண்டில், ஊழல் வளர்ச்சி அதிகம் என்றால், இந்தாண்டின் தொடக்கத்தில் பலிவாங்குதலும், பலிதீர்த்தலுமே தொடர்ந்து வருகிறது..இதில் மாணவர் நிலைமை வருத்தத்தை தான் விதைக்கிறது...வழக்கம் போல தெளிவான விளக்கம்..எந்த கட்சியையும் சாடாமல், பொதுவாய் வைத்த இந்த பதிவு, கட்சி தொடண்டர்கள், மாணவர் நலன் என்று
பொதுமக்கள் தரப்பு பிரச்சனைகளை எடுத்துக்காட்டிய விதம் அருமை...வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.....

தம்பி கூர்மதியன் said...

@kkk: வருகைக்கு நன்றி..! பெரும்பாலும் ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான மக்கள் சார்புடைய வழக்குக்கு எதிர் அரசியல் கட்சி ஆட்கள் வழக்கு பதிப்பதில்லை. மாறாக தூண்டப்பட்ட மக்களின் ஒருவரே வழக்கு பதிப்பர். இங்கும் அதுவே நடந்திருக்கிறது.! மேலும் திமுக சமச்சீர் கல்வி வேண்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுகொண்டு தான் இருக்கிறது...!! அதற்கு திமுக.,வினர் சொல்லும் காரணம் மக்களின் நலன் இதில் புதைந்திருக்கிறது என்று.. அது உண்மையாகவும் இருக்கலாம்.. ஆனால் தொடர்ந்து இந்த ஆண்டே திமுக.,வினர் கொண்டு வர வேண்டும் என்று சொல்வதும், அதிமுக., இப்போது கொண்டு வரவேண்டாம் என்று சொல்வதும் எம் மாணவர்கள் படிப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனரே.!!! சமச்சீர் கல்விக்கு அதிமுக.,வுக்கும் சரி, திமுக.,வுக்கும் சரி ஆதரித்து பேசும் நபர் கொஞ்சம் அங்கே ஓய்ந்து போய் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் எதிர்கால இந்தியாவாகிய மாணவ சமுதாயத்தை பார்த்துவிட்டு வாருங்கள்...!!

பாஸ்கர்.கே said...

ஆளும்கட்சிக்கு மாணவர்கள் மீது அக்கறை இல்லை எதிர்கட்சிகளுக்கு(?) மக்களைப்பற்றி அக்கறை இல்லை...மாறாக எரிகிற வீட்டில் புடிங்கிய வரை லாபம் என்று திமுக மாணவர்களை வைத்து இழந்த செல்வாக்கை மீட்க்க பார்க்கிறது.. அதற்குதான் இந்த அரைவேக்காட்டுதனமான போராட்டம் எல்லாம்... மாறாக உண்ணாவிரதம் அல்லது மௌன ஊர்வலம் போன்ற மக்களுக்கு பிரச்னை இல்லாத போராட்டங்களை பண்ணவேண்டியதுதனே?

கவின் இசை said...

ஒன்றாம் வகுப்பில் சமச்சீர் கல்வி சில்பஸ்ல படிச்ச மாணவன் இரண்டாம் வகுப்பில் திடீர்ன்னு பழைய பாடத்திட்டம் படிக்க சொன்னா குழப்பமடையமாட்டானா?

ஜெ. அப்படித்தான் இருப்பாங்க.. அது டேக்கன் பார் கிராண்டட். ஆனால் ஆட்சில இருந்தாலும் இல்லைன்னாலும் கலைஞ்ர்தான் விட்டுக் குடுக்கணும். நல்ல நியாயங்க.

மக்கள் நலனை காப்பாத்துவாங்கன்னு தானே ஆளும் கட்சிக்கும், சோ கால்டு எதிர்க் கட்சிக்கும் ஓட்டு போட்டாங்க மக்கள்.அவங்கள காப்பாத்த சொல்லுங்க. திமுககாரங்க பாவம்.மொதல்ல பொய் கேஸ்கள்ல இருந்து அவங்கள காப்பாத்திக்கட்டும்.

Anonymous said...

ஸ்டேட் போர்ட் ம‌ற்றும் மெட்ரிக் பாட‌திட்டங்க‌ளோடு ச‌ம‌ச்சீர் பொதுபாட‌திட்ட‌த்தை ஒப்பிடுவ‌து த‌வ‌று...

இதுவ‌ரை ஸ்டேட் போர்ட் ஆக‌ட்டும் மெட்ரிக் ஆக‌ட்டும் மாண‌வ‌ர்க‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ வ‌ச்சு மார்க் எடுக்க‌ வைக்குற‌துல‌ தான் எல்லா ப‌ள்ளிக‌ளுமே மும்முர‌மா இருந்த‌ன‌...அதுக்கு சாத‌க‌மா தான் தேர்வு முறையும் இருந்த‌து.

புத்த‌க‌த்தை முழுமையா ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணாலே போதும். முழு ம‌திப்பெண் கிடைக்கும் அப்ப‌டிங்க‌ற‌ப்ப‌ புரிந்துப‌டிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. அவ‌ங்க‌ எதுக்கு மாண‌வ‌ர்க‌ளுக்கு புரிய‌வ‌ச்சு சொல்லி கொடுக்க‌னூம்னு ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ ம‌ட்டுமே வ‌ச்சாங்க‌. இது தான் எதார்த்த‌ உண்மை.

ஸ்டேட் போர்டுக்கும் மெட்ரிக்கும் உள்ள‌ வித்தியாச‌ம் என்ன‌ன்னு பார்த்தா

ஸ்டேட் போர்டு = 30 குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌து

மெட்ரிக் = 300 குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌து


300 குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌துனால‌ அவ‌ங்க‌ள‌ பெரிய‌ ப‌டிப்பாளின்னு சொல்லிட‌ முடியாது...

Anonymous said...

சில‌ உதார‌ண‌ங்க‌ள்

"மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் 'நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப்பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங்கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள்."

==========================================

'சரி, உண்மையிலேயே சமச்சீர் கல்விக் கான பாடங்களின் தரம் குறைவானதாகத்தான் இருக்கின்றனவா?'' என்றபடி, அந்த பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்தோம். இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பெயர்கள் வெளிவருவதை விரும்பதாவர்களாகப் பேசிய அவர்களின் குரலில், ஏகத்துக்கும் வேதனை யின் வலி.

''நடைமுறையில் இருக்கும் கல்வி, குருவித் தலையில் பனங்காயை வைத்துப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. அதாவது, தேவையற்ற மன அழுத்தத்தை மாணவர்களுக்கு உண்டாக்கும் அளவுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பல காரணங்களுக்காகத்தான் சமச்சீர் கல்வியே உருவானது. ஐந்தாவது படிக்கிற மாணவனுக்கு என்ன தெரிய வேண்டுமோ... அதை, செயல்வழிக் கற்றல் எனும் முறையில் அந்த மாணவன் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் பாடத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடமும் மாணவனின் ஆளுமையை, அறிவை, சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சுயசிந்தனையை வளர்க்காத பாடத் திட்டத்துக்குப் பழக்கப்பட்ட மாணவர்கள், மூன்றே மாதங்களில் மனப்பாடம் செய்து ஒப்பித்து மார்க் வாங்குவதில் என்ன பலன் இருக்கும்?’' என்று கேள்வி எழுப்பியவர்கள்,

''இத்தனைக்கும் வெறும் ஆசிரியர் குழு மட்டுமே ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இவற்றையெல்லாம் தயாரிக்கவில்லை. எழுத் தாளர்கள், குழந்தை மனநல மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசிய அளவில் புகழ் பெற்ற நிபுணர்கள் என்று பலரையும் வைத்துத்தான் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி = விக‌ட‌ன்

Anonymous said...

மேலும் எப்ப‌ பார்த்தாலும் பிள்ளைங்க‌ளை ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ வைக்கிற‌துல‌ எப்ப‌டி அவ‌ங்க‌ அறிவு வ‌ள‌ரும்.

இது எல்லாத்துக்கும் மாற்று தான் இந்த‌ ச‌ம‌ச்சீர் முறை....

ஒரு உதார‌ண‌ம் நாம் தாவ‌ர‌விய‌ல் பாட‌த்துல‌ இலைக‌ள் ப‌த்தியும் அது வ‌கைக‌ள் ப‌த்தியும் ப‌டிக்க‌றொம்...அதை க‌த்துக்க‌


ப‌ழைய‌ க‌ல்வி முறைப்ப‌டி (மெட்ரிக் + ஸ்டேட் போர்ட்)

ஆசிரிய‌ர் : இது தான் இலைக‌ள் ப‌த்தின‌ பாட‌ம் ரொம்ப‌ முக்கிய‌மான‌ கேள்வி...தொட‌ர்ந்து 5 வ‌ருஸ‌மா ப‌ழைய‌ கொஸ்டின் பேப்ப‌ர்ல‌ கேட்டுக்கிட்டே இருக்காங்க‌...ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணிக்கோங்க‌... முக்கிய‌மா ப‌ட‌த்த‌ வ‌ரைச்சு வ‌ரைஞ்சு பாருங்க‌...எழுதி எழுதி பாருங்க‌...அப்ப‌ தான் ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ஆகும்.


அதுக்கு டிப்ஸ் வேற‌ கொடுப்பாங்க‌ பாருங்க‌.

வ‌ல்லாரை சாப்பிடு (நியாப‌க‌ச‌க்திக்கு), காலையில‌ எழுந்த‌துமே ப‌டிச்சா ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ஆகும். அப்ப‌டியே ம‌ன‌சுல‌ ப‌திஞ்சிடும்....

மாண‌வ‌ன் உண்மையிலேயே அந்த‌ பாட‌த்தை க‌ற்று கொள்ள‌ ச‌ந்த‌ர்ப்ப‌மே கொடுக்க‌ற‌து இல்ல‌....

=============

ச‌ரி இதுவே ச‌மச்சீர் ப‌டி எப்ப‌டி இருக்கும்னு பார்ப்போம்.

ஆசிரிய‌ர் : எல்லோரும் உங்க‌ வீட்டுக்கு ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ ம‌ர‌ம், செடி, கொடில‌ இருக்க‌ற‌ இலை, பூ ப‌த்தி நோட் ப‌ண்ணி ஒரு நொட்புக்ல‌ எழுதி கொண்டு வாங்க‌...அத‌ ப‌த்தி நாம‌ கிளாஸ்ல‌ டிஸ்க‌ர்ஸ‌ன் ப‌ண்ண‌லாம்.... நாளைக்கு மினிம‌ம் ஒரு 10 வ‌கையான‌ இலைக‌ள் கொண்டு வ‌ர‌ணும்...(இது தான் ஹோம் ஒர்க்).


அடுத்த‌ நாள் ஆசிரிய‌ர் மாண‌வ‌ர்க‌ள்கிட்ட‌ இருக்க‌ற‌ வித‌வித‌மான‌ இலைக‌ளை வ‌ச்சு அந்த‌ இலைக‌ளை வ‌கைப்ப‌டுத்துறார். ஒவ்வொரு மாண‌வ‌ர்க‌ளும் தான் பார்த்த‌ செடி, கொடி ப‌த்தி விள‌க்க‌ம் கொடுக்க‌றாங்க‌.

இப்போ புத்த‌க‌த்தின் துணையோடு அதை ப‌த்தி விள‌க்க‌ம் கொடுக்க‌றார்...சில‌ கேள்விக‌ளை மாண‌வ‌ர்க‌ள் கிட்ட‌ கேட்கிறார்...அவ‌ர்க‌ள் இப்பொ தான் க‌ற்கிறார்க‌ள்...அதுக்கு பிற‌கு புரிந்து கொள்கிறார்க‌ள்...

Anonymous said...

இந்த‌ க‌ல்வி முறை எப்ப‌டி இருக்கு....இப்ப‌டி தான் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐஜிசிஎஸ்சி போன்ற‌ க‌ல்வி முறைக‌ள் பாட‌ம் ந‌ட‌த்திக் கோன்டு இருந்த‌ன‌...அதுனால‌ தான் அவ‌ங்க‌ளால் ஐஐடி,ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற‌ க‌ல்லூரியில் எளிதாக‌ நுழைய‌ முடிந்த‌து...இந்த‌ முறையை முத‌ன்முத‌லாக‌ பொதுபாட‌திட்ட‌ம் வ‌ழியாக‌ நம் மாண‌வ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ப் போகுது... சோ மெட்ரிக் கூட‌ ச‌ம‌ச்சீர் க‌ல்வி முறையை ஒப்பிட‌முடியாது....ஆங்கில‌ம் க‌ற்பிப்ப‌து த‌விர‌ அதில் பிர‌மாத‌மாக‌ ஒன்றும் இல்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes