Monday, September 05, 2011

இணையம் என்னும் அமுத சுரபி...! இணையப் பொதுவெளி பயன்பாடுகள் பற்றிய பார்வை..!




இன்றைய காலக்கட்டங்களில் 'இணையம்' என்ற ஒற்றைக்கருவி, உலகையே ஆட்டுவிக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புரட்சி என்பது களத்தில் நின்று கலகம் செய்வதென்ற மையத்திற்கே அடித்தளமாக, இப்போது இணையமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .இப்படிப்பட்ட இணையமென்ற மாபெரும் சக்தியை, மக்கள் சக்தியாக்கி மகத்தான வெற்றிகளை சமகாலத்தில் பலநாட்டு சாமானிய மக்களும் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். இதற்கு உதாரணங்கள் தேவையில்லையென்றே கருதுகிறோம்.இணையத்தைப்பற்றிய எல்லா விடயங்களும் நாம் அறிந்தததே!

இணையவாதிகளான நாம், இணையமென்ற கடவுளின் தூதர்களாகவே செயல்பட வேண்டிய அவசியத்தை விவரிப்பதே, இந்த பதிவின் சாரம்சம் என்பதை தெரிவித்துக்கொண்டு தொடர்கிறோம்.

நாம் வழமையாக இணைய செயல்பாடுகள், குழும விவாதங்கள் மற்றும் வலைத்தளம் ஊடாகவே இருந்து வருகிறது.இப்போது இன்னும் விரிவாகி, சமூக பொதுதளங்களான பேஸ்புக், கூகிள் பஸ், ட்விட்டர் வரையிலுமாக செயல்பட்டு வருகின்றோம். அதுவும் மிக விரைவான/ விரிவான கருத்து பரிமாற்றங்களால் நொடிக்குநொடியிலான பலதரப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன.

கருத்து பரிமாற்றம் என்பது நாம் அனுபவித்துணர்ந்த செயல்களின் வழிமுறைகளையும், அதன் நிறை-குறைகளையும், அதன் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இணைய பொதுவெளிகளில் வைத்தால் அது போற்றுதலுக்குரியது. தமக்கு நேர்ந்த இன்பதுன்ப நிகழ்வுகளை சமாளித்து, அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை மற்ற தோழமைகளுக்கும் பகிர்தலே,கருத்து தெளிதல்களுக்கு வித்திடும்.ஆனால், பெரும்பாலான இணையவாதிகளின் பார்வையில், பகிர்தல் என்பதை வேறொரு கோணத்திலேயே அணுகப்படுகிறது என்பதையே நாம் அவதானித்து வந்திருக்கிறோம்.

"ஒவ்வொரு தனிநபரின் ஒழுக்கமே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒழுக்கம்" என்பதையே, 'கழுகு' பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த இணையத்தின் ஊடாகவே, நாமெல்லாம் இன்று நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக இணைந்துள்ளோம். பெரும்பான்மையாக, முகம் பார்க்காமல் எழுத்தோடு நட்பு பாராட்டி பின்பு குரலோடு உறவாடி, அதன் அடுத்தகட்டமாய் நேரடியாக சந்தித்து ஒரு நட்பின் இணக்கத்தை வளர்த்துக்கொண்டு வருகிறோம்.இப்படிப்பட்ட நட்பினை தந்த இணையத்தை, இன்று பலரும் தன் சுயதம்பட்டங்களை மட்டுமே எழுத்துகளாக்கி இம்சை தருவது, தேவையா என்பதே நமது கேள்வி

இந்த சுயதம்பட்டங்களை பொதுவெளியில் பரிமாற்றங்களாக பகிரப்படும்போது, இணையத்தில் இயங்கும் ஆண்-பெண், இளையோர்-மூத்தோர் என்ற பாகுபாடின்றி பலதரபட்டவர்களுக்கும் இது சென்றடைகிறது. சுயதம்பட்டங்கள் மட்டுமின்றி தான் சார்ந்த கருத்துசார்புகளை புகழ்ந்து எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு எதிர்சார்பு கொள்கையுடைய தனி நபர்களைக்கூட மத/சாதீய ரீதியில் தாக்கி, இழிவான முறையில் எழுதும் இணையவாதிகளை, இணையவெளியில் காணும்போது வருத்தமாய் இருக்கிறது.பொதுவாக இணையங்களில் ஏற்படும் விவாதங்களில் மையக்கரு குறுப்பிடத்தக்க சிலவற்றை சார்ந்ததாவே இருக்கும்.

இனம்/மதம்/சாதீய ரீதியில் ஏற்படும் விவாதங்கள், ஆத்திக - நாத்திக முரண்பாடுகள், அரசியல் கொள்கைகளில் எதிரெதிர் அரசியல் சார்புநிலை கொண்டவர்களின் மோதல்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகத்தின் கதாநாயகர்கள், நாயகிகளின் விமர்சனங்களென இதுபோன்ற இன்ன சில விவாதங்களே அதிகம் இடம்பெற்று வருவதையே நாம் கண்டுவருகிறோம்.

 ஒரு காலத்தில் நல்ல விடயங்களையும் நல்ல பண்புகளையும் பொது வெளியில் பகிர்வது அந்த தனிப்பட்ட மனிதரை நல்லவராக அடையாளம் காட்டும் ஆனால் சம காலத்தில் நான் எதார்த்தமாய் இருக்கிறேன் பேர்வழி என்று தனிப்பட்ட தங்களின் அந்தரங்கங்களையும், இன்ன பிற சமுதாயத்தால் தீங்கு என்று நாம் நினைக்கும் பல விடயங்களை பகிங்கரமாகவே பொது வெளியில் மனிதர்கள் பகிர்வதும் அதனை ஆமோதிப்பது போல மனிதர்கள் இவர்க்ளைச் சுற்றி வலம் வருவதும் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும்...!

யாருக்கும் தெரியாமல் செய்யும் ஒரு செயலை பொதுவெளியில் பகிங்கரப்படுத்தப்படுவதாலேயே அது நல்ல செயல் ஆகிவிடுமா? சிந்திக்க வேண்டும் தோழமைகளே....! ஏனென்றால் வளரும் சமுதாயம் இது ஒரு போன்ற கவர்ச்சிகளைக் கண்டு இதை ஒரு நாகரீகமாக கருதத் தொடங்கினால்...?  சற்றே நம் வீட்டுப் பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்து எண்ணிப் பாருங்கள்...!

கிராமத்து டீக்கடைகளிலும், சிறுநகரத்து சலூன்கடைகளிலும் நடைபெறும் வெற்று வாதங்களாகவே, பெரும்பாலான இணைய விவாதங்கள் அமைகின்றன.மேலும் இம்மாதிரியான விவாதங்களில், தான் சொன்ன கருத்தில் கொஞ்சமும் உண்மை இல்லையென்றாலும் கூட, தான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பது போன்ற கடைசிவரை விதண்டாவதாமாய் பேசிக்கொண்டு, முடியாதபட்சத்தில் தனிநபர்களை குறிவைத்து (சாதி/மதம்/இன ரீதியிலான) வசைசொற்களால் அர்ச்சனை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அடுத்தவர்களை காயப்படுத்தாத தன்னைசார்ந்த எந்தவொரு நிகழ்வுகளை பொதுவெளியில் பகிர்வது சரியானதே. நான் இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டேன், நான்கு சவரனில் வளையல் வாங்கினேன் என்பது கூட இடம்பொருள் ஏவலுக்கு தகுந்தற்போல, சிறுதகவலேனும் கிடைக்கும் என மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாம். மாறாக மதத்தை தாக்குவது, சிலரது நம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பது என்பது மட்டுமே தவறு. இதே வாய்ப்பு எதிராளிக்கும் உண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுவதால்தான் சண்டையே வருகிறது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதுகூட மற்றவர்களின் மனங்களை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்

நாம் பகிரும் கருத்துக்கள் அடுத்த மனிதரை ஊக்கப்படுத்துவதாய், புதிய செய்திகளைப் பகிர்வதாய், நகைச்சுவையூட்டி சிரிக்கச் செய்வதாய் இருக்க வேண்டும் மாறாக தாழ்வு மனப்பான்மையும், எரிச்சலையும் ஊட்டுவதாய் இருக்கக் கூடாது. நண்பர்களுக்குள்ளான பிரைவேட் ஆப்சனில் யாருக்கு என்ன பிரியமோ அதை பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை.. ஆனால் பொதுவெளியில் நாகரீகத்தை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென சொல்ல எங்களுக்கு உரிமையில்லையென்றாலும், இதுமாதிரியெல்லாம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை, அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்து பகிர்வது எங்களது கடமையாக கருதுகிறோம். இந்த கட்டுரையின் வாயிலாக, உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்து பார்க்க, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதை எங்களது பணியாக கருதுவதால் இங்கே பகிர்கிறோம்.

மேற்சொன்ன பதிவின் சாராம்சமான, "தனி நபரை தாக்கும் வகையிலோ யாரையும் ஏளனம் செய்யும் வகையிலோ, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன் படுத்தியோ, எனது சொந்த அன்றாட நடவடிக்கைகளை வெளியே கூறி தம்பட்டம் அடித்தோ, சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் எந்தவித கருத்துக்களையும் இணையமென்ற பொதுவெளியில் பகிரமட்டோம்" என்பதை இங்கே உறுதிமொழியாய் எடுத்துக்கொண்டு, மனநிறைவோடு இப்பதிவை நிறைவு செய்கின்றோம்.




கழுகிற்காக

 இரா.ச.இமலாதித்தன்



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



7 comments:

ஷர்புதீன் said...

useful post!

Rathnavel Natarajan said...

நாம் பகிரும் கருத்துக்கள் அடுத்த மனிதரை ஊக்கப்படுத்துவதாய், புதிய செய்திகளைப் பகிர்வதாய், நகைச்சுவையூட்டி சிரிக்கச் செய்வதாய் இருக்க வேண்டும் மாறாக தாழ்வு மனப்பான்மையும், எரிச்சலையும் ஊட்டுவதாய் இருக்கக் கூடாது.

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

எல் கே said...

முதலில் உங்கள் குழுமத்தில் இருக்கும் யாரும் இத்தகைய தனிமனிதத் தாக்குதலில் ஈடுப்பட்டதோ இல்லை ஈடுபடுவதோ இல்லை என்று உறுதித் தர இயலுமா ???

(இது பப்ளிஷ் பண்ணுவீங்களா ??)

எல் கே said...

//இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் - நேரடியாக பேசும் குணம் இல்லாமல் போனால் கூட, குறைந்தபட்சம் பஸ்லயாவது தனியாக கேலி பண்ணி கும்மியடிக்கும் நண்பர்களை விட, அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் பச்சோந்தி தனமான கார்த்திக் (எல்கே) போன்ற நபர்களை இந்த நிகழ்வு மூலம் என்னால் அறிந்துகொள்ள முடிகிறது.//

தேவா இது எந்த வகையில் வரும் என்று சொல்ல இயலுமா ? இந்தக் கட்டுரையை எழுதியவரே இதை சொல்லியிருக்கிறார்

வைகை said...

நான் முன்பு ஒருமுறை என் பதிவில் சொன்னதுபோல அறிவுரையும் விழிப்புணர்வும் வேப்பெண்ணை போலதான்... கொடுப்பது எளிது குடிப்பது கடினம்! இது எனக்கும் பொருந்தும்... ஆனால் ஒரே நேரத்தில் இந்த பக்கம் கொடுத்துக்கொண்டு அந்தப்பக்கம் துப்பிய நிகழ்வை இன்று பார்க்கவைத்ததுக்கு நன்றி! இதை தவிர்த்து பார்த்தால் கட்டுரையின் கருத்துக்களுடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு! :))

அம்பலத்தார் said...

நல்லாச் சொன்னிங்க

Anonymous said...

இனி வரும் காலங்களில் இணையம் என்பது எல்லோர் வீட்டிலும் சர்வ சாதாரண ஒன்றாகிப் போய் விடும். நம் பிள்ளைகளும் இனி வந்து இந்த இணையத்தில் பழங்குவார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்காக நாம் இங்கே எதை எழுதி விட்டு செல்கிறோம் என்பதையும் ஒரு நிமிடம் யோசிப்போம். பஸ், ப்ளாக் இவைகள் எல்லாம் நம்முடைய பெர்சனல் ஃப்ரெண்ட்ஸ்க்கான க்ரூப் சேட் அல்லவே. கூகுளில் செர்ச் போட்டு தேடினால் கிடைத்துவிடுமே. கவனத்தில் கொள்வோம். இங்கே நாம் எதை விதைக்கிறோம் என்பதை. பயன்படுத்தும் வார்த்தைகளையும் கவனத்தில் கொள்வோம். நம் பிள்ளைகளுக்கு நாம் பயன் படுத்திய வார்த்தைகள் எந்த அளவிற்கு அவர்கள் மனதில் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதைக் கருத்தில் கொண்டு இங்கே மாற்றுக்கருத்துக்களே ஆயினும், நாகரீகமான முறையில் பேசிப்பழகுவோம்.

# இது ஊருக்கு உபதேசம் இல்லை.கற்றுக் கொள்கிறேன்..கற்றுக் கொள்வோம். ..

# நம்ம தமிழ் இணையத்துலயும் நாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களும், ஆரோக்கியமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெறாதா?

By
மகேஷ்வரி

தமிழ் இணைய நண்பர்கள் அனைவரும் வாசிக்க வேண்டியது
Must read this

http://www.oodaru.com/?p=3207

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes