Friday, September 02, 2011

வாசிப்பினை நேசிப்போம்...! புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..!





கடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் ஆனால் நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்ற ஒரு நிலை வர வேண்டும். சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் புத்தக வாசிப்பு என்னும் அற்புத பழக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் கட்டுரைக்குள் நுழைவோம்.



வாழ்க்கையில் நமக்கு சுவாரஸ்யங்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொன்றும் நம்மை ஒவ்வொரு விஷயத்துக்கு அழைத்து செல்லும் காரணிகள். அந்த வகையில் புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒரு தனி உலகத்தில் நாம் வாழ்வது போன்றது. அவற்றை வாசிப்பது என்பது நாம் சுவாசிப்பது போன்று. அத்தகைய புத்தக வாசிப்பினை மேம்படுத்துவது எப்படி?

 தொலைக்காட்சி மட்டும் இருந்த காலத்திலும் சரி அது இல்லாத காலத்திலும் சரி புத்தகங்கள் நிறைய பேருக்கு எப்போதும் ஒரு நெருங்கிய தோழனாக, இருந்தது உண்டு.

ஆனால்


இன்று புத்தகம் படிப்பவர்கள் எத்தனை பேர்? என்பதுதான் கேள்வி. புத்தகம் என்றால் வெறும் வார இதழ்கள் படிப்பது அல்ல. கட்டுக்கட்டாய் இல்லாவிட்டால் கூடா குட்டிக் குட்டியாய் நாவல், கட்டுரைகள், அரசியல், என இன்னும் ஏகப்பட்ட வகையில் உள்ளன.

என் கையில் ஒரு ஆனந்த விகடனோ, குமுதமோ இருந்தால் அதை வாங்கி சினிமா பற்றி படிக்கும் நண்பர்கள் அதில் உள்ள அரசியல், கட்டுரைகள், கவிதை இவற்றை மறந்தும் கூட கவனிப்பது இல்லை. இதற்கே இந்த நிலைமை என்றால் நான் கையில் ஒரு நாவலோ, இலக்கியமோ வைத்து இருந்தால் என்ன நடக்கும் என்பது என்பது உங்களுக்கே தெரியும்.

நம்மவர்களிடம் நூலகங்கள் குறித்துக் கேட்டால் ஒருவரிடமும் சரியான பதில் இல்லை. இன்று பெரும்பாலான ஊர்களில் நூலகம் உள்ளது. எல்லா விதமான புத்தகங்களும்அங்கே உள்ளன. ஆனால் இன்று அவை கண்டுகொள்ளாத சவலைப் பிள்ளையாய் இருக்கின்றன.

இன்றைய நண்பர்களுக்கு புத்தகம் பிடிக்காமல் போன காரணம், படிக்காமல் போன காரணம் என்ன என்று பார்த்தால், படிக்கிற அளவுக்கு பொறுமை யாரிடமும் இல்லை என்பது நிறைய நண்பர்களின் கூற்று.

புத்தகம் எடுத்தாலே தூக்கம் வருகிறது என்கிறான் இன்னொருவன்.
எல்லோரும் பிடித்த நடிகர்,நடிகை, படம் என்று பட்டியல் இடுவோம் ஆனால்பிடித்த புத்தகம் என்பதை எத்தனை பேர் பட்டியல் இடுகின்றார்கள் இன்று?

வடநாட்டில் ஒரு நடிகர் வந்து புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை கண்டுள்ளேன். நம்மவர்கள் நிறைய பேர் முன்மாதிரியாக நினைக்கும் நம் நடிகர்கள் எத்தனை பேர் இதை செய்கிறார்கள். இளைய சமுதாயம் முழுவதையும் தனக்கு அடிமையாக்கி,தன் பின்னே வரவைக்க மட்டுமே அவர்கள் முயற்சிசெய்கிறார்கள்.நடிகர்,நடிகைகளுக்கு இருக்கும் மதிப்பு எழுத்தாளர்களுக்கு இன்று இல்லை.

இளைய சமுதாயத்தில் பெரும்பாலோனோர் ஜெயகாந்தனையோ, சுஜாதாவையோ தெரிந்திருக்கவில்லை. ஆனால் நேற்று வந்த நடிகையின் பிறப்பு முதல் இன்றைய வாழ்க்கை வரை தெரிந்து வைத்துள்ளனர்.

என்ன காரணம் இதற்கு?

நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கணினியும், வீட்டின் ஒரு மூலையில் உள்ள தொலைக்காட்சியும் முக்கிய காரணம். இன்னும் தினசரிநாளிதழ், வார இதழ் போன்றவை கூட முக்கிய காரணம். சினிமா குறித்துபக்கம் பக்கமாக வெளியிடும் இவர்கள் புத்தகம் குறித்து பத்திகளில் முடித்து விடுகின்றனர். நம்மை சுற்றி எல்லாம் இப்படி அமையும் போது யார்தான் புத்தக உலகம் குறித்து வெளியே சொல்லுவது?

இதில் முதல் இடம் ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் ஆசிரியர்கள் சொல்படிதான் ஆரம்பத்தில் நடக்கின்றனர், சிறு வயதிலேயே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து மனதில் பதிய வைக்க வேண்டும். பள்ளிகளில் நூலகம் மூலம்சிறு சிறு கதைப் புத்தகங்கள் கொடுத்து அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆசையினை விதைக்க வேண்டும். பாடப் புத்தகத்தில் திருக்குறள் இருந்தால் திருக்குறள் புத்தகம் ஒன்று எடுத்து வந்து வாசிக்க வேண்டும்.


அப்போது தான்
இந்தக்குறளே நன்றாக உள்ளதே மற்றவை படித்தால் என்ன என்று தோன்றும், தோன்றாவிட்டால் கூட ஆசிரியர்கள் படித்துக்காட்டி இதை செய்ய வேண்டும் என ஊக்குவிக்க வேண்டும்

இரண்டாவது பெற்றோர், வருடாவருடம் தீபாவளி,பொங்கலுக்கு துணி எடுத்துக் கொடுப்பது மட்டும் உங்கள் கடமை. உரிமை அல்ல. ஒரு புத்தகக்கடைக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகம் ஒன்றைக் கூட வாங்கித் தரலாம்.


புத்தகம் படிப்பதை ஊக்குவிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்குதான் உள்ளது. பல துறைகளிலும் சாதித்தவர்கள் குறித்த சுயசரிதைகள், கதைகள் போன்றவற்றை ஆரம்பத்தில் படிக்கப்பழக்கி அவர்களின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றலாம். முக்கியமாக நூலகம் செல்வதை ஊக்குவிக்க வேண்டும்.

இதற்கு முக்கியமாய் பெற்றோர்கள் புத்தக வாசிப்பாளர்களாய் இருத்தல் அவசியம்

மூன்றாவது நண்பர்கள், தனக்கு பிடித்த நடிகர், நடிகை, கிரிக்கெட் வீரர் பற்றி மட்டும் பேசுவதை விடுத்து தான் படித்த புத்தகம் பற்றி கூறலாம். இதன்மூலம் நமக்கும் படித்ததை உள்வாங்கும் திறன் அதிகமாகும் நாம் புத்தகம் படித்து முடித்து விட்டால் அதை படிக்காதவர்களிடம் கொடுத்து படிக்க வைக்கவேண்டும்.என் நண்பன் ஒருவன் உதவியால் நான் இன்று நிறைய புத்தகம் இதுபோலவே படித்து உள்ளேன். இந்த பழக்கம் புத்தகம் படிப்பதை விடமேன்மையானது. அதே போல படத்துக்கு மட்டும்தான் நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நூலகம், புத்தகக் கண்காட்சி என்று கூட செல்லலாம். 

நான்காவது புத்தகம் படிக்கும் நாம் ஒரு புத்தகம் படித்து விட்டால் அதை அப்படியே விட்டு விடக்கூடாது அதைக் குறித்து மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டும் இதனால் புத்தகம் படிக்காதவர்கள் கூட படிக்க விரும்புவார்கள்.

எனவே நண்பர்களே புத்தக உலகில் நாம் மட்டும் இருப்பதைக் காட்டிலும் நம் சுற்றத்தையும் வரவைக்கலாம் அல்லவா?

கருத்து கூறும் நண்பர்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்கள் கூறவும். இது அன்பான கட்டளை. 
 




கழுகிற்காக

 பலே பிரபு



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)




15 comments:

Prabu Krishna said...

எனக்கு படித்த புத்தகம்

//ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க//

saidaiazeez.blogspot.in said...

இந்த கட்டுரை புத்தகங்களை படிப்பதைப் பற்றிதான் எழுதியுள்ளது என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்று எத்தனை BLOGS உள்ளன. இவை அனைத்தும் கூறுவது இன்றும் படிக்கும் பழக்கம் உள்ளது என்பதும் மேலும் அது அதிகரித்துள்ளுது என்பதும்.
நான் கல்லூரியில் படிக்கும் போதுதான் என்னுடைய வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய உயிர் நண்பன் அதியமாந்தான். அவன் தான் எனக்கு பாலகுமாரனையும் DR MS உதயமூர்த்தியையும் எனக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் புத்தகங்களை படிக்க கொடுத்தான். அப்போது டாக்டர் உதயமூர்த்தி ஆனந்தவிகடனில் "உன்னால் முடியும் தம்பி" என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார்.
நிச்சயமாக அதுதான் என்னை படிக்க தூண்டியது.
என்னுடைய உயிர் நண்பன் அதியமானுக்கே அனைத்து நன்றிகளும்

ஷர்புதீன் said...

என் பெற்றோர் என்னை படிக்காதே என்று திட்டும் அளவிற்கு புத்தகப்புழு.,, கடந்த ஐந்து வருடமாக சும்மா அப்பப்ப வாசிப்பதோடு சரி!

Anonymous said...

என‌க்கு ப‌ர‌மார்த்த‌ குரு க‌தை ரொம்ப‌ பிடிக்கும். சிறுவ‌ய‌தில் ஈசாப் நீதிக்க‌தைக‌ள் விரும்பி வாசிப்பேன்.

நிகழ்காலத்தில்... said...

புத்தக வாசிப்பைப் போன்ற நல்லதொரு பழக்கம் தேவைதான். நம்மை வளப்படுத்திக்கொள்ள இது ஒரு சிறந்த வழி..

Anonymous said...

சிறந்த புத்தகங்களே நல்ல நண்பர்கள்.
புத்தகங்கள் நம்முடன் பேசும். நம்மை வழிநடத்தும்.

குழந்தைகளுக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். பாதிக் கதையை மாத்திரம் சொல்லிவிட்டு( ஒரு வித க்யூரியாஸிட்டியை உண்டு பண்ணி விட்டு) மீதியை இதுல படிச்சுட்டு அம்மாக்கு சொல்வீங்களாம் சமத்தாம்னு சொல்லி என்கரேஜ் பண்ணலாம்.சமயம் கிடைக்கும் போதெல்லாம், அவங்க பிறந்த நாள் மற்றும் நல்ல நாட்களில் எல்லாம் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தும் அவர்களை ஊக்குவிக்கலாம்.

நல்ல மையக் கருத்துள்ள கட்டுரைக்கு நன்றிகள்!!!

By
மகேஷ்வரி

சேலம் தேவா said...

சுஜாதாவின் அனைத்து புத்தகங்களும்..!!

முனைவர் இரா.குணசீலன் said...

கோவில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் ஆனால் நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்ற ஒரு நிலை வர வேண்டும்..


மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

என் பிள்ளைகளுக்கு நான் செல்வங்களாக நல்ல நூல்களைத் தான் சேர்த்து வருகிறேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்குப் பிடித்த புத்தகப் பட்டியல் மிகவம் பெரிது நண்பா..

இருந்தாலும் அதில் முத்தான ஒன்றே ஒன்று கூறவேண்டுமானால்..

வ.சுப.மாணிக்கம் அவர்கள் எழுதிய
தமிழ்க்காதல் என்னும் நூலாகும்.

Unknown said...

இன்றைய இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய பதிவு. பத்திரிகையிலிருந்து பதிவுலகம் வரை வியாபித்து,சினிமா,சினிமா,சினிமா,இதுதான் எங்குமே.இளம் வயது ஹீரோக்களுக்கு பாலாபிக்ஷேகம் வரை செய்ய சொல்கிறது.நடிகர்,நடிகைகளை புள்ளி விபரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆள்வது ராமனா,ராவணணா என்று கேட்டால் விழிக்கிறார்கள்.5000 பேர் வசிக்கும் எங்கள் ஊரக பகுதியில் அரசு நூல் நிலையத்திற்கு வருவோர் சராசரி பத்துபேர்தான்.வார இதழ்களும்,புத்தகங்களும் தீண்டுவாரின்றி இறைந்து கிடக்கிறது.இதுதான் இன்றைய கசப்பான நிலைமை.மாற்றம் வேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

புத்தக வாசிப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தும் அருமையான, நல்லதொரு பகிர்வு.

வெங்கட் said...

அருமையான பதிவு..!!!!

எனக்கு பிடித்த சில புத்தகங்கள்....

// நீயும் நானும்.. - கோபிநாத்
அத்தனைக்கும் ஆசைப்படு - சத்குரு ஜக்கி வாசுதேவ்
சிம்ம சொப்பனம் ( பிடல் கேஸ்ட்ரோ ) - மருதன்
கற்றதும் பெற்றதும் - சுஜாதா //

Prabu Krishna said...

@ சைதை அஜீஸ்

ஆம் நண்பரே இந்தப் பதிவு புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதற்கு மட்டுமே..

இன்றைய இளைய தலைமுறையிடம் எந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது.


//நாம் புத்தகம் படித்து முடித்து விட்டால் அதை படிக்காதவர்களிடம் கொடுத்து படிக்க வைக்கவேண்டும்//

இது உங்களுக்கும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி.... உங்கள் நண்பர்களுக்கும் இதை நீங்கள் செய்ய வேண்டும்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
புத்தகங்களை பரிசளிக்கும் பழக்கம் வர வேண்டும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes