Saturday, January 07, 2012

நக்கீரனின் அத்துமீறலும்...அதிமுகவினரின் அராஜகமும்..! ஒரு ரிப்போர்ட்!



பத்திரிக்கை தர்மம் என்பதை இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் மீறி வெகுகாலம் ஆகிவிட்டன என்றாலும், அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் அவை மாறிப் போன கேவலமும் சமகாலத்தில் ஒருங்கே அரங்கேறிக் கொண்டிருப்பது இன்னமும் வேதனையான விசயம். தன்னை ஒரு புலனாய்வு வாரப்பத்திரிக்கையாய் வரிந்து காட்டிக் கொண்டிருக்கும் நக்கீரன் பத்திரிக்கைக்கு மக்கள் பிரச்சினைகளை விட தனது வியாபார பெருக்கமே முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

அதிரடி செய்திகளைத் தருகிறேன் என்ற பெயரில் இவர்கள் செய்து வரும் அட்டூழியம் ஒரு பக்கமென்றால், தங்கள் தலைவியைப் பற்றி மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு விட்டார்கள் என்பதற்காக கொலை வெறியாட்டம் நடத்தி இருக்கும் அதிமுக தொண்டர்கள் ஒரு பக்கமும் நின்று ஜனநாயகத்தினை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கின்றன. பத்திரிக்கைகளை தங்கள் வசதிக்கு ஏற்றார் போல கட்டிபோட்டு வைக்கிறன. வசதியான விசயங்களை வெளியிடச் சொல்லியும், தங்களுக்கு வசதியற்ற விசயங்களை அடக்கி வாசிக்கச் சொல்லியும் அதிகாரிகளைக் கொண்டு மிரட்டி பத்திரிக்கை துறையினை முடக்கி போட்டு வைத்திருப்பதின் விளைவு விபரம் தெரியாத மக்களை, உண்மையை தெளிந்து கொள்ளாத பிரஜைகளை தேசமெங்கும் பித்தர்களாக அலைய வைத்திருக்கிறது.

நக்கீரனும் அப்படித்தான் தனது வசதிக்கேற்றார் போல தனது ரசிப்புக்கும், தனக்கு கிடைக்கும் ஆதரவுக்கும் ஏற்றார் போல செய்திகளை திரித்தும், தேர்தல்களின் போது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் விளையாடியும் மக்களை மடையர்களாக வைப்பதில் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கு தாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று பலமுறை நிரூபித்து இருக்கிறது.

ஒரு பக்கம் தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை, மேலும் இன்வெஸ்டிகேஜன் ஜெர்னலிசம் என்ற பெயரில் நடிகைகள், மற்றும் துணை நடிகைகளின் அந்தரங்கங்கள், அரசியல்வாதிகளின் சொந்த வாழ்க்கையின் பக்கங்கள் என்றெல்லாம் மூக்கு நுழைத்து காசு பார்க்கும் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையே என்றாலும்...

தனது தானைத் தலைவியை பற்றி எழுதி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மிரட்டும் முரட்டு அரசியலை கையிலேந்திக் கொண்டு ரவுடிகளாக அதிமுகவினர் நடந்து கொள்வதும் எந்த ஒரு சாமானிய மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விசயம்.

அரசு, சட்டம், என்பதில் நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியின் தொண்டர்களை வைத்துக் கொண்டுதான் அதிமுக அரசாட்சி செய்கிறது என்பது எவ்வளவு கேவலமான விசயம். ஒரு கட்சி, அதுவும் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் மக்கள் பிரதிநிதியான வேளச்சேரி  எம்.எல்.ஏவே முன்னின்று இந்த தாக்குதலை நடத்தி நக்கீரன் அலுவலத்திற்கு பூட்டும் போட்டு பூட்டி இருப்பது....

எந்த அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் அதிமுகவினர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டு. முதலமைச்சர் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க எமது அரசு போரிடும், காவல்துறையினருக்கு உச்ச அதிகாரம் கொடுக்கப்படும் என்றெல்லாம் முழங்கி வருகிறார்....

அதோடு மட்டுமல்ல, பரமக்குடியில் விளையாடிய அரசியலில் வன்முறை வெடித்து விடும் என்று பயந்து துப்பாக்கிச் சூட்டினை நடத்தி அப்பாவி தலித்களை கொன்ற இந்த அரசு.....இன்று நக்கீரன் அலுவலகத்தை தாக்கி, சோடாபாடில், தடிகள், சைக்கிள் செயினோடு ஜானிஜன்கான் சாலையை கலங்கடித்த அ.தி.முகவினர் மீது ஒரு தடியடி நடத்தக் கூட வக்கிலாத காவல்துறையினரைக் கொண்டிருப்பது... கேவலத்திலும் கேவலம்.

தனகென்றால் ஒரு மாதிரியும், பிறருக்கென்றால் ஒரு மாதிரியும் காய்களை நகர்த்தும் சுயநல அரசியல் போக்குகளின் முடிவே தமிழர்களின் விடிவு...! அதிமுக தலைமையைப்  பற்றி தவறாக நக்கீரன் எழுதியிருக்குமெனில் சட்டரீதியாக அவர்களை தண்டிக்க முடியாதா என்ன? அவர்களின் பத்திரிக்கையை முடக்க முடியாதா என்ன?

தவறுகளைத் தட்டிக்கேட்கத்தான் அரசும், அரசு இயந்திரங்களும் இருக்கின்றன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இத்தகைய கொடும் செயலில் ஈடுபட்டிருப்பதன் மூலம் சட்டமும் ஒழுங்கும் தனது வசதிக்கேற்றார் போலத்தான் பாயும் என்ற மறைமுக செய்தியை மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.

பொறுப்பில்லாத பத்திரிக்கைத் துறையினருக்கும், அடாவடிகள் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விழிக்கும் எம் மக்களின் விடியல் என்பது கனவாகவே போய்த்தான் விடுமோ....?

      

      கழுகு 

 
 (கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)

 

6 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல அலசல்.....ஒரு திருத்தம்... பத்திரிக்கைகள் என்றே அனைத்து இடங்களிலும் வருகிறது. பத்திரிக்கை என்பதை பத்திரிகை என்று திருத்திக்கொள்ளவும். இல்லாவிட்டால் அர்த்தம் மாறிப்போய்விடும்.
பத்திரிக்கை= அழைப்பிதழ் என்ற அர்த்தம் வரும். பத்திரிகைதான் நாளிதழ்கள், வார இதழ்கள் என்ற அர்த்தத்தை தரும்.

i TEC MUTIARA said...

ஐயா இதை நீர் எழுதுமுன் ஒரு விஷயத்தை யோசிக்க மறந்து விட்டடர்கள் போலும். நக்கீரன் இப்படி எழுதியிரா விட்டால் இது நடந்திருக்குமா? முஷ்டியை முறுக்கிக் கொண்டு சண்டைக்கு இழுத்தால் வேறு என்ன செய்வதாம்?

நாய் நக்ஸ் said...

PORPPOM ENNA
NADAKKUTHUNNU.....

ஜெய்லானி said...

நித்யானந்தா மேட்டர்ல காசு பார்த்த போதே இவங்களோட முகமூடி கிழிஞ்சிப்போச்சி ...அப்புறமென்ன பத்திரிக்கை தர்மம் ......!!!!!!!!!!!!!

:-)

Barari said...

இந்த தாக்குதல்களை தலைமை ஏற்று நடத்த்ிய சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் கட்சி காரர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படும்.

Prakash said...

எதோ ஒரு உணவு பொருளை ஜெயா சாப்பிட்டார் என்று எழுதியதற்கே இந்த பொங்கு பொங்கும் நடுநிலை வியாதிகள், கனிமொழி மற்றும் ராசா குறித்து அருவருப்பாகவும், ஆபாச தொனியிலும் செய்திகளை கிசுகிசு பாணியில் தினமலம், ரிபோர்ட்டர் , ஜுவி போன்றவை செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டபோது, இந்த பத்திரிகைகளை கேள்வி கேட்காமல், நடுநிலை வியாதிகள் வாயில் என்ன சாப்பிட்டு கொண்டிருந்தனர் ????
அது என்ன பத்திரிகை சுதந்திரம், தனி நபர் தாக்குதல்.. கலைஞர் பத்தி தினமலர், தினமணி எழுதும் போதும்,சோ எழுதும்போதும் இனிக்குது... தனிநபர் தாக்குதலா தெரியல.. ஆனா ஜெயலலிதாவ பத்தி எழுதினா மட்டும் தனிப்பட்ட வாழ்கைய தாக்கி எழுத கூடாதுன்னு சொல்லுறது.. இந்த நடுநிலைமை தான் எனக்கு புரியல.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes