Monday, September 19, 2011

கூடங்குளம் இன்னொரு போபால் ஆகிறதா?


சமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு விசயம் ஜப்பானின் புகுசிஹிமா அணு உலை விபத்து.1986 இல் செர்நோபிள் நடந்தபின்னர் மற்றொரு பெரிய அணு உலை விபத்து இது. அணு உலையின் ஆபத்துகளை உலகம் உணர்ந்த நாள் என்று கூட சொல்லலாம். இதன் பின்னால் ஜப்பான் தனது அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து உள்ளது. இதே போல ஜெர்மனியும். உலகின் மற்ற சில நாடுகளும் கூட இது குறித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அணு உலைகளை எதிர்த்து இதற்கான ஒரு அமைதிப் போராட்டம் நடப்பது தெரியுமா உங்களுக்கு?


எதை பற்றி பேசுகிறேன் என்று சிலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆம்.. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை பற்றி தான் பேசுகிறோம். 15000 பேருக்கு மேலும் ஒன்று கூடி போராடும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 127 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு அதில் 24 பேர் கவலைகிடமாக கிடக்கின்றனர். இந்த அணு உலையால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு உள்ள போதும் அவ்வூர் மக்கள் இதனை எதிர்க்க என்ன காரணம்?

  1. ஜப்பான் போல இங்கு நடந்து விட்டால்?
  2. பாதுகாப்பு குறைவு
  3. மிக முக்கியம் அணு உலை அமைந்துள்ள இடம்
இதுவரை நாம் பராமரித்து வந்த அணு உலைகள் கூடங்குளம் அணு உலையை விட சக்தி குறைந்தவை. அதனால் தான் ரஷியா உதவியுடன் இதை செய்கிறோம்.(இது 1000Mwe ஆற்றல் உடையது, 2020 ஆண்டுக்குள் 20,000Mwe ஆற்றல் உடையதாக மாற்ற திட்டம்). செர்நோபிள் நடந்த அணு உலை விபத்தும் 1000Mwe ஆற்றல் வாய்ந்த உலை ஆனால் வேறு வகை. இவ்வளவு ஆற்றல் உள்ளது என்ன பலம் கொண்டுள்ளது என்றால் மிகப் பெரிய கேள்வி எழுகிறது. 


கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் சுனாமி வரக்கூடிய பகுதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். நமது கட்டுமானம் நன்றாக உள்ளது என்று கூறுகிறது இந்திய அணுசக்தி துறை. ஆனால் அந்த பகுதி எம்.எல்.ஏ ஒருவரே இந்த கட்டுமானத்தில் கடல் மணல் கலக்கப்படுவதாக புகார் அளித்து உள்ளார். ஒரு மக்கள் பிரதிநிதியே குறை சொல்கிறார் என்றால்  அணுசக்தி துறை கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று புரியும்.

கூடவே கூடங்குளம் அணு உலைக்கு மூன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கல்குவாரி ஒன்று அமைந்து உள்ளது. அங்கு வேலைபாடுகள் நடக்கும் போது அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்புகள் உண்டு. அத்தகைய சமயத்தில் அணு உலை கட்டடங்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அணு உலை கட்டுமானம் என்பது தரைக்கு மேலே மட்டும் கவனிக்கக் கூடிய விசயம் அல்ல. கட்டுமானத்தில் சிறு விரிசல் வந்தாலும் பெரிய பிரச்சினைதான்.





இதை எல்லாம் விட மிக முக்கியம் இது குறித்து மக்களிடம் எதுவும் கூறாதது. விழிப்புணர்வு குறித்து எதுவும் சொல்லவில்லை, அணு உலை குறித்த எல்லா விசயங்களும் மிக ரகசியமாக உள்ளன. ஒரு அணு உலையோ அல்லது ஏதேனும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செய்கையை செய்யும் போது குறிப்பிட்ட பகுதி மக்களிடம் கலந்து பேசவேண்டும், அதுமட்டுமின்றி முதலில் திட்டவணை காட்டி மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஊர்தலைவர் மற்றும் சுற்றுவட்ட பகுதி மக்கள் அனைவரையும் கூட்டி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மக்கள் கூட்டம்(Public hearing) நடத்தி இருக்க வேண்டும். திட்டவணை அப்ரூவல் ஆன பிறகு அதை குறிப்பாக செய்திதாள்களில் வெளியிட்டுவிட்டு அதன் நகலை சம்பந்தபட்ட பஞ்சாயத்து போர்டுகளுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இவை எதுவுமே செய்யப்படாமல் இருக்கிறது.


அனைத்து விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டு வருகிற இந்த அணு உலை மிக பெரிய உயிரழிக்கும் ஆபத்தை கொண்டது என்று தான் சொல்லவேண்டும். ஆம் அணு உலை உள்ள ஏரியாவில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் தான்12,000 பேர் இடிந்தகரை கிராமத்தில் வசிக்கின்றனர். அத்தோடு கூடங்குளம் கன்னியாகுமரிக்கு 26 .4  கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு பெரிய நகரம் இவ்வளவு அருகே இருக்கக் கூடாது. கூடவே நாகர்கோவில் கூட அருகில்தான் உள்ளது.  அணு உலை விபத்து என்பது கிட்டத்தட்ட முப்பது கிலோ மீட்டர் தூரம் பாதிக்கும். 30கி.மீ., தூரத்தில் 1 மில்லியனுக்கு மேலான மக்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் மறைமுக ஆபத்து என்பது 1000 கிலோமீட்டர் வரை இருக்கும்.


மனிதன் மட்டும் மாண்டால் போதுமா என்று இந்திய அணு சக்தி துறை நினைத்து உள்ளது போலும். அணு உலைகளை குளிர்விக்கும் நீரானது கடலில் கலக்கப்படுமாம். இந்த நீரில் கதிர்வீச்சு  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக அரசாங்கம் மீனவர்களை மீன் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கக் கூடாது என சொல்லும். இந்த விஷயம் மீன்களை முற்றிலும் அழித்து விடும் என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா?  இந்தப் பகுதி மீன்கள் கூட கதிர்வீச்சு அபாயத்தால் பாதிக்கப்படும். இதனால் இதை உண்டால் நமக்கு பிரச்சனை வரலாம். மீனவன் வாழ்வையும் அழிக்கும் இந்த அணு உலை. இதனால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடல் வளம் நம் தொழில்வளத்தை பாதிக்காதா? எதற்காக மத்திய மாநில அரசுகள் இந்த அளவுக்கு முயற்சி செய்கிறது?



நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் (?) வெறும் மூன்று சதவிகித மின்சார உற்பத்தி மட்டுமே நமக்கு கிடைக்கக் போகிறது அணு உலைகளால். இன்னும் என்னனவோ வளங்கள் உள்ளன பயன்படுத்தப்படாமல் உள்ளன நாட்டில். அணு உலை ஆபத்தானது என்பதை எல்லா நாடுகளும் உணரத் தொடங்கி விட்டது. ஆனால் நம் நாடு இன்னும் அணு உலைகளை விட மாட்டேன் என்கிறது. 1986 இல் செர்நோபிள் விபத்து நடந்த இரண்டு வருடங்களில் அவர்களிடம் புதிய அணு உலைக்கு நாம் ஒப்பந்தம் போடுகிறோம். என்டோசல்பானுக்கே ஐந்து வருடம் அனுமதி கேட்ட நாடு இது அணு உலைக்கு எத்தனை ஆண்டுகள் கேட்கும்? 



சென்ற ஆண்டு அணு சக்தி கழக தலைவர் எஸ்கே ஜெயின் குறிப்பிடும் போது இன்னும் 14 அணு உலைகள் இந்தியாவில் எழும்ப போவதாக சொன்னார். அதில் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் 2 கூடங்குளம் அணு உலைகளோடு கூடுதலாக நான்கு அணு உலைகள் இணைக்கப்படுகின்றன. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர், தமிழகத்தின் சுகாதார துறையினர் கடல்சார் பாதுகாப்பு அம்சங்களை மீறுவதால் மீதி 4 அணு உலைகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், இப்போது அங்குள்ள மக்களின் கொதிப்பு என்ன.? கட்டபட்டிருக்கும் 2 அணு உலைகளுக்கு மட்டும் அந்த அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு இருக்கிறதா என்பதையே..!

சில ஆண்டுகளுக்கு முன்னரில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் முன்னரே இயங்கும் 19 அணு உலைகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இன்னும் அதற்கான செயல்பாடுகளில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற ஒரு தாக்குதல் நடந்தால் அது மக்களை எப்படி பாதிக்கும் என்பதை அரசு உணர்ந்திருக்கிறதா? அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? இப்படி எல்லாம் சாமனிய மக்களுக்கும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இருந்தாலும் இன்னும் இந்த அரசாங்கம் பாதுகாப்பானது தான் என்று பிதற்றி வருகிறது.

இருந்தாலும் இதற்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வகையில் சப்போர்ட் செய்யப்படுகிறது.? கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 7.5மீட்டல் உயரத்தில் இருப்பதாகவும் இதனால் சுனாமி வந்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. அப்படியா.? சரி.. போன முறை சுனாமி வந்த போதும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜப்பானில் பல அதிர்வுகளும் சிறு சிறு கடல் சீற்றங்களும் அடிக்கடி எழும்பும் ஆனால் இப்போதைய சுனாமி தானே அணு மின் நிலைய பாதிப்புக்கு காரணம். அத்தகைய சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு கொண்ட ஜப்பானின் அணு மின் நிலையமே ஆட்டம் காணும் போது நீங்கள் கூறும் வாக்குறுதியை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். இயற்கையின் பலத்தை மதிப்பிட மனிதனுக்கு இன்னும் பலம் போதவில்லை எனபதற்கு ஜப்பான் நிகழ்வே சாட்சி.


உலைகளை குளிர்விக்க வழக்கமாக 1 ஜெனரேட்டர் உபயோகிக்கப்படும். ஆனால் கூடங்குளத்தில் 4 ஜெனரேட்டர்கள் உபயோகிக்கப்படவுள்ளன என்று மீண்டும் சப்பை கட்டு கட்டி பொதுமக்கள் வாயை அடைத்திட நினைக்கிறது இந்த அரசாங்கம். எத்தனை முறை எடுத்து உரைத்தாலும் பாதுகாப்பானது தான் என்னும் ஒற்றை வார்த்தையை பிடித்து பிதற்றி வருகிறது.


அப்படி பாதுகாப்பானது என்று அரசாங்கம் கருதினால் பாராளுமன்றத்துக்கு அருகில் வைக்க வேண்டியது தானே? அங்கே தான் எல்லா பாதுகாப்பும் உள்ளதே? அணு உலைக் கழிவுகளை நாம்தான் சுத்திகரிக்க என்று சொல்லி விட்டது ரஷ்யா. தெரு குப்பையை கூட ஒழுங்காக சுத்திகரிக்க முடியாத நாமா அணு உலை கழிவுகளை சுத்திகரிக்க போகிறோம். அதையும் எதாவது ஒரு ஆற்றில் கலந்து எம் மக்களை கொன்றாலும் கொல்லும் இந்த அரசாங்கம். ஏற்கனவே போபால் விஷயத்தில் அமெரிக்கா நம்மை அடித்தது, இப்போது ரஷ்யா . இன்னும் எத்தனை நாடுகளிடம் அடி வாங்க வேண்டும் இந்தியக் குடிமகன்?



சரி.. அன்னா ஹசாரே என்னும் ஒற்றை மனிதன் ஊழலை எதிர்த்தபோது ஊடகங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாய் இருந்ததோ அதில் கால் பங்கு கூட இந்த விடயத்தில் இல்லையே.! ஊழலை விட உயிர் பெரிதில்லை என்று நினைத்திட்டார்களோ..! இல்ல ஊடகங்களுக்கு வெறும் ஒருவரை ஹீரோவாக வைத்து சித்தரிக்க மட்டும் தான் தெரியுமா..?



ஜப்பானிய பாதிப்புக்கு பின்னர் தமிழகத்தின் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பரிசோதித்து அது முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்று என்று சொல்லப்பட்டது. கல்பாக்கம் அணு மின் நிலையம் தொடங்கும் முன்பும் இப்போது செய்வது போல பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன தான்.. ஆனால் இன்று அது பாதுகாப்பே அற்றது என சொல்லப்படுகிறது. தமிழகத்தின் வளத்தை பொறுத்த வரையில் அணுமின் நிலைய விபத்தை தாங்கும் சக்தியற்றது தமிழகம் என்றும் அதன் பின்னர் சொல்லப்பட்டது. இருப்பினும் அதிகாரிகளுக்கு இதை பற்றி கவலை இல்லை.


1988, 98 மற்றும் 2001 என்று பரிசீலிக்கப்பட்ட இந்த அணு மின் நிலைய கட்டுமான பணிக்கான தொகை சில பல மாற்றங்களுக்கு பின்னர் 2001ல் 13,171 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6,775 கோடி இந்தியா செலுத்துகிறது. மீதி பணம் அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 4 சதவீத வட்டிக்கு வாங்கபடுகிறது. கடன் வாங்கி வீட்டை கொளுத்தி ஆட்டையில் போடுவது இங்கு தவிர்த்து எங்கு நடக்கும்.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் அரசு ரஷ்யாவின் அணு மின் நிலையும் அமைக்கும் பணியை ஹரிபூரில் நிறுத்திவிட்டு தங்கள் மாநிலத்தில் அணு மின் நிலையம் தேவையில்லை என்னும் அறிக்கையை விட்டிருக்கின்றது. மேலும் நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் அணுமின் நிலையம் தேவையற்றது என்று சொல்கின்றனர். நம் தமிழக மக்கள் மட்டும் வாங்கி வைத்துகொண்டு என்ன சிரிப்பா சிரிக்க போகின்றனர்.?


இங்கு விபத்தே நடக்காவிடிலும் இந்த அணுமின் நிலையத்திலிருந்து ஐயோடின், சீசியம் போன்ற பல கனிம வெளிபாடுகள் உண்டாகும். அது காற்றோடு கலந்து விலை நிலங்கள், கால்நடைகள், கடல் என அனைத்தையும் பாதிக்க கூடும். இதில் உள்ள பொட்டாசியம் தாவரங்களால் உட்கொள்ளபட்டு நம் உணவிற்கு வரும் மெல்லக் கொல்லும் விஷம். முன்னரே தெற்கு கடல் சார் பகுதி மக்களுக்கு கேன்சர், மூளை பாதிப்பு, குறைபாடுடன் பிறப்பு போன்ற பல பாதிப்புகள் அரசாங்கத்தின் கடல் வழி ஆராய்ச்சி மற்றும் தோரியம் கண்டுபிடிப்புகளால் நிகழ்ந்தேரி வருகின்றன. அப்படியானால் அரசாங்கம் ஒட்டுமொத்த கடல் சார் மக்களை எல்லாம் அழிக்க வழிமேல் வழிவகுத்து தருகிறதா என்ன.?


அணு உலை வேண்டாம் என்று சொல்லும் போது மாற்று வழி என்ன என்று நீங்கள் கேட்கலாம். அது குறித்த பதிவு விரைவில்.... நண்பர்களே கூடங்குளம் மட்டுமல்ல மற்ற எல்லா அணு உலைகளையும் எதிர்க்க இதுவே வாய்ப்பு குரல் கொடுங்கள் நண்பர்களே.!! ஒன்றிணைந்து நம்மின் தெளிவான புறப்பாடு நம்மை வஞ்சிக்க நினைத்திடும் அரசாங்கத்தை புறம் தள்ளி வெற்றி காண்போம்..!

கழுகிற்காக
 பலே பிரபு



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



11 comments:

சேலம் தேவா said...

எப்போதும் தமிழகம் மக்களுக்கு வேதனையளிக்கக்கூடிய சோதனைகளுக்கு களமாகவே பயன்படுகிறது.நம் அரசியல்வாதிகளால் என்ன பயன்..?!உயிரோடு இருந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.இந்த உயிருக்கே உலை வைக்கும் திட்டத்தை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை..?!

Unknown said...

போராட்டம் வெற்றி பெற வேண்டும்

Unknown said...

அனு உலைகள் பாதுகாப்பானவையாக இருக்கவேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ஆனால் பெருகி வரும் மின்சாரத்தேவைக்காக தற்காலிகமாக இதனை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இதற்க்கு மாற்றாக வைக்கப்படும் சோலார் மின்சாரம் பற்றி நமது அரசு இப்போதுதான் பேச ஆரம்பித்து இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் மாற்று மின்சாரம் கிடைக்கும்வரைக்கும் அனு உலைகள் தேவை என்பதுதான் எனது கருத்து..

தறுதலை said...

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - செப் '2011)

MANO நாஞ்சில் மனோ said...

பேச்சு வார்த்தை நடந்து வருகிறது நல்லதே நடக்கும் வாழ்த்துவோம்...

hamaragana said...

அன்புடன் நண்பரே வணக்கம்
இது போன்று இணையத்தின் மூலம் ஒன்று திரட்டுங்கள் மக்களை ... மக்கள் சக்தி மகத்தானது என இந்த கேடு கெட்ட அரசாங்கம் புரிந்து.. நிறுத்தட்டும்.. அணு கொலை திட்டத்தை!!!!! ஒரு நபர் ஏன் முன்பே போராடலாமே???என போராடும் மக்களிடம் கேட்டதற்கு???அவர்கள் நெத்தி அடி பதில்
திருமணம் பேசி நிச்சியம் செய்த பின்பு மணமகனுக்கு எய்ட்ஸ் என கேள்வி பட்டால் பொண்ணு சம்மதிக்குமா??

இருதயம் said...

அன்பு நண்பருக்கு வணக்கம். தங்களது கட்டுரை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு பல மாற்று கருத்துகள் உள்ளன.

1 . "இது 1000Mwe ஆற்றல் உடையது, 2020 ஆண்டுக்குள் 20,000Mwe ஆற்றல் உடையதாக மாற்ற திட்டம்"
இந்த அணு உலை 1000 MWe ஆற்றல் உடையது தான். ஆனால் இதை 20000 MWe ஆக மாற்ற முடியாது. 2020 ம் வருடத்திற்குள் 20000 MWe மின்சக்தி மொத்தம் உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்கு தான்.

2 . "அந்த பகுதி எம்.எல்.ஏ ஒருவரே இந்த கட்டுமானத்தில் கடல் மணல் கலக்கப்படுவதாக புகார் அளித்து உள்ளார் "
இது ஒரு தவறான தகவல். ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களால் ஒரு 10 அடி உயரத்திற்கு நான்கு சுவர் அமைத்து ( கடல் மண்ணில்) ஒரு வீடு கட்ட முடியுமா..? அப்படி கட்டினாலும் அது நிற்குமா..? பல ஆயிரக் கணக்கான டன் எடையுள்ள எந்திரங்களை தாங்கி நிற்கும் அணு உலை கடல் மண்ணால் கட்டப்பட்டது என்ற வாதம் எப்படி சரியாகும்.

3 "ஒரு அணு உலையோ அல்லது ஏதேனும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செய்கையை செய்யும் போது குறிப்பிட்ட பகுதி மக்களிடம் கலந்து பேசவேண்டும் "
இந்த கலந்தாய்வு அணு உலை கட்டப்படுவதற்கு முன்பாக நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால் திருநெல்வேலி ஆட்சியாளருக்கு தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

4 "அணு உலைகளை குளிர்விக்கும் நீரானது கடலில் கலக்கப்படுமாம்"
இந்த கருத்து மிக தவறான கருத்து. நீங்கள் கூடங்குளம் வடிமைப்பை அறிந்து தான் பேசுகிறீர்களா என்ற சந்தேகம் எனக்குண்டு. அணு உலைக்கும் கடலில் கலக்கப்படும் நீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ROTOR என்ற கருவியை சுற்றுவதற்கு பயன்படுத்தும் நீராவியை குளிர செய்யும் நீர் தான் கடலில் கலக்கப்படும். அந்த நீரில் எந்த கதிரியக்கமும் இருக்காது.

5 'அப்படி பாதுகாப்பானது என்று அரசாங்கம் கருதினால் பாராளுமன்றத்துக்கு அருகில் வைக்க வேண்டியது தானே? "
நல்ல கேள்வி ... பாராளுமன்றத்துக்கு அருகில் இதே போல ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் . அங்கே வைக்க சொல்லுவோம்.

என்னை பொறுத்த வரையில் அணு சக்தி பசுமை சக்தி. நீங்கள் சொல்லலாம் ... காற்றில் இருந்து மின் சக்தி தயார் செய்யலாம். உண்மை,. ஓன்று சொல்லட்டுமா...? இந்நாள் முதல்வர் போன முறை ஆட்சியில் இருந்த போது தமிழகம் காற்றாலையில் முதல் இடத்தில இருந்தது. ஆனால் போன ஆட்சியில் மின்சாரக் குறைவினால் ஆட்சியே பறிபோனது. காரணம் போதிய காற்று இல்லாத காரணத்தால். அனல் சக்தியை பயன்படுத்துவோம் என்றால் உண்மை. அது சுற்று சூழலுக்கு சீர்கேடு. குறிகிய காலத்தில் நிலக்கரியும் தீர்ந்து விடும். சூரிய ஒளி என்றால் உண்மை ... 1 யூனிட் 16 ருபாய் ஆகும்.

ஓன்று நிச்சயம் அரசியல் சதுரங்கங்களால் சீக்கிரம் ரேசன் கடையில் மெழுகுவர்த்தி கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏன் என்றால் இருட்டில் வாழ மக்கள் தயார் ஆனால் தாய் நாட்டின் திறமையை நம்ப மக்கள் தயார் இல்லை ..

நன்றி

Lync2010 said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

@ இருதயம்

கருத்துக்கு நன்றி நண்பரே.

1. இது நான் தட்டச்சில் செய்த தவறு. 20,000MW உற்பத்தி என்பதே நோக்கம். மன்னிக்கவும்.

2. முழுவதுமாக கடல் மண்ணில் கட்டப்படுவதாக நாங்கள் கூறவில்லை, அதைக் கலந்து கட்டப்படுகிறது என்று தான் சொல்லி உள்ளோம்.

3. எந்த அளவுக்கு உண்மைகளை சொல்லி உள்ளார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. சுனாமி வருவதற்கு முன் ஆரம்பிக்கப்பட்டது கட்டுமானம். சுனாமி வருவதற்கு முன்பு இருந்த நிலைமை வேறு இப்போது வேறு.

4. இதை நாங்கள் சாதாரணமாக சொல்ல முடியாது. ஆதாரத்துடன் கூடிய விரைவில் தருகிறோம்.

5.// இதே போல ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள்//

இளிச்சவாய் மக்கள் மட்டும் விபத்து வந்தால் இறக்கலாமா?

//அணு சக்தி பசுமை சக்தி.//

அருமை நண்பரே. அந்த பசுமையின் விளைவுகளை Chernobyl என்று இணைத்தில் தேடி பாருங்கள். அந்த படங்களை பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்.

//சூரிய ஒளி என்றால் உண்மை ... 1 யூனிட் 16 ருபாய் ஆகும். //

கர்நாடக இளைஞர் ஒருவர் இதன் மூலம் செய்த சாதனை பற்றி தெரிந்து வாருங்கள் பிறகு பேசலாம்.

//தாய் நாட்டின் திறமையை நம்ப மக்கள் தயார் இல்லை //

இதற்கு பதில்,

இயற்கையின் பலத்தை மதிப்பிட மனிதனுக்கு இன்னும் பலம் போதவில்லை எனபதற்கு ஜப்பான் நிகழ்வே சாட்சி.

மற்ற விபத்துகளில் இருந்து மீள்வது எளிது. இது???????

- பலே பிரபு

இருதயம் said...

நண்பருக்கு வணக்கம் ... தங்களின் பதில்களுக்கு நன்றி . நீங்கள் கொடுத்திருக்கிற எந்த பதில்களும் உங்களுக்கே திருப்தி இல்லை என்பது எனக்கு தெரிகிறது . உங்கள் ஆதாரங்களுக்காக காத்திருக்கிறேன் . நன்றி

gokul garments said...

tamilan oruvari matroruvar kattikodukkm koottamayitre,,,

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes