வல்ல நாட்டில் வைத்து ஜான் பாண்டியன் கைது அதன் தொடர்ச்சியாக பரமக்குடியில் கலவரம், பின் சட்டம் ஒழுங்கினைக் காக்கிறேன் பேர்வழி என்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 உயிர்கள் பலி. கடந்த வாரத்தில் நடந்தேறியிருக்கும் இந்த சம்பவத்தை மேலோட்டமாகப் பார்த்தால் இங்கே மக்கள் அத்துமீறியதாக அரசினாலும், ஊடகங்களினாலும் தொடர்ச்சியாக செய்திகள் பரப்பப்பட்டிருந்தாலும், பரமக்குடியில் நடந்தேறியிருப்பது மறுக்க முடியாத....
அரச வன்முறை
இமானுவேல் சேகரனுக்கு குருபூஜை நடத்த வேண்டும் என்று ஒரு சாரார் முடிவெடுத்ததும் அதில் கலந்து கொள்ள ஜான் பாண்டியன் சென்றதும் அவர்களின் தார்மீக உரிமை. ஜான் பாண்டியன் அங்கே சென்றால் கலவரம் வரும் என்று எதன் அடிப்படையில் கணித்தது தமிழக அரசு என்று பார்த்தோமேயானால், முதல்வரின் சட்டசபை பேச்சில் ,முத்துராமலிங்கத் தேவரை பற்றி சுவரில் தவறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஒரு மாணவன் கொல்லப்பட்டதாகவும் இதனை கேள்விப்பட்ட ஜான் பாண்டியன் குருபூசை கொண்டாடுகிறேன் பேர்வழி என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பரமக்குடிக்கு படையெடுத்தார் என்றும், அப்படி அவர் சென்றிருந்தால் பெரும் கலவரம் வந்திருக்கும் என்றும் அறிவித்தார்.
சுவற்றில் யாரோ எழுதி வைத்த வாசகத்துக்காக ஒரு கொலை நடந்தேறியிருக்கிறது, மற்றும் கொல்லப்பட்டவன் ஒரு மாணவன் போன்ற விடயங்களை போகிற போக்கில் சட்ட சபையில் அறிவித்து விட்டு, நடந்து முடிந்த அரச கொலைகளை விசாரிக்க ரிவன்யூ ஆபிசரை நியமிக்கிறேன் என்று சர்வ சாதாரணமாக அறிவித்ததும் அவர் உயிர்களுக்கு அதுவும் காலமெல்லாம் அடக்கப்பட்டு மிதிக்கப்பட்டு, சமூக,பொருளாதார வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களுக்கு என்ன விதமான மரியாதை கொடுக்கிறார் என்று எண்ணும் போது அவரையும் தாண்டி ஏதோ சில மாய எண்ணங்கள் அவரின் மூளையில் அழுந்த ஏறியிருப்பதை அறிய முடிகிறது.
ஒரு பிரச்சினை வரும் என்று அனுமானித்து முன் திட்டமிடலோடு எடுத்த ஒரு செயலின் விளைவு சுபமாயிருந்திருக்க வேண்டும். புத்தி சாதுர்யத்தின் வெளிப்பாடாய் அது இருந்திருக்க வேண்டும், மாறாக தற்போது என்ன நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்று பார்த்தோமேயானால்.... ஈவு இரக்கமில்லாமல் ஏழு உயிர்கள் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் குடிக்கப்பட்டு இருக்கிறது. இறந்து போன அந்த மாணவனையும் சேர்த்து எட்டு பேரின் உயிர்கள் எனக்கொள்க;
மொத்த ராமநாதபுரம் மாவட்டமும் பதட்ட நிலையில் இருக்கிறது. அடிபட்ட வேகத்தில் அடி வாங்கிய மக்கள் தங்களின் கோபத்தைக் காட்ட பேருந்துகளை சூறையாடும் முயற்சியிலும், இரயிலினை தடம் புரட்டி விடும் முயற்சிகளிலும் இறங்கி தங்களின் பழிவாங்கலை தீர்த்துக் கொள்ள அலைகின்றனர், மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஒரு பாதுக்காப்பில்லாத உணர்வோடும், எப்போதும் நடுக்கத்தோடும், மக்களில் ஒரு சாரார் இருக்கிறார்கள்.
ஜான்பாண்டியனை கைது செய்வதற்கு முன்னால் பரமக்குடியில் போலிஸ் படையின் அளவினைக் கூட்டி வைத்திருந்தால் தடியடியில் கூட்டம் கலைந்திருக்கும்.....! குருபூஜைக்கு ஜான்பாண்டியன் சென்றால் வன்முறை வெடிக்கும் என்று கணித்த அரச மூளை அவரை கைது செய்தால் வன்முறை வெடிக்காது என்று நினைத்தது நிர்வாகச் சறுக்கல் இல்லையா?
இத்தனை களேபரங்களும் ஏற்படாமல் இருக்க குருபூசை நடக்கும் இடத்தில் அதிக பாதுகாப்புக்கள் கொடுத்து ஜான்பாண்டியன் அதில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும் வரை எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று கடும் எச்சரிக்கையோடு கூடிய அனுமதியை வழங்கியிருக்கலாம்....
இவையெல்லாம் செய்திருக்கலாம் ஆனால் அரசு செய்யவில்லை....! காரணம் இதன் பின்புலத்தில் இமானுவேல் சேகரனுக்கு குருபூசை நடத்துவதே அரசுக்குப் பிடிக்கவில்லை அல்லது அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தில் இருந்தது என்பதுதான் முழுமையான உண்மை. இதை தடுக்காவிட்டால் வேறு பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழும் என்ற எச்சரிக்கையின் வெளிப்பாடாகத்தான் இந்த அவசர கைதும் அதிரடி துப்பாக்கிச் சூடும் என்பதை யாரும் சொல்லாமலேயே சாதரண ஒரு நடுநிலை மனமுடைய ஒருவன் விளங்கிக் கொள்ள இயலும்.
அரச பொறுப்பில் ஏறும் போது எடுத்த பதவிப் பிரமாணத்தின் படி இந்த அரசு சாதி, சமய வேறுபாடுகளின்றி நடந்து கொள்ளவில்லை மாறாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரை கூட்டமாக கூட விடாமல் அடித்து துவம்சம் செய்திருக்கிறது. காலமெல்லாம் மக்களை சாதியைக் கொண்டு அடிமைப்படுத்தி, கட்டுப்படுத்தி வைக்க சோ கால்ட் மேல்சாதி சமுதாயம் எப்போதும் தனது காயை திட்டமிட்டே நகர்த்தி அடக்குமுறையை கையாண்டிருக்கிறது...அதன் நீட்சிதான் அரசின் உதவியோடு பரமக்குடியில் அரங்கேறியிருக்கும் இந்தப் படுகொலைகள்.
தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் சென்று ஈழத்தமிழர்களுக்காக தனது தொண்டை வரண்டு போகும் அளவிற்கு பேசி இனத்தின் காவலர்களாக தங்களை காட்டிக் கொள்ளும், சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் எல்லாம் மிக மெல்லிய சப்தத்தோடு தத்தம் எதிர்ப்பினை மென்மையாய் பதிவு செய்து தம்மை ஒடுக்கிக் கொண்டனர்.
இன விடுதலை, இன விடுதலை என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான் போன்றவர்கள் தமிழ் மண்ணில் தமிழ் மக்களை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிவர செய்து கூட்டத்தினை கலைக்கத் தெரியாத ஆளும் அரசு 7 பேரினை சுட்டுக் கொன்றிருப்பதை எதிர்த்து என்னவிதமான போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறார்கள்?
இறந்து போன அத்தனை பேரும் மிட்டா மிராசுகளோ, பெரும் நிலக்கிழார்களோ இல்லை சராசரிக்கும் கீழான நிலையில் வாழ்ந்து கொண்டு தான் விரும்பிய ஒருவனுக்கு குருபூசை செய்ய காத்திருந்த அப்பாவிகள்? இரத்தம் கொதிக்கவில்லையா சீமான்? நெடுமாறன்? மற்றும் வைகோ? இவர்கள் என்ன ஐரோப்பியர்களா? அமெரிக்கர்களா? இல்லை பாகிஸ்தான் காரர்களா?
தமிழர்கள் தானே?
பரமக்குடியில் நடந்தது இனக்கலவரம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது மிகவும் தவறான ஒரு விடயம் மட்டுமல்ல அது வரலாற்றில் பதியப்பட்ட ஒரு பொய்ச்செய்தி..! பரமக்குடியில் நடந்தது அரசின் மெத்தனப் போக்கினாலும் திட்டமின்மையாலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்....என்பதை இந்தக்கட்டுரை வலுவாக பதிவு செய்கிறது.
இனி வரும் காலங்களில்...
அய்யா பெரியாரின் படத்தையும், எம்ஜிஆர் படத்தையும் போட்டு அரசியல் செய்யும் அதே நேரத்தில் பெரியாரின் கொள்கைகளை மனதிலாக்கி சாதி என்ற ஒன்றே நமது சமூகத்திலிருந்து ஒழிய தேவையான விழிப்புணர்வினையும் மக்களுக்கு கொடுக்க ஆவன செய்வதோடு,
ஏழு பேரைச் சுட்டுக் கொன்று விட்டு சட்டம் ஒழுங்கினைச் சரி செய்தோம் என்ற மேடை நாடகங்களை இனியும் நடத்தாமல்..... இது பற்றிய நீதி விசாரணையை செவ்வனே நடத்தி இது பற்றிய அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன் சமர்ப்பிக்கவும் வேண்டும்...
இல்லையேல்...
அடுத்த தேர்தலில் தயவு தாட்சண்யமின்றி உங்கள் கட்சி மக்களால் சுடப்படும் என்பதையும் இந்த கட்டுரை ஆணித்தரமாக பதிவு செய்கிறது.
கழுகிற்காக
தேவா. S
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
5 comments:
உண்மை....இது இனக்கலவரம் அல்ல.
///MAHA கூறியது...
உண்மை....இது இனக்கலவரம் அல்ல.////
வெட்கப்பட வேண்டும்....
தேவா அண்ணே...
பகிர்வுக்கு நன்றி...
- வெளங்காதவன்.
சாதி ஒழிக்கப்படவேண்டும் என்று கூறும் நீங்கள் சாதி பெயரை சலுகை அனுபவிக்கிறீர்கள் . எங்களுக்கு சாதியையும் வேண்டாம் சலுகையும் வேண்டாம் என்று முதலில் நீங்கள் முடிவெடுங்கள். பின்னர் அனைவரும் சாதியை பற்றி நினைக்க மாட்டார்கள்.நீங்கள் மட்டும் சாதி பெயரை சொல்லி சலுகை அனுபவப்பீர்கள் மற்றவர்கள் சாதியை பற்றி பேசக்கூடாது .எது என்ன நியாயம்
உண்மை தகவல்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
is this your own post?
Post a Comment