Tuesday, August 16, 2011

சாமானிய மக்களோடு பேட்டி.....! கழுகின் அதிரடி விசிட்...!


கழுகு என்னும் சமூக விழிப்புணர்வுத் தளத்தின் செயல்பாடுகள் ஜனித்த இடம் இணையமாய்  இருந்தாலும் எதிர்காலத்தில் நமது நகர்வுகள் இன்னும் சீற்றமாய் மக்கள் நலனை நோக்கி களமிறங்கும் என்பது அனைவரும் அறிந்திருக்கும் விடயம்.கழுகின் நீண்ட நெடும் பயணத்தில் இந்த சுதந்திர தினத்தில் களத்தில் கழுகு இறங்கி சாமானிய  மக்களை சந்திக்க திட்டமிட்டது.




ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் வாழ்த்துக்கள் கூறி வாழ்த்தி விட்டு தியாகிகளின் கடும் தியாகங்களை எல்லாம் மனதிலே ஒரு கணம் எண்ணிப் பார்த்து விட்டு நாம்  நகர்ந்து விடுகிறோம். கொடியேற்றி உணர்ச்சிப் பெருக்காய் மேடையிலே பேசியதோடு, கை தட்டி ஆரவாரித்ததோடு,வாழ்த்துக்களை பகிர்ந்ததோடு முடிந்து விட்டதா  நமது சுதந்திர தினம்....?சாமானிய மக்களின் பார்வையில் எப்படி பரிணமித்திருக்கிறது நமது நாட்டின் விடுதலை என்ற கேள்வி நம்முள் உறுத்திக் கொண்டே இருந்தது....




ஒவ்வொரு துளி வியர்வையும் ரத்தமாய் கொட்டும் அந்த சாமானியன் இந்த சுதந்திர திருநாளை எப்படி கொண்டாடினான்...! எவ்வகையில் அவன் சுதந்திரத்தை போற்ற நினைக்கிறான்... நாம் ஆரவாரித்து கொண்டாடும் அந்த சுதந்திரம் அவன் பார்வையில் எவ்வாறு விரிகிறது. காண முற்பட்டது கழுகு..





ஒவ்வொரு நாளும் உப்பு தண்ணீரில் மிதந்து- நாம் ஆசுவாசபடுத்த போகும் இடத்தை இருப்பிடமாய் கொண்டிருக்கும் அந்த மீனவனை பார்க்க கழுகு பறந்தது.! உங்களுக்கு நீதி வாங்கி தருகிறேன்.. உங்கள் குறைகளை சொல்லுங்கள் என்று சாதாரண ஊடக பார்வையை விடுத்து எல்லோரும் சுதந்திரம் என்று கொண்டாடும் பொழுது என் மீனவன் என்ன செய்கிறான்.. என்ன செய்ய விழைகிறான் என்று களம் காண துடித்தது கழுகு...!



கடலோரம் கூடியிருந்த மீனவனை கண்டு பேசலானது..



இத்தன வருசம் சுதந்திர தினம் உங்களுக்கு எப்படி இருந்தது?



சுதந்திர தினம்னா அந்த பீச்சுல நல்லா எக்கசக்க ஆளுக வந்து சின்ன சின்ன அட்டையில கொடியையும் கொடுப்பாங்க.. எங்க வூட்டு பசங்கலாம் குத்திகினு வரும்..! அப்பால நீட்டு குச்சியில இருக்குற தேசிய கொடிய வூட்டு கூரையில சொருவி வைப்போம்....! இந்த பீச்சே அப்படியே கோலாகலமா இருக்கும்....!


சுதந்திர நாள் அப்படினதும் உங்களுக்குள்ள என்ன உணர்வு வருது...!?



நல்லா பெரிய பெரிய ஆளுக எல்லாம் ரொம்ப போராடி வாங்கி கொடுத்தது.... ரொம்ப சந்தோசமா இருக்குது..


உங்களுக்கு உண்மையில சுதந்திரம் கிடச்சிடுச்சா.?



ஊருல எவனுக்கு சுதந்திரம் கிடச்சாலும் எங்களுக்கு மட்டும் கிடைக்கவே கிடைக்காது சாமி... அங்க என் மீனவ மக்கள புடிச்சிகினு போவான்.. இங்கிட்டு எல்லாரும் நியூஸ்ல போட்டு அது இதுனு சொல்லுவாங்க... அடுத்த ஒரு வாரத்துக்கு சில, ஒரே மாதிரி சட்ட போட்ட பசங்க உன்ன போலவே வந்து ஏதுனாச்சும் கேட்டுகினு போவானுங்க.. போராடுறோம்னு சொல்லுவானுங்க... என்னாத்த பண்ணினாங்களோ! எங்களுக்கு எங்க தொழில பண்ணவே சுதந்திரம் இல்ல...


அப்படினா இந்த சுதந்திர நாள நீங்க கொண்டாடலயா.?



அது எப்படியா... எல்லாரும் சந்தோசமா வருவாங்க... நாங்க சந்தோசமா இல்லாமலா.. பல வருசம் போராட்டத்து வெற்றிய கொண்டாடுறாங்க.. நாங்களும் கொண்டாடுவோம்.. எங்களுக்கு தெரிந்தாப்புல காலையில குளிச்சுபுட்டு சாமிய கும்பிட்டுபுட்டு... அந்த பீச்சுக்கு பக்கம் போனா லவ்வரு லவ்வருனு நிரஞ்சிருக்குற பீச்ல ஒரு வித்யாசமா எல்லார் முகத்திலும் சந்தோசம்.. பாக்கவே உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருக்கும்.............




அட என்ன மனிதர்களடா அவர்கள்..! உள்ளுக்குள்ள கழுகுக்கு சிலிர்க்கிறது.. ஏக்கங்கள் மனதில் கொண்டாலும் அந்த ஆங்கிலேய அடக்குமுறையை உணர்ந்தவர்களாய் அந்த மீனவ கூட்டம் சுதந்திரத்தை பற்றி சிலாகித்து பேசியதை கழுகு மனதில் நிறுத்தி வைத்து ஒரு கம்பீர பார்வையோடு உச்சி நோக்கி சிரித்திட்டது...! இருப்பினும் அங்கு அவர்களின் மனவலியை போக்க கழுகு இன்னும் பார்வையை கூர்மையாக்கி பறந்திடல் வேண்டும் என்றும் உணர்ந்துகொண்டது...! நாட்டு பிரச்சனையாகவும், நட்புடமை பாராட்டவும் அரசியல் கட்சிகள் தம்மை வைத்து விளையாடும் விளையாட்டு தெரிந்தும் அம்மீனவ மக்கள் சுதந்திரத்தை போற்ற நினைப்பது ஒரு சாதாரண விடயமல்ல.

அடுத்து யாரை காணலாம் என்று கழுகு சிந்தித்த போது அதன் மனதில் எழுந்தது அந்த மங்கி போன பழைய பயண ஊர்தி. ஆம் கழுகு சொல்வது அந்த ரிக்ஃஷா தான். ஒரு காலத்தில் சென்னை மக்களின் சொகுசு பயணத்திற்கு வழிவகுத்தது இந்த ஊர்தி தான். கழுகு தன் சிந்தனையை தட்டி எழுப்புகிறது. இக்காலத்தில் அந்த ஊர்தியை காணமுடிகிறதா.? எங்கு இருக்கும்.? இப்போதைய மக்கள் யாரும் இதை அதிகமாக பயன்படுத்துவது இல்லையே!!




சுதந்திர இந்தியாவில் அவர்களுக்கான இடமும் இன்னும் இருக்கிறது. சென்னையில் அவர்களுக்கான முக்கிய இடம் அந்த சௌகார்பேட்டை கடைவீதிகள் தான். அங்கே அந்த கடைவீதியில் இரைச்சல் நிறைந்த கூட்டத்தில் நடுவே இருசக்கர வாகனங்களே திகைத்து நிற்கும் போது கையில் ஓங்கி பிடித்த கயிற்றை இழுத்து ஒலி எழுப்பிகொண்டே முன்னேறிய ரிக்ஃஷா ஓட்டுநர்களின் வண்டியில் மனிதர்கள் இல்லை அங்கு வாங்கிய மூட்டை பொருட்கள் மட்டுமே இருந்தது. அங்கே ஒருவரை நிறுத்தி பேசலானது கழுகு..!



சுதந்திர நாள் எப்படி இருக்குது...?



எங்களுக்கு இந்த விழா நாள் அது இதெல்லாம் கணக்கு கிடையாதுங்க.... இங்கிட்டு கூட்டம் அதிகமாக அதிகமாக எங்களுக்கு ஒரே குஷி தான்..! சுதந்திர நாளுக்கு முன்னாடி கடைக்கு பொருள் வாங்க வர்றவங்க நிறைய பேர் இருப்பாங்க.. அது தானே எங்களுக்கு பொழப்பே!!! அதனால எங்க பொழப்பு எக்ஸ்ட்ராவா ஓட காரணமா இருக்குற ஒரு நாள் இது...



என்னங்க இப்படி சொல்லுறீங்க..? நீங்க இப்ப வாழுற சுகமான வாழ்க்கை அப்ப ஆங்கிலய ஆட்சியில வாழ்ந்திட முடியுமா.? அதுல இருந்து நாம விடுபட்டத கொண்டாட வேணாமா?



என்னாத்த கொண்டாடுறது தம்பீ.. எங்க கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்..! இத சுதந்திரம்னு சொல்லுறீங்க.. போன குடியரசு தினத்துக்கு உன்னய போலதான் ஒரு பொண்ணு மைக்க புடிச்சிகிட்டு கேள்வி கேட்டுச்சு... எங்க பையன் ஒருத்தன் அதுக்கு அரசாங்கத்த குத்தம் குறைனு பேச.. ஏதேதோ ஆளுங்க வந்து மிரட்டிட்டு போனாங்க... இது தானா நீங்க சொல்லுற சுகமான வாழ்க்க...?


எல்லாம் சரி தானுங்களே!! பெரிய போராட்டத்துக்கான வெற்றி...!! அதை பத்திய கருத்து என்ன.?



நீங்க தமிழ் படம் பாக்குறதே இல்லயா.....? பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து சொல்லுறாங்களே என்ன.? இந்தியா இன்னும் சுதந்திரம் பெறல.. அது இதுனு தான் சொல்லிகிட்டு இருக்காங்க.. இப்பவும் அதே தான் சொல்லுறேன்.. பெரிய பெரிய பத்திரிக்கை காரங்க நீங்க.. எல்லா மனுசனுக்கு சுதந்திரத்த வாங்கி கொடுத்திட்டு நீங்க கொண்டாடுங்க...




என்னது சுதந்திர இந்தியாவுல சுதந்திரமா கருத்து சொல்ல கூட உரிமை இல்லையா.? உண்மைதான் சீறி பாயும் வெகுண்ட சக்தி கொண்ட ஊடகங்களையே கட்டி ஆளும் அரசாளுமை கொண்ட இடம் தானே இது...? இத்தகைய இடத்தில் ஒரு சாதாரண பாமரன் எப்படி அவன் மனது கருத்தை வெளிபடுத்த முடியும். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு நிமிடம் கழுகு தலைகுணிந்து நின்றது. படத்தில் சொல்வது போல எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பாக்க போய்விட்டார். அவரது பதில் வேடிக்கையாய் இருந்தாலும் அவரது பாணியில் அது உண்மைதான்...! இதற்கு கழுகு எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறது என்னும் கேள்வி அதையே சாட்டையடியாக அடித்துக்கொண்டே இருந்தது...!!




மனதில் ஒருவித சஞ்சலத்துடன் மேலும் மனதின் இறுக்கத்தை பிடித்துக்கொண்டு உடைந்து போன வார்த்தைகளை ஒட்டவைக்க முடியாது கழுகு நகர்ந்துகொண்டிருக்கையில் நடைபாதையில் வாழும் மக்களை கண்டது...!




இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த நடைபாதை மக்கள் என்பது கண்டிப்பாக இருக்கும் ஒன்று..! அவர்களின் நிலையையும் அவர்கள் வாழும் சுதந்திர வாழ்க்கையையும் கழுகு அறிய முற்பட்டது... அவர்களுடன் பேச முன்வந்தது..





உங்களுக்கு சுதந்திரம்னு சொன்னதும் என்ன தோணுது...!!?



நாங்க நாள் பூரா சுதந்திரமா தான் இருக்கோம் பிரதர்...!! எங்க வேணா படுத்துகுவோம்.. எங்க வேணா பேண்டுக்குவோம்...


அட... உங்கள போலீஸ் எதுவும் கண்டுகிறது இல்லயா.???



ஏன்யா உனக்கு இந்த வேல...? ஆரம்பத்துல பெரிய பெரிய ஆளுக எல்லாம் இந்த பக்கம் வர்றப்போ எங்கள எல்லாம் அடிச்சு விரட்டுவாங்க...... இப்ப அந்த ஆளுக போற ரூட்ட மாத்திகினாங்கோ....!!


இப்படி ரோட்ல இருக்குறது தப்பில்லையா.???



நாங்க மட்டும் ரோட்டுலயா எங்க சொத்த எழுதி வச்சிகினு உக்காந்திருக்கோம்... பொழைக்க வேற இடமில்ல...!! நாங்க கிடக்கோம்... பொம்பள புள்ளயெல்லாம் வச்சிகினு முடியல...


சரி.. உங்களுக்கு ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி போல லாம் எதுவும் இல்லயா.???



அதெல்லாம் வந்து மறக்காம கொடுத்திடு போய்டுவானுங்க....!! வந்து என்ன செய்யணும்னு அட்வைசெல்லாம் சொல்லுவானுங்க..




அதுல எல்லாம் உங்களுக்கு என்ன அட்ரஸ் போட்டிருப்பாங்க.???




இதான்.. இந்த ரோட்டு பேற தான் போட்டிருப்பானுங்க...! 


உங்க ரேஷன் கார்ட காட்ட முடியுமா.?????



அதெல்லாம் அக்கம் பக்கம் வீட்டம்மாகிட்ட கொடுத்திடுவோம்...  நாங்க அரிசி, மண்ணெண்யை மட்டும் வாங்கிப்போம்...


உங்களுக்கு அதனால என்ன யூஸ்..?



அதெல்லாம் ஒண்ணுமில்ல.. சும்மா கேட்டாங்களேனு கொடுக்கிறது...(அங்கிருந்த சிலர் அதுக்கு அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அமவுண்ட் வாங்கி கொள்வதாக சொல்கின்றனர்)


இந்த இடத்துல ரொம்ப சுதந்திரமா இருக்குறதா சொன்னீங்க... அப்ப இந்த சுதந்திர தினத்த பயங்கர கொண்டாட்டமா இருக்குமே!!?



இல்லாமலா.... நிறைய பேர் வந்து ஸ்வீட் கொடுத்திட்டு போவாங்க.. சிலர் அமைப்பு கிமைப்புனு சொல்லிகிட்டு துணிலாம் கொண்டாந்து கொடுப்பாங்க.. அப்படியே கொண்டாடவேண்டியது தானே!!


சந்தோசம்.. உங்களுக்கு இங்க சேஃப்டி எப்படி இருக்கு.? இங்கயே வாழ்க்கை பூரா இருக்க தயாரா.?



இல்லீங்க.. நான் கொஞ்சம் அப்படி இப்படி பேசினாலும்...! இந்த வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை...! அப்பப்போ வர்ற பெரிய ஆளுக வீடு கட்டிகினு இருக்கோம்னு சொல்லுவாங்க.. ப்ராப்பரான குடிசை அப்ரூவல் இருந்தா தான் அந்த வீடுனு சொல்வாங்க.. திடீர்னு உங்களுக்கு வீடு இருக்குனு சொல்லுவாங்க.. எங்கள மாதிரி தெருவோர சனம் சிலர் ஏதோ கிடச்சுதுனு சொல்லுவாங்க.. எங்களுக்கு ஒண்ணும் புரில.. அப்பரம் சேஃப்டி கேட்டீங்கள்ல.. எங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் அது பெரிய மேட்டரு இல்லீங்க.. ஆனா பொட்டபுள்ளைங்க குடிசையில குந்தி இருந்தாலும் நாங்க இல்லாதப்போ நாய் மாதிரி பயலுக மோப்பம் புடிக்கிறானுங்க.. அவனுங்க எல்லாம் என்னாத்த சொல்லுறதுனே புரில...




உண்மைதான்........! அவர்கள் வாழ்க்கை ஒரு கொடிய வாழ்க்கை தான்... வெளிய கொஞ்சம் வேடிக்கையாக அவர்கள் பேசினாலும் உள்ளுக்குள் எரியும் கனலும்-அவர்கள் கண்முன்னே தெரியும் கோபமும் நன்கு விளக்கமாகவே தெரிகிறது...! இன்னும் கழுகு பறக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை கற்றுக்கொண்டது...!





இந்த மூன்று சார்பு மக்களை பார்த்த போதும் அவர்களுக்குள் இருக்கும் கோபம், வருத்தம், வேட்கை அனைத்தும் நன்கு வெளிப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கோபத்தை விடுத்து வரும் வார்த்தைகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் முடிவாய் கிடைத்த சுதந்திரத்தை போற்றவும் அவர்கள் மறக்கவில்லை. வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு கொடியினை நெஞ்சினில் குத்திக்கொண்டு மிட்டாய் கொடுத்து ஒரு வரையரை கொண்டு கொண்டாடும் இதுதான் சுதந்திரமா..? தன் கைகள் ஒடுக்கப்பட்டபோதும் ஆங்கிலேய ஆட்சி முறை சுதந்திரத்தை காட்டிலும் இப்போது நம் சுதந்திரம் அதிகம் தான் என்பதை உண்ர்ந்தும் இன்னும் கிடைக்க வேண்டிய சுதந்திரத்துக்காக போராடியும் வாழும் இவர்களது வேடிக்கையான வேதனையான கோபம் மிகுந்த பேச்சில் தான் கழுகு உண்மையான இந்திய சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை உணருகிறது..!




இந்த சுதந்திர நாள்.. கழுகு தாம் பறக்க வேண்டிய தூரத்தை நிர்ணயம் செய்யும் ஒரு படிக்கெட்டாய் அமைந்தது. கழுகின் வீரியம் போதாது என்பதையும் புரிந்துகொண்டது..! அவர்களின் பேச்சுகள் கழுகை வருந்த வைத்திருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உத்வேகம் கொண்டு கழுகு சீறி கூக்குரலிடுறது...!




எமது எரியும் கனவுகள் எல்லாம் சர்வ நிச்சயமாய் மெய்ப்பட்டுப் போகும் அன்று புதியதொரு உலகம் புத்துணர்வோடு செழிப்பாய் வாழும் என்று மனதில் நினைத்துக்கொண்டு தன் பரந்து விரிந்த சிறகை கொண்டு உண்மை சுதந்திரத்தை கொண்டு வர கழுகு சீறி பறக்க தொடங்கிவிட்டது...!

 கழுகிற்காக நேரடி விசிட்

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)




7 comments:

Prabu Krishna said...

நிறைய இந்தியர்கள் இப்படித்தான் உள்ளனர். அருமையான கட்டுரை.

கொக்கரக்கோ..!!! said...

சுதந்திரதின கொண்டாட்டம் என்று வடிவமைத்துக்கொண்டு, தொடர்ந்து நான்கு நாட்கள் வித்தியாசமான, அவசியமான கோணங்களில் சீறிய கட்டுரைகள் சமைத்து வெளியிட்டு, அத்தோடு தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணம் கொள்ளாமல்...., கோட்டையில் கொண்டாடப்படும் சுதந்திரம் கொட்டடியில் எந்த நிலையிலிருக்கிறது என்பதையும் களம் சென்று கருத்தறிந்து அப்பட்டமான உண்மைகளை, பட்டவர்த்தனமாக வெளிக்கொணர்ந்து இங்கு பறைசாற்றியிருக்கிறது கழுகு!

இந்த நிதர்சனமான எதார்த்த நிலையை உள்வாங்கிக் கொண்டு, தான் ஆற்ற வேண்டிய பணி என்ன? எங்கு எதைச் செய்யவேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும்? என்று தனக்குள் கேள்விகளையும் அதனைத் தொடர்ந்த விடைகளான, எதிர்கால செயல்திட்டங்களையும் வடிவமைக்க தயாராகிவிட்டது கழுகு!!

"நோய் நாடி நோய்முதல் நாடி" என்பது போல் தங்களுடைய கடமையை ஆற்றவேண்டிய களத்தைக் ஆழம்வரை சென்றறிந்து, களையெடுக்க புறப்பட்டுவிட்டது கழுகு......!!!!

பெறுமைகொள்கிறேன்... அதன் சிறகுகளில் ஒரு இறகு என்பதில்...!!

Kousalya Raj said...

கழுகின் நேரடி விசிட் சிறப்பாக இருக்கிறது !

மக்கள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்துக்கள் வந்தாலும், எல்லோரிடமும் பொதுவாக இருப்பது தேச உணர்வும், தேசத்தின் மீதான ஆதங்கமும்...

கட்டுரைக்காக வெகு சிரத்தையாக செயல்பட்ட தம்பி கூர்மதியனுக்கு என் பாராட்டுகள் + நன்றிகள்.

சுதந்திர தின கட்டுரைகள் அனைத்தையும் மிக சிறப்பாக வெளியிட்ட கழுகுக்கு என் வாழ்த்துக்கள்.

..செந்தில் said...

எதற்கு இந்த சுகந்திரம். சுகந்திர தினத்தில் மீனவ சகோதரர்களுக்கு கிடைத்த வெகுமதி...

மீனவர்களை நிர்வாணமாக நீந்த சொல்லி இலங்கை கடற்படையினர் கொடுமை.. # செய்தி: கூடல்.காம்

http://www.koodal.com/news/tamilnadu.asp?id=66503&section=tamil&title=tn-fishermen-attacked-at-sri-lankan-naval-personnel-off-kodiakarai-coast

Anonymous said...

அருமையான‌ க‌ட்டுரை...ரொம்ப‌ வித்தியாச‌மா இருக்கு...

Rathnavel Natarajan said...

நல்ல நேர்காணல்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

Unknown said...

சுதந்திர தினத்திற்காக மெனக்கெட்டு மக்களை சந்தித்து போட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes