Wednesday, August 03, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (3.8.2011)

க்ர்ர்.. க்ர்ர்.. இழுத்துக்கொண்டிருந்த ரேடியோ பொட்டியை தட்டி சரி செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தார் டீக்கடை அண்ணாச்சி. அப்போ ரிப்போர்ட்டர் ரெங்குவும், கனகுவும் அங்கே வந்து ஆளுக்கொரு டீ சொல்லிவிட்டு அமர்ந்தனர். ஆஹா படு ஜோரான நியூஸ் கேட்கப்போகும் சந்தோசத்தில் ஜாலியாக டீ போட போனார் அண்ணாச்சி.!!

கனகு: ரெங்கு உக்காந்தாச்சு..!!! காது குளிருற மாதிரி ஒரு நியூஸ் சொல்லுயா..!!

ரெங்கு: குளிருற மாதிரி தானே.! சொல்லுறேன்.. இனிமே சமைக்கிற கேஸ் விலையெல்லாம் எண்ணெய் நிறுவனம் தான் முடிவு செய்ய போகுது...!!!

கனகு: என்னயா சொல்லுற.? இதுதான் குளிரா காதில இருந்து பொகையா வருது யா...!!

டீக்கடை அண்ணாச்சி: எலே.! யாரு வச்சா எண்ணாம்ல.. என்ன ஆகிட போகுது.?

ரெங்கு: அண்ணாச்சி..! அது இல்ல.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி பெட்ரோல் விலையையும் இப்படி தான் மாத்தினானுங்க.. அப்பால 15 ரூபா ஏறுச்சு.. இப்போ கேஸ்..!!

அண்ணாச்சி: அப்படின்னா கேஸ் வெல ஏறிடுமா? அய்யோ!!!
(நெஞ்சு வலி வந்து ஓரமாக உட்கார வைக்கப்பட்டார் அண்ணாச்சி)

கனகு: அய்யோ..!! டீ போச்சே!!!

ரெங்கு: அண்ணாச்சி அண்ணாச்சி.. கவல படாதீங்க... இப்ப தான் யோசிக்கிறாங்களாமாம்.. நம்ம அரசாங்கத்த பத்தி தெரியாதா.? அதெல்லாம் வர்றதுக்கு நாள் ஆகும்.. அந்த டீய கொஞ்சம்...!!

(சாந்தபடுத்திகிட்டு டீ போட போகிறாரு அண்ணாச்சி)

கனகு: யோ.!!! ஏன் யா இப்படிலாம் பீதிய கிளப்புற.? உனக்கெல்லாம் ஸ்பெசல் ரிப்போர்ட்டர் வேலைய கொடுத்தாரு பாரு.. அந்தாள சொல்லணும்.!

ரெங்கு: ஏ.. என் ஸ்பெசல் வேலையே அந்த அரசியல்ல தான்யா இருக்கு...!!

கனகு: என்ன உம் அரசியலு? அதையும் சொல்லி தொலை.

ரெங்கு: சமீபத்துல நில மோசடி வழக்குல நம்ம விரபாண்டி ஆறுமுகத்த அரஸ்ட் பண்ணிட்டாங்க..  தெரியுமா??

கனகு: இதான் உன் ‘டக்-ஆ' யா.? ஆறி போன வடைய அடிச்சு புடிச்சு தூக்கிட்டு வந்திருக்கியே யா..!

ரெங்கு: அட.. இரும்யா..! நம்ம வீரபாண்டி ஆறுமுகம் போன. சேலம் போலீஸ் ஸ்டேஷன்ல அவருக்கு ராஜ மரியாதையாம்..!! ஆளாளுக்கு சல்யூட் அடிச்சு வீட்டு சாப்பாடு கொடுத்து பயங்கர உபசரணையாம்.

கனகு: அட கொடுத்து வச்சவருயா அவரு..! ஆட்சி போனாலும் இந்த அலப்பறைக்கு ஒண்ணும் குறைச்சலு இல்ல.

ரெங்கு: அவரு கொடுத்து வச்சாரா இல்ல வாங்கி வச்சாரான்னு எனக்கு தெரியாது..!! ஆனா அவர உபசரிச்ச போலீஸ் காரங்க நல்லா வாங்கி வச்சுகிட்டாங்க.

கனகு: என்னயா சொல்லுற.? உபசரிச்சதுக்கு வீரபாண்டி நல்லா கவனிச்சாரா.?

ரெங்கு: வீரபாண்டியார் கவனிக்கல.! கவனிப்பு ஆப்போசிட் சைடுல இருந்து வந்திருக்கு.!! அந்த போலீஸ் குரூப்பே அப்படியே அலாக்கா  தூக்கி மல்லாக்க போட்டாச்சு..!

கனகு: எங்கயா போட்டாங்க.?

ரெங்கு: ராமேஸ்வரம், சென்னைனு அந்த மூலைக்கும் இந்த மூலைக்கும் பறக்குது.. இன்னும் அவரு ஆட்சியில அவருக்கு விசுவாசமா இருந்த போலீஸ் லிஸ்ட்டெல்லாம் எடுக்குறாங்களாம்... புரியுதா.?

கனகு: புரியுது புரியுது-யா...!!! ஆல் போலீஸ் பீ அலர்ட்..... உங்களையும் அல்லாக்க தூக்கி மல்லாக்க போடலாம்.. ஆனாலும் இந்த அம்மா ஓவரா தான் பழிவாங்குறாங்கப்பா...!

ரெங்கு: இத எந்த கணக்குல எடுக்குறதுனே தெரியலயா.. மக்கள் கொடுக்குற புகார் தான் அதுன்னு சொல்லுறாங்க ஜெயலலிதா... அந்த மக்களை தூண்டி பொய் வழக்கு போட சொல்லுறதே ஜெ., தான்னு கலைஞரு சொல்லுறாரு.

கனகு: அட போய்யா..!! எத்தன பேர் தான் வந்து புகார் கொடுப்பாங்க.? அதெல்லாம் இருக்காது.

ரெங்கு: இது வரைக்கும் புகார் எண்ணிக்கை 2000த்தை தாண்டிடுச்சாம் தெரியுமா.? ஆனா அது ஏன் கலைஞர் ஆட்சி புகார மட்டும் கேட்க தனிக்குழுனு தெரியலய்யா.. இதுல தான் டவுட்டா இருக்கு.

கனகு: நீ ஏன்யா கவல படுற.? அடுத்த ஆட்சி வந்ததும் அதிமுக ஆட்சி நிலஅபகரிப்பு பத்தி விசாரிக்க குழு வச்சிடுவாங்க.

ரெங்கு: அட இது நல்லா இருக்குயா... இப்படியே போனா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஜெயிலுக்குள்ள போய்டுவாங்க.. அப்பரம் நானும் நீயும் ஆட்சி அமைச்சிடலாம்.

டீக்கடை அண்ணாச்சி: அய்.. சூப்பரு..! அப்ப நான் தான் உங்க கட்சிக்கு கொ.ப.செ.!!

கனகு: அட சும்மா இருங்கப்பா ரெண்டு பேரும்..! சரி.. இந்த போராட்டம் அப்படி இப்படி இருக்கே இதெல்லாம எங்க தான்யா கொண்டு போய் விடும்.?

ரெங்கு: அந்த கொடுமைய ஏன்யா கேக்குற.? திமுக ஒரு பக்கம் சமச்சீர் கல்வி, அதிமுக.,வின் ஒழுங்கீன நடவடிக்கை அப்படி இப்படினு போராட்டம் பண்ணுறாங்க.. இன்னொரு பக்கம் அரசாங்க ஒப்புதல் இல்லாம நடக்குதுன்னு எல்லாரையும் அம்மையாரு அரஸ்ட் பண்ணிடுறாங்க.

கனகு: இங்க மட்டுமா நடக்குது.? ஆ.. ஊ.. னா அந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதம்னு கிளம்பிடுறாரு...!!! உண்ணாவிரதம் இருக்கிறது அவருக்கு ஹாபியா இருக்குமோ!!?

ரெங்கு: யோ.! அவரு பொதுநலவாதியா பாத்து பேசு..!! அது என்ன மேட்டருன்னு உனக்கு தெரியுமா.?

கனகு: என்ன தான்யா மேட்டரு.? அத தான் சொல்லேன்...!

ரெங்கு: லோக் பால் மசோதாவால பிரதமர மட்டும் விசாரிக்க முடியாதுன்னு சொல்லுறாங்கப்பா.. கேட்டா அவரு பதவிக்கான மரியாதைனு சொல்லுறாங்க.. இதெல்லாம் நியாயமா.? அப்ப ஹசாரே செய்யறது சரிதானே.!?

கனகு: யோ.. அந்த மேட்டர முழுசா தெரியாம பேசாதே! அவரு பிரதமரா இருக்குற வரைக்கும் தான் விசாரிக்க முடியாது.. அவரு பதவிய விட்டு போனதும் கேட்டுகிடலாம்ல...!

ரெங்கு: ரொம்ப புத்திசாலிதனம் தான் யா உனக்கு.. இப்படி ஒண்ணு இருக்கிறது தெரிஞ்சா பதவிய விட்டு விலகுறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் சரி செஞ்சுட்டு விலகிடுவாங்கயா நம்ம அரசியல்வாதிங்க...!!

கனகு: அப்படியே சரி செஞ்சிருந்தா தான் இப்ப நம்ம கலைஞரு அவதி பட தேவையில்லயே!!! சரி அத விடு.. இது போர் அடிக்குது.!! கிரிக்கெட்ல நம்ம இந்திய கேப்டன் தோனி ஏதோ தப்பு பண்ணிட்டதா சொல்லுறாங்களே ! அது என்ன தான் தப்பு.?

ரெங்கு: என்னயா கேள்வி கேக்குற.? ஒரு பெரிய பத்திரிக்கையோட ஸ்பெசல் ரிப்போர்ட்டர்கிட்ட விளையாட்டு, சினிமான்னு கேட்டுகிட்டு இருக்கியே!!! நான் ஸ்பெசல்.. ஐ ஹாவ் சம்திங் ஸ்பெஷலு...!

கனகு: அந்த ஸ்பெசல தான் பாத்தோமே!! கொக்கக கொக்கக...!

ரெங்கு: உன்னய மாதிரி வெட்டி பயலுக கூட பேசிகிட்டு கிடந்தா இப்படி தான் ஆகும்...!! நான் கிளம்புறேன்... எழுந்து போன அண்ணாச்சி டீய போடவே இல்ல போல.. !! ஒரு டீக்கு ஆச பட்டு வந்து உன்கிட்ட அசிங்கபட்டது தான் மிச்சம்..!!
 

கழுகிற்காக(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)4 comments:

cheena (சீனா) said...

அன்பின் தம்பி கூர்மதியன் - நகைச்சுவையுடன் செய்திகள் சுடச்சுட - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Chitra said...

கலகலப்பான பதிவு.

பாலா said...

கலகலப்பான நல்ல பகிர்வு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சூடான அரசியல் படிச்சிட்டேன்.. அப்படியே.. ஒரு காப்பி, டீ.. தந்தா நல்லா இருக்கும்! :)

பகிர்வுக்கு நன்றி!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes