Tuesday, August 30, 2011

நிரந்தரமாய் நிறுத்தப்படுமா தூக்கு தண்டனைகள்?
குற்றமும் அதன் பின்னணியும் சரியாய் ஆராயப்படாமல் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கிலே மரண தண்டனை தீர்ப்பினை மூன்று பேருக்கு உச்ச நீதி மன்றம் கொடுத்திருக்கிறது. ஜெயின் கமிசன் போன்றவற்றின் அறிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் மூவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு 28.04.2000 ஆம் ஆண்டு அதாவது 11 வருடங்களுக்கு முன்பே கருணை வேண்டி கடிதம் அனுப்பினர்.

விசாரணைகள் முடிந்த ஒரு வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு ஒரு வழக்கில், கருணை வேண்டி மனு செய்த பின்பு அந்த கருணை மனுக்களை பாரத ஜனாதிபதி எடுத்து படித்து ஆராய்ந்து விசாரித்து தனது கருத்தினை கூற 11 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது தோழமைகளே..? 

திரு. ராஜிவ் காந்தி அவர்கள் தனது தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக மே 21 ஆம் தேதி 1991ல் ஸ்ரீபெரும்புதூர் வருகிறார். இரவு பத்து மணிக்கு பேச வேண்டிய மேடையிருக்கும் திடலுக்கு அருகே இருக்கும் தனது அன்னையின் சிலைக்கு சுமார் இரவு பத்துமணி அளவில் மாலையிட்டு விட்டு மேடையை நோக்கி வரும்போது இரவு 10:10க்கு மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்படுகிறார்.

ஜவஹர்லால் நேருவின் பேரர், அன்னை இந்திராவின் புதல்வர், முன்னாள் பாரதப் பிரதமர், அகில இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் இவ்வாறு கொல்லப்படும் போது ஒரு மாநில அல்லது தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கூட உடனில்லை என்பது நம்முள் எழும் சாதாரண கேள்வி தானே? 


இன்று ராஜிவ் கொல்லப்பட்டார் என்று தூக்கு தண்டனையை நிறைவேற்றச் சொல்லும் திரு. தங்கபாலு எங்கே போயிருந்தார், மூப்பனார் எங்கே போனார், வாழப்பாடியார் கூடவே வந்து சட சடவென்று மேடையில் ஏறி நின்று கொண்டதன் பின்னணியில் இருந்த ரகசியம் என்ன?


ஜெயந்தி நடராஜனும், தமிழர்களின் குல விளக்கு இப்போதை பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு சிதம்பரம் ஐயா எங்கே போனார்?


ஒரு வட்டச் செயலாளர் வந்தாலே அவரைச் சுற்றி அவரின் அபிமானிகள் நெருக்கமாக வரும் போது, திரு ராஜிவ் காந்தியைச் சுற்றி ஏன் ஒரு காங்கிரஸ் தலைவர்கள் கூட இல்லை....? பாமர மக்களாகிய நமக்குள் எழும் இந்தக் கேள்விகளை எல்லாம் ஒரு நாட்டின் சிபிஐயும் நீதிமன்றங்களும் ஏன் கேட்கவில்லை...?


கொஞ்சமேனும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கின் நேரடிக் குற்றவாளிகளாகிய வெடிகுண்டை இயக்கிய தானு என்னும் பெண், சிவராசன் மற்றும் சுபா இவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்டார்கள். இந்தக் கொலையை இயக்கியதாக கூறும் விடுதலைப்புலிகளின் இயக்கமும் அதன் தலைமையும் இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கையால் வேறு விதமாக பழி வாங்கப்பட்டார்கள்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூவரும் கொலைக்கு உடந்தையாய் இருந்தனர் என்று கூறும் சிபிஐ. அந்தக் கொலை நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்த சாட்சியத்தையும் கூறவில்லை. அதிலும் பேரறிவாளனின் மீது சுமத்தப்பட்ட குற்றம் வெடி குண்டினை இயக்குவதற்கு 9 வால்ட் மின்கலம் வாங்கிக் கொடுத்தார் என்பது.....

வெடிகுண்டின் பெல்ட்டையே  யார் செய்தது? எங்கு செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் சிபிஐ,  அந்த வெடிகுண்டை இயக்கத்தான் பேரறிவாளன் 9 வால்ட் மின்கலம் வாங்கிக் கொடுத்தார் என்று கூறுவது முரண்பட்ட செய்தியாகத்தானே இருக்கிறது.

மேலே சொன்ன விடயங்களை எல்லாம் கூட கழித்து விடுங்கள்...அவையெல்லாம் ஒரு தகவலுக்காக கூறப்பட்டது....


 20 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு வேதனையை அனுபவித்த மூன்று உயிர்களும் 20 ஆண்டுகள் இருந்தன என்பதை விட, எந்த நாளில் என்று தனது உயிர் போகுமோ என்ற அச்சத்திலேயே வைத்திருந்தது தூக்கினை விட கடும் கொடிய தண்டனை தானே?


வழக்கு, வழக்கின் நுட்பங்கள் இவையெல்லாம் விடுத்து ஒரு மனிதநேயப் பார்வை கொண்டு உற்று நோக்கினால் எந்த ஒரு நாகரீகமான சமுதாயத்திற்கும் தூக்குத் தண்டனை என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாய்த்தான் தெரியும். நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில் நாமெல்லாம் எவ்வளவோ வளர்ந்து விட்டோம்...


இன்னமும்,.....

மனிதர்களை தூக்கிலிட்டு தமது வக்கிரத்தினை தீர்த்துக் கொள்ளும் மிருக மனோநிலைதான் நம்மிடம் எஞ்சியிருக்கிறது என்றால் நாமெல்லாம் மனிதர்கள் என்று மார்தட்டிக் கொள்வது அவமானம். இன்னும் சொல்லப் போனால்...


மரணம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி தண்டனையாகும்? மரணம் என்பது வாழ்வின் முடிவு. தண்டனை என்பது குற்றவாளி தன்னை உணர்ந்து திருந்தி மீண்டும் வாழ கொடுக்கும் ஒரு வாய்ப்பு.


காவல்துறைகளும் சட்டமும் தண்டிப்பதை மட்டுமே செய்யுமெனில் அந்த சமுதாயம் எப்படி உருப்படும்?  மாறாக விழிப்புணர்வினைக் கொடுத்து அது குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க வேண்டும்.


செப்டம்பர் 9 தூக்கு என்ற வார்த்தைகளை தத்தம் காதுகளில் கேட்ட போது  அவர்களின் உயிர் அடைந்திருக்கும்  வலி என்னவென்று உணரக்கூட முடியாத சூழலில் ஒரு சமுதாயம் இருக்குமெனில் அது சபிக்கப்பட்ட சமுதாயம். ஒரு செயல் செய்யும் போது அது யாருக்கேனும் பாடமாய் அல்லது தீர்வாய் இருக்குமெனில் அது ஒரு நியாயமான முடிவாக இருக்கும்,  ஆனால் மூன்று பேரையும் தூக்கிலிடுவதால் சில பிடிவாதக்கார மிருகங்களின் ஈகோவினை திருப்திப் படுத்த முடியுமே அன்றி.....


அது நமது சமுதாயத்தின் தலையில் விழும் பெரும் சாபக்கேடு.

ராஜிவ் பேர் கூறி, விடுதலைப் புலிகளின் நகர்வுகளை தமிழகத்தில் தடை செய்தோம், பல நூறு பேர்களின் வாழ்க்கையை தடா, பொடா என்று இறையாண்மைக் கத்திகளை வைத்து கிழித்தெறிந்தோம்.


அரக்கன் ராஜபக்ஷேக்கு அதிகாரப்பூர்வ உதவிகளைச் செய்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை அகதிகளாய் பல்வேறு தேசங்களுக்குள் உலாவ விட்டோம். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் முதியவர்கள் என்று பொதுமக்களை எல்லாம் கொன்று இரத்தம் குடித்து ருசி பார்க்க அனுமதித்தோம்


கடும் சித்ரவதைகளையும் கற்பழிப்புக்களையும் அகோரக் கொலைகளையும் அரக்கன் ராஜபக்ஸே நிகழ்த்த உதவி செய்தோம்..., ஒரு இயக்கத்தினை வேரறுத்தோம்....முள் கம்பிகளுக்குள் முடங்கிப் போய் வாழ்விழந்த பல்லாயிரக்கணக்கானவர்களைப் பார்த்துக் கொண்டே பழி வாங்கி திருப்திக் கொண்டோம்....


போதாதா என் இந்திய தேசமே....! இன்னமும் உனது பசி தீராமல் போனதா என்ன? இந்த மூன்று உயிர்களையும் நீ குடித்து விட்டால் என்ன திருப்தி அடையப்போகிறாய்? 


மூன்று பேரையும் இந்த தேசம் தூக்கிலிடுகிறது என்றால் அது ஏழரை கோடித் தமிழர்களையும், மனித நேயத்தையும், சத்தியத்தையும், சேர்த்தேதான் தூக்கிலிடப்போகிறது என்று அறிக மக்களே...!


இந்த நிகழ்வு நிகழ்ந்தேறினால்....தமிழகம் தனித்து விழுந்து தேசத்திலிருந்து பிரிந்து விழும். இளைஞர்கள் எல்லாம்... வெறுப்பில் புரட்சித் தீயை தமது கைகளில் ஏந்த தயங்கமாட்டார்கள்....


இனி....

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நமது இந்த சோக நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டே பிறக்கும். வஞ்சம் தீயாய் எரியும்......அறிக எம் இந்தியாவே...!


இறுதியாய்.......

கடுமையான மக்கள் போரட்டங்களின் வலிமை கோட்டை கொத்தளங்களையும் அசைத்துப் பார்த்திருப்பதை உணர முடிகிறது. தொடர்ச்சியான மக்கள் எழுச்சியும் வலுவான தொடர் வலியுறுத்தல்களையும் தொடர்ந்து,


தமிழக சட்டசபையில் தூக்கினை நிறுத்தி அதனை ஆயுள் தண்டனையாய் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்றியிருப்பதை அறிய முடிகிறது. மேலும் உயர் நீதிமன்றமும் தூக்கில் போடுவதற்கு இடைக்கால தடையை எட்டு வார காலங்களுக்கு அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது என்றாலும் ராஜிவ் கொலை வழக்கினை நேர்மையான பார்வைகளோடு, தெளிவாக  மேற்கொண்டு நடத்தினால் பெரிய ,பெரிய இந்திய அரசியல் தலைகளும், பல வி.வி.ஐ.பிக்களும்,  இதில் சிக்குவார்கள் என்பது சத்தியமான உண்மை....! 

இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து கருத்துக்கள் கூறியும் போராட்டங்கள் நடத்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்த அத்தனை அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை கூறும் இந்தக் கட்டுரை 

நேர்மையான முறையில் வழக்கினை உயர் நீதி மன்றம் அணுகி எட்டு வார காலங்களுக்குப் பிறகு இந்திய தேசத்திலேயே வழங்கப்பட்ட ஒரு ஒப்பற்ற தீர்ப்பாய் தண்டனைகளை ஆயுள் தண்டனையாய் மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினையும் எம்மளவில் வைக்கிறது


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 
உயிர்களைக் காத்தருளுவோம்...! மனித நேயத்தை காப்பாற்றுவோம்..!5 comments:

புலவர் சா இராமாநுசம் said...

அருமையாக , தெளிவாக
நியாய மான கேள்விகளோடு
எழுதியுள்ள இப் பதிவு
உண்மைத் தமிழர் அனைவரும்
அறிய வேண்டும்
என்னுடைய வலைப்
பதிவில் இரண்டு கவிதைகள்
இது பற்றி எழுதி யுள்ளேன்
படித்துப் பார்க்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்

புலவர் சா இராமாநுசம்

சார்வாகன் said...

உயிர்களைக் காத்தருளுவோம்...! மனித நேயத்தை காப்பாற்றுவோம்..!
i second this

உமர் | Umar said...

யார் இந்தப் பேரறிவாளன் என்னும் தலைப்பில் அபத்தக் களஞ்சியக் கட்டுரை வெளிவந்த அதே கழுகு தளத்தில் சிறப்பான, தெளிவான கட்டுரை. கழுகு குழுமத்திற்கு வாழ்த்துகள்.

ராஜீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப் படுகொலைகளை தடுப்போம்! வாருங்கள்! என்று கூறியே மக்களிடம் சென்றோம். மக்களும், மாணவர்களும் இந்தக் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து போராடவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பெருமளவில் நடத்திய போராட்டமே சட்டமன்றத்தை அசைத்துள்ளது.

உமர் | Umar said...

ராஜீவ் கொலையின் நிஜக்குற்றவாளிகள் வெளியில் உலாவ நிரபராதிகளுக்கு தூக்குத்தண்டனை.

நேரமிருப்பின் இவற்றையும் படியுங்கள்.

Chandraswami spoke to various Congress leaders after Rajiv Gandhi’s assassination- say underworld don Babloo Srivastva

http://www.asiantribune.com/news/2004/12/19/chandraswami-spoke-various-congress-leaders-after-rajiv-gandhi%E2%80%99s-assassination-say-u

"Chandraswami Was Sivarasan's Godfather"

http://www.outlookindia.com/article.aspx?204696

'Chandraswami Arranged Funds'

http://www.outlookindia.com/article.aspx?204497

Chandraswami financed Rajiv murder: Cong

http://www.business-standard.com/india/news/chandraswami-financed-rajiv-murder-cong/63953/

CBI probing Chandraswami's role in Rajiv Gandhi's assassination

http://www.expressindia.com/news/fullstory.php?newsid=39461

Chandraswami was behind Rajiv killing

http://fateh.sikhnet.com/sikhnet/discussion.nsf/3d8d6eacce83bad8872564280070c2b3/754e65425b49db7787256f67000f0476!OpenDocument

http://articles.timesofindia.indiatimes.com/2004-12-10/india/27167646_1_chandraswami-enforcement-directorate-cbi

Goddamned godman

http://www.hardnewsmedia.com/2007/11/1698#content

Who really killed Rajiv Gandhi - CBI finds disturbing facts resembling JFK assassination

http://www.iindia.com/editorial/12-11c-04.asp

Et Tu, Pranab?

http://www.outlookindia.com/article.aspx?204669

உண்மைக் குற்றவாளிகளை 2007 ம் ஆண்டு வெளிநாட்டிற்கு தப்ப வைத்த காங்கிரஸ் இயக்க பெருந்தலைகள் பற்றி எந்த காங்கிரஸ் இயக்க அடிப்பொடிகளாவது வாய் திறக்குமா?

உமர் | Umar said...

There are overwhelming evidences that Subramanyaswamy & Chandraswamy played key roles in the killing of former PM Hon. Rajiv Ghandhi. Why haven't they been questioned? They want to hang innocents just b'coz they don't have the money & the political weight behind them. Now people of Tamilnadu know the whole truth & are prepared to fight for the release of these innocent men & women. That's why people are supporting them. If India is truly a democracy, it should listen to the voice of her people too. These 3 innocents deserve justice & should be freed. The officers involved in this sensitive case should be penalised for misleading the court.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes