Monday, August 29, 2011

உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்....! விவசாயம் பற்றிய ஒரு பார்வை!


தாய் மண், தாய் மண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பல்வேறு விடயங்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். மேம்போக்காய் இந்த பதத்தை நாம் பயன் படுத்த புறக்காரணங்களாக ஓராயிரம் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் நிகழ்கின்றன. நிஜத்தில் விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நாம் என்பதையே காலத்தின் போக்கில் மறந்து விட்டோம்.


மண்ணோடு மண்ணாக கிடந்து உழவு செய்து, தானியங்களை விளைவிக்கும் ஒரு மிகப்பெரிய விவசாய நாட்டின் மைந்தர்கள் நாம் இன்று விவாசயம் என்றாலே ஏதோ கிராமத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் ஒரு பிற்போக்கு நிகழ்வாக கருதி நமது புத்திகளை பல்வேறு பட்ட நவீன விடயங்களோடு பொருத்திக் கொண்டு நவநாகரீக மனிதனாக நம்மைக் காட்டிக் கொள்ள பொய்யாய் முனைந்து கொண்டிருக்கிறோம்.

நாகரீகம் என்பது மேலை நாட்டவரின் கண்டுபிடிப்புக்களை உபயோகம் செய்வதோ, நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரையாடுவதோ, புது புது ஆடை அலங்காரங்கள் செய்து கொண்டு சிலிர்த்துக் கொண்டு திரிவதோ, சனிக்கிழமை இரவுகளில் டேட்டிங், டிஸ்கொத்தே சொல்வதோ அல்ல.

நாகரீகம் மற்றும் கலாச்சாரம் என்பது உடையில், நடையில் பாவனையில் நம்ம மேலை நாட்டவர் போல காட்டிக் கொள்வது என்ற பொது புத்தி தவறாக அதுவும் கடந்த இருபது வருடங்களில் மிகுதியாக ஒவ்வொரு மூளைகளிலும் பதியம் போடப்பட்டிருக்கிறது.

அறிவியலையும் வளர்ச்சியினையும் நமது கையில் எடுத்துக் கொண்டு நாம் நின்று கொண்டிருக்கும் தேசத்தின் பாரம்பரியமான தொழில் வளத்தையும், கட்டுக் கோப்பான வாழ்க்கை முறையையும் சீரான முறையில் பின்பற்றி உலக சமுதாயத்திற்கு முன்னால் அவற்றை எடுத்துக்காட்டி வாழ்வதுதான் நாகரீகம். 

தமிழர்களாகிய நமக்கு நாகரீகமாக காலமெல்லாம் அடையாளம் காட்டப்படும் இரண்டு விடயங்கள்,  இப்போது நவீனத்தின் வருகை என்ற பெயரில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருப்பதை உணரக்கூட நமக்கு நேரமில்லாமல் நம்மை ஏதேதோ விடயங்கள் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.

1)விவசாயம்

2)விருந்தோம்பல்
சுபிட்சமான தன்னிறைவான சமுதாயத்தின் மக்கள்தான் வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பலை எடுத்தோம்ப முடியும். என்ன தான் வணிகம், வெவ்வேறு தொழில்கள் என்று நாம் விரிந்து பரந்து நமது இறக்கைகளை விரித்தாலும், எல்லா வித வசதிகளையும் பெற்று விட்டாலும் மூன்று வேளை உணவு என்னும் விடயத்தை விட முடியாதுதானே?

இப்படி நவீன மயமாக்கள், தொழிற்சாலைகளின் வரவுகள், ரியல் எஸ்டேட் என்னும் பொன் முட்டையை எடுக்கும் முயற்சியில் நிலங்களைக் கூறு போடுதல்,  என்று நாம் விவசாயம் என்ற ஒன்றினை விட்டுத் தடம் புரண்டு இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர் காலத்தில் நமது உணவு தானியங்களையும், காய்கறிகளையும் சீனாவில் இருந்து இறக்கு மதி செய்து தான் சாப்பிட வேண்டும்..!

கணிணியின் முன் அமர்ந்து கொண்டு மேலை நாட்டு காபி பொடி கலந்த சூடான் ஒரு காபியோடு சீனாவின் அரிசியையும் காய்கறியையும் அதிக விலை கொடுத்து வாங்கி நாம் உண்ணப் போகும் சூழல் சர்வ நிச்சயமாய் அமைந்து விடும்  இப்போதே நமது தேசத்து இளைஞர்களுக்கு விவாசய சாகுபடி பற்றிய விழிப்புணர்வு கொடுக்காவிட்டால்.

1) ஏற்கெனவே அரசியல் சூதுவாதுகளால் மறுக்கப்படும் காவிரி நீரால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் விவசாயத்தை மெல்ல மெல்ல கைவிட்டு விட்டு வெவ்வேறு தொழில்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

2) தமிழகத்தின் தென் கோடி மாவட்டங்களான மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் கிடையாது.  மழைக்காலத்தில் பெய்யும் பெரும் நீரைத் தேக்கி கண்மாய்களில் வைத்தும், வானம் காட்டும் கருணையையும் நம்பி இவர்களின் விவசாயம் இருக்கிறது. அதுவும் மிகைப்பட்ட கண்மாய்கள் எல்லாம் வெகுகாலமாக தூர் வாறாமலும், மண் அரிப்பு ஏற்பட்டிருப்பதாலும் மெல்ல மெல்ல செத்து அழிந்து கொண்டிருக்கிறது. அலுத்துப் போன விவசாயிகளும் எத்தனைக் காலம்தான் இந்த மண்ணோடு போராடிக் கொண்டிருப்பது என்று சாட்டிலைட் தொலைக்காட்சி காட்டும் ஒரு மாயா வாழ்க்கையை நாம் ஏன் வாழக் கூடாது என்று தங்களது பிள்ளைகளை வயல்வெளிப் பக்கமே வரவிடாமல் கல்லூரி வரை படிக்க வைத்து பட்டணத்துக்கு துரத்தி விடுகிறார்கள்

3) வட மாவட்டங்களில் மிகைப்பட்ட தொழிற்சாலைகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதோடு, கொடி கட்டிப் பறக்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் செதுக்கி ஒழிக்கப்படுகின்றன விளை நிலங்கள்.

இதற்கெல்லாம் காரணம் விவசாயத்தைப் பற்றி மிகப்பெரிய புரட்சியையும் விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் பதிய ஊடகங்களும், அரசும், ஏன் மக்களுக்குமே இதில் அக்கறை இல்லை. உழுது, விதைத்து, தண்ணீர் இறைத்து சேற்றிலும் சகதியிலும் முட்களிலும் நடந்து, வெயிலையும் மழையையும் இயற்கையின் எல்லா மாற்றங்களையும் கண்டு சந்தோசித்து பயந்து ஒரு விவசாயி ஏதோ ஒரு தானியத்தை விளைவித்து அதை சந்தைக்கு கொண்டு வருகையில் அதற்கான விலை நிர்ணயத்தை அவனால் செய்ய முடிவதில்லை.

”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற கூற்றினை எல்லாம் ஏட்டோடு வைத்து விட்டு ஒரு உழவனை இந்த சமுதாயம் இப்போதெல்லாம் கொண்டாடுவதில்லை. விவசாயி என்றாலே....ஒரு வித பார்வை இறக்கங்கள் கொடுத்துப் பார்க்கும் அவலநிலை நமது தேசத்திற்கு கொடுக்கப்பட்ட சாபமாகவே இந்தக்கட்டுரை பார்க்கிறது.

திருடன், அயோக்கியன், பணபலம் கொண்ட அடாவடி மனிதர்களை எல்லாம் அண்ணே என்று கைகூப்பும் என் சமுதாயம் ஒரு விவாசாயியை எப்போதும் இப்படி சிறப்பித்தது இல்லை. மதிப்பும் மரியாதையும் மனித மனத்தின் தேடல் அது எங்கே கிடைக்கிறதோ அதை நோக்கியும் எதனால் கிடைக்கிறதோ அதை செய்தும் காலமெல்லாம் மனிதன் நகர்ந்து கொண்டிருக்கிறான்.

ஒரு அந்தஸ்தினையும், சமுதாய சமநிலையையும் கொடுக்காத விவசாயத்தினை விட்டு மிகைப்பட்ட பேர்கள் நகர்ந்து செல்ல இது ஒரு காரணம். இன்று நகரத்தில் இருப்பவகள் அனைவருமே ஊரிலே தமது வீட்டையும் விளை நிலத்தையும் அனாதையாக விட்டு வந்தவர்களே....

விவாசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு இது பற்றிய விழிப்புணர்வினை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், நலிந்து போயிருக்கும் இதனை மீட்டெடுக்க நாமும் நமது பிள்ளைகளை ஊக்குவித்து விவசாய புரட்சியினை நமது தேசத்தில் நிகழ்த்திக் காட்ட வேண்டும்.

விவாசயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களும் விலை நிர்ணயங்களும் சலுகைகளும் அதிரடியாய் அதிகரிக்கப்பட்டு ஒவ்வொரு உழவனையும் அரசும் போற்ற வேண்டும். பார்வைகள் தாழ்த்திப் பார்ர்கும் பாவனைகள் போய்...அவர் உழவர், விவசாயி எழுந்து இடம் கொடுங்கள்......என்று கை கூப்பி எல்லோரும் தொழ வேண்டும்.

" உண்டி கொடுத்தோர்.........உயிர் கொடுத்தோர் அல்லவா....?

கழுகின் சீரிய சிறகடிப்பில் தொடர்ந்து விவசாய தொழிநுட்பங்களையும் அதன் முறைகளை வாசகர்களுக்கு வரும் வாரங்களில் அளித்துக் கொண்டே இருப்போம்!

வாழ்க விவசாயம்!  வளர்க விவசாயிகள்!கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 
2 comments:

Prabu Krishna (பலே பிரபு) said...

கழுகு வாசகர்கள் இதையும் படிக்கலாம்.


இவன் பிகிலு:அற்புத தண்ணீர் கிராமம்

சைதை அஜீஸ் said...

BETTER LATE THAN NEVER என்று ஆங்கிலத்தில் கூறுவது போல், தாமதமாக வந்த சிந்தனை என்றாலும், மிகச் சரியான பதிவு.
சீனாவில் மிகப்பெரும் பணக்காரர்கள் விவசாயிகளே! மிகப்பெரும் தொழில் புரட்சியை சீனர்கள் ஏற்படுத்தியிருந்தாலும், விவசாயிகளை அந்நாடு கௌரவப்படுத்துகிறது.
இஸ்ரேலை, உலகின் பல நாடுகள் அங்கீகரிக்கவேயில்லை. ஆனால் அவர்கள் விவசாயத்தில் அசுர சாதனை செய்துள்ளனர்.
நம் விவசாயிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். அவர்களால்தான் நம் நாட்டுக்கு சுபீட்சம் ஏற்படும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு தேவயானவற்றை நேரம் தவறாமல் கிடைக்கச் செய்ய வேண்டும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes