Sunday, August 14, 2011

எங்கே போனாய் என் சகோதரனே....? இந்தியா பாகிஸ்தான் உறவு பற்றிய ஒரு பார்வை!இந்திய சுதந்திரம் என்ற வார்த்தையை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் சேர்ந்தே நமது புத்திக்குள் எட்டிப்பார்க்கும் அனிச்சையான விடயம் பாகிஸ்தான். சுதந்திர இந்தியா என்று கூறும் போதே ஏதோ குறை பிரசவ குழந்தையைப் பெற்றெடுத்தது போன்ற அரை குறை சந்தோசம் நம் மனதுள் ஏற்படுவதற்கு, நம்மில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதுதான் காரணம்.எந்த ஒரு செயலும், எந்த ஒரு போராட்டமும் முழுமையான ஒரு தீர்வை எட்ட வேண்டுமெனில் அங்கே முழுமையான சந்தோசப் பகிர்வுகள் இருக்க வேண்டும்.ஆனால் இந்திய தேசத்தின் விடுதலையை நாம் வெள்ளையர்களிடமிருந்து பெற்றெடுத்த அந்த தினம் முழுமையான ஒரு தீர்வினை எட்டிப் பிடித்த நாளன்று......நம் சகோதரனை நம்மிலிருந்து பிரித்துப் போட்ட நாள்..! சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராய் முகமது அலி ஜின்னா இருக்கவேண்டும் என்று கோடிட்டு காட்டிய தேசப்பிதாவின் வார்த்தைகளை பிடிவாதம் பிடிக்காமல் ஜவஹர்லால் நேரு கேட்டிருந்தால், சுதந்திர இந்தியா தனது முதல் பிரதமராய் மதமாச்சார்யங்கள் கடந்த ஒருவரை தன் மடியில் ஏற்றி இருந்தால், அப்போதைய சுயநல அரசியல் தம் தலையை சில ஆண்டுகளுக்காவது உள் இழுத்து வைத்திருந்தால்...இன்று இந்தியா எப்பேர்ப்பட்ட வல்லரசாய் இருந்திருக்கும், ஏகாதிபத்திய அமெரிக்க, ஐரோப்ப நாடுகளுக்கு எப்படிப்பட்ட சவாலாய் இருந்திருக்கும் என்றெல்லாம் சிந்தித்துக் கூட பார்க்க இயலாத வகையில் நேற்று பிறந்த பிஞ்சுகள் வரைக்கும் மூளைகளுக்குள் ஏற்றபட்டிருக்கிறது பிரிவினை வாத விஷம். சுதந்திர இந்தியா பிணக்குவியல்களிலும், கண்ணீர்க் கதறல்களுக்கும் மத்தியில் பிறந்தது என்றால்...அதே வலியோடு தன்னை விடுவித்துக் கொண்டது பாகிஸ்தான் என்ற தேசமும்...மதத்தின் பெயரால் ஒரே தேசத்தவர் பிரியத்தான் வேண்டும் என்பது காலத்தின் கொடும் சாபம் என்றாலும் இதற்கு பின்னால் விளையாடிய வெள்ளை மூளைகளைப் பற்றி அறிய வேண்டுமெனில் பல புத்தகங்களுக்குள் நீங்களும் நானும் உட்சென்று வெளி வரவேண்டும். இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி மத துவேஷர்கள் ஏற்படுத்தி முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் விளையாட்டுக்கள் 60 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நம்மை பிரித்தாளச் செய்வதுடன் கடும் கொடூரச் செயல்களிலும் ஈடுபட வைக்கிறது என்றால் இந்த எதிர் மறை சக்தியின் விளைவு என்னவென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.இந்திய தேசத்தில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தீவிரவாதி என்றால் அவன் ஒரு பாகிஸ்தானியாய் இருக்க வேண்டும் என்று கற்பித்து வைத்த தலைவர்களும் சரி, ஊடகங்களும் சரி, இதை வலுவாக மனதிற்கு கடத்திச் சென்ற சினிமாக்களும் சரி கடும் கண்டனத்துக்குரியவை. நாம் இந்தியர்கள் என்பதால் இந்திய ஊடகங்களை எவ்வளவு நம்புகிறோமோ அதே அளவு பாகிஸ்தானியர்களும் பாகிஸ்தானிய ஊடகங்களையும் மதத்தின் பேரால் மக்களை கெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் நம்புகிறார்கள்.சுதந்திர இந்தியா மதச்சார்பற்று மலர்ந்ததால் இங்கே மிகுதியாய் மக்களை மதம் என்னும் உணர்ச்சியின் பேரில் ஒன்று சேர்ப்பது மதவாதிகளுக்கு குதிரைக் கொம்பாய் இருந்த அதே நேரத்தில் பாகிஸ்தானில் மதத்தின் பேர் கொண்டு மனிதர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட வைக்க பல குழுக்கள் பிறந்தன. பாகிஸ்தானில் மட்டும்தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் இந்தியாவில் இல்லை என்ற விடயத்தை நீங்கள் சதவீதங்களில் வேண்டுமானால் மறுக்கலாமே தவிர இந்தியாவிலும் சற்றும் சளைக்காத தீவிரவாதக் குழுக்கள் உண்டு அவை எல்லாம் ஜனநாயகப் போர்வையில் பல்வேறு அரசியல் கட்சிகளாய் இங்கே பரிணமித்து அலைவதால் அவற்றை அடையாளம் காணுதல் சிறிது கடினம்.சுதந்திரத்துக்குப் பின்னால் இரு தேசங்களுமே சம அளவில் சீர்கெட்டு போவதற்கு காரணமாய் கேவலமான சுயநல அரசியல் காரணமாயிருக்கும் அதே நேரத்தில் இரு தேசங்களையும் தொடர்ந்து எதிரிகளாகவே கருதிக் கொண்டு நகர வைக்க பெரும் பங்கினை அமெரிக்க ஏகாதிபத்தியமும் குறைவில்லாமல் செய்து கொண்டே இருப்பதும் நாம் அறிந்ததே...!அரசியல், விளையாட்டு, எல்லாம் கடந்து மனிதர்களை உற்று நோக்கும் போது அவர்களின் அளாவளவலும் அன்பும் நம்மால் உணர முடியும். வாழ்க்கையின் முதல் பாகிஸ்தானியரை நான் சந்தித்த போது அது கொஞ்சம் மிரட்சியையே எனக்குக் கொடுத்தது. எனக்குள் ஊறிப்போய்க் கிடந்த பாகிஸ்தானிய எதிர்ப்பு வாதமும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பாகிஸ்தான் என்ற ஒரு நாடுதான் காரணம் காலங்களாய் திணிக்கப்பட்ட கருத்து வாதமும் ஒன்று கூடி வெறுப்பாய்த்தான் அவர்களைப் பார்க்கவைத்தது.முரட்டு அரசியலின் பிடியில் சிக்கி மதமென்னும் போர்வைகளில் அட்டூழியங்களைச் செய்யும் அரசியல் சூழலில் வார்க்கப்பட்டதால் ஒரு பாதுகாப்பு இன்மையும் விரக்தியும் அவர்களிடம் இருப்பதை நாளடவில் உணர முடிந்த அதே நேரத்தில், நமது தேசத்தில் எப்படி பாகிஸ்தானியர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற விதை விதைக்கப்படிருக்கிறதோ அதே போன்ற வித்தினை சுமப்பவர்களாக அவர்கள் இருப்பதும் அறிய முடிந்தது.இரு தேசத்தின் மக்களும் அன்பினைக் கொண்டிருப்பவர்களாக இருந்த போதிலும் அவர்களின் அன்பினை எல்லாம் காவு வாங்கிக் கொண்டு இரத்த வெறியாட்டம் போடும் அரசியலையும் மதத்தையும் எந்தக் கடவுள் வந்து தீர்த்து வைப்பார் என்பது தொடரும் கேள்விக்குறியாகத்தானிருக்கிறது.

இந்திய தேசத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு சராசரி இந்தியனுக்கு காஷ்மீர் விவகாரத்தின் முழு பரிமாணமும் அங்குள்ள மக்களின் மனோநிலைகளும் தெரியாது...! அதே போலத்தான் பாகிஸ்தானில் இருக்கும் மக்களுக்கும்...! தொடர்ந்து வெறுப்பினை ஊட்டி பாகிஸ்தான் போன்ற தேசத்தின் பொருளாதாரம் தேய்ந்து போயிருக்கையில் அங்கே முளைத்து விட்ட மத தீவிரவாதிகளின் கைகளுக்குள் மிகைப்பட்ட பாகிஸ்தானின் இளைஞர்கள் சிக்கி விடுவது சர்வ சாதரணமாய் நிகழ்ந்து விடுகிறது.


உணர்ச்சிகளை ஊட்டி மூளைச்சலவைகள் செய்து குற்றங்களை செய்ய வைக்கும் போது மனிதர்களை மனிதர்களாக யாரும் நினைக்க போதிய கால அவகாசமும் சிந்திக்கும் திறனும் இல்லாமலேயே போய்விடுகிறது. இந்தியாவில் வசிக்கும் ஏராளமான வட நாட்டவர்களின் உறவுகள் இன்னமும் பாகிஸ்தானில் வசிப்பதும், அவர்களைக் காண ஒரு சுமுக சூழல்கள் இல்லாமல் இரு தேசத்து மக்களும் இந்த நவீன யுகத்திலும் முடங்கிப் போய்கிடப்பது ஒரு வரலாற்று சோகம்.இந்திய பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் மட்டுமின்றி உலக முதலாளித்துவ ஆளுமைகளும் சேர்ந்தேதான் இரு வேறு தேசத்து மக்களையும் பிரித்துப் போட்டு வைத்துள்ளன. இயற்கை வளம், பொருளாதாரம், மக்கள் வளம், என்று ஒருங்கிணைந்து நகரும் போது உலக அரங்கில் யாராலும் அசைக்க முடியாத பெருஞ்சக்தியாக இரு தேசங்களும் மிளிரத்தான் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்தியாவில் நடக்கும் தீவிரவாத செயல்களைப் போல நித்தமும் பாகிஸ்தானிலும் மனிதர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேசங்களை பிரிக்கும் மாயக்கோட்டினை தாண்டி ஒரு காலத்தில் ஒற்றை தேசத்தவராய் நாம் வாழ்திருக்கிறோம் என்ற மனிதாபிமானத்தை இரு தேசத்து மக்களிடமும் ஊட்ட வேண்டியது தேசங்களை ஆளும் அரசின் கடமை. ஆனால் அப்படி செய்யமல் இருப்பதின் பின்னணியில் பலமான மனித சுய நலங்கள் மிகுந்து கிடப்பது கடும் கண்டனத்துக்குரியதே...!

ஒன்றாய் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இனி இல்லை என்பதை அறுதியிட்டே கூறினாலும் குறைந்த பட்சம் காழ்ப்புணர்ச்சிகளை எல்லாம் தூர எறிந்து விட்டு கை குலுக்கிக் கொண்டு பரஸ்பரம் நேசம் கொண்ட தேசங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் மிளிர வேண்டும் என்பதே இரு நாட்டிலும் வசிக்கும் சராசரி குடிமக்களின் கனவாய் இருக்கிறது என்பதை  இந்தக் கட்டுரை ஆணித்தரமாக கூறுவதின் பின்னணியில் பலதரப்பட்ட தரங்களில் வாழும் பாகிஸ்தானிய மக்களிடம் கலந்து, பேசி, விவாதித்து உறவு கொண்ட அனுபவம் இருக்கிறது என்பதனையும் கருத்தில் கொள்க;ஒவ்வொரு சுதந்திர தினமும் வெள்ளையரிடம் இருந்து நமது தேசத்தை வென்றெடுத்த தினம் என்று மிட்டாய் கொடுத்து கொண்டாடும் அதே வேளையில்.....நமது சகோதரனை நாம் பிரிந்த ஒரு இடம் என்பதனையும் நாம் கருத்தில் கொள்வோம்.அரசியல் காழ்புணர்ச்சிகள் கொண்ட தேசத் தலைவர்கள் இரு தேசங்களிலும் அழிந்தொழிந்து...., மக்கள் நலம் பயக்கும் அரசுகள் இருதேசத்திலும் உருவாகி, எல்லா கருத்து வேற்றுமைகளையும் களைந்து இரு தேசத்து மக்களும் பதட்டமின்றி கொண்டாடும் அந்த சுதந்திர தினமே ஒரு நிஜ சுதந்திர தினமாய் இருக்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை...!
மனிதர்களை நேசிப்போம்....! மனித நேயம் காப்போம்...!


கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


10 comments:

பனங்காட்டு நரி said...

Again one Classic post !!! இன்னும் நிறைய தகல்வல்கள் தந்து இருக்கலாம் உதாரணம் :காஷ்மீர் பிரிவினை ,ஜின்னா வின் புற்று நோய் பற்றிய மவுண்ட் பேட்டனின் காலம் கடந்த எண்ணம் ,படேலின் பிடிவாதம் ,நேருவின் கோபம் ,போல ......,ஆகஸ்டு 15 முடிந்து மறுபடியும் ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு .......,

அருண் பிரசாத் said...

nice...

சேலம் தேவா said...

பாகிஸ்தானின் மீது உள்ள மாறுபட்ட எண்ணங்களை நீக்கும் கட்டுரை..!!

Thomas Ruban said...

இந்திய‍, பாகிஸ்தானை பிரிக்கும் எல்லை கோடான வாகா பற்றியும் தகல்வல்கள் தந்து இருக்கலாம்.

வாகாவில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக,
வெளிநாட்டினரும், இந்திய‌, பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு.

மீடியாக்கள் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள்.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் என்னவென்று சொல்வது?.

Thomas Ruban said...

இன்று சுதந்திரதினம் கொண்டாடும் பாகிஸ்தான் சகோதரர்களுக்கும், நாளைக்கு 65வது சுதந்திரதினம் கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் நண்பர்களே.

jmbatcha said...

மிகவும் சிறப்பான யாரும் இந்தக்காலத்தில் சிந்திக்காத மற்றும் சிந்திக்க வராத கருத்துக்களை எல்லா தயக்கங்களையும் மூட்டை கட்டி விட்டு சமநிலையுடன் எழுதிய பாங்கு பாராட்ட வேண்டியது மட்டுமல்ல ஒரு கட்டுரையில் பல மனிதர்களின் மனதில் இப்படி ஊடுருவி ஒரு வித அமைதி மேவும் நிலையையும் நல்லெண்ணத்தையும் விதைத்து விடலாம் என்பதற்கு தேவாவின் இந்த எழுத்துக்கள் சாட்சி. இப்படி ஒரு 100% மக்கள் நலன் சார்ந்து ஒற்றுமையை சகோதரத்துவத்தை ஓங்க ஒலிக்கும் கட்டூரைக்கு வாழ்த்துக்கள்!

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.தேவா...

கைகொடுங்கள் சகோ.
பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

பிரிவினைவாதத்துக்கு எதிரான...
பிரிவினைவாதிகளுக்கு எதிரான...
பொது(வான)மக்களுக்கு ஆதரவான...
ஆக்கப்பூர்வமான ஆக்கம்...
நிஜமான எழுத்துக்கள்...
அபூர்வமான ஓர் இடுகை...
அசத்தல் கருத்துக்கள்...
கலக்கல் வாதங்கள்...

மிக மிக நன்றி சகோ..!

பல வருடங்களாக என் கருத்துக்களும் இஃதே..!

எனக்கு இந்த புத்தியை-தெளிவை கொடுத்த நிகழ்ச்சி யாதெனில்...

ஈஸ்ட் ஜெர்மனியும் வெஸ்ட் ஜெர்மனியும் ஒன்றான நாள்... மக்களால் உடைக்கப்பட்ட பெர்லின் சுவர்..!

அதுபோன்ற ஒரு நாள் நமக்கும் வருமா..?

பிரிவினைவாதிகள் வெற்றி பெற்ற தினங்களே ஆகஸ்ட் 14ம், ஆகஸ்ட் 15ம். அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும்தான் கொடியேற்றி கொண்டாடுகின்றனர்.

என்னுடன் இங்கே சவூதியில் பணியாற்றும் நிறைய பாகிஸ்தானிகள் (அந்தக்காலத்தில் மதவெறியால் தாய்மண்ணை விட்டு ஓடியவர்களின் மகன்கள், பேரன்கள்...) இன்றும் கூட பிரிவினை குறித்து-தவறு செய்த தன் பெற்றோர்-குறித்து சோகமாகத்தான் இருக்கின்றனர்.

ஜீவன்பென்னி said...

India vil kundugal vedikkum samayangalil ingirukkum pakistania nanbargal miga kavalaiyudan visarikkum vazamaiyai naan kandirukkindren... avargaludaiya varuthathai ennodu pakirnthu kondum irukkindrargal...sariyana alavil vadikkappatta nermaiyaana katturai... Budgetil pathukkappukkaha othukkappadum pala latcham kodi panam veenaavathaiyum avargal ethirkkindrargal.... ondra irunthirunthal nandraga irunthirkkum endra ennamum irukkindrathu...

ஹைதர் அலி said...

சரியான சந்தர்ப்பத்தில் வந்த தெளிவான சமூக அக்கறையுள்ள பதிவு நண்பரே

//உணர்ச்சிகளை ஊட்டி மூளைச்சலவைகள் செய்து குற்றங்களை செய்ய வைக்கும் போது மனிதர்களை மனிதர்களாக யாரும் நினைக்க போதிய கால அவகாசமும் சிந்திக்கும் திறனும் இல்லாமலேயே போய்விடுகிறது.///

உண்மைதான் நண்பரே சரியான சொல்ல்லாடல்

நன்றி நண்பரே

cheena (சீனா) said...

அன்பின் தேவா - நம்மிரு நாடுகளிலும் மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதம் எல்லா நாடுகளீலும் உண்டு. அவ்வப்போது தலை தூக்கும். இரு நாடுகளுக்கும் உறவுப் பாலம் இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறது. இரு அரசுகளும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக மாறட்டும் என்ற மனப்பான்மையில் நட்பு பாராட்ட வேண்டும். தீவிர வாதக் குழுக்களை அந்தந்த நாட்டிலேயே அடக்க வேண்டும்.அப்பொழுது தான் இரு நாடுகளூம் சுதந்திர தினத்தினை சுதந்திரமாகக் கொண்டாட தகுதி பெறும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes