இதயம் உடலின் எல்லா பாகங்களுக்கு இரத்தத்தை பம்ப் செய்யும் மிக முக்கியமான உறுப்பு. ஆனால் அந்த இதயம் செயல்படவும் ஆக்ஸிஜன் தேவை. இதற்காக ஒரு சிறு இரத்தக் குழாய் (கரோனரி தமனி) இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்கிறது. அந்த ரத்தக் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படும்போது இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடுவதே இதய அடைப்பு எனப்படுகிறது.
இங்கே இதயத் தசை பற்றி ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். நம் உடலின் பெரும்பாலான எல்லா தசைகளும் அடிபட்டால் மீண்டும் வளரும் தன்மையுடையவை. ஆனால் இதய தசைக்கு அப்பண்பு இல்லை. அதனால்தான் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது, அப்பகுதியில் உள்ள இதய தசை செல்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறக்க ஆரம்பிக்கின்றபோது, இந்த சேதம் குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் இதயம் முழுவதுமாக செயல்பாட்டை நிறுத்தி விடுகின்றது.
கீழ்காணும் வீடியோக்கள் இதய அடைப்பை நன்றாக விளக்கும்.
பெரும்பாலும் இதய அடைப்பு ஏற்பட coronary artery disease (CAD) எனும் பிரச்சினையே காரணமாகின்றது. கரோனரி தமனியில் படிப்படியாக அடைப்பு உருவாகும் பிரச்சினையே CAD எனப்படுகின்றது. இன்னொரு பிரச்சினை கரோனரி தமனியில் ஏற்படும் இறுக்கம். இதுவும் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. (இந்த இறுக்கம் CAD இல்லாத இரத்த குழாயில்தான் ஏற்படும்). இந்த CAD மற்றும் இறுக்கம் தோன்ற காரணமாக அமைபவை கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், புகையிலை, சிகரெட், சுருட்டு போன்றவையாகும்.
படங்களில்/நாடங்கங்களில் காண்பிப்பது எல்லா இதய அடைப்புகளும் ஒரு உடனடியான, கடுமையான வலியை ஏற்படுத்தாது. மேலும் இதய அடைப்புக்கான அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரேபோலவும் இருக்காது. பல இதய அடைப்பும் மெதுவாக லேசான வலி அல்லது அசௌகரியத்துடன் மட்டுமே கூட ஏற்படலாம். சிலருக்கு அறிகுறிகளே கூட இருக்காது (இதை சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்கிறார்கள்).
இந்த வலி அல்லது அசௌகரியம் சில நிமிடங்களுக்கு மேலாகவும் நீடிக்கலாம் அல்லது விட்டு விட்டு வரலாம். அசௌகரியம் என்பது, நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு, நெஞ்சடைப்பு, நெஞ்சை பிசைதல், வலி போன்று இருக்கலாம. அது லேசாகவும் இருக்கலாம் அல்லது கடுமையாகவும் இருக்கலாம். இதய வலி சில சமயங்களில் நெஞ்செரிச்சல்(அஜீரணத்தின் போது ஏற்படுவது போல) போலவும் இருக்கலாம்.
இதய நோய்(angina) எனப்படும் பிரச்சினை CAD நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்நோய் உள்ளவர்கள் இயக்கத்தில் உள்ளபோது ஏற்படும் அறிகுறிகளும் இதய அடைப்பு போன்றே இருக்கும். ஆனால் அது ஓய்வெடுத்து, சில நிமிடங்களில் சரியாகிவிடும். ஓய்வெடுத்தும் சரியாகவில்லை என்றாலோ, அதன் வழக்கமான அறிகுறிகள் மாறியிருந்தாலோ (அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது ஓய்விலிருக்கும்போது ஏற்பட்டாலோ) அது இதய அடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
இது மட்டுமின்றி இதய அடைப்பின்போது வேறு அறிகுறிகளும் ஏற்படலாம்.
* அசௌகரியத்துடனோ அல்லது முன்னாடியோ மூச்சு வாங்குதல் அடிக்கடி ஏற்படுதல்
* வாந்தி வருவது போன்ற உணர்வு, தலை சுற்றுதல், அளவுக்கு அதிகமாக வியர்த்தல்
* சில சமயங்களில் இந்த அறிகுறிகள் உடனடியாக ஏற்படாமலும் இருக்கலாம்,
* அவை மெதுவாக மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ, அல்லது வாரக்கணக்கிலோ கூட உருவாகலாம்.
45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் (அல்லது மாதவிடாய் நின்ற பிறகு) இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். [பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ரோஜன் ஹார்மோன் அவர்களுக்கு இதய நோய் வருவதை தடுக்கின்றது. ஆனால் மாதவிடாய் நின்றபின் இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து விடும்.] மேலும் குடும்பத்தில்/பரம்பரையாக ஏதாவது இதய நோய் இருந்தால் அவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் இயக்கம் குறைவாக இருத்தல், நீரிழிவு நோய் போன்றவையும் இதயநோய்க்கான அபாயக் காரணிகளாகும்.
தவிர்க்கும் முறைகள்:
இதய நோய் வரும் அபாயம் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது இந்நோயின் தாக்கத்தை பெரிதும் தடுக்கும்.
உணவில் குறைந்த கொழுப்பு சத்துடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் கொழுப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். உப்பையும் குறைத்து கொள்ள வேண்டும். இவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பை குறைக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரையை குறைக்கும் விதத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிக உடல் எடையுடன் இருந்தால் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது நல்லது.
* புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்றவற்றை அறவே நிறுத்த வேண்டும்.
* அதிக அளவு உணர்ச்சி வசப்படாமல் இருப்பது.
* எந்நேரமும் ஓய்வில் இல்லாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் செயல்பாடுகளை செய்வது நல்லது.
இதய அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என ஒரு அவசரநிலை செயல்திட்டத்தை தயார் செய்து வைத்திருங்கள். ஏற்கனவே ஒருமுறை இதய அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் 30% இதய அடைப்புகள் மரணத்தை ஏற்படுத்துகின்றன. இதய அடைப்பு ஏற்பட்ட வரும் ஒரு மணி நேரத்தை ‘கோல்டன் அவர்(Golden Hour)’ என்பார்கள். இந்த நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் அவர்களை காப்பாற்றி விடலாம்.
இதய நோய் உலகின் பயங்கரமான நோய்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் இதய நோய் உள்ளவர்களில் 60% பேர் இந்தியர்களாம். மாறி வரும் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் இப்படிப்பட்ட உடல் பிரச்சினைகளை இன்னும் அதிகப்படுத்துவதாகவே உள்ளன. எனவே நம் உடலை பேண தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. முடிந்தவரை வருமுன் காப்பதே சிறந்தது. உடலை காப்போம்! உயிர் காப்போம்!
2 comments:
பயனுள்ள கட்டுரை... நல்ல பகிர்வு நண்பா.
கழுகு குழுமத்திற்கும் மற்றவர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
மிகவும் நல்ல கருத்து.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
Post a Comment