Monday, August 08, 2011

அன்னா ஹசாரே....என்னும் சக்தி


இந்தியாவில் புரட்சி வெடிக்கும் வெடிக்கும் என்னும் எதிர்பார்ப்பு சமீப காலமாக கூடிப்போய் உள்ளது. ஈழ பிரச்சனை தொடங்கி இப்போதைய சமச்சீர் கல்வி வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போராட்டத்துக்கு ஆயுத்தம் ஆகி விட்டனர்.!!! 


இந்த போராட்ட குணம் எங்கு கொண்டு போய் விடும்.? மக்களை எவ்வகையில் தூண்டிவிடும்.?சில காலங்களுக்கு முன்னர் பெருவாரியான  மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் அன்னா ஹசாரே! அவர் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறாரா இல்லை மக்களை இருளில் மூழ்க செய்கிறாரா? என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?


ஊழலை எதிர்க்க லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு அரசுக்கு ஒரு தனிமனிதனாக இருந்து நெருக்கடி தரவேண்டும் என்று யோசித்த அன்னா ஹசாரே திடீரென முளைத்த செடியாய் உண்ணாவிரதம் என்னும் விதை கொண்டு எழுந்தார். ஊழலை எதிர்த்து ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார், ஊழலை அழிக்க ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று ஒரு தெளிவான பின்புல காரணமற்றே மொட்டையாக

செய்திகள் பரவிற்று, மக்கள் என்னவென்று சரியாக புரிந்துகொள்ளாமல் நான்ஆதரிக்கிறேன் நான் ஆதரிக்கிறேன் என்று ஒன்றன் பின் ஒன்றாக கையை தூக்கிக்கொண்டு வரிசை கட்டினர்..!


அன்னா ஹசாரேவை ஆதரித்து அப்போது கூட்டம் கூட்டமாக திரளாக கூடியிருந்த மக்களுக்கு அவரின் உண்ணாவிரதத்தின் உள்நோக்கம் லோக்பால் மசோதா என்பதே தெரியாமல் இருந்தது தான் உண்மை.! ஒருவழியாக சாகும் வரை உண்ணாவிரதம் என்னும் போர்வையிலும் மக்களின் அதீத சக்தி என்னும் ஆயுதம் கொண்டும் மத்திய அரசை வீழ்த்திவிட்டார் ஹசாரே!!


ஊழலை எதிர்க்கும் அன்ன ஹசாரேயின் மீதும் ஒரு வழக்கு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அன்னா ஹசாரே ஹிந்த் ஸ்வராஜ் என்னும் அறக்கட்டளையை தொடங்கி நடத்துகிறார். 2005ம் ஆண்டு புனேவை சார்ந்த ஹேமந்த் கோலேகர் என்பவர் ஹசாரே 1998 ஜூன் 15ம் தேதி தம் பிறந்தநாளை அறக்கட்டளை நிதியில் இருந்து 2லட்சம் ரூபாய் எடுத்து வெகு விமர்சியாக கொண்டாடியதாக வழக்கு தொடர்ந்தார். 


பொதுவான ஒரு அறக்கட்டளையின் நிதி பணத்தில் இருந்து எடுத்து சொந்த செலவு செய்வதும் ஊழல் தானே! இப்படி பட்ட ஒருவர் தான் உண்மையில் ஊழலை எதிர்க்க பாடுபட போகிறாரா.? இந்த வழக்கு சம்பந்தமாக அன்னா ஹசாரே பொது மக்களுக்கு கூறும் பதில்தான் என்ன?


தற்போது லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. அடுத்து அரசாங்கம் சார்பில்லாத மக்கள் பிரதிநிதியாக சிலரும் அந்த கூட்டுகுழுவில் இடம்பெறல் வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டது. அன்னா ஹசாரே தலைமையில் பத்து பேர் கொண்ட கூட்டுக்குழு தொடங்கப்பட்டது. இதில் ஐந்து பேர் அரசாங்க உறுப்பினர்கள்.!!


இவர்கள் அரசாங்கபூர்வ கூட்டங்களை நடத்தினர். இப்படி ஒரு குழு அமைக்கலாம் என்று எந்த அரசியல் சட்டம் சொல்கிறது என்று புரியவில்லை,மேலும் உண்ணாவிரதம் என்னும் போர்வையிலும் மக்கள் சக்தியை கொண்டு மிரட்டி எது வேண்டுமானால் சாதித்துவிடலாம் என்றால் அது என்ன மத்திய அரசாங்கம் அதற்கு என்ன சக்தி இருக்கிறது.? அப்படியென்றால் நாளை எனக்கொரு காரியம் ஆகவேண்டும் என்றால் உடனே நான்கு பேரை கூட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்க போனால் சரியாகிவிடுமா.?


இது கொண்டுவரப்பட்டது நல்ல நோக்கில் என்று ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில் அதை சரியானதாக செய்யமுடியும் என்று இங்கு எத்தனை பேரால் கூற முடியும்.? ஈழத்தமிழர்களை ஆதரித்தும் தமிழகத்தில் நடக்கும் பல அநீதிகளை கண்டித்தும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் பெருந்திரளாக தான் கூடுகிறார்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் அதில் எல்லாம் மத்திய அரசாங்கம் தலையிட மறுக்கிறது.?


தமிழகத்தின் சார்பில் ஈழத்தமிழருக்கு என்று எத்தனை  கூக்குரல் எழும்பி இருக்கும்.? அத்தனைக்கும் மௌனம் காத்த மத்திய அரசாங்கம் இதற்கு பயந்தார் போலும் அதற்கென சட்டம் கொண்டுவந்ததாகவும் பாசாங்கு செய்வதும் ஏன்.?


மத்திய அரசு அன்னா ஹசரேவின் புரட்சி முழக்கத்துக்கு பயந்து நடுங்குவது ஏன் என்ற ஒரு கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? ஒரு தென்னிந்தியரின் போராட்டம் இந்த அளவிற்கு தேசிய அளவில் பார்க்கப்பட்டிருக்குமா என்பதும் கேள்விக் குறியே?


உண்ணாவிரதத்தை தொடர்ந்து அன்னா ஹசாரேவை ஒரு நாயகனாகவே ஒவ்வொரு இந்தியனும் பார்க்கத் தொடங்கினான் அல்லது பார்க்கச் சொல்லி பொது புத்தியை மீடியாக்கள் தூண்டி விட்டது என்று கொள்வோம். இந்நிலையில் அன்னா ஹசாரே தலைமையிலான குழு லோக்பால் மசோதா அமைக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டது.


இதில் பிரதமரையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. மத்திய மந்திரிகள் குழு தயாரித்த லோக்பால் சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.


இவர்கள் தாக்கல் செய்த சட்டம் என்ன சொல்கிறது.? அன்னா ஹசாரேவின் பரிந்துரைகள் பலவும் எடுத்துக்கொண்ட இச்சட்டம் பிரதமர், உயர் பதவி நீதிபதிகளை விசாரிக்க மட்டும் தடை விதித்தது. இதற்கு காரணமாக மத்திய அரசு சொல்லியது அவர்களின் பதவிக்கு மரியாதை என்பதையே!! இதை அன்னா ஹசாரே மற்றும் அவரது தொடர்பாளர்கள் எதிர்த்தனர்.


இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தனது உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே தொடங்க போவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு லோக்பால் சட்டத்தை தாக்கல் செய்த அடுத்த நாளே அதை எதிர்த்து அன்னா ஹசாரே சட்ட நகலை எரித்து சாம்பலாக்கி தன் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் அவரது குழுவினரும் இத்தகைய செயலில் ஈடுபட்டனர். அவர் மேலும் மக்கள் அனைவரையும் இச்செய்கையை செய்ய வேண்டினார். 


இது அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது போல் இல்லையா.? மக்கள் அனைவரும் ஹசாரேவின் பேச்சுக்கு பெருமதிப்பு தருகிறார்கள் எனும் போது அவரின் பேச்சு இவ்வாறாக அமைவது சிறப்பானதா.? சரியான முறைப்படி அரசோடு பேச்சு வார்த்தை நடத்தவும் மக்கள் சக்தியை கொண்டு புது போராட்ட வழி முறைகளை செயற்படுத்த முடியாதா திருவாளர் ஹசாரேயால்?


இந்த ஆகஸ்ட் 16 தொடங்கபோகும் உண்ணாவிரதம் எந்தவொரு உறுதிமொழிகளிலும் அடங்கிவிடாது என்றும் அரசு உண்ணாவிரதத்துக்கு பயப்படவில்லை மக்களின் எழுச்சிக்கே பயப்படகிறது என்றும் அன்னா ஹசாரே நகல் எரிப்புக்கு பின்னர் பேசினார். 


சரி ஹசாரே அவர்களே! அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்தியாவில் இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் குரல் கொடுத்திருந்தால் ஒவ்வொரு இந்தியனும் உங்களுக்காக குரல் கொடுக்க வந்திருப்பானே பிறகு ஏன் உண்ணாவிரதம் என்னும் போலி முகமூடி? 


ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று தேசிய பிரச்சினைக்கு நீங்கள் மட்டுமே தலையைக் கொடுத்தால் சுற்றியுள்ள சக தேசத்தவர்கள் முன் நீங்கள் ஒரு ஹீரோ ஆவீர்கள் ஆனால் நம் மக்கள் அப்படியேதானே இருப்பார்கள்?


போராட்ட வடிவத்தில் இந்த தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைப்பேன் என்று நீங்கள் சூளுரைத்திருந்தால் அது புரட்சி? தாங்கள் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற அஸ்திரம் எடுத்தால் அந்த வலிமையான அஸ்திரத்துக்கு ஒரு வலிமை இல்லாமல் போய்விடும் என்று அறிந்து கொள்ள இயலவில்லையா தங்களால்?


தேசத்து பிரச்சினை இது... .நீங்கள் தலைமை கொண்டு தேசத்து மக்களை போராடச் செய்யுங்கள் ஐயா?


ஒன்றுமில்லாமல் இருந்த உங்களிடம் சிறு உரிமையை வாங்கி கொடுத்தனர் மக்கள். அதை வைத்துக்கொண்டு மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யவேண்டும் என்று யோசிப்பதை விட்டுவிட்டு நான் பரிந்துரைத்தேன் அவர்கள் ஏற்கவில்லை என்று பள்ளிக்கு அனுப்பி வைத்த சின்ன குழந்தை அழுதுகொண்டே அம்மாவிடம் சொல்வது போல எங்களிடம் திரும்ப ஓடி வந்து சொல்கிறீர்களே நாங்கள் என்ன செய்ய.?


வலுவான ஆயுதங்கள் தேவையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் அடிக்கடி எடுத்தால் அதன் வலு தேய்ந்து போய் விடும் என்பதோடு தவறான செயல் செய்பவர்களுகும் இது ஒரு கெட்ட முன்னுதாரணமாய் போய் விடும் என்னும் கருத்தை இங்கே வலுவாக பதிகிறோம்.


இந்நிலையில் 16ம் தேதி நடக்கபோகும் உண்ணாவிரதத்துக்கு அரசாங்கம் மறுப்பு தெரிவித்து மீறி நடத்தினால் ஹசாரேவை கைது செய்யும் செயலும் நடக்கும் என எச்சரித்தது. இதற்கு பாரதீய ஜனதா எம்.பி., வருண் காந்தி உண்ணாவிரதத்துக்கு என் வீட்டை தருகிறேன் என்று மு வந்துள்ளார்.  அரசியல் விளையாட்டுக்கள் எப்படி எல்லாம் நகர்கிறது என்பதை நாம் இங்கே உணர முடியும்.


நாளைய சமுதாயத்தில் தவறான ஒரு கண்ணோட்டத்தை போதிக்கவே இது போன்ற உண்ணாவிரதங்கள் வழிவகுக்கும். ஊழலை எதிர்த்து நாளடைவில் ஒரு கிளர்ச்சி  எழுந்திடகூடாது என்பதற்காக அன்னா ஹசாரே என்னும் மனிதனின் கீழ் அனைத்து மக்களும் அடங்கி போய் கிடக்கவேண்டும் என்று காங்கிரஸ் அரசு செய்யும் சதிதிட்டமாக ஏன் இது இருக்க கூடாது.? என்ற நம் சந்தேகத்தையும் இங்கே பொதுவில் வைக்கிறோம்.


நாளை இந்தியாவை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை..!! யோசனைகள் வலுக்கட்டும்.!!! பாசாங்கு இல்லாத பஞ்சோந்தி தனம் இல்லாத நலமொரு இந்தியாவை உருவாக்கிடுவோம்.!!!



அன்னா ஹாசரேவை ஆதரிக்கும் பலருக்கும் இந்தக் கட்டுரைக் கோபத்தைக் வர வைக்கலாம், ஆனால் ஒவ்வொரு விடயத்தையும் ஆழ உணர்ந்து முழுமையான விழிப்புணர்வோடு நாம் நகர வேண்டிய் அவசியத்தை  தெளிந்து சிந்திக்கும் பொறுப்பினை வாசகர்களிடம் விட்டு விட்டு ...கட்டுரையை நிறைவு செய்கிறோம்!



கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

51 comments:

தமிழா தமிழா said...

//ஹசாரே 1998 ஜூன் 15ம் தேதி தம் பிறந்தநாளை அறக்கட்டளை நிதியில் இருந்து 2லட்சம் ரூபாய் எடுத்து வெகு விமர்சியாக கொண்டாடியதாக வழக்கு தொடர்ந்தார். //

தாஜ் கோரமண்டல் அல்லது கன்னிமரா ஹோட்டலிலா பார்ட்டி வைத்து கொண்டாடி இருப்பார். இல்லை வெளி நாட்டு மது வகைகள் பரிமாறி இருப்பாரோ ?
பொது வாழ்கையில் இத்தனை வருடம் இருந்தவர் மேல் இந்த ஒரே ஒரு மொக்கை புகார் மட்டும் தான் என்பதிலேயே பதில் இருக்கிறதே அய்யா.

//இது அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது போல் இல்லையா.? மக்கள் அனைவரும் ஹசாரேவின் பேச்சுக்கு பெருமதிப்பு தருகிறார்கள் எனும் போது அவரின் பேச்சு இவ்வாறாக அமைவது சிறப்பானதா.? சரியான முறைப்படி அரசோடு பேச்சு வார்த்தை நடத்தவும் மக்கள் சக்தியை கொண்டு புது போராட்ட வழி முறைகளை செயற்படுத்த முடியாதா திருவாளர் ஹசாரேயால்?//

ஒரு ஜனநாயக நாட்டில் மசோதாவின் நகல் எரிப்பது என்பது வழக்கமான போராட்ட முறை தானே திருவாளர் கழுகாரே.

//ஒன்றுமில்லாமல் இருந்த உங்களிடம் சிறு உரிமையை வாங்கி கொடுத்தனர் மக்கள். அதை வைத்துக்கொண்டு மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யவேண்டும் என்று யோசிப்பதை விட்டுவிட்டு நான் பரிந்துரைத்தேன் அவர்கள் ஏற்கவில்லை என்று பள்ளிக்கு அனுப்பி வைத்த சின்ன குழந்தை அழுதுகொண்டே அம்மாவிடம் சொல்வது போல எங்களிடம் திரும்ப ஓடி வந்து சொல்கிறீர்களே நாங்கள் என்ன செய்ய.?//

ஒரு மனிதன் என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று இந்த மக்களுக்காக போராட வந்ததுக்கு இது தேவைதான்.

Anonymous said...

@ ஆல் கழுகு உறுப்பினர்கள் :
ஒரு சின்ன கேள்வி எல்லாரும் ..,நேர்மையா பதில் சொல்லணும் ( இது ஆர்டர் தான் ) ..,உங்களுக்கு சொந்த வீடு ,நிலம் ,தொழிற்சாலை ,போன்ற வைகள் உள்ளதா?

Anonymous said...

இதுல யார் யார் உறுப்பினர் என்று என்னக்கு சரியாய் தெரியாது ..,இந்த பதிவை எழுதிய கூர் மதியான்,Dheva நிச்சயம் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்

Anonymous said...

கடும் விமர்சங்களை எதிர் கொள்ள தயாராய் இருங்கள் .,கழுகு அண்ட் கூர்மதியான்

Anonymous said...

///// ஊழலை அழிக்க ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று ஒரு தெளிவான பின்புல காரணமற்றே மொட்டையாக
செய்திகள் பரவிற்று, மக்கள் என்னவென்று சரியாக புரிந்துகொள்ளாமல் நான்ஆதரிக்கிறேன் நான் ஆதரிக்கிறேன் என்று ஒன்றன் பின் ஒன்றாக கையை தூக்கிக்கொண்டு வரிசை கட்டினர்..! ////////

கூர் : அவராச்சும் ஊழல ஒழிக்கணும் என்ற கொள்கையோடு தெருவுல இறங்கி போராடுனார் போராடுறார் ..,நீங்க என்ன பண்ணீங்க ? இருக்கையில் அமர்ந்து கொண்டு கருத்தியல பேசுறீங்க ..,

settaikkaran said...

//மக்கள் என்னவென்று சரியாக புரிந்துகொள்ளாமல் நான்ஆதரிக்கிறேன் நான் ஆதரிக்கிறேன் என்று ஒன்றன் பின் ஒன்றாக கையை தூக்கிக்கொண்டு வரிசை கட்டினர்..!//

மிகச்சரி! பலருக்கு லோக்பால் மசோதாவின் முதல் வரைவை எழுதியதே அண்ணா ஹஜாரே தான் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. :-)

settaikkaran said...

//அன்னா ஹசாரேவை ஆதரித்து அப்போது கூட்டம் கூட்டமாக திரளாக கூடியிருந்த மக்களுக்கு அவரின் உண்ணாவிரதத்தின் உள்நோக்கம் லோக்பால் மசோதா என்பதே தெரியாமல் இருந்தது தான் உண்மை.!//

ஆனால், லோக்பால் மசோதாவின் வரைவை நிர்ணயிக்கும் குழுவில் அண்ணா ஹஜாரே குறிப்பிட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க அரசு முன்வந்ததும் அவர் உண்ணாவிரதம் வெற்றியென்று அறிவித்து விட்டார். இது எப்படி இருக்கு? :-))

settaikkaran said...

//ஊழலை எதிர்க்கும் அன்ன ஹசாரேயின் மீதும் ஒரு வழக்கு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?//

ஓரு வழக்கா? மீதம்?? நேற்றுக்கூட ஜல்காவ் என்ற ஊரில் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜரானார் தெரியுமா?

எந்த சுரேஷ்தாதா ஜெயினை பதவியிலிருந்து விலக்க அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தாரோ, அதே சுரேஷ்தாதா ஜெயின் அண்ணா ஹஜாரேயின் ஊழலையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். இருவரது ஊழல்களையும் நீதிபதி.P.B.சாவந்த் தனது அறிக்கையில் சமர்ப்பித்துள்ளார். சுரேஷ்தாதா ஜெயின் பதவி விலகினார். அண்ணா என்ன செய்தார்?

settaikkaran said...

//ஹேமந்த் கோலேகர் என்பவர் ஹசாரே 1998 ஜூன் 15ம் தேதி தம் பிறந்தநாளை அறக்கட்டளை நிதியில் இருந்து 2லட்சம் ரூபாய் எடுத்து வெகு விமர்சியாக கொண்டாடியதாக வழக்கு தொடர்ந்தார்.//

ஹேமந்த் கோலேகர் அண்ணா மீது தொடுத்த புகாரை திரும்பப்பெற்றதால், கடந்த 13-07-11 அன்றுதான் அந்த வழக்கிலிருந்து அண்ணா ஹஜாரே விடுவிக்கப்பட்டார்.

settaikkaran said...

//இது அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது போல் இல்லையா.?//

நெத்தியடிக் கேள்வி! முன்னாள் அட்வகேட் ஜெனரல் சாலி ஸொராப்ஜி அண்ணா ஹஜாரே மசோதாவின் வரைவை எதிர்த்ததை "Smack of intolerance" என்று கண்டித்திருக்கிறார்.

settaikkaran said...

அண்ணா ஹஜாரேவுக்கு முன்னரே, அக்டோபர் 2010-ல் ஷம்பு தத்தா என்ற 93 வயது காந்தீயவாதி உண்ணாவிரதம் இருந்தார். ஏன் என்று எந்த ஊடகமும் கேட்கவில்லை. இத்தனைக்கும் அந்த ஷம்பு தத்தா பல அரசியல்வாதிகளின் மீது பல வழக்குகளைத் தொடர்ந்து நடத்திக்க்கொண்டிருக்கிறார். திடீரென்று ஊடகங்கள் அண்ணா ஹஜாரேவுக்கு இத்தனை விளம்பரம் கொடுப்பதற்கு இந்தியாவின் பழம்பெரும் இரண்டெழுத்துத் தொழில்நிறுவனம் தான் காரணமென்று பல ஆங்கில தளங்களில் எழுதுகிறார்கள்.

கூட்டத்தோடு கோவிந்தா போடாமல், யாரும் கேட்கத் தயங்கும் கேள்விகளைத் துணிவாகக் கேட்டிருக்கும் கழுகை மனமாறப்பாராட்டுகிறேன்.

கழுகு said...

நன்றிகள் சேட்டைக்காரன்....!

நரி @ வணக்கம் நண்பரே. தங்களின் கேள்விகளுக்கு எமது தோழர் சேட்டைக்காரன் கூட பதில் கொடுக்கக் கூடும்..தயங்காமல் தங்கள் கேள்விகளை எழுப்புக.....

settaikkaran said...

அண்ணா ஹஜாரேயின் இணையதளத்தில் ’annahazare.org' அவர் ராணுவத்தில் ஒரு soldier-ஆகப் பணிபுரிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் பணிபுரிந்தது ஒரு டிரைவராக! அவர் 1963 முதல் 1975 வரை ராணுவத்தில் பணியாற்றியிருப்பதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு பென்ஸன் கிடைக்கிறது என்பது விதிமுறைகளுக்குப் புறம்பானது. மேலும் அவர் குறிப்பிட்ட தினத்தில் எந்த விமானத்தாக்குதலும் நிகழ்ந்ததற்கு ஆதாரமில்லை. அவரது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது மருமகன் இப்போது ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் ஜில்லா பரிஷத்(மாவட்ட கமிட்டி)யில் இருக்கிறார். முன்பு காங்கிரஸில் இருந்தார்.
19750ல் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தவருக்கு அந்த வருடமே அரசிடமிருந்து நிதி சென்றிருக்கிறது என்பதும் விதிமீறல் தான். இன்னும் குறைந்தது இருபது இருபத்தைந்து கேள்விகள் எனக்கு உள்ளன. ஆகவே....

அண்ணா ஹஜாரேயைக் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில் இந்திய ராணுவம், மஹாராஷ்டிர வருவாய் மற்றும் நீர்ப்பாசனத்துறை, மத்திய கிராம அபிவிருத்தி வாரியம் ஆகியவற்றில் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறேன். எனது சந்தேகங்கள் உண்மையாக இருப்பின், அவற்றை வெளியிடுவேன்.

கழுகு said...

சேட்டைக்காரன் @ சபாஷ்!!!!!

எல்லா விடயங்களையும் இயன்ற வரையில் பொதுவில் பகிருங்கள் தோழமை!!!! அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

settaikkaran said...

மாநில அரசிடமிருந்து கிராம அபிவிருத்திக்கென்று நிதியை வாங்கியவர், அதை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குச் செலவழித்திருப்பது கேவலத்திலும் கேவலம். இவருக்கெல்லாம் ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது...?

Anonymous said...

@ சேட்டை :
இந்த பதிவு அன்னா ஹாசரே பற்றியது ..,அல்லது லோக் பால் மசோதாவை பற்றியtha?

தமிழா தமிழா said...

//ஆனால், லோக்பால் மசோதாவின் வரைவை நிர்ணயிக்கும் குழுவில் அண்ணா ஹஜாரே குறிப்பிட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க அரசு முன்வந்ததும் அவர் உண்ணாவிரதம் வெற்றியென்று அறிவித்து விட்டார். இது எப்படி இருக்கு? :-))

அவர் உண்ணாவிரதம் இருந்ததே லோக்பால் குழுவில் சிவில் சொசைட்டி மெம்பர்களும் இடம் பெற வேண்டும் என்பதற்க்காகத்தான். அரசு முன்வந்ததும் அவர் உண்ணாவிரதம் வெற்றி தான்.

settaikkaran said...

கழுகு நிர்வாகத்துக்கு! நான் கோரிய தகவல்கள் வரட்டும்! அதை pdf கோப்புகளாய் மாற்றி அனைவருக்கும் அளிப்பதாய் இருக்கிறேன். விரைவில் P.B.சாவந்த் கமிட்டியின் அறிக்கையின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பை அனைவரின் பார்வைக்கும் வழங்குவேன்.

Anonymous said...

/// அவர் உண்ணாவிரதம் இருந்ததே லோக்பால் குழுவில் சிவில் சொசைட்டி மெம்பர்களும் இடம் பெற வேண்டும் என்பதற்க்காகத்தான். அரசு முன்வந்ததும் அவர் உண்ணாவிரதம் வெற்றி தான் //////

athae athae ..,

Anonymous said...

@ Settai
ஒரு சின்ன கேள்வி எல்லாரும் ..,நேர்மையா பதில் சொல்லணும் ( இது ஆர்டர் தான் ) ..,உங்களுக்கு சொந்த வீடு ,நிலம் ,தொழிற்சாலை ,போன்ற வைகள் உள்ளதா?

settaikkaran said...

நான் அதிகம் படிக்காதவன். மிகச் சாதாரணமான வேலையில் இருப்பவன். எனக்கென்று சொந்தமாக எட்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய இருசக்கர வாகனமும், கொஞ்சம் கடனும் தான் இருக்கிறது. :-)))

Anonymous said...

@ சேட்டை : என்னோட Kelvi முதல்ல நாம ஒழுங்கா இருக்கோமா ?

தமிழா தமிழா said...

இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை யார் செய்ய வேண்டும் என்று சேட்டைக்காரன் நினைக்கிறார்.

Prabu Krishna said...

கட்டுரையை படித்த போது கூர்மதியன் மீது கோபம வந்தது. ஆனால் "சேட்டைகாரன்" கூறியுள்ள விளக்கம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. லோக்பால் வந்தாதான் சொல்ல முடியும்.

Anonymous said...

இருக்கற ஒருவர் தைரியமா போராடுறார் அவரையும் புடிச்சி இது ஊழல் ,அது இதுன்னு தூக்கி போட்டுடுங்க ?அதே காந்தி கூட இர்வின் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பகத் சிங்க் தூக்கு தண்டனை தடுத்து இருக்கலாம் ? அப்போ அவரும் கெட்டவரா ? இந்திரா காந்தி எமேர்கேன்சி கொண்டுவந்தார் அப்போ அவரும் கெட்டவரா ? பொது வாழ்கையில் ஈடுபடும் பொது .,அது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் என்றால் அரசாங்கம் அதை நசுக்குவதற்கு என்ன வேணாம் செய்யும் ..,

settaikkaran said...

//பனங்காட்டு நரி சொன்னது…

@ சேட்டை : என்னோட Kelvi முதல்ல நாம ஒழுங்கா இருக்கோமா ?//

நான் ஒழுங்கானவனா இல்லையாங்குறது பிரச்சினையில்லை. நான் ரொம்ப உலகமகா உத்தமன்னு பீத்திக்கிட்டுத் திரிஞ்சா இந்த கேள்வி எனக்குப் பொருத்தமாயிருக்கும்னு நினைக்கிறேன். :-))

Anonymous said...

//////நான் ஒழுங்கானவனா இல்லையாங்குறது பிரச்சினையில்லை. நான் ரொம்ப உலகமகா உத்தமன்னு பீத்திக்கிட்டுத் திரிஞ்சா இந்த கேள்வி எனக்குப் பொருத்தமாயிருக்கும்னு நினைக்கிறேன். :-))//////

இத யாருக்கு சொல்றீங்கனு தெர்ல ..,niraiyabathil tharuvaen ..,wait

settaikkaran said...

//தமிழா தமிழா சொன்னது

இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை யார் செய்ய வேண்டும் என்று சேட்டைக்காரன் நினைக்கிறா//

நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணுறதில்லை. ஏற்கனவே சொன்னாமாதிரி சட்டத்தை உபயோகிச்சு சில விசயங்களைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்யுறேன்.

ஊழலை ஒழிக்க நாம கேள்வி கேட்க ஆரம்பிக்கணும்! யாரோ வந்து முன்னாலே நிப்பாங்க, அவங்க முதுகுக்குப்பின்னாலே நின்னுக்கிட்டு நாம கேள்விகேட்கலாம்னு என்னாலே நினைக்க முடியலீங்க! நாம கேள்வி கேட்காம இருந்தா ஆயிரம் லோக்பால் வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது.

நண்பர்களே! நாளைக்கு நேரம் கிடைச்சா மறுபடியும் வர்றேன். நன்றிங்க!

Anonymous said...

///// பலே பிரபு சொன்னது…
கட்டுரையை படித்த போது கூர்மதியன் மீது கோபம வந்தது. ஆனால் "சேட்டைகாரன்" கூறியுள்ள விளக்கம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. லோக்பால் வந்தாதான் சொல்ல முடியும்.//////



பிரபு ,அழகா தர்க்கமும்,வாதமும் .,எழுத்தும் வந்தா ஈழ படுகொலையையே நியாபடுத்த முடியும் ..,

settaikkaran said...

//பனங்காட்டு நரி சொன்னது…

இத யாருக்கு சொல்றீங்கனு தெர்ல ..,niraiyabathil tharuvaen ..,wait//

சந்தேகமே வேண்டாம். அண்ணா ஹஜாரேயைப் பத்தித்தான் பேசிட்டிருக்கோம். அப்பாலே, எனக்கு வேலை முடிஞ்சு கிளம்பிட்டிருக்கேனுங்க! முடிஞ்சா நாளைக்கு வாறேன். நன்றிங்கண்ணா!

கழுகு said...

ஒரு மனிதர் போராடுகிறார் என்ற உணர்சியின் அடிப்படையிலேயே ஒட்டு மொத்த தேசமும் பார்க்கிறதேயன்றி...அதன் வேறு கோணங்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

நரி கேட்பது போல அவர் போராடினார் நீ செய்தாயா என்பதுதானா தெளிவான பார்வை?

நாம் செய்தால் இப்படி கவனிக்கப்பட மாட்டோம் என்பதுதான் நமது பார்வை. தமிழக்த்தில் தீக்குளித்து இறந்த்தான் எம் சகோதரன் முத்துக்குமார்....என்ன செய்தது மத்திய மாநில அரசுகள்....

ஊழலுக்குகாக போரடுவதை விட அதிபயங்கரமான தலையாய விடயம் உயிருக்காக போராடுவது. தேசத்தினை ஆண்ட காங்கிரஸ் என்ன முயற்சிகள் செய்தது. ஈழத்தில் நடாத்தப்பட்ட கொடும் போரினை நிறுத்த....

ஈழம் அண்டை நாட்டுப் பிரச்சினை என்ற சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்....! அண்டை நாட்டு பிரச்சினை என்றால் நீ ஏனய்யா ஆயுதங்களையும் கொடுத்தும் திட்டங்களை தொகுத்துக் கொடுத்தும் உதவினாய்? குறைந்த பட்சம் அதை நிறுத்தியிருக்கலாமே?

ஒரு தலைவன் அவன் போராடுவான்... நாம் வாழ்க ஒழிக என்று கோசமிடுவோம் என்ற ஸ்டார் இமேஜை கொடுக்கும் போராட்ட வழிமுறைகளால் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிப் பிடித்து காட்டும் மீடியாக்கள்..

ஆனால் சாமனியனுக்கு என்ன அரசியல் விழிப்புணர்வு கிடைக்கும் அதனால்....

கங்கை நதி மாசுபடுகிறது என்று மனிதன் உண்ணாவிரதம் இருந்த்து தவறான மருத்துவத்தால் உயிர் துறந்த்தான்....அவரைப் பற்றி ஏன் என் தேசம் சிந்திக்கவில்லை. அவரை ஏன் மீடியாக்கள் போகஸ் செய்யவில்லை...

உண்ணாவிரதம் என்பதை ஒரு பயமுறுத்தும் பொருளாக எடுத்துக் கொண்டு ஊழலை எதிர்ப்பதற்கு அன்னா ஹசரே மட்டும்தான் செயல்படுவார்...........மற்ற தேசத்து இந்தியன் எல்லாம் கை கட்டி பின்னால் அணிவகுத்து விட்டு பின் தத்தம் வேலைகளை பார்க்கச் செல்லட்டும்...

புரட்சி என்பது பற்றிப் பரவுவது என்று அறிக; அது ஒரு மனிதரிடமோ ஒரு இயக்கத்திடமோ தேங்கி நிற்பது அல்ல...

அன்னா ஹசரேயின் முன்னெடுப்புக்களை பாராட்டும் ஒவ்வொருவரும்...இதன் பின்ணனிகளையும் ஆழமாக அறிந்த்து கொள்வதில் தவறேதும் இல்லையே...!

தோழர் சேட்டைக்காரன் கொடுத்திருக்கும் தகவல்களுக்கு மீண்டும் ஒரு முறை கழுகு தனது பாராட்டுக்களை சமர்ப்பிக்கிறது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

வெங்கட் said...

// கழுகு சொன்னது…

நரி @ வணக்கம் நண்பரே. தங்களின் கேள்விகளுக்கு எமது தோழர் சேட்டைக்காரன் கூட பதில் கொடுக்கக் கூடும்..தயங்காமல் தங்கள் கேள்விகளை எழுப்புக..... //

கோத்து விடறது.. கோத்து விடறதுன்னு
சொல்வாங்களே.. அது இதானா..?!!

:)

கழுகு said...

வெங்கட்...@ கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்பவரை அடையாளம் காட்டுதல் கோர்த்து விடுதலா?

தங்களின் ஹாஸ்ய உணர்வினுக்கு பாராட்டுக்கள்!

Enfielder said...

பிரதமரும் நீதிபதியும் கூட இந்தியாவின் குடிமக்கள் தானே ? அவர்களை சேர்ப்பதில் என்ன தவறு ?

இந்தியாவில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடக்க எவரேனும் முயற்சி செய்தால் உடனே அவர்களை குற்றம் சாட்டும் பழக்கத்தை எப்போது விட போகிறீர்கள் ?

லோக்பால் மசோதா கொண்டு வர இன்னொரு காந்தி பிறக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா ?

இதில் எதற்கு தென் இந்தியாவை தனியாக பிரிகிறீர்கள் ?

முதலில் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் இணைப்பை பார்க்கவும்

http://youtu.be/2CHcKlIsvAQ

Anonymous said...

@சேட்டை : ஒருத்தர் நல்லது பன்றாருணா அவரோட பயோ டேட்டா தெரிஞ்சி தான் ஆகணுமா என்ன ..,ரோட்ல ஒருத்தன் அடிபட்டு விழுந்து கிடக்குறான் அந்த பக்கமா போனவன் அவர காப்பாத்தா ட்ரை பண்றான் ..,அந்த சமயத்துல நீ எதுனா தப்பு பண்ணியிருக்கியா ? ஊழல் செய்ஞ்சி இருக்கியா ? கேட்டுட்டு உதவி செய்யணுமா என்ன ..,இப்போ நம்ம நாடு இருக்கிற நிலமையில இது மாதிரி ஒரு ஆள் அரசியல் வாதிகளுக்கும் ,அரசாங்கத்துக்கும் பயத்த உண்டு பண்றார்னா அவரையும் இது சொத்தை ,இது நொல்லைன்னு சொல்லி அவரையும் வீட்ல உக்கார வச்சிடுங்க .,நாடு நாசமா போவட்டும் .,

settaikkaran said...

//பனங்காட்டு நரி சொன்னது…

@சேட்டை : ஒருத்தர் நல்லது பன்றாருணா அவரோட பயோ டேட்டா தெரிஞ்சி தான் ஆகணுமா என்ன ..,ரோட்ல ஒருத்தன் அடிபட்டு விழுந்து கிடக்குறான் அந்த பக்கமா போனவன் அவர காப்பாத்தா ட்ரை பண்றான் ..,அந்த சமயத்துல நீ எதுனா தப்பு பண்ணியிருக்கியா ? ஊழல் செய்ஞ்சி இருக்கியா ? கேட்டுட்டு உதவி செய்யணுமா என்ன ..,இப்போ நம்ம நாடு இருக்கிற நிலமையில இது மாதிரி ஒரு ஆள் அரசியல் வாதிகளுக்கும் ,அரசாங்கத்துக்கும் பயத்த உண்டு பண்றார்னா அவரையும் இது சொத்தை ,இது நொல்லைன்னு சொல்லி அவரையும் வீட்ல உக்கார வச்சிடுங்க .,நாடு நாசமா போவட்டும் .,//

உங்க உதாரணத்துக்கே வாறேன்! ரோட்டுலே ஒருத்தன் அடிபட்டுக்கிடக்குறான். ஒருத்தர் தூக்க வர்றாரு! அதைப் பார்த்திட்டு இன்னொருத்தரும் தூக்க வர்றாரு! ’நீ எதுக்குத் தூக்க வர்றே? இது என் வேலை. நீ கிட்டத்துலே நெருங்கக்கூடாது,’ன்னு முதல்லே தூக்க வந்தவரு சொல்லுறாரு! ஏன்? எல்லாப் பெயரும் தனக்கே கிடைக்கணுமுங்குற பேராசை! அதுனாலே தான் பெருநஷ்டத்துலே முடியப்போவுது இது!

அப்பாலே அவராலே தூக்க முடியலே; "ஐயோ, என் ஒருத்தனாலே தூக்க முடியலே; எல்லாரும் வாங்கோ வாங்கோன்னு கூப்பாடு போடுறாரு!

ராலேகாவ் சித்தி கிராமத்துலே இருக்கிறவங்களுக்கே லோக்பால்-னா என்னான்னு தெரியலேன்னு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுலே போட்டிருந்தாங்க! சும்மா சென்னை, பெங்களூரு, மும்பைன்னு போக்கு காட்டி இங்கிலீஷ்லே பேசுறவங்களையும் மேல்தட்டு வர்க்கத்தையும் வச்சு என்ன பண்ண முடியும்?

அரசாங்கத்தைத் தனிமைப்படுத்த, எதிர்க்கட்சிகளை ஒண்ணா சேர்க்க அண்ணாவுக்குக் கிடைச்ச அருமையான வாய்ப்பை எதையெதையோ பேசி மனுசன் கெடுத்திட்டாரு!

நாடு நாசமாப் போகாது; போனா அதுக்கு ஒத்தாசை பண்ண வந்தவனை விரட்டினவங்களும் ஒரு காரணம்னு பின்னாலே சரித்திரத்துலே சொல்லுவாங்க!

அப்பாலிக்கா, நானே என்னோட தமிழ் வலைப்பதிவுலும், புதுசா ஆரம்பிச்சிருக்கிற ஆங்கிலப்பதிவுலும் அண்ணா ஹஜாரேயைப் பத்தி நிறைய எழுதிட்டிருக்கேன்.

இங்கே இத்தோட முடிச்சுக்கிறேன். நன்றிங்கண்ணா! :-))

Anonymous said...

///// நரி கேட்பது போல அவர் போராடினார் நீ செய்தாயா என்பதுதானா தெளிவான பார்வை? /////

@ கழுகு : இதற்க்கு என்னால் காத்திரமான மொழியில் விமர்சிக்க முடியும் ..,போலவே தாங்கள் எடுத்து கொண்டுள்ள பணி சிறப்பானது என்ற ஒரே காரணத்திற்காக மொழி மட்டுபடுகிறது.
நான் கேட்பது ..,எழுத்தின் மூலம் அல்ல ..,செயலில் .என்னுடைய முதல் மறுமொழிக்கு இன்னும் யாரும் பதில் சொல்ல வில்லை ..,எதற்கு கேட்டேன் என்றால் எத்தனை பேர் ( கூர்மதியான் உட்பட ) தங்கள் சொத்தை விற்கும் போது அரசாங்கம் சொல்லும் பதிவு பத்திரம் வாங்குகிறார்கள் என்பதற்காக தான் .அதுவே கருப்பு பணத்துக்கு வழிவகுக்கும் . குற்ற சாட்டுகளுக்கு பயந்தால் எந்த போராட்டமும் வெற்றி பெற முடியாது .

Anonymous said...

///// உங்க உதாரணத்துக்கே வாறேன்! ரோட்டுலே ஒருத்தன் அடிபட்டுக்கிடக்குறான். ஒருத்தர் தூக்க வர்றாரு! அதைப் பார்த்திட்டு இன்னொருத்தரும் தூக்க வர்றாரு! ’நீ எதுக்குத் தூக்க வர்றே? இது என் வேலை. நீ கிட்டத்துலே நெருங்கக்கூடாது,’ன்னு முதல்லே தூக்க வந்தவரு சொல்லுறாரு! ஏன்? எல்லாப் பெயரும் தனக்கே கிடைக்கணுமுங்குற பேராசை! அதுனாலே தான் பெருநஷ்டத்துலே முடியப்போவுது இது! ///////

சேட்டை அருமையான விளக்கம் ..,இத்தனை வயசு கிழவன் ..,காடு வா வாங்குது ..,இந்த வயசுல இப்படி பேராசை இருக்குமா என்ன ? சரி இருக்குனே வச்சிக்குவோம் ...,அந்த ஆள் பேராசை காரன் தான் ..,அந்த பலன அறுவடை செய்ய போறது யாரு ? என்னக்கு தான் தட்டி தூக்கிட்டு அரசாங்கத்து எதிரா போராடுற வக்கு இல்ல ..,ஒருத்தன் பண்றான் ..,அவருக்கு சப்போர்ட் பண்றத விட்டுட்டு இது நொள்ளை ,நொட்டு ,நொசுக்கு சொல்லிடு இருந்தா நாடு விளங்கிடும் .,

settaikkaran said...

//பனங்காட்டு நரி சொன்னது…

இத்தனை வயசு கிழவன் ..,காடு வா வாங்குது ..,இந்த வயசுல இப்படி பேராசை இருக்குமா என்ன ?

அண்ணே, இது கண்டிப்பா லாஸ்ட்டுண்ணே! :-))

கிழவன்னா பரிதாபப்படணும்னா, இந்தியாவுலே நிறைய பேருக்குப் பரிதாபப்படணுண்ணே! பெரிய வெவகாரங்கள்லே முக்கிய புள்ளிங்கள்ளாம் வயசானவங்க தான். உதாரணம், கல்மாடி, எடியூரப்பா...இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்.

//அந்த பலன அறுவடை செய்ய போறது யாரு ? என்னக்கு தான் தட்டி தூக்கிட்டு அரசாங்கத்து எதிரா போராடுற வக்கு இல்ல ..,ஒருத்தன் பண்றான் ..,அவருக்கு சப்போர்ட் பண்றத விட்டுட்டு இது நொள்ளை ,நொட்டு ,நொசுக்கு சொல்லிடு இருந்தா நாடு விளங்கிடும்//

அப்போ, அண்ணா ஹஜாரே இல்லாட்டா நாடு விளங்காதா? சரிண்ணே, நீங்க சொன்னா சரிதான்! வர்ட்டா...? :-)

Anonymous said...

////// ராலேகாவ் சித்தி கிராமத்துலே இருக்கிறவங்களுக்கே லோக்பால்-னா என்னான்னு தெரியலேன்னு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுலே போட்டிருந்தாங்க! சும்மா சென்னை, பெங்களூரு, மும்பைன்னு போக்கு காட்டி இங்கிலீஷ்லே பேசுறவங்களையும் மேல்தட்டு வர்க்கத்தையும் வச்சு என்ன பண்ண முடியும்? //////

நீங்கள் சொல்வது போல் ஒரு போராட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் தெரிய வேண்டிய அவசியத்தை போராட்டம் மூலமாக தான் சொல்லமுடியும்.இங்க ஹை கோர்ட் வாசல்ல அங்கயே உண்டு ,படுத்து ,புணர்ந்து வாழ்கையை நடத்தும் மக்களுக்கு இத பத்தி தெரியுமா தெரியாது .ஒரு உதாரணம் ..,தீண்டாமைய பத்தி இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் யாராவது எதிர்த்தார்களா ( காந்தி ,பாரதி ..,இன்னும் சரியாய் யார் தெர்ல ) அம்பேத்கர் வந்து தான் போராட்டத்தை முன்னெடுத்து சென்றார் ..,படிப்பறிவு இல்லாத ஒடுக்கப்பட்டவர்களுக்கு புறக்கணிப்பு என்பது நம் மீது திணிக்கப்படும் வன்முறைன்னு அப்போ தான் தெரிஞ்சது.அது மாதிரி இதுவும் காலபோக்குல ராலேகாவ் சித்தி கிராமத்துக்கு தெரிய வரும்.

Anonymous said...

நீங்கள் சொல்லும் பேராசைக்காரர்கள் :

காந்தி : நேரு ,சுபாஷ் ,மௌலானா ,காபா காந்தி ,வினோபா ,படேல் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை புறந்தள்ளிவிட்டு வரலாற்றில் தன் பெயரை இணைத்து கொண்டார்.

நேரு : அடுத்து வரும் ஆட்சி இதை செய்து விட்டால் என் பெயர் கலங்கமாகிவிடும் என்று பேராசைகாரர் நேரு அவர்கள் கனரக தொழிற்சாலைகளை நிறுவி நாட்டை தொழில் துறையில் முன்னேற்றினார்

இது மாதிரி நிறைய சொல்லிடு போய்டே இருக்கலாம் சேட்டை சார் .

Anonymous said...

தமிழன் நினைக்கிற மாதிரி .,மூணு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து லெமன் சூசு குடிச்சிட்டு போற உண்ணாவிரதம் மாதிரி தெரியல ..,சேட்டை

Anonymous said...

///// புரட்சி என்பது பற்றிப் பரவுவது என்று அறிக; அது ஒரு மனிதரிடமோ ஒரு இயக்கத்திடமோ தேங்கி நிற்பது அல்ல.../////

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ...,அந்த அக்னி குஞ்சாக அன்னா ஹசாரே இருக்கட்டுமே

Anonymous said...

///// புரட்சி என்பது பற்றிப் பரவுவது என்று அறிக; அது ஒரு மனிதரிடமோ ஒரு இயக்கத்திடமோ தேங்கி நிற்பது அல்ல.../////

அந்த தீயை யார் மூட்டுவது ?

Anonymous said...

மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.

உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.

மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.

ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.

பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.

ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.

ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

நன்றி : இட்லி வடை

Anonymous said...

//// அப்போ, அண்ணா ஹஜாரே இல்லாட்டா நாடு விளங்காதா? சரிண்ணே, நீங்க சொன்னா சரிதான்! வர்ட்டா...? :-)////

விளங்குமோ ,விளங்காதோ ..,அது ரெண்டாவது விஷயம் ஆனா இவர் மாதிரி எத்தனை பேர் தெருவுல இறங்கி போராடுவாங்க .,அர்விந்த் கேஜ்ரிவால் ,பிரஷாந்த் பூஷன் ,ஷாந்தி பூஷன் ,ஜஸ்டிஸ் சந்தோஷ் ஹெக்டே ,கிரண் பேடி.

naren said...

By lokpal, corruption cannot increased.The corruption can decreased.
then why canyou against lokpal?

Anonymous said...

@naren

yes it is true ..,but i don t know what happened to KAZHUGU and settai

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு.

aotspr said...

நல்ல கருத்து.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.co

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes