இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது....
எப்போதோ பெய்து முடித்த
பெருமழை விட்டுச் சென்ற சிறுதுளிகள்...
மழையின் கடைசிச் சுவட்டினை
இரசிக்க மறுத்து அழுந்த உதடு பதிக்கும்
மதுக் கோப்பைகளுக்குள் சுருண்டு கிடக்கும்
இராஜ திரவகத்தின் அக்னிகளில்
மண்டியிட்டுக் கிடக்கிறது மானுட மூளைகள்..!
எதார்த்த உலகில் எழுதுகிறோமோ இல்லையோ ஆனால் எகத்தாளமாய் ஒரு ஆர்ப்பாட்டம் ஆடத்தெரிந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. எழுத்தின் ஓசைகள் மானுட மூளைகளுக்குள் சென்று பரப்பிப் போடும் செய்திகளை விட, எழுதாமலேயே ஓராயிரம் பேரிடம் முகஸ்துதி பாடி உரக்க சப்தமிட்டு, தொடை தட்டி கூட்டம் சேர்த்து தன்னை ஆயிரத்தில் ஒருவனாய் காட்டிக் கொள்ளும் போக்கில் சப்தமான எழுத்துக்குச் சொந்தக்காரனாக மமதைகள் கொள்ளலாம் போலிருக்கிறது.
வாழ்க்கையின் ஓட்டத்தில் அதிர்வுள்ள ஆழமான எழுத்துக்களை சமர்ப்பிக்கிறோமோ இல்லையோ ஆனால் தன்னை வலுவேற்றிக் கொள்ள கூட்டங்களில் சேர்ந்து கொண்டு சிலரின் புறங்கைகளை முத்தமிட்டு ஒரு விற்பன்னனாய் காட்டிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
பகட்டும் போலிகளும் காலமெல்லாம் மானுடரை கவர்ந்திழுத்திருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு சீரழித்திருக்கிறது என்பதும் உண்மை. ஒரு படைப்பாளி தனித்தன்மையுடன் மேலோங்கி வருவதற்கு சீரான சில ஒத்திசைவு சப்தங்களை கச்சேரிகளின் மூலைகளில் அமர்ந்து வாசிப்பது போலவும், அசிங்கங்களை பார்த்து வாழ்க மற்றும் ஒழிக என்று கூச்சமில்லாமல் கத்த வேண்டியிருக்கிறது.
எழுத்துக்கள் என்னவென்று அறிவிக்க எழுத்துக்களை கடந்த சுவரொட்டி விளம்பரங்களும் ஆயிரம் கூழைக் கும்பிடுகளும், மனிதர்கள் முன் ஓடி ஓடி சென்று செய்யும் நவநாகரீக மார்க்கெட்டிங் உத்திகளும் தத்தம்மை பற்றிய தம்பட்ட முரசறிவிப்புகளுமே சரியான பணியை செய்துவிடும் இக்காலக்கட்டத்தில் நல்ல எழுத்து எது என்று வாசிப்பாளன் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து எது வழங்கப்படுகிறதோ அல்லது எது சுவாரஸ்யப்படுத்துகிறதோ அதுவெல்லாம் நல்லது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பேதமைக் கறைகளை எந்த சுண்ணாம்பு வைத்து அடித்துத் தீர்ப்பது என்ற கவலையிலேயே படைப்பாளிகளில் பலர் தம்முள் தாமே சுருண்டு போய் மடங்கிக் கிடப்பது தற்காலிகமாக ஆர்ப்பாட்ட எழுத்தரசியலுக்கு வசதியாக இருக்கலாம் ஆனால் நல்ல மானுட சமுதாயம் அமைய அது எள் அளவும் உதவாது.
காலங்கள் கடந்தும் பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும், பேசிக் கொண்டிருக்க காரணம் வரலாற்றினை எதார்த்தமாக்கி கையில் கொடுக்க திரு. கல்கி அவர்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை. சராசரி மனிதனை யோசிக்க வைத்து தன்னுள் ஈர்த்து பத்திரப்படுத்தி அவனை சிந்திக்க வைக்க வேண்டும் நல்ல எழுத்துக்கள் மாறாக.....உணர்ச்சியைத் தூண்டி மூளையைக் கற்பழித்து வார்த்தைகளுக்குள் விரசத்தை தூவி விட்டு....ஒரு மோப்ப நாயாய் மாறவைக்குமெனில் முரண்பட்ட சமுதாயம் உருவாகத்தானே செய்யும்.....?
எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து தன்னை நகர்த்திச் செல்லாமல் முகஸ்துதிகளிலும், மனிதக்கூட்டுகளைச் சேர்ப்பதாலும் வியாபாரத்தை சூடாக காட்டிக் கொள்வதிலும் எழுப்பப்படும் சீட்டுக் கட்டு கட்டிடங்கள்.....வேண்டுமானால் தற்காலிகமாக உயரங்களைக் காட்டலாம் ஆனால் சரிந்து விழப்போவது என்பது இயற்கையின் விதி...!
இந்த கட்டுரையின் மூலம் வாசிப்பனுபவத்தை எய்திய அன்பர்கள் அத்துனை பேருக்கும் வேண்டுகோளாய் விரிவது யாதெனில் நல்ல கட்டுரைகளை யாதொரு மனக்கிலேசமும் இல்லாமல், யாதொரு பாகுபாடும், யாதொரு நிர்ப்பந்தமும் இல்லாமல் எங்கு பார்த்தாலும் ஆதரியுங்கள்....!
ஒரு கணம் சிந்திக்கவோ, ஒரு கணம் சப்தமாய் சிரிக்கவோ, ஒரு கணம் ஆழமாய் மெளனித்துக் கிடக்கவோ, ஒரு கணம்...உங்களை எழுதத் தூண்டவோ, ஒரு கணம் புதிய செய்திகளால் உங்களை நிரப்பிப் போடவோ, ஒரு கணம் உங்களின் நேரத்தை அழகாக பொழுதுபோக்காகவோ அந்த எழுத்து உதவி இருக்கலாம்.......!
தெரிந்தவர் தெரியாதவர் அறிந்தவர் அறியாதவர், நேரில் சந்தித்தவர் சந்திக்காதவர், சாதி, மதம் என்று எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு......தங்களின் பெருங்கருணையால் நல்ல எழுத்தாளர்களை ஆதரியுங்கள் நல்ல எழுத்துக்களை வாசியுங்கள் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக் கொண்டு கட்டுரை தற்காலிகமாக வாய் மூடிக் கொள்கிறது.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
6 comments:
நல்ல கட்டுரை . எழுத்துலகு பற்றி .. \\முகஸ்துதிகளிலும், மனிதக்கூட்டுகளைச் சேர்ப்பதாலும் வியாபாரத்தை சூடாக காட்டிக் கொள்வதிலும் எழுப்பப்படும் சீட்டுக் கட்டு கட்டிடங்கள்.....வேண்டுமானால் தற்காலிகமாக உயரங்களைக் காட்டலாம் ஆனால் சரிந்து விழப்போவது என்பது இயற்கையின் விதி...!//
காலத்தில் நிற்க்கபோவதில்லை இவை ...
@ கழுகு : ஒரு எழுத்தாளனின் ஆகா சிறந்த படைப்பு எதுவாகிலும் அதை தன் இடக்கையால் புறக்கணிக்கும் முழு உரிமை வாசகனுக்கு உண்டு # ஜெயமோகன்
நல்ல பதிவு.
உங்களது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
@தேவா
உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசிப்பவள், அந்த உரிமையில் சில வார்த்தைகள்...
தமிழன் என்று மார்தட்டி கொள்ளும் எத்தனை பேர் நல்ல(சரியான) தமிழை பேசுகிறார்கள்? எழுதுகிறார்கள் ?விடை சொற்பமே?!!
தமிழை மொழி என்று மட்டும் பார்க்காமல் அதை சுவாசமாக கொள்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் நீங்கள்.
புரட்சிகரமான எழுத்தை படிக்கும் போது நமக்குள்ளும் அந்த உணர்வு எழும் என்பது வெற்று புகழ்ச்சி இல்லை, உண்மை.
நெல்லை பதிவர் சந்திப்பின் போது மேலே பின்னூட்டம் இட்ட ரத்னவேல் ஐயா அவர்கள் என்னிடம் கூறினார்கள் 'தேவாவின் 200 வது போஸ்ட் அவசியம் படியுங்கள், அற்புதமான பதிவு'என்று ! இதை விட, ஒரு நல்ல எழுத்திற்கு வேறு என்ன வேண்டும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு !!
@கழுகு -
நல்ல வாசகனுக்கு வேண்டுகோள் விட வேண்டும் என்று கூட இல்லை, தேடி சென்று படிப்பான்.
நல்ல எழுத்தாளரின் எழுத்தை தொடர்ந்து படிக்கும் சாதாரண வாசகனும் ஒரு நாள் எழுத்தாளனாக மாறுவான் என்பது நிதர்சனம் தானே !
நல்ல எழுத்தாளர்களை ஆதரியுங்கள் என்று நீங்கள் கேட்கும் பாங்கு உங்களின் முதிர்ச்சியை காட்டுகிறது.
நல்ல எழுத்துக்களை படிக்க நிறைய வாசகர்கள் பதிவுலகில் உண்டு...தொடர்ந்து உங்களின் சீர்மிகு பயணம் தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
////@ கழுகு : ஒரு எழுத்தாளனின் ஆகா சிறந்த படைப்பு எதுவாகிலும் அதை தன் இடக்கையால் புறக்கணிக்கும் முழு உரிமை வாசகனுக்கு உண்டு # ஜெயமோகன்////
பொதுவாக எழுத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை....
பொழுது போகணுமே என்று தான் சில சுவாரசியமான விசயங்களாக பார்த்து படிப்பது என் வழக்கம்....
அனுபவத்தை எழுத்தாக கொண்டு வருபவர்கள் மீது மட்டும் மதிப்பு உண்டு....
மற்ற படி ....வாழ் நாள் முழுவதும் எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதும் ஆட்கள் மீது பெரியதாக சொல்லி கொள்ள ஏதும் இல்லை என்பது என் கருத்து.......செயல் இல்லா எழுத்து வெறும் சுய இன்பம் போல தான்....
என்னை பொறுத்தவரை மன நோயும்...செயல் இல்லா வெற்று எழுத்தும் சகோதரர்கள்....
ஜெய காந்தன் ,ஜெய மோகன் ,சாரு நிவேதிதா போன்றோரை நீங்கள் எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டால்...அவர்களை மன நோய் காப்பகத்தில் பார்க்கலாம்.....
கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் மன நோய் பிடித்து தூக்கம் வராமல் கடைசி காலத்தில் இறந்தார்
பாரதி கஞ்சா அடித்து விட்டு கவிதை பாடுவார்...... போதை இறங்கி விட்டால் கவிதையை பாதியில் நிறுத்தி விடுவார்..இப்படி பாதியில் நிறுத்த பட்ட கவிதைகள் ஏராளம்.....
நம்ம ஆளு கண்ணதாசன் ....சொல்லவே வேண்டாம்....
எழுத்து வியாதி தீர வேண்டும் எனில் ...செயலை அதிக படுத்த வேண்டும்
வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....
Post a Comment