சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட்டிருக்கிறது. அடக்குதலும் அத்து மீறலும் காலம் காலமாக மனிதர்களுக்குள் நிகழும் ஒரு வழமை. இயல்பிலேயே சுதந்திரமான ஒரு உயிர்க் கூட்டம் மனமென்னும் சிறைக்குள் அடைப்பட்டு சக மனிதரை ஆளுமை செய்ய நினைத்து திட்டங்களை தீட்டி வியாபரமென்றும், போர்களென்றும், படைகளென்றும் தமது நகர்வுகளை முன்னெடுத்து மனிதன் மனிதனை ஆளுமை செய்யும் தந்திரம் சமைக்கப்பட்டது.
கீழை நாடு என்று வர்ணிக்கப்படும் இந்திய தேசத்தின் வேர்கள் ஆன்மீகத்தில் ஊறிப்போனவை, இந்திய துணைக் கண்டத்தில்தான் மனிதன் தன்னுள் ஆழ்ந்து அமிழ்ந்து சத்தியத்தின் உண்மைகளை கண்டறியும் விஞ்ஞானம் சமைத்தான் அதனை ஆன்மீகம் என்ற பதம் கொண்டு பொதுவிலே பகிர்ந்து வைத்தான்.
இயற்கையில் புறம் நோக்கிய பாய்ச்சலில் அத்தனை அவசியங்கள் அற்று தனது வலிமையையும் அதிகாரத்தையும் அவன் செலுத்த விரும்பியது எல்லாம் தமது கலாச்சாரத்தையும், ஆன்மீக பலத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டல், மற்றும் புதிய கலாச்சார தெளிவுகளை கற்றல் என்ற இரு விடயங்களுக்காத் தானே அன்றி ஆளுமைக்கும் அடக்கி ஆளுதலுக்குமாய் எப்போதும் இருந்ததில்லை.
இந்தியரைப் பொறுத்தவரை எதிரிகள் என்றால் போர் மரபுப்படி கட்டியம் கூறி வாளேந்தி களம் காண வர வேண்டும் அல்லது விருந்தினராய், நண்பராய் நட்புப் பாரட்டி வரவேண்டும் என்ற இரு சூழல்களுக்கே பெரும்பாலும் பழக்கப்பட்டிருந்தமையால் வெள்ளை உடலும் கள்ள மனமும் கொண்டு வணிகம் என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனி என்ற விலாசத்தோடு தேசத்திற்குள் நுழைந்தவர்களின் ஆதிக்க, ஏகாதிபத்திய மனோநிலையை எடைப் போட்டுப் பார்க்கும் திரணியை தொலைத்து விட்டிருந்தனர்.
காலம் எப்போதும் எதிர்முனையில் இருக்கும் எல்லாவற்றையும் வசீகரித்துக் காட்டும் ,கூடவே கவர்ச்சியும் மிகைப்பட்டுப் போயிருந்தால் புத்தியையும் கிறு கிறுக்க வைக்கும். எப்போதும் தத்தம் வாழ்க்கையில் திருப்தியாய் இருந்த இந்தியர்களிடம் ஆங்கிலேய கவர்ச்சி அரசியலும், குள்ள நரி புத்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் வெகு விமர்சையாகவே வெற்றி வாகை சூடியது. இதன் காரணமாக வெள்ளையனை மேலேற்றி விட்டு சக தேசத்தவனை போட்டுக் கொடுக்கும் காழ்ப்புணர்ச்சி அரசியலில் சிக்கி சின்னா பின்னமானான் இந்திய தேசத்தவன்.
வீறு கொண்ட வேங்கைகளாய் எதிரிகளை போரிட்டு வென்ற நம் நாட்டு மாமன்னர்கள் முதன் முதலாய் ஒரு துரோகியை, கபடதாரியை எதிர்கொண்டு போரிட களமிறங்கிய போது சதி வேலைகளாலும் மிகைப்பட்ட நவீன ஆயுதங்களாலும் ஒவ்வொரு மன்னனாய் மண்ணில் சாய்த்துப் போட்டான் வெள்ளையன். இந்திய தேசதில் சுதந்திர போரட்டத்தின் முதற்குரலாய் சிவகங்கைச் சீமையில் மன்னர் முத்து வடுக நாத சேதுபதி சிம்மக் குரல் எழுப்பி....எம் மண்ணை ஆள எம்மிடமா கேட்கிறாய் வரி....
" வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும் "
என்று எக்களமிட்டான்.
காலம் சூழ்ச்சி வலைகளை விரித்து அம்மன்னனையும், இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலு நாச்சியாரையும், மருது பாண்டியர்களையும், வீர பாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வீரன் சுந்தரலிங்கனார், என்று சராமாரியாக தமிழ் நாட்டு மண்ணிலிருந்து புறப்பட்ட வேங்கைகளின் செங்குருதிகளை எல்லாம் காவு வாங்கிக் கொண்டது.
குள்ள நரி புத்திக் கொண்ட வெள்ளையனை எதிர்க்க கொஞ்சம் மேலை நாட்டு புத்தியும் யுத்தியும் தேவைப்பட்டது நம் மக்களுக்கு ஆனால்அது இல்லாததாலேயே...., இந்திய தேசம் தோறும் வெள்ளையனை எதிர்த்து தூக்கப்பட்ட வாட்களுக்கு பலியாய் அந்த அந்த மண்ணின் மைந்தர்களின் தலைகள் பலியாய் எடுக்கப்பட்டது.
நமது வளங்களை சுரண்டி இங்கிலாந்துக்கு அனுப்பிக் கொண்டிருந்ததோடு மட்டும் நின்று விடாமல், இந்தியர்களை எல்லாம் கேலிப் பொருள்களாக்கி, அவனின் புறம் நோக்கிய தேடலில் கண்டுபிடித்த பொருட்களை எல்லாம் கடை விரித்து தன்னை நவ நாகரீக மனிதனாக காட்டிக் கொண்டு தாழ்வு மனப்பான்மையை நம் மீது திணித்து ஒரு மனோதத்துவ தாக்குதலையும் அவன் நடத்த தவறவில்லை.
திரும்பிய பக்கமெல்லாம் ஆறுகள், குளங்கள், மலைகள், வயல்கள், ஆடுகள் மாடுகள், என்று தன்னில் தானே நிறைந்து மரணம் தாண்டிய பிறகு என்னாவாயிருக்கும் மனித வாழ்க்கை? பூமி தாண்டி வேறெங்கும் மனிதர்கள் இருப்பனரா? என்று தன்னுள் அமிழ்ந்து கொண்டிருந்த இந்திய தேசத்தவரை மடக்கிப் பிடித்து கிடுக்குப் பிடியில் உரிமைகளை பறித்துக் கொண்டு நடை பிணங்களாக்கிக் கொண்டிருந்த வேளையில்
உதித்த சூரியன் தான் " மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி "
உன்னை அடித்தால் எதிர்த்து திருப்பி அடி, சண்டையிடு, கிளர்ச்சி செய், துப்பாக்கி ஏந்திப் போராடு என்றெல்லாம் உலகம் போதித்து வந்த வழமையான வழிமுறைகளை உடைத்தெறிந்தவர். ஏ... மனிதா! உன் அடக்குமுறையால் எம்மையும் எம் மக்களையும் மிதிக்கிறாயா? மிதித்து மிதித்து உனது கால்களில் கொஞ்சமேனும் வலியேறியிருக்குமே....அப்போதா வது எமது வலி என்ன என்று சிந்தித்துப் பார்...என்று தனது மெளனத்தால் போதித்த புயல்தான் மகாத்மா என்னும் மாமனிதர்.
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் என்னும் சாகப்த புருசர் மகாத்மாவிற்கு சற்றும் சளைத்தவர் இல்லை. கடும் போராட்ட வடிவங்களை வைத்துக் கொண்டு இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்து, ஆயுத பலத்தால் வெள்ளையனை விரட்டலாம் என்று அவர் எடுத்த முடிவு சரியானதுதான் ஆனால் காலத்தின் போக்கில் ஆயுதங்கள் செய்வதையே வழமையாகவும், மக்களை அடக்கி ஆள்வதே தனது வாழ்க்கையாகவும், கொள்கையாகவும் கொண்டிருந்த வெள்ளையனை அது ஸ்தம்பிக்கச் செய்யவில்லை மாறாக அவன் தெரிந்து வைத்திருந்த யுத்த வழிமுறைகளால் வென்று போடவே செய்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம் தோழர்காள்....! சம காலத்தில் என் தேசத்து இளைஞன் சுதந்திர போராட்ட வலிகளையும், அதன் பின் இருக்கும் சோகங்களையும் எண்ணி தன்னை இந்த தேசத்துக்கு அர்பணித்துக் கொண்டு செயற்கரிய செயல்களை எல்லாம் செய்து முடிக்கும் திண்ணம் கொண்டிருக்க வேண்டும்....ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை...
காலத்தின் போக்கில் சுயநல அரசியலும், கபட புத்தித் தலைவர்களும் சேர்ந்து தியாகங்களை தீக்கிரையாக்கி விட்டு தங்கள் பகட்டு வாழ்க்கைக்கு பட்டு நூலில் காவியம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய தேசத்து சகோதரனும் எந்த மத நூலை வாசிக்கிறானோ இல்லையோ ஆனால் இந்திய சுதந்திர போரட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கோன்ட தியாகச் செம்மல்களைப் பற்றி வாசித்தே ஆக வேண்டும்.
எந்த புனித தலத்துக்கு செல்கிறானோ இல்லையோ.... ஆனால் அந்தமான் தீவிலிருக்கும் அந்த சிறைச்சாலைக்கு சென்று பார்த்து வருதல் கட்டாயமாக்கப் பட வேண்டும். இன்றைக்கு தேசத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அத்தனை பேருக்கும் சுதந்திரம் என்றால் என்ன? உரிமைகள் என்றால் என்ன? நமது வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது ? என்றெல்லாம் முழுதாய் உணர்தலுக்கு சற்றும் சாத்தியமற்ற சூழலே நிலவுகிறது.
ஒவ்வொரு இந்தியரும்....
நமது பக்கத்து தேசத்தில் சுதந்திரத்துக்குப் பின்னாலும் தெளிவற்ற பார்வைகள் கொண்ட தலைவர்களால் சின்னாபின்னப் பட்டுக் கிடக்கிறானே நமது சகோதரன் அவனைக் கேட்டுப் பாருங்கள்....சுதந்திரம் என்றால் என்னவென்று...?
இந்திய தேசத்தின் காலடியில் கிடக்கும் தேசத்தில் லட்சோப லட்சமாய் முள் கம்பிகளுக்குள் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளைக் கேட்டுப் பாருங்கள் சுதந்திரம் என்றாலென்ன என்று?
நினைத்த இடத்தில் காறி உமிழவும், பார்க்குமிடத்திலெல்லாம் தெருவோரத்தில் சிறுநீர் கழிக்கவும், யாரை பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானலும் எது வேண்டுமானாலும் அத்து மீறி பேசவும், வன்முறைகள் செய்யவும், காவல்துறை, மற்றும் நீதித்துறையினை மதிக்காமல் தத்தம் ஆள், பண அதிகார பலத்தால் எல்லாவற்றையும் கட்டிப் போட்டு வன்முறைகள் செய்யவும், இலஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும், தத்தம் சந்ததியினரை மட்டுமே குறுக்கு வழிகளில் வளர்த்து விடவும்,
பணத்தை பெற்றுக் கொண்டு பிணத்தைப் போல தேர்தலில் வாக்குகளை விற்கவும் எப்போதும் யாரையாவது குறைகள் சொல்லி கறைகளோடு தத்தம் சட்டைகளைப் போட்டுக் கொண்டு புறணி பேசவும் இந்த சுதந்திரம் இப்போது உங்களுக்கும் எனக்கும் பயன் படுகிறது என்றால்....
அது எவ்வளவு வேதனையான விடயம்.
300 வருடங்களுக்கும் மேலாக அடிமைகளாய் திரிந்து அடிபட்டு, மிதிபட்டு, பின் சுதந்திரப்பட்டு இன்று தன்னை ஒரு ஜனநாயக நாடாய் வரிந்து கொண்டு மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய தேசம் நம்பிக் கொண்டு இருப்பது தன்னுள் மிகுதியாய் நிறைந்து கிடக்கும் இளையர்களைத்தான்....
சமகால சுயநல அரசியலை குற்றம் கூறிக் கொண்டு நமக்கும் இந்த தேசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிப் போய் விடாமல்....பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்பதோடு...சுதந்திர தேசத்தின் பெருமைகளை ஒவ்வொரு சக இந்தியரிடமும் எடுத்தியம்புவோம்...!
தேசத்தில் வாழும் அத்தனை பேரின் உரிமைகள், கடமைகளை என்னவென்று அறியச் செய்வோம்....! மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு பரப்பி...ஒரு மிகப்பெரிய தேசத்தின் தெளிவான, புரிதல்கள் கொண்ட ஒப்பற்ற குடிமகனாக வாழ்வோம்...!
வாழ்க இந்தியா ! வளர்க தியாகிகளின் புகழ்! ஜெய் ஹிந்த்!
கழுகு வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
8 comments:
//பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்பதோடு...சுதந்திர தேசத்தின் பெருமைகளை ஒவ்வொரு சக இந்தியரிடமும் எடுத்தியம்புவோம்...!//
சுதந்திரதின நல்வாழ்த்துகள்..!!
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
அன்பின் தேவா உள்ளிட்ட அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - தேவா - கட்டுரை அருமை - சிந்தனை நன்று.
//எந்த புனித தலத்துக்கு செல்கிறானோ இல்லையோ.... ஆனால் அந்தமான் தீவிலிருக்கும் அந்த சிறைச்சாலைக்கு சென்று பார்த்து வருதல் கட்டாயமாக்கப் பட வேண்டும். இன்றைக்கு தேசத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அத்தனை பேருக்கும் சுதந்திரம் என்றால் என்ன? உரிமைகள் என்றால் என்ன? நமது வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது ? என்றெல்லாம் முழுதாய் உணர்தலுக்கு சற்றும் சாத்தியமற்ற சூழலே நிலவுகிறது.//
ஆம் - தற்பொழுது அச்சிறை சுற்றுலாத் தலமாக க்ருக்கிறாது - அது புனிதத் தலமாக மாறி - அத்தலத்தின் முக்கியத்துவத்தினை அனைவரும் உணர வேண்டும்.
நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா
//300 வருடங்களுக்கும் மேலாக அடிமைகளாய் திரிந்து// 300 வருடங்கள் அல்ல 2000 வருடங்கள்!
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.சுதந்திர தின வாழ்த்துகள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
கட்டுரை அருமை - சிந்தனை நன்று.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அருமையான கட்டுரை.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
Post a Comment