Saturday, August 13, 2011

என் தேசத்து இளைஞனே விழித்தெழு....! சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...




ஒரு இரண்டு மாதங்கள் இருக்கும். நான் மயிலாடுதுறையிலிருந்து கோவை செல்வதற்கு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணத்தை ஆரம்பித்தேன். அது முதல் வகுப்பு ஏ.சி கோச். (இதைச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது). வண்டி கும்பகோணம் வந்ததும், ஒரு பதினைந்து பேர் கொண்டி இளைஞர் படை  (அதில் நான்கைந்து பெண்களும் அடக்கம்) திமுதிமுவென ஏறியது.

ஏதோ அவசரத்தில் அடித்துப் பிடித்து ஏறியவர்கள், அவரவர் இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டபிறகு லேசாக தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டது, அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு முதல் தர தனியார் கல்லூரியில் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு புராஜெக்ட் விஷயமாக இந்தப்பக்கம் வந்தவர்கள் இங்கு ஏற்பட்ட சில தாமதங்களால் ஷெட்யூல் படி கோவை செல்ல இயலவில்லை. ஆனால் மறுநாள் அவர்களுக்கு ஏதோ 'வைவா' வேறு இருப்பதாகத் தெரிந்தது. அதனால் அவசர கதியில் அடித்துப் பிடித்து கும்பகோணம் வந்து இந்த ரயிலை பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் நிம்மதிப் பெறுமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு வந்திருந்தார்கள்.. மறுநாள் 'வைவாவை' அட்டெண்ட் பண்ணிவிடலாம் என்ற நம்பிக்கையில்! 

 

பின்பு ஏதேதோ பேக்டு ஃபுட்ஸ், ஜங்க் ஃபுட்ஸ் எல்லாம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களை இப்படி அல்லாட வைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவை போட்டு வறுக்க ஆரம்பித்தார்கள். படித்து முடித்து வெளிநாடுகளில் செட்டில்ஆகிவிட்டிருந்த அவர்களுடைய சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் சொல்லியிருந்த அந்தந்த நாடுகளின் தற்பொழுதைய நிலைமைகளையும், அந்த நாடுகளும் அடிமைத் தலையிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்று இன்று எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்பதையும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர். 


ஆனால் நம் இந்தியா மட்டும் சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலும் எந்த மாற்றமும், வளர்ச்சியும் இன்றி வெள்ளைக்காரர்கள் விட்டுப்போன வளர்ச்சியின் எச்சங்களையே கட்டி அழுது கொண்டிருக்கிறது என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார்கள். "சிறிய விமான சேவை வசதியை இங்கிருந்து கோவைக்கு துவங்க 63 ஆண்டு அவகாசம் கூட போதாதா?, முக்கிய நகரங்களை வெள்ளக்காரன் ரெயிலால் இணைத்தான் என்றால் அவனை விரட்டி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரயிலிலிருந்து விமானத்திற்கு இந்த அரசாங்கம் நம்மை கொண்டு செல்லவில்லையே?!  



அவர்கள் விட்டுப்போன ரயில் தான் இன்னமும் இருக்கிறது என்றால் அவர்களே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே?! அவர்களே இன்னமும் ரூல் பண்ணிக் கொண்டிருந்தால் இந்நேரம் இங்கிலாந்தைப் போல நம் நாடும் மாறியிருக்குமே?!" என்றெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்கள். 



ஒரு படித்த இளைஞர் கூட்டம் மிகத்தவறான எண்ணங்களுடன் உரைந்து போக ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு மேல் அதே எண்ணத்தில் இவர்களைத் தொடரவிட்டால் அது எதிர்கால இந்தியாவுக்கு நல்லதாய் அமையாதே, இவர்களை நம்பித்தானே வருங்கால இந்தியாவே இருக்கின்றது என்ற பயத்தில், அவர்கள் மனதை கரைத்து சரியான பாதையில் திருப்பிவிடுவது, இந்த நாட்டுக்கு நான் செய்யும் சேவை என்ற எண்ணத்தோடு அவர்கள் பேச்சில் என்னையும் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். 



தற்பொழுதெல்லாம் நம்முடைய இளைஞர்களுக்கு, நாம் ஏதாவது மாற்றுக் கருத்து சொல்ல ஆரம்பித்தாலே உடனடியாக தன்னுடைய கருத்துக்களை இன்னும் இறுக்கிப் பிடித்து சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்னும் அடிப்படை சைக்காலஜி தெரிந்திருந்ததால்..(!) முதலில் நானும் அவர்களுடைய பேச்சுக்கு இணக்கமான கருத்துக்களோடு, இங்கிருக்கும் இன்னும் சில தவறுகளை எடுத்துச் சொல்லி பேசிவந்தேன். தங்களுடைய கருத்துக்கு சற்று மூத்த தலைமுறையும் சப்போர்ட் பண்ணுகிறதே என்ற சந்தோஷத்தில் அவர்கள் இன்னும் தங்கள் பக்க நியாயங்களை சில உதாரணங்களோடு விளக்கி (அதில் ஒரு உதாரணம் கெண்டகி ஃப்ரைடு சிக்கன் கூட இன்னும் கும்பகோணத்திற்கு வரவில்லை என்பது!!) ஆங்கிலேயர் ஆட்சியே இருந்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும்(!) என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். 


இத்தனை நேரமும் அவர்களுக்கு இணக்கமாக பேசிக்கொண்டு வந்த நான், அந்த இணக்கத்திலிருந்தே என்னை மாற்றிக் கொள்ளாமல் மெள்ள முக்கிய விடயத்திற்குள் நுழைய ஆரம்பித்தேன்! உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன், மனதில் உள்ளதை பட்டென்று உடைத்து உடனடியாக பதில் சொல்லிக்கொண்டுவர இயலுமா? என்று கேட்டேன்.  

நான் ஏதோ க்விஸ் நடத்தப்போவதாகவோ அல்லது ஏதோ புதிதா கேம் விளையாடப்போவதாகவோ நினைத்து அனைவருமே ஆவலுடன் முன்னே வந்து தலையை ஆட்டினார்கள்! 


சரி. இந்த ட்ரெயினில் எத்தனை வகுப்புகள் கொண்ட பெட்டிகள் இருக்கின்றன? இரண்டு என்று ஒரு பெண் உடனடியாக சொல்லிற்று. என்னென்ன வகுப்புகள்? முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு என்று ஒரு பையன் சொல்ல, இன்னொரு பையன் ஏ.சி. கோச் என்ன வகுப்பு என்ற சந்தேகத்தை கிளப்ப கடைசியாக அதுவும் முதல்வகுப்பு தான் இந்த ரெயிலில் என்ற முடிவுக்கு வந்தார்கள்! நீங்கள் எந்த வகுப்பில் பயணம் செய்கின்றீர்கள்? ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, முதல்வகுப்பு என்று ஒரு பையனும், ஏ.சி கோச்சுண்ணும் சேர்த்து சொல்லுடா என்று இன்னொரு பையனும் கொஞ்சம் கோபமும், கிண்டலுமாகச் சொன்னார்கள். 



காரணமாகத்தான் கேட்கிறேன். கோபம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த கேள்விக்கு முன்னேறினேன். இந்த முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் பயணம் செய்ய என்னென்ன தகுதிகள் ஒருவருக்கு இருக்க வேண்டும்? என்று கேட்டது தான் தாமதம் சரேலென்று . ஒரு பதில்: "கொஞ்சம் பணம் அதிகம் வேண்டும்",  "மனுஷனா இருக்கணும் சார்: னு இன்னொரு பதில். நான் ஏதோ வில்லங்கமாய் பேசுவதாக நினைத்துக் கொண்டு சீரியஸாய் கொஞ்சம் அழுத்தத்துடன் பதில் சொன்னார்கள். 

கேள்விகள் அவ்வளவு தான். ஆனால் இந்த கேள்விகளுக்கான காரணத்தை இரண்டு நிமிடங்களுக்குள் சொல்லிவிடுகிறேன், சற்று கவனமாய்க் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தேன்.  
இன்றிலிருந்து சற்றேரக்குறைய 100 வருடங்களுக்கு முன்பாக, ஆங்கில காலணி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலெல்லாம் (கிட்டத்தட்ட உலகம் முழுமையும் என்று கூட சொல்லலாம்!) நீதிமன்றங்களில் வாதாடும் தகுதிக்கான பாரிஸ்டர் பட்டத்துடனும், கோட்-சூட் போட்டுக் கொண்டும், முதல் வகுப்பு கட்டணம் எவ்வளவோ அதைச் செலுத்தி பெறப்பட்ட பயண அனுமதிச் சீட்டுடனும் அந்த இளைஞன் ஒரு ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி உங்களைப் போன்று சந்தோஷத்துடன், தான் மறுநாள் வாதடப்போகும் வழக்கு பற்றிய சிந்தனையுடன் அமர்ந்திருந்தான்.  



அந்த ரயில் பெட்டியில் இரு ஆங்கிலேயர்கள் ஏறி அமர்ந்தனர். நமது இளைஞனைப் பார்த்த அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு, எழுந்து அவனருகே வந்து, நீ யார்? எதன் நிமித்தமாக இங்கு அமர்ந்திருக்கின்றாய்? என்று கேட்டனர். அவனும் தன்னைப்பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டு, ஏன் இதையெல்லாம் கேட்கின்றீர்கள்? நீங்கள் யார்? எனக் கேட்கவும், அவனுக்கான பதில் அவர்களுடைய வாயிலிருந்து வருவதற்குப் பதிலாக, அதில் ஒருவனுடைய காலிலிருந்து புறப்பட்டது!! 
"கருப்பு இந்திய நாய்?!" என்று தன்னுடைய பதிலையே ஒரு கேள்வியாக மாற்றி தங்களுடைய பூட்ஸ் காலால் எட்டி உதைத்து அநத இளைஞனை ரெயில் பெட்டியை விட்டு கீழே தள்ளினர்! அப்படித் தள்ளிவிட்டு அவர்கள் சொன்னார்கள், உங்களுக்காகத்தான் மூன்றாம் வகுப்புப் பெட்டி இருக்கிறது(!) இங்கு உனக்கென்ன வேலை? என்று கோபமாக கத்தவே,  அதே வேகத்தோடு நம் இளைஞனும், "நான் இதற்கான கட்டணத்தை முழுமையாகச் செலுத்தி பயண அனுமதிச் சீட்டு வாங்கியிருக்கின்றேன், உங்கள் நீதிமன்றங்களிலேயே வாதாடும் உரிமை பெற்ற பட்டம் பெற்றிருக்கின்றேன், இதைவிட என்ன தகுதி வேண்டும் இந்த முதல் வகுப்பில் பயணம் செய்ய? என்று கேட்க...., 



அவர்களும் விடாமல், "உன் பணமோ, படிப்போ உனக்கு அந்த தகுதியைத் தந்துவிடாது, அது பிறப்பால் உண்டாக வேண்டும், நீ எங்கள் காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்டிருக்கும்  இந்திய நாட்டில் பிறந்த அடிமை. அடிமைகள் மட்டும் பயணிக்க வேண்டிய மூன்றாம் வகுப்பு பெட்டியில் தான் உங்கள் பயணம் அமைய வேண்டுமேயன்றி, இந்த முதல் வகுப்போ அல்லது இரண்டாம் வகுப்போ உங்களுக்கானது அல்ல!" என்று சொல்லிவிட்டு பெட்டியில் ஏறிவிட்டனர்.  



அந்த பதிலாலும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தாலும் கூனிக் குறுகி கீழே விழுந்திருந்த அந்த இளைஞன், ......இனி எனக்கு இங்கு வேலையில்லை, என்னுடைய நாட்டில் தான் இருக்கிறது. அங்கு இந்த ரயில் எல்லாம் ஓட வேண்டும், ஆனால் அடிமைகள் செல்வதற்கான மூன்றாம் வகுப்பு பெட்டிகள் அதில் இருக்காது இருக்கக்கூடாது. என் சந்ததிகளுக்கு இதை பரிசாக அளிப்பது தான், அதற்காக உழைப்பது தான், அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வது தான் இனி என் கடமை!........ 


.....என்று விஸ்வரூபம் எடுத்து எழுந்து நின்றாரே.... அந்த நொடியில் தான் மோகன் தாஸ் மஹாத்மாவாக மாறினார்..!! 


அவரைப் போன்றவர்கள் பலர் செய்த தியாகங்களும் பட்ட சித்திரவதைகளும் தான் இன்று நீங்கள் முதல் கேள்விக்கு இரண்டே வகுப்புகள் தான் இந்த ரயிலில் என்று சொன்ன பதிலும், கடைசி கேள்விக்கு முதல் வகுப்பில் ஏறுவதற்கான தகுதியாக  "மனிதனாக இருக்க வேண்டும்" என்று சொன்ன பதிலும்! என்று கொஞ்சம் ஆவேசமாகவே பேசி முடித்தேன்! 



ஆனால் தங்கள் கருத்துக்கு எதிரான ஜஸ்டிஃபிகேஷனை ஏற்றுக் கொண்ட அவர்கள், தற்பொழுதுள்ள இந்திய நாட்டின் நிலை பற்றி தெறிந்து கொள்ளும் ஆவலில் நிறைய கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்!! நானும் எனக்குத் தெரிந்தவரையிலும் சலைக்காமல் சந்தோஷத்துடன் பதில் சொல்லி வந்தேன்....  



கொஞ்சம் உணர்வு ரீதியாக பேசியதால் நானும், பலருக்கும் தெரிந்த சம்பவமாய் இருந்தாலும் அந்த சூழ்நிலையோடு முடிச்சுப் போட்டுப் பேசியதால், அவர்களுடைய எண்ணங்களில் ஏற்பட்ட சிறு சலனமும்.... அடுத்த சில நிமிடங்களை அமைந்தியாகவே கடந்துபோக வைத்தன. அதன்பிறகு அக்கூட்டத்தில் இருந்த ஒரு தெளிவான பையன் தான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.  


 

நீங்கள் சொல்வது உண்மைதான் சார். நாங்கள் இந்த கோணத்தில் ஆங்கிலேயர் ஆட்சியையும் நடப்பு சூழ்நிலையையும் பார்க்காமல் போனது தவறுதான். சரி அதை விட்டுவிடுவோம், அடிமைத்தனமான ஆட்சிமுறையை சிறந்ததாக இனி நான் ஒருபோதும் பேசப்போவதில்லை. ஆனால் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், சுதந்திரமடைந்து இந்த 63 வருடங்களுக்குப் பிறகு நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி சீரான வேகத்தில் தான் இருக்கிறதா? இருந்திருக்கிறதா? ஆங்கிலேயர் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட எத்தனையோ நாடுகள், குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கின்றனவே?! இவ்வளவு பெரிய மனிதவளமும், படிப்பறியும் விழலுக்கு இறைத்த நீராகவே சென்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறதே? இதற்கெல்லாம் யார் காரணம்? அல்லது எது காரணம்?. அரசியல்வாதிகளா? அல்லது சரியானவர்களை ஆட்சியில் அமர்த்தாத நம் மக்களா? அதாவது பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 60 ஆண்டுகளாக வாழும், வாழ்ந்த எங்கள் முந்தைய தலைமுறையா? என்று நியாயமான ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டு, "சார் இதற்கு முடிந்தால் சரியான பதிலைக் கூறுங்கள் அப்படி முடியாவிட்டால், எங்களோடு ஒத்துப்போய்விடுங்கள். ஆங்கிலேயர் ஆட்சி வேண்டுமானால் உசத்தி என்று சொல்லாமல் இருந்துவிட்டுப் போய்விடுவோம் ஆனால் இந்த நாடு சரியில்லாதது, இனி சரிசெய்ய இயலாது என்று விட்டுவிட்டு எங்காவது வெளிநாடு சென்று நம்மைக் காத்துக் கொள்வோம். அதை விடுத்து பக்கத்திலுள்ள பாகிஸ்தானைப் பார், பங்களாதேஷைப் பார் என்று.. அவர்களைவிட நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று சப்பைக்கட்டு மட்டும் கட்டிவிடாதீர்கள் என்று  பாரதி சொன்ன ரௌத்திரத்தோடு பேசி முடித்தான். 


பேசிவிட்டு அந்தப்பையன் ஒரு கின்லே பாட்டிலைத் திறந்து கடகடவென்று பாதி பாட்டிலைக் காலி செய்துவிட்டு கீழே வைத்தான். பட் அந்தப்பையனோட கோவத்துல இருந்த நியாயம் எனக்கு பிடிச்சிருந்தது(!?) அதே பாட்டிலை எடுத்து இரண்டு மினரு  குடித்துவிட்டு பேச ஆரம்பித்தேன்! 

இந்தியாவின் வளம்மிக்க எதிர்காலமான இளைய நண்பர்களே, உங்கள் கருத்துக்களோடு நான்மாறுபடுகிறேன் என்பதை விட, உங்கள்கேள்விகளுக்கான விடையென்று எனக்குத் தெரிந்த விஷயங்களை உங்கள் முன்பாக இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன். நடுவில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு, நான் பேசி முடிக்கின்ற வரையிலும்  அதற்கான விளக்கம் கிடைக்காவிட்டால் கடைசியில்கேளுங்கள்... என்று சொல்லிவிட்டு  என் பதிலுரையைத் தொடர்ந்தேன்!

நண்பர்களே, நம் நாடு விடுதலை பெற்ற கதையை, தேதிவாரியாக நடந்த போராட்டங்களை, சம்பவங்களை பாடப்புத்தகங்கள் மூலமாக அறிந்து வைத்திருக்கும் நீங்கள், வரலாற்றின் அந்தப் பக்கங்களில் நடந்த சமகால சராசரி மனிதர்களின் வாழக்கை நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். 


1612 ஆம் ஆண்டு முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த நேரத்திலிருந்து ஆரம்பித்த, ஆங்கிலேயர்களின் அடிமை என்ற இந்தியர்களின் வனவாசம் கிட்டத்தட்ட 335 வருடகால நெடிய வரலாற்றுடன் 1947 ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. மூன்றரை நூற்றாண்டு கால அடிமைவாசமும், உழைப்பு முதல் பெறும்பாலான செல்வ வளங்கள் வரையிலும் சுரண்டப்பட்டு, சுதந்திரம் பெற்ற முதல் நாளில் வாழ்ந்த ஒவ்வொரு இந்தியனின், சராசரியாக ஆறிலிருந்து 12 தலைமுறக்கு முந்தைய மூதாதையர் தான் சுதந்திர சுவாசத்தை அனுபவித்தவராக இருந்திருக்கிறார்!! 
இத்தனை பெரிய இடைவெளியில் கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்பது ஓரிரவில் முடிவெடுத்து வந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அடிமைப்பட்ட தினைத்திலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக சுதந்திரத்திற்கான போராட்டம் நடந்து வந்திருந்தாலும்சுதந்திரத்திற்கு சற்றேரக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கு முன்னதாகத்தான் இந்தியா முழுமைக்குமான ஒருங்கிணைந்த போராட்டம் என்பது வடிவமைக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக, ஒரு முழக்கத்துடன், ஒரே மாதிரியான போராட்டம் இந்தியா முழுவதிலும், ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பழக்கப்படுத்தப் பட்டது! 
1920 களின் முற்பகுதியில் காந்திஜியால் பிரகடனப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடந்தேறிய "ஒத்துழையாமை போராட்டம்" தான், ஆங்கிலேயர்களுக்கு மிகுந்த எரிச்சலையும், இந்தியாவில் ஆட்சி செய்வதற்கான ஒரு ஆயாசத்தையும் கொடுத்தது எனலாம். இதற்கு மேல் சர்வாதிகார மனநிலையுடன் அடக்குமுறை செய்ய புதிய வழிமுறை எதுவும் தோன்றாத நிலையில், மக்களிடம் பயமும், மதிப்பும் குறைந்துவிட்ட அவமான உணர்வு ஆங்கிலேயர்களிடம் உருவாக ஆரம்பித்தது.  


இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக 1942 ஆம் ஆண்டு இதே மாதம் ஆரம்பிக்கப்பட்ட "வெள்ளையனே வெளியேறு" போராட்டம் தான், அடிமைகளின் புகழுரைகளை மட்டுமே இதுவரையிலும் கேட்டுவந்த ஆங்கிலேயர்களை மிகப்பெரிய எரிச்சலுக்கு உள்ளாக்கி, இந்தியாவை விட்டு வெளியேறும் தருணம் வந்துவிட்டதை உணர வைத்தது. இனி இங்கிருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்துவிட்ட வெள்ளையர்கள், "உலகின் மிகப்பெரிய பூமிப்பரப்பும், மனிதவளமும், கனிம வளமும் நிறைந்த இந்த அகண்ட பாரதத்தை அப்படியே எந்த உள்நாட்டு கலகங்களும் இன்றி விட்டுச் சென்றால்..., எதிர்காலத்தில் உலகையே இவர்கள் அடிமைப்படுத்திவிடும் சூழ்நிலை உருவாகிவிடும்", என்று அஞ்சத் தொடங்கினர்!

ஏற்கனவே கும்பெனியாரின் குறுக்கு புத்தியில் முளைத்து விஷ விதையாக இந்தியாவில் விதைக்கப்பட்டிருந்த இந்து - முஸ்லிம் மதப்போராட்ட கள்ளிச்செடிக்கு நீர் ஊற்றி வளர்க்கும் வேலையை கச்சிதமாகச் செய்தனர்:

1947 ஆம் வருடம் ஜூன் 3 ஆம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் "இந்திய சுதந்திர பிரகடனச்சட்ட முன்வடிவு" முன் வைக்கப்பட்டு, உறுப்பினர்களின் விவாதங்களுக்கு விடப்பட்டது. அந்த சட்ட முன்வடிவு இந்திய பத்திரிகைகளிலும் அறிக்கையாக கொடுக்கப்பட்டு வெளிவந்தது. இளைஞர்களே! இன்று நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்கெல்லாம் மூலமாகத் திகழக்கூடிய இந்தச் சட்ட முன்வடிவம் தான், ஆங்கிலேயர் மூளையில் உதித்த சகுனித் திட்டமாக இன்றைய இந்தியாவின் நிலைமைக்கு காரணமாக அமைந்தது!!



நம் இந்திய பாரம்பரியப்படி எந்தவொரு விஷயத்திற்கும் "ஒரு மண்டலம்" அதாவது 48 நாட்கள் என்பதை ஒரு வேண்டுதலுக்கான விரதமாக இருந்தாலும் அல்லது ஒரு நோய்க்கான மருந்து உண்ணும் காலமாக இருந்தாலும் வரையறுத்துக் கொள்வார்கள். அதன்படித்தான் இந்த சட்ட முன்வடிவும் மக்கள் மன்றத்தில் ஒரு மண்டலத்திற்கு விவாதப் பொருளாகியது. 

அப்படி என்னத்தை தான் சொல்லப்போகிறது அந்த சட்டம்?



"இந்த பிரிட்டிஷ் பாராளுமன்றமானது, தங்கள் காலணி ஆதிக்கத்தில் இருக்கும் "பிரிட்டிஷ் இந்திய" பகுதியை இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமாக இரண்டாகப் பிரித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரு ராஜ்ஜியமாக மாற்றி, இரண்டிற்கும் தனித்தனியே, சுயாட்சியுடன் கூடிய விடுதலை அளிக்க சம்மதிக்கிறது!" 

ஏற்கனவே நீறு பூத்த நெறுப்பாய் கனன்று கொண்டிருக்கும் சில மத்தத்தீவிரவாதிகளுக்கு இந்த விஷயம போதாதா? இரண்டு மத சகோதரர்களின் உடம்பில் ஏற்றப்பட்ட இந்தப் பிரிவினை மருந்து ஒரு மண்டலத்தில் உடல் முழுவதும் பரவி 48 ஆம் நாள் அவர்கள் ரத்தத்தோடு கலந்தும் விடுகிறது!


ஆம்..! 1947 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி (அதாவது 48 ஆவது நாள்) வரலாற்று சிறப்புமிக்க "Indian Indipendence act - 1947" என்ற "இந்திய சுதந்திர பிரகடனச் சட்டம் - 1947" பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது! நூற்றுக் கணக்கான ஆண்டுகளாய் காத்துக் கொண்டிருந்த, ஏங்கிக் கொண்டிருந்த ஒரு அற்புதம், லட்சக்கணக்கான மனித உயிர்களையும், ஏராளமான பொன்னும், பொருளையும் படையல் போட்டு ஏங்கி, மன்றாடிக்கொண்டிருந்த ஒரு ஆனந்தம்.. கைகளுக்கு முன்னால் என்னை ஏந்திக் கொள் என்று வந்து நிற்கின்ற பொழுது, இந்தப் பிரிவினை என்பது யார் கண்களுக்கும் பெரிய விஷயமாகப் படவில்லை. 


அதற்கடுத்த அரை மண்டல காலத்தில் அதாவது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நள்ளிரவில் வாராது வந்த மாமணி போல் அகண்ட பாரதத்தின் பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்படுகின்றது! இடைப்பட்ட காலத்தில் பிரிவினையால் ஏற்படப்போகும் சங்கடங்களை, முன்னேற்றத் தடைகளை எடுத்துச் சொன்ன மஹாத்மா காந்தி போன்றவர்களின் குரல்வளைச் சத்தம் காற்றோடு மட்டுமே கரைந்து போனது..!!


இளைஞர்களே, அடுத்தது நடந்த விஷயங்கள் தான் முக்கியமானவை. அவை என்னவென்று பார்ப்போம். சுதந்திர இந்தியாவின் குட்டி ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து, புதிய சட்ட திட்டங்களை உருவாக்கி, ஒரு முழுமையான குடியரசாக உருமாற்ற மூன்று ஆண்டு காலம் தேவைப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தானுடன் நடத்திய சகோதரச் சண்டையிலேயே 20 வருடங்கள் உருண்டோடின! அதன்பிறகு அடிமையாக இருப்பதின் வலி அறிந்திராத இளைஞர்கள் பலர், அரசியல்-அதிகாரப் போட்டியில் முன்னுக்கு வரவேண்டிய போட்டியில் உள் நாட்டிலேயே மதவாத பிரிவினைகளைத் தூண்டிவிட்டு குளிர்காய ஆரம்பித்து விட்டனர். 



அந்தக் கலவரங்களில் ஒரு 30 ஆண்டுகாலம் சிக்கித் தவித்து, ஆங்கிலேயர்கள் நமக்கு வைத்த அமிலப் பரிசோதனையைக் கடந்து, சென்ற பத்து ஆண்டுகளாகத்தான் நமக்காக, நம்முடைய சுய முன்னேற்றத்திற்காக கவனத்தை முழுமையாகச் செலுத்தி மேலே ஏறிக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டை மற்ற வெளிநாடுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விட 2000 ஆண்டுவரை நம் இந்தியாவின், இந்தியர்களின் நிலையையும், அடுத்த பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று நம் இந்தியாவையும், இந்தியர்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன். 


கடந்த பத்து ஆண்டுகளில் வளர்ந்த பல நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பல மடங்கு உயர்ந்திருப்பதை (அதாவது பலநூறு சதவிகிதம்) ஆய்வுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.  ஆனால் அந்த ஆங்கிலேயர்களின் அமிலசோதனையில் நம் சகோதர தேசம் பல்லிளித்துக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.


இளைஞர்களே!! உங்கள் கைகளில் அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்களே ஒத்துக் கொண்டதைப் போன்று உலகின் எந்தவொரு மிக வளர்ச்சியடைந்த நாட்டிலும் பெரிய நிறுவனங்களின் உயர்பதவிகளில் பணிபுரியும் தகுதியைத் தரக்கூடிய கல்வி , மிக மிகக் குறைந்த கட்டணத்தில் உங்களுக்கு சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. இனி மூதாதையர்களைக் குறைகூறிப் பிரயோஜனம் இல்லை. நீங்கள் தான் இந்த நாட்டை உங்கள் பங்குக்கு அடுத்த நிலைக்கு கொண்டுவர வேண்டும். உங்கள் முன்னோர்களின் வளர்ச்சிக்கு பல தடைக்கற்கள் இடையூராக இருந்தன. அவர்கள் போராடிப் போராடியே அவற்றையெல்லாம் அழித்து வைத்திருக்கிறார்கள். உங்களுக்கான பாதைகளை சமன்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவர்கள் வெட்டி வீழ்த்திய குப்பைகளைக் குவித்து அவற்றை எரித்துவிட்டு, சாலைகளை சுத்தமாக்கி பயணிக்க வேண்டியது தான் உங்கள் வேலை!!
  
இதற்கே நீங்கள் ஆயாசப்பட்டால்.... பரவாயில்லை, விரும்பிய நாட்டிற்குப் பறந்து போய் அங்கு அடிமை வாழ்வு வாழலாம்! இங்குள்ளவர்களுக்கு இதைச் சுத்தம் செய்ய இன்னும் பத்து ஆண்டுகள் அதிகம் தேவைப்படும் அவ்வளவுதான்! ஆனால் பிற்காலத்தில் உங்கள் தலைமுறை இங்கு திரும்பிவர எத்தனித்தால் இங்குள்ளவர்கள் அதைத் தடுக்க எத்தனிக்கக் கூடும். ஜாக்கிரதை!!!






ஒரே ஒரு உதாரணம் சொல்லி என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன். 1612 இல் இந்தியாவில் காலூன்றிய கிழக்கிந்தியக் கம்பெனிதான் நம்மை அடிமைப்படுத்தி, தங்கள் நாட்டிற்கு நமது அடிமை சாசனத்தை பரிசாகத் தந்து மகிழ்ந்தது. அந்த கிழக்கிந்தியக் கம்பெனியையே ஒரு இந்திய இளைஞர், அவர் பெயர் சஞ்சீவ் மேத்தா, தனக்கு அடிமையாக்கி சென்ற ஆண்டு இந்திய சுதந்திர தின நன்னாளில் அதே பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அந்தக் கம்பெனியின் முதலாளியாக, தலைவனாக வியாபாரத்தை தொடங்கிவிட்டார்....!!! இப்பொழுது தன் செல்ல அடிமை நாயின் கழுத்தில் சங்கிலியைக் கட்டி நம் இந்தியாவின் பொருளாதார தலைநகராம் மும்பைக்கும் அழைத்துவரத் திட்டமிட்டுவிட்டார்!!!


இது வெற்றி...! இது தான் வெற்றி...!!!! வாழ்க இந்தியா..! வாழ்க தமிழகம்...!!
 

கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



21 comments:

சேலம் தேவா said...

சிறப்பான பதிவு..!!இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..!!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

One of the Best Post in Kazhugu...,

Wishes Kokorakko

TERROR-PANDIYAN(VAS) said...

//அந்த கிழக்கிந்தியக் கம்பெனியையே ஒரு இந்திய இளைஞர், அவர் பெயர் சஞ்சீவ் மேத்தா, தனக்கு அடிமையாக்கி சென்ற ஆண்டு இந்திய சுதந்திர தின நன்னாளில் அதே பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அந்தக் கம்பெனியின் முதலாளியாக, தலைவனாக வியாபாரத்தை தொடங்கிவிட்டார்....!!! இப்பொழுது தன் செல்ல அடிமை நாயின் கழுத்தில் சங்கிலியைக் கட்டி நம் இந்தியாவின் பொருளாதார தலைநகராம் மும்பைக்கும் அழைத்துவரத் திட்டமிட்டுவிட்டார்!!!



இது வெற்றி...! இது தான் வெற்றி...!!!! வாழ்க இந்தியா..! //

:)

shunmuga said...

மிக பயனுள்ள பதிவு ! சுதந்திரத்தின் வரலாறு தெரியாதவர்களுக்கு எளிதாக புரியும் !

settaikkaran said...

அற்புதமான இடுகை! இதை விட ரத்தினச்சுருக்கமாய் நம் நாட்டின் பெருமை குறித்து யாரும் சமீபத்தில் விளக்கி எழுதி நான் வாசிக்கவில்லை. ஜெய் ஹிந்த்!

Thomas Ruban said...

எளிமையாகவும்,தெளிவாகவும் உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.

Thomas Ruban said...

சில சந்தேகங்கள்,
‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’ என்று சொன்ன புத்தரும், உலகத்திற்கே தத்துவத்தை கற்றுத் தந்த பல்வேறு அறிஞர்களும் பிறந்த இந்திய பூமியில், பணத்தின் மீதான ஆசை வெறியாக மாறி, சுயநலத்தைத் தவிர வேறு எந்த நலனும் முன்னிற்க முடியாது என்கிற அளவுக்கு மாறியிருக்கிறது . இதற்கெல்லாம் யார் காரணம்? அல்லது எது காரணம்?. ஊழல் அரசியல்வாதிகளா? அல்லது சரியானவர்களை ஆட்சியில் அமர்த்தாத நம் மக்களா?

Thomas Ruban said...

புள்ளி விபரங்களின் படி, 1997 முதல் 2010 வரையிலான காலத்தில் மட்டும்
3 லட்சம் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் காரணம் அரசாங்க கொள்கைகள்,பேராசை. பேராசை மட்டும் காரணம் அல்ல. பேராசை வர காரணம் என்ன ? தனி மனித ஒழுக்கம் தான் வளர வேண்டும் . அப்படிப்பட்ட தனி மனித ஒழுக்கம் இல்லாமல் இருக்க யார் காரணம்? அல்லது எது ரணம்?.கல்விமுறையா? அரசியல்வாதிகளா? அல்லது சரியானவர்களை ஆட்சியில் அமர்த்தாத நம் மக்களா?

Thomas Ruban said...

// கும்பெனியாரின் குறுக்கு புத்தியில் முளைத்து விஷ விதையாக இந்தியாவில் விதைக்கப்பட்டிருந்த இந்து - முஸ்லிம் மதப்போராட்ட கள்ளிச்செடிக்கு நீர் ஊற்றி வளர்க்கும் வேலையை கச்சிதமாகச் செய்தனர்: //
இப்போது இந்திய அரசியல்வியாதிகள் அதே பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்து கொண்டுள்ளார்கள்.
(இப்படியெல்லாம் நியாயமாக கேட்டால் நீ என்ன வெள்ளகாரனுக்கு பிறந்தாயா என சில அறிவுஜீவிகள் கேட்ப்பார்கள்).

Thomas Ruban said...

//சாலைகளை சுத்தமாக்கி பயணிக்க வேண்டியது தான் உங்கள் வேலை!!//

அதற்கு இளைஞர்களிடம் விழிப்புணர்வு தேவை.விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல்வியாதிகள் நம்மை மூடர்களாக வைத்துள்ளார்கள்.

Thomas Ruban said...

வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் அடைந்து விட்டோம் ஊழல் அரசியல்வியாதிகள்களிடம் இருந்து சுதந்திரம் அடைய உங்களைப்போல் உள்ளவர்கள் மக்களிடமும், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பயனுள்ள பதிவை தந்த கழுகு டீமுக்கும் வாழ்த்துகள்.

கொக்கரக்கோ..!!! said...

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

@தாமஸ் ரூபன், உங்களுடைய கோபத்தில் உள்ள நியாயம் நன்றாகப் புரிகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளின் மேல் அதிக கோபமுடன் இருக்கின்றீர்கள்.

இதற்கு ஒரே ஒரு பதில் தான் கூறமுடியும். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது, அவர்களுடைய அராஜகத்தையும், கொள்ளையையும் தட்டிக்கேட்டு வெளியேற்ற நம்மவர்களிடம் கையில் எந்த துறுப்புச் சீட்டும் இல்லை. ஆனால் இப்பொழுது நம் தெருவின் சீரமைப்புக்கு பொறுப்பான கவுன்சிலர் முதற்கொண்டு, நம் ஒட்டுமொத்த நாட்டின் சீரமைப்புக்கு பொறுப்பான பிரதமர் வரையிலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கியெறியும், ஓட்டுச்சீட்டு நம் கைவசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது! அதன் மகிமை தெரியாமல் சொற்ப விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறோம். அதை வைத்துக்கொண்டு, பெரிய அதிசயத்தை நிகழ்த்திக்காட்டலாம் நண்பரே!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அருமையான பகிர்விற்கு நன்றி! உங்கள் ஆதங்கம் வெளிப்படுகிறது! இளைய தலை முறையினர்.. மாற்றத்தை ஏற்படுத்தினால்.. நன்றாய் இருக்கும்.

அடுத்தவனை குறை கூறுவதை நிறுத்தி விட்டு.. நம்மால் இயன்றதை நாடு முன்னேற நடத்திக் காட்டுவோம்.. என்ற உத்வேகம் தெரிகிறது!

**கழுகின் புதிய தோற்றம் கச்சிதம் **

Thomas Ruban said...

//உங்களுடைய கோபத்தில் உள்ள நியாயம் நன்றாகப் புரிகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளின் மேல் அதிக கோபமுடன் இருக்கின்றீர்கள்.//

கோபம் இல்லை நண்பரே, ஆதங்கம், கையாலகதனம்!!.

ஆங்கிலேயர்கள்யாவது காந்தி போன்றவர்கள் உருவாக அவகாசம் கொடுத்தார்கள் ஆனால் இப்போது உள்ள இந்தியாவில் ஊழல் ஆட்சியாளர்கள், ஊழல் அரசியல்வியாதிகளுக்கு எதிராக பேசினால் மத நல்லிணக்கத்தையும்', 'தேசிய ஒருமைப்பாட்டையும்', 'இந்திய இறையாண்மையையும் ' சொல்லி என்னென்ன தொந்தரவு தர முடியுமோ அத்தனையும் தருகிறார்கள். இப்படியே போனால் கலாம் சொன்ன "2020"வல்லரசு கனவு "2099"கூட முடியாது

Thomas Ruban said...

// ஓட்டுச்சீட்டு நம் கைவசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது! அதை வைத்துக்கொண்டு, பெரிய அதிசயத்தை நிகழ்த்திக்காட்டலாம் நண்பரே!!

சிதம்பர ரகசியத்தை வரலாறு மறக்காது நண்பரே....

Thomas Ruban said...

//ஆனால் இப்பொழுது நம் தெருவின் சீரமைப்புக்கு பொறுப்பான கவுன்சிலர் முதற்கொண்டு, நம் ஒட்டுமொத்த நாட்டின் சீரமைப்புக்கு பொறுப்பான பிரதமர் வரையிலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கியெறியும், ஓட்டுச்சீட்டு நம் கைவசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது!//

தேர்ந்து எடுக்கும் உரிமையை மட்டும்மே கொடுத்துள்ளார்கள். தூக்கியெறியும் உரிமையை தர மாட்டார்கள் ஏனென்றால் உலகத்திலே விஞ்ஞானிகளை விட அதி புத்திசாலிகள் நம் இந்தியாவின் ஊழல் ஆட்சியாளர்கள்....

கொக்கரக்கோ..!!! said...

@தாமஸ் ரூபன், தேர்ந்தெடுக்கும் உரிமையை நிலைநாட்டும் பொழுதே, இன்னொருவரை தூக்கியெறிந்து விட்டுத்தான் அதைச் செய்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சிதம்பர ரகசியம் எல்லாம் ஒருசில தவிர்க்க இயலாத எக்ஸப்ஷனல் விஷயங்கள்.

கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன்களைப் பற்றியே சிந்தித்து அங்கலாய்த்துக் கொண்டிருந்தால் காந்திகள் தோன்றி விடியல் வந்திருக்குமா?

நம்பிக்கையுடன் இளைஞர்கள் போர்ப்பரணி பாடினால் வெற்றி கிட்டாமலா போய்விடும்?!

Thomas Ruban said...

//நம்பிக்கையுடன் இளைஞர்கள் போர்ப்பரணி பாடினால் வெற்றி கிட்டாமலா போய்விடும்?!//
கண்டிப்பாக கிட்டும். ஆனால் அதற்கு தேவை நாட்டின் வருங்கால தூண்களுக்கு விழிப்புணர்வு.

Thomas Ruban said...

http://vimarisanam.wordpress.com/2011/08/12/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/
இதையும் கொஞ்சம் பாருங்கள் இந்த நிலைமைக்கு யாரெல்லாம் காரணம்....

ஜீவன்பென்னி said...

kokkarakko anna ... superana... katturaiyai vazangiyamaikku nandrigal...Hats off kazhugu...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes