Thursday, March 03, 2011

ஜனநாயகமா? பணநாயகமா?

பணத்தை பிரதானப்படுத்தி மக்கள் சிந்திப்பது சரிதான் ஆனால் ஐந்தாண்டுகளுக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க ஒரே ஒரு தடவை அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணமும், பிரியாணி பொட்டலமும் ஐந்தாண்டுகளுக்கு தவணை முறையில் கொல்லும் அபாயம் இருக்கிறதே? அது சரியா?

தேர்தலில் வேட்பாளர்களுகு சீட்டுக் கொடுக்கும் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் தகுதியை எதை வைத்து தீர்மானிக்கிறது... ? சில கேள்விகள் எல்லோருக்கும் எழமால் இருக்க வாய்ப்பில்லை...! இந்த கட்டுரையை வாசித்துப் பாருங்கள் உங்களுக்கான பதில் கிடைக்கலாம்...



இது தேர்தல் காலம். நிறைய பணம் புழங்கும் நேரம். முன்பெல்லாம் ஒரு கட்சியின் வேட்பாளர்களை அவரது தியாகமும், போராட்டமும், மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகளுமே தீர்மானித்தது. அதாவது, கட்சி நடத்திய நியாயமான போராட்டங்கள் எத்தனையில் அவர் கலந்து கொண்டார்? எத்தனை முறை சிறை சென்றார்? 

(இப்போதுள்ளது போல் தலைவரோ, தலைவியோ ஊழலுக்காக நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டு சிறை சென்றால், அதற்காக பயணிகள் இருந்தாலும் கவலைப்படாமல் பஸ் எரிப்பது, பொது சொத்துக்களை சேதம் விளைவிப்பது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அதன் தொடர்ச்சியாக சிறை செல்வதல்ல).

மாறாக, இந்தி எதிர்ப்பு மற்றும் இன்னபிற போராட்டங்களும், மிசா காலத்து சிறை கொடுமைகளும், அவரவர் பகுதி, தொகுதிகளில் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவது போன்ற காரியங்கள் தாம் ஒரு வேட்பாளரை தீர்மானித்தது.(ஹூம்... அது ஒரு கனாக்காலம் என்று 1960,70-களில் அரசியலை கவனித்தவர்கள் பெருமூச்சு விடுவது கேட்கிறது).

ஆனால், இப்போது ஒவ்வொரு கட்சியும் நடத்தும் நேர்காணலின் போது ஒருவரிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வியே உன் தொகுதியில் உன் ஜாதிக்காரர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?, உன்னை வேட்பாளராக நிறுத்தினால் எவ்வளவு 'சி' செலவு செய்வாய் என்பதுதான். சி என்பது அரசியல்வாதிகளின் பாஷையில் கோடி என்பதை நான் கோடிட்டு காட்டவேண்டிய அவசியமில்லை.

இன்றைய அரசியலை கூர்ந்துநோக்கும் அனைவரும் இதை அறிவார்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு ஒருவர் தலைமை எதிர்பார்க்கும் பதிலை கூறிவிட்டால், தியாகங்களும் உழைப்பும் அங்கே பின்னுக்கு தள்ளப்பட்டு பணபலமும் ஜாதிபலமும் ஒருங்கே பெற்ற அவருக்கே சீட் நிச்சயமாகிறது.

இது, ஏறக்குறைய டெண்டர் விடுவதைப் போல அதிகமான பணத்துக்கு சீட்டை ஏலம் எடுப்பவர் வேட்பாளர் ஆவிடுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கூட, பணம்தான் பாதாளம் வரை பாய்ந்து அவரது வெற்றியை உறுதிசெய்து விடுகிறதே..?

இப்படி கோடி கோடியாக செலவு செய்யும் வேட்பாளர்கள் ஜெயித்துவந்ததும் தான் சிலவு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பதிலேயே குறியாக இருப்பாகள். ஒருவேளை, இத்தனை கோடிகளை செலவுசெய்தும் தோற்றுவிட்டால், இவர்களுக்காகத்தானே இருக்கிறது வாரியம். ஏதாவது ஒரு வாரியத்துக்கு தலைவராகி சுருட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

இத்தனை கோடிகளை செலவுசெய்து ஜெயித்துவந்த இவருக்கு எப்படி மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் வரும்? அதையும் மீறி இவர் நமக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று நாம் நினைத்தால், நம்மைவிட வடிகட்டிய அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது.

ஒருவர் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்த காலமெல்லாம் காமராஜர், கக்கனோடு மலையேறிவிட்டது. இப்போது உள்ளவர்களால் அவரது மனைவி மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை, இந்த லட்சணத்தில் நமக்கெப்படி சேவை செய்வார்கள்?

ஒரு வேட்பாளர் தான் ஜெயிப்பதுக்காக தன் தொகுதியிலுள்ள வாக்காளர்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு குறைந்தபட்சமாக தலா ஐந்நூறு ரூபாய் வீதம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அதற்காக அவர் செலவு செய்யும் தொகை ரூபாய் ஐந்து கோடி. இந்த ஐந்து கோடி ரூபாயை ஏதேனும் ஒரு தொழிலில் போட்டால் கூட மாத வருமானமாக குறைந்தபட்சம் ஒரு சில லட்ச ரூபாய்  கிடைக்கும். அல்லது இரண்டு சதவீத வட்டிக்கு விட்டால்கூட மாதந்தோறும் பத்து லட்சம் கிடைக்கும். அதுகூட வேண்டாம், அந்த ஐந்து கோடியை பேங்கில் டெபாசிட் செய்துவிட்டு வீட்டில் படுத்துக்கிடந்தால் கூட ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

இதையெல்லாம் விடுத்தது இந்த கோடிகளை முதலீடு செய்ய ஒருவர் ஏன் இந்த அரசியலை தேர்வு செய்கிறார் என்று பார்த்தால் காரணம் வெரி சிம்பிள். இன்றையச் சூழலில் அரசியலில்தான் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது. பதவிக்கு பதவியும் ஆச்சு. மாதந்தோறும் இலவச ரயில் பயணம், இந்தியா முழுவதும் சுற்றி வர இலவச விமானப் பயணம், தொகுதி முழுவதும் சுற்றிவருவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று பயணப்படி, இலவச தொலைப்பேசி இணைப்பு / அழைப்பு. நாடாளுமன்றத்தில் பேசாமல் இருப்பதுக்காக சம்பளம், அலவன்ஸ் மற்றும் இத்யாதி இத்யாதிகள். முழுவதுமாக மூன்று
வருடத்தை பூர்த்திசெய்துவிட்டலே, பதவியில் இல்லாவிட்டலும் கூட ஓய்வூதியம் இன்னபிற சலுகைகள்.

ஒருவேளை தப்பித்தவறி அவர் அமைச்சர் ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்... ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடின்னு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வசதிகளையும் வாய்ப்புகளையும் இழக்க யாருக்குத்தான் மனசு வரும்? இப்படிப்பட்ட அரசியல்வியாதிகளை, மன்னிக்கவும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் அது ஒருதலை பட்சமாகிவிடும். இப்படிப்பட்ட சமூகசேவகர்களை உருவாக்கும் முக்கிய பங்கு இன்னொருவருக்கும் இருக்கிறது. அவர் வேறு யாருமல்ல... சாட்சாத் திருவாளர் வாக்காளர்களாகிய நாம் தான் அவர்.


இந்த வேட்பாளர்கள் கொடுக்கும் ஐந்நூறு, ஆயிரத்திற்காக நம் நம்முடைய பொன்னான வாக்குரிமையை இவர்களிடம் அடகு வைப்பதால்தான்... இல்லை இல்லை விற்பதால்தான் இப்படிப்பட்ட சுயநல அரசியல் வியாபாரிகளும், அரசியல் விபச்சாரிகளும் தோன்றுகிறார்கள். இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதால்தான், நம் தொகுதிக்கு இவர்கள் ஏதும் செய்யாவிட்டால் நிற்கவைத்து கேள்விகேட்கும் தார்மீக உரிமையையும் நாம் இழந்துவிடுகிறோம்.

நமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு நாம் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு சிறிதளவு தோன்றினால்கூட, மக்கள் ஒன்றும் நமக்கு சும்மா வாக்களிக்க வில்லையே..?

நாம் கொடுத்த பணத்துக்குதானே வாக்களித்தார்கள்? பணத்துக்கு ஓட்டு சரியாப்போச்சு என்ற எண்ணம் மேலோங்கி ஏதும் செய்யாமலே இருந்துவிடுகிறார்கள். இவர்கள் கொடுக்கும் ஐந்நூறு, ஆயிரம் ரூபாயை நாம் நினைத்தால் ஓரிரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ ஏன் ஒரு மாதமே ஆனாலும் தப்பில்லை சம்பாதித்து விடலாம். ஆனால் இவர்களிடம் கைநீட்டி காசு வாங்கிவிட்டால் ஐந்து வருடங்கள் நம்மால் ஏதும் செய்யமுடியாது. கேவலம் அதிகபட்சம் ஒரு மாதத்தில் சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்களிடம் வாங்கிவிட்டோமேயானால் ஐந்து வருடத்துக்கு இவர்களிடம் அடிமையாக இருக்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

ஐந்து வருடத்தில் நாம் எவ்வளவோ சம்பாதிக்க முடியும். ஆனால், ஐந்து வருடத்துக்கு நம் வாழ்க்கைத் தரம் இவர்கள் கொடுக்கும் இந்த ஐந்நூறு, ஆயிரங்களோடு நின்றுவிடுகிறது. அதாவது இந்த அரசியல்வாதிகளின் வாழ்க்கைத்தரம் உயர நாம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கிக்கொண்டு இருந்துவிடுகிறோம். (நல்ல வேட்பாளர்களுக்கு நேர்மையான முறையில் வாக்களிப்போருக்கு இந்த சாடல்கள் பொருந்தாது) இப்படிப்பட்ட அவலநிலை மாறவேண்டுமானால் பணத்துக்கு வாக்களிக்கும் நிலையிலிருந்து நாம் மாறவேண்டும். 

எந்த ஒரு சமுதாயமும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை நாம் அவர்களை மாற்றப் போவதில்லை என்கிறது திருக்குர்-ஆன். என்ன ஓர் அருமையான வாசகம். நாம் மாறினால் நம் சமுதாயமும் மாறிவிடும். அப்படி நாம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் நம் தொகுதிக்கு செய்திருக்கும் நன்மையின் அடிப்படையில் வாக்களிக்க பழக வேண்டும். அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி. எந்த மதமாக இருந்தாலும் சரி. சுயேட்சையாக இருந்தாலும் சரி. இப்படி நாலு தேர்தல்களில் நாம் ஊழல்வாதிகளை புறந்தள்ளி நல்லவரை ஜெயிக்க வைத்தோமேயானால், பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியாது என்ற எண்ணம் இந்த அரசியல் வாதிகளுக்கு தோன்றி, நமக்கு நல்லது செய்து நம் மனதில் இடம்பிடிக்க பார்ப்பார்கள். கட்சித் தலைமையும் நல்லவர்களுக்கு சீட் கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் பணநாயகம் தோற்கும், ஜனநாயகம் செழிக்கும். அரசியலில் நல்லவர்களின் ஆதிக்கம் மேலோங்கினால்தான் நாடு சிறக்கும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.



கழுகுகுழுமத்தில் இணைய....






கழுகிற்காக
ரஹீம் கஸாலி  




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, March 02, 2011

யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையா?





தேர்தல் வந்து விட்டது.  எங்கள் தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளருமே வேஸ்ட்...! நான் என்ன செய்வது? யாராவது ஒருவருக்கு வாக்களித்தால் எப்படி பார்த்தாலும் ஒரு கெட்டவரைத்தானே நான் தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்களிக்காமல் இருப்பதும் தவறு....? என்ன செய்யலாம்....

இதோ உங்களின் கேள்விகளின் பதிலாய் விரிகிறது இந்தக் கட்டுரை...



அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே! இனி இந்த குரலை தினந்தோறும் நீங்கள் கேட்க்கப்போகிறீர்கள்! நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ  உங்கள்  வீட்டுக்கு அழையா விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள்! பொங்கல் முடிந்தாலும் உங்கள் காம்பவுண்டு சுவர்கள் இலவசமாக வெள்ளையடிக்கப்படும்! நடு சாலையில் குழிதோண்டி பந்தல் இட்டு...மின்சார கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடி.. அவசரத்திற்கு செல்லும் வாகனத்தைகூட ஐந்து ஊர்கள் சுற்ற வைத்து... இப்படி பலவிதங்களில் தமிழ்நாட்டை முன்னேற்ற துடிக்கும் நமது தலைவர்கள் ஓட்டு கேட்டு உங்கள் வீடு தேடி வருவார்கள்! இனி பாத்திரக்கடைகளில் குடங்களுக்கு ஆர்டர் அதிகமாகக்கிடைக்க்கும்! சாலைகள் புதுப்பொலிவு பெறும்! எது எப்படியோ ஒரு இந்திய குடிமகனாக நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடமை இந்த வாக்களிப்பது!


வாக்களிப்பது என்றவுடன் உங்களுக்கு குழப்பம் வரலாம்! யாருக்கு? எந்த கட்சிக்கு? இப்படி பலகுழப்பங்கள்..இதற்க்கு நமது கட்சிகளின் கடந்த ஐந்து வருடத்தை தெரிந்துகொள்வது அவசியம்! தளத்திருக்கு புதிதாக வருபவர்கள்இங்கு சென்று அதனையும் படிக்கவும்! என்ன? யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையா? வாங்க..உங்களுக்காகத்தான் இந்த கட்டுரையே! நாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க நமக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ...அதே உரிமையை நமக்கு யாரையுமே பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கவும் நமது அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு அந்த உரிமையினை வழங்கி உள்ளது! ஆனால் இதைப்பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை! விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த அரசாங்கமும், அரசியல் கட்சியும் முன்வருவதில்லை! ஏனென்றால் இது அவர்களின் அடிமடியில் கை வைப்பதைப்போல! நமது தேர்தல் கமிசனும் இந்த 49-Oவிதியைப்பற்றி அதிக அக்கறை கொள்ளவில்லை! அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அவர்கள் எப்படி அந்த கட்சிகளுக்கு எதிராக செயல்படுவார்கள்?! ஆனால் கட்சிகளின் கைகளில் சிக்காமல் உயரப்பறக்கும் இந்த கழுகின் பார்வையில் உங்களுக்க்கு விளக்கி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்! அதன் சிறு முயற்சியே இந்த கட்டுரை.


இந்திய தேர்தல் விதிகள் 1961- 49(O) தெளிவாக கூறுவது என்னவென்றால்..நீங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் உங்கள் வாக்குக்கு யாரும் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் யாருக்குமே என் வாக்கு யாருக்கும் இல்லை என்பதை தெளிவாக பதிவதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது! இப்படி வாக்களிப்பதால் என்ன நன்மை என்று தெரியுமா?.இப்பொழுது உங்கள் தொகுதியில் A மற்றும் B வேட்பாளர்கள் என்று வைத்துக்கொள்வோம், B வேட்ப்பாளர் 75 வாக்குகளும், A வேட்பாளர் 100  வாக்குகளும்  வாங்கி A வேட்ப்பாளர்  பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துக்கொண்டால், இப்போது நீங்கள் பதிவு செய்த 49(O) - வின் மொத்த எண்ணிக்கை 150 என்று வைத்துக்கொள்வோம், வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நீங்கள் பதிவு செய்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகம்! இதனால் உங்கள் தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்பதைவிட நீங்கள் விரும்பும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்கலாம்! (தேர்தல் செல்லாது என்பது உறுதிபட தெரிவிக்கவில்லை, ஆனால் இப்படி ஒரு முடிவு வந்தால் நம்மால் உச்சநீதி மன்றத்தை நாடி செல்லாது என அறிவிக்க செய்யலாம்!) எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்! அது உங்கள் தொகுதியாக இருக்கட்டும்!


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 49(O) விதியின்படி இந்தியாவிலே அதிகமாக பதிவு செய்யப்பட்டது எங்கு தெரியுமா? பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.. நமது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில்தான்! அதிகபட்சமாக 10,267 வாக்குகள் இந்த விதியின்படி பதிவு செய்யப்பட்டது என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது! அதுபோக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 852 வாக்குகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டது! இது ஆட்சியாளர்களுக்கு  விடுக்கப்பட்ட சிறு எச்சரிக்கை மணிதான்! இந்த பயத்தை நிரந்தரமாக்குவது உங்கள் கைகளில்தான் உள்ளது! இன்னும் நமது நாட்டில் வாக்களிக்கும் உரிமை கட்டாயமாக்கப்படவில்லை! அதனாலேயே நீங்கள் வீட்டில் இருப்பது அர்த்தமில்லை! உங்கள் தொகுதியில் 60% வாக்குகள் பதிவாகி30% வாக்குகள் வாங்குபவர் வெற்றி பெறுகிறார்! மீதி 40% வாக்காளர்கள் வாக்குசாவடி சென்று 49(O) விதியின்படி வாக்களித்தால்..இந்திய வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்படும்! இதற்க்கு போதுமான விழிப்புணர்வு உங்களிடம் இருந்து ஆரம்பிக்கட்டும்! நீங்கள் ஒரு பத்து பேருக்கு இதைப்பற்றி சொல்லுங்கள், அவர்கள் பத்து பேருக்கு சொல்லட்டும், இது சங்கிலி தொடர் போல தொடரட்டும்! நாம் சாக்கடையில் மூழ்கி முத்தெடுப்பதைவிட.. அவர்களே  முத்துக்களை  நம் வீட்டு வாசலில் கொண்டு வந்து வைப்பதற்கு முயற்சி செய்வோம்!


இந்த விதியின்படி வாக்களிப்பதில் நன்மைகள் இருந்தாலும், சில குறைபாடுகளும் உள்ளது! நமது நாட்டில் இப்பொழுது பெரும்பாலும் மின்னணு வாக்கு பதிவு எந்திரமே பயன்படுத்தப்படுகிறது! ஆனால் இந்த எந்திரத்தில் 49(O)விதியின்படி வாக்களிக்க எந்த வசதியும் இதுவரை செய்துதரப்படவில்லை! இந்த விதியின்படி வாக்களிக்க வேண்டுமானால் நாம் முதலில் வாக்கு சாவடியில் உள்ள தேர்தல் அலுவலரிடம் நமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்! பிறகு அவர் தரும் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கையப்பம் இட்டு விட்டு இந்த முறையில் வாக்களிக்க வேண்டும்! முதலில் இதில் நமது வாக்குரிமை ரகசியம் காக்கப்படவில்லை! இரண்டாவது வாக்கு சாவடியில் உள்ள அரசியல் முகவர்கள் நம்மை கவனிக்கும் அபாயம் உள்ளது! அதிலும் நீங்கள் யாரிடமாவது வாக்குக்கு பணம் வாங்கி இருந்தால் உங்கள் நிலை பரிதாபம்தான்! யாருடைய சிபாரிசும் எனக்கு தேவையில்லை, நான் வாக்குக்கு பணம் வாங்குவதில்லை, தொகுதியின் நன்மையே எனக்கு முக்கியம் என்று நினைப்பவர்களா நீங்கள்? கை கொடுங்கள்... உங்களுக்காகத்தான் இந்த விதியே உருவாக்கப்பட்டது! மற்ற பயந்த சுபாவம் உள்ளவர்கள் கொஞ்சநாள் பொறுத்திருங்கள்! உச்ச நீதிமன்றத்தில் இதைப்பற்றி ஒரு வழக்கு பொதுநல வழக்காக தொடுக்கப்பட்டுள்ளது!  தேர்தல் ஆணையமும் இதன் தீர்ப்புக்காத்தான் காத்திருக்கின்றது! ஒரு வேளை தீர்ப்பு சாதகமாக வந்தால் வாக்குப்பதிவு  எந்திரத்திலே இதற்க்கான வசதி செய்து தரப்படும்! ஆனால் இந்த49(O) விதி என்பது அரசியல்வாதிகள் மறந்த வேளையில் மக்களுக்கு செய்த நன்மை! இதை வெற்றிகரமாக பயன்படுத்திக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது!





கழுகுகுழுமத்தில் இணைய....






கழுகிற்காக
வைகை  




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Tuesday, March 01, 2011

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..



இளம் தலைமுறையினருக்கு தொழில் செய்ய ஊக்குவிக்கவும், வழிக்காட்டவும் ஏதேனும் செய்தல் வேண்டும் என்ற கழுகின் பார்வையை குழுமத்தோழர் கொக்கரக்கோவிடம் சமர்ப்பித்த உடனேயே இதை ஒரு தொடராகவே எழுதலாமே என்று ஒரு உத்வேகத்தோடு எழுதிய கட்டுரையின் முதல் பாகம் இதோ... 

பத்தும் பத்தாமல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளியிலிருந்து, கைக்கும் வாய்க்குமே சம்பளம் சரியாக இருக்கிறது என அங்கலாய்க்கும் குமாஸ்தா முதற்கொண்டு, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் (அல்லது கிம்பளமாக) வாங்கும் கணவான்கள் வரை எல்லோருக்குமே, எந்தவொரு  தொழில்முனைவோரைப் பார்த்தாலும் சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும்!  

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லோருக்குமே போதை உண்டாக்கக் கூடிய காரணம் என்றால் அது 'முதலாளி' என்ற அந்த ஒற்றைவார்த்தைதான். எத்தனை லட்சங்களை மாத சம்பளமாக வாங்கினாலும் தொழிலாளிதான், ஆனால் மாதம் ரூபாய் பத்தாயிரம் நிகர லாபமாகசம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில் முனைவர் கூட 'முதலாளி'  தான்! குறைந்தது இரண்டு, மூன்று பேருக்காவது சம்பளம் கொடுப்பார், அவர் லீவ்போட்டால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு மாத சம்பளக்காரர், தொழில் முனைவோர்ஆக ஆசைப்படுவதற்கான காரணங்களை. 

உண்மை தான், ஆனால் வெளியில் பார்ப்பதற்கு முதலாளிப் பட்டம், சமூகத்தில் தொழிலதிபர் அந்தஸ்து, வங்கிகள் முதற்கொண்டு பல பொதுநிறுவனங்களிலும், மற்ற பொதுமக்களுக்கு இல்லாத முன்னுரிமை மற்றும் மரியாதை. அந்தந்த ஊர் பொது காரியங்களில் கௌரவம் மற்றும்தலைமை பொருப்பு... இப்படி பொதுமக்கள் பலரும் பொறாமைப்படக் கூடிய பல காரணிகளை தன்வசம் வைத்திருந்தாலும், சாதாரண சிறுவியாபாரியிலிருந்து, பெரிய குழுமங்களின் தலைவர்கள் வரையிலான பெரும்பான்மையான தொழில் முனைவோர்களுக்கு, ஒவ்வொரு நாளுமே சிவ ராத்திரி தான். 


அன்றைய பொழுதின் கடமைகளை எல்லாம் ஒருவாறாக முடித்து விட்டு, இரவு உறக்கத்திற்காக படுத்தவுடன் தான் அடுத்த நாள் அஜெண்டாவெல்லாம் பட்டியலாக கண்முன்னே நிற்கும். அனேகமாக எல்லா தொழில் முனைவோருக்குமே அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது, மறுநாள் தேதியில் கொடுக்கப் பட்டிருக்கும் வங்கிக் காசோலைகளாகத் தான் இருக்கும்! அடுத்ததாக இருப்பது ஒரு மாதமாகியும் நிலுவை பாக்கியை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள். இவர்கள் மட்டும் சரியான தேதிக்கு செட்டில் செய்திருந்தால்,  நாளை வரும் காசோலைகளைப் பற்றி என்ன கவலை?... என்று கேள்வி மனதில் எழும்போதே தூக்கம் கண்ணுக்கெட்டா தூரத்திற்கு சென்றிருக்கும். பட்டியலின் முதல் விஷயத்திற்கே இப்படி என்றால், அடுத்தடுத்த காரியங்களுக்கு மனம் செல்லும் பொழுது... அது சிவன் ராத்திரியாகியிருக்கும்! 

ஆனால் மறுநாள் காலையில், அவரிடம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே, இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நல்ல வேலையாகப் பார்த்துக் கொண்டு மாசா மாசம் ஒன்னாம் தேதி பிறந்தால் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருக்கலாமே? என்று கேட்டுப் பாருங்கள்..! முதலில் கொஞ்சம் கோபமாகப் பார்த்து விட்டு, பிறகு நம்மைப் பாவமாகப் பார்த்து, நக்கல் தொனியில் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போவார் பாருங்கள்... நம் காலில் கிடப்பதைக் கழட்டி நம் தலையிலேயே அடித்துக் கொள்ளத் தோன்றும்!

அப்படியானால் என்ன அர்த்தம்? சுயதொழில் செய்வதில், தினப்படியாக நிறைய கஷ்டங்கள் இருந்தாலும், ஒரு மனிதனின் அடிமனது சந்தோஷப்படும் காரணிகளான பாராட்டு, அந்தஸ்து, கௌரவம்... இத்தியாதிகள் கிடைப்பதுடன், லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத் தேவைகளையும் தொலைநோக்கில் அந்த சுயதொழில் உருவாக்கிக் கொடுக்கும்..., கொடுத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை ஒரு தொழில் முனைவோருக்கு நூறு சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


ஆக சுயதொழில் ஒன்றை செய்து, படிப்படியாக வளர்ந்து ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், அல்லது தான் இருக்கும் துறையில் ஓரளவு சாதித்து விட்டு, கொஞ்சம் பணத்தோடு சுயதொழிலில் இறங்கி வெற்றிக் கொடி நாட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும், தங்களது எண்ணங்களைத் தொடர்ந்து செல்ல ஒரு நல்ல நடைபாதையை அமைத்துக் கொடுக்கும் விதத்தில் இத்தொடர் அமையும் என்ற உறுதிமொழியோடு அடுத்த பாகத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes