Wednesday, March 30, 2011

சாலை விதிகளை மதிக்கிறோமா???? ஒரு விழிப்புணவு பார்வை!


வாழ்க்கையின் எல்லா பாகங்களிலும் விழிப்புணர்வோடு இருந்தாலும், பிறரின் மயக்க நிலைகளும், பொறுப்பில்லா தன்மையும் நம்மை பாதிக்கச் செய்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதில் முதன்மையானது சாலை விபத்துக்கள்...

சாலை விபத்துக்களின் மூலம் என்ன? எப்படி தடுக்கலாம்? என்ற ரீதியில் செல்லும் கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்....
 

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 12 ஆயிரத்து 36 ஆயிரம் பேர்! ஓட்டு மொத்த இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர்! இதெல்லாம்  ஏதோ சாதனை செய்பவர்களின் புள்ளி விபரம் அல்ல! இந்த புள்ளி விபரங்கள் அனைத்துமே நம் நாட்டில் சாலை விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை! இதை செய்தி தாள்களிலோ அல்லது கேள்விப்ப்படும்போதோ நமக்கு இது செய்தியாக மட்டுமே கடந்து போகும்.. ஆனால் இது கணவனை.. ஒரே மகனை.. குடும்பத்தை இழப்பவர்களுக்கு வாழ்நாள் வலி! விபத்துகள் விட்டு செல்லும் வடு கொடுமையானது! கண நேர அலட்சியம் நம் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிடும் அபாயமுண்டு! முதலில் நம் நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை பற்றி பார்ப்போம்!


 உலகிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றன.  இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14  பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர். இது உலகிலேயே அதிகம். தினமும் 250 பேர் பலியாகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 12 ஆயிரத்து 36 பேர் பலியாகின்றனர். இதில் 85 சதவீதம் ஆண்கள். இவர்களில் 70 சதவீதம் பேர் சம்பாதிக்கும் திறனுள்ள 30- 59 வயதுள்ளவர்கள். சாலை விபத்துக்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் கணிப்புப்படி வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தொகையானது வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தரும் மேம்பாட்டு உதவி நிதியை காட்டிலும் இருமடங்கு அதிகம். ஆண்டுதோறும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர்ப்பலிகள் எட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. உலகில் ஏற்படும் பத்து சாலை விபத்து சாவுகளில் ஒருவர் இந்தியர் என்பது அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம்.நாட்டின் மொத்த வாகன விபத்துக்களில் தமிழகத்தில் 14.1 சதவீதம், மகராஷ்டிராவில் 12.4 சதவீதம் நடந்துள்ளன.(தமிழகம் வளர்கிறது!)


நம் நாட்டில் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது! இது தனக்கு மட்டும் அல்ல.. மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தானது! அடுத்து செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது.. இந்த வகை விபத்துகள் இப்பொழுது அதிகரித்து வருகிறது! அடுத்து தலைக்கவசம்(ஹெல்மெட்) இல்லாமல் ஓட்டுவது.. ( இதைப்பற்றிய தெளிவு அரசாங்கத்திடம் கூட இல்லாதது நம் துரதிஷ்டம்!) மற்றும் ஓய்வில்லாத பணிசுமை.. இப்படி விபத்துக்களுக்கு காரணங்கள் பலவகை! ஆனால் முடிவு ஒன்றுதான்.. உயிர்ப்பலி! இவற்றைப்பற்றிய சரியான விழிப்புணர்வு நம் மக்களிடம் இல்லை.. அனைவருமே எண்ணுவது நமக்கெல்லாம் அது நடக்காது என்று! நடக்காதவரை சந்தோசமே.. நடந்துவிட்டால் நம்மை நம்பி உள்ளவர்களின் கதி? இதை நினைத்தாவது நாம் விழித்துக்கொள்ளவேண்டும்!


போக்குவரத்து விதிகளை சரியாக மதித்து நடந்தாலே விபத்துக்கள் பாதியாக குறைந்து விடும்! ஆனால் அனைவருக்குமே அவசரம்... பொறுமை இல்லை..  வாழ்வதர்க்குகூட! நம் நாட்டில் ஓட்டுனர் உரிமசீட்டு வழங்கும் அடிப்படையே தவறு! உரிமசீட்டு வைத்துள்ள எத்தனைபேர் விதிகளை பற்றி சரியான புரிதலில் உள்ளனர்? அனைத்துமே முகவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது! முகவரை தவிர்த்து நீங்கள் உரிமம் எடுக்க நினைத்தால் அதை அந்த RTO கூட விரும்புவதில்லை! இதுதான் நம் நாட்டின் இன்றைய நிலைமை! உரிமம் எடுக்கும் முறைகளில் ஆதிகாலம் தொட்டு ஒரே முறைதான் பின்பற்றப்படுகிறது! இந்த முறையில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உரிமம் எடுக்கலாம்! (பணமிருந்தால்!) இதை மறுத்தாலும் இதில் உண்மை இல்லையென்று சொல்லமுடியுமா? போக்குவரத்து காவலர்களின் பங்கு அதற்குமேல்! அவர்களுக்கு தேவை லஞ்சம்! நான் அனைவரையும் சொல்லவில்லை.. இதிலும் இட்ட பணிக்காக வெயில் மழை பாராமல் தூசியில் நடுரோட்டில் நின்றுகொண்டு பணிசெய்யும் பலபேரை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு என் சல்யூட்! விதிகளை மீறும் யாரும் தண்டனைக்கு பயப்படவில்லை! மாட்டினால் ஐம்பது அல்லது நூறுதானே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்! மாறாக அவர்களை அபராதங்களை நீதிமன்றத்திலோ அல்லது மற்ற அரசாங்க அலுவலகங்களிலோ கட்டும் முறைகளை கொண்டுவந்தால் கால விரயங்களுக்கு பயந்தாவது விதிகளை மதிக்க முயற்சி செய்வார்கள்! ( இதில் நீதிமன்றத்திற்கு செல்லும்முறை ஏற்க்கனவே உள்ளது..ஆனால் அந்த அளவுக்கு யாரும் செல்வதில்லை மாமூலாக முடித்து விடுகின்றனர்!)


இப்போதுள்ள இளைய தலைமுறைகளுக்கு சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்! இனி வரும் தலைமுறையாவது விதிகளை மீறாத தலைமுறையாக இருக்கவேண்டும்! ஆனால் இதுவும் கனவாக போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது.. காரணம்..கடந்த ஆண்டில் சாலை விதிகள் பின்பற்றுவதன் அவசியத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டது! இதற்காக   வல்லுனர்கள், போலீசார் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி  புதிய பாடத்திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமூகவியல் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார்கள்! ஆனால் இது இன்றளவும் அறிவிப்பாகவே உள்ளது!


பிரச்சனைகளை மட்டும் அலசி விட்டு தீர்வுகளை சொல்லாமல் விட்டால் எப்படி? எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரிய வில்லை.. ஆனால் கண்டிப்பாக சாத்தியமாக்க வேண்டிய சில தீர்வுகளை முன்வைப்போம்! இதில் திருத்தங்கள் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள்! தட்டுங்கள் திறக்கப்படும் என்பதுபோல்..

 1. போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.. இவர்களை தலைவர்கள் வரும் பாதையை மட்டும் சரிபண்ண பயன்படுத்தாமல் மக்களுக்காகவும் பயன்படுத்தவேண்டும்!
 2. இரவு நேர காவலர்களுக்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் கருவிகளை வழங்க வேண்டும்! இப்போது உள்ளதுபோல் மருத்துவமனையே நம்பியிருப்பது கேலிக்கூத்தானது!
 3. மேலை நாடுகளில் உள்ளதுபோல்..விதிகளை மீறுபவர்களுக்கு புள்ளி அளவுகளை கொண்டுவந்து தண்டனையை கடுமை ஆக்குவது! உரிமம் ரத்தாகும் பயத்தை அவர்களுக்கு உண்டாக்குவது!
 4. தலைக்கவசம் பற்றிய தெளிவான ஒரே கொள்கையை நாடு முழுவதும் கொண்டுவருவது!
 5. வேகத்தை கண்காணிக்கும் கருவிகளை விரைவு சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் பொருத்துவது!
 6. அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வரும் வண்டிகளை கண்காணித்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது தண்டனையை கடுமையாக்கலாம்!
 7. ஓட்டுனர் உரிமம் பெறும் விதிகளை இன்னும் கடுமையாக்கலாம்.. இதில் உள்ள முகவர் தொல்லைகளை ஒழிக்கவேண்டும்!

இப்பொழுதெல்லாம் பள்ளி குழந்தைகள் அதிகமாக இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்கிறோம்! அவர்களுக்கு வாகனங்களை வாங்கித்தரும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது! அல்லது அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு உரிமம் பெறும் வயதுவரம்பை தளர்த்தலாம்! ஏனென்றால் போன தலைமுறையில் பதினைந்து வயதுவரை மிதிவண்டி ஓட்டுவதே பெரிய விஷயம்! ஆனால் இப்பொழுது அப்படி இல்லை! இதை மனதில் வைத்து உரிமம் பெறும் வயதை பதினெட்டில் இருந்து பதினைந்தாக குறைக்கலாம்! பழைய சட்டங்களையே பிடித்து தொங்க வேண்டிய அவசியமில்லை! அப்படி சட்டம் இருந்தாலும் அவர்கள் சட்டங்களை மீறுவதை யார் கட்டுப்படுத்துவது? எனக்கு தெரிந்து ரோந்து போலீசார் கூட அவர்களை நிப்பாட்டுவதில்லை! அப்படி அவர்களும் உரிமம் எடுக்கமுடியும் என்றால் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வை அந்த பள்ளிகளிலே அவர்களுக்கு கொடுத்து உரிமங்களையும் அந்த பள்ளி நிர்வாகமே அவர்களுக்கு எடுக்க உதவலாம்!

அரசாங்கம் என்னதான் முயன்றாலும் மக்களாகிய நம் மனதில் மாற்றம் வரவேண்டும்! விபத்துகளை செய்திகளாக கடந்து செல்லாமல் அவற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்ளவேண்டும்! நம் வீட்டு வாசல் வந்து தட்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்! விபத்தில்லா உலகம் படைக்க சாலை விதிகளை காப்போம்! நம் உயிர் நம் குடும்பத்திற்கு முக்கியம்!


கழுகுகுழுமத்தில் இணைய....


கழுகிற்காக
வைகை  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
  

Tuesday, March 29, 2011

மாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!கல்வி கற்கும் வயதில் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை ஒரு பந்தயக்குதிரை போல பெற்றோர்கள் தயார் செய்யும் வேகத்திலும் அவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பீடு செய்வதிலும் மறைமுகமாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.

உளவியல் ரீதியாக பயணிக்கும் இக்கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்...இது தேர்வுக் காலமும், அதன் முடிவுகளும் வரும் நேரம். பலருக்கு இது மகிழ்ச்சியானது தான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவன்/மாணவி தற்கொலை என்று இப்படிப்பட்ட செய்திகளும் நம் காதுகளை வந்தடைவதோடு, நம் இதயத்தையும் கணக்கச் செய்கிறது.

இப்படித் தான் சமீபத்தில், மிகப் பெரிய தேசியக் கல்லூரியில், நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதாகப் பட்டது, ஒரு கிராமத்திலிருந்து தமிழ் வழிக் கல்வி மூலம் பயின்று,AIEEE தேர்வு எழுதி, இக்கல்லூரிக்கு வந்த ஒரு மாணவன் பற்றியது. இவ்விடத்தில் ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். எத்தனையோ பேர் CBSE சிலபஸில் படித்தும், 2 laksh/year  கோச்சிங்கில் சேர்ந்தும் அந்த கல்லூரியின் ஷீட் கிடைக்காதவர்கள் ஏராளம் என்பதை நினைவில் கொள்க. Its purely on merit only.
சரி, இப்படியாக கஷ்டப்பட்டு அப்பெரிய கல்லூரிக்குள் நுழைந்து, படிப்பைத் தொடர்ந்தாலும், ஏனைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்தன.தேர்வு முடிவுகள் வெளியான ஒரு நாள் மதியம், லெட்டர் எழுதி வைத்துவிட்டு, அவன் ஹாஸ்டல் ரூமின் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு, தன் வாழ்க்கையை     முடித்துக் கொண்டான் அம்மாணவன். இது கதை அல்ல நிஜம். இதன் பிண்ணனியை ஆராயும் பொழுது, அவனுடன் படித்த சில மாண்வர்கள் கொடுத்த தகவலின் பேரில், அவனுக்கு  அரியர்ஸ் என்றும், அத்தோடு, லேபில்(@ lab)  சக மாணவ மாணவிகளுக்கும் முன்பாக பேராசிரியர் திட்டி விட்டார் என்றும் காரணங்கள் வருகின்றன.

இப்பொழுது இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று தொடர்ந்தால், அம்மாணவன் செய்ததும் தவறு, அப்பேராசிரியர் திட்டியதும் தவறு என்றும் நாள் முழுதும் பேசலாம். ஆனால், அது எம் நோக்கமல்ல அதற்காக ஒரு உளவியல் நிபுணரிடம் கேட்டு சில ஆலோசனைகளை இங்கே வழங்குகின்றோம் மாணவர்களின் நலம் கருதி...தற்கொலை பள்ளி/கல்லூரி மாணவர்களின் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பள்ளி/கல்லூரி மாணவர்களின் தற்கொலைகளுக்கு (மேலும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு) காரணம் சரி செய்யப்படாத மன அழுத்தமே ஆகும்.

பள்ளியிலிருந்து கல்லூரிகளுக்கு மாறுவது என்பது ஒரு மாற்றமடையும் நிகழ்வாகும். இங்கே மாணவர்களுக்கு தனிமை, குழப்பம், அமையின்மை, இழந்தது போன்ற உணர்வு, தன் திறமை மீது நம்பிக்கையின்மை, மன அழுத்தம் போன்ற பல வித உணர்வுகள் ஏற்படக் கூடும். மேலும் இந்த பிரச்சனைகள் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இந்த மன அழுத்தம் சரி செய்யப்படாமல் போனால் அது தற்கொலைக்கு காரணமாகலாம்.

பொதுவாக தற்கொலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று தற்கொலை எண்ணம் நீண்ட நாட்களாக இருப்பது, ஒரு நாள் அது முற்றிப் போய் தற்கொலை செய்து கொள்வது. மற்றொன்று தற்கொலை எண்ணம் திடீரென தோன்றி அதை செயல்படுத்தி விடுவது.
தற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்கள், மிக அமைதியாகவும், தனிமையாக யாரோடும் அதிகமாக பழகாமலும், மன அழுத்தத்தோடும் காணப்படுவார்கள். தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கான சில அறிகுறிகள் உள்ளன.


 ஒரு சர்வே சொல்கிறது. ஐந்தில் ஒரு மாணவர் தங்கள் உண்மையான மனஅழுத்த நிலையை விட அதை பெரிய விசயமாக நினைத்துக் கொள்கிறார்கள். மேலும் வெறும் 6% பேரே அதற்கான தீர்வை காண முற்படுகிறார்கள். அப்படியானால் தீர்வை காணாவிட்டால் அந்த மன அழுத்தம் தற்கொலைக்கு வழி வகுக்கலாம்.

தற்கொலை எண்ணம் சில அறிகுறிகள்:
 • பெரும்பாலான நேரங்களில் சோகமாக இருப்பது.
 • தற்கொலை அல்லது இறப்பை பற்றி பேசுவது அல்லது எழுதுவது.
 • குடும்பம், நண்பர்களிடமிருந்து விலகிச் செல்லுதல்/பழகுவதை குறைத்துக் கொள்தல்.
 • நம்பிக்கையில்லாமல் இருத்தல்.
 • கைவிடப்பட்டவர் போன்ற உணர்வு.
 • அளவுக்கு மீறிய கோபம் அல்லது ஆவேசம்.
 • எதிலோ/எங்கேயோ மாட்டிக் கொண்ட உணர்வு.
 • அடிக்கடி மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
 • போதை மருந்து/ ஆல்கஹால் போன்றவை உபயோகித்தல் (இதுநாள் வரை இல்லாத வகையில்).
 • நடத்தை/பண்புகளில் மாற்றம் தெரிதல்.
 • திடீரென உணர்ச்சிவசப்படுதல்.
 • பெரும்பாலான செயல்களில் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
 • தூங்கும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்.
 • உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்
 • ஒழுங்காக படிக்காமல் இருத்தல்.
 • ரொம்பவும் நேசிக்கும் விசயங்களை விட்டுக் கொடுத்தல்.
 • குற்ற உணர்வு/வெட்கப்படும் உணர்வோடு இருத்தல்.
 • அசட்டையாக இருத்தல்.


தற்கொலை எண்ணம் கொண்ட சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் 75% பேர் சில அறிகுறிகளை நிச்சயம் கொண்டிருப்பார்கள். எனவே அவற்றை கண்டறிவது நல்லதாகும்.

இங்கே மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஒரு மனிதரும் கவலையில் இருக்கும்போது தனக்கு ஆறுதல் சொல்ல ஒரு மனிதரை எதிர்பார்ப்பார். அப்படி ஒருவர் இல்லாதபோதுதான் அந்த கவலை மன அழுத்தமாக மாறி பிரச்சனையாகிறது.

எனவே மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக அவர்கள் பிரச்சனைகளை அறியும் வகையில் நடந்துகொள்ள வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகிறது. இங்கே சக நண்பர்கள் ஆறுதல் கூறுவதும் முக்கியமாகிறது.

திடீரென தற்கொலை முடிவு எடுக்கும்போது அருகிலுள்ளவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உடன் இருந்தால் அதனை தடுக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட முடிவுகள் ஒரு முறை தடுத்த பின் மீண்டும் எழாது.


கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக
 மகேஷ்வரி

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Monday, March 28, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......iv


செம்மையான ஓட்டமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ஊடக வரலாறு கட்டுரை ஒரு கருத்துக் களஞ்சியமாய் எல்லோராலும் சேமித்து வைக்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.

சென்ற பகுதியில் தமிழின் முதல் இதழான " மாசதினச் சரிதை" பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இந்தப் பகுதியில் தமிழின் முதல் வார இதழ் , மற்றும் முதல் நாளிதழ் எது என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

தமிழின் முதல் வார இதழ் :

1852 ம் ஆண்டில் பி.பெர்சிவல் பாதிரியாரால் " தினவர்த்தமானி " என்ற வார இதழ் தொடங்கப்பட்டது என்ற குறிப்பு " மா.சு.சம்பந்தன் " அவர்களின் " தமிழ் இதழியல் வரலாறு " மூலமாக அறியலாம்.


அதே போல் அ.மா.சாமி அவர்களின் " 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் " என்ற நூலின் வழியாக 1855 முதல் " தினவர்த்தமானி " சென்னையில் வார இதழாக வெளிவந்தது என்ற குறிப்பு உள்ளது.


ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. தாய்மொழி செய்தித்தாள் அறிக்கை 1860 களில் வழிவந்த அணித்திலும் " தினவர்த்தமானி " வர இதழ் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது. பிரட்டிஷ் நூலகத்தில் இருப்பது 1861 ம் ஆண்டு இதழ். இதழின் என் 272 . அந்நாளில் சில இதழ்களில் மலர் இதழ் குறிப்பிடுவது இல்லை. தொடங்கிய நாளிலிருந்து இதழ் என் மட்டும் தொடர்ந்து குறிப்பிடுவார்கள். அப்படிப்பார்த்தால் 1855 " தினவர்த்தமானி " வார இதழாக வெளிவந்திருந்தால்தான் 1861 ல் 272 ஆவது இதழாக இருக்க முடியும் ( ஆண்டுக்கு 52 இதழ்கள் ). புதுவைப் பெரும்புலவர் வெ. சவரிராயலுவின் பாடல் தொகுதியில் ( 1904 ) அவரது பாடல்கள் செய்திகள் வெளிவந்த இதழ்களின் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டியலில் சென்னை " தினவர்த்தமானி " 1861 சனவரி 24 நாளிட்டு இதழ் என் 277 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் தினவர்த்தமானி வார இதழ்தான் என்று உறுதிப்படுத்துகிறது. ஆக தினவர்த்தமானி முதல் வார இதழாகக் கருத இடம் உண்டாகிறது. 

முதல் வார இதழ் பற்றிய சில குறிப்புகள் :


இந்த வார இதழுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்திருக்கிறது. அக்காலத்தில் வாரந்தோறும் 784 படிகளுக்குமேல் விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது.


"தினவர்த்தமானி " பெரிய அளவில் 8 பக்கங்கள் கொண்டது. ஆண்டுக்கட்டணம் ஐரோப்பியருக்கு ரூ 5 /- சுதேசியருக்கு ரூ 3 /-. இவ்வார இதழைத் தமிழில் வெளியிடுவதற்கு இதன் ஆசிரியர் ஆங்கிலத் தமிழ் அகராதியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இவ்வகையில் ஏற்பட்ட முதல் முயற்சி இதுவே. 

முதல் நாளிதழ் :


நாள்தோறும் வெளிவந்த செய்திகளை உடனுக்குடன் வழங்கும் இதழ்கள் நாளிதழ்கள் ஆகும். 1899 இல் நாளிதழாக வெளியிடப்பட்ட சுதேசமித்திரன் தான் முதல் தமிழ் நாளிதழ் என்ற வரலாறும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. திரு.பெ.சு.மணி தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் கிடைத்த செய்தி மூலம் 1887 இல் லலிதா பிரசனோதையா என்ற நாளிதழ் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


சென்னை மாநில அரசு தாய்மொழி இதழ்கள் பற்றி 1887 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12 இதழ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று " லலிதா பிரசனோதயா " .இந்த அறிக்கையில் " சுதேசமித்திரன் " வாரம் இருமுறை இதழாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே " லலிதா பிரசனோதயா " முதல் தமிழ் நாளிதழாகும்.

முதல் நாளிதளின் வரலாறும் பங்களிப்பும் :


பழகால இதழ்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. ஆகவே இதழ்களின் பெயர்களையே அறிய இயலாத போது அவை நாளிதழா , பருவ இதழா என்றறிய இயலாததாக உள்ளது.


"சுதேசமித்திரன் " நாளிதழ் வெளிவருவதற்கு முன்பே பல நாளிதழ்கள் தமிழில் வெளிவந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.


சென்னை அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள தாய்மொழி இதழ் பார்த்தா பொழுது 1879 ஆம் ஆண்டில் " காலக்கணிதன் " என்ற நாளிதழ் வெளிவந்ததாக " அ.ம.சாமி " குறிப்பிடுகிறார். ஆகவே 

*.1879 - காலக்கணதன்.
*.1887 - லலிதா பிரசனதயா.
*.1899 - சுதேசமித்திரன்.

இவ்வாறாக முதல் நாளிதழ் எது என்பதில் குழப்பம் நிலவுகிறது. 


சென்ற நான்கு பகுதிகளில் தமிழ் ஊடக வரலாற்றில் அச்சு ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் வரலாறு பற்றிச் சுருக்கமாக அறிந்தோம். அடுத்த பகுதியில் இந்தியாவில் வானொலியின் வரவு மற்றும் அதன் வரலாறு பற்றி அறிவோம்.  
 
கழுகிற்காக

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


  

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes