Monday, September 17, 2012

புலவர். சா. இராமாநுசம் அவர்களுடன் ஒரு பேட்டி..வயதில் மூத்தவன் என்றாலும் வலைப்பதிவுகள் எழுதுவதில் நான் இளையவன் தானே என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்ட தமிழ்ப் புலவர் ஐயா. இராமாநுசம் அவர்களிடம் இளைய தலைமுறையினர் மட்டும் இன்றி பெரியவர்களுமே கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. காலத்தின் போக்கில் கவிஞர்கள் கட்டுகளின்றி உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை புதுக்கவிதைகள் என்ற பெயரிலும், பின் நவீனத்துவ கவிதைகள் என்ற பெயரிலும் நிறையவே  எழுதத் தொடங்கிவிட்டாலும் தமிழ் இலக்கண மரபினை உள்ளடக்கி எழுதப்படும் மரபுக் கவிதைகள் எப்போதுமே வாசிக்க சுகமாய்த்தான் இருக்கும். 

மொழியின் வளமையினை எடுத்தியம்பும் மரபுக் கவிதைகளைப் தமிழ் வலையுலகில் படைக்கும் ஐயா இராமநுசம் அவர்கள் பல காரணங்களுக்காகப் போற்றப்படவேண்டியவர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைபபதிவர் திருவிழாவை வெற்றிக்கரமாய் நிகழ்த்திக் காட்டிய மிக முக்கியமானவர்களில் இந்த 81 வயது இளைஞரும் அடக்கம். தமிழ்ப் பதிவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு சங்கம் ஒன்று தொடங்க வேண்டும் என்ற ஐயாவின் எண்ணத்தை கழுகு மிகப்பெரிய கருத்துப் புரட்சிக்கான விதையாய்ப் பார்க்கிறது. வயதும் அனுபவமும் எப்போதும் இளையரை வழி நடத்தும் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த ஐயா இராமானுசம் அவர்களின் பேட்டி இதோ உங்களுக்காக...
1)  வலைப்பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது ஐயா?

வலைப்பதிவு  என்று, ஒன்று இருப்பதோ,அதுவும் நமக்கென சொந்தமாக வலையொன்று தொடங்கலாம் என்பதோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை நான் அறியாத ஒன்றே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என் உயிரினும் மேலான என் துணைவி, என்னை விட்டு  மறைந்த பின் என் வாழ்வேமுற்றிலும் முடங்கிப் போய்விட்டது. என் நிலை கண்டு வருந்திய என் இளைய மகள் என்னை ஆற்றுப் படுத்த,என துயரின் வடிகாலாக, இவ் வலையைத் தொடங்கிக் கொடுத்ததோடு,உரிய பயிற்சியும் தந்தாள்

2) தமிழ் புலவர் படிப்பினை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம்..?

  1- தமிழ் மீது நான்  கொண்டிருந்த பற்று 
  2-இயற்கையாகவே கவிதை எழுதும் ஆற்றல்.
  3- அக்காலக் கட்டத்தில் வீறு கொண்டு விளங்கிய திராவிட                           இயக்கங்களின் தாக்கம். 
  4 என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில சூழ்நிலை மாற்றங்கள்.

3) தமிழர்கள் தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்காமலிருக்க காரணம் என்ன?

இதற்குப் பதில் சொல்வது என்றால் நீண்ட கட்டுரையே எழுத வேண்டும் ஒன்றா, இரண்டா பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

தமிழ் வாழ்க! இந்தி ஒழிக எனப் போராடி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தாய் மொழியாகிய தமிழுக்கு உரிய முக்கியத்தைத் தராமல்,மறைமுகமாக ஆங்கிலமொழி மோகத்திற்கே துணை       நின்றதே முக்கிய காரணம். அதன் விளைவாக பட்டித் தொட்டி முதல் மாநகரங்கள் வரை மழலையர் பள்ளி தொடங்கி  மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கில மொழியில் போதனா முறைப் பள்ளிகள் புற்றிசல் போல் 
வளரத் தொடங்கின. 

மேலும்   அப்பா, அம்மா என்று குழந்தைகள் அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கருதும் பெற்றோர்களும்                    

ஊடகங்களான செய்தித் தாள்களும் தொலைக்காட்சி பெட்டிகளும் கூட முக்கிய காரணங்கள் என்று சொன்னால் மிகையல்ல! இன்னும் பல இதுபோல உள!
           

4) மரபுகளை உடைத்து எழுதப்படும் கவிதைகளை பற்றி தங்கள் கருத்து..?

இது, காலத்தால் ஏற்பட்ட மாற்றம்! இன்று மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்துவிட, புதுக்கவிதை எழுதுவோர் மிகுந்து விட்டனர்  நல்ல மரபுக் கவிதைகளை எழுதும் சிலர்கூட  புதுக்கவிதை எழுதுவதைக் காண்கிறோம். இது காலத்தின் கட்டாயம் போலும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்பதுதானே இலக்கணம்! எனவே இதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

5) அறிவியலை அறிய தமிழ் மொழி அவ்வளவு வளமானது அல்ல என்று கூறுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?

இக் கூற்று சரியானதல்ல! தமிழ் மொழிபோல் சொல்வளம் மிக்க மொழி வேறு எதுவுமில்லை! நம்முடைய முயற்சியற்ற தன்மை, ஆங்கிலம் தான் ஏற்றது என்ற பெரும்பான்மை மக்களின் குருட்டுத் தனமான எண்ணம் தனித்தமிழ் ஆர்வலர்களின் விட்டுக் கொடுக்காத முரட்டுப் பிடிவாதம்!
               இப்படி எத்தனையோ காரணிகளால் ஏற்பட்டுள்ள, நம்முடைய இயலாமைக்குத் தமிழை இவ்வாறு கூறுவதை ஆணித்தரமாக மறுப்பதோடு வன்மையாக கண்டனம் செய்கிறேன்.

6) பதிவுலகம்....உங்கள் பார்வை என்ன?

 இன்று பதிவுலகம் மக்களால் கவனிக்கப் படும்ஒன்றாக ஆகிவிட்டது  கருத்து சுதந்திரம் தமக்கு இருக்கின்ற காரணத்தினால் பதிவர் தடம் மாறி கண்டபடி எழுதுவதோ, நாகரிக மற்ற வார்த்தைகளை எழுதுவதோ தவிர்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
        
7) பதிவர் சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதின் காரணம் என்ன?

இதற்கு நான் பதில் சொல்வதை விட ஓராண்டுக்கு முன் நான் எழுதிய பதிவை உரிய பதிலாக இங்கே வெளியிடுகிறேன்.
        
         பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

     
அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
          வணக்கம்!
விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில் அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது   அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்  முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை  எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும். இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்

தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும் என்று சொல்வார்கள். நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும் தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால் இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்

"உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்" என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)   பெயரிலோ செயல்படலாம்
       
8) பல அணியாய் இருக்கும் பதிவர் சங்களை விட.. ஒரே சங்கம் தமிழகம் முழுதும் என்று  கொண்டு வந்துவிட்டால் அதனால் என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும்...?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கேற்ப, நாம் அனைவரும்  ஒரே அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ள இயலும். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சிக் காரர்களால் நாம் முறியடிக்கப் படுவோம்


9) தங்கள் அனுபவத்திலிருந்து இளைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

இன்றைய இளைய தலைமுறையினருக்கு, நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், சேவை மனப் பான்மையும் கட்டாயம் தேவை  மேலும் நாடு முன்னேற, நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று எண்ண வேண்டுமே தவிர, நாடு நமக்கு என்ன செய்தது என்று, கேட்கக் கூடாது என்பதே!


10) பதிவர் சங்கத்தை வேண்டாம் என்று எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது

 கட்டுண்டோம்! பொறுத்திருப்போம் காலம்  மாறும்.


11) பதிவர் சங்கம் மூலம் என்ன சாதிக்க முடியும்..?? பதிவர் சந்திப்பில் வெறும் கூடி கலைவது மட்டும் போதுமா..
    
இதற்குரிய பதிலை மீண்டும் சொல்வது, கூறியது கூறலாகும்.

அடுத்தது நாங்கள் நடத்திய முதல் பதிவர் சந்திப்பே கூடிக்கலையும்  ஒன்றாக இல்லையே! கவிதை நூல் வெளியீடு கவியரங்கம் என்றுதானே    நடத்தினோம்.

12)  தற்போது நடந்த பதிவர் சந்திப்பில் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை மிகுதியானவர்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்திருக்கலாமே....?

சிலரைப் போல நீங்களும் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்றே கருத வேண்டியுள்ளது. 

தற்போது நடந்த பதிவர் சந்திப்பும் அதன் மாபெரும் வெற்றியும் முன்னின்று நடத்திய நாங்களே எதிர் பாராத ஒன்று, ஏதோ மூன்றுபேர் என் இல்லத்தில் கூடி நான்,மதுமது,மின்னல்)திட்டமிட்டுப் போட்ட விதை முளைத்து ஆலமரமாகத் தழைக்கும் என்று கனவிலும் கருத வில்லை.  சென்னைப் பித்தனையா அவர்களையும் கலந்து, திட்டமிட்டே   நாளைக்குறிப்பிட்டு  பதிவர் சந்திப்புக்கு வருக என, எங்கள் வலைகள்     வழியாக அழைப்பும் கொடுத்து வருபவர் தங்கள் பெயர்களைப் பதிய      வேண்டினோம். காரணம் வருபவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி      செய்வதற்காக.

பொதுவாக, பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டினோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.அப்படி ஓர் எண்ணம் எங்களுக்குத் தோன்ற வில்லை என்பதே உண்மை.

மற்றபடி, யாரையும் புறக்கணிக்கவோ, உதாசீனப்படுத்தவோ எள்ளவும் எண்ணவில்லை. மேலும் தங்களின் ஆதங்கம் நியமானது என்றாலும் தங்கள் கழுகு குழுமத்தைச் சார்ந்த, இங்குள்ள, யாரேனும் ஒருவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு இது பற்றி விளக்கியிருந்தால் மிக, சிறப்பாக இருந்திருக்குமே! நாங்களும் வரவேற்று வாழ்த்தியிருப்போமே!

 இது, தங்கள் கேள்விக்குரிய பதில் மட்டுமல்ல என், தன்னிலை விளக்கமாக எடுத்துக்கொள்ளும்படி, தங்களையும், தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலரையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
                                      
    
13) பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..? அல்லது ஒன்று சேர்க்க முடியுமா.?

பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..?  இவ்வாறு ஆய்வு செய்வதே உள்ள ஒற்றுமைக்கு ஊறு செய்வதாகும் என்பதே என் கருத்தாகும்! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தானே சனநாயகம். பயிரிட நினைக்கும் விவசாயி களை முளைக்குமே என்று கவலைப்பட இயலுமா?
           நம்பிக்கை தானே வாழ்கை! முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்கலாமா?! முயல்வோம் வெற்றி பெறுவோம்!

14) வலைப்பூக்களில் எழுத வந்த பின் ஏன் எழுத வந்தோம் என்று எண்ணி இருக்கிறீர்களா?

ஆம்! சில நேரங்களில் நினைத்ததுண்டு .காரணம், உள்ளமல்ல! உடல்!  முதுமையின் காரணமாக முகுவலி வரும்போது மட்டுமே இவ்வாறு தோன்றுவதுண்டு
   
15) பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கிறதா? குறைகிறதா..?

என்னைப் பொறுத்தவரையில், பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் முற்றிலும் இல்லை என்றே சொல்லவேண்டும்! இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இன்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருப்பதே பதிவுலகம்தான்!

நான் உண்ணும் உணவோ, உட் கொள்ளும் மருந்தோ காரணமல்ல, என் உயிரினும் இனிய வலையுலக அன்பு உறவுகள் என்பால், (மறுமொழி வாயிலாக) காட்டும் பரிவும், பற்றும், பாசமும்,நேசமும் தான் என்பதை இங்கே உரைக்கக் கடமைப் பட்டுள்ளேன்

முடிவாக, என்னைப் பல கேள்விகள் கேட்டு, முடிந்தவரைபதில் சொல்ல வைத்த தங்களை, நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான 

வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!

                           காரணம் எதுவாகினும், உங்களுக்கு உளங்கனிந்த நன்றி! நன்றி!(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, September 12, 2012

வெடிக்கும் மக்கள் புரட்சி, மிரண்டு நிற்கும் அரசாங்கம்....பதட்டமாய் கூடங்குளம்...!

ஒரு நல்ல அரசு என்பது மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும், இயன்றவரையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து, விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுக்கச் செய்து காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் காந்திய வழியில் தங்களின் வாழ்வுரிமைக்காக போராட வந்த கூடங்குளம் பகுதி மக்களின் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தி எதேச்சதிகாரமாய் நடந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை வன்மையாகக் கண்டிக்கிறது.

சுமார் 50,000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் நிறைய பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும், காண முடிந்தது. அணு உலை பற்றிய நுணுக்கமான விசயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை விட அவர்கள் ஒவ்வொருவரின் கண்ணிலும் தெரிந்த உயிர் பயம் நமக்கு  கலவரத்தை உண்டு பண்ணியது. தாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் அணு உலை என்ற பெயரில் தங்கள் கண்ணெதிரில் தங்கள் சந்ததியினர் தழைக்க முடியாமல் போக ஒரு கல்லறையை கட்டிக்கொண்டிருக்கிறதே இதை எப்படி தடுக்கப் போகிறோம் என்ற கவலை தெரிந்தது.

அறிவு ஜீவிகளான அணு விஞ்ஞானிகளும், ஆளும் அரசுகளும் இந்த பயத்தையும், கலவரத்தையுமாவது குறைந்த பட்சம் நீக்கிவிட்டு மேற்கொண்டு பணிகளைச் செய்திருக்க வேண்டுமா இல்லையா? அடிப்படை பயத்தை நீக்கக் கூட முடியாத கையாலாகாத அரசுகள் சொல்வதை எப்படி நாம் நம்புவது? அல்லது அவர்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற பயம் ஒவ்வொரு பாமரனுக்குள்ளும் வருமா...? வராதா?

யுரேனியம் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அணுவிஞ்ஞானம் என்றால் என்ன என்று புரியாது. பாதுகாக்க நீங்கள் செய்து வைத்திருக்கும் முறைகள் ஒரு கணத்தில் பொய்த்துப் போகும் என்பதைக் கூட நாங்கள் விட்டு விடுகிறோம் ஆனால் உலக நாடுகள் எல்லாம் கைவிட்டு விட்ட ஒரு திட்டத்தை, அதுவும் ஜப்பான் போன்ற நாடுகளில் பேரழிவு ஏற்படுத்திய ஒரு விசயத்தை ரஷ்யாவோடு நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக செயல்படுத்த முயல்வது....

எங்களின் உயிரோடு விளையாடும் முயற்சி என்பதை ஏன் நீங்கள் இன்னும் உணரவில்லை....?

40 நிமிடத்தில் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவர்கள் வந்து சுற்றிப் பார்த்து விட்டு பாதுகாப்பானது என்று கூறிச் செல்கிறார்களே...? அணு பாதுகாப்பானது என்று சொல்லும் விஞ்ஞானி ஒரு விஞ்ஞானிதானா? கணக்குப் பார்த்து கூட்டிக் கழித்து பழக்கப்பட்டுப் போன விஞ்ஞான மூளைகளுக்கு இரத்தமும் சதையுமான உணர்வுள்ள மனிதர்கள் கேட்கும் கேள்விகள் எப்படிப் போய்ச் சேரும்...?

அச்சத்தில் நாங்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு அறிவியலார் கொடுத்த பதிலுக்கு மறுபடி கேள்வி கேட்டால்... எங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்.. என்று கூறும் மனிதத் தன்மையற்றவர்கள்தான் எங்களை வழி நடத்தும் தலைவர்களா? பேரிடர் பயிற்சி கொடுக்கிறேன் பேர்வழி என்று அரசு நடத்திய கேலிக் கூத்தினை எங்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டோம்..? என்ன எதுவென்று அறியும் முன்னே அவசர அவசரமாய் சென்று விட்ட பயிற்சியாளர்கள் நிரந்தரமாய் கூடங்குளத்தில் குடியேறத் தயாரா?

என்றெல்லாம்.. அப்பாவி கூடங்குளம் பகுதி மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு மேதாவிகள் உலகம் பதில் சொல்லப் போவதில்லை. மக்களின் போராட்டங்களை எல்லாம் அதிகாரவர்க்கம் எப்போதும் அடக்கி ஒடுக்கி மிரட்டி மறுத்து விடலாம் என்று காணும் கனவுகள் எல்லாம் மறு பேச்சில்லாமல் கிழித்து எறியப்படும் என்பதுதான் வரலாறு.

தேர்தலுக்காய் ஓட்டுக் கேட்கப் போகும் போது ஒரு பேச்சு....அரியணையில் ஏறிய பின் ஒரு பேச்சு என்று நேரத்துக்கு நேரம் மாறும் பச்சோந்திகளின் வர்ணங்கள்....அடுத்த தேர்தலில் அழித்து ஒழிக்கப்படும் என்பதை அதிகாரவர்க்கம் மறக்கக் கூடாது. 

கூடங்குளத்தில் நடப்பது வெறும் போராட்டம் அல்ல.. அது உயிர்ப்பிரச்சினை...! 

வெறுமனே தடியடி நடத்தி அச்சமூட்டி அம்மக்களை கலைத்துவிட்டு போராட்டக்காரகள் தலைமறைவு என்று அரசு சொல்வதை ஊடகங்களில் எழுதி  பரப்புரை செய்வதன் மூலம் இந்த பிரச்சினை முடிவடைந்து விடாது. மத்திய மாநில அரசுகள் சரியாய் இந்தப் பிரச்சினையை அணுகி மக்களை அரவணைத்து இதற்கு ஒரு சுமூகமான முடிவு காணாவிட்டால்.....இந்திய தலைப் பகுதி பற்றி எரிவது போல தென்கோடி இந்திய மூலையிலும் அணைக்கமுடியாத பெரு நெருப்பு பற்றி எரியும் அது இந்தியா என்னும் தேசத்திற்கு பெரும் சவாலாய் அமையும் என்பதும் உறுதி.

துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவ சகோதரரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு...., துப்பாக்கிச் சூட்டினை நடத்திய அரசுக்கு கடுமையான கண்டனங்களையும் இக்கட்டுரையின் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

Monday, September 10, 2012

தொடை நடுங்கிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாதம்...!


அடிப்படை நாகரீகம் தெரியாதவர்கள் சிங்களவர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். இந்தியாவின் இலங்கை ஆதரவுப் போக்கிற்கு ஜெயலலிதாவின் அரசு எதிராய் திரும்பி நிற்க வேண்டிய காலச் சூழலை தமிழக மக்கள்  உருவாக்கி இருக்கிறார்கள்.. ஈழப்போரில் கொல்லப்பட்ட ஏராளமான உயிர்கள் இன்னமும் தமிழக மக்களின்  மனதில் இருந்து மறையவில்லை.  ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த கணத்திலிருந்தே  ஜெயலலிதா இதை சரியாய் கணித்து வைத்திருந்தார்.

மூவர் தூக்கிற்கு எதிராய் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதில் இருந்து தொடர்ச்சியாய் ஈழ விசயத்தில் மிகவும் கவனமாய் காய் நகர்த்தி சென்று கொண்டிருக்கும் அம்மையார் அது தனது அரசியல் எதிர்காலத்திற்கு சரியாய் உதவும் என்பதையும் கணித்தே வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் என்றாலே பிடிக்காத ஜெயலலிதாவின் ஈழப்பாசத்தால் அதிர்ந்து போனவர்களில்  மிக முக்கியமானவர்களில் ஒருவர் கலைஞர், மற்றொருவர் இலங்கை அதிபர் ராஜபக்சே....!

திமுகவின் அரசியல் வரலாற்றில் எப்போதுமே தனித் தமிழ் ஈழத்திற்காக ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறார்கள். அந்தக்கால டெசோ  பேரணியால் தமிழகமே ஸ்தம்பித்துப் போய் குலுங்கியது எல்லாம் வரலாறு. 1989ல் திமுக ஆட்சியை இழந்தற்கு காரணமே விடுதலைப்புலிகளுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவுதான் என்று சமீபத்தில் அதிமேதாவி சுப்பிரமணிய சாமி பேட்டி கூட அளித்திருந்தார். திமுகவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் தங்கு தடையின்றி தமிழகம் வந்தனர், உதவிகளை பெற்றனர் இது யாவும் உண்மையே...!

இப்படியான அரசியல் வரலாற்றை கொண்ட திமுகழகம் மூன்றாம் கட்ட ஈழப்போரின் போது காங்கிரஸின் கிடுக்குப் பிடியில் மாட்டிக் கொண்டு வாய் திறந்து பேசமுடியாமல் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுப் போனது. ஈழத்தில் கொலைவெறியாட்டம் நடந்து மக்கள் கொன்று குவிக்கப்படுகையில் அப்போதைய தமிழக அரசு தனது ஆதரவை வாபஸ் வாங்கி இருந்தாலோ, அல்லது தனது எம்.பிக்களை எல்லாம் ராஜினாமா செய்து இருந்தாலோ, அழுத்தமான போரட்டங்களை நடத்தி இருந்தாலோ அல்லது... அப்படி நடத்தியபவர்களுக்கு உதவி இருந்தாலோ...

ஜெயலலிதா இந்த முறை முதல்வர் பதவியில் ஏறி இருக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

காலம் எல்லாவற்றையும் மாற்றி எழுத இன்று ஏழரை கோடி தமிழக மக்களுக்கு முதல்வராய் இருக்கும் ஜெயலலிதா, தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் ராஜபக்சே என்னும் அரக்கனின் உறக்கத்தை பறித்துக் கொண்டுவிட்டார் என்பதுதான் உண்மை. தமிழர் உணர்வினை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசின் செயல்பாடுகள் ஜனநாயக ரீதியாய் செயல்படுத்தப்படும் போது பயந்துதானே ஆகவேண்டும்.

கழுத்தில் துப்பாக்கி இருக்கும் ஒருவன் உயிருக்கு பயந்தாவது சில நிலைப்பாடுகளை எடுத்துதானே ஆகவேண்டும். தமிழக அரச தலைமையின் கழுத்தில் தமிழர்களின் இன உணர்வு என்னு துப்பாக்கி அழுத்திக் கொண்டிருக்க....தொடர்ச்சியான சிங்கள எதிர் நடவடிக்கைகள் தமிழகம் முழுதும் ஆர்ப்பரித்து எழ.....

கலைஞரும் தனது பங்கிற்கு கை விடப்பட்ட டெசோவை தூசி தட்டி எடுத்து உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை எல்லாம் அழைத்து.....ஒரு மாநாட்டினை நடத்தி அதன் அறிக்கையை இந்திய அரசுக்கு கொடுத்ததோடு அல்லாமல் ஐ.நாவிலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய....

ஆடிப்போனான் அயோக்கிய சிங்கள பெளத்த பேரினவாத அரசின் தலைவன் ராஜபக்சே. 

தமிழ்நாடு உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறது என்ற செய்தியை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தின் இரண்டு பெரும் தலைவர்கள் நடந்து கொண்டிருப்பது அரசியலுக்காய் ஆனாலும் சரி.....இல்லை உண்மையாய் இருந்தாலும் சரி.....சர்வநிச்சயமாய் பாரட்டப்படவேண்டிய செயல்கள் இவை.

இந்தியாவோடு பகடி  செய்து கொண்டிருந்த ராஜபக்சேயின் கண்களில் தைத்த முள்ளாக ஜெயலலிதாவின் அதிரடி தீர்மானங்களும், கலைஞரின் டெசோ மாநாடும்  அமைந்து போனது என்பதை மறுக்க முடியாது.. இதுவரை தமிழகத்தை ஆண்ட, ஆளும் முதல்வர்கள்....ஈழம் பற்றி பேசுகிறார்கள்,  ராஜபக்சே  என்னும்  அரக்கனை வெறுக்கிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட சுய விருப்பம் அல்ல....அது ஏழரை கோடி தமிழர்களின் உயிர் மூச்சு.. என்பதை நடுவண் அரசு இப்போது உணர ஆரம்பித்திருக்கிறது. 

சமீபத்தில் சென்னை வந்த கால்பந்தாட்ட வீரர்களை திருப்பி அனுப்பியதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழக முதல்வர் இப்போது சிம்ம சொப்பனமாகி இருக்கிறார். எரிச்சல் அடைந்த சிங்களவன், ஊடக தர்மங்களை எல்லாம் கடாசி எறிந்து விட்டு ஆபாசமாய் தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் வரைந்து கருத்துப் படம் எல்லாம் போடுகிறான். அதுவும் சிங்கள அரசின் பரிபூரண ஆதரவு ஊடகத்தின் மூலம்....! இவ்வளவு கீழ்த்தரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ராஜபக்சேயின் ஊடகத்துறையை வல்லரசு இந்தியா கண்டிக்குமா இல்லை வழக்கம் போல டர்பனுக்குள் மானத்தை மறைத்துக் கொண்டு பல்லிளிக்குமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!

ஈழப்பிரச்சினையில் தமிழகத்தின் இரு பெரும் தலைமைகள் ஒத்த நிலைப்பாடு கொண்டதற்கே தொடை நடுங்கிப் போயிருக்கும் சிங்கள பேரினவாதம், இரு கட்சிகளும் ஒன்றாய் நின்று போராடினால் என்ன நிலைமைக்குத் தள்ளப்படும் என்று எண்ணி பார்க்கையில்...சிரிப்புதான் வருகிறது...?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கலைஞரும், ஜெயலலிதாவும் மட்டுமே ஈழ விசயத்தில் தொடர்ந்து பாரிய அழுத்தங்களைக் கொடுத்து... இந்திய அரசின் நிலைப்பாட்டினை அடிமேல் அடி வைத்து மாற்றி எழுத முடியும்...! தமிழ், தமிழ் என்று பேசிக் கொண்டிருப்பவர்களும், தனித்தமிழ் ஈழம் வேண்டும் என்று மேடை தோறும் முழங்குபவர்களும்,  இந்திய அரசியலில் கடுமையான ஆளுமையைக் கொண்ட இந்த இரு பெரும் தலைவர்களை ஈழத்திற்காக ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, தமிழர்களின் உணர்வினை எல்லாம் திரட்டி ஒரே முனையில் நிறுத்தும் போது தமிழ் ஈழம் அமைவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உருவாகித்தான் ஆகவேண்டும்.

ஈழத்தை அரசியலாய் பார்க்காமல் அவசியமாய் அரசியல்வாதிகள் பார்க்கவேண்டுமெனில், வலிமையான ஆளுமையான தலைவர்கள் பிரச்சினையை முன்னெடுத்துச்  செல்ல எல்லா வகையிலும் தமிழக மக்களும் உதவியாய் இருக்க வேண்டும். அரசின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மட்டுமே சிங்களவனை ஒடுக்கி நம் உறவுகளுக்கான ஈழ மண்ணை வென்றெடுக்க முடியும். இதை விடுத்து சுற்றுலா வரும் பயணிகளையும், ஆன்மீக பயணம் வருபம் சாதரண சிங்களப் பொது மக்களையும் தாக்கி அழித்து வெறியாட்டம் ஆடினால்.. அது எந்த வகையிலும் நமக்குப் பயனளிக்காமல் மேலும் அசாதாரண சூழலை ஈழ மண்ணில் ஏற்படுத்தி விடும் என்பதையும் அறிக;

எழுத்திலும், பேச்சிலும், மூச்சிலும், ஈழத்தை நமது உணர்வாகக் கொண்டு அறிவாயுதம் ஏந்துவோம்....! தமிழரெல்லாம் ஒன்று கூடி தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம்...!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)Saturday, September 01, 2012

பதிவுலகத்தின் மாயக் கனவுகள்...!

 
 
 
பதிவுலகம் எனப்படும் மாய உலகில் பல்வேறுபட்ட கருத்துக்களை கூகிள் கொடுத்த இலவச பக்கங்களில் எழுதிக்கொண்டிருப்பவர்களும் சரி, இலவச பக்கங்களில் இருந்து ஏதோ ஒரு டொமைனுக்குள் தாவிக் குதித்து எழுதிக் கொண்டிருப்பவர்களும் சரி, ஒட்டு மொத்த இந்த மாயா உலகத்திற்கு என்று மையப்புள்ளி என்று எதுவுமே கிடையாது. கொள்கையின் அடிப்படையில் ஒரு சார்பு கொண்டு நிற்கவும் முடியாது என்பதும் வேதனையான உண்மை.

அ, என்று தட்டச்சி ஆ என்று எழுதும் போதே ஏதோ ஒரு சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபட்டுக்கொள்கிறான் அப்பாவி தமிழன். கொள்கை, சித்தாந்தம் என்பதெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கும் மாயங்கள் என்பதை எடுத்துச் சொல்ல முடியாத வகையில் அறிவு ஜீவிகளுக்கென்று ஒரு கொள்கையும் பார்வையும் இருந்து விடத்தான் செய்கின்றன.. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளை அறிவுசார் எம் தமிழ் சமூகம் வெகுண்டெழுந்து ஓரணியாய்  நின்று தீர்த்து விடமுடியாமல் பல மனோதத்துவ ரீதியான கட்டுப்பாடுகளை நம் முதுகில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டே இருக்கிறோம்.

மனிதர்கள் உணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் கொள்ளையடிப்பவர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அறியாமை என்பதை அழித்துப் போட அனுபவமும், ஆத்மார்த்த பார்வைகளும், விசால அறிவும் தேவைப்படுகிறது. எழுத வரும் ஒருவன் சுயமாய் சிந்தித்து, பின் உண்மையை உணர்ந்து தனக்குச் சரி என்று படுவதை இங்கே பதிவுகள் என்ற பெயரில் பதிகிறான். அது சில நேரங்களில் சமூக நலத்திற்காயும், பெரும்பாலும் தன் தன்முனைப்பை கூர் தீட்டிக் கொள்ளவும் பயன்பட்டுப் போகிறது.

படைப்பாளி என்பவன் எப்போதும் தான் எப்போதும் படைக்கிறேன் என்ற மமதைகள் கொண்டவன். கட்டுக்களற்ற தன் சுதந்திரத்தை கற்பனைக் குதிரையை விரட்டி விட்டு இலக்குகளின்றி பயணப்பட்டு, விதிமுறைகளைத் தாண்டி வாழக் கற்றுக் கொண்டவன். இவனை அடக்கவும் முடியாது. யாருக்கு கீழேயும் நின்று அவர் கூறுவதை  நீ கேட்டுக் கொள் என்று கட்டுப்படுத்தவும் முடியாது. தனக்கு மேலே இருப்பவர் ஏதோ ஒரு வகையில் சிறப்புற்றிருக்கிறார் என்றால், இவன் வேறு விதத்தில் சிறப்பானவனாய் இருக்கிறான்.

எழுத்தை மையப்படுத்தி ஒரு அமைப்பை உருவாக்குவதில் இருக்கும் மனோதத்துவ ரீதியிலான சங்கடம் இதுதான். 

எழுத்தை மையப்படுத்தாமல் சமூகத்தை மையப்படுத்தி சமூக அவலங்களை மையப்படுத்தி ஒன்று கூடுதல்தான் தற்போதைய பதிவுலகத்தின் தேவை என்று கழுகு கருதுகிறது. ஒவ்வொரு மனித மூளையும் ஒரு சிறையறை. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பாடத்தைச் சொல்லிச் சென்றிருக்கும். அந்த அனுபவ வீச்சில் கருத்துக்களில் மாறுபாடு வருவது இயல்பாய் இருகையில்.. எழுத்தை மையமாக, அதாவது எழுதுபவனின் சிந்தனையை மையமாக வைத்து, அகத்தை பேசு பொருளாய் வைத்து இணைவது என்பது சாத்தியமே இல்லதா ஒன்று என்றாலும்....நம்மைச் சுற்றி நிகழும் பிரச்சினைகளை அதன் மூலத்தை அறிந்து அது அடுத்த தலைமுறையினரைச் சென்றடையா வண்ணம்....

நேர்மையான சமூகப் பார்வைகள்  கொண்டவர்களை அடையாளம் கண்டு இணைதல் என்பது மிக எளிது. என்ன ஒன்று தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி பரண்மேல் போட்டு விட்டு.... பொதுநலம் என்ற ஒரு தொலைநோக்குக் கண்ணாடியை நாம் எடுத்து  அணியவேண்டும். 

வர்க்க, பேத விளையாட்டுக்களை களைந்தெறிய தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தங்கள் இந்திய திருநாட்டில் மண்ணை கவ்வி இருக்கின்றன. இந்தியாவின் பிரச்சினை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமானது  மட்டுமல்ல. அதையும் கடந்து மதம், சாதி, இனம் என்று ஏதேதோ விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சாமானியர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச, எழுத அப்படி எழுதுபவர்களோடு கரம் கோர்க்கவே முடியாத பிரபலங்களைக் கொண்டதுதான் இந்த பதிவுலகம் என்னும் போது....

பிரபலம் என்ற வார்த்தை குப்புற விழுந்து மண்ணைக் கவ்வித் தோல்வியடைகிறது. எழுதத் தெரிந்தவன், தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டு எழுதத் தெரியாதாவர்களை ஒழுங்காய் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். அவன் தான் கற்றுக் கொடுத்து அரவணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை அவன் தலைக்கனம் மறக்குமிடத்தில் அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் தெருச்சாக்கடையில் கலந்து விடுகிறது. புதிய பதிவர்களை ஊக்குவித்து ஒரு சிறு பின்னூட்டம் போட்டு ஆதரவளிக்க முடியாத புரையோடிப் போன மனிதர்கள் எல்லாம் நாளைய இந்தியா என்றும் இளையர் முன்னேற்றம் என்றும் பேசுவதைப் பார்த்து....தெருமுனைச் சாக்கடையில் கிடக்கும் பன்றிகளும் ஏசும்.

தெரிந்தவனுக்கும் தெரியாதவனுக்கும் இருக்கும் இடைவெளியை தெரியாதவன் எப்படி நிரப்புவான்? கடந்து போனவனே கை கொடுத்து கூட்டிச் செல்லவேண்டும். தோளோடு தோள் சேர்த்து அரவணைத்து அன்பு மொழியில் வழிகாட்டவேண்டும். என்னை புகழும் பட்சத்தில் எனக்கான உறவுகளாய் தெரியும் கோடி தலைகள், என்னை யாரென்றே கண்டு கொள்ளாத போது எனக்கு கோபம் வருகிறது. அந்த கோபத்தில் அவர்களை எள்ளி நகையாடவும் தோன்றுகிறது.

ஆமாம்....எழுத்தினை மையமாக வைத்து இங்கே யாரும் ஒன்று கூட முடியாது. ஒன்று கூடத் தேவையுமில்லை. தத்தமது செருப்புகளை வாசலில் விட்டுவிட்டுதானே வீடுகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் செல்வது போல

ஈகோ என்னும் தன்முனைப்பினை கழற்றி விட்டு விட்டு....சமூக மேம்பாடு என்னும் ஒரு நன்மைக்காக  கண்டிப்பய் நாம் ஒன்று சேரலாம்.

ஏதேதோ இலக்குகளைக் கடந்து விட்டு சுயமாய் சிந்தித்து நான்கு வரிகள் எழுதலாம் என்று வந்துவிட்டோம்....இங்கே ஊர் கூடி சமூக விழிப்புணர்வுக்காய் தேர் இழுக்கலாம்.... சரியான புரிதலோடு...

ஆனால் என்ன ஒன்று ஊர் கூடவே கூடாது, உணர்வு பெற்று விடக்கூடாது என்று பலரின் தலை கனத்த கனவுகள் அதை எப்படியேனும் தடுக்கவே முயல்கின்றன...

பார்க்கலாம்...காலத்தின் பதில்களை நாமா எழுதுகிறோம்...? பல சூழல்களின் கூட்டுதானே அதனை தீர்மானிக்கிறது.
 
 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes