Friday, November 29, 2013

தேசிய அளவிலான தேர்வுகளும்...இந்தி மொழி திணிப்பும்...!




இன்றைய நிலையில் தேசிய அளவிலான எல்லா தேர்வுகளின் கேள்வித் தாள்களும் இரு மொழிகளிலேயே அச்சிடப் படுகின்றன. முதன்மையாய் ஆங்கிலம், இரண்டாவது இந்தி. போட்டி தேர்வுகளில் இவ்விரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால் அதிகம் பாதிக்கப் படுவது நம் தமிழக மாணவர்கள் மட்டும்தான். அதுவும் முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்று போட்டித் தேர்வுக்கு முயலும் மாணவர்கள்தான்.

எப்படி என்று கேட்பவர்களுக்கு. இந்தி நம் தேசிய மொழி என்ற தவறான எண்ணம் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா தனது அலுவலக மொழியாக மாநில வாரியாக இருபத்தி இரண்டு மொழிகளை ஏற்றுள்ளது. ஆங்கிலம் எல்லா மாநிலங்களிலும் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது. இப்படி இருக்க ஏன் இந்தியில் மட்டும் கேள்வித்தாள் அச்சிட என்ன காரணம்.

இந்தியாவின் மொத்த மாநிலங்களில் வெகு சில தவிர மற்றவை இந்தி மற்றும் இந்தி சார்பு மொழிகளையே தாய் மொழியாகக் கொண்டுள்ளது. அந்த அனைத்து மாநிலங்களிலும் இந்தி மிக நெருங்கிய மொழி. வட மாநிலங்கள் அனைத்துக்கும் இந்தி இன்றியமையாதது. அதுபோல் தென் மாநிலங்களிலும் தமிழகம் தவிர இந்தி எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடம் ஆக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தி கற்காதவர்கள் என்பது இல்லாத நிலை உருவாக சாத்தியக் கூறுகள் அதிகம்.

இப்படி இந்தியா முழுவதும்தமிழகம் தவிர்த்து  ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி கற்கப் படுகிறது என்றால் அது இந்திதான். இதன் காரணமாக தேர்வுத் துறைகளும் போட்டித் தேர்வுகளை தீர்மானிக்கும்போது பொதுவான மொழி என்ற வரிசையில் ஆங்கிலத்தை முதலிலும், இரண்டாவதாக இந்தியையும் தெரிவு செய்கிறது.

இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது, இந்தி என்பதும் மற்ற மாநிலங்களை பொறுத்தவரை பயிற்று மொழி, ஆனால் இது மூன்று முதல் ஐந்து மாநிலங்களுக்கு தாய் மொழியாக இருக்கும் பட்சத்தில் இது எப்படி நடுநிலையான நிலைப்பாடாக அங்கீகரிக்க முடியும்.

எப்பொழுதோ போராடி இந்தியை வேண்டாம் என்று சொன்னது நீங்கதானே என்று கேட்பவர்களுக்கு. அது எப்படியோ போகட்டும் இந்த பதிவில் அதை பற்று நான் பேச விரும்பவில்லை. காரணம் எங்கு எனது நிலைப்பாடு பொதுவான போட்டித் தேர்வு என்று ஆனபிறகு சில மாநிலங்களின் தாய் மொழியிலும் தேர்வுக்கான கேள்விகள் ஆச்சிடப்படுவது எந்த வகையில் நியமான விசயமாய் இருக்க முடியும். அவர்களுக்கு அது எழிமையாய் அமைந்து விடாதா.

இதற்க்கு மாற்று வழி என்று ஏதேனும் உண்டா..

முதல் வழி தேசிய அளவிலான அனைத்து போட்டித் தேர்வின் கேள்வித்தாள்களும் பொதுவான ஒரே மொழியிலேயே அச்சிடப் படவேண்டும். இதியாவில் நிலவும் பல மொழி நிலையில் இதற்க்கான சாத்தியம் ஆங்கிலத்தை பொதுவாய் தேர்ந்தெடுப்பது மட்டுமே..

இரண்டு : அவ்வழி கூடாதெனில் எல்லா மாநில பொதுப் பணித்துறையினருடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட இருபத்து இரண்டு மொழிகளிலும், மாநில வாரியாக ஆங்கிலத்துடன் இணைந்ந்து ( இப்போது ஆங்கிலம் இந்தி இருப்பது போல், ஆங்கிலம் நிலையாய் இருக்க மாநில வாரியாக இரண்டாம் மொழி அம்மாநிலத்தின் தாய் மொழியில்) இரண்டாம் மொழியை மாநிலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்து தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இதுவே சரியான நேர்மையான ஒரு போட்டித்தேர்வு நடத்த வழி ஆகும்.

 இப்படி நடக்கும்போது மட்டுமே அதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் உண்மையாய் அவர்கள் திறமையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாய் அங்கீகரிக்கப்படுவர். அதுவரை அதன் முடிவுகள் அனைத்தும் ஒரு பெரும் கூட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாய் அறியப்படும்.


       கழுகிற்காக
கௌதமன் ராஜகோபால் 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)  
  

Saturday, November 23, 2013

வெடிக்கட்டும் ஒரு அரசியல் புரட்சி... !




இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!

சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?

மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் என்று சொல்பவர்கள் செதுக்கி வைத்திருக்கும் செம்மைகளின் விளைவுகள் என்ன....?

அரசு +இயல்... என்னும் அரசியல் என்பது மிகப்பெரிய கலை. அது மக்களுக்கான இயல். மக்களுக்கான சேவைகள் செய்யும் மனிதர்கள் தங்களை தங்களின் செயல்பாட்டினை அர்ப்பணிக்கும் ஒரு புனிதமான களம். இங்கே களமாடிக் கொண்டிருக்கும் வசீகர சக்திகள் கட்டியெழுப்பி இருக்கும் அரசியல் என்பது மக்களுக்கானது அல்ல..அது மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருப்பது....

ஆதி சமுதாயத்தில் மனிதன் விலங்குகளை ஒத்து திரிந்து மெல்ல, மெல்ல பண்பட்டு கல்லின் உபயோகம் அறிந்து, நெருப்பின் பயன் புரிந்து, இரும்பின் வலிமை உணர்ந்து பிறகு தன்னை உணர்ந்து தான் தனித்து இயங்க இயலாது, தான் ஒரு சமூகம், சமூகத்தை சார்ந்த வாழ்க்கையே எமக்குச் சிறந்தது என்று தெளிந்து.....

அப்படியான தெளிதலில் தன் கூட்டத்தில் வலிவாய் இருந்தவன், தம்மையும் தம் சமூகத்தினரையும் காப்பான் என்று அவனை மன்னன் என்றும் அரசனென்றும் வணங்கி எம்மை, எமக்கான வாழ்க்கையை நீ நிர்வாகம் செய்...! உமக்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று சிரம் பணிந்து தமக்குள் தாமே ஒரு தலைவனை ஏற்றுக் கொண்டு மன்னாராட்சி என்ற மாண்பினை படைத்தனர்...

காலத்தின் போக்கில் கிடைத்த புரிதல்கள், மானுடரின் புத்தியில் இன்னும் தெளிவென்னும் தீபத்தை ஏற்றி வைக்க விடிந்த ஒரு ஓப்பற்ற ஞானம்தான் மக்களாட்சி என்னும் ஜனநாயகம். மக்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவினை மக்கள் தேர்ந்தெடுத்து.. நீவீர் எம்மை ஆளும்...! இது நமது நாடு, நாங்கள் உமது மக்கள்....எம்மை நிர்வாகம் செய்ய உம்மை தேர்ந்தெடுக்கிறோம் என்ற மக்களாட்சி என்னும் ஒரு ஒப்பற்ற நிலைக்கு நகர்ந்தனர்....!

மக்களைக் காக்க காவல்துறை, நட்டின் எல்லைகளைக் காக்க இராணுவம், இப்படியாக மக்களின் குறைகளைத் தெருவுக்கு தெரு தீர்த்து வைக்க உறுப்பினர்கள் என்று ஆரம்பித்து சட்டமன்றம், பாராளுமன்றம், மந்திரிகள், முதலமைச்சர், பிரதமர் என்று இந்த கட்டமைப்பு விரிந்து பரந்து பிரமாண்டமாகிறது.

ஏன் இந்தப் பிரமாண்டம்...? யாருக்காக இந்தக் கட்டமைப்பு....?

மக்கள் நலனுக்காக....மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க....மக்களிடம் அமைதியை நிலை நாட்ட, மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தேர்ந்த நிர்வாகத் திறமையால் செம்மையாய் வழி நடத்த.....

இதற்குத் தானே...அரசியல்....? எம் நலம் பேணத்தானே அரசியல் தலைவர்கள்...? எம்மைக் காக்கத்தானே காவல் துறை...? எமக்காகத் தானே இத்தனை துறைகள்...?

ஆனால்...

என்ன நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது இப்போது...? அரசியல் என்னும் புனித வாளினை கையில் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை மிரட்டுவதும், ஒரு அரசியல்வாதி என்று தன்னை கற்பிதம் செய்து கொள்பவனை அதிகாரங்கள் குவிந்த ஒருவனாய் பார்த்து மக்கள் கூழைக் கும்பிடுகள் போடுவதும்...? மனுக்கள் கொடுத்து ஐயா.. தர்ம ராசா... எங்களுக்கு வழிகாட்டு என்று கெஞ்சுவதும்.....வெள்ளை வேட்டி சட்டைகள் கட்டிக் கொண்டு தேவ தூதர்களாய், வேற்று கிரக வாசிகளைப் போல நடந்து கொண்டு சாதாரண மக்களை கேவலமாக அரசியல்வாதிகள் பார்ப்பதும் என்று...

சீர்கெட்டுப் போய் அரசியல் என்பதற்கு ஒரு தெளிவில்லாத முரட்டு உதாரணத்தை சமகால அரசியல் வல்லாதிக்க சக்திகள் நிர்ணயம் செய்து கொண்டிருப்பது சரியான ஒரு நகர்வா...சொல்லுங்கள் என் தேசத்து இளைஞர்களே..?

என்ன செய்யப் போகிறோம் நாம்...?????



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes