Monday, January 31, 2011

கருத்துக்களை பகிர வரவேற்கிறோம்....!


அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது. அதன் பயன் பாடுகள் எந்த அளவு ஆக்கப்பூர்வ நிகழ்வுகளுக்கு பயன் தருகிறதோ  அதோ சதவிகிதத்தில் அழிவிற்கும், கேலிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இயன்ற வரை தொழில் நுட்ப வளர்ச்சியை மனித வள மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மனிதநேயம் செழித்து அதன் மூலம் தெளிவுகள் பிறந்து, மேலோட்டாமன தற்காலிக மாற்றங்கள் அன்றி வேரிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு அது எப்போதும் அழியாத நேர் நோக்கு கொண்ட மனிதர்களை தரவேண்டும் என்பது எமது உள்ளக்கிடக்கை என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.


பிரதிபலன் எதிர்பார்த்து கட்டுரைகள் வெளியிடுவதும், கருத்துரைகள் இடுவதும் என்று முழுக்க முழுக்க ஒரு அசாதாரண போக்கு பதிவுலகில் ஏற்பட்டு பிரச்சினைகளையும், பொழுது போக்குகளையும் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பதிலாக தனிப்பட்ட மனிதர்களை மையப்படுத்தியும், ஆக்கப்பூர்வமான விளைவுகளை தராத வகையிலும் இந்த ஊடகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். கழுகும் பலன்களை எதிர் பார்த்தோ கட்டாய கருத்துரைகளை எதிர்பார்த்தோ களத்தில் இறங்கவில்லை மாறக வாசிப்பாளர்களிடம் 0.01% அளவிலாவது கருத்து மாற்றத்தை உண்டு பண்ண முடியுமா? என்றுதான் தீவரமாக சிந்திக்கிறது.


தனி மரம் தோப்பாகாது, தனி மனிதர்களாக இருந்து யாரும் சாதித்ததாக வரலாறும் இல்லை.... மேலும் நாம் சிந்திக்கும் முன்னெடுத்து செல்லும் கருத்துக்கள் சரியா? தவறா? என்பதை விவாதிக்கவும், புதிய கருத்துக்களை செவி கொண்டு கேட்டு செயல்படுத்தவும்... என்ன வழி? என்ற கழுகின் யோசனைக்கு விடையாக தொடங்கப்பட்டதுதான் கூகிள் கழுகு குழுமம்.


உங்களின் கருத்துக்களைப் பகிருங்கள், மற்றைய புதிய கருத்துக்களை விவாதியுங்கள்...என்ற விண்ணப்பத்தோடு உங்களிடம் இந்த குழுமத்தை சேர்ப்பிக்கிறோம்.  கழுகு குழுமத்தில் இணைய   இந்த சுட்டியை தொடர்பு கொள்ளுங்கள்


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!Saturday, January 22, 2011

வாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...II


நேற்றைய பதிவின் நீட்சியாக இன்றும் தொடர்கிறது...கேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன?
"இருக்குற புள்ளையில நல்ல புள்ளை எதுன்னு கேட்டா கூரையேறி கொள்ளி வைக்குற புள்ளையக் காட்டுனானாம்." இது எங்கள் பக்கத்தில் சொல்லப்படும் ஒரு சொலவடை. இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தமது பிரதிநிதியைத் தேர்வு செய்யும் உரிமை பெயரளவுக்குத்தான் இருக்கின்றது. "இதோ இருக்கின்றது ஒரு லிஸ்ட்! இதில் இருந்து ஒருவரைத்தான் உன்னால் தேர்வு செய்ய முடியும். நீ விரும்பும் வேறு தரமான மனிதர்களைத் தேர்வு செய்யும் உரிமை உனக்கு இல்லை" என்கிறது இந்தியத் தேர்தல் ஜனநாயகம். அதேபோலத் 'தேர்வு' செய்ய மட்டும்தான் உரிமை... தேர்வு செய்யப்பட்ட நபர் சரியில்லை என்றால் திரும்பப் பெறும் உரிமையெல்லாம் வாக்காளனுக்கு இல்லை. எனவே "எவன் வந்தாலும் அடிக்கப் போவது கொள்ளைதான்" என்கிற விரக்தி மனோபாவத்திலேயே தமது வாக்கினை விற்றிடவும் அவர்கள் தயாராகின்றனர். 

ஆனாலும் வாக்காளர்களின் நிறையாக நான் கருதுவது அவர்கள் சில தாங்கவியலா தருணங்களில் சத்தியாவேசம் வந்ததுபோல ஒரு கூட்டு மனோபாவத்தில் (Mass psychology ) ஒட்டுமொத்தமாக ஒரு அரசியல்கட்சியைத் தூக்கி எறியும் நிகழ்வுகளை...உதாரணமாக 1996 தமிழகச் சட்டமன்றத் தேர்தல். வாக்காளர்களின் குறையென நான் நினைப்பது போதுமான அரசியல் விழிப்புணர்வின்மை...ஆனால் அது அவர்கள் குறை மட்டுமல்ல...


நிறை : கஷ்டப்பட்டாவது ஓட்டு போட விரும்பும் பொது மக்கள்..
இளைஞர்கள் ஆர்வத்தோடு பங்கேற்பது..
நாட்டின் , மக்களின்  முன்னேற்றம் பற்றி அக்கறை கொள்கிறார்கள்.
தம் ஊர் நாட்டு முன்னேற்றத்தை முன்னிறுத்தி ஓட்டுக்கு விலைபோவதில்லை..

குறை..: பாமரனுக்கு போய் சேருவதில்லை உண்மை நிலை.. இலவச மயக்கம்.. மற்றும் பண பலம் பண புழக்கம் நேர்மையை மறைக்கிறது..

படித்தவர்களும் சிலர் புறக்கணிப்பது...கருத்து கணிப்பு செய்யும் ஊடகங்களின் நடுநிலைமை பற்றிய கேள்விக்குறி...
  

செல்வி ஷங்கர்
 ஒரு வாக்காளன் தன் வாக்குரிமையை நேர்மையாகப் பயன் படுத்த வேண்டும். பரிசுகளுக்கும் பணத்திற்கும் தன் வாக்கை விலை பேசாது - தகுதியான தலைவனுக்கு வாக்களிக்க வேண்டும். நாடு வளர வேண்டும் - நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடைய ஒரு குடிமகனைத் தலைவனாக்க,  தன் வாக்கு பயன் பட வேண்டுமென்று எண்ண வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிக்காட்டவும் தயங்கக் கூடாது. சுற்றுச் சூழலையும், இயற்கை வளத்தையும் காக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். ஆற்று மணலை அள்ளி, நீர் வளத்தைப் பாழாக்குவதையும், குப்பைகளை ஆற்றிலே கொட்டி சுற்றுச் சூழலைக் கெடுப்பவர்களையும், சாயநீர்க் கழிவுகளை ஆற்றில் கலப்பவர்களையும் பார்த்துக் கொண்டிராமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


மரங்களை வெட்டுவதையும், வயல் வெளிகளை வீட்டு மனைகளாய் ஆக்குவதையும் தடுக்க முற்பட வேண்டும். குடும்ப அட்டைகளைப் பயன் படுத்தி பொதுமக்களின் உணவுப் பொருட்களைக் கடத்துவதைக் கண்டிக்க வேண்டும். நலத் திட்டங்களில் முறை கேடுகள் புகுந்து பொது மக்களின் வரிப்பணம் பாழாய்ப் போவதை நிறுத்த வேண்டும். அதற்காகத் தன் போராட்ட உணர்வை வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது. 


வாக்காளனின் வறுமையையும், ஏழ்மையையும் பயன் படுத்தி அவனைச் செல்லாக் காசாக்கி விடுவதே குறை. சிந்தித்து வாக்களிக்கக் கூடிய நடுத்தர வர்க்க வாக்களனோ - வெறுப்புணர்ச்சியில் விட்டேறியாக இருந்து விடுகிறான். அடித்தட்டு வாக்காளனோ இலவசத்தில் சோம்பேறியாகி - மதுவில் மதி அழிந்து, மாடு போல் தலையாட்டி விடுகிறான். நிறைகள் எல்லாமே இங்கே குறைகளாகிக் கோலோச்சுகிறது. இதில் வாக்காளன் வக்கற்றவனாகித் தெருவிலே நிற்கிறான். 

நிறை : ஒவ்வொரு எலக்‌ஷன்லயும்  மாத்தி மாத்தி ஓட்டு போடரது பிளஸ் 
குறை : கடைசி நேரத்துல அனுதாப ஓட்டு போடரது மைனஸ். சினிமா மோகம் மைனஸ்தான்..


குறை : அதாவது சென்னையில் சாதாரணமாக 3000 ருபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் .தன சொந்த ஊரில் அதாவது எடுத்து காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து ஓட்டு போட வேண்டும் என்றால் குறைந்தது 1000 ரூபாய் செலவழித்து ஓட்டு போட வேண்டிய நிலை ..

ஓட்டு போடுவது கண்டிப்பு கட்டாயம் என்று கூறுவது எல்லாம் ஏற்று கொள்ள முடியாது .அதுக்கு வேற லெகுவான வழிகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும் .....
 

 
நிறை : இத்தனையும் கடந்து வந்து அவன் தன் ஜனநாயக கடமையை செய்கிறான் ....அவனுக்கு நம் அரசியல் வாதிகள் சாற்றும் பட்டை நாமம்  


 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Friday, January 21, 2011

வாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...!


தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், மிகைப்பட்ட மனிதர்களின் மனதில் அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டும் உற்று நோக்கி அவர்களின் குறை நிறைகளை பற்றிய சிந்தனைகளை விவாதிக்கும் மனோபாவம் மிகுந்திருக்கிறது ஆனால் வாக்களர்களாகிய நாம் எந்த நிலையில் இருக்கிறோம் நமது பார்வை எவ்வளவு விசாலப்பட்டது? அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கட்சியை ஆட்சிப்பொறுப்பில் ஏற்றும் தகுதி படைத்த திருவாளர் பொதுஜனமாகிய நமது குறை  மற்றும் நிறைகள் என்ன?கழுகின் கேள்விகளை சமூக அக்கறை கொண்ட பதிவுலக நண்பர்கள் சிலரிடம் முன் வைத்து அவர்களின் பதிலையும் பெற்றோம்.....!  இடைவிடாத மற்ற வேலைகளுக்கு நடுவேயும் எமது கேள்விகளுக்கு பதிலளித்த அன்பின் நண்பர்களுக்கு கழுகு தனது அன்பான நன்றிகளை உரித்தாக்கும் அதே நேரத்தில் வேலைப்பளுவின் காரணமாக பதில்கள் பகிர முடியா ப்ரிய நண்பர்களுக்கும் தனது அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதோ நாம் முன் வைத்த கேள்வியும் பதில்களும்.....


கேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன?


குறை என்றால் கட்சி சார்பாகவும், பணம் வாங்கிக்கொண்டும் ஓட்டு போடுவது. அல்லது ஓட்டு போடாமலே இருப்பது.

நிறை என்றால் நடுநிலை வாக்களர்கள்தான் யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பவர்கள் ஆக இன்னும் இருக்கிறார்கள் என்பது.
  
 வால் பையன்
குறை- தங்களது உரிமையை மறந்தது
நிறை- எது நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது!


JAY
நிறை - வாய்ப்புகளை மாறி மாறி தருவது.. 
குறை - தவறுகளை மறந்து விடுகிறார்கள். சாதனைகளையும் கூட...

தமிழக வாக்காளர்கள் பெரிம்பாலோனர் அரசியலில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. காரணம் அரசியல் வாதிகள் நடந்து கொள்ளும் விதம் - பதவியில் இருக்கும் போது பதவியைப் பயன் படுத்தும் விதம் - கொள்கைகள் மாறுபட்டதாக இருப்பினும் கூட்டணி அமைக்கும் விதம் - இவை எல்லாம் சிந்தித்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என வெறுப்புற்று ஒதுங்கி - ஓட்டளிக்காமலேயே இருப்பது வாக்காளனின் மிகப் பெரிய குறை. 

அடுத்து, வாக்காளன் எக்கட்சியையும் சாராமல் இருப்பவனாகவும் மற்றும் மேலே கூறிய காரணத்தால் வாக்களிக்க விருப்பமில்லாமல் இருப்பவனாகவும் இருப்பவன் , கட்டாயத்தின் அடிப்படையில் வாக்களிக்க வந்து - வாக்குச்சாவடியில் - இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற எண்ணத்தில், கண்ணை மூடிக் கொண்டு முத்திரை குத்தும் செயலைச் செய்கிறான். இதுவும் குறை தான்.

அடுத்து, பெறுகின்ற பணத்திற்கும், இலவசப் பொருட்களுக்கும் மயங்கி வாக்களிக்கின்றான். இதுவும் குறை. 

பல வித காரணங்களினால் - வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதில்லை - ஓட்டுப் போடப் போகும் போது - பட்டியலில் இல்லையே எனப் புலம்புவது - இது மற்றுமொரு குறை. 

நிறைகள் :

பல வாக்காளர்கள் - நிலையினை அலசி ஆராய்ந்து - தீர்க்கமாக முடிவெடுத்து - வாக்களிக்கின்றனர். இது நிறை.

இலவசப் பொருட்கள் கிடைத்தாலும் சரி - கட்டாயமானாலும் சரி - கவலைப் படாமல் சுதந்திரமாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இது ஒரு நிறையே. 

சார்ந்திருக்கும் கட்சியினைப் பார்க்காமல் - வேட்பாளரின் குண நலன்களை ஆராய்ந்து, வாக்களிப்பதும் ஒரு நிறையே. 

குறைகள் உள்ளவர்கள் அதிகமா - நிறைகள் உள்ளவர்கள் அதிகமா ? சொல்ல இயலாது.

இதன் அடுத்த பகுதியும் விரைவில் வெளிவரும்.

 சக பதிவர்களே, வாக்களார்களே நீங்களும் உங்கள் குறை நிறைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள்!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, January 19, 2011

திக்கெட்டும் கொட்டு முரசே..! பெண்கள் பற்றிய ஒரு பார்வை...பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது ? மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா? ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன? கழுகுக்கு தோன்றிய கேள்விகளுக்கு ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் அல்லது கட்டுரை சமைத்தால் சரியாக இருக்குமே என்று எண்ணிய போது நமது எண்ணத்தில் சட்டென்று வந்தவர் திருமதி. கெளசல்யா.....

கட்டுரை என்றவுடன் அதுவும் விழிப்புனர்வு கட்டுரை என்றவுடன் சளைக்காமல் உடனே எழுதி கொடுத்த தோழி கெளசல்யாவுக்கு நன்றிகளை கூறியபடி கட்டுரைக்குள் போவோமா....

பெண்

இயற்கையில் நாம் பார்க்கும் நல்லவை அனைத்தும் பெண் வடிவிலேயே பார்க்க படுகிறது. எந்த இடத்தில் ஒரு பெண் மதிக்கப்படுகிறாலோ அங்கே அமைதியும், சாந்தமும் தவழுகிறது. பெண் எங்கே வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாலோ அங்கே மனிதமே  செத்துவிடுகிறது. உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்?


அழகு

காலங்காலமாகவே ஒரு பெண் என்பவள் ஒரு ஆச்சரிய பிம்பமாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாகவே எண்ணி பலராலும் அதிகமாக உற்று நோக்கப்படுகிறாள். இது நன்மையை ? தீமையா? என்றால் இன்றைய காலகட்டத்தில்   நன்மையைவிட தீமையே அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.


பெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும்  பார்க்கபடுகிறது. அழகை விட அவளிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை யாரும் முதலில் கவனிப்பது இல்லை. அவளது வெளித்தோற்றமே அதிகமாக கவனிக்கபடுகிறது. இந்த கவனிப்பு  மாற்ற படவேண்டும்.

ஆனால் ஆண்களால் மட்டும் தான் இவ்வாறு கவனிக்கபடுகிறது என்பது மிக பெரிய தவறு. ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை வைத்தே தங்களை முன்னிலைபடுத்துகிறார்கள். தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களே இதற்கு ஒரு உதாரணம்.

விளம்பர உலகம் 

ஒரு கார் விளம்பரம் என்று பார்த்தோம் என்றால் எரிபொருள் சிக்கனம், அதிகபடியான மைலேஜ் , இருக்கை வசதி, இயந்திரங்களின் வடிவமைப்பு இவற்றைப்பற்றி சொன்னால் வாங்க நினைப்பவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். ஆனால் இதைவிடுத்து நான்கைந்து மாடல் அழகிகள் அரைகுறை ஆடையுடன் பல கோணங்களில் காட்சியளிப்பதற்க்கும், காருக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை...??!!

இதில் யாரை குறை சொல்வது ?? 

மக்களின் ரசிப்புத்தன்மை இப்படிப்பட்டதுதான் என்று எண்ணி விளம்பரம் தயாரிப்பவர்களையா  ?? அல்லது அதில் நடிப்பவர்களையா ?? அல்லது அந்த விளம்பரம் வெளியிட்ட தொலைக்காட்சியையா ??ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள்.  அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் ? பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது  அப்படி  காட்ட  வைக்கபடுகிறார்கள் ...?! மீறி கேட்டால் நாகரிக உலகில் இது சகஜம் என்கிறார்கள். அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...? 

திரை படங்களில் ஆபாசம் 

திரைப்படங்களில் முன்பெல்லாம் கதாநாயகியை தவிர கூட நடனம் ஆடும் பெண்கள் தான் குறைவாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவார்கள். தவிரவும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று ஒரு பெண் இருப்பார். ஒரு பாடலுக்கு அந்த பெண் வருவதுடன் அந்த கவர்ச்சியும் முடிந்து விடும். ஆனால் இப்போது தலை கீழ் மாற்றம் எல்லா வேலைகளையும் எந்த குறையும் இன்றி நாயகியே செய்து விடுவார் கவர்ச்சிக்கு ஒரு நடனம் என்று இல்லை, வரும் அத்தனை பாடல்களுமே கவர்ச்சியாகத்தான் இருக்கும். பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.

பனி பிரதேசத்தில் காட்சிகள் இருந்தாலும், அங்கேயும் நாயகன் கோட் அதுக்கு மேல ஸ்வெட்டர், எல்லாம் போட்டு ஜம்முனு இருப்பார்....!! நாயகி அந்த குளிரிலும் அதே அரைகுறை உடையில் தான் இருப்பார்.....!!?

சென்சாரின் அலட்சியம் !?

பெண்ணை இப்படி உரித்து தான் நடமாட விடணுமா ?? ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா ?? அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொடுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு...!!? இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...?? 

நம் வீட்டு வரவேற்பறையில் ??! 

இப்போது வரும் எந்த படங்களையாவது குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியுமா?? 

தியேட்டர் சென்று பார்க்க வேண்டாம், சரி விடுங்கள். வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சியை என்ன செய்வது...? இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் ?!  பாடலை நமக்கு வழங்குபவர்கள்  போட்டு வரும் உடை பார்க்க சகிக்காது. வீட்டினுள் காலை பரபரப்பில் பலர் வீட்டிலும் பாடல் காட்சிகள் தான் ஓடி கொண்டிருக்கும். இறுக்கமான உடையுடன் அவர்கள் பேசும் விதம் மிக மோசமாக இருக்கும். நடு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆபாசத்தை என்ன செய்ய போகிறோம்? 

இப்படி திரைப்படம் , தொலைக்காட்சி, விளம்பர உலகம் எங்கும் உடை அநாகரீகம் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது. 

* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு   ஏதும் கிடையாதா?? 
*   மக்களின் ரசனை இதுதானா ? இதைதான் விரும்புகிறார்களா ?? 
*  இது போன்ற உடைகளை  நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா??

கேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....??!!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


கழுகிற்காக
கௌசல்யா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes