Thursday, March 29, 2012

மக்களின் போராட்டமும் அதை திசை திருப்பி விட்ட அரசின் எதேச்சதிகாரமும்...! கூடங்குளம் ஒரு பார்வை..!


ஜனநாயகம் என்ற பெயர் தாங்கிய ஒரு சர்வாதிகார கட்டமைப்புக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இதுவரை நாம் கருதியது இல்லை. அப்படி கருதக்கூடிய சூழல்கள் அனேகமாக வந்திருக்கவில்லை இல்லையேல் எமது புத்திகளுக்கு அது எப்போதும் மறைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்திய ஊடகங்கள் அதுவும் குறிப்பாய் தமிழ்நாட்டின் ஊடகங்களில் மிகுதியாய் நடத்தப்படும் வேசித்தனத்தை வார்த்தைகளால் மட்டும் விவரித்து விட முடியாது.

ஆமாம்....

கூடங்குளம் அணு உலை பிரச்சினையை ஏடுகளில் வாசித்து விட்டு இது சரி, தவறு என்று கூப்பாடு போடும் என் மானமுள்ள தமிழன், இதே இந்தப் பிரச்சினை யாரோ ஒரு வடநாட்டு ஹசாரேயாலேயோ அல்லது துக்கா ராமாலேயோ கையில் எடுக்கப்பட்டு, இந்திய தேசத்தின் வட மாநிலங்களில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடந்திருக்குமேயானால்... ஒவ்வொரு தமிழனும் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு தெருவில் நின்று போராடியும், மெரினாவில் வரிசை கட்டி நின்று உரக்க கூச்சலிட்டும் தங்களின் இந்திய தேசிய உணர்வை வெளிக்காட்டி இருப்பார்கள்...

ஆனால் இது இந்தியாவின் தென் கோடியில் தமிழர்கள் ஒன்று கூடி முன்னெடுத்த போரட்டம் என்பதாலேயே இது இந்தியாவின் பிரச்சினையாய் பார்க்கப்படாமல் போனது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்தானே...?

கூடங்குளம் பிரச்சினையில் அணு உலை அமையக்கூடாது அது எல்லாவகையிலும் பாதுகாப்பற்றது, இயற்கையை மிஞ்சிய சக்தி என்று எதுவுமில்லை, மேலும் இயற்கையின் முன்னால் அறிவியல் வலுவிழந்து போய்விடும் என்று தன்னின் சுயத்திலிருந்து ஏற்பட்ட உள்ளுணர்வாலும், வரலாற்றின் பக்கங்களில் அணு உலைகள் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்ற புள்ளி விபர அறிவுகள் கொடுத்த மிக பயங்கரமான பய உணர்வின் காரணமாகவும், ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய புகிஷிமா விபத்தின் தாக்கமும் ஒன்று கூடி....

ஒரு சத்திய போராட்டமாக தென் தமிழகத்தின் கோடியில் உருவெடுத்தது. அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் இந்திய பேரரசின் அறிவியலாரால் பாதுகாப்பான அணு என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா...?  என்ற எம் மக்களின் பாமரக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

ஆயிரக்கணக்கான ஊழல்களை செய்வதில் கைதேர்ந்திருக்கும் இந்திய அரசியல் தலைகளாலும், அரசியல் தலைகளின் கைப்பாவைகளான  விஞ்ஞானிகளாலேயும் உலக நாடுகளால் பாதுகாப்பற்றது என்று கருதி கைவிடப்படும் அணு உலைக்கு மாற்று என்ன...? என்று சிந்திக்க முடியாமல் போனதற்கு காரணமாய் பல சர்வதேச சதிவலைகளும், கட்டமைப்புக்களும் இருப்பதை எம்மால் தெளிவாக உணர முடிகிறது.

ஒரு போராட்டத்தை செய்தித்தாள்களிலும், ஊடகங்களிடம், அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் இருந்து தெரிந்து கொண்ட எமக்கு.....இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் அது தீவிரவாதிகளின் போராட்டமாய் தமிழக அரசால் சித்தரிக்கப்பட்டு, நக்சலைட்டுக்களின் தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வடிவமைக்கப்பட்டது என்ற கதை வசனம் எழுதப்பட்டு, அது மத்திய அரசால் வழிமொழியப்பட்டு எம்மக்களின் உறுதித் தன்மையை அது அசைத்துப் பார்க்க முற்பட்ட போது....ஒரு நேர்மையான போரட்டத்துக்கு இந்திய தேசம் கொடுக்க முயலும் கேவல அரசியல் என்னவென்று மெல்ல பிடிபட ஆரம்பித்தது.

செய்திகளாய் விசயத்தை உள்வாங்கிக் கொண்டு அதன் தாக்கத்தை ஒரளவிற்கு புத்தியில் ஏற்றிக் கொண்ட நாம், அந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் இந்திய அரசு தன் சொந்த குடிமக்களின் மீது ஏவி விடும் அதிகார துஷ்பிரயோகத்தின் சீற்றங்களைப் பற்றி முழுதாய்  உணர்ந்திருக்கவில்லைதான்....

ஆனால்...

கழுகிற்காக அந்த மண்ணின் மைந்தர் கூடல் பாலாவை அலைபேசியில் நாம் எட்டிப்பிடித்த போது மறுமுனையில் ஒலித்த அந்த குரலில் இருந்த வேதனையும், கண்ணீரும், அரசால் இழைக்கப்பட்ட துரோகமும், சொல்ல முடியாத உணர்வுகளை எமக்குள் புகுத்தி புரட்டிப் போட்டன....!

இந்திய தேசத்தின் மக்களாகிய நாங்கள் தேசத் துரோகிகளா?

என்ற கேள்வியோடு பேசத் தொடங்கியிருந்த பாலாவின் குரலில் சீற்றம் இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சோகம் பரவிக்கிடந்ததை மறுப்பதற்கில்லை. இது தீவிரவதிகளின் போராட்டம் என்று அரசு நம்மையும் நம் மக்களையும் கொச்சைப் படுத்திதான் விட்டது.

ஒருபோரட்டக் களத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் பந்தலில் பலர் வந்து செல்லக் கூடும், அதில் அரசியல்வாதிகள் இருக்கலாம், வியாபரிகள் இருக்கலாம், பல்வேறு போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம்...இதில் யாரோ ஒரிருவரை அடையாளம் காட்டி ஒட்டு மொத்த மக்களின் உணர்வையும் சாகடிக்க முயன்றிருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.

கடந்த ஆறேழு  மாதங்களாக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வரும் எம்மக்கள் இதுவரை அரங்கேற்றிய வன்முறைச் செயல்கள் எத்தனை என்று யாரேனும் பட்டியலிட்டுக் கூற முடியுமா? 


ஜனநாயக ரீதியாக நாங்கள் நடத்தி வரும் போரட்டத்திற்கு எங்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா என்று கூடல் பாலா நம்மிடம் கேட்டு விட்டு.. சலனமின்றி இடைவெளி விட்ட ஒரு 2 நொடி மெளனம்...கடுமையான வலியை எமக்குள் பரவவிட்டது......

இதற்கெல்லாம் எங்களுக்கு கிடைத்த பரிசு...

எங்கள் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடுமையான வழக்குகள், இந்திய தேசத்துரோகிகள் என்னும் பட்டம் மேலும்  இந்தியாவிற்கு எதிராய் போர் புரிதல் என்பன போன்ற கடுமையான வழக்குகள். இப்படி அப்பாவி மக்களின் மீது போலியான வழக்குகளைத் திணிக்கும் இந்த மத்திய, மாநில அரசுகள் உண்மையான தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் இந்த தேசம் முழுதும் உலாவவிட்டுக் கொண்டிருக்கிறதே.. இது பற்றி ஊடகங்களும் நடு நிலையாளர்களும் ஏவிலாவாரியாக பேசுவார்களா...?...? என்றார்...

நாங்கள் போராடியது அணு உலைக்கு எதிராக... அணு உலை பாதுகாப்பனது என்று கூறும் அறிவியலாரும், அரசியல்வாதிகளும் கூடங்குளம் பகுதியில் இடம் வாங்கி இங்கேயே வசிக்க முன் வருவார்களா? என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த பாலா...

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நள்ளிரவிலும் வீட்டுக் கதவை உடைத்து கைது செய்த வன்போக்குகளும், உணவருந்திக் கொண்டிருந்தவர்களை தர தரவென்று கையைக் கழுவாமலேயே இழுத்துச் சென்ற காவல்துறையின் சர்வாதிகாரமும் குறைவர நிகழ்ந்தேறியதைச் சொன்ன போது எமது தொண்டை வறண்டு போய் அனிச்சையாய் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

முதலில் இது ஒரு மதம் சார்ந்தவர்கள் செய்யும் போராட்டம் என்று சித்தரித்த அரசு, பின் அது வெளிநாட்டு பணம் கொண்டு நடத்தப்படும் போராட்டம் என்று கூறி இந்த தேசத்தின் பிரதமரே அந்த அபாண்ட குற்றச்சாட்டை நம் மீது வைத்தார்... , அதுவும் வீரியம் இழந்து போகவும்,  கடைசியில் நாங்கள் வாக்களித்து நம்பிக்கையோடு அரியணை ஏற்றிய எமது சகோதரியின் அரசு....(!!!!????) எடுத்திருக்கும் கேவலமான ஆயுதம்தான்....

போரட்டத்திற்கு தீவிரவாத வர்ணம் தீட்டும் ஆயுதம்....!

கடந்த சட்ட மன்றத் தேர்தலுக்கு வாக்குகள் கேட்டு வந்த ஜெயலலிதா, நான் உங்கள் சகோதரி, இந்தப் பகுதியில் அணு உலை வருவதை எனது அரசு தடுக்கும், என்னை அரியணையில் ஏற்றுங்கள் நான் உங்களில் ஒருத்தி என்று வாக்குகள் கேட்டு கையேந்தி வந்தார்.


ஆனால்...


கடைசி வரையில் போராட்டக்குழுவினரை சாந்தப்படுத்தவோ அல்லது சமரசம் செய்யவோ அவர் முயலாமல் போரட்டத்தை ஆதரிப்பவராகவே தமிழக மக்களின் முன் தன்னைக் காட்டிக் கொண்ட அவர்...

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வென்றவுடன்......(!!!!??????) ஒரு சத்திய போராட்டத்தின் மீது எந்த வித முன் அறிவிப்புமின்றி தனது காவல்துறையை ஏவிவிட்டு தனது நன்றியுணர்ச்சியை மிக நன்றாகவே காட்டிவிட்டார்....!

வீட்டுக்கு ஐநூறு ரூபாய் என்று நாங்கள் வசூலித்துதான் நாங்கள்  போரட்ட பந்தலையே அமைத்தோம். போரட்டத்தை முன்னெடுக்கும் மண்ணின் மைந்தர்கள் தங்களின் சொந்த பணத்தை வைத்து நடத்தும் ஒரு போரட்டத்திற்கு அதிகார மையம் கொடுத்திருக்கும் அடையாளம் வரலாற்றில் கருப்பு எழுத்துக்களில் கண்டிப்பாய் பொறிக்கப்படவேண்டியவையே....

......தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த கூடல் பாலாவுடன் பேசி விட்டு அலை பேசியை அணைத்து  வெகு நேரம் ஆகியும் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு கேவல அரசியலின் துர்நாற்றம் எமது மூக்கினை துளைத்துக் கொண்டுதான் இருந்தது.

நிர்வாகம் என்றால் என்னவென்றறியாத ஜெயலலிதாவின் அரசு...
ஜனாநாயக ரீதியாய் இப்படியான ஒரு மன உளைச்சலுக்கு மக்களை ஆட்படுத்தி இருப்பது ஆச்சர்யமில்லைதான். சமரசமாய்  பேசி தீர்வுகளை நோக்கிப் பயணிக்கும் திராணி அவருக்கு இல்லை என்பது இதன் மூலம் மட்டுமின்றி கடந்தகால அவரின் ஆட்சிகளில் அவர் அரங்கேற்றியிருக்கும் பல கலாட்டக்களின் மூலமும் நாம் தெளிவாய் உணர முடியும்.

அன்பன மக்களே...

1) கூடங்குளம் அணுமின் நிலையம் அமையாமல் இருப்பதாலா நமக்கு மின் தட்டுப்பாடு வந்தது?

2) அணுமின் நிலையங்களே இல்லாத மாநிலங்களில் எல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் மின் விநியோகம் இருக்கிறதே எப்படி என்று ஒரு நாளேனும் சிந்தித்தீர்களா?

3) கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்போகும் மின்சாரத்தில் ஒரு சிறிய அளவிலான மெகாவாட் மின்சாரம்தான் தமிழகத்துக்கு அதிகபட்சமாய் கொடுக்கப்படும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

4) ஏற்கெனவே நெய்வேலி நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் முழுப்பயன்பாடும் தமிழகத்திற்குதான் கிடைத்துக் கொண்டிருக்கிறதா?

5)அணுக்கழிவுகள் ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் காரணமாக ஏற்படப்போகும் நோய்களை எந்த அளவுகோலையும் வைத்தும் அளக்க முடியாது மேலும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாய் நமது சந்ததியினரை குறைபாடுள்ளவர்களாகவும், நோய் உள்ளவர்களாகவும் படைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

6) உலக அரங்கில் தன்னை ஒரு சட்டாம் பிள்ளையாக நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயன்று வரும் இந்தியப் பேரரசு அதன் உள் கட்டமைப்பில் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பெறும் ஊழல்களையும், அனாவசிய செலவுகளையும் ஊதாரித்தனங்களையும், இலங்கை போன்ற அண்டை நாடுகள் கேட்காமலேயே செய்யும் கேடு கெட்ட உதவிகளையும் நிறுத்தி விட்டு....தன் சொந்த மக்களுக்கு மின்சாரத்தை வழங்க மாற்று வழிகளை ஆராயுமா?

7) தமிழர் பிரச்சினைகளின் போதெல்லாம் தேசப்பற்றைக் காட்டுகிறேன் என்ற போர்வையில் காங்கிரசை சேந்த சத்தியசீலன் போன்றவர்கள் ஊடகத்திற்கு தன் கட்சி தலைமை கேட்டுக் கொண்டபடி பேட்டிகள் கொடுத்து விட்டு வீட்டில் உணருந்தும் போது அவர்களின் மனசாட்சிகள் அவர்களை சுடுமா? சுடாதா?

8) ஐயா பெரியார், காமராசர், அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும் சரி அரசியலில் ஈடுபட்டு ஆளத்துடிக்கும் கட்சிகளும் சரி....தமிழர்களின் ஒரு பிரச்சினையையாவது அரசியல் ஆதாயம் தாண்டி உணர்வோடு இதுவரை அணுகி இருக்கிறார்கள் என்று உங்கள் மனசாட்சிகள் சொல்லுமா?

இத்தனை கேள்விகளையும்  இந்தக்கட்டுரை முன் வைத்தாலும் உள்ளுக்குள் இருக்கும் இயலாமையும், தமிழ் மக்கள் முழுதுமாய் ஒன்றிணைந்து அணு உலைக்குப் எதிராய் போராடவில்லையே என்ற வலியும் வேதனையும் எம் சிந்தனைகளை முடமாக்கித்தான் போடுகின்றன...

உண்ணாவிரதத்தை தற்போது போராட்டக்குழு நிறுத்தியிருக்கிறது...போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற ஒற்றை வாக்கியத்தோடு....

எது எப்படி இருந்தாலும்...


அணு உலை பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த தேசம் முழுதும் கொண்டு சேர்த்த வீரத் தமிழன் உதயகுமாரும், அவருக்கு உறுதுணையாய் நின்ற, நிற்கும் அந்த மண்ணின் மைந்தர்களும்.....என்றென்றும் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள் என்பது மட்டும்... உறுதி..!


பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள், இதன் கருத்தையோ அல்லது இந்தக் கட்டுரையையோ மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு சேர்ப்பதின் மூலம் நமது உணர்வுகளை கோடாணு கோடி தமிழர்களுக்கு கொண்டு சேர்த்து நமது மானசீக ஆதரவை கூடங்குள அணு உலை எதிர்பாளர்களுக்கு தெரிவித்தவர்களோவோம்...!(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


Tuesday, March 20, 2012

அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...!
அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான  ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம்,  யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு  போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.      

அடடா அமராவதி!

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.             

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும்அழகே அழகு !          

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும்  பாசனம் பெற்றன. 

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?! 

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 தி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து  போய் கொண்டிருக்கும் மக்கள் !!!  இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...என்று அரசு இதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ  மன்னர்கள்  காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !! 

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், நடக்கும் மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்சனைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இவையே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!

கழுகிற்காக
கெளசல்யா


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


Monday, March 19, 2012

அமெரிக்கர்களின் இரக்கமும்! இந்திய மக்களின் நிராகரிப்பும்!
வணக்கம் இந்திய பெருங்குடி மக்களே! மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றியெறிய இந்த சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வந்தது, அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தார்கள் வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள் வியட்நாம் சுதந்திரம் பெற்றது.


ரத்த உறவும் இல்லை தன் நாட்டை சேர்ந்தவர்களும் இல்லை தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள்  கொதித்தார்கள் ஆனால் சொந்த நாட்டின் சகோதரர்கள் இலங்கை வீதிகளில் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டு சிறுமிகள் கூட கற்பழிக்கப்பட்டு நடுவீதியில் பிணமாய் தூக்கியெறிந்த புகைப்படம், நகரும் படங்கள் கண்டும் பிற இந்தியர்கள் மௌனமாய் இருப்பதின் மர்மம் என்ன? அகிம்சை நாடு என கூறும் நாட்டில் வாழும் உங்கள் மனதில் ஈரம் என்பது இல்லையா? இல்லை தமிழனுக்காக நாம் வருந்தக் கூடாது என்கிற எண்ணமா? இந்தியாவில் தமிழன் தீணடத்காதவனா?

ஆஸ்திரேலியாவில் அடிபட்ட பணக்கார வடஇந்திய மாணவனுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார், கண்ணீர் உவர்க்கிறார் கண்டனம் தெரிவிக்கின்றன இந்திய பத்திரிக்கைகள் ஏழை தமிழன் உயிர் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா….இந்திய மக்களே இந்த தமிழ் சமுதாயம் உங்களிடம் கண்ணீருடன் கேட்கிறோம்

குஜராத் பூகம்பத்தில் அதிக நிதிகொடுத்த மாநிலம் தமிழநாடு. கார்கில் யுத்தத்தில்
அதிக நிதி கொடுத்த தமிழ்நாடு, கன்னடர், ஆந்திரர் மலையாளி, என வந்தவரை வாழ வைத்த தமிழநாடு இன்று இவனுக்காக ஒரு எதிர்ப்பு குரல் இல்லாமல் போய் விட்டதே மற்ற மாநில மக்கள் மனதில் தமிழனுக்கு தரம் இல்லையா…வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து சுகமாக வாழும் நீங்கள்  தமிழனுக்காக ஒரு குரல் கொடுக்க மாட்டீரா பிரதமரின் மனதை அசைத்திட தமிழனின் குரல் போதாது..போதாது ஒட்டு மொத்த இந்தியாவே பொங்கியெழுந்தால்தான் இத்தாலி ராணியின் கைப்பாவை மன்மோகன் சிங்கின் மனதில் துளியாவது ஈரம் சுரக்கும்.

இந்தியாவில் நாங்கள் இருக்கிறோம் என்று உங்களை நாங்கள் நம்ப வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் அங்கு வாழும் எம் சகோதரர்கள் அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடங்களை உருவாக்க நாம் முனைய வேண்டும் தமிழர்களை தவிர இந்தியர்கள் யாரும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது உங்கள் தேவைகளுக்கு என்றால் தமிழன் வேண்டும், ஆட்சி நிலைக்க தமிழன் வேண்டும் அப்படித்தானே…

அவனுடைய துயரங்களில் நீங்கள் எந்த பங்களிப்பும் செய்ய மாட்டீர்கள் பிறகு நாங்கள் எப்படி இந்தியர் என்று எப்படி கூறுவது? உங்கள் கொடியை நாங்கள் எப்படி தேசிய கொடியாக ஏற்றுக்கொள்வது...? எங்கோயோ பிறந்த தாகூரின்  தேசியகீதத்தை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிந்தியுங்கள் தோழர்களே! எங்கள் கண்ணீருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

ஒரு இனத்தையே அழிக்க துணைபோன தமிழக அரசியல்வாதிகள் மிச்சமிருக்கும்
தமிழ்மக்களை தீக்குளித்து காப்பற்ற போகிறார்களா….இல்லை..இல்லை நாங்கள்
அவர்களை நம்பவில்லை, இந்திய மக்களே உங்களை தமிழர்களாகிய நாங்கள் நம்புகிறோம். உங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பு குரலே அவர்களை காப்பாற்றும் இந்திய சகோதர சகோதரிகளே உங்கள் சகோதரர்கள் நாங்கள் என்றால் எங்கள் ரத்த உறவுகள் உங்களுக்கு உறவுகள் இல்லையா? இலங்கையில் வாழ்வது..தமிழர்கள் என்று நினைக்க வேண்டாம் அவர்களும் மனிதர்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.

ராசபக்‌ஷே உதவமாட்டார் விடுதலைபுலிகளோ உதவும் நிலையில் இல்லை அப்படியே ராஜபக்ஸே பச்சாதாபம் காட்டுவது போலவும் பரிதாபம் கொள்வது போலவும் நடித்து அவர்களை ஏமாற்றி ஆடு மாடுகளைப்போல் அடிமைகளாக்கிவிடலாம் சொந்த மண்ணில் தான் உழுத மண்ணில் தான் வாழ்ந்த பிரதேசத்தில் அடிமைகளாக தமிழ்ச்சமுதாயம் மலர  வேண்டுமா நாளை நம் குலப் பெண்கள் ஈழ வீதியிலே மானத்துடன் வாழ முடியுமா…?

ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்த நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா தமிழ்மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கைகுலுக்குவது என்ன நியாயம்? சோனியாவுக்கு இந்திய வரலாறு தெரியாது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரியாதா…..தமிழக பயணத்திலே மேலாடையில்லாமல் திரிந்த தமிழர்களைப் பார்தது கண்ணீர் விட்டாரே மகாத்மா இன்று அமிலங்களை தமிழர்கள் மேல் தெளித்து அவர்தம் தோலையே உரித்த காட்சி பார்த்து உங்களுக்கு கண்களில் கண்ணீர் வரவில்லையா இல்லை உங்கள் மனம்தான் கல்லாகிப்போனதா ஆளும் காங்கிரஸாரே…..!

இந்திய மக்களே! உலக மக்களே! உங்களின் குரல் தமிழர்களின் வாழ்வை காக்க வேண்டும் உண்மைக்கு குரல் தாரீர்! கல் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி அம் மொழி பேசும் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர குரல் தாரீர்! அவர்களின் வாழ்வு சிறக்க குரல் தாரீர்! ராஜபக்ஸேவை போர்க் குற்றவாளி என அறிவிக்க, மத்தியில் ஆளும் அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி குரல் தாரீர்! தாரீர்! தாரீர்!


கண்ணீருடன்....
தமிழக மக்கள்


கழுகிற்காக
வீடு K.S.சுரேஸ்குமார்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)


Friday, March 16, 2012

தெர்மோக்கோல் என்னும் அரக்கன்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...


அன்பர்களே....

இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது. 


இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..
இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாமவாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.

இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..

நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற  இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். 

பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு .... மக்கும் தன்மையே கிடையாது...

ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...
இவை அனைத்தும் பூமிக்கு கேடு...


வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில் 
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக 
செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. 

முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி 
செய்யப்பட்டவையே...

இவற்றை நாமஎப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர 
பயன் தரும் பொருட்கள் செய்து...பணம் ஈட்டலாம்...

3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...
4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல்...
வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)
  
5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ,,
அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள் 
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும். 

8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

9.நாமஒரு புனல் போன்று தகரத்தில் செய்து அதில் கரி கொண்டு நிரப்பி 
அதனுள் இதை எரிய விடலாம்...(கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால்)
(பார்க்க படம்.)

10.மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்க்-களுக்கு சென்று பார்க்கவும்...


விடியோக்கள்  பார்க்க


அன்பர்களே...பொதுவாக நாமஅன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் ... பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்...ஆனால் இந்த தெர்மொகோல் 
பூமியில் ஒரு போர்வை போல்,,,படர்ந்து நம் இயற்க்கை அன்னையை  அழித்துக்கொண்டிருக்கிறது...இதை படிக்கும் அன்பர்கள்...சற்றே  சிந்தித்து...இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...

இவற்றை பாதுகாப்பாக அழிக்க வேறு ஏதாவது யோசனைகள் இருந்தால் கமெண்ட்-ல் பகிரவும்...இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்... 

தமிழக பதிவர்களுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை...

அன்பர்களே..
தற்சமையம் தமிழகத்தில் மின்வெட்டு மிக கடுமையாக....
இருக்கிறது...இந்த சமயத்தில்...தடுப்புஊசி,,,மற்றும் திரவ மருந்துகள் ...
குளிர் பதனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.....
சரியாக...குளிர் பதனம் கடைபிடிக்காத மருந்துகள்...வீனாகி,,
சரிவர செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது...

எனவே இவ்வகை மருந்துகள் வாங்கும்போது....
மருந்து கடைகள்...ஜெனரேட்டேர்மூலம் இயங்கும் 
கடையாக பார்த்து வாங்கவும்....
 கழுகிற்காக
J.நக்கீரன்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes