Sunday, April 20, 2014

மோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...!


நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.


என் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்.... இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. என் வீட்டுக்கு வெளியேயும் பக்கத்து வீட்டிலும் கூட இதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது. என்னைகீழே தள்ளி மிதித்து முசல்மான் நாயே என்று ஒருவன் கத்தியபடியே என் வலது காலை வெட்டி எறிகிறான்....

கையெடுத்து கும்பிட்டு விட்டுவிடும்படி என் பிள்ளை கதற, ஈவு இரக்கமின்றி பிள்ளை மீது பெட்ரோல் ஊற்றி எரித்தே விடுகிறான் ஒரு பாவி.....

காரணம்.........

கோத்ராவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இந்துப் புனிதப் பயணிகள் 57 பேர் ரயில் பெட்டியோடு எரிக்கப்பட்டு விட்டனராம். அவர்கள் வந்த ரயில் பெட்டியில் எப்படி தீ பற்றிக் கொண்டது என்று விசாரிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இதைச் செய்யது முஸ்லீம்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதி ஒட்டு மொத்த குஜராத் வாழ் இஸ்லாமியர்களையும்  அடித்துக் கொல்கிறார்கள். படுகொலைகள் செய்கிறார்கள்....அப்போது எதுவுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எனக்கோ, அல்லது நம் உறவுகள் யாருக்கோ நான் மேலே கூறிய யாவும் நடந்திருந்தால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் நண்பர்களே....?????

ஒரு மாநிலத்தில் இப்படி கட்டுக்கடங்காமல் மதத்தின் பேரால், அனுமானத்தின் பேரால் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் அதுவும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது வேடிக்கைப் பார்த்த அந்த மாநிலத்தின் காவல் துறையையும்,  பாராமுகமாய் இருந்த அந்த மாநில முதலமைச்சரையும், நீங்களும் நானும் மன்னிக்க முடியுமா என் சொந்தங்களே....?

நரேந்திர மோடி......மட்டும் நினைத்திருந்தால் கலவரம் தொடங்கியதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். தனக்கும் தன் மாநில அரசுக்கும் வக்கில்லை என்றால் அவர் இந்திய பெருதேசத்தின் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்திருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை.  இது நிகழட்டும் என்று அனுமதிக்க விட்ட அவரின் மனோநிலையின் அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சித்தாந்தம் பெரு நாகமாய் படுத்துக் கிடந்ததே அதற்கு காரணம். 

இன் த நேம் ஆஃப் ஃபெய்த் என்ற டாக்குமென்ட்ரி காணொளியைக் தொடர்ச்சியாய் என்னால் காணவே முடியவில்லை. வெறித்தனமாய் சூறையாடப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அங்கே வெகு கோரமாய் காணமுடிந்தது. பாலகர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் மழலை மொழியில் அந்த வன்முறைச் செய்திகளைக் கேட்டறிந்த போது கூனிக் குறுகிப் போனேன் நான். ஈழத்தில் நடத்தப்பட்ட வன் கொடுமைகளுக்கு யாதொரு குறைவும் இல்லாமல் குஜராத்தில் ஈனத்தனமான மதவெறியாட்டம் நடந்தேறியிருக்கிறது என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. இலங்கை வேறு நாடு, வேறு சட்டம், வேறு நோக்கம், என்று அங்கே எல்லவிதமான கொடுங்கோல்களும் நிகழ சாத்தியமான சிங்களப் பேரினவாத அரசு இன அழிப்புக்கு பின்னால் இருந்ததனால் அப்படி நிகழ்ந்தேறியது என்று எண்ணி மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர நமக்கு சாத்தியமிருக்கிறது.


குஜராத் அப்படி அல்ல.... அது இந்திய தேசத்தின் வலப்பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில்தான் நம் தேசப்பிதா பிறந்தார். ஒழுக்கம் கெட்ட வேலைகளை அண்டை நாடுகளில் செய்து உலக அரசியல் அரங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளச் செய்யும் ஈன வேலையை இந்திய அரசு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலத்தில் செய்யாது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் நிறைய உண்டு. சாத்வீக பூமி, பாரத மாதா, ஜனநாயகமுள்ள மதச்சார்பற்ற பூமி என்றெல்லாம் சொல்லி மார்தட்டிக் கொள்ள நிறைவே சமாச்சாரங்கள் இருக்கும் இந்த இந்திய தேசத்தில்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்ந்தேறி இருக்கிறது.

குஜராத் கலவரத்திற்குப் பிறகு தொடர்சியாய் மோடிஜிதான் அங்கே முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அங்கே வாக்களிக்கும் அத்தனை பேரும் எந்தவித அச்சுறுத்துதலும் இல்லாமல்தான் வாக்களிக்கிறார்களா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்......இவ்வளவு பெரிய ஒரு வன்முறையை நிகழவிட்டு வேடிக்கை பார்த்த நரேந்திர மோடியை எப்படி இந்தியாவின் பிரமராக நாம் ஏற்றுக் கொள்வது என்பதுதான் எனது கேள்வி. சுதந்திர இந்தியாவை அதிக நாட்கள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு செய்த மிகப்பெரிய அநீதி என்ன தெரியுமா? 

பாரதியஜனதா என்ற மதவாதக் கட்சியை வளரவிட்டதோடு மோடி போன்றவர்களை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்தால் என்ன என்று சாமனியர்களையும் நினைக்க வைத்ததுதான். ஆமாம்....பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி பிரதமரானால் அதற்கு முழு முதற் காரணம் மோடியின் திறமையோ அல்லது பாரதியஜனதா கட்சியின் சீரிய கொள்கைகளோ காரணமாகாது. காங்கிரஸ் என்னும் களவாணிக் கட்சியில் பெருத்துப் போன முதலாளி வர்க்கம் பாட்டாளிகளைப் பஞ்சப்பரதேசிகளாக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை பெரிய மறுமலர்ச்சியை கொண்டு வந்து நாட்டை சுபிட்சமாக்கி விட்டதைப் போல பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவல நிலைதான்....இன்றைக்கு பாரதிய ஜனதாவை கொம்பு சீவி வளர்த்து விட்டிருக்கிறது.

சனாதான தருமம் எனப்படும் இந்து மதமும், அதன் பூர்வாங்க தத்துவங்களும் மனிதர்களைப் போற்றவும், மனிதர்களை வழிநடத்தவும், நிம்மதியாய் அவர்கள் வாழவுமே பல சூட்சுமங்களை சட்டதிட்டங்களாய் சொல்லி வைத்திருக்கிறது. யார் தோற்றுவித்தது? எப்போது தோன்றியது...? என்றெல்லாம் ஆருடம் சொல்ல முடியாத தொன்மையான சிந்து வெளிப்பகுதி மக்கள்தான் பிற்காலத்தில் இந்துக்கள் ஆகிப் போனார்கள். கால மாற்றத்தையும், கலாச்சார நகர்வுகளையும் ஏற்று அனுசரித்து காலத்துக்கு ஏற்றார் போல சகமனிதர்களோடு கூடி வாழும் ஒரு மிகப்பெரிய புரிதலைச் சொல்லிக் கொடுத்த சனாதன மார்க்கத்துக்கு இன்று உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், அந்த மார்க்கத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை.

இந்து மதம் எப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே போல இஸ்லாமும், கிறிஸ்தவமும், பெளத்தமும் கூட அந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன் என்று கூச்சலிட்டிக் கொண்டிருப்பவர்களால் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அண்டை வீட்டுக்காரனை நேசி என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அவரவரின் மார்க்கம் அவரவர்க்கு என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அன்பே சிவம் என்று போதனையைச் சொன்னவர்களும்.......எப்படி வன்முறை கும்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்...? சதித்திட்டம் செய்து தன்னை அரியாசனம் ஏறவிடாமல் செய்த தாயின் மீது கொண்ட பாசத்திற்காக பதினான்கு வருடம் காட்டிற்கு சென்ற இராமபிரான் என்ற புண்ணியனை தங்களுக்கு அடையாளமாக்கிக் கொள்ள இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது...? குகனோடு ஐவரானோமென்று  சமத்துவம் பேசிய சகாப்தனா கேட்டான் நான் பிறந்த இடத்தில் எனக்கு கோயில் வேண்டுமென்று....? 

பாபர் மசூதி இடிக்கப்பட்டது மனிதக்கோளாறினால்தானே அன்றி தெய்வ விருப்பத்தினால் அன்று!  ஆக்கிரமித்து சகமனிதனை அடக்கி ஆள ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளம் சார்ந்த ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அந்த கூட்டம் எப்போதும் உணர்ச்சியின் பால் அடிமைப்பட்டுக் கிடக்கவும் அறிவைப் பயன்படுத்தாமல் இருக்கவும் கடவுள் மிக பிரமாண்டமாய் வடிவமைக்கப்பட்டு வெகுஜனத்தின் முன்பு இறக்குமதி செய்யவும் படுகிறார்.

குஜராத்தை இதுவரை ஆண்ட நரேந்திர மோடி அந்த மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மூன்று மாநிலம் என்ற அந்தஸ்த்துக்குள் கூட  கொண்டுவர முடியவில்லை. மோடிக்கு காற்றடைத்து கொடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூப பிம்பம் பொய்யானது என்பதை வரவிருக்கும் பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டிக் கொடுக்காவிட்டாலும்  ஒருவேளை மோடி பிரதமரானால் அவரின் மோசமான கொள்கைகளால் ஏற்படப்போகும் இந்த தேசத்தின் வீழ்ச்சி அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறது.


மனசாட்சி உள்ளவர்களே....நியாயமான முடிவெடுங்கள்....!


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்...)
4 comments:

Unknown said...

இஸ்லாமியக் குடும்பத்தினர் ஆயிரம் பேர் வன்முறையால் உயிரிழந்ததை நினைத்து என்போன்ற பெரும்பாலான இந்துக்களும் வேதனைப் படுகிறார்கள். தனது மதத்தவர் 60 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தால் மற்றவர்களும் அப்படிச் செய்பவர்கள்தானே. அந்த நிகழ்வுக்குக் காரணமானவர் யார் என்பதும் அதற்காக எற்படுத்தப்பட்ட கமிஷன்கள் பற்றியும் எவரும் பேச முன்வருவதில்லை.

மோடி 24 மணி நேரத்தில் ராணுவத்தை வரவழைத்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.. மதக் கலவரங்கள் வட இந்தியாவில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்தான். ஒரு சிறிய வாக்குவாதம் இரு மதத்தினரிடையே ஏற்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கூட்டம் கூட்டமாக வெளியே வருவதும் அதற்கு காரணம். தமிழகத்திலும் இரு திரைப்படங்களிலுள்ள காட்சிகளை அகற்றக் கோரி அவர்கள் கூட்டமாக வெளியே வந்தது எல்லோருக்கும் தெரியும். இப்போது குஜராத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் குறைந்து விட்டது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

பாப்ரி மசூதி இந்துக் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதா என்கிற நீதிமன்ற வழக்கு இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை. இத்தனை கால தாமதம் ஏற்பட என்ன காரணம். மோடி வந்தால் எப்படியும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

எப்படியும் ஒரு மதத்தினரை ஓட்டு வங்கியாக ஒரு கட்சி பயன்படுத்தியது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. அதே போன்றே சாதிகளிலும் நடக்கிறது. மொத்தத்தில் தவறு இருபக்கமும் உள்ளது.

ஒரு மதத்தினர் மோதி வந்தால் நாங்கள் அழிவோம் என்பதும் தேவையற்ற அச்சுறுத்தலே என்று தோன்றுகிறது. அரசை மதத்தின் பெயரால் மிரட்டிப் பணிய வைக்கமுடியாது என்கிற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

கோபாலன்

காரிகன் said...

மோடி பிரதமரானால் அதற்கு முழு காரணம் காங்கிரஸ்தான். இரண்டு தீமைகளுக்கு நடுவில் இந்தியா இப்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது. எந்த தேர்வும் நமக்கு நன்மை செய்யப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம். நல்ல பதிவு.

saidaiazeez.blogspot.in said...

மனசாட்சி உள்ளவர்களே....நியாயமான முடிவெடுங்கள்....!

R.Puratchimani said...

//பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி பிரதமரானால் அதற்கு முழு முதற் காரணம் மோடியின் திறமையோ அல்லது பாரதியஜனதா கட்சியின் சீரிய கொள்கைகளோ காரணமாகாது. காங்கிரஸ் என்னும் களவாணிக் கட்சியில் பெருத்துப் போன முதலாளி வர்க்கம்//
100% உண்மை.
இதுபற்றி நான் சுருங்க சொன்னால் தவறாகிவிடும். விரிவாக பதிவிடுகிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes