Tuesday, September 28, 2010

கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்......



சந்தோசமான மனிதர்கள் எல்லாவற்றையும் சந்தோசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள், ஆமாம் தோழர்களே துக்கத்தை கூட அவர்கள் எதிர்க் கொள்ளும் விதம் மிக இயல்பானததாகத்தானிருக்கும். சிரிக்க தெரிந்த மனிதன் மகிழ்ச்சியானவன்... அந்த சிரிப்பு புரிதலிலும்...ஆழ் மனதிலும் இருந்து வரவேண்டும்...அல்லவா? கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே.


ஆனால்.. சிரிக்க தெரிந்த மனிதனுக்கு எல்லாமே. வசப்படும்... ! போகிற போக்கில் தம்பி ஜீவன் பென்னியிடம் இது பற்றி பேசிவிட்டு சென்றோம்...கண நேரத்தில் அவர் கட்டுரையாக்கி கொடுத்தார்...ஆமாம்.. சந்தோசமாக படியுங்கள்...சந்தோசம்.. உங்களின் உணர்வுகளை கூர்மையாக்கும்....

இது சுலபமானதா இல்லையா??
சுலபமானது என்றால் நான் ஏன் இதை எழுதவேண்டும்?
கடினமானது என்றால் அதையும் ஏன் எழுத வேண்டும்?
மழலையின் சிரிப்பில் கள்ளச்சிரிப்பென்று ஏதேனும் உண்டோ!!!
மழலைதானே வளர்ந்து மனிதனாகிறது.....
கள்ளச்சிரிப்பிலே மனிதன் மூன்றாம் திணைப்பொருளாகிறான்...

சிரிக்காமலேயே ஒருவனால் வாழத்தான் முடியுமா!!!!
இல்லை இல்லையில்லை நான் சிரித்ததே இல்லை என்று சொல்லத்தான் முடியுமா.... யாராகிலும் அவ்வாறு கூறும் பட்சத்தில
இந்த உலகமே அதனைப்பார்த்து கைகொட்டிச்சிரிக்கும்


எழுதலாம் என்று யோசிக்கும்போதே கொஞ்சம் புன்னனை செய்யுங்கள் என்ற வார்த்தை நினைத்த அடுத்த நொடியினில் தோன்றியது.
தோன்றியதன் காரணங்களை நான் ஆரயப்போவதில்லை.
எதையாவது எழுதிவிட்டு தலைப்பை தேடுவேன் இன்று தலைப்பே முதலில் வந்துவிட்டது


இரண்டுமே ஒன்றுதான் இது துணிக்கடையில் துணி எடுப்பது போன்றதுதானே. இதற்கோ அல்லது அதற்கோ மொத்தத்தில் இரண்டுக்கும் பொருந்தக்கூடிய அல்லது தொடர்பான ஒன்றினைத் தேர்வு செய்ய வேண்டும்.
புன்னகை செய்வது அது போன்றதாகவே எனக்குப்படுகிறது. அதையே இந்த மனித முகத்திற்கும் பொருத்திப்பார்க்கின்றேன். எது பொருத்தமாக இருக்கின்றது அல்லது அதிக பட்ச நிறைவை எது தருகின்றது


என் வீட்டில் என் தாயருடன் சண்டையிட்டுக்கொண்டு புகைப்படம் எடுக்கச்சென்று அங்கு சிரிக்கச் சொல்லச்சொல்ல நான் என் தாய் மீது இருந்தக் கோபத்தில் முகத்தை உர்ர்ர் என்று வைத்துக்கொண்டு உட்கார அவரும் அதை எடுத்து விட்டார். பள்ளிக்குச்செல்ல இலவச பேருந்து பயணச்சீட்டில் ஒட்டுவதற்காக எடுக்கப்பட்டது. இன்று வரையிலும் அந்தப்புகைப்படம்


எடுக்கப்பட்டச் சூழ்நிலை எனக்கு மறக்கவில்லை. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. அது ஒரு பசுமையான நினைவாகவே என்னுள் பதிந்திருக்கின்றது. அது அழகான ஒன்றாக தெரிவதற்கான காரணம் அதில் கள்ளமில்லை என்பதால்தான்


அந்தப் புகைப்படத்தினைப் பார்த்து என்னை கேள்விக் கேட்காதவர்களே இல்லை. எல்லோருக்கும் ஏதாவது ஒரு பதிலினைச் சொல்லிவைப்பேன் அப்போது. பேருந்தில் நடத்துனர் பார்க்கும் பார்வையில் கூட ஏன் என்ற கேள்வி ஒளிந்திருக்கும். அந்த சிறு வயதில் நான் செய்த ஒரு செயலால் என் இளம் வயது முகம் எத்தனை கோரமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் கூட எனக்குக்கோபம் வரும் சமயங்களில் அதே புகைப்படம் என் மனதில் தோன்றி மறையும். அடுத்த சில மணி நேரங்களில் என் கோபம் குறைந்து மனம் சாந்தமடையும் மனம் சாந்தமானால் முகமும் சாந்தமடையும் தானே.
இது எல்லா இடத்திலும் பொருந்திப்போகாது, கோபம் கொள்ளவேண்டிய இடத்தில் கோபம் கொள்ள வேண்டும், அது கள்ளமில்லாக் கோபமாக இருக்கும் பட்சத்தில் கன நேரத்தில் மறைந்துவிடும். அது வன்மமும் கொள்ளாது. வன்மத்தின் உச்சம் யாருக்கும் தெரியாது. உங்கள் கோபத்திலோ இல்லை புன்னகையிலோ வன்மம் கலக்காது பார்த்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் புன்னகை செய்யுங்கள், மனதிலிருந்து.....

கழுகிற்காக
ஜீவன்பென்னி

(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

Saturday, September 25, 2010

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்





நமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... ! தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவை எல்லாம் என்ன என்று எண்ணி கூட பார்க்க முடியாத அளவிற்கு.. மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரம்பரியங்களைத் தின்று கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் பூர்வாங்க கலைகள் எல்லாம் அழியும் நிலையில் இருக்கும் நேரத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வை நமது சமகால தலை முறையினருக்கு எடுத்தியம்ப வேண்டி.... நாம் ஒரு கட்டுரை கேட்டிருந்தோம் தோழி ஜிஜியிடம்......! அவரின் ஆக்கம் இதோ...உங்களுக்காக...


இன்றைய தலைமுறையில், நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி பலருக்குத் தெரியவில்லை. பலர் பார்த்ததுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை. எனவே நம்து தமிழகத்தின் சொத்தான அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தமிழகத்தில் இசை, நடனம்,கூத்து போன்ற பல்வேறு கலைகள் செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்து நிற்கின்றன. சங்க இலக்கியம் முதல் இன்றுள்ள இலக்கியம் வரை இக்கலைகளைப் பற்றிப் பேசுகின்றன.

இன்று உலகளவில், நாட்டுப்புறக் கலைகள் பற்றியும்,அதன் வகைகள் பற்றியும் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. முன்பு இழிவாக மதிக்கப்பட்ட பரதக்கலை, இப்பொழுது பரதம் கற்பது ஒரு சிறப்புத்தகுதி என்றெண்ணும் அளவுக்கு மிக உயரிய நிலையை அடைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் பரதம்போல இன்னும் உயரிய நிலையை அடையவில்லை. இக்காலத்திலும் பெரிய செல்வர்கள் கூடியுள்ள இடத்தில், நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுவதில்லை.

பரதநாட்டியமே முதலிடம் பெறுகிறது. கிராம மக்கள் முன்னிலையில்தான் நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன; ரசிக்கவும் படுகின்றன.நாட்டுப்புற நடனம் என்பதற்கு 'ஓர் இன மக்களின் நடனம்' என்று பொருள். இது யாரால் உருவாக்கப்பட்டது என்று அறியமுடியவில்லை.

வில்லுப்பாட்டு

இக்கலை பத்து நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்தது. தமிழகத்தின்
தென்மாவட்டங்களான குமரி,நெல்லை மாவட்டங்களில் ' வில்லிசை ' அல்லது ' வில்லுப்பாட்டு ' மிகப் புகழ்பெற்ற கலையாக உள்ளது. சிற்றூர்களில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு நடத்திக்' கொடை விழா ' எடுக்கும்போது தெய்வங்களின் வரலாறுகள், தெய்வநிலை பெற்ற வீரர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல இக்கலை பெரிதும் பயன்படுகிறது.

வில்லை முதன்மைக் கருவியாகவும், உடுக்கு, குடம், தாளம், கட்டை ஆகியவற்றைத் துணைக்கருவிகளாகவும் கொண்டு இக்கலை நடத்தப்படுகிறது. இந்த இசைக்குழுவின் முதல்வராக அமர்ந்து கதைபாடுபவர் ' புலவர் ' எனப்படுவார். அவர் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும், நடிப்பதிலும், காலத்திற்குத் தக்க அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையிலான் நகைச்சுவைத்துணுக்குகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பார். மரபு வழியிலமைந்த தென்மாவட்ட வில்லுப்பாட்டுகளில் புகழ் பெற்றது ' ஐயன் கதை ' எனப்படும் ' சாஸ்தா கதை ' யாகும். இதிகாசம், புராணம் தொடர்பான கதைகள், சமூகப் பாங்கான கதைகள் எனப் பல கதைகள் இன்றும் குமரிமாவட்ட சிறுகோயில்களில் வில்லிசை நடைபெறுவதைக் காணலாம்.

கணியான் கூத்து
குமரி, நெல்லை மாவட்டங்களில் சிறந்து விளங்கும் மற்றொரு கலை இந்தக் கணியான் கூத்து. இதற்கு ' மகுடாட்டம் ' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுடலைமாடன் பாட்டு முதன்மையாகவும் அம்மன் பாட்டு அடுத்த நிலையிலும் இதில் இடம்பெறுகின்றன. இக்கூத்தில் தலைமைப் பாடகர், உதவிப் பாடகர், மகுடக்காரர் மூவர், பெண் வேடக்காரர் இருவர் என ஏழு பேர் பங்கேற்பர். இதில்
மகுடம், சலங்கை போன்ற இசைக்கருவிகள் இடம் பெறும்.

மகுடம் பெரிதும் வாசிக்கப்படுவதால் இதற்கு மகுடாட்டம் என்ற பெயர் வந்தது. பூவரசு, வேப்பமரக் கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த மகுடத்தில் எருமைத்தோல் போர்த்தப்படுகிறது. தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், மகுடக்காரர்கள் ஓர் அரைவட்டமாகவும், பெண் வேடதாரிகள் ஓர் அரைவட்டமாகவும் அமைந்து ஒரு முழுவட்டம் கூத்தில் உருவாகிறது. இதனை நாடகம் சார்ந்த கூத்து எனவும் கூறுவர்.



பிற கூத்துகள்

நெல்லை மாவட்டத்தில் கரகாட்டம், ஆலி ஆட்டம், ஒயிலாட்டம், களியாட்டம், பெருமாள் ஆட்டம், நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், குறவன்-குறத்தி ஆட்டம், காளி ஆட்டம், தோற்பாவைக் கூத்து போன்ற பல கலைகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஆலி ஆட்டம், பெருமாள் ஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன மெல்ல அழிந்துவருகின்றன.

அரசு இவற்றை உடனடியாகக் கவனித்து நிதியுதவி செய்து வாழவைக்க வேண்டும். இவற்றில் நாதஸ்வரம், உறுமி, பம்பை, தவில், சுருதிப்பெட்டி, வில், கோல், கிளாரினெட் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் கரகம், வட்டத்தப்பு, குறவன்-குறத்தி, ராஜா ராணி, நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், பபூன், காவடிஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் முத்லியன நடத்தப்படுகின்றன. இவற்றுள் கரகம், காவடிஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன அழியத்தக்க நிலையிலுள்ளன.



தெருக்கூத்து
தமிழகத்தில், எல்லாக் கிராமங்களிலும் தெருக்கூத்து இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைப்பருவத்தில் கோவில் விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவதை இன்றியமையாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். இரவு நேரங்களில் கோயிலருகே அமைந்திருக்கும் பெரியவெளி அல்லது நாற்சந்திகளில் கூத்து நடத்தப்படும். தெருக்கூத்தில் ஆடுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் ஆன அணிகலங்களை அணிந்து கொள்வர். கூத்தைச் சொல்லிக்கொடுக்கும்' வாத்தியார் ' நடனமுறைகள், ராகதாள வகைகளையும் சொல்லிக்கொடுப்பார்.

தெருக்கூத்தில் மிக முக்கியமான ஒருவர் ' கட்டியங்காரன் ' ஆவார். இவருக்கு ' பபூன், விதூஷகன், சூத்திரகாரி 'போன்ற வேறு பெயர்களும் உண்டு. திரைக்குப்பின்னால் இருந்து தன்னைப் பற்றிப் பாடிய பின், திரை விலக்கப்பட்டு,அன்றைய தெருக்கூத்துக் கதையைச் சொல்லுவது, சிறிய பாத்திரங்களைத் தானே ஏற்பது, கூத்தை முடித்து வைப்பது போன்ற பணிகளை இவர் செய்வார்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் வெண்பா, விருத்தம், அகவல் போன்ற பாக்களையும்
நாட்டுப்புறச் சிந்து வகைகளையும் பாடவல்லவர்களாய் இருப்பார்கள். இசைக்குழுவில் மிருதங்கம், சுருதிப்பெட்டி, தாளம், முகவீணை போன்ற இசைக்கருவிகள் இருக்கும். தெருக்கூத்து மற்ற நாட்டுப்புறக் கலைகள் போல் பொழுதுபோக்குக்காக ஆடப்படாமல், பக்தியைப் பரப்புவதற்காக ஆடப்படுகின்ற தெய்வீகக் கலையாகும். தமிழகத்தின் தெருக்கூத்து ஆந்திரத்தின் வீதி ' நாடகத்தையும், கர்னாடகாவின் ' யட்ச்கான 'த்தையும் ஒத்திருக்கிறது.

இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இருப்பவற்றை அழியாமல் காப்பதற்கு , இப்பொழுது தமிழக அரசு உதவியுடன் , " சங்கமம் " போன்ற விழாக்களைத் தமிழர்த்திருநாள் அன்று நடத்திவருகிறது. அரசுடன் சேர்ந்து நாமும், நமது பாரம்பரியக் கலைகளை அழியாமல் காப்போம்!





கழுகிற்கா
ஜிஜி


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)



Wednesday, September 22, 2010

விசால அறிவுகளை நோக்கி....!


ஆழ்ந்த மெளனங்களுக்குப் பின்னால் இருக்கும் கவனிப்புகளை அனுபவங்களாக்கி கொண்டிருக்கிறோம். கால சுழற்சியில் ஏற்படும் மன மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களின் ஓட்டங்களும், திட்டங்களும் திசைமாறிச் செல்வதை கவனிக்க முடிகிறது. மிகைப்பட்ட மனிதர்கள் பொதுபுத்தியின் பின் நடந்து கொண்டும், சத்தியத்தின் வேர்களைப் பற்றிய விழிப்புணர்வு இன்றியும் இருப்பதாகவே படுகிறது.


விளம்பரங்களும் அதனால் வரும் புகழ்களும் மனிதர்களின் மனதை கவ்விப் பிடித்து அதன் போக்குகளில் ஏதாவது செய்து தம்மை தக்க வைத்துக்க் கொள்ள போராடும் முயற்சிகளையும் அறியப் பெற முடிகிறது. அரசியலும் சினிமாவும் தமிழனின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து இருக்கும் அதே வேளையில் அது பற்றிய விழிப்புணர்வுகள் சீர்கேட்டை உண்டு பண்ணுபவர்களாலலேயே பரப்பப்படுவது அந்த பரப்பலில் கிடைக்கும் பரபரப்புகளில் தங்களில் அரிதாரமுகங்களை வெளிக் கொணர்ந்து பல்லிளித்து, வாய்கோணி அகத்தின் ஆயிரம் அழுக்குகளை மறைத்து புறத்தில் தம்மை சமூக காவலர்களாய், மக்களின் பிரதி நிதிக்களாய் பிரதிபலிக்க முயன்று முயன்று கயவர்களின் மூளைகள் கயமையால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமீபத்திய உதாரணம் எந்திரன் என்ற செல்லுல்லாய்டு பொழுது போக்கு பற்றிய ஆதரவு எதிருப்பு கருத்துக்கள் என்ற சொன்ன மட்டோடு வாய் பொத்திக் கொள்கிறது கழுகு. ஏனென்றால் மில்லி மீட்டர்களில் கூட எமது எழுத்துக்கள் அந்த திசை நோக்கி நகராது என்ற தீர்மானத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை. பகிரப்படும் செய்திகள் மனிதனின் ஆற்றலை அதிகரிக்கவைக்க வேண்டும் மாறாக உணர்ச்சியை தூண்டவும் எமது புலமையை எடுத்தியம்பவும் வகையில் இருக்க கூடாது என்ற எண்ணம் எம்மிடம் திண்ணம்.

அரசியலை போதிக்கவும், சமூகத்தில் சக மனிதரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஜன நாயக கடமைகள் என்ன அதை ஏன் செய்யவேண்டும் செய்யாவிடில் என்ன நிகழும்? அந்த நிகழ்வுகள் எப்படி நம்மை பாதிக்கும்? சுகாதரமான வாழ்க்கை என்றால் என்ன? என்று போதிக்க நாதியற்ற ஒரு ஊடக அரசியலுக்குள் சிறு குழந்தையாய் நாம் நடை பயின்று வரும் வழியெல்லாம் எமது நாசிகளை அடைத்து கொண்டு நடக்கும் அளவுக்கு அசிங்கங்கள்.....? ஏன் களையப்படவில்லை அல்லது இதற்குள் அமர்ந்து கொண்டு மெளன்ட் எவரெஸ்ட் பற்றி எப்படி பேசுகிறார்கள்....? கேள்விகள் எல்லாம் கேள்விக்குறிக்கு பதிலாக ஆச்சர்ய குறிகள் தாங்கி எம்மை கேலி செய்கின்றன.

நல்ல பதிவர்களின் படைப்புகள் எல்லாம் முடங்கிப்போய்விடாமல் இருக்க.. கழுகினை வாசிக்கும் தோழர்கள்.. உங்களின் பங்களிப்பினை இவ்விழிப்புணர்வு போரில் கொணர நல்ல கட்டுரைகளை எமக்கு மின்னஞ்சல் மூலம் தருவியுங்கள். யாருக்கோ எதற்கோ அல்ல நமது பயணங்கள் இவை நாம் வாழ.. மனிதம் செழிக்க...!


கழுகின் பேட்டிகள் பற்றிய அதீத ஆர்வத்தை கொஞ்சம் வரைமுறை படுத்தி நிதானித்து செல்லும் வகையில் எமது அனுபவங்கள் கொடுத்துள்ள போதனைகளின் படி... சிறந்த பேட்டிகளை தருவித்தலுக்கான குழு அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் மேலும் பதிவர்கள் தாண்டி ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களிடமும் பேட்டிகள் எடுக்கவிருக்கிறோம்.


ஆக்கப்பூர்வமாய் மனிதர்கள் வாழ.. தொலை நோக்குப் பார்வையும், விசால அறிவும் வேண்டும்....அதற்கான முயற்சியின் ஒரு வடிவமாய் ஆன் லைன் புத்தகங்களைப் பட்டியலிட்டு தேவைப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் செய்யவிருக்கிறோம்.
பெரும் சமுதாயத்தின் நடுவே நாம் சீராய் செல்ல....வலு கொண்ட.. கரங்கள் இணைய வேண்டும்....கழுகின் கரங்கள் எப்போதும் நீண்டிருக்கின்றன...சத்தியங்களையும் உண்மையைகளையும்....விசால அறிவுகளையும் நோக்கி....!


கழுகு
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

Tuesday, September 14, 2010

மனிதர்கள் ஒரு மருத்துவ பார்வை...!






பொது பிரச்சினைகள் தாண்டி உடல் நலம் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே குறைவுதான். தோழி ஜெஸ்வந்தி அனுப்பிய இந்த கட்டுரை மருத்துவ அறிவியல் ரீதியாக எப்படிப் பட்ட மாற்றங்கள் ஆண் மற்றும் பெண் பாலாருக்கு இருக்கிறது மேலும் அது எப்படி ஆயுளை நிச்சயிக்கிறது, அதற்கான புறக்காரணிகள் என்ன? என்று தெளிவாக தெரிவிக்கிறது....
அறிவு பெருக்கம் விழிப்புணர்வின் உச்சம்...வாருங்கள் ஜெஸ்வந்தியின் கட்டுரைக்குள் செல்வோம்...!

ஆண்களைவிடப் பெண்கள் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் ..



'' நீங்கள் இல்லையென்றால் என்னால் இதிலிருந்து மீள முடியாது '' உயிர்காக்கும் இயந்திரத்துடன் பொருத்தப் பட்டு அந்தக் கட்டிலில் கிடக்கும் பெண், தன் கணவரிடம் முனகுகிறாள். '' உன்னால் முடியும் . நம்பு'' அருகிலிருந்து தைரியம் தருகிறார் அவள் கணவர். ஆனால் மனைவியைத் தைரியப் படுத்திய அந்த நாற்பத்தி ஏழு வயதான அந்த மனிதர் மூன்றாம் நாள்மாரடைப்பினால் இறந்து விடுகிறார்.



அவர்
மனைவி நலமடைந்து , அவரது கணவரதுமது பானக் கடையையும் நிர்வகித்து , தங்கள் நான்கு பெண்களையும் பராமரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் பெண்மணி அவரது கணவரை விட ௨0 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்வார் என்று டாக்டர்கள் கருதுகிறார்கள்.

இது ஒரு உண்மைக் கதை. நாமறிய இந்தக் கதை எல்லா நாடுகளிலும் , எல்லாக் கலாச்சாரங்களிலும் திரும்பத் திரும்ப நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.ஆண்களை

விட
பெண்களின் ஆயுள் அதிகமாக இருக்கிறது. உண்மையில் ஆண்கள் உடலளவில்வலிமையுள்ளவர்களாகவும் உயரமானவர்களாகவும் இருந்தாலும் இந்த ஆயுள் விடயத்தில்பெண்களுக்குப் பின்னே தான் நிற்கிறார்கள். இது விவாதமல்ல. உலகறிந்த உண்மை. இந்த இடைவெளி பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அவதானிக்கப் பட்டு வந்திருக்கிறது.

படிப் படியாக இந்த இடை வெளி குறைந்து கொண்டு வருவதும் வரவேற்கப் பட வேண்டிய விடயமே. அது கூட , தற்போது சில பெண்கள் ஆண்கள் போல தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டதாலும், புகைத்தல் ,மது பானப் பழக்கம் , திருக் என்பவற்றுக்கு அடிமையானதாலும் , சமயுரிமை கேட்டு பல விதமான அபாயகரமான தொழில்களையும் செய்வதாலும் ,அவர்கள் ஆயுள் குறைவதாலேயே இந்த இடைவெளி குறைக்கப் பட்டு விட்டதாக ஆய்வாளர் கருதுகிறார்கள் .



இந்த
அடிப்படை இடை வெளிக்குக் காரணம் என்பதையறிய பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. காரணி ,ஆண்களிலும் , பெண்களிலும் காணப் படும் வேறு பட்ட ஓமோன்களா? அல்லது ஆண்களில் மட்டும் காணப் படும் Y குரோமோசோம் ஆயுள் குறைவை உண்டு பண்ணுகிறதா? அல்லது ஆண்கள் தேர்ந்தெடுக்கும் சூழலும், பழக்க வழக்கங்களுமா ? அல்லது இவை யாவற்றினதும் கலவையா? இதுதான் காரணம் என்று சுட்டிக் காட்ட முடியாமல் ஆராய்ச்சியாளர்கள்திண்டாடுகிறார்கள்.



அது மட்டுமல்லாமல் , எந்த வயதிலும் ஆண்களின் இறப்பு பெண்களை விட
அதிகமாகவே காணப் படுகிறது. இதனைக் கருவாக இருக்கும் போதே அவதானித்துள்ளார்கள்.

கருவிலேயே அழிந்து போகும் சிசுக்களில் அனேகமானவை
ஆண் சிசுக்களாகவேஇருக்கின்றனவாம். இதனால் ஆண்களின் Y குரோமோசோம் தான் இதற்குக் காரணம் என்று ஊகித்தார்கள்.
இதனை அண்மையில் ஊர்ஜிதம் செய்தும் இருக்கிறார்கள்.

எலிகளில் செய்த ஒரு
பரிசோதனையில் இரண்டு பெண் எலிகளிலிருந்து எடுக்கப் பட்ட கருவணுக்களை இணைத்து (mutations) ஒரு எலியை உண்டு பண்ணியிருக்கிறார்கள்.

இதன் ஆயுள்
இயற்கை முறையால் உண்டாக்கப் படும் எலிகளைவிட அதிகமானதைஅவதானித்துள்ளார்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே காணப்படும் வேறுபட்ட ஓமோன்கள் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் பல டாக்டர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் 40 வயதிற்குப் பின்னர் இதய சம்பந்தமான
நோயினால் இறப்பது மிக அதிகமாயிருக்கிறது. அத்துடன் மிக அபாயகரமானநடவடிக்கைகளில் ஆண்கள் இறங்குவதும் அனைவரும் அறிந்ததே. இதன் காரணத்தால் விபத்துக்களில் இறக்கும் ஆண்கள் பெண்களை விட மிக அதிகமாக இருக்கிறார்கள்.


ஆண்களில்
காணப்படும் ஓமோனே இவர்களின் இந்த விபரீத நடவடிக்கைகளுக்குக்
காரணம் என்கிறார்கள். அதே சமயம் பெண்களின் ஓமோன்கள் அவர்களை சாந்தமாக உருவாக்கி, பல விபத்துகளில் இருந்து காத்து விடுகிறது. ஓமோன்கள் ஒரு கவசமாகக் காத்து மெனபோஸ் (menopause ) வரை இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது. ஆனாலும் கூட மிக வயதான காலத்திலேயே பெண்களை இதய நோய்கள் தாக்குகின்றன. ஆனால் இந்த ஓமோன் வயிற்றிலிருக்கும் சிசுக்களில் காணப் படாததால் , தாய் வயிற்றில் ஆண் சிசுக்களின் இறப்புக்கு காரணம் என்னவென்பதை அவர்களால் விளக்க முடியவில்லை.



பல ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆயுள் இடை வெளிக்குக் காரணம் உயிரியலும் ,சூழலும் என்று சொல்கிறார்கள். ''ஆண்களும், பெண்களும் சரி சமனாக சூழலிலுள்ள அசுத்தங்களைச் ( toxins) சந்திப்பதில்லை.'' என்று விளக்கம் தருகிறார் சிக்காகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சேரில் வூட்சொன் . பெண்கள் வீட்டுக்குள் இருந்த காலத்தில் இந்த இடைவெளி மிகப் பெரியதாக ( கிட்டத் தட்ட 12-15 வருடங்கள்) இருந்ததென்றும்

இப்போ
அவர்கள் படிப் படியாக பல வெளி வேலைகளைச் செய்யத் தொடங்கிய பின்னர்


சூழலிலுள்ள
மாசினால் நோய் வாய்ப் பட்டு இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் அதனால் இந்த இடைவெளி இப்போ குறைந்து விட்டதாகவும் ( 5-10 வருடங்கள்) அவர் விளக்கம் தருகிறார். பெண்கள் அதிக காலம் வாழ்ந்தாலும் நோயில்லாமல் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.

பெண்களைத் தாக்கும் ஒஸ்தியோபெரொஸிஸ், ஆத்திறைரிஸ் போன்ற
நோய்கள் அவர்களை நீண்ட கால உபாதைகளுக்கு ஆளாக்குகின்றன.

ஆண்களைத்
தாக்கும் இதய நோய்கள் , புற்று நோய்கள் என்பன குறுகிய காலத்தில் இறப்பை உண்டு பண்ணுகின்றன

என்னைப் பொறுத்த வரை ஆண்கள் நோய் ஆரம்பிக்கும் போதே டாக்டரை அணுகாததும் ஒரு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது.

பெண்கள் சின்ன விடயத்துக்கும் டாக்டரின் அறிவுரையைகோருகிறார்கள். ஒருவேளை நோய் ஆரம்பிக்கும் போதே களைய மறப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.



கழுகிற்காஜெஸ்வந்தி

 
 
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

Thursday, September 09, 2010

கழுகின் பயணத்தில்....!


தினவெடுத்த தோள்கள்...ரெளத்தரம் பழகி நினைவுகள், புலியின் பாய்ச்சல், சிறுத்தையின் வேகம், சிங்கத்தின் கம்பீரம்....தெளிவான சிந்தனை கொண்டு தேசத்தின் இளைஞர்களும் வளர்ந்து வரும் சிறுவர்களும் நடை பயில ஒரு தவிர்க்க முடியாத கருத்துக்களின் களமாய் கழுகு மாறும்...என்று? இன்றா? நாளையா...இல்லை...அடுத்த மாதமா?
கவலையில்லை...
செதுக்கும் சிற்பங்களின் செம்மை வெளிப்படுவது சிலையின் முழுமையில்...அதுவரை காத்திருத்தல், கவனித்தல், என்ற இரண்டுமே ஆயுதம்...இன்னும் 10 வருடம் இல்லை 20 வருடம் இல்லை இந்த தலைமுறை தாண்டி அடுத்த தலைமுறை தெளிவாய் சிந்திக்கும்.....! கழுகுக்கு எப்போதும் சமகால அரசியலிலும், சுற்றி நடக்கும் அட்டூழியங்களிலும்...அதிக கவனம் இல்லை என்றுதான் சொல்வேன்...!
கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறதா.... எல்லா பிரச்சினைகளையும் விமர்ச்சிக்க..குரல் கொடுக்க..ஒராயிரம் ஊடகங்கள் இருக்கின்றன...!

சம காலத்தில் நடக்கும் அநீதிகளை மிகைப்பட்ட ஊடகங்கள் கிழித்து குதறிக் கொண்டிருக்கும் போது கழுகு மெளனமாய் எதிர் திசையில் பயணிக்கிறது....

மரங்களையும்..கிளைகளையும்...
சீரமைக்கும் போட்டியில்...
கழுகு இல்லை....ஆனால்..
அது...விதைகளை செப்பனிட்டு
நாளைய விருட்சங்களை
படைத்துக் கொண்டிருக்கிறது....!


வளரும் முறையிலும், பிரச்சினைகளை எதிர்க் கொள்ளும் மனப்பாங்கிலும், விசாலமான பார்வையிலுமே ஒரு நல்ல சமுதாயம் பிறக்கிறது. இது வரை நடக்கும் முரண்பாடுகளுக்கு காரணம் வளர்ந்து நிற்கும் கரடுமுரடான முரட்டு மரங்களும், முள் செடிகளும், விஷ செடிகளும்தான்..பரவி விரவியிருப்பதுதான்...இவற்றோடு போரிட ஆயிரம் பேர் இருகிறார்கள்....! நாம் இந்திய அரசியலையும், தமிழ் நாட்டு தலை எழுத்தையும் மாற்றி எழுத சமகாலத்தில் இருக்கும் புரையோடிப்போன சமுதாயத்தில்... போராடினால்...எமது எண்ணமும் பேச்சும் கேலிக்குரியதாய் போகும்.....

விசாலமான பார்வை கொண்ட இளைஞர் கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது... யார் தடுத்தாலும் நவீன ஊடகங்கள் இவர்களுக்கு நாடு கடந்த பரவலையும் அறிவுப் பெருக்கத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்...! சமீபத்தில் விஜய் டி.வி நீயா நானவில் கோபி நாத் கேட்ட கேள்வி இது...." ஜன நாயகத்தை வலைப்பூக்கள் நிறுவுமா? நிலை நிறுத்துமா" என்ற ரீதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் கடினத்தை நிகழ்காலம் சமர்ப்பிக்கலாம்...

ஆனால்...கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள்...1980களில் தொலைக்காட்சிகளின் வல்லமை என்னவென்று? ஒன்றுமில்லை...திங்கள் கிழமை வயலும் வாழ்வும், செவ்வாய் கிழமை நாடகம், புதன் கிழமை சித்ர மாலா, வியாழக்கிழமை மலரும் நினைவுகள், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், சனிக்கிழமை இந்திப்படம் ஞாயிற்று கிழமை தமிழ்ப் படம்....இதுதானே தமிழனின் தொலைக்கட்சி அனுபவமாயிருந்தது...இன்று....

தமிழனை கட்டிப் போட்டு அவனின் சிந்தனைகளை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக விசுவரூபமெடுத்திருக்கிறதே....? வலைப்பூக்கள் இந்த மீடியாக்களை சர்வ நிச்சயமாய் உடைக்கும்....ஏனெனில் இங்கே சிந்திப்பவன் மட்டுமெ எழுத முடியும்...மெலும் எழுதுபவன் எல்லாம் கட்டுக்களின்றி சுதந்திரமாய் எழுத முடியும்..........

அங்கே நிறுவப்படப்போவது ஜன நாயகம் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்....? அடுத்த 10 வருடத்தில் வலைப்பூக்களின் ஆளுமையை யாராலும் தடுக்க முடியாது என்பது மட்டுமே உண்மை...!


கழுகின் பாதை....விதைகளை செம்மைப்படுத்துவதிலும்...அதை பேணி வளர்ப்பதிலும்....

பரவட்டும்...அறிவுத்தீ....
அதில் பொசுங்கி அழியட்டும்....தீமைகள்...!

கழுகிற்காக
தேவா.s

(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

Tuesday, September 07, 2010

தேனம்மையுடன் ஒரு நேர்முகம்....



கழுகு கொஞ்சம் லேட்டாக வந்ததற்கு முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே சொன்னது... எல்லா நேரமும் ஃப்ரியா இருக்க முடியுமா? சில நேரங்களில் வேலைப்பளு அதிகம் சலித்துக் கொண்டது கழுகு அதன் பிண்ணனியில் உண்மை அதிகம்... ஜில்லென்று பருகிய குளிர்பானத்துக்கு பிறகு... சும்மா உக்காந்துகிட்டு இருக்காம... சும்மா ஜம்முனு பேட்டியை போடுங்க.. சும்மா கலக்கலா இருக்கும் பாருங்க.. பேட்டியை வாங்கி சும்மா பார்த்தோம்.............



கவிதைகளிலும் கருத்துக்களிலும் தெளிவான பார்வை கொண்ட...தேனம்மை லெக்ஷ்மணன் .. தன்னுள் பரவியிருக்கும் கருத்துக்களை ஒரு மகிழ்ச்சியின் செய்தியாய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்...! எல்லோரையும் குறைவில்லாமால் நேசிக்கும் தேனம்மையின் கவிதைகள் எல்லாம் எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பவை. புதியாய் வந்து எழுதுபவர்கள் கண்டிப்பாய் தேனம்மையின் தளத்தில் கற்றுக் கொள்ள நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை... தேனம்மையின் பேட்டி இதோ உங்களுக்காக...

1 )
சும்மானு எப்படி ஒரு தலைப்பு வச்சீங்க...உங்க வலைப்பக்கத்துக்கு ?

சும்மா வீட்டுல வெட்டியாதானே இருக்கோம்னு சிம்பாலிக்கா வைச்சேன் கழுகாரே.


2) சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்?
பாட்டுப் பாடுவேன்.. டான்ஸ் ஆடுவனான்னு கேக்காதீங்க..

சின்னப் பிள்ளைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்பேன்..




3) உங்கள் கணவர் உங்கள் பதிவுகளைப் பற்றி என்னசொல்லுவார் ?
படிச்சாதானே சொல்றதுக்கு..:)) எப்பாவாவது படிக்க நேர்ந்தால்.. ( அதாவது நாம லாப்டாப்பை கண்ணுக்குக் கிட்ட கொண்டு காமிச்சால் ) நல்லா இருக்கு என்பார்..:))




4) பெரும்பாலும் உங்கள் கவிதைகளுக்கு கருவாக இருப்பது எது ?


அன்பு., காதல்., பாசம்., வெறுப்பும் விரக்தியும் கூட



5) சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா ?


தவறான தகவல் பரப்பும் ஊடகங்கள்., அழகிகள் கைது என வரும் ஃபோட்டோக்கள்.. (அப்ப அழகன்கள் படங்களையும் போடவேண்டியதுதானே..)., மேலும்., பார்த்தாலே வளைந்து விடுவது போல் இருப்பவர்களை.. சம்பந்தமே இல்லாத கேஸில் சாராய கேன்களோடு உக்கார வைத்து படம் போடுவது..
., அடுத்தவர்கள் படுக்கை அறைவரை சென்று விஷயம் பரப்பும் மீடியாக்களும் அதை ஆதரிக்கும் பொது மக்களும
Justify Full6) நகர வாழ்க்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


கிராம வாழ்க்கை ஆனந்தம் என்றால்.. நகர வாழ்க்கை முன்னேற்றம் என நினைக்கிறேன்



7) பெண் பதிவர்களை கிண்டல் செய்து பதிவு வருகிறதே அதை பற்றி?


எழுதுமுன் யோசிக்க வேண்டும்.. மிதமான கிண்டல் படைப்புகள் பற்றி என்றால் பரவாயில்லை.. தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.


8) பெண் பதிவர்கள் என்றால் சமையல் குறிப்பு கவிதை இது மட்டுதான் எழுத வேண்டுமா?


ஏன் ரோஹிணி சிவா மருத்துவப் பதிவுகள் எழுதுகிறார்.. துளசி கோபால் சுற்றுலாபற்றி., விக்னேஷ்வரி இண்டீரியர் டெக்கரேஷன் மற்றும் ஃபாஷன் பற்றி., ஜெசி விதம் விதமான இடங்கள்., மர வீடுகள் மரங்கள் பற்றி ., ராமலெஷ்மி ஃபோட்டோகிராஃபி பற்றி பகிர்கிறார்கள்..

ஒவ்வொருவரின் ஆர்வத்தைப் பொறுத்தது .




9) பூ பற்றி நிறைய எழுதி இருக்கீங்க.... இப்போ ஒரு கவிதை சொல்ல முடியுமா கழுகை பற்றி ?

ராஜாளி.,
உயர்வின் சிறப்பை உணர்ந்து ...
உயர உயர பறந்து..




10) பதிவுலகில் பெண்களின் நிலை பற்றி உங்கள் கருத்து ?


நல்ல ஆரோக்கியமாதான் இருக்கு.




11) செட்டி நாடு பகுதியை சேர்ந்தவர் நீங்கள்.....அது பற்றிஒரு கேள்வி...பெரிய பெரிய வீடுகள் கட்டி விட்டு இன்று அவை இன்று யாரும் இல்லாமல் வெறுமனே கிடப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?


வருத்தம் தரும் நிகழ்வுதான்,, என்ன செய்ய,, வேலை காரணமாக., அல்லது வறுமை காரணமாக விட்டுச் செல்லப்படும் வீடுகள் அன்றைய பெருமையின் சாட்சியாக.
வீடுகள் மட்டும் தனித்து விழித்து இருக்கின்றன.... உயிரோட்டம் இல்லாமல்.




12) கவித்துவமாய் இருக்கும் நீங்கள்...எதார்த்த வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறீர்கள் ?



எல்லாம் இலகுவாகவே அமைந்து விட்டது.. எந்தப் போராட்டமும் இல்லாமல்...
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலால் இப்போதுதான் சிறிது சிரமப் படுகிறேன்




13) மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன?


வெறுப்பது அன்பற்ற தன்மை.. ரசிப்பது ., ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதுதான்.




14) புத்தகம் வலைபதிவு இரண்டையும் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் ?


புத்தகம் அதிகம் பேரை சென்றடைகிறது.. வலைப்பதிவு என்றைக்கு இருந்தாலும் பார்க்கப்படும் ஒரு சௌகர்யத்தில் உள்ளது..( நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்)



15) தனியாக ஒரு பெண்களுக்கான இதழ் ஒன்று நடத்துவதாக அறியப் பெறுகிறோம்....அது பற்றி கொஞ்சம் கூறுங்கள்?


நான் நடத்தவில்லை.. பெண்களுக்கான இதழான லேடீஸ் ஸ்பெஷல் என்ற மாதந்திரி திருமதி கிரிஜா ராகவனால் நடத்தப் படுகிறது.. அதில் சில விஷயங்கள் என் பொறுப்பாக இருக்கிறது.. அவ்வளவே.. அதில் நம் வலையுலக சகோதரிகளை அறிமுகப்படுத்துதல்... ஷேர் மார்க்கெட் சம்பந்தமான பேட்டி., யங் லேடீஸ் கவிதைப்போட்டி., ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதைகள்., புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்துதல்.. என ..



16) பொதுவாக பெண் பதிவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


ஏகப்பட்ட பேர் நல்லா எழுதிக்கிட்டு இருக்காங்க.. எனவே எந்த சந்தர்ப்பத்திலும் எழுத்தைமட்டும் விட்டுடாதீங்கன்னு சொல்ல நினைக்கிறேன்



17) கல்லூரி காலங்களில் கவிதை எழுதியதுண்டா...ஆம் எனில் ஒன்று சொல்லுங்கள்....
நிறைய..
பயணம்..
*************
அரிக்கேன் விளக்கு...
யாருடன்
யாருக்காக .,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்
என்பது புரியாமல்.,
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
எந்தக் கரத்திலோ
வளையமாய்த் தொற்றிக்கொண்டு.,
எந்த மாட்டுவண்டியிலோ
எதிர்க்கூதலில் ஆடிக்கொண்டு.,
இருளைத்தேடி..
இருளைத்தேடி..
முன்னே பரவும்
வெளிச்ச வட்டத்தைப் பிடிக்க...
பாலைவன மண்வீச்சுகளுக்குள்..
சிகப்பு வளையமாய்..
தூரப்புள்ளியாய்..
செவ்வாய்க் கோளாய்..
திரிக்குள் ஒளிரும்.,
கண்ணாடிக்குள் ஜ்வல்லிக்கும்
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
யாருடன்.,
யாருக்காக.,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்..
என்பது தெரியாமல்...



18) சமையல் செய்வது என்பது பெரும்பாலும் பெண்கள் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது...இது சரியா?
வீட்டில் மட்டும்தான் பெண்கள்.. விருந்து வைபவங்களில் ஆண்கள்தானே சமைக்கிறார்கள்..

ஆண்கள் கற்றுக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..:))




19) எழுத்துலகில் உங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?


ஜோசியம் சொல்லதெரியவில்லை..
இதே போன்ற மொக்கைகளை முடியும் வரை வழங்கிக் கொண்டிருப்பேன் என உறுதியளிக்கிறேன்



20) உங்களின் ஒரு ஆசை நிறைவேற்றப்படும் என்ற வரம் கிடைக்கிறது எனில் எதை வேண்டுவீர்கள்
?



ஒரு குடும்பத்தலைவியா என் பிள்ளைகள் சிறப்பா நீடூழி வாழணும்னு வேண்டிப்பேன். ஒரு வலைப்பதிவரா என்னுடைய கவிதைகள் புத்தகங்களா வந்து பலரையும் சென்றடையணும் வெற்றியடையணும்..என்று வேண்டிக்குவேன்.


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes