Thursday, June 30, 2011

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை...!

நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும்.

மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!
 


அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு என்னோட ரெண்டு நண்பர்களை உங்களுக்கு சின்னதா அறிமுகம் பண்றேன். அவங்கள அறிமுகம் செய்யிறதுக்கும், மேல நான் சொன்ன விஷயத்துக்கும் ஒரு முடிச்சி இருக்கு!! அதான்!

ரங்கன் - ராக்கி, இவங்க ரெண்டுபேரும் தாங்க அந்த ஃப்ரெண்ட்ஸ். எந்த மேட்டர்னாலும் ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது. கடைசில சண்டைல தான் முடியும். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியாம எங்க போனாலும் சேர்ந்தே போவாங்க. எனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஒன்னியும் கிடையாது. சொல்லப்போனா அவங்களுக்கு என்ன தெரியவே தெரியாது!! ஆனா நான் எப்ப ஃப்ரீயா ஆனாலும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு அங்கபோய் அவங்களுக்கு தெரியாம உட்கார்ந்துடுவேன்.

அவங்க பேசுறத கேக்க எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். பொழுது போறதே தெரியாது. நேத்து சாயந்திரமா ரொம்ப போர் அடிக்கவே, நம்ம ராக்கி - ரங்கனை பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அவங்க நம்ம ஊரு மெயின் பஜார் அம்மன் கோவில் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் பின்புறமா இருக்குற ஓப்பன் பார்ல ஒக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருந்தாங்க. இந்த மது வகைகள் வாசம் எல்லாம் எனக்கு பிடிக்காதுன்னாலும்(!) பேச்சு சுவாரஸ்யமா இருக்குமேன்னு அவங்க பக்கத்துல் போயி உட்கார்ந்தேன்.

அப்ப ரங்கன் சொன்னான், மாப்பி.. நாம நாள் தவறாம ஒரு குவாட்டராவது பிராந்தி சாப்ட்டா தாண்டா நம்ம அரசாங்கம் மக்களுக்கு எல்லாம் இலவசமா மாசம் 20 கிலோ அரிசி தரமுடியும் என்று! முதல் ரௌண்டு பாதில இருந்த நம்ம ராக்கிக்கு ஒண்ணுமே புரியல. "நீயும் இப்பத்தானடா ஆரம்பிச்ச அதுக்குள்ள ஏண்டா உளருரே?" ன்னு கேட்டான். நீ இப்படி கேப்பன்னு தெரிஞ்சிதான் முதல் ரவுண்டுலயே பேச்சை ஆரம்பித்தேன் என்றான ரங்கன். மாப்பி எதோ விவரமாத்தான் பேசப்போறான்னு புரிஞ்சிகிட்டு நம்ம ராக்கி, மீதி ரவுண்ட ஒரே இழுப்புல உள்ள தள்ளினான்.

ரங்கனும் அடுத்த ரவுண்ட ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே ஆரம்பித்தான் கலாட்சேபத்தை!

நம்ம அரசு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை பத்து ரூபாய் ஐம்பது காசுக்கு வாங்குகிறது. அதை வாங்குவதற்கான குடோன் மற்றும் நிர்வாகச் செலவு 50 காசு, அதை மில்லுக்கு கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் 50 காசு. ஆக மில்வரையிலும் ரூபாய் 11.50 ஆகிவிடும். அரவைக் கூலி ஒரு ரூபாய் ஐம்பது காசு, அதை திரும்ப அரசு குடோனுக்கு எடுத்துவர ஐம்பது காசு ஆக 13.50 ஆகிறது.

இன்னுமொரு அதிர்ச்சி... ஒரு கிலோ நெல்லை அரைத்தால் தவிடு, நொய் எல்லாம் போக அரை கிலோ அரிசி தான் தேறும்! அப்படியானால் ரூபாய் 13.50 என்பது அரைகிலோ அரிசிக்கான விலை மட்டுமே.

அப்ப ஒரு கிலோ அரிசியின் விலை 27 ரூபாய் அடக்கம் ஆகிவிடும். அதை திரும்ப ரீடெல் (ரேஷன்) கடைகளுக்கு கொண்டுவர, அந்த அலுவலர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசியின் அடக்கவிலை 30 ரூபாய் ஆகிவிடும். ஆக தமிழ் நாட்டில் ஒரு குடும்ப அட்டைகு 600 ரூபாய் வரையிலும் மாதாமாதம் இலவசம் (அரிசிக்காக மட்டும்) தரப்படுகின்றது.

இப்பத்தான் நம்ம மேட்டருக்கே வருகிறேன். ஒரு குவாட்டர் 70 ரூபாய் என்றால் அதில் கிட்டத்தட்ட 30 ரூபாய் வரையிலும் அரசுக்கு வரியாகக் கிடைக்கின்றது. அதில் நிர்வாகச் செலவு போக 20 ரூபாய் நிகரமாகக் கிடைத்தால் கூட ஒரு கார்டு அரிசிக்கான விலையை ஈடு செய்ய 30 குவார்ட்டர் விற்க வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தலைவன் ஒரு மாதம் முழுவதும் ஒரு நாள் தவறாமல் ஒரு குவார்ட்டர் அடித்தால் தான் அவன் குடும்பம் இலவசமாக வாங்கி சாப்பிடும் அரிசி ஜீரணமாகும்!!

அதாவது தமிழ்நாட்டுல 1.85 கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. அத்தனை கார்டுக்கும் இலவச அரிசி ஒதுக்கப்படுகின்றது. (வாங்கினாலும் வாங்காவிட்டாலும்). ஆக 1.85 கோடி பேர் நாள் தவறாமல் ஒரு குவாட்டர் அடிக்க வேண்டும். எல்லோராலும் தொடர்ந்து எல்லா நாளும் குடிக்க முடியாதுங்கறதுனால, ஒவ்வொருத்தரும் மாதத்துக்கு 15 நாள்ங்கிற வீதம் 3.7 கோடி தமிழக தமிழர்கள் ஒரு குவாட்டர் பிராந்தி சாப்பிட்டால் கணக்கு டேலி ஆகிவிடும்! மக்களுக்கும் இலவசம் தந்த மாதிரி ஆகிவிடும், அரசாங்கத்திற்கும் உதவின மாதிரி ஆகிவிடும்!

ஒரு மனிதன் சுவாசத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொண்டு, அவனுக்குத் தேவையான் ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்கு 20 மரங்கள் வேண்டுமாம். அதே மாதிரிதான் நாமும்! தினமும் ஒரு குவாட்டருக்கு மேல அடிப்பதால இனிமே நம்ம பொண்டாட்டியெல்லாம் குடிச்சிட்டு வீட்ட கவனிக்காம இருக்கோம்னு நாக்குல பல்ல போட்டு பேசிடப்பூடாது என்று நம்ம ராக்கி ஒருவித மந்தகாசப் புன்னகையுடன் கூறினான்.

இவர்கள் பேச்சை மனதில் அசைபோட்டுக் கொண்டே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு படுக்கும் போது, தங்கமணியிடம், ராக்கி - ரங்கன் சம்பாஷணையைக் கூறி, அரசாங்கம் செய்வது சரியா? தவறா? என்ற எனது சந்தேகத்தைக் கேட்டேன். பல சமயங்களில் நம்மைவிட அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை! துணிகளையெல்லாம் மடித்து வைத்துக் கொண்டே என் மனைவியும் பேச ஆரம்பித்தார்.

ஏங்க, அஞ்சு வருஷம் முன்னாடி, நம்ம வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்யணும்னா, ஒரு தொழிலாளிக்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய் வரையிலும் கூலி தருவோம். ஆனா இன்னக்கி என்னா தற்றோம்? 250 ரூபாய்க்கு குறைவாக யாருமே வேலைக்கு வருவதில்லை. அதுவும் முன்பு செய்ததில் பாதி வேலை தான் செய்கிறார்கள். அதனால் அடுத்த நாளும் செய்யச் சொல்லி மொத்தமாக அதே வேலைக்கு 500 ரூபாய் செலவாகிறது.

ஒரு நாளைக்கு 250 சம்பாதிக்கும் அந்த தொழிலாளியின் அன்றைய செலவு என்ன? 4 நபர்கள் கொண்ட அவன் குடும்பதுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை அரசாங்கம் இலவசமாகவே தந்துவிடுகிறது. அன்றைக்கு நல்லமுறையில் குழம்பு வைக்க 25 ரூபாயும் காய்கறி 25 ரூபாயும் அதிகபட்சமாக செலவாகிறது. மற்ற திண்பண்டங்கள் இத்தியாதிகளுக்காக 50 ரூபாய் என்றால் 100 ரூபாயில் அன்றைய சாப்பாட்டுப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடுகின்றது. மிச்சம் 150 ரூபாய்.

மாதம் 20 நாட்கள் மட்டுமே அவன் வேலை செய்வதாக வைத்துக் கொண்டாலும் மாதம் 3000 ரூபாய் அவனுக்கு சேமிப்பாகிறது. வருடத்திற்கு 36000 ரூபாய். அதில் இரு குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள், துணிமணிகள் எல்லாம் முடித்துக் கொள்ளலாம். வருடத்திற்கு 120 நாட்கள் சும்மாயிருக்கின்றானே, அந்த நாட்களில் ஒரு 50 நாட்கள் வேலை செய்தால் கூட தீபாவளி, பண்டிகைகள், பொழுது போக்குகள் அனைத்தையும் சீராகக் கொண்டாடி விடலாம்.

250 ரூபாய் கூலி வாங்கும் ஒரு தொழிலாளி கூட இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, மனைவியை குடும்பத் தலைவியாக மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அதே தினக்கூலி தொழிலாளி இந்த ராக்கி - ரங்கன் போல் குடித்து விட்டு வெட்டி நியாயங்களும், வியாக்கியானங்களும் பேசிக்கொண்டிருக்காமல், வேறு கெட்ட பழக்கங்கள் இல்லாமலும் இருந்து, தன் முன்னேற்றத்தில் கருத்தாக இருந்தாலே போதும், ஒரு வருடத்திலேயே, பயிற்சி பெற்ற தனித்திறமை தொழிலாளியாக, அதாவது ஒரு டிரைவர், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கம்பி கட்டுதல், வெல்டிங்... இப்படியாக மாறி விட நிச்சயமான வாய்ப்பு இருக்கிறது.

அப்படி ஆகும் பட்சத்தில் அவனுடைய ஒரு நாள் சம்பளமே 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் என்றாகிறது!

ஒரு ஆவேசம் வந்தவராய் இத்தனையும் பேசி விட்டு கடகடவென்று தண்ணீரைக் குடித்த தங்கமணியை ஒருவித ஆயாசையுடன் பார்த்தேன். எனக்கு அந்த ராக்கி - ரங்கன் சொல்றதும் சரின்னு படுது, தங்கமணி சொல்றதும் சரிதானோன்னு யோசிக்க வைக்குது, என்ன ஒரு மனது எனக்கு? புதுசா நாமளும் ஏதாவது யோசிக்கணுமோ?!கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Wednesday, June 29, 2011

யார் இந்த சுவாமி நிகமனானந்தா? ஒரு பளீச் ரிப்போர்ட்....!

ஒரு தேசம், இங்கே சுற்றி விரவியுள்ள பொது புத்திகள், பொறாமைகளை தன்னகத்தே கொண்ட மனிதர்கள், சுயநல அரசியல்வாதிகள், தத்தம் தகுதியறியா தலையற்ற முண்டங்கள் என்று சீரழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்தியம் பேசுகிறவர்களின் நாக்குகளை அறுக்க வருகிறவனின் தலைகளை கொய்வோம் என்று போர்ப்பரணி பாடுவதில் என்ன தவறு....?

வன்முறை தேவையில்லை என்ற கூற்றினை மறுக்கும் மனிதர்களை எல்லாம் உலுப்பி எழச்செய்து கீதையையும், ரசூல் அல்லாவின் (சல்) போர்களையும் வாசிக்கச் சொல்லத்தான் வேண்டும். சத்தியம் சத்தியத்தால் வெல்லப்படலாம் ஆனால் அநீதிகளை எரித்துப் போட பிரமாண்ட வன்முறை தேவைப்படுகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு தேசத்து எல்லைகளிலும் ஆயுதமேந்திய மனிதர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஒரு நன்மை செய்ய பத்து தீமைகளை எரித்துப் போடுவது வரலாற்றின் காட்சிகளில்நாம் கண்டது. இப்படிப்பட்ட ஒரு அநீதியாக நாம் சமீபகாலத்தில் கேட்டும் படித்தும் அதை காற்றில் பறக்க விட்டு விட்டு ஊடகங்கள் காட்சிப்படுத்தும் செய்திகளை நமது நெற்றியிலும், நெஞ்சிலும் பச்சை குத்திக் கொண்டுதிரிகிறோம்.

அன்னா ஹாசரேயையும், சாமியார் பாபா ராம் தேவ் போன்றவர்களின் உண்ணாவிரதங்களை பிராமாண்டப்படுத்திய நம்மில் எத்தனை பேருக்கு சுவாமி நிகமனானந்தா பற்றி தெரியும் அல்லது அதைப் பற்றி எத்தனை பேரிடம் பேசியிருப்போம். அவர் சார்ந்திருந்த மதம், சாமியார் என்ற பதம் எல்லாம் விட்டு விடுங்கள் ..அவர் ஏன் உண்ணா விரதம் இருந்தார்...? என்று நம்மில் எத்தனை ஆழமாய் யோசித்து இருப்போம்...

நதிகளை தாயாக பார்க்கச் சொல்லி நமது தேசம் பயிற்றுவித்ததின் பின்னணியில் ஆயிரம் ஆன்மிகக் காரணங்கள் இருந்து விட்டுப் போகட்டும் அதை விடுங்கள். நீரின்றி அமையாது என்று வள்ளுவன் உரைத்ததைக் கூட ஏற்க மனமில்லையெனில் விட்டு விடுங்கள்...ஆனால் இந்த கருத்துக்கள் எதுவுமற்று நமெக்கல்லாம் தெரியும் நீரின் பயன்பாடு என்னவென்று...

நாம் சிறுவர்களாய் இருந்த போது பார்த்து ரசித்த பல ஆறுகள் ஒன்று.. இன்று இருந்த இடம் இல்லாமல் இன்று அழிந்து விட்டன அல்லது மாசுகளோடு மாசாய் அவை இன்று சாக்கடைகளாய் மாறிப் போய்விட்டன....

நாம் கண்டு வாழ்ந்து அனுபவித்த ஏராளமான விசயங்கள் நமது சந்ததியினருக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் சாமியார் நிகமனானந்தா கங்கை நீர் மாசு படுவதைக் கண்டித்து ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆன்மீக புனித விளக்கங்கள் தாண்டி கங்கைக்கு அறிவியல் ரீதியாகவும் பல சிறப்புகள் உள்ளது தெளிந்தோர் அறிந்த விடயம். கங்கையில் இருக்கும் ஆக்ஸிஜனின் அடர்த்தி மிக அதிகம். இமயத்திலிருந்து புறப்படும் கங்கை பாயும் தூரம் சுமார் 2500 கிலோ மீட்டர்கள்...பல மரங்கள், மூலிகைகளை கடந்து அது மனிதர்களிடம் சேரும் போது பல்வேறு வியாதிகளை குணமாக்கும் மூலிகை நீராய் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது யுகங்களாய்....

ஆனால்....

அப்படிப்பட்ட கங்கை உலகின் ஐந்தாவது மாசுபட்ட நதி என்றும் நாம் அறிந்து கொள்வோம். உலகில் மிகைப்பட்ட மனிதர்கள் புனிதமாய் நினைக்கும் ஒரு நதிதான்..மாசுகள் கலந்து சீரழிந்து, சீக்கிரமே நமது சந்ததியினருக்கு அதை ஒரு சாக்கடையாய் அடையாளம் காட்ட வேண்டிய சூழல் வந்து விடக்கூடாது என்றநோக்கில்...

கரையோரங்களில் நிகழ்த்தப்பெறும்  மாசுகள் சுற்றுப் புறச் சூழலை பாதிக்கிறது என்று வலியுறுத்தியும் சுவாமி நிகாமனானந்தா உண்ணாவிரதம் மேற்கொண்டார். சுமார் 125 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகள் கங்கையில்கலக்கின்றன....! புண்ணிய நதி புண்ணிய நதி என்று கூறிக் கூறி பெரும் தீங்கு செய்யும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து கேட்பாரற்று இருந்த
சாமியார்.... நான்கு மாதங்கள் கழித்து  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்தார்.

தவறான ஒரு மருத்துவத்தினால் அவர் இறந்து விட்டார் என்று கூறுவதை கூட
புறம் தள்ளி விட்டு அவர் உண்ணாவிரதம் இருந்ததன் நோக்கத்தை நாமெல்லாம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்....!


பரபரப்பு அரசியலையும், பகட்டு விளம்பரங்களின் தாக்கத்தையும் பார்வையாக
கொண்டிருக்கும் நமது தேசத்தின் பிரச்சினைகளின் ஆழங்கள் எல்லாம் உணர்ச்சியின் அரக்கனால் தீர்மானிக்கப்பட்டு அதன் பின்னாலேயே ஆட்டு மந்தைகளைப் போல மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...

அறிவின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகும் போக்கு எம்மக்களுக்கு எப்போது ஏற்படும் என்பது பெரும் கேள்விக்குறியாய் இருக்கிறது என்று எண்ணும் அதே நேரத்தில் சாமியார் நிகமனானந்தா போன்றவர்களின் நோக்கங்கள் பற்றி மிகைப்பட்ட பேர்கள் எழுதவும் பேசவும் செய்ய வேண்டும்... என்றும் இக்கட்டுரை விரும்புகிறது.

நதிகளையும், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளையும் மாசுபடுத்துவதை தடுப்போம். மேலும் கிராமங்கள் தோறும்..ஏன் இன்னும் சொல்லப்போனால் நகரங்களின் மையங்களிலும்  ஆங்காங்கேயும் இயன்ற அளவு குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை உருவாக்குவோம்....

ஆரோக்கியமான சுற்றுப் புறம் கொண்ட அழகிய ஒரு உலகத்தினை நமது சந்ததியினருக்கு வழங்குவோம். சுவாமி நிகாமனானந்தா போன்றவர்களின் தியாகச் செயலை எப்போதும் போற்றுவோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Tuesday, June 28, 2011

கறுப்பு பணம் என்னும் அரக்கன்..! ஒரு பொருளாதாரப் பார்வை...!
கறுப்பு பணம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது கள்ள நோட்டை தான் கறுப்பு பணம் என்று நினைத்து கொண்டு இருந்தேன், பிறகு தான்...தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கறுப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கறுப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்....என தெரியவில்லை கறுப்புப்பணம் என்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அதை பதுக்கி வைத்திருக்கும் அளவை கேட்டால் மயக்கமே வந்துவிடும் 70 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். வங்கியே முன்வந்து எங்கள் வங்கிகளில் கணக்குவைத்திருப்போர் விபரங்களை அந்ததந்த நாடுகள் கேட்டால் கொடுக்கத்தயார் என அறிவித்து இருக்கிறது ஆனால் அது நம் இந்திய அரசியல்வாதியின் செவிகளில் விழவில்லை போல...செவிகளில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.

அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம் என சொல்கிறார்கள்... இவ்வளவு பணம் நம் நாட்டை விட்டு எப்படி போகிறது...? 

இந்த பணம் எங்கு இருந்து இவர்களுக்கு வருகிறது...எல்லாம் இந்த அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்தான் இப்படி மலை போல் குவிந்து கிடக்கிறது, இன்னும் பல பெரும் தொழிலதிபர்கள் செய்யும் சேட்டை தான் அந்த மலைகள் குட்டி போடுகிறது சிலர் இப்படி வரிகட்டாமல் இருப்பதால் மக்களுக்கு தான் பெரும் துன்பம், அரசுக்கு வருவாய் இல்லை என்று சாமானிய மக்கள் வாங்கும் தீப்பெட்டி மீது வரி உயரும்.

சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது, இந்த பணம் மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்தால், நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். மேலும் இந்த பணத்தை வங்கியில் போட்டவர்களுடைய வாரிசுகளுக்கே அந்த வங்கியில் பணம் இருப்பது தெரியவில்லை, அந்த பணம் எல்லாம் முடங்கி போய் உள்ளது, இந்த பணம் மீண்டும் கிடைத்தால் அதை வைத்து நம் நாட்டின் கடனை அடைத்து விடலாம்....பல நாடுகளுக்கு இந்தியாவே கடன் தரலாம்...ஒரு குடும்பத்திற்கு 1 இலட்சம் என பிரித்து கொடுத்தால் நாட்டில் யாரும் ஏழையாகவே இருக்க மாட்டார்கள்.

சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இவர்கள் பெயர்கள் தான் முன்னிலையில் இருக்கும் அதனால் தான் கூற மறுகிறார்கள்...இவர்களுக்கு பணம் தரும் தொழில் அதிபர்கள் பெயரை வெளியிட்டால் அவர்கள், இவர்களுக்கு நிதி தரமாட்டார்கள், அந்த பட்டியலை வெளியிட்டால் இவர்களுக்கு என்ன லாபம், அதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக்குழு பொது கணக்குக்குழு என கூச்சல் போடும் எதிர்கட்சிகள் இந்த விஷயத்தில் ஏன் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை ஏன் என்றால் அவர்கள் பணமும் அங்கே இருக்கிறது....சாமானிய மக்களின் வங்கியில் அவன் வைத்து இருக்கும் இருப்பு தொகை கூட இருக்காது ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் அதை முடக்கி வேறு வைத்து உள்ளார்கள். பணத்தை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதற்கு என்று தனி சட்டம் போட வேண்டும். அதற்கும் மேல் நாம் திருந்த வேண்டும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த வேண்டும் அரசியல்வாதி ஊழல் செய்கிறான் என்பது எல்லாம் இரண்டாம் பிரச்சனை நம் கடமையை ஒழுங்காக செய்வோம் எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 

Monday, June 27, 2011

மக்களை அதிர வைக்கும். அ.தி.மு.க. அரசு...ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது ஏதெனும் நல்லது நடக்கும் என்ற நமது ஆசைகளில் டன் டன்னாக மண் அள்ளிக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சி. கடந்து போன ஆட்சியின் ஒரு வலுவான கிடுக்குப் பிடியிலிருந்து தப்பித்தோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே காழ்புணர்ச்சி அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

கடந்த தி.மு.க அரசின் திட்டங்கள் நலம் பயப்பதாய் இருந்தாலும் கூட அதை தவிடு பொடியாக்கித்தான் தீருவேன் எனபதற்கா அரசுப் பொறுப்பு ஏற்றார்கள்? மக்களுக்கு நல்லது செய்ய வந்த அரசு கடந்த அரசு செய்த நல்ல விசயங்களை அழித்தொழிக்கத்தான் வேண்டுமா...?

சாரசரி தமிழனின் ஆதங்கமாய் விரியும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...!


உலகளாவிய தமிழர்கள் அனைவரின் கோபத்தின் விளைவாக தமிழகத்தின் முதல்வர் என்னும் சிம்மாசனத்தில் இருந்து அல்லாடும் வயதில் தூக்கி எறியப்பட்டார் கருணாநிதி. தூக்கி எறியப்பட்டவரை துச்சம் என எண்ணி இப்போது சிறப்பான ஒருவரை உட்கார வைத்துவிட்டதாய் உண்மையறியா நடுத்தர மக்கள் மே-13 முதல் அந்த சூடு ஆறும் வரை பிதற்றிக்கொண்டு தான் இருந்தனர். இதில் திமுக.,சார்பு மக்களும்- ஜெ.,வை பற்றி விடயம் தெரிந்தவர்களும் அடக்கிவாசித்தனர்.

உண்மையில் இம்முறை ஆட்சி பொறுப்பேற்ற போது ஜெ., மாறிவிட்டார் போலும் என்னும் எண்ணம் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணமே அவரின் செய்கைகள் இருந்தன.

ஆனால், பதவி ஏற்று ஒரு மாத காலம் கூட முடியாத நிலையில் பல மாற்றங்களை கொண்டு வந்து ‘‘நான் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் இல்லை.. எனது எதிரி கருணாநிதியை பழிவாங்கும் நோக்கில் தான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.


சான்றோர் வாக்கின் படி நல்லது செய்யாவிடிலும் கெட்டதாவது செய்யாமல் இருக்கலாம் அல்லவா.!? அவர் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் காப்பீடு திட்டத்தை பொது காப்பீடு திட்டமாக்குவதும், கலைஞர் கருணாநிதி நகரை மீண்டும் கேகே நகர் என மாற்றுவதும் மிகவும் மக்களுக்கு தேவையான ஒன்றா.!?

இதை பற்றி விடுவோம். சமச்சீர் கல்வி என்ன பாவம் செய்தது.!? அது என்ன கலைஞரின் அதிரிபுதிரி மூளைக்கு தோன்றி அவரே கொண்டு வந்த திட்டமா.!? ஏழை எளிய மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரின் பல நாள் ஏக்கம் அல்லவா,!?
 
மெட்ரிக்குலேஷனில் படித்த ஒரு ஐந்தாம் வகுப்பு பையன் ஆறாவது அரசு பள்ளிகூடத்துல சேர்ந்தா அவன் மூன்றாம் வகுப்பில் படித்தது தான் அங்கு  இருக்கும். இது தான் சமநிலை கல்வியா.!? இதை தான் நாம் விரும்புகிறோமா.!? என்ற பல நாள் கேள்விக்கு விடையாக தான் அது இருந்தது.

நிதி பணத்தில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தாலும் அரசியல்வாதிகள் அந்த நிழற்குடையோடு பெரிதாய் தம் பெயரை பொதித்து வைப்பது வழக்கம் தானே.! அதில் கொஞ்சம் மிகைப்பட்டவர் கருணாநிதி. தம்மை பற்றிய எழுத்துக்களும், தம் எழுத்துக்களையும் மக்கள் படிக்கவேண்டும் என்று விரும்பினார். அதை அவரது ஆட்சிகாலத்தில் கொண்டுவர போகும் சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதிக்க நினைத்தார். இதில் தவறு என்ன இருக்கு.!? நல்ல கருத்தாக இருந்தால் யார் சொன்னால் என்ன.!?

வழமையாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பள்ளியை 15ம் தேதி திறக்க சொல்லி சொன்னது புது ஜெ., அரசு. திறந்த பள்ளிகள் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. என்ன செய்வதென்று புரியாமல்.!! ஜூலை 5க்கு பிறகாவது இதற்கு ஒரு சிறப்பான முடிவு கிடைக்குமா என்பது சந்தேகமாக தலைவிரித்து ஆடுகிறது.


சமச்சீர் கல்வி நிறுத்தத்திற்கு காரணம் என்று சொல்லப்படுவது சரியான கல்வித்தரம் இல்லை என்பதே.! இதே தரத்தில் தான் அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை படித்துக்கொண்டிருந்தனர். இப்போதைய அரசு பொதுவாக மாணவர்களின் கல்வி தரத்தை பார்க்கிறதா, இல்லை மெட்ரிக்குலேஷன் மாணவர்களின் கல்வி தரத்தை பார்க்கிறதா.!?

கல்வி தரத்தினை குறை சொல்லும் அரசு. கல்வி வழங்கும் இடத்தின் திறனை நன்கு பராமரிக்கிறதா.!? எத்தனை அரசு பள்ளிகள் சுற்று சுவர், மின்விசிறி, கரும்பலகை கூட இல்லாமல் இருக்கின்றன. தரத்தினை உயர்த்த நினைப்பவர் முதலில் அதில் கவனம் செலுத்தலாமே.! கல்வி ஆண்டு தொடங்கும் முன்னர் இவ்வாறான குழப்பாவதியான செயல்பாடு மாணவர்களை குழப்பம் அடைய செய்யாதா.!? இந்த கல்வி ஆண்டு இறுதியில் பொலம்பல்களும், குழப்பங்களும் மட்டும் தான் நீடிக்குமா.!? பொறுமை தான் வேண்டும். 

பொறுப்பது தான் நமக்கு புதிதில்லையே.!!
மானமிழந்த சோற்றை வீசி
மதியானாய் மாற்றான் தேடினோம்
வெண்கதிரோனாய் ஒருத்தி
உதித்த கொப்புளத்தில் தெரிந்தது
விடியலில்லை.! விந்தையானோம் என்று.!!கழுகிற்காக(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)Friday, June 24, 2011

ஹலோ டாக்டர் உடலே...என் உடலே...(ஒரு ஆரோக்கிய பார்வை)சுவரில்லாமல் சித்திரம் எப்படி செய்ய முடியும்? உடலின் ஆரோக்கியம் போற்றாமல் ஆயிரம் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் போராட்ட வடிவங்களையும் மனிதர்களுக்கு பகிரதலின்  அர்த்தங்கள் இருக்க முடியாது. தான், தனது குடும்பம் என்று செப்பனிட்டு நாம் இயங்க ஆரம்பிப்பதற்கு முன்னால்...தன் உடல் நலம் என்ற சூட்சும இலக்கை கழுகு உற்று நோக்கச் சொல்கிறது.


உடல் ஆரோக்கியம் என்ற விசயம் பூர்த்தியான உடனேதான் ஒரு மனிதன் தன்னளவில் திருப்தியடைய முடியும். தன்னளவில் திருப்தியான மனிதனுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். தன்னம்பிக்கை அதிகமானால் செயல்களில் தீரம் வரும். செயல்களில் தீரமானால் வெற்றி என்பது எளிதாகும். வெற்றி பெற்ற மனிதன்...தான் மற்றும் தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு நிலையை மனிதன் அடைந்து அவன் தன்னிறைவு ஆகும் போது யாரும் எதுவும் சொல்லாமலேயே வலியுறுத்தல்களின்றி...சமுதாய நலனை நோக்கி தானே வருவான் என்று கழுகு திண்ணமாக நம்புகிறது.


டாக்டர் ரோகிணி அவர்கள் கழுகின் இந்த விழிப்புணர்வு பயணத்தில் உடல் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்களை நம்மோடு பகிர இசைந்ததற்கு கழுகு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு .....உடல் ஆரோக்கியம் பகுதிக்குள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நிக்கோடின் கறையை நீக்கலாம்னு நினைச்சேன், ஒரு நண்பர், அதனால் பல்லில் இருக்கும் எனாமல் போகும்னு சொல்றார், உண்மையா, நான் பல்லை கிளீன் பண்ணலாமா இல்லை இனிமே ஒழுங்கா!? பல்லு விளக்கினா மட்டும் போதுமா!?
இது பலருக்கும் வரும் ஐயம்,
பல் மருத்துவரின் துணை கொண்டு வருடம் ஒரு முறை பல் சுத்தம் செய்வதால் எந்த ஒரு கெடுதலும் வருவது இல்லை .
பல் சுத்தம் செய்யப்படும் போது எனாமல் நீக்கப் படுவது இல்லை , பல் மேல் படிந்துள்ள வெளிப்புற கறை,மற்றும் காறை மட்டுமே நீக்கப்படுகிறது. ஒரு நாள் இல்லை, இரு நாட்கள் பல் கூச்சம் இருக்கலாம்,அது மிக இயல்பான விடயம். பல் மேல் பதிந்துள்ள காறை நீங்கும் போது பற்களின் இடைவெளி அதிகரித்துள்ளது போல் தோன்றும் அதும் இயல்பே,முறையாய் பல் சுத்தம் பேணப்படும் போது பின்னர் அவ்விடைவெளி,ஈறு பகுதி வளர்ந்து அடைபடும்.  

வாய் இறுகு நோய் என்றால் என்ன? அதன் காரணிகள் எவை?

நோயின் தன்மை :

கன்னத்து உட்புறதசைகள்  அதன்  இலகு தன்மை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது  கடினமாகும் இந்நிலையே  வாய் இறுகு நோய்.


வாயின்  சதைகளில் ரத்தஓட்டம்  குறைந்து சதை வெளிறி காணப்படுதல் எரிச்சல்,வாய் உலர்ந்து போதல் , சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன்  அறிகுறிகள்.சில நேரங்களில் குரல் மாற்றம் , கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.
பொதுவாக நான்கு விரற்கிடை திறக்கும் வாய்,இரண்டு விரற்கிடைக்கும்  குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்


காரணிகள் :


பொதுவாக பான்பராக் ,  பாக்கு  , புகையிலை , அதிகமான காரம்  பயன் படுத்துவோர் ,வைட்டமின் சத்து குறைபாடு  உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும்  வாய்ப்புகள் அதிகம்.


 பாக்கு , தம்பாக்கு, புகையிலை, அதிக காரம்  போன்றவற்றை தவிர்த்தல்,இரும்பு சத்து ,வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல் , அவ்வப்பொழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும் .டாக்டர் எனக்கு 33 வயசு ஆகுது, பல்லுக்கு இடையில் ஒரு சின்ன கேப்பு இருக்குது, இப்போ பல்லு கட்டுனா அதை சரி செய்ய முடியுமா?
ஆனால் பல் மருத்தவரின் துணை கொண்டு செய்யப்படும் போது,பற்களின் இடைவெளியை கணக்கிட்டு,பல் நிறம் கொண்ட ரெசின் மூலம் அந்த சந்து அடைக்கப்படும் கம்பி போட்டு சரி செய்யலாம்,ஆனால் அதற்கு முன் தங்களின் பல்லின் ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும். சில நேரத்தில் பல் எடுத்து விட்டு வேறு பல் வைப்பதும் பரிந்துரை செய்யப்படும்.
மேற்கொண்டு தகவலுக்கு அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்.


நோ அலட்சியம்:


இன்று தமிழ் இளைஞன் ஒருவன் வாய் திறக்க இயலவில்லை  என்று எங்கள் மருத்தவ பிரிவுக்கு வந்தான். ப்ளம்பிங் வேலை செய்யும் அவன்,வேலை முடிந்து ரூம்க்கு  திரும்பி அசதி மேலிட மேஜை மேல் இருந்த  தண்ணீர் பாட்டிலை வாயில் சரிக்க அதிர்ந்தான்.


அது பைப் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட். முழுதும் குடித்துவிடாமல் வெளியில் துப்பி விட்டான். அதானால் வாயில் மட்டுமே பாதிப்பு. வாய் முழுவதும் வெந்து காணவே மிக கொடுமை. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும்  நாக்கு,வாய்,உட்புறத்து கன்னச்சதைகள் அனைத்தும்  பாதிக்கப்பட்டு இருந்தது. நாக்கின் தசைகள் பாதிக்ப்பட்டு இறுகி விட்டது.


நாக்கின் அசையும் தன்மையும் ,உணர்வும்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இது மாதிரி கணங்களில் உயிர் பிழைத்து இருப்பது போல்  ஒரு நரக வேதனை இருக்க முடியாது.ஒரு மாதம் ஆகியும்  அவனால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை,பேச முடிய வில்லை ,ஏன் வாய் திறக்கக் கூட இயலவில்லை.


ஆகவே நண்பர்களே..  இனி இது போன்ற திரவங்கள், மேலும் உடம்புக்கு ஊறுசெய்யும் எதுவுமே உணவு பொருள் வைக்கும் மேஜை அல்லது அந்த குடிநீர் பாட்டில், உணவு பொருள் தாங்கி வந்த பழைய டப்பா  முதலியவைகளில் தயை கூர்ந்து வைக்காதீர் . நானே ஒரு முறை அதுபோல் பெயிண்ட் மிக்ஸ் செய்யும் தின்னரை  தண்ணீர் பாட்டிலில் வைக்க என் அன்னை அதை எடுத்து குடித்ததும்., எங்கள் கல்லூரியில் அட்டெண்டர் கவனக்குறைவாக  மேஜையில் ஸ்பிரிட் (எரிசாராயம் ) குடிநீர் பாட்டிலில் வைக்க., இருப்பது குடிநீர் என நம்பி சகமருத்துவர் ஒருவர் குடித்த  கதைகள் நடந்து உண்டு.


சில நேரங்களில் நம் கவனக்குறைவால் யாரோ இல்லை  நம் உயிரோ இல்லை உடம்போ பாதிக்க படக்கூடும். கவனம் ப்ளீஸ் .,,
கழுகிற்காக
ரோகிணி  சிவா(கழுகு இன்னும் உயரப் பறக்கும்..)

 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes