Wednesday, March 02, 2011

யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையா?





தேர்தல் வந்து விட்டது.  எங்கள் தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளருமே வேஸ்ட்...! நான் என்ன செய்வது? யாராவது ஒருவருக்கு வாக்களித்தால் எப்படி பார்த்தாலும் ஒரு கெட்டவரைத்தானே நான் தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்களிக்காமல் இருப்பதும் தவறு....? என்ன செய்யலாம்....

இதோ உங்களின் கேள்விகளின் பதிலாய் விரிகிறது இந்தக் கட்டுரை...



அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே! இனி இந்த குரலை தினந்தோறும் நீங்கள் கேட்க்கப்போகிறீர்கள்! நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ  உங்கள்  வீட்டுக்கு அழையா விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள்! பொங்கல் முடிந்தாலும் உங்கள் காம்பவுண்டு சுவர்கள் இலவசமாக வெள்ளையடிக்கப்படும்! நடு சாலையில் குழிதோண்டி பந்தல் இட்டு...மின்சார கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடி.. அவசரத்திற்கு செல்லும் வாகனத்தைகூட ஐந்து ஊர்கள் சுற்ற வைத்து... இப்படி பலவிதங்களில் தமிழ்நாட்டை முன்னேற்ற துடிக்கும் நமது தலைவர்கள் ஓட்டு கேட்டு உங்கள் வீடு தேடி வருவார்கள்! இனி பாத்திரக்கடைகளில் குடங்களுக்கு ஆர்டர் அதிகமாகக்கிடைக்க்கும்! சாலைகள் புதுப்பொலிவு பெறும்! எது எப்படியோ ஒரு இந்திய குடிமகனாக நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடமை இந்த வாக்களிப்பது!


வாக்களிப்பது என்றவுடன் உங்களுக்கு குழப்பம் வரலாம்! யாருக்கு? எந்த கட்சிக்கு? இப்படி பலகுழப்பங்கள்..இதற்க்கு நமது கட்சிகளின் கடந்த ஐந்து வருடத்தை தெரிந்துகொள்வது அவசியம்! தளத்திருக்கு புதிதாக வருபவர்கள்இங்கு சென்று அதனையும் படிக்கவும்! என்ன? யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையா? வாங்க..உங்களுக்காகத்தான் இந்த கட்டுரையே! நாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க நமக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ...அதே உரிமையை நமக்கு யாரையுமே பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கவும் நமது அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு அந்த உரிமையினை வழங்கி உள்ளது! ஆனால் இதைப்பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை! விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த அரசாங்கமும், அரசியல் கட்சியும் முன்வருவதில்லை! ஏனென்றால் இது அவர்களின் அடிமடியில் கை வைப்பதைப்போல! நமது தேர்தல் கமிசனும் இந்த 49-Oவிதியைப்பற்றி அதிக அக்கறை கொள்ளவில்லை! அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அவர்கள் எப்படி அந்த கட்சிகளுக்கு எதிராக செயல்படுவார்கள்?! ஆனால் கட்சிகளின் கைகளில் சிக்காமல் உயரப்பறக்கும் இந்த கழுகின் பார்வையில் உங்களுக்க்கு விளக்கி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்! அதன் சிறு முயற்சியே இந்த கட்டுரை.


இந்திய தேர்தல் விதிகள் 1961- 49(O) தெளிவாக கூறுவது என்னவென்றால்..நீங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் உங்கள் வாக்குக்கு யாரும் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் யாருக்குமே என் வாக்கு யாருக்கும் இல்லை என்பதை தெளிவாக பதிவதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது! இப்படி வாக்களிப்பதால் என்ன நன்மை என்று தெரியுமா?.இப்பொழுது உங்கள் தொகுதியில் A மற்றும் B வேட்பாளர்கள் என்று வைத்துக்கொள்வோம், B வேட்ப்பாளர் 75 வாக்குகளும், A வேட்பாளர் 100  வாக்குகளும்  வாங்கி A வேட்ப்பாளர்  பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துக்கொண்டால், இப்போது நீங்கள் பதிவு செய்த 49(O) - வின் மொத்த எண்ணிக்கை 150 என்று வைத்துக்கொள்வோம், வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நீங்கள் பதிவு செய்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகம்! இதனால் உங்கள் தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்பதைவிட நீங்கள் விரும்பும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்கலாம்! (தேர்தல் செல்லாது என்பது உறுதிபட தெரிவிக்கவில்லை, ஆனால் இப்படி ஒரு முடிவு வந்தால் நம்மால் உச்சநீதி மன்றத்தை நாடி செல்லாது என அறிவிக்க செய்யலாம்!) எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்! அது உங்கள் தொகுதியாக இருக்கட்டும்!


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 49(O) விதியின்படி இந்தியாவிலே அதிகமாக பதிவு செய்யப்பட்டது எங்கு தெரியுமா? பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.. நமது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில்தான்! அதிகபட்சமாக 10,267 வாக்குகள் இந்த விதியின்படி பதிவு செய்யப்பட்டது என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது! அதுபோக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 852 வாக்குகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டது! இது ஆட்சியாளர்களுக்கு  விடுக்கப்பட்ட சிறு எச்சரிக்கை மணிதான்! இந்த பயத்தை நிரந்தரமாக்குவது உங்கள் கைகளில்தான் உள்ளது! இன்னும் நமது நாட்டில் வாக்களிக்கும் உரிமை கட்டாயமாக்கப்படவில்லை! அதனாலேயே நீங்கள் வீட்டில் இருப்பது அர்த்தமில்லை! உங்கள் தொகுதியில் 60% வாக்குகள் பதிவாகி30% வாக்குகள் வாங்குபவர் வெற்றி பெறுகிறார்! மீதி 40% வாக்காளர்கள் வாக்குசாவடி சென்று 49(O) விதியின்படி வாக்களித்தால்..இந்திய வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்படும்! இதற்க்கு போதுமான விழிப்புணர்வு உங்களிடம் இருந்து ஆரம்பிக்கட்டும்! நீங்கள் ஒரு பத்து பேருக்கு இதைப்பற்றி சொல்லுங்கள், அவர்கள் பத்து பேருக்கு சொல்லட்டும், இது சங்கிலி தொடர் போல தொடரட்டும்! நாம் சாக்கடையில் மூழ்கி முத்தெடுப்பதைவிட.. அவர்களே  முத்துக்களை  நம் வீட்டு வாசலில் கொண்டு வந்து வைப்பதற்கு முயற்சி செய்வோம்!


இந்த விதியின்படி வாக்களிப்பதில் நன்மைகள் இருந்தாலும், சில குறைபாடுகளும் உள்ளது! நமது நாட்டில் இப்பொழுது பெரும்பாலும் மின்னணு வாக்கு பதிவு எந்திரமே பயன்படுத்தப்படுகிறது! ஆனால் இந்த எந்திரத்தில் 49(O)விதியின்படி வாக்களிக்க எந்த வசதியும் இதுவரை செய்துதரப்படவில்லை! இந்த விதியின்படி வாக்களிக்க வேண்டுமானால் நாம் முதலில் வாக்கு சாவடியில் உள்ள தேர்தல் அலுவலரிடம் நமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்! பிறகு அவர் தரும் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கையப்பம் இட்டு விட்டு இந்த முறையில் வாக்களிக்க வேண்டும்! முதலில் இதில் நமது வாக்குரிமை ரகசியம் காக்கப்படவில்லை! இரண்டாவது வாக்கு சாவடியில் உள்ள அரசியல் முகவர்கள் நம்மை கவனிக்கும் அபாயம் உள்ளது! அதிலும் நீங்கள் யாரிடமாவது வாக்குக்கு பணம் வாங்கி இருந்தால் உங்கள் நிலை பரிதாபம்தான்! யாருடைய சிபாரிசும் எனக்கு தேவையில்லை, நான் வாக்குக்கு பணம் வாங்குவதில்லை, தொகுதியின் நன்மையே எனக்கு முக்கியம் என்று நினைப்பவர்களா நீங்கள்? கை கொடுங்கள்... உங்களுக்காகத்தான் இந்த விதியே உருவாக்கப்பட்டது! மற்ற பயந்த சுபாவம் உள்ளவர்கள் கொஞ்சநாள் பொறுத்திருங்கள்! உச்ச நீதிமன்றத்தில் இதைப்பற்றி ஒரு வழக்கு பொதுநல வழக்காக தொடுக்கப்பட்டுள்ளது!  தேர்தல் ஆணையமும் இதன் தீர்ப்புக்காத்தான் காத்திருக்கின்றது! ஒரு வேளை தீர்ப்பு சாதகமாக வந்தால் வாக்குப்பதிவு  எந்திரத்திலே இதற்க்கான வசதி செய்து தரப்படும்! ஆனால் இந்த49(O) விதி என்பது அரசியல்வாதிகள் மறந்த வேளையில் மக்களுக்கு செய்த நன்மை! இதை வெற்றிகரமாக பயன்படுத்திக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது!





கழுகுகுழுமத்தில் இணைய....






கழுகிற்காக
வைகை  




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

13 comments:

எஸ்.கே said...

49-ஓ பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks for ur info

Anonymous said...

நல்ல அலசல். 49ஒ வில் அதிகம் ஓட்டு விழுந்தால் அந்த தேர்தலை ரத்து செய்யும் விதி எதுவும் இல்லை. ஆனால் அதை வைத்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி, அதை சட்டமாக்க முடியும்.

Madhavan Srinivasagopalan said...

ஓ போடுறதுக்கு கண்டிப்பா ஒரு கூட்டமே இருக்குது, தயாரா..
இப்ப 49 - ஓ போடணுமா..
ரெடி.. ஸ்டார்ட் மியூசிக்..
--- தகவலுக்கு நன்றி..

மாணவன் said...

தெளிவாக விளக்கி பதிவிட்டமைக்கு கழுகாருக்கும் அண்ணன் வைகைக்கும் நன்றி :)

Kousalya Raj said...

இந்த பதிவை படித்த பின் எனக்கும் இந்த விதியை பயன்படுத்தி கொள்ளனும் என்றே தோன்றுகிறது...!

விரிவான விளக்கங்கள்.

தெளிவாக புரிந்துகொண்டேன். நன்றி.

ரஹீம் கஸ்ஸாலி said...

தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இது போல ஒரு பதிவிடலாம். இன்னும் பலருக்கு மறக்காமல் இருக்கும்,
என் தளத்தில் இன்றைய பதிவு .....
இது என்னடா பைத்தியக்காரத்தனம்?

MANO நாஞ்சில் மனோ said...

49 ஓ பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன்....

Chitra said...

விரிவான விளக்கம்.

arasan said...

சிறு சிறு சந்தேகங்கள் நிறைய இருந்தன ...
இப்போ அனைத்தும் தெளிவாயிடுசி ...
தரமான பதிவை வழங்கிய அண்ணன் வைகை அவர்களுக்கு நன்றி

arasan said...

மீண்டும் மீண்டும் கழுகின் பார்வை உயரே செல்ல வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

பயனுள்ள இடுகை - பொறுத்திருப்போம் - இயந்திரத்திலேயே பதிவு செய்யும் வசதியும் வந்து விடும்.

Anonymous said...

Sir,
Please go through this link
http://www.rtiindia.org/forum/10391-section-49-o-indian-constitution.html

As per the discussion,there wont be any re polling in case there is a majority on Negative votes. Instead a candidate will be chosen from the remaining votes.

Need more clarity on this :)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes