Tuesday, January 28, 2014

கலைஞரின் அதிரடி.....அஞ்சாநெஞ்சனுக்கு விழுந்த அடி..!
கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான்.

தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின்  அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி விட முடியாது. அந்த செல்வாக்கும் அவரது அப்பாவான கலைஞர் என்பவரால் ஊதி பெரிதாக்கப்பட்ட செல்வாக்குதான்.

அழகிரி எந்த சூழலிலும் தன்னை ஸ்டாலினோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. ஸ்டாலின் தன்னை திமுகழகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்த்திக் கொண்டவர். தமிழக மக்களிடையே கலைஞரின் மகன் என்ற ஒரு உறவுத்தொடர்பையும் கடந்து அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியிலும் அறிமுகமாகி இருப்பவர். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு அழகிரி பெருந்தன்மையோடு கட்சியில் தொடர்வாராயின் திமுகவிற்கு அது இன்னும் பலத்தைக் கூட்டும் என்றாலும் அழகிரி இல்லாவிட்டால் மிகப்பெரிய இழப்பு ஒன்றையும் அந்தக் கட்சி அடைந்து விடாது.

இன்னமும் கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஒரே தவறு ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவிக்காததுதான். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்து அவரின் கையில் கட்சியை முழுமையாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதிரடியாக பாரளுமன்றத்தில் நினைத்ததை விட அதிக இடங்களை பெற திமுகவால் முடியும். ஏனெனில் சமகால மக்களின் தெளிவான விருப்பங்களை புரிந்தவராய் ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கூட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றவர் ஸ்டாலின்....அதே போல தேமுதிக என்னும் ஓட்டைப் பிரிக்கும் கட்சியை சாதுர்யமாய் பாரளுமன்றத் தேர்தலில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக இடங்களை ஜெயிக்கலாம் என்ற எதார்த்த கணக்கை போட்டவரும் ஸ்டாலின் தான்....

ஸ்டாலினின் திட்டமிடுதலில்  இப்போது ஓரளவிற்கு இயங்க ஆரம்பித்திருக்கும் திமுகழகம் முழுமையா ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது.... மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆகும் கண்கொள்ளா காட்சிகள் தமிழகத்தில் நடந்தேறும் என்பதே உண்மை...!

நாடகமாயிருந்தாலும் அரசியல் சூழ்ச்சியாய் இருந்தாலும்....அழகிரி நீக்கம் அதிரடிதான்...!


கழுகு
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

Sunday, January 26, 2014

இந்தியக் குடியரசும்...வல்லரசுக் கனவும்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...!


இந்திய குடியரசின் ஒப்பற்ற நாளை விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை கழுகு தெரிவித்துக் கொள்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னை வல்லரசாக பார்க்கச் சொல்லி இந்திய தேசத்தின் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் இதுவரை இந்தியாவை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு இந்தியக் குடிமகனாக கடும் கண்டனத்தை இந்த 65 ஆம் குடியரசு தினத்தில் தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளதையும் மறக்க வேண்டாம் தோழர்கள்..!

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனும், டச்சுக்காரனும், பிரெஞ்சுக்காரனும் மென்று தின்றது போக மீதமுள்ள நாட்டை நாங்கள் போராடித்தான் சுதந்திரம் பெற்றோமென்று இந்திய வரலாறு எழுதப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்திய அரசியல்கட்சிகளின் ஆக்கிரமிப்பு... அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. இந்திய சுதந்திரத்துக்கு மக்கள் போராடியதும் கஷ்டங்களை அனுபவித்ததும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ஆங்கிலேயனால் நிர்வாகம் செய்ய முடியாமல் சுதந்திரம் என்ற ஒரு மாயா விடுதலையை அவர்கள் விட்டுகொடுத்து சென்றதும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை.. காலத்தின் கட்டாயமாகிப் போனதை மகாத்மா அறிந்திருந்தார். காழ்ப்புணர்ச்சி மதவாத அரசியலைக் கண்டு சகிக்க முடியாத ஒரு தேச நலவிரும்பியாய் இருந்த தேசப்பிதாவால், சுதந்திர இந்தியாவின் எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க முடியவில்லை. தன்முனைப்பினைக் கொண்டிருந்த நேருவால் முதல் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க முடியவில்லையாதலால் தீர்க்கமாக தேசப்பிதா எடுத்த முடிவுதான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது.

காலத்தின் வீச்சில் இந்தியாவின் சக்கரங்கள் உருண்டோடி, உருண்டோடி, அதன் மிகுதியான பக்கங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆண்ட ஒரு பெரும் கட்சியாக விசுவரூபமெடுத்து நிற்பது காங்கிரஸ் மட்டுமே...! சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் என்னும் கட்சி முன்னெடுத்த ஜனநாயகமும் பொருளாதாரக் கொள்கைகளும், பிராந்திய மக்களை நடத்திய விதமும், பிராந்திய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து முன்னெடுத்த திட்டங்களும் சேர்ந்துதான் இன்றைய இந்தியாவின் எல்லாவிதமான சமூக சூழல்களுக்கும் காரணியாய் ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.

அகில இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் என்னும் பெரும் கட்சிக்கு மாற்றாய் அறியப்படும் பாரதிய ஜனதாவின் அடிப்படைக் கொள்கைகள் இந்தியா என்னும் பன்முகப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஒற்றுமைக்கு சர்வ நிச்சயமாய் ஊறு விளைவிக்க கூடியதுதான். ஆர்.எஸ்.எஸை தனது ஆணிவேராக கொண்டிருக்கும் இந்தக் கட்சியின் அகண்டபாரதக் கொள்கையும், இந்து நாடு கொள்கையும் ஒரு வேளை இந்தக் கட்சி தேசம் முழுதும் வலுவாய் காலூன்றினால் ஒரு சர்வாகாதிகாரமாகவே தேசம் முழுமைக்கும் அறிமுகம் செய்யப்படும் அபாயமுமிருக்கிறது.

பல சாதி அடிப்படைகள் கொண்ட இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இறக்குமதி செய்த கம்யூனிசம் வேரூன்ற முடியாததற்கு காரணம் வர்க்க போராட்டங்களையும் அதன் கொடுமைகளையும் தாண்டிய நுணுக்கமான மனிதவள சங்கடங்களை அவர்களால் அணுகமுடியாததுதான். அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களின் பொருளாதர ரீதியான பலவீனங்களையும், அடக்கு முறைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்ல முனைந்த கம்னியூஸ்ட்டுகளுக்கு இன ரீதியான அடக்கு முறையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலேயே போனது...

இந்திய தேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் தேசம் முழுதும் வியாபித்து நிற்க முடியாத வகையில் போனதற்கு காங்கிரசின் மேம்போக்கான கவர்ச்சிகர கொள்கைகளும், தேச விடுதலைப் போராட்ட அக்மார்க் முத்திரைகளும் காரணமாக இருந்ததால்,  இன்று வரை ஒரு பாமர இந்தியனால் சுதந்திரத்துக்குப் போரடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும், இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான காங்கிரசுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போனது....

இதுதான் காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச சாணக்கியத்தனம். சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்திய காங்கிரஸ் கொடியில் இராட்டையை எடுத்து விட்டு.... அதில் அசோக சக்கரம் பொருத்தி இந்தியாவின் சுதந்திரக் கொடியாய் அறிவித்த காங்கிரஸ் பெரும் தலைகள் அதே வர்ணத்தில் தனது கட்சியின் கொடியையும் வைத்துக் கொண்டு நடுவில் கைச் சின்னத்தை பொறித்து சாமார்த்தியமாய் தன்னை தேசத்தின் மிகப்பெரிய சக்தியாய் முடிச்சிட்டுக் கொண்டது.

கடந்த 64 வருட இந்திய குடியரசு எதையும் சாதித்து விடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்வீர்களாக; எந்த மாநிலத்துக்கு இடையேயும் சுமூக உறவுகள் கிடையாது. இந்திய தேசியத்தின் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதிலும், பகிர்தலிலும்,  ஒரு நேர்மை கிடையாது என்பதை தொடர்ச்சியாக தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அயல் மாநிலங்களால் நடக்கும் வஞ்சிப்புக்களின் மூலம் நாம் அறியலாம்.

ஒரு நாடு தன்னில் தன்னிறைவு பெற்று, தன் குடிகளை சுபிட்சமாக்கி, தன் ஆளுமையை தன் தேசம் கடந்து, வெவ்வேறு பிராந்தியங்களில் பணமாகவும், படையாகவும் செலுத்த இயலுமெனில் அதுதான் வல்லரசு நாடு....

சென்னை போன்ற தமிழகத்தின் தலை நகரங்களில் கூட தொடர்ச்சியான மின்வெட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியா முழுமையும் மின்சாரப் பற்றாக்குறை, இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு தேசத்தில், ஒரு வருடத்தில் மிகையான மாதங்களில் கொளுத்தும் வெயிலைக் கொண்ட ஒரு தேசத்தில் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் இல்லை என்பதை எப்படி எடுத்து கொள்வது என் தேசத்தீரே...?

அதிகப் பொருட்செலவு ஆகும் என்று திட்டங்களை உதறித் தள்ளும் இந்திய ஆளுமை, வேண்டாம் வேண்டாம் என்று அண்டை நாடுகள் சொல்லும் போதும் தங்கள் உதவிகளை அங்கே குவிக்கும் குறுகிய அரசியல் நோக்கத்தின் பின்னணி என்ன?

சர்வ நிச்சயமாய் இந்தியா அதிக பணக்கார முதலாளிகளைத் தொழிலதிபர்களாயும், அரசியல் தலைவர்களாயும் கொண்ட, எப்போதும் லஞ்ச லாவண்யங்களையும் நேர்மையற்ற அரசியலையும் கொண்ட தன்னை எப்போதும் மிகைப்படுத்திப் பார்த்துக் கொள்கிற ஒரு வறுமையின் தேசம்தான்...!

சாலை வசதிகள் இல்லாமலும், சுகாதர வசதிகள் இல்லாமலும், சுற்று வட்டாரத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் குறைந்த பட்சம் ஐந்து மைல்கள் தாண்டி செல்ல வேண்டிய அவசியமும், மின்சார வசதிகள் இன்றியும், குடிநீர் வசதிகளின்றியும், ஒருவேளை நெல் சோற்றை சாப்பிடவே வக்கற்ற குடும்பங்களை புறநகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுதான்...

வல்லரசு கோஷத்தோடு இந்திய குடியரசை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம் தோழர்களே....!

கல்வியறிவில் மிகுந்த மாநிலம் என்று இந்தியாவால் அறிவிக்கப்படும் ஒரு மாநிலத்தில் தான் முட்டாள்தனமாக அணை இடிந்து விடும் என்று கூறி போராட்டங்கள் நடத்தி தண்ணீர் தர மறுத்து வெந்நீரை ஊற்றி மனிதர்களைக் கொல்லும் மனிதர்கள் வசிக்கிறார்கள்....

கல்வியறிவு என்று தேசம் கூறும் மனிதர்களின் அறிவின் உயரம் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்,  இது வல்லரசு இந்தியாவா? அல்லது குள்ளரசு இந்தியாவா? என்பதை நீங்கள் விளங்கக்கூடும்....!

அறிவால் முன்னேற முடியாமல் மக்களைக் கிடுக்குப் பிடிபோட்டு இன்னமும் சாதிப் பிரச்சினைகளையும், மதப்பிரச்சினைகளையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைக் கொண்ட தேசம் எப்படி வல்லரசு ஆகும்...?

ஏதோ ஒரு சாதியில் பிறக்கிறான், வளர்கிறான் அதைத் தனது அடையாளமாகக் கொண்டு கூட்டம் கூட்டி ஒரு அமைப்பாகும் போது அதை முற்போக்கு புத்திகள் கொண்டவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் வாக்குகளுக்காக அண்டிப் பிழைக்கும் போக்கு உள்ள தேசம் எப்படி ஒரு வல்லரசு என்று கூறுவீர்கள்...?

சிறு சிறு நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற பின்னரும் நாம் அணு குண்டு வெடித்ததையும், ஏவுகணைகள் செய்ததையும் வைத்துக் கொண்டு பெருமை பேசிக் கொண்டிருப்பதின் பின்னணியில் இருக்கும் அறியாமைச் சாயம் எப்போது என் தேசத்தில் வெளுக்கும்....?

அன்புத் தோழர்களே...இந்தியா சுதந்திரம் அடைந்தது.....இந்தியா குடியரசு ஆனது....கூடவே இங்கே மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டு ஆடம்பரமாய் வாழக்கூடிய ஒரு சமூக அரசியலும் புகுத்தபட்டது.....

சாமானியன், சாமானியனாகவே இன்னமும் சாணம் மொழுகிய வீட்டில் மழைக்கு ஒழுகுமே என்று கூரை மேய்ந்து கொண்டிருக்கிறான் வல்லரசு நாட்டின் ஒரு குடிமகன் என்ற கனவோடு..!

இதுதான் இந்திய தேசியம்...! இதுதான் இந்தியா....!

இந்தியாவை ஆளும் காங்கிரசும், மாற்றாக கருதப்படும் பாரதிய ஜனதாவையும் கடந்து மூன்றாவதாய் ஒரு ஆளுமை நிறைந்த சக்தி புத்துணர்ச்சியோடு வரவேண்டியது தான் தற்போது இந்த தேசத்தின் தேவை.....

இது நிகழவில்லையெனில்...

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் துயரப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து அதிகார அரசியலுக்கும், முதாலாலித்துவ மூளைகளுக்கும் சமாதி கட்ட வெகுண்டெழுந்து தன்னிச்சையாக போராடத் துவங்குவார்கள் என்பது சர்வ நிச்சயம்.....!

அப்படியான ஒரு போராட்டத்தின் முடிவு....சோவியத் ருஷ்யாவை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்...!  கழுகு வாசகர்களுக்கு இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes