Monday, February 28, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......!ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் நடக்கும் செய்திகளை சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினைச் செய்வதில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. 

சாதாரண வாழ்க்கையின் தகவல் பரிமாற்றத்தில் இன்று நேருக்கு நேராய் நாம் இருந்து வீடியோ சாட் செய்வது வரை வளர்ந்து இருக்கும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஊடகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதும் படி செல்வாவிடம் கூறினோம்....! ஒரு தொடராக வரப்போகும் இதன் முதல் பாகம் இதோ....
 இன்றைய சூழலில் ஊடகம் என்ற ஒன்று இல்லாத வாழ்க்கையை நம்மால் சிந்தித்துப் பார்க்க இயலாது.அச்சு வடிவில் இருந்த ஊடகங்கள் நமக்கு வேண்டிய செய்திகளைத் தந்ததோடு நம்மை மகிழ்விக்கவும் செய்தன, செய்துகொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகத்துறையில் அளவிட முடியா மாற்றங்களை அள்ளி வழங்கியுள்ளது என்றால்  மிகையல்ல.

முதலில் ஊடகங்கள் பெரும்பாலும் அச்சு வடிவிலேயே இருந்தது. பின்னர் வானொலியின் வரவு ஊடகத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதான் பின்னர் வந்த தொலைக்காட்சியும் , பின்பாக இணையம் , இப்பொழுது தொலைபேசியிலும் கூட நம்மால் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது.
இப்படிப்பட்ட ஊடகத்தின் வளர்ச்சிநிலை குறித்தும் , அதான் வரலாறு குறித்தும் அறிந்திட நமக்கு விருப்பம் இருக்கலாம். எனவே இந்தியாவில் ஊடகங்களின் வளர்ச்சி பற்றியும் அதான் வரலாறு பற்றியும் என்னால் இயன்ற அளவு தகவல்களைத் தொகுத்துத் நான்கு அல்லது ஐந்து பாகங்களாகத் தருகிறேன்.
ஊடகங்களின் முன்னோடியான அச்சு ஊடகங்கள் ( அதாவது தினசரி செய்தித் தாள்கள் , குமுதம் , ஆனந்த விகடன் போன்ற வார இதழ்கள் ) மற்றும் எவையெல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது அவையெல்லாம் அச்சு ஊடகங்களாகும்.


இதழியல் என்பதன் ( Journalism meaning ) பொருள் :


" Journalism " என்ற ஆங்கிலச்சொல்லின் வேர்ச்சொல் " dirnulis " என்ற இலத்தீன் சொல்லாகும். " dirnulis " என்றால் " ஒருநாளின் " என்று பொருளாகும். இச்சொல்லே பின்னாட்களில் " Journal " என்று மாற்றம் பெற்றது.


தோற்றம் மற்றும் வளர்ச்சி : 


அரண்மனை அல்லது அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிக்கவே முதன்முதலில் இதழ்கள் தோன்றின. கி.மு.60 இல் எகிப்து நாட்டை ஆண்ட சூலியசுசீசர் தனது ஆணைகளையும் அரண்மனைச் செய்திகளையும் எழுதித் தெருக்களில் வைத்தார்.இதனை ஆக்டானடர்ணாஎன்றனர். ஆக்டானடர்ணா என்றால் அன்றாட நடவடிக்கை என்று பொருள். இதுவே உலகின் முதல் செய்தித்தாள் என்று கூறப்படுகிறது.


முதல் அச்சு இதழ் :


முதல் அச்சு இதழ் சீனாவில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டடிசிங்பவே என்ற அரண்மனை இதழாகும்.அதில் அரசனின் ஆணைகள் , அறிவிப்புகள் வெளியிடபட்டிருந்தன.
கி.பி.1566 இல் நோட்டிசு கிரிட்டி என்ற இதழ் இத்தாலிய அரசால் வெளியிடப்பட்டது. இது ஒரு கையெழுத்து இதழாகும் . இதைப் படிக்க கெசட்டா என்ற செப்புக்காசு வழங்கவேண்டும். இதுவே அந்த இதழின் பெயராக மாறியது. அரசு இதழ்கள் அனைத்துமே கெசட்டு என்று அழைக்கப்பட்டன. எடுத்துகாட்டாக 


*.பெங்கால் கெசட்டு ,
*.மதராஸ் கெசட்டு ,
*.இலண்டன் கெசட்டு ,
*.சிலோன் கெசட்டு .வரும் பதிவுகளில் இந்தியாவில் இதழ்கள் பற்றியும் , இந்தியாவின் முதல் இதழான பெங்கால் கெசட்டு பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக
செல்வா  
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Saturday, February 19, 2011

மேய்ப்பனில்லா ஆடுகள்.....மாணவ சமுதாயம் பற்றிய ஒரு கழுகு பார்வை!எல்லா நிகழ்வுகளின் அவலங்கள் தாண்டி அதற்கு ஏதேனும் தீர்வுகள் இருக்குமா? என்று யோசித்தே பழக்கப்பட்ட கழுகின் மூளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் வெளிவரும் ஊடகங்களின் செய்திகள் எல்லாம் ஆச்சர்யத்தையும் வெறுப்பையுமே தூண்டுகின்றன. மனிதர்கள் தவறுகள் செய்யும் இடங்களில் எல்லாம் அவர்களின் மூளைகள் தப்பிப் போகின்றன. ஒன்று  அந்த தவறின் வீரியத்தினை விவரித்துப் பார்க்கும் விசாலம் கொண்ட மூளை மடிப்புகள் அற்றவர்கள் அல்லது வேண்டுமெனே செய்பவர்கள்.

இந்த இரண்டினையும் சீர்துக்கிப் பார்த்து மனிதர்களின் செயல்களின் நோக்கங்களில் தவறு இருக்கிறதா என்பது ஆராயப்படவேண்டும். நோக்கங்களில் தவறுகள் இருப்பின் அவை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது ஒரு குழுவின் செயல்கள் எந்த விதத்திலும் சமுதாயத்தையோ, அல்லது சுமூகமான வாழ்க்கை ஓட்டத்தையோ சிதைக்கும் வகையில் இருக்கக் கூடாது.
 
மனித மனம் கட்டுகளின்றி செயல்படும் வல்லமை கொண்டது. இங்கே மிகைப்பட்ட மனிதர்கள் உணர்வு நிலையில்  இருந்து செயலாற்றுவது இல்லை. அதனாலேயே தங்களின் சுய விருப்பு அல்லது வெறுப்பின் படி செயல்கள் செய்யும் அவலம் நிகழ்ந்து அவை எல்லாம் சமூகத்துக்கு எதிராக திரும்பிவிடுகின்றன.

இப்பபடிப்பட்ட நிகழ்வுகளின் சப்தங்களை மட்டுப்படுத்தவும், அநீதிகளை முடுக்கிவிடும் கைகளை உடைத்துப் போடவும் ஒவ்வொரு நாட்டின் சட்டமும் அதை பேணிக்காக்க அரசு இயந்திரமும் வடிவமைக்கப்படுகின்றன. இந்திய ஜனநாயக தேசத்தின் ஆளும் அதிகாரம் மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசின் கைகளில் பரிபூரணமாய் இருக்கும் பட்சத்தில் தேசத்தில் சட்ட ரீதியாக அத்து மீறப்படும் எல்லா நிகழ்வுகளினையும் கட்டுப்படுத்தும் தார்மீக பொறுப்பு அரசின் கைகளில்  இருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.

எங்கே இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரை? என்று யோசிக்கும் முன்....சமீபத்திய பேருந்து தின கொண்டாட்டங்களில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் அத்து மீறல் பற்றிய ஊடகங்களின் செய்திகளை கழுகு நினைவுபடுத்த விரும்பிகிறது. ஊடகப்பாய்ச்சல்கள் மாணவர்களின் மீது கடுமையான சீற்றமாகவும், அவர்களை சமூக விரோதிகளைப் போன்று சித்தரிக்கும் நிகழ்வுகளாகவும் எல்லோருடைய பார்வையும் இந்நேரம் எட்டிப் பிடித்திருக்கும்.

ஊடக தர்மம் என்றால் என்ன என்று கற்றறியா அல்லது கேட்டறியா ஊடங்கள் தமது மூளைகளின் சிந்திப்புகளில் இருந்து எதேச்சதிகாரமான வன் சொற்களை பொதுவில் இறைத்து தமது பங்குக்கு ஒரு வன்முறையை வேறு ஒரு கோணத்தில் சாதாரணர்களின் மனதிலே விதைத்த அதே நேரத்தில் கழுகின் பார்வை சராசரிகளில் இருந்து விலகி......

பேருந்து தினம் என்ற கேளிக்கையை அத்துமீறலாக்கிய மாணவர்களின் மீது உச்ச பட்ச கோபம் கொள்ளும் அதே நேரத்தில் இதை தடுக்கவும், சீர்படுத்தவும் விதிமுறைகள் ஏதும் இல்லையா? அல்லது இருந்தும் பின்பற்றப்படவில்லையா? கல்லூரி நிர்வாகம் இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும்?  சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் காவல் துறையின் கைகள் யாரால் கட்டப்பட்டு இருந்தன? இம்மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளை வளர்ப்பினை செவ்வனே செய்தவர்கள் ஆவார்களா? இதற்கெல்லாம் தீர்வு என்ன?  என்ற கோணத்தில் தமது மூளையை உலுக்கிவிட்டு சிந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில்......

கல்லூரி பருவத்தில் மாணவர்களின் மனோநிலை என்ன? அவர்களின் உலகம் பற்றிய தெளிவு என்ன? பார்வை என்ன? வழிகாட்டுதல் என்பது மாணவ சமுதாயத்துக்கு தேவையா இல்லையா? அப்படி தேவையில்லையெனில் அது சரியா? தேவையெனில் யார் வழி காட்டுவார்? மாணவர்கள் மீதான சமூகத்தின் அக்கறை என்ன? கல்லூரி, மற்றும் பள்ளிகளின் பங்கு என்ன? பெற்றோர்களின் கடமை என்ன? என்று ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு பிரச்சினையின் மூலத்தை கண்டறியும் ஒரு பயணத்தில் இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறுமனே மாணவர்களைச் சாடி செய்திகள் வெளியிட்டு இருப்பதை கடும் கண்டனத்துக்குள்ளாக்குவதில் கழுகின் நிலைப்பாடு இருக்கிறது.

பிரச்சினைகளை சொல்லும் ஊடகங்கள் எல்லாம் தீர்வுகளைச் சொல்லாமல் போகும் போது...அங்கே அவர்களுக்கு பிரச்சினை பற்றிய கவலையை விட தம்மை முன்னிலைப்படுத்தும் வேகம்தானே அதிகாமாயிருக்க முடியும்?. இப்படிப்பட்ட ஊடகங்களுக்கு தீர்வு சொல்வதும், பிரச்சினைகள் நடைபெறாமலும் இருப்பதிலலும் அதீத விருப்பமில்லை.

கலவரங்கள் நிகழவேண்டும், கற்பழிப்புகள் நடந்தேற வேண்டும், கொலை கொள்ளை என்று எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிலையிருந்தால்தானே அவர்களால் பரபரப்பு செய்திகள் கொடுக்க முடியும் என்ற ஒரு புரையோடிப் போன மனோநிலைகள் இது போன்ற பிரச்சினைகள் பற்றிய தெளிவான பார்வைகளை மக்களுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்துகின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா?

பொதுமக்கள் செல்லும் பேருந்தினை வழிமறித்து ஓட்டுநர் நடத்துனரை மிரட்டி பேருந்தினை தங்கள் விருப்பபடி இயக்கச்சொல்லும் அளவிற்கு ஒரு மாணவன் இருப்பதற்கு முழுமுதற்காரணமாய் அவனை மட்டும் குற்றவாளியாய் பார்ப்பதில் கழுகிற்கு உடன்பாடில்லை.

அத்துமீறும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும் என்று எண்ணும் கழுகு அத்தகைய தண்டனைகள் அடுத்த மாணவனுக்கு வழிக்காட்டும் வகையிலும் தண்டிக்கப்படும் மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்படா வண்ணமும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறது.
 
மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து ஆடவைக்கும் அரசியல் சக்திகள்தான் காவல்துறையின் கைகளையும் கட்டிப்போட்டு இது போன்ற நிகழ்வுகளுக்கு மூலகாரணமாய் இருக்கும் அதே நேரத்தில், எந்த துறை சார் மாணவனாய் இருந்தாலும் அரசியல் கட்டாய பாடமாக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சரியான ஒரு அரசியல் பார்வை அவனுக்கு அல்லது அவளுக்கு கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். கல்லூரிகளுக்குள் நுழையும் அரசியல் கட்சிகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

பயிலும் காலங்களில் மாணவர்களை குறிவைத்துப் பாயும் அரசியல் கட்சிகள் தெளிவாகவே இவர்களை வழிகேடு செய்கின்ற உண்மையை அனைவரும் அறிந்தானிருக்கிறோம். சென்னை போன்ற இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நிகழ்ந்தேறுவதற்கு பின் புலத்தில் மிக ஆழமான அரசியல் தொடர்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

சட்டமும், அரசும் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சினைகள் நிகழாது என்று  வலியுறுத்தும் அதே நேரத்தில், பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் செழுமையான பிள்ளைகளை உருவாக்குவதற்கு தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நேர் நோக்கே கழுகின் பார்வையாயிருக்கிறது.விமர்சனம் செய்து வெறுமனே மாணவர்களை குற்றவாளிகளாக்கும் மூளைகள் எல்லாம் நேற்றைய தமது 18களை நினைவு கூறுதலோடு அப்போதைய தத்தம் தெளிவுகளையும் சீர்தூக்கிப்பார்த்து கட்டுரைகள் செய்யுமெனில் தெளிவான சமூகத்தை நம்மால் சமைக்க இயலாதா என்ன.......?

 
(கழுகு இன்னும் உயர பறக்கும்)

Friday, February 18, 2011

மாணவர்களை உரசிப்பார்க்கும் கிரிக்கெட் போட்டிகள்......ஒரு அலசல்!


சமுதாயத்தின் சீர்கேடுகள் பற்றியும் அது பற்றிய தெளிவான பார்வையையும் நாம் கொடுக்க வேண்டிய ஒரு சமுதாயம் மாணவ சமுதாயம். இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டை நிர்வகிக்கப் போகும் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தேசத்தின் அங்கமாகப் போகும் வாக்காளர்கள். இவர்களின் மூளைகளில் செழுமையையும் தெளிவையும் புகுத்தினால் வரும் காலங்களில் நேர் நோக்கோடு உண்மைகளை அலசிப் பார்த்து உணரும் தெளிவான ஒரு சமுதாயமாக நாம் இருப்போம்.


தற்போதைய சூழலை உற்று நோக்கிய கழுகிற்கு கண்ணில் பட்டது மார்ச் ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்வுகளும் அதே நேரத்தில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளும்தான்...! தேர்வுகளை முன்னிறுத்தி இப்படிப்பட்ட போட்டிகள் மாணவக் கண்மணிகளின் கவனத்தை சிதறடிக்குமே என்ற எண்ணத்தை அரசு கைக்கொள்ளுமா? கைக்கொள்ள வேண்டும் ஆனால் செய்யாது.....

இதோ இது பற்றிய ஒரு பார்வையை கழுகு குழுமத்தோழர் உங்களுக்கு சமர்ப்பிக்கிறார்....
தேர்வுநேர தடைகள் - கிரிக்கெட் விளையாட்டு :

இந்த கிரிக்கெட்டு எதுக்குத்தான் மார்ச் மாசம் வருதோ தெரியலை..!!
இந்தியா முழுவதும், பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் பெரும்பாலும் நடக்கும் மாசம், மார்ச், ஏப்ரல். இந்த நேரத்துல என்னாத்துக்கு கிரிக்கெட் மேட்ச் வெச்சு படிக்கற மாணவர்களோட கவனத்த கெடுக்குறாங்களோ தெரியலை.


கடந்த மூணு வருஷமா, ஐ.பி.எல் டி- 20 கரெக்டா மார்ச் - ஏப்ரல் மாசத்துல நடுத்திட்டு வராங்க... பணம். பணம்.. அது ஒண்ணுதான் குறிக்கோள் நடத்துற கனவான்களுக்கும்.. வெளையாடுற (ஓய்வடைந்த) வீரர்களுக்கும் (!). அதுல தேவையில்லாம "சீர் கேர்ல்ஸ்" வேற.. கெடுக்குறாங்க இளைஞர்களை....  பணம்தான் இந்த போட்டிகளோட முதன்மை நோக்கம் என்பதை நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுலயும் ஊழல் நடத்தி கல்லா கட்டுற ஆளுங்க... என்னாத்த சொல்லுறது.

இது வருஷா வருசம் முழுவாண்டுத் தேர்வு நேரத்துல எதற்கு வருகிறதோ தெரியவில்லை.. அதுதான் என்னோட முக்கியக் கவலை..


இந்த வருசம், பிப்ரவரி லேருந்து மே மாசம் வரைக்கும் தொடர்ந்து கிரிக்கெட் நடக்கப் போகுது. படிக்கும் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவர்கள் முக்கியமா ஒன்னை நினைவுல வெச்சிக்கணும்.. ,

இந்த ஐ.பி.எல் வருஷா வருசம் வருது.. போகுது..
சாதாரண கிரிக்கெட்டு.. எப்பாவேனாலும் வந்து போகுது..
உலகக் கோப்பை நாலு வருஷத்துக்கு வந்துட்டு போகுது..
-- தொடர்ச்சியா சுழற்சி முறையில இது நடக்கும்..

ஆனா.. உங்களோட பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு
இறுதித் தேர்வு ஒரு தடவைதான் முக்கியமானதா இருக்கும்.
இந்த வாய்ப்ப விட்டுட்டுட்டா.. உங்கள் படிப்பின் எதிர்காலம் .. .. 

யோசிங்க.. யோசிச்சு யதார்த்தக்கு வாங்க 

நீங்க கிரிக்கெட்ட ஒரு பொருட்டா மதிக்காம உங்களோட படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்க.. உங்க வீட்டுலையும் யாரையும் டிவி போட்டு கிரிக்கெட் பாக்க வேணாம்னு நீங்களே சொல்லணும்.. அப்பத்தான் உங்களோட கவனம் சிதராம இருக்கும்.  


அனைத்து மாணவர்களுக்கும் வரவிருக்கும் தேர்வுகளில், 'சிறந்த மதிப்பெண்' பெற்று தேர்வு பெற எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.


மாணவர்களின் பெற்றோர்களே கிரிக்கெட் பார்க்கவேண்டாமென உங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை.. உங்களை விட உங்கள் பிள்ளைகளிடம் அதிக அக்கறை இருப்போர் வேறு யார் இருக்கிறார்கள் ?


உங்கள் வீட்டில் இப்போது பள்ளி / கல்லூரி படிக்கும் மாணவர்கள் இல்லை என்றாலும், சமுதாய அக்கறையோடு நாம் என்ன செய்யலாம்? நமக்குத் நன்றாகத் தெரியும் சமீபகாலமாக, கிரிக்கெட் வியாபார நோக்கோடுதான் விளையாடப் படுகிறது பெரும்பாலும். நாம் கிரிக்கெட் ரசிகாராக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நாமும் கிரிக்கெட்டால் பாதிக்கப் படுகிறோம். எப்படியா ? வரவிருக்கும் உலகக் கோப்பை விளையாட்டில் வரும் விளம்பரங்களின் கம்பெனிகள் ஸ்பொன்சர் செய்யும் தொகை பல லட்சம் கோடிகள் --- அவற்றை சுமப்பது நுகர்வோராகிய நாம்தான். (முழுவதுமாக நம் தலையில் பாரமில்லை என்றாலும்.. நாமும் சில துளிகளை சுமக்கிறோம்)


காசு கொடுத்து, கஷ்டப்  பட்டு, விளையாட்டு மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் ஆட்டத்தினை பார்க்கும் பார்வையாளர்கள் குறைந்தால் தான், கிரிக்கெட்டில் மக்களுக்கு அதிகமாக ஆர்வமில்லை என்பதை அவர்களும் (கிரிக்கெட்டினால் பல வழிகளில் பணம் புரட்டும் ஆட்கள்) தெரிந்து, புரிந்து கொள்வார்கள்.. என்ன அப்படி செய்வதற்கு நீங்கள் தயாரா ? 


பொழுதுபோக்கு என்றாலும் அதை அனுபவிப்பதில் ஒரு அளவுகோல் வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அளவோடு எதுவும் இருந்தால் மட்டுமே எதுவும் பயனுள்ளதாக இருக்கும்.


கழுகுகுழுமத்தில் இணைய....
 


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes