கிளர்ச்சிகளை ஊட்டும் திட்டங்களையும், விளம்பரப் பலகைகளில் பெயர் கோர்க்கும் அறிவிப்புகளையும், கோஷங்கள் போட்டு கும்பல் சேர்க்கும் வழிமுறைகளையும், வியாபார யுத்திகள் கொண்ட புத்திகளையும் கடந்து செல்ல முற்படுகையில் சராசரியான எம்மைப் போன்ற மானுடர்களின் விழிப்புணர்வுத் தன்மை என்பது மங்கித்தான் போய்விடுகிறது.
சுயமாய் சிந்திக்கவும், சுயமாய் திட்டமிடவும், விரும்பிய திசையில் நகரவும் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பொதுப் புத்தி என்னும் வலைப்பின்னல் நம்மை விடுவதே இல்லை.
காலம் காலமாக மானுட இனத்திற்கு நன்மை செய்கிறேன் என்ற போர்வையில், தம்மையும் தம்மைச் சுற்றி இருக்கும் சுய நல மிக்கவர்களையும் முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் போராட்டங்களும், மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களும், சமூக இயக்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும், சமூக நல் இயக்கங்களும் போதும் போதுமென்ற அளவிற்கு தங்கள் பெயர்ப்பலகைகளை இந்திய தேசம் முழுமைக்கும் மாட்டி வைத்திருக்கின்றன.
தனி மனித வாழ்வின் தரம் இன்னும் மாற்றப்படவே இல்லை அல்லது மாறவே இல்லை. தோற்றுப் போன வழிமுறைகளையே மனிதர்கள் மீண்டும் மீண்டும் தூசு தட்டி எடுத்து வைத்துக் கொண்டு அதை விடியலுக்கான பாதையென்று விடாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்
சமூக நல்நோக்கு என்பது தனிமனித விருப்பம். தனிமனித விழிப்புணர்வு. உணவினை காலமெல்லாம் தட்டில் இட்டு விட்டு அதை உதவி என்று உலகில் உள்ளோர் அறியச் செய்து என்னோடு இருக்கும் சக மனிதனை பிச்சைக்காரனாக்கி வைப்பதுதான் சமூக நல் நோக்கா?
பேச்சும் எழுத்தும் என்ன செய்து விடும் என்று ஏளனம் செய்யும் மனிதர்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் சரியாய் தங்களின் விழிகளை பதிக்காதவர்களே.. பேனா முனையிலிருந்து வீறிட்டு வெளிப்பட்ட சக்தி மிகுந்த எழுத்துக்களும், மக்களின் மனங்களைப் புரட்டிப் போடும் செறிவு நிறைந்த உணர்ச்சி மிகு பேச்சுகளும் புரட்சி விதையை மனித மனங்களில் விதைத்து மாற்றங்களின் காரணியாய் எப்போதும் இருந்திருக்கின்றன.
நமுத்துப் போன திட்டங்களை ஓராயிரம் மனிதர்களிடம் திணித்து இதை நீ செய்.. அதை நீ செய்.. என்று தம்மை அறிவு ஜீவிகளாய் காட்டிக் கொண்டு சகமனிதனை கை பிடித்து கூட்டி செல்கிறேன் என்று கூறுபவர்களே..... உமது பயணம் எதுவரை? ஒரு ஏழையின் ஒரு வேளை வயிற்றுப் பாட்டிற்கு நீங்கள் உணவழிக்கும் வழிமுறையில் உங்களின் திருப்தி இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை...
ஆனால்...அடுத்த வேளை உணவுக்கு அவனை உழைக்க வைக்க என்ன வழிமுறையைச் செய்து கொடுத்தீர்கள் நீங்கள்....? மக்கள் பணி ஆற்றும் சிங்கங்களே.....அடுத்தவரோடு உங்கள் அனுபவங்களை புரிதல்களை தெளிவு படுத்தி விவாதித்து சரி தவறுகளை சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்காமல் மேடைகளில் முழங்கி இதுவரையில் என்ன சாதித்து விட்டீர்கள் இந்த சமுதாயத்தில்...
பெரியார், அண்ணா போன்ற புரட்சித் தலைவர்களின் பேச்சிலும் எழுத்திலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் மேம்போக்குத் தனம் மட்டுமா மிகுந்திருந்தது....அல்லவே..... அவர்களின் வழிமுறைகளை,வார்த்தைகளை கேட்கும் மனிதர்களின் புத்திகள் எல்லாம் தம்மை உலுக்கிக் கொண்டு, கேள்விகளை கேட்டு பகுத்தறியும் தன்மையினை அவனுக்குள் புகுத்தி மாற்றத்தை அவர்களின் மனதிலே ஏற்படுத்ததானே செய்தது...?
வழிகாட்டுகிறேன் என்ற வழிமுறையை விட்டு தள்ளி நின்று, அதற்கு மாறாக ஒவ்வொரு தனி மனிதனையும் இந்த சமுதாயத்தின் பொறுப்புக்களையும் தத்தம் குடும்பத்தின் பொறுப்புக்களையும் உணரவைக்கும் ஒரு மிகப்பெரிய யுத்த களத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தயவு செய்து தெருவிற்கு வராதீர்கள் மனிதர்களே....சமூகம் என்பதை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உமது வீட்டினை சரி செய்வது...
தயவு செய்து யாருக்கேனும் கொடி பிடிக்கவும் கோஷங்கள் இடவும் செல்லுமுன் யோசியுங்கள் மானுடரே...! நீர் செய்ய வேண்டியது எல்லாம் உமக்கும் உம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சுமூகமான பகிர்தலைக் கொடுக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்வது. பொய்யையும் புரட்டு அரசியலையும் வாய் மொழியாக யாரோ சொல்வதைக் கேட்டு யாரையும் உங்கள் தலைவர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என் சமூகத்தீரே...
உணர்வுகளால் ஒருவன் உங்களைக் கட்டிப் போடுவான் அவன் உங்களுக்கு பொருளாய் உதவிகள் செய்ய ஒரு போதும் விரும்பமாட்டான். உமது நேரத்தை செலவு செய்து அவனுக்காய் கோஷமிடவும், ஊர்வலம் போகவும் அழைக்க மாட்டான். உம்மின் அகக் கண்களை திறந்து உமது உழைப்பை உமக்கே மூலதனமாக்கி, எழுத்தினை உமக்கு அறிவித்து வாசிக்கவும், அந்த வாசிப்பினால் உலகின் நடைமுறைகளை உமக்குள் ஏற்றி வைத்து தெளிவுகளை உங்களைக் கொண்டே கைகொள்ளச் சொல்வான்....
அவனே உங்கள் தலைவன்!!!!
அவன் எப்போதும் உங்களுக்கு நல் வார்த்தைகள் மட்டுமே கூறி உங்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க மாட்டான்..., மாறாக உமது வேலையைச் சரியாய் செய்யாவிடில் எப்போதும் உம்மைச் சாடி விரட்டுபவனாய் இருப்பான்.
கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு இணைய தளத்தின் மூலம் இதையே நமது செய்தியாக பகிர விரும்புகிறோம்.தெருவில் இறங்கி மனிதர்களை வழி நடத்த ஒருவன் வருகிறான் என்றால் அவன் தன்னிறைவு பெற்றவனாய் இருந்தால் தான் முழுமையான சமூக நல்நோக்கு இருக்கும் இல்லையேல் தத்தம் சுய நலக் கொம்புகள்தான் சமூக நல் நோக்கு என்று வேசமிட்டுக் கொள்ளும் என்று நம்புகிறோம்.
அதற்காகவே ஒவ்வொரு தனி மனிதரையும் முதலில் தன்னிறைவு அடைந்த மனிதராய் மாறச் சொல்கிறோம். தன்னிறைவு என்பது முழுமையான விழிப்புணர்வு இன்றி சாத்தியமே இல்லை. ஆதலால் தனி மனிதன் விழிப்புணர்வு கொள்ள எல்லா சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் காரணிகளையும் விதைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதன் முதற்கட்டமே எழுத்துக்களாய் பரிணமித்து இணைய உலகில் சிறகடித்துக் கொண்டிருக்கிறோம்.
கழுகின் வழிமுறைகளும் செயல் திட்டங்களும் ஒருக்காலமும் முன்னால் எப்போதும் எல்லோரும் செய்ததாய் இருக்கப் போவது இல்லை. இப்படி இல்லாமல் இருப்பதாலேயே பலருக்கும் எமது நகர்வுகள் பிடிபடுவதுமில்லை. மீன்களை வாங்கிக் கொடுத்து மனிதர்களை சோம்பேறிகளாக்கி தம்மை கர்ண பிரபுக்களாக, எப்போதும் உயரத்தில் வைத்துக் கொள்ள முனையும் வியாபார மனிதர்களின் முகத்திரைகளை கிழித்தெறியும் ஒரு யுத்தக் களத்தில் நாங்கள் எழுத்துக்களால் களமாடிக் கொண்டிருக்கிறோம்....
மீன் பிடிக்கக் கற்றுக் கொண்ட மனிதர்கள் மீன்களை பிச்சையாக கொடுக்கும் மனிதர்களின் முகத்தில் விசிறியடித்து உங்களின் பிச்சைகள் எமக்கு வேண்டாமென்று உறுதியாய் ஒரு நாள் கூறுவார்கள்.......... அந்த அற்புத தினத்தில்....பகட்டுத் தலைவர்களும், போலியாய் புரட்சிக் கொடி ஏந்தும் மனிதர்களும் பிழைப்பற்றுப் போய் தத்தம் கடைகளுக்கு பூட்டுக்களை போட்டு பூட்டி விட்டு...
உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற செவிட்டில் அறையும் உண்மையை உணரத்தான் போகிறார்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது இயற்கையின் விதி...!
தேவையற்ற மன அழுக்குகளை எல்லாம் தெளிவான பார்வைகள் கொண்டு கலைந்து, தீமைகள் என்னும் குப்பைகளை கொளுத்தி புதுப் புது முயற்சிகள் செய்து வெற்றிகளை குவித்து நாளும் மிளிர்வோம்...! ஒப்பற்ற சமுதாயத்தின் உயரிய குடிமக்களாவோம்...என்ற கருத்தோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)