Wednesday, August 29, 2012

ஏன் கொண்டு வரமுடியாது சமூக மாற்றத்தை...? இணைய உலகம் பற்றிய ஒரு பார்வை!

விளைவுகளையும், தாக்கங்களையும், மாற்றங்களையும் கொடுக்காத பேச்சும், எழுத்தும், கூட்டமும் புதிதாய் மனிதர்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்று போகின்றன. கெட் டூ கெதர் என்றழைக்கப்படும் மனிதர்கள் கூடி அளவலாவும் நிகழ்வுகள் வாழ்வியலின் தேவைகள்தான் என்றாலும் அவை ஒரு போதும் வாழ்க்கைகான தீர்வுகளைச் சொல்லி விடுவதில்லை. 

கேளிக்கைகள் எல்லாம் கடும் அயற்சியான வேலைகளுக்கு நடுவேயான நாம் எடுத்துக் கொள்ளும் ஓய்வுகள். அவை புத்துயிர் அளித்து மேலும் உற்சாகமளிக்கும் என்றாலும் முழுமையான ஓய்வுகள் நம்மை சோம்பேறியாக்கி விடும் என்பதும் உண்மை. இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வரும் அத்தனை பேரும் சமூக மாற்றத்தை விரும்பிதான் வருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது...! நம் சமூகத்திற்கு இன்னமும் என்ன வேண்டும்...? எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது என்று கருதும் ஒரு சாராரும், இங்கே பேசி சமூகத்தை சரி செய்ய முடியுமா என்று  கேள்வி கேட்கும் மற்றொரு சாராரும்.....

ஏதோ ஒரு தாக்கத்தில் இங்கே பரிபூரண சுதந்திரத்தோடு வரும் நமது வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் கை கோர்த்து தெளிவுகளைச் செய்தியாய் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குப் புரியவைத்து தானும் விளங்கி ஒரு தெளிவான சமூகத்தை கட்டமைப்பதில் ஒரு சிறு துரும்பாய் இருக்கலாமே என்று எண்ணும் எங்களை போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

தனிமனிதர்கள் எப்போதும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசை உடையவர்கள். இது தவறல்ல இயற்கையே...! தங்களைப் பிரபலபடுத்திக் கொள்ள செய்யும் ஒவ்வொரு காரியத்தினூடேயேயும் ஒரு சமூக பிரஞை இருந்து விட்டால், கேளிக்கைகளைத் தாண்டி ஏதேனும் ஒன்றை நாம் செய்தவர்களாகி விடுகிறோம். மனித சக்தி என்பது அளப்பரியது. சரிகளை நேரே பார்க்க பரந்த மனமும், சரியான புதியவைகளை ஏற்றுக் கொள்ளும் தெளிவும் உள்ள மனிதர்கள் ஒன்று சேரும் போது அங்கே பிரமிக்கத் தகுந்த அளவில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.

மகாத்மா காந்தி தன்னிடம் சமூகம் பற்றிய ஒரு பார்வையைக் கொண்டிருந்தார். அதை கருத்தாய் வெளிப்படுத்திய போது அதில் கவரப்பட்ட மனிதர்கள் தங்களை அவரின் கருத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் கருத்துக்கள் செயலாய் மாறி ஒட்டு மொத்த இந்தியாவிலும் புரட்சித் தீ பரவியது. அந்த புரட்சியால் என்ன, என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்றெல்லாம் நாம் இங்கே விளக்க வேண்டிய அவசியம் இல்லை.....இன்றைய நமது பேச்சு, எழுத்து , கருத்து சுதந்திரத்திற்கெல்லாம் அதுவே ஆணி வேராய் இருக்கிறது.

இன்று நாம் பேசிக் கொண்டிருகும் மையப்பொருளான இணைய உலகத்தில், கீழ் தட்டு மற்றும் சாதரண நடுத்தர வர்க்கத்து மக்களின் அன்றாட பிரச்சினைகளை பற்றி அலச யாரும் முன் வருவதில்லை. இங்கே நாம் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் அநியாயங்களை பற்றியும், சொகுசுப் பேருந்தில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யும் போது  ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றியும், ஷாப்பிங் மால்களில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றியும்தானே..? இதை எல்லாம் விடுத்தால் உலக அரசியலையும், உள்ளூர் சொகுசு அரசியலையும் நமது வசதிக்கு ஏற்றார் போல சார்ந்து நின்று கொண்டு அதன் சரி, தவறுகளைப் பேசுவோம்....

அண்ணா நகர் வளைவினைக் கடந்து நேரே செல்கையில் இரண்டு மீட்டர் நீளத்துக்கு கணுக்கால் அளவு மழைத்தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு பள்ளமாயிருக்கிறதே..? சராசரி மனிதர்கள் அந்த சாலையில் கால் நனைத்து நடந்து போகிறார்களே...? பேருந்துகளும் ஆட்டோக்களும் பரத நாட்டியம் ஆடியபடி அந்த பள்ளத்தைக் கடந்து போகிறதே....? இதை யார் சரி செய்வக்டு...?திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராஜாகடை ஸ்டாப்பிங்கில் இருந்து அஜாக்ஸ் பஸ் ஸாண்ட் வரை சாலையின் இரு புறமும் இடித்து போட்டு குவித்துக் கிடக்கும் கட்டிடங்களின் கழிவுகளை யார் அப்புறப்படுத்துவது என்று என்றேனும் ஒரு கூட்டம் போட்டு யோசித்து பார்க்கவோ, விவாதிக்கவோ செய்திருப்போமா? தெரு முனைகளில் மூத்திரம் கழிக்கும் மனிதர்களுக்கு அது எப்படி சரி என்று தோன்றுகிறது ....? இது தவறு என்று யார் அவர்களுக்குச் சொல்வது...?

தண்ணீர் இல்லாமல், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் செத்துப் போய்கிடக்கிறதே? ஏன் இப்படி ஆனது..? விவாசயம் இல்லாவிட்டால் அந்த விவசாயி வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வான்... என்றெல்லாம் இணையத்தில் உள்ளவர்கள் சிந்தித்துப் பார்த்தாவது இருக்கிறோமா?

சாமனியனின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன. மேல் தட்டு வர்க்கத்தின் பிரச்சினைகள் தான் இன்று சமூகப்பிரச்சினைகளாய் பார்க்கப்பட்டு இணையத்தில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஒரு சாமனியனின் சங்கடங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சீமான்களின் கூடாரமாய் இது போய்க் கொண்டிருப்பது நம சமூகத்தினைப் பிடித்திருக்கும் பெரும் பிணி. திணிக்கப்பட்ட சாபக்கேடு....!

தமிழகம் முழுதும் இணையத்தில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்..., சிரிக்கிறார்கள், அரசியல் பேசுகிறார்கள், சமூக கருத்துக்களைச் செம்மையாய் சொல்லவும் செய்கிறார்கள்....பேஸ் புக்கிலும், ட்விட்டரிலும், பொங்கி எழவும்  செய்கின்றனர்...., கூடிப் பேசி மகிழ்ந்து மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் செய்கின்றனர்.... கூடுகின்றனர் பின் பிரிகின்றனர்.....அவ்வளவுதான்....

மனித சக்தி என்பது வெறுமனே கூடிப் பிரிய மட்டுமல்ல, ஒன்று கூடி தவறுகளை நேர் செய்ய, கருத்துகளாய் பற்றி பரவ, புதிய கருத்துக்ளை பதிய.....விவாதிக்க, மேற்கொண்டு அறிவின் துணை கொண்டு பயணம் செய்ய... 

உறவுகள் ஆத்மார்த்தமனவை...இதில் எள் அளவும் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது, ஆனால் அதே உறவுகள் அறிவுப்பூர்வமானவையாய் மாறும் போது நாம் விரும்பும் மாற்றங்களை  சர்வ நிச்சயமாய் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  கழுகு ஆத்மார்த்தமான உறவுகளைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வெறுமனே அந்த உறவுகளை ஏதோ ஒன்றின் சந்தைப்படுத்துதலுக்காய் பயன்படுத்திக் கொள்ளாமல், அறிவார்ந்த நிகழ்வுகளை கட்டியமைக்கும் மிகப்பெரிய சக்தியாய் பார்க்கவும் செய்கிறது.

இனியும் நாம் வெறுமனே கூடி பிரிந்து அந்த நினைவுகளை அசைபோடுவதோடு நின்று போகக் கூடாது....அதனையும் கடந்து இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பேராசையை பெருங்கனவை.... கிடைத்திருக்கும் வாய்ப்பான இந்த சமூகத் தொடர்பு சாதனம் மூலம் உங்களிடம் சேர்ப்பிக்கிறோம். மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர எல்லாம் மாறும் என்றார் மார்க்ஸ்.. 

நாம் கருத்துக்களாய் இன்று பகிர்ந்து கொண்டிருக்கும் நெருப்புக்கள் பற்றும் இடத்தில் சரியாய் பற்றிக் கொள்ளத்தான் செய்யும், மீண்டும் மீண்டும் நம்மை புறக்கணிக்கும் மனிதர்களின் மனங்கள் ஒரு கட்டத்தில் கூர்மையாய் நம்மைப் பற்றி சிந்திக்கத்தான் செய்யும்.....

அந்த நாளில் ஓராயிரம் கழுகுகள் சுதந்திரவானில் கட்டுகளின்றி தங்களின் பார்வையின் கோணத்தை சரியாய் மாற்றி....சத்தியம் எதுவென்று அறிந்து கொள்ளவும் செய்யும்....!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

Friday, August 24, 2012

என்ன செய்து கிழிக்கப் போகிறோம் நாங்கள்...? ஒரு கழுகு பார்வை...!

 
 
 
இந்த சமூகத்தினூடே வாழ்வதற்கான தகுதியாய் மீண்டும் மீண்டும் உரக்க சப்தமிட்டு தனது இருப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமை பலருக்கு இருக்கிறது. கூட்டம் சேர்ந்து கொண்டு, தன்னை கடந்து செல்லும் மனிதர்களை எல்லாம் கிண்டல் செய்து சிரிக்கும் புரையோடிப்போன மனோநிலையை ராஜ குணமாக எண்ணிக் கொண்டு தத்தமது புஜபலம் காட்ட முஷ்டியை எப்போதும் முறுக்கி நிற்கிறார்கள்.

நான் யார் தெரியுமா..? என்று கோபத்தோடு மீசை முறுக்க நிறைய பணமும், நிறைய ஆட்களும், நிறைய அதிகாரமும் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. மேலே சொன்ன எதுவுமே இல்லாமல் அவர்கள் இருக்கும் போது நீங்கள் யாரென்ற கேள்வியை யாரும் கேட்டு விட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாதே, அவமானம் பிடுங்கித் தின்று விடுமே என்ற காரணத்தால் தகுதி என்ற பெயரில் தெருக்குப்பைகளை எல்லாம் எடுத்து தத்தமது தலைகளில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்து கிழித்து விட்டீர்கள் என்று யாரையும் நாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் அப்படியான கேள்வியை கிழித்துக் கொண்டு நாங்கள் என்ன செய்து கிழித்தோம் என்ற மாபெரும் அரக்க கேள்வி எங்களின் சுயத்தை சுட்டெரிக்கச் செய்கிறது. கோடி பேர் எம்மை சுற்றி எமக்கானவர்கள் என்று குரல் கொடுத்த போதிலும் நாம் யாரென்ற அருகதையை நாம் தப்பாமல் எப்போதும் நினைவுக் குறிப்பில் ஏற்றிதான் வைத்திருக்கிறோம்.

கழுகு சமூகப் பிரச்சினைகளுக்காக போராடி களம் சென்றதா..? இல்லையா...? என்று இன்று ஆராய்ச்சி செய்து விமர்சிக்க காத்துக்கிடக்கும் கூட்டத்திற்கும் கழுகிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தெரியாத விடயங்களை புதிதாக சொல்லும் போது மூளை அதை ஏற்றுக் கொள்வதில்லை. மனம் புதிய விசயங்களை பார்த்து எப்போதும் பயம் கொள்கிறது. கெட்டது என்றாலும் பழக்கப்பட்ட விசயங்களையே மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறது. இதனாலேயே நாம் பேசும் பொருளின் மையம் வரை செல்ல பலருக்கு மிரட்சியாய் இருக்கிறது.

எப்போதும் நாம் சார்ந்திருக்கும் இடம் சரியாய் இருக்கிறதா என்று உற்று நோக்கி தம்மையும் தம் சுற்றுப்புறத்தையும் சரியாய் வைத்துக்கொள்ள எல்லாவிதமான சூழல்களையும் உருவாக்கிக் கொடுப்பதும், அப்படியாய் உருவான சூழல்களை சரியா என்று ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்வதும்தான் பகுத்தறிவின் உச்சம். எனக்குப் பிடிக்கிறது என்று கண்மூடித்தனமாய் என் மூளையை எங்கெங்கோ மேயவிட்டுக் கொண்டு யாருக்கோ எதற்கோ கொடி பிடிக்கிறேன் அதில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நலம் பயக்கட்டும் என்று பார்க்கும் குறுகிய பார்வைகள் தீயிட்டுக் கொளுத்தப்படவேண்டியவை.

இணையத்தில் கட்டுரைகளை எழுதினால் இணையம் வரை வர இயன்றவர்கள் வாசிக்க முடியும் எனும் பொழுது, இணையத்தின் பயன்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கலாம், எந்த மாதிரியான கருத்துக்களை நாம் பதிவதின் மூலம் நாளைய சமூகம் பயன்பெற முடியும் என்பதையே  முழுமையான கொள்கையாக கழுகின் பாலகாண்டம் கொண்டிருக்கிறது.

தமிழ் என்று எம் பிள்ளைகள் நாளை இணையத்தின் தேடு பொறியினை அழுத்தும் போது அங்கே ஆபாசங்களும், தலைக்கனங்கள் கொண்டவர்களின் மோதல்களும், தவறான அரசியல் வழிகாட்டுதல்களும், சுய தம்பட்டங்களும், வன்முறைகளும், இன்ன பிற கேடு கெட்ட விசயங்களும் இருந்து விடக் கூடாது என்ற எங்களின் பொறுப்புணர்ச்சிக்குப் பெயர்தான் கழுகு என்று கொள்க;

இணைய உலகிற்குள் நாம் அடியெடுத்து வைத்த காலத்தினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று நிறைய வலைப்பதிவர்கள் அல்லாத நிறைய பேர்கள் இணையத்தின் வலைப்பக்கங்களை வாசிப்பதையும் கருத்துரைகளை இடுவதையும் பரவலாக நாம் காணமுடிகிறது. எந்த பதிவின் முதல் பின்னூட்டமாக வடையையோ அல்லது சுடு சோற்றையோ  யாரும் இடுவதில்லை. கூட்டமாக நின்று சரியில்லாததை முன்னெடுப்பவர்கள் எல்லாம் இன்று மதம் என்ற ஒரு அடைப்பிற்குள்ளும், அரசியல் என்ற அடைப்பிற்குள்ளும், சாதி என்ற அடைப்பிற்குள்ளும் நின்று கொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்பினை தூக்கி நிறுத்தவும் முயன்று கொண்டிருக்கிறனர்.  சரிகளைச் சந்தைப்படுத்தும் இவர்களின் நோக்கம் சரி என்றாலும் தவறுகளை தாம் சார்ந்திருக்கும் அமைப்பிடம் கூறி சரிப்படுத்த முயலாமல் தவறுகளுக்கும் சரி என்னும் சாயத்தைக் கொடுக்க பகீரத பிரயத்தனம் செய்யும் இவர்களின் அறியாமையைத் தான் நாம் மழுங்கிப்போன விழிப்புணர்வு என்கிறோம்.

தமிழர் மண்ணிலிருக்கும் ஒரு முதுபெரும் அரசியல்வாதி பேஸ்புக் கணக்கைத் துவக்கி இருக்கிறார் என்றால் அவரிடம் கருத்து ரீதியாக முரண்பாடுகள் கொண்ட இணைய வேங்கைகள் தெளிவான எதிர்கருத்துக்களை அவரின் பக்கத்தில் கேள்வியாய்க் கேட்டு சரியான பதிலை பெற முயன்றிருக்கலாம், மழுப்பனான பதில்களுக்காக மீண்டும் கேள்விகளை எழுப்பி இருக்கலாம். சரியான பதில்களைச் சுட்டிக்காட்டி பாராட்டியும், தவறான பதில்களை சாடியும் பரப்புரைகள் செய்திருக்கலாம்....

இவையெல்லாம் விடுத்து ஏகவசனத்தில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களின் சீற்றத்தை கொட்டிய என் தமிழ்சமூகத்தின் முறையற்ற கோபமும், பண்பாடற்ற அறிவும் தான் எப்போதும் நம்மை சிறுமைப்படுத்தி நமது இலக்கை அடையவிடாமல் செய்திருக்கிறது என்பதை அறிக; பொதுவெளியில், அதுவும் இணையத்தில் இருக்கும் உரிமையினையும் சுதந்திரத்தையும் சரியான வகையில் பிரயோகம் செய்ய இன்னமும் யாரும் அறியவில்லை.  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியில் இன்று இது போன்ற அயோக்கியத்தனங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.

தொழில்நுட்ப வசதிகள் மூலம் நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம், பார்த்துக் கொள்ளலாம், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு ஆச்சர்யத்திலிருந்து நம் சமூகம் இன்னும் வெளியே வரவே இல்லை. இப்படியான மாயாஜால படம் பார்க்கும் உணர்வினை விட்டு வெளியே வந்தால்தான் இதன் முழுமையான பயன்பாடுகள் புரியும்.

இணையப் பெரு அரக்கன் பல வழிகளில் இன்று விசுவரூபம் எடுத்து நிற்கிறான். இங்கே ஒரு கட்டுக்குள் நின்று சிந்திக்கும் சுயநல போக்குகள் இன்றி சுதந்திர மனப்பான்மையுடன் கருத்து பகிரும் ஒவ்வொருவரும் மெல்ல மெல்ல கைகோர்க்க துவங்கியின்றனர். பாரம்பரியமாய் பதிவுலகத்திற்கு என்று இருந்த கோட்பாடுகளும் வெற்றுச் சண்டைகளும் முகஸ்துதி பாடுதல்களும் இன்று உடைந்து சரிய ஆரம்பித்திருக்கின்றன.

எழுத்து என்னென்ன மாற்றங்களைச் இந்த சமூகத்தின் மீது திணித்திருக்கிறது என்பது வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் தெளிவாய் பொறிக்கப்பட்டிருக்கிறது. சரியான பயன்பாட்டோடு நாம் பயணிக்கையில்.... இன்றைய நமது நிகழ்வுகளும் வரலாறாகிப் போகும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை...!
 
  (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

Friday, August 17, 2012

சமூக பிரச்சினைகளும் இணைய அட்டைக் கத்திகளும்,...!

வாழ்க்கையின் தடம் எங்கே ஆரம்பித்தது..? எங்கே செல்கிறது...? என்ற பிரஞைகள் அற்றுப் போய் வயிற்றுப் பிழைப்புக்காய் தினமும் அலாரம் வைத்து எழுந்து, அலுத்துக்கொண்டு உடல்வலியோடு படுக்கையில் சரியும் கோடாணு கோடி மக்களில் மிகையானவர்களுக்கு அன்றாடம் கணிணியைத் தட்டி பார்க்கும் வாய்ப்போ, இணையத்தில் காலம் மறந்து அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு தத்தமது மேதாவித் தனத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வாய்ப்போ கிடையாது.

தன் முனைப்புக்களைத் தீட்டிக் கொள்ளும் களமாய்ப இன்று ஒரு கோர வடிவம் எடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் இணையப் பெருவெளியில் விர்ச்சுவல் மனிதர்கள் அரசியல் பேசுகிறார்கள், சமூக நலம் பேசுகிறார்கள், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் தயிர் கடையும் மத்தை வைத்துக் கடைந்து அங்கே ஜனநாயக வெண்ணையையும் கடைந்தெடுக்கிறார்கள். மதவாதிகள் மூச்சிறைக்க பிரச்சாரம் செய்கிறார்க்ள், சாதிகளின் பெயர் சொல்லி ஏதோ ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் படம் போட்டு, அவர் என் சாதி என்று வெட்கமில்லாமல் பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள், தட்டச்சுக்களிள் அரிவாள் தூக்கும் வீரர்களும், வார்த்தைகளை தடம் புரட்டி வாசிப்பவனின் மனோநிலையைப் புரட்டிப் போடும் துர்வார்த்தை விற்பன்னர்களும் அணிவகுத்து நிற்கின்றனர்....

ஆமாம்.. இங்கே நிரம்ப, நிரம்ப பதிவர்கள் இருக்கிறார்கள், கருத்துக்களை பதிந்து, பதிந்து கையொடிந்து போகாத குறையாய்  தட்டச்சு  தாராளமாய் தங்களின் நேரம் போக்குகையில் மறக்காமல் தங்கள் அறைகளின் ஏ.சி சரியாய் வேலை செய்கிறதா என்றும் சரி பார்த்துக் கொள்கிறார்கள்.

எங்களுக்கெல்லாம் சமூகப் பிரஞை இருக்கிறது.... நாங்கள் விழிப்புணர்வு செய்கிறோம் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம்  இப்போது எங்களிடம் சலித்துப் போன சாம்பாராய் துர்நாற்றம் வீசுகிறது. எதார்த்தம் சட்டை காலரை பிடித்து சுடுவெயிலில் முகம் காட்டி, பிளாட் பார்ம் ஓரத்தில் கசங்கிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், தெருவோரம் பூ விற்கும் அக்காவின் ஏழ்மையினையும், கோவிலடியில் பிச்சை எடுக்கும் அழுக்குச் சட்டைப் பிள்ளைகளையும், காலையிலிருந்து நள்ளிரவு வரை ஷேர் ஆட்டோ ஓட்டும் அண்ணன்களின் வியர்வைத் துளியில் படிந்திருக்கும் சோகங்களையும், கரடு முரடான ஒட்டுப் போட்ட பிச்சைக்காரனின் உடையாய் விரிந்து கிடக்கும் நகரத்து சாலைகளையும், அந்த சாலைகளில் இன்னமும் முழங்கால் அளவு தேங்கிக் கிடக்கும் மழை நீரையும், கணுக்கால் அளவு தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரையும், சுருங்கிப் போய் தெருக்குத் தெரு வைக்கோல் பொம்மைகளாய் அதிகாரத்தை பிரயோகம் செய்தால் எந்த கரை வேட்டி வந்து நொந்து போன வாழ்க்கையை இன்னமும் பிய்ந்து போக வைக்குமோ  என்று பயந்த படியே காவல் காக்கிறேன் பேர்வழி என்று வலம் வரும் காவலர்களையும்.....

ஜனநாயகத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர்களாக காட்டிக் கொண்டும், தங்களை எல்லாம் பேரரசர்களாகக் கருதிக் கொண்டும் தமிழகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவத்தை ஆயுதமாக்கி கையில் வைத்துக் கொண்டு மக்களை மிரட்டும் அரசியல்வாதிகளையும், கோவிலுக்குள் அதிகாரிகள் என்ற பெயரில் மக்களை அடக்குமுறை செய்து கையூட்டுப் பெற்று கடவுளை சொடுக்குப் போட்டு வரச்சொல்லி தரிசனம் கொடுக்கச் சொல்லும் மனிதர்களையும் பார்க்கும் போது....

இணையத்தில்  பொழுது போகாமல் உலகம் பேசும் வேடிக்கை மனிதர்களிடம் நாமும் நேர விரையம் செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றத்தான் செய்கிறது. இரு பெரும் கட்சிகளை பற்றிப் பேசியும், ஈழத்தின் சோகத்தினை பேசியும் மேதாவிகள் உலகம் புள்ளி விபரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கையில்தான் தமிழகத்து தமிழனும், ஈழத்து தமிழனும் வயிற்றில் அமிலம் சுரக்க அடுத்த வேளை உணவைப் சுபிட்சமாய் பெறுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

அரசியல் பகடிகளையும், அம்மாவின் ஆட்சியையும், டெசோ மாநாடுகளை பற்றியும்  சராசரி மனிதர்களுக்கு யாதொரு கவலையும் கிடையாது என்றும் சொல்லலாம் அது பற்றிய விபரங்கள் தேவையில்லை என்றே யாரும் பேசுவது கூட கிடையாது என்றும் சொல்லலாம். அரசியல் செய்ய ஒரு கூட்டம் அவர்கள் நம்மை ஆளவும் செய்வார்கள். பொழுது போக்குக்காய் சினிமா எடுக்க ஒரு கூட்டம் இவர்கள் அரசியல் செய்யவும் செய்வார்கள், என்று சுற்றி சுற்றிப் பின்னப்படும் வலைகளை அறுத்தெறியத் தெரியாமல் ஏதோ ஒன்றைச் செய்து பணம் சம்பாரித்து நாமும் இன்ஸ்டால்மென்டில் ஒரு  கார் வாங்கி மெளண்ட் ரோட்டில் ஓட்டி சென்று விட வேண்டும் என்ற ஆவலில் தலை தெறிக்க  நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

சமூக அவலங்களைப் பற்றி இணையத்தில் பேசி பிரயோசனம் இல்லை. ஏனென்றால் இணைய வெளியில் இருப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் யாதொரு தொடர்பும் பெரும்பாலும் இல்லை. ஒரு வேளை அரசியல் செய்வதற்காய் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்றாலும் ஆத்மார்த்த தொடர்புகள் அறவே இல்லை என்பதை இந்தக் கட்டுரை அறுதியிட்டுக் கூறுகிறது. விதி விலக்காய் எல்லா இடத்திலும்  மனிதர்கள் இருக்கலாம் என்பது போல ஆத்மார்த்த மனிதர்கள் இங்கேயும் இருக்கலாம் என்ற கூற்றினையும் உறுதியாய் இந்தக் கட்டுரை நம்புகிறது.

இனி என்ன.....

நாம் பேசப் போகும் சமூக விழிப்புணர்வு என்பது.....முதலில் இணையத்தில் முறையற்று முழங்கிக் கொண்டிருக்கும் சமூக விரோத ஓநாய்களின் குரல்வளைகளை கவ்விப் பிடித்து இரத்தம் குடிப்பதை போன்றுதான் இருக்கும்....

இங்கே ஓராயிரம் விசயங்களை கேளிக்கையாக நாம் பேசலாம் ஆனால் ஒரு முரண்பட்ட நச்சு கொடும் விதை முளைத்து அது இணையத்தைக் கையாளும் அடுத்த தலை முறைக்கு தவறான பாதையைக் காட்டி விடக் கூடாது....

தொடர்ந்து சிறகடிப்போம்...!


 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Monday, August 06, 2012

டெசோ மாநாடும்.....ஈழத்தமிழர் விடியலும்....! ஒரு ஆய்வுப் பார்வை....!

 
 
 
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கம் மீண்டும் சோம்பல் முறித்து எழுந்து ஒரு மாநாடும் நடத்தியும் விட எல்லாவிதமான முஸ்தீபுகளையும் செய்ய ஆரம்பித்தாகி விட்டது. ஈழ ஆதரவு இயக்கம் என்று கடும் ஆக்ரோசத்தோடு 1985லே ஆரம்பிக்கப்பட்டு இலங்கை அரசை நடு நடுங்கச் செய்த டெசோவும் இந்த டெசோவும் ஒன்றுதானா என்ற கேள்வி நமக்குள் எழுவதற்கு காரணமாய் பல்வேறு விடயங்களை இங்கே முன் வைக்கலாம். ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை எப்போது தனி ஈழம் பெற்று தருவதாய் ஒருபோதும் இருந்திருக்கவே இல்லை.
 
சர்தார் வல்லபபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் தைத்துக் கொடுத்த ஒட்டுப்போட்ட துணியைத்தான் இன்று நாம் இந்திய தேசம் என்று ஏந்திப் பிடித்துக் கொண்டு தேசிய உணர்வென்னும் தொடர்ச்சியாய் பரப்பப்பட்ட பொது புத்தியில் இந்தியர்கள் என்று கூறிக் கொண்டு இறையாண்மையையும், தேசப்பற்றினையும் வலுக்கட்டாயமாக நமது தோளிலே சுமந்து கொண்டிருக்கிறோம். இந்தியா என்ற ஒரு தேசத்தின் ஸ்திரத்தன்மை எப்போதும் வலுவான பிராந்திய உணர்வுகளுக்கு எதிரானது. இந்தியாவில் இந்தியனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே இந்த தேசம் தங்கு தடையின்றி எப்போதும் வழங்கி வந்திருக்கிறது. மாறாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் இன குழுக்கள் ஒரு போதும் தங்களை இனத்தின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டு ஒரு போதும் தனித்து இயங்க முடியவே முடியாது.

இனத்தின் அடிப்படையில் கோசங்கள் எழுப்பியவர்களை எல்லாம் பொற்கோவில்களுக்குள் காலணிகளோடு சென்று இயந்திரத் துப்பாக்கிகள் சுட்டுக் கொன்றிருக்கின்றன என்பதுதான் வரலாறு. இந்தியா என்னும் தேசத்தின் ஒற்றுமைக்கு ஏதோ ஒரு வகையில் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு விசயத்தையும் இந்திய தேசம் ஆதரிக்காது என்பது சிறு பிள்ளைகளுக்குக் கூட தெரியும். இப்படியான ஒரு மனோநிலையோடும் மிகப்பெரிய அச்சத்தோடும்தான் தனித் தமிழ் ஈழம் என்ற ஒரு விடயத்தை இந்தியப் பேரரசு பார்த்து வருகிறது.

தனித் தமிழ் ஈழம் ஒரு வேளை அமைந்து விட்டால் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களும் தாங்கள் தனியாய்ப் பிரிந்து சென்று ஈழத்தையும் உள்ளடக்கிய தமிழர் குடியரசு ஒன்றை உருவாக்கி விடுவார்களோ என்ற பேரச்சம் எப்போதும் இந்திய உள்துறை அமைச்சகத்தை நிம்மதியாக இருக்கவிட்டது கிடையாது. இந்தியாவில் தமிழர்களுக்கான ஒரு நிலப்பரப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இந்தியாவே தனித் தமிழ் ஈழத்தை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுத்தும் இருக்கலாம் என்பதும் நிதர்சனமே...!
 
காங்கிரஸ் என்னும் பெரும் கட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஒரு கட்சியாகவே தொடர்ந்து பாமரர்களிடம் இன்று வரை  தன்னை அடையாளப்படுத்தி வருவதோடு இந்தியா என்னும் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களை ஒருங்கிணைக்கவும் எப்போதும் வலுவாய் பயன்பட்டது என்னவோ உண்மைதான்.... என்றாலும் வெவ்வேறு மத, மன, இன உணர்வுகளைக் கொண்ட பல்வேறு பட்ட மக்களை பேதமில்லாமல் இணைக்க இந்தியாவை பெரும்பான்மையான நாட்கள் ஆண்ட, ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை. அடிப்படையில் காங்கிரஸ் கட்சி என்பது முதலாளிகளின், மேல்தட்டு வர்க்க மக்களின் அதுவும் குறிப்பாய் வட இந்தியர்களின் ஆளுமையைக் கொண்ட ஒரு கட்சி. தன்னை இந்தியாவின் பொது அடையாளமாய்க் காட்டிக் கொண்டாலும் வடநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பிரதமர் நாற்காலி படியளக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் அறிவோமாக;

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பதவியும் அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்கிய மகாத்மா காந்தியின் நிலைபாட்டினை நேரு தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதை இன்று வரை நேருவின் குடும்பத்தினராய் அடையாளம் காணப்படும் சோனியா அம்மையாரின் குடும்பம் விட்டு விடாமல் உடும்புப் பிடியாய் பிடித்து தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இந்தியாவில் யாதொரு கிளர்ச்சிகளும் வெடித்து விடாமல் கவனமாய் பார்த்துக் கொள்வதின் மூலம் நேருவின் குடும்பம் பாரம்பரியமாய் இந்த தேசத்தின் தோள்களில் ஏறி நின்று சவாரி செய்ய முடியும் என்ற உண்மையை ராகுல் காந்தி வரை சரியாய் புரிந்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

இந்தியா ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற நினைப்பே தங்களின் சுயநலத்தில் இருந்து விளைந்த ஒரு போலியான உணர்வு என்பதை இன்று வரை நேருவின் குடும்பத்தினர்  கவனமாய் பாதுகாத்தும் வருகின்றனர். நியாயங்களை நியாங்களாய் பார்க்கும் போக்கு இந்த சுயநலத்தால் அடிப்பட்டுப் போனது வேதனை என்று சொல்லும் அதே நேரத்தில்....

இந்த சுயநலம் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மீது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் தனது கோரப்பற்களை பதிக்கவும் செய்தது.  இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதல்களையும், வன்முறைகளையும் தாங்க முடியாமல் தங்களின் சொந்த மண்ணை மீட்டெடுக்க அங்கே தமிழர்கள் போராடிக் கொண்டிருக்க, இந்திய அரசு இலங்கையோடு இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. தமிழர் பிரச்சினையில் தலையிட்ட இந்திய அரசு தமிழர்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்கு சிங்கள பேரினவாத அரசு இடம் கொடுக்கவில்லை. தமிழர் சம உரிமை என்பதற்கான சாத்தியக் கூறினை சிங்கள அரசு கொடுக்காமல் முரண்டு பிடிக்க, தனித்தமிழ் ஈழம் என்ற விசயத்தை இந்திய அரசு ஆதரிக்க முடியாமல் விலகிக் கொள்ள.....நடுவில் ஈழத்தமிழர்கள் யாரை நம்புவது யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்தில் தங்களுக்கான போராட்டத்தை தாங்களே வலுவாக முன்னெடுக்கத் துணிந்தார்கள்...

இந்திய அரசு தங்களுக்கு உதவும் என்று நம்பிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம், தங்களின் எண்ணத்திற்கு மாறாக இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களைக் கொன்றழித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சற்றேறக்குறைய சுமார் 70,000 தமிழர்கள் இந்திய அமைதிப்படையால் சின்னாபின்னமாக்கபட்ட துயரத்தில் வேறு வழியின்றி இந்திய படையினரை எதிர்த்து தாக்கி சற்றும் சளைக்காமல் கதிகலங்கச் செய்தனர்....

இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய படையினர் சென்னை வந்த போது அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த ஐயா கருணாநிதி அவர்கள் வரவேற்க செல்லாமல் இந்திய அரசுக்கு மெளனமாய் தனது கண்டனத்தை வலுவாய் தெரிவித்தார். கருணாநிதி என்றாலே ஈழப் போருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவும் ஒருவன் என்ற ரீதியில்தான் வடநாட்டு தலைவர்கள் 1983களிருந்து தொடர்ச்சியா 1989 வரை உறுதியாய் நம்பினார்கள் என்றாலும் கருணாநிதியும் தமிழ் ஈழ விசயத்தில் தனது முழு ஆதரவையும் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்தவராகவே இருந்து வந்தார்.
 
இந்திய அமைதிப்படை தமிழர்களைத் தாக்கியழித்ததை விடுதலைப் புலிகள் சர்வசாதாரணமாய் ஏற்றுக் கொள்ளவில்லையாதலால் மீண்டும் ராஜிவ் 1991 தேர்தலில் வெற்றி பெற்று இந்திய பிரதமரானல் தங்களின் தமிழ் ஈழ போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பார் என்று கருதி 1991 மே 21ல்  ராஜிவை மனித வெடி குண்டு தாக்குதல் மூலம் கொன்றனர். இந்திய அரசியல் சுழலை விடுதலைப் புலிகள் சரியாய் திட்டமிட்டு ஆராயமல் செய்த இந்த நடவடிக்கையால் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு தமிழகத்தில்  சுத்தமாய் செத்துப் போனது. போபர்ஸ் பீரங்கி ஊழலின் அதிர்வுகள் நாடு முழுதும் அலையலையாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது, அதன் விளைவாய் ராஜிவ் மீண்டும் பிரதமராவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்பதையும், தமிழகத்தில் 1989ல் விடுதலைப்புலிகளால் ஆட்சியை இழந்த கருணாநிதிக்கு வெற்றி வாய்ப்புக்கள் இருந்ததையும் புலிகள் கணிக்கத் தவறியது....வரலாற்றில் பெரும் பிழையாய் பொறிக்கப்பட்டு விட்டது.

கால சுழற்சியில் ராஜிவ் கொலை என்னும் விடயத்தால் தமிழகத்தின் ஆதரவுக் குரல்கள்  முடங்கிக் கொள்ள, புலிகள் எதிர்ப்பு முழக்கம்  தமிழகத்தில் ஜெயலலிதா போன்ற தலைவர்களாலேயே கடுமையாக ஆதரிக்கப்பட்டு புலிகளின் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தாய்த் தமிழகத்திலிருந்து  கிடைத்த பெரும் ஆதரவு இதன் மூலம் முடக்கப்பட புலிகளின் இயக்கம் தனித்து விடப்பட்டு முடக்கப்பட்டது. இப்படியாய் புலிகள் நிர்கதியாய்ப் போனதற்கு ராஜிவ் கொலையும், புலிகளை ஆரம்பத்திலிருந்தே வெறுத்த தமிழக பாசிச தலைவர்களுமே காரணமாய்ப் போனார்கள்...

ஒட்டு மொத்த தமிழகமும் புலிகளைப் பற்றியும் ஈழ விடுதலைப் பற்றியும் பேச முடியாத ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுப் போனது. காலத்தின் ஓட்டத்தில் காங்கிரஸ் தலைமை ராஜிவ் கொலைக்கு பலிக்கு பலி வாங்கும் ஒரு சூழலை எதிர்ப்பார்த்து காத்திருந்ததும், தமிழகத்தில் அதற்கு சரியான கூட்டணியாய் திமுகழகம் அமைந்ததும், திமுகவை கிடுக்கிப் பிடி போட்டு கழுத்தில் கத்தி வைத்து காய் நகர்த்துவது போல காய் நகர்த்தி ஈழத்தில் தமிழர்க்ள் மீது தாக்குதலை பாரிய அளவில் சிங்கள அரசு நடத்திய போது தாய் தமிழகத்திலிருந்து ஆதரவு குரல்களை தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் செய்யாவண்ணம் பல விதமான சூழல்களை இங்கே சூட்சுமமாய் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு புகுத்தியிருந்தது.கூட்டணி என்ற போர்வையில் திமுகவை பிணைக்கைதியாய் பிடித்து வைத்துக் கொண்ட காங்கிரஸ், அதிமுகவிலிருந்து ஈழப்போர்  நடக்கும் போது பெரிய எதிர்ப்பு வராது என்பதையும் அறிந்தே வைத்திருந்தது. இதனால்தான் ஈழத்தில் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுமே மிகப்பெரிய தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் போரட்டங்களை நடத்த முடியாமல் போனது.
 
தமிழர் தலைவராய் அடையாளம் காணப்பட்ட திமுகவின் தலைவரிடம் உலக தமிழ்ச் சமுதாயம் எதிர் பார்த்ததிற்கு காரணமாய் திமுகவின் கடந்தகால வரலாறும், கலைஞரின் தீவிரமான ஈழ ஆதரவுப் போக்கும் இருந்தன. மூன்றாம் ஈழப் போர் நடந்த போது கொடை நாட்டில் உய்யலாலா பாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவிடம் மக்கள் தமிழர் ஆதரவு குரலை எதிர்ப்பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.  2011 தேர்தலின் போது கலைஞரின் சூழலையும் தமிழக மக்களின் மனோநிலையையும் சரியாய் அவதானித்த ஜெயலலிதா....யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு குபீர் ஈழத்தாய் வேடத்தைப் போட்டு அதை தேர்தலில் ஓட்டாகவும் மாற்றிக் காட்டினார். புலிகளுக்கு ஆதரவாய் பேசியதாலேயே வைகோவை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையிலடைத்த ஜெயலலிதா ஈழம் ஒன்றே தீர்வு என்று பேசியதை சீமான் போன்றவர்கள் நம்பி ஜெயலலிதாவின் காலடியில் தஞ்சம் அடைந்து ஈழம் மலர அவர் உதவுவார் என்றும் இன்று நம்பிக் கொண்டு அவரின் சூட்சும அரசியலை மறந்து போயிமிருக்கின்றனர்.

ஆட்சி இழந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட கலைஞர் வேறு வழியின்றி தமிழர் ஆதரவு அரசியல் ஒன்றே மீண்டும் தம்மையும் தமது கட்சியையும் மக்கள் அங்கீகரிக்க ஒரே வழி என்று தீர்மானித்து மீண்டும் டெசோவை கையிலெடுத்து தமிழ் ஈழம் அமைவதே தனது ஆசை, அதுவே தமது இலக்கு என்பது போல எல்லாம் பேட்டிக் கொடுத்து விட்டு....மத்திய அரசின் தனித்தமிழ் ஈழம் எதிர்நிலைப்பாட்டினை எதிர்த்தால் தனக்கும் தனது கட்சிக்கும் இன்னும் பெரும் இக்கட்டான சூழலை ஆளும் காங்கிரஸ் கட்சி உருவாக்கும் என்ற காரணத்தினால் ஈழ ஆதரவுக் குரலை சற்றே தாழ்த்தி, இலங்கையில் தமிழர் மறுவாழ்வு, புணரமைப்பு, மருத்துவ உதவி என்று ஏதேதோ பேசும் ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கலைஞருக்கு ஈழ ஆதரவுக் குரல் கொடுத்தால் மத்திய அரசு எந்த மாதிரியான இக்கட்டான சூழல்களை கொடுக்கும் என்பது தெரியாதது அல்ல....அதே நேரம் ஈழம் வென்றெடுக்க டெசோ அமைப்பு சாதகமான சூழல்களை அகில உலக அளவில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் அறியாதவர் அல்ல....

சாதாரண மனிதர்கள் கொடுக்கும் குரலை விட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொடுக்கும் குரல் வலிமையானதாக, இந்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக, உலக தலைவர்களை கூர்ந்து நோக்கச் செய்வதாக, சிங்கள பேரினவாத அரசை அச்சம் கொள்ளச் செய்வதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....

போரின் போது தொடங்கப்படாத டெசோ இயக்கம் இப்போது ஏன் தொடங்கப்படவேண்டும் என்பன போன்ற விதண்டாவாதங்களை எல்லாம் விலக்கி விட்டு, உண்மையான ஈழ விடுதலை வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் கலைஞரோடு தனித்தனியாய் சந்திப்பு நடத்தி, அவருக்கு அழுத்தங்கள் கொடுத்து  சர்வ தேச சமுதாயத்திற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்குமாறு பணித்து ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதின் மூலம்......

தனித் தமிழ் ஈழம் மலர்வதற்கான எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும்.... தாய்த்தமிழ் மண் ஏற்படுத்திக் கொடுக்கும்....என்பது மட்டும்...உண்மை....!


  (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes