சுற்றி நிகழும் ஓராயிரம் சூழல்களையும் உள்வாங்கிக் கொண்டு சரியான தெளிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதையே நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம். மிகைப்பட்ட நம்மைச் சுற்றிய முரண்களைப் பற்றி எழுதுவது கைப்புண்ணிற்கு கண்ணாடி வைத்து காட்டுவதைப் போன்ற தேவையற்ற நிகழ்வாகி விடும் என்பதாலேயே பல நேரங்களில் அடர்த்தியான மெளனத்தை சுமந்த படியே நாங்கள் சிறகடிக்க வேண்டியும் இருகிறது.
சமீபத்தில் நாம் அறிந்த ஒரு விடயத்திலிருக்கும் முரணை எழுத்தாக்கி உங்களிடம் சேர்க்கும் விதமாய் எங்களின் கழுகு குழுமத்தில் விவாதித்த செய்தியின் சாரம்சத்தை கட்டுரையாக்கி இருக்கிறோம்...! கட்டுரையின் மையக்கருத்திலிருந்து மாறுபடும் நண்பர்களின் ஆரோக்கியமான கருத்துரைகளை நாங்கள் வரவேற்பதோடு....நேர்மையான விவாதங்கள் மேலும் பல புதிய கதவுகளை திறந்து விடும் என்பதையும் திண்ணமாய் நம்புகிறோம்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கான ஓட்டெடுப்பு நேற்று ராஜ்யசபாவில் வெற்றி பெற்றிருக்கிறது.. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இச்சூழலில் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஒட்டரசியலில் வென்றும் இருக்கிறது.
இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே மறு சீரமைப்பு தேவைப்படும் ஒரு சூழல் இப்போது உருவாகிப் போயிருப்பதை தெளிவான பார்வைகள் கொண்டோர் யாரும் மறுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கார் எழுதிய சட்டம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 25 ஆண்டுகள் முடிந்த பின்னால் அந்த சூழலை ஆராய்ந்து அப்போதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் பொதுப்பிரிவினர் அளவிற்கு சமமாய் இல்லாவிடில் மேலும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிக் கொள்ளாம் என்றுதான் அம்பேத்கார் எழுதிய சட்டம் சொல்கிறது.
ஆனால் 25 வருடங்கள் கழிந்த பின்னால் உண்மையான ஆய்வுகள் செய்து இச்சட்டம் நீட்டிக்கப்படாமல் ஓட்டரசியலுக்காய் தொடர்ச்சியாய் மத்திய அரசால் பத்து பத்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.....
உண்மையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களில் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெற்றர்களோ அவர்களின் குடும்பங்களே தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு சாரார் மட்டுமே இட ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொண்டு தங்கள் பிரிவில் இருக்கும் மற்றவர்களுக்குத் தடையாகவும் இருக்கிறார்கள்...
உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஏஎஸ் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் மட்டுமே இனி அந்த இட ஒதுக்கீட்டை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் அந்தப் படிப்பிற்கு என்னென்ன தேவையோ அதனை மிகத் தெளிவாக தங்கள் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து விடுகின்றனர். (ஆரம்பத்தில் முற்பட்ட வகுப்பினர் இப்படிச் செய்து தங்கள் வகுப்பினர் மட்டுமே அரசுப் பணிகளில் நீக்கமற நிறைந்திருந்தது போல)
ஆனால் அதே வகுப்பைச் சேர்ந்த இது வரையிலும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஒரு தினக்கூலியின் பிள்ளை இந்த முன்னேறிய ஆதிதிராவிடர்களின் பிள்ளைகளோடு போட்டி போட்டு அந்த ஐஏஎஸ் பதவியை அடைய முடியாத நிலை தான் இன்று உள்ளது.
ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இது வரை அந்த பலனை அனுபவித்தவர்களின் வாரிசுகள் இனி மேல் பொதுப் பிரிவுக்கு மாறி விட வேண்டும் என்ற வகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும். மற்ற எந்த வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிற்கும் இதை பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும்..
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வகையான இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது அந்தந்த சமூகத்தினரின் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே என்பதை சட்டமாக இயற்ற வேண்டும். இட ஒதுக்கீட்டையே இப்படியாய் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பார்வையை உங்களுக்காக நாங்கள் பகிரும் இந்த வேளையில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் எபதை எப்படி ஏற்று கொள்வது என்று நீங்களே கூறுங்கள்...?
இந்தச் சட்டத்தினால் அரசுப் பணியாளர்கள் மத்தியில் மனநிலை சமச்சீர் கெட்டுப் போய், அரசு இயந்திரம் ஒட்டு மொத்தமாக முடக்கப்படும் பெரும் ஆபத்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு அதிகாரியின் கீழே குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்து அவரிடம் வேலை பயின்ற ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு சமமாகவும், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரை வேலை வாங்கும் உயரதிகாரியாகவும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் உயரும் போது, அரசுப் பணியாளர்கள் 82 சதவிகிதத்தினர் மத்தியில் ஒருவித கோபத் தீ ஏற்படும். அது ஒரு வித ஒத்துழையாமையை ஏற்படுத்தி அரசு எந்திரம் அப்படியே ஸ்தம்பித்துப் போகவும் வழி வகுக்கும்.
மேலும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் ஒரு துறையின் அதிகாரியாக உயரும் ஒருவர், எப்படி அவசர காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? அனுபவம் இல்லாத முடிவுகளால் முழுக்க முழுக்க முரண்பட்ட அசாதரண சூழல் ஏற்பட்டுப் போய்விடாதா?
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கண்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு யாதொரு மாற்றுக் கருத்துகளும் இல்லை என்பதை வலுவாக பதிவு செய்யும் அதே நேரத்தில் இது போன்ற பதவி உயர்வுக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்று ஓட்டரசியலுக்காய் அரசியல் கட்சிகள் நடத்தும் குட்டிக் கலாட்டாக்கள் அரசையும், அரசு நிர்வாகத்தையும், அதன் விளைவுகள் கடுமையாய் மக்களாகிய நம்மையும் பாதிக்கப் போவது உறுதி....!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)