Tuesday, May 07, 2013

சடுகுடு ஆடும் தமிழக அரசியல்....மிரட்சியில் திருவாளர் பொதுஜனம்...!

அரசியல் கட்சிகளை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற அசாதாரண சூழல் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிறதோ இல்லையோ தமிழகத்தின் அதுதான் இப்போதைய சூழல். மனசாட்சியை எல்லாம் மார்வாடிக் கடையில் வைத்து விட்டு, தான் சார்ந்திருக்கும் கட்சி எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப்பக்கம் எந்த விதமான கேள்விகளும் இல்லாமல் சாய்ந்து உடனுக்குடன் தங்களின் மனோநிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு கட்சியின் அடிநிலை தொண்டர்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இலை மலர்ந்திருக்கிறதே இன்னும்  மூன்றாண்டுகளுக்கு இருட்டு அறைக்குள் புழுங்கிக் கிடந்தாவது அம்மா வாழ்க என்று நாங்கள் முழங்கத்தான் செய்வோம், மின்சாரம் இல்லாவிட்டாலும் ஜெனரேட்டரும் இன்வெர்ட்டரும் வாங்க காசு வேண்டாமா? ஜெய் அம்மா என்று சீறிப்பாயும் ஆளுங்கட்சியினர் ஒருப்பக்கம் ஆதாயத்தோடு அலைகிறார்கள் என்றால்...

அய்யா, அம்மா, அய்யா, அம்மா...மறுபடியும் அய்யா என்பதுதானே தமிழகத்தை ஆள்வதற்கு மக்கள் நிர்ணயித்து வைத்திருக்கும் நியதி அதனால் எப்படிப்பட்ட சூழல் வந்தாலும், தான் சார்ந்திருக்கும் கட்சியின் நியாய தர்மங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் என்ற உறுதியோடு தங்கள் தலைமையின் வெறுக்கத்தக்க செயல்களையும் சகித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் உடன் பிறப்புக்கள் ஒருபக்கம்...

கலைஞர் ஆட்சியில் இருந்த மின்வெட்டு சற்றேனும் குறையுமா என்ற எதிர்ப்பார்ப்போடு நாம் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த அம்மையார் அதிரடியாய் பல தீர்மானங்களை நிறைவேற்றவும், ஈழபிரச்சினைக்காக உயிரைக் கொடுக்கவும், மத்திய அரசை எதிர்க்கவும் அதைவிட வலுவாய் கடந்த ஆட்சியைப் பற்றி அவதூறு பேசவும் செய்கிறாரே அன்றி மாநிலத்தின் தலையாய பிரச்சினையான மின்வெட்டுப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் ஒருநடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மிரண்டு போயிருக்கும் திருவாளர் பொதுஜனத்துக்கு  இப்போது ஒரே குழப்பம்....

ஆக மொத்தத்தில் எல்லாமே மலிவு விலையில் வேண்டும் என்று ஆசைப்பட்ட திருவாளர் பொதுஜனத்துக்கு அம்மா ஆட்சியில் வெகு விமர்சையாக காதுகுத்து நடத்தப்பட்டிருப்பதுதன மிச்சம். தெருக்கு தெரு தடுக்கி விழுந்தால் டாஸ்மாக்குகளை திறந்து வைத்து விட்டு புண்ணியத்திற்காக மலிவு விலையில் உணவகம் ஆரம்பித்தது மட்டுமே இவரின் தலையாய சாதனையாக இருக்கிறது.

இன உணர்வு மண்ணாங்கட்டி என்று ஏதோ ஒரு மாய கட்டிற்குள் நின்று தமிழர் ஒற்றுமை பற்றி பேசி பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அவர்கள் கனவில் மண் அள்ளிப்போடுவதை போல தங்களின் திராவிட எதிர்ப்பைக் காட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் போர்வையைப் போர்த்திக் கொண்டு சாதி ஒற்றுமையை காட்டுகிறேன் பேர்வழி... என்று...

வன்னியர் அல்லாத ஒட்டு மொத்த தமிழரையும் அடிமைகளாக சித்தரிக்கும் வண்ணம் சித்திரை விழாவில் தத்துப் பித்துவென்று உளற அதன் தொடர்ச்சியாய் கலவரம், குண்டர்கள் சட்டம் கைதுகள், பேருந்து உடைப்புகள், பேருந்து எரிப்புகள் என்று தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகள் எல்லாம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. பின் தங்கியுள்ள தாங்கள் சார்ந்திருக்கும் சமூக மக்களை மேம்படுத்த சாதிக்கட்சி அமைத்த தலைவர்கள் எல்லாம் இன்று பிற சாதியினரை அடக்க நினைத்ததின் விளைவு...

தமிழர்களின் இன உணர்வு என்னும் மாயக்கட்டை உடைத்தெறிந்திருக்கிறது. அடிப்படையில் தமிழகத்திலிருக்கும் எந்த ஒரு தலைவனுக்கும் விசால பார்வைகள் இல்லை. மக்களைப் பற்றிய கவலைகள் இல்லை. மனிதர்கள் அடித்துக் கொண்டு செத்து தொலைகையில் பாவம் மரங்கள் என்ன செய்தன என்று தெரியவில்லை பசுமை தாயகம் என்ற பெயர் ஏந்தி பவனி வரும் ஐயா அன்புமணி ராமதாஸின் அறிவுறை ஊருக்குத்தான் போல அவரைப் பின்பற்றுபவர்களுக்கு இல்லை போலும்...?

பல்வேறு வழக்குகளும் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்க என்ன செய்வதென்று அறியாமல் சிறைக்குள் காந்தியின் சத்திய சோதனையை தலைவர்கள் படித்துக் கொண்டிருக்க தொண்டர்கள் வெளியில் கொலைவெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் சாதக பாதங்களை எல்லாம் அலசி சகுனியாய்ப் பாய்ந்திருக்கிறது தர்மதேவனின் முகமூடியோடு.

சுயநலமான அரசியல்கட்சிகள், குழப்பமான நிலையில் அதன் தொண்டர்கள், தெளிவில்லாமலும் ஒற்றுமையில்லாமலும் வறுமையால் பிரித்து வைக்கப்பட்டுள்ள மக்கள்...என்று மிகப்பெரிய சமநிலையற்ற ஒரு சூழலில் நாம் இருக்கிறோம் என்பதுதான் இங்கே வேதனையான விசயம். மாநிலத்தின் அத்தனை குழப்பத்திற்கும் சளைத்ததாக மத்திய அரசும் இல்லை. சோனியாவின் குடும்பத்தினர் பொழுது போக்க இந்த தேசம் ஒரு திறந்தவெளி அரங்காக ஆக்கப்பட்டிருக்கிறது....

அநீதிகள், துரோகம், வறுமை, மின்வெட்டு, விலைவாசி ஏற்றம், ஸ்டண்ட் அரசியல் இதற்கு  நடுவில் சராசரி பொதுஜனம் இன்றைக்கு நாள் நகர்ந்தது..நாளைய தினம்...எந்தப் பிரச்சினையுமின்றி சுகமாய் நகரவேண்டும் என்ற கவனத்தோடு அன்றாடப் பொழுதுகளை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கென்று அதிரடியாய் திட்டங்களைச் செயல்படுத்துகின்ற தொலைநோக்குப் பார்வைகள் கொண்ட ஒரு தலைவன் வேண்டும். அவன் மக்களோடு மக்களாய் இருந்து எல்லாப் பிரச்சினைகளையும்  தீர்க்கவேண்டும். 

தமிழகத்தின் தலையெழுத்து ஒன்று அதிமுக அல்லது திமுக என்னும் நிலை இப்போது மாறப்போவதில்லை...! கண்டிப்பாய் அம்மா சாதாரண பொதுமக்களின் சிரமத்தை மக்களோடு மக்களாக இருந்து அலசும்....குணநலம் கொண்டவரல்ல...அவரின் சமூக ந்லம் என்பது மேல்தட்டு மக்களின் சமூக அக்கறையைப் போன்றது.....அது உண்மையான மக்களின் வலியை அவருக்கு ஒரு போதும் உணர்த்தப் போவது இல்லை....

அம்மாவை விட்டால் தமிழகத்தில் இருக்கும் சாமானிய மக்களின் அன்பைப் பெற்ற வசீகரமான, பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட அடுத்த தலைமுறைக்கான தலைவர் ஒருவர் திமுகவில் இருக்கிறார்....

ஆனால் அவரையும் நேரத்தே காலத்தே தலைவராக்கி தமிழகத்துக்கு புதிதொரு வெளிச்சத்தைக் கொடுக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர். 

புதிய தலைவனொருவன் வந்து சவுக்கு எடுத்து சுழற்றாமல் அவ்வளவு சீக்கிரம் நமது சுயபுரிதலோடு  சமூகம் மாறிவிடுமா என்ன...?

தமிழகத்தின் தற்போதைய தேவை நல்ல ஒரு மேய்ப்பன் அவ்வளவே!!!!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)
 
கார்டூன்: நன்றி - பாலா
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes