Tuesday, May 31, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......VI


ஊடகங்களின் வளர்ச்சி பற்றிய சென்ற பகுதியில் இந்தியாவில் வானொலியின் வரவு பற்றிச் சிறிது பார்த்தோம். இன்றும் அதான் தொடர்ச்சியைப் பற்றிக் காணலாம்!இந்திய அரசு உதவ இயலாத நிலையினைத் தெரிவித்திருந்த போது அரசு சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடெங்கிலும் வேண்டுகோள்கள் பிறந்தன. அப்போது வானொலிப்பெட்டிகள்  தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த நிறுனவங்கள் தாம் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான ரூபாய்கள் முடக்கப்பட்டுவிடுமே என்றும் அரசிடம் முறையிட்டனர். ஆப்போதைய அரசு ஒளிபரப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தது. அவ்வண்ணம் 1930 ஏப்ரல் மாதம் முதல் நாளிலிருந்து இந்திய அரசின் தொழில் மற்றும் தொழில்சார் துறையின் கீழ் ( Industries and Labour Department ) " தி இந்தியன் ப்ராட்கேஸ்டிங் சர்வீஸ் ( The Indian Broadcasting Service ) " என்ற அமைப்பை உருவாக்கிற்று.


பொருட்செலவு மிகுதியானதும் 1931 அக்டோபர் 9 இல் அரசு அச்சேவை அமைப்பை மூடிவிடுவது என்று முடிவுசெய்தது. மறுபடியும் நாடெங்கிலும் கூக்குரல்கள் எழுந்தன. பின்னர் 1931 நவம்பர் 23 இல் தற்காலிகமான ஒலிபரப்புத் துறையை ஏற்று நடத்துவது என்று அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து 1932 மே 5 இல் அரசு சார்பில் உறுதியாய் ஏற்ப்பது என்றும் முடிவு செய்தது. 1934 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பின் ஆர்வம் வளர்ந்தது. அரசு இரண்டரை லட்சம் ரூபாயை ISBS என்ற அமைப்பிற்கு உதவித் தொகையாக வழங்கிற்று!


அதே ஆண்டில் மதராஸ் அரசு BBC நிறுவனத்திலிருந்து (Burlo) என்ற ஒளிபரப்பு வித்தகரை அழைத்து ஓர் திட்டத்தை நல்கக்கொரியது. 40 லட்சம் ரூபாய் செலவிட அது காத்திருந்தது. அன்றுமுதல் இந்திய ஒலிபரப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஜனவரியில் இந்திய அரசு மார்கோனி நிறுவனத்திடமிருந்து டெல்லி நிறுவனத்திற்காக ஒலிபரப்புக் கருவியை வாங்கத் தொடங்கியது.அது மறு ஆண்டே நிறைவேறிற்று. 1935 மார்ச்சில் 20 
லட்சம் ரூபாய் ஒலிபரப்புக்காக தனி நிதியாக வழங்கப்பட்டது. 1935 ஆகஸ்டில் முதல் ஒலிபரப்புக் கட்டுப்பாட்டாளராக ( Controller of Broadcasting )லயனல் பீல்டன் ( Lionel Fielden) இந்தியா  வந்து சேர்ந்தார்.


1936 ஜனவரியில் பி.பி.சி.யின் ஆராய்ச்சித் துறைத் தலைவராக H.L.Kirke பி.பி.சி நிறுவனம் அனுப்ப ஒப்புக்கொண்டு அவரும் 1936 ஆம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.
இதற்கிடையே இந்திய ஒலிபரப்பின் வளர்ச்சிக்காக அரசு 40 லட்சம் ரூபாயை ஒதுக்கி வைத்தது. கிர்கே அவர்கள் ஏற்கெனவே இருந்த மத்திய அலைவரிசை நிலையங்களைத் தவிர 7 புதிய மத்திய அலைவரிசை நிலையங்களைத் தொடங்கப் பரிந்துரை செய்தார். செய்தி அறிக்கைகள் ஒலிபரப்பாக வேண்டி டெல்லியில் ஒரு சிற்றலை ஒலிபரப்பியையும் அமைக்க அவர் பரிந்துரைத்தார். 1936 ஆகஸ்டில் B.B.C யிலிருந்து வந்த G.W.GOYDER என்பவர் தலைமைப் பொறியாளராக நியமனம் பெற்றார். 1933 ஆம் ஆண்டு இந்திய கம்பியில்லாத் தந்திச்சட்டம் ( The Indian Wireless Telegraph Act - 1933 ) 1934 ஜனவரி முதல் அமலுக்கு வந்தது.

  1935 செப்டம்பர் 10 ல் மைசூரின் ஆகாசவாணி நிலையம் தொடங்கிற்று. 1936 ஜனவரி 1 ல் டெல்லி நிலையம் ஒலிபரப்பை இயக்கிற்று. 
  
  1936 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் நாளில் மதராஸ் நிலையம் அன்றைய ஆளுநர் எர்ஸ்கின் பிரபுவால் (Lord Erskine) தொடங்கி வைக்கப்பெற்றது. தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் ஆளுநர் எர்ஸ்கின் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தைத் தொடங்கிவைத்தார்.

 ஒலிபரப்புத்துறை வளர்ச்சிக்கென சிறு சிறு திட்டங்கள் அவ்வப்போது வரையப்பட்டபோதும்  1951 வரை முக்கியமான முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை!

கழுகிற்காக

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
  

Wednesday, May 25, 2011

வெற்றியின் வேர்கள்...! ஒரு தன்னம்பிக்கைப் பார்வை...

நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?

இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்.....

தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்.......

குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை. இடைப்பட்ட இந்த நேரத்தில் எங்கு பயணிக்கிறோம்...என்று தெரியாமலேயே செல்வதை விட.... இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா? முகத்தில் அறைந்தார் யூ கேன் வின் என்ற அதிகபட்சமாக விற்பனையான புத்தகத்தை எழுதிய சிவ்கேரா.

புகழ் என்ற ஒன்றிலும் புகழ்ச்சி என்ற ஒன்றிலும் மட்டுப்பட்டு நின்றவர்கள் வாழ்வில் படுகேவலமாக தோற்று இருக்கிறார்கள். மேலும் ஒரு திறமைசாலியை 100பேர் கேவலப்படுத்தினாலும் திறமைசாலியின் திறமைகள் வெளிப்பட்டே தீரும். இந்த இடத்தில்தான் ஒரு விசயம் கவனமாக அறியப்படவேண்டும் செல்ப் எஸ்டீம் என்ற தன்னைப்பற்றிய சுய மதிப்பீடு சரியாக இருக்கிறதா என்பது உணரப்படவேண்டும். இதை சரியா புரிஞ்சுக்க தெரியலேன்னா.. ஓவர் கான்பிடென்ட் என்ற கிணத்துக்குள்ள போய் விழ வேண்டியதுதான்.

தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன....

அந்த தடைகளும் சதையினை தாண்டி எலும்பினை குத்தும் வேதனையை கொடுக்கின்றது....இங்கே தானிருக்கிறது சூட்சுமம் ...சாதரணமாக இங்கே தான் துவண்டு விழுந்து சோர்ந்து விடுகிறோம்... ஆனால் மாறாக ஒரு வித திமிரும் கோபமும் இங்கேதான் வரவேண்டும்....!

எங்கே விழுகிறோமோ.. அங்கே விசுவரூபம் எடுத்தாக வேண்டும். நம்மை சிதைப்பதற்கென்றே எதிர்மறை சிந்தனையாளர்களும், சூழ் நிலைகளும் கூட விசுவரூபம் எடுக்கும்...ஆனால்....ஏய் வாழ்க்கையே.... நீ என்னை என்ன செய்து விடுவாய்...? கோடாணு கோடி மனிதர்கள் வந்தனர் சென்றனர்...! எம்மை சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதெனில் எனக்கான வாழ்க்கையை மறுத்து விடுமா ? இந்த பூமியின் சுழற்சி...

என் பாதச் சுவடுகளின்
வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்
விளிம்பில்..காத்திருக்கிறது...
நான் கடக்கப் போகும்..இலக்குகள்

வெளிச்சமும் இருளும்
குழப்பி கிடைத்த
மங்கலான ஒரு அந்திமம்
தந்த இருட்டின் நுனியில்
வெடித்து சிதறும்
எனக்கான சூரியக் கதிர்கள்....!

திட்டமிடலும், செயலாக்காலும் மட்டுமல்ல....தோழா.. சரியான தேர்ந்தெடுத்த நட்புகளும் நமது வெற்றியின் காரணிகள். வாழ்வில் சில பொழுது போக்குக்காகவும், நம் மூளையை சுத்திகரித்துக் கொள்ளவும்தான்...அதுவே வாழ்க்கையாகக் கொண்டால் அது பெரும் அபத்தம்.

தண்ணீரில் நடக்கும் ஒருவன் மாதத்துகு ஒரு முறை 30 நிமிடம் அதை செய்யலாம் அது வித்தை. அந்த வித்தைக்கு மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். ஆனால் அதுவே பிழைப்பாகுமா...? வாழ்வின் வெற்றிக்கான விதிமுறைகள் எப்பவும் எதார்த்தமானவை...அவை தப்பாமல் எல்லா நிகழ்வுகளையும், வலியையும் கடக்க வைக்கும்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. தினமும் பதிவெழுதி விடுகிறீர்களே...அன்றாட வேலைகளுக்கு நடுவே உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று....! நண்பரின் கூற்று தவறு நான் தினமும் பதிவுகளை வெளியிடுகிறேன்... ஆனால் தினமும் எழுதுவது கிடையாது....ஒரு வார இறுதியின் கேளிக்கைகளுக்குப் பிறகான பின்னிரவில் பெரும்பாலும் விழித்திருப்பேன்...தோன்றுவதை எல்லாம்....அப்போதே எழுதுகிறேன்......மேலும் தனித்து இருக்கும் நேரங்கள் எல்லாம்.....ஏதாவது தோன்றிக் கொண்டேதானிருக்கிறது....!

என் எழுத்துக்கான கருவை நான் பெரும்பாலும் புறத்தில் தேடுவது மிகக் குறைவு........! அதனால் என்னோடு நானிருக்கும் நிமிடங்களை வடிப்பதற்கு அதிக பிராயத்தனம் செய்வது இல்லை. சொல்லி முடித்தவுடன்....ஏற இறங்க பார்த்து விட்டு போய்விட்டார் அவர்.

பாருங்க செமயா ட்ராக் மாறி போய்ட்டேன்........ஓ.கே.....லெட்ஸ் கம் பேக்...

வாழ்வின் ஓட்டத்தில் வாள் வீசும் வீரனாய் போரடிக் கொண்டுதான் இருக்கிறோம்... ! இதில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது....

1) நேரம் தவறாமை
2) துல்லியமான இலக்கு
3) இலக்கு நோக்கிய பயணம்
4) செயல் திட்டங்களும் செயல்படுத்தலும்
5) தெளிவு

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆசியாவின் சூப்பர் தொழிலதிபர் கலாநிதி மாறன்.....இவரது வெற்றிக்குப் பின்னால்..அரசியலும், பணபலமும் இருப்பதாக மிகைப்பட்ட பேர்கள் நினைக்கிறார்கள்...அப்படியில்லை.....கலாநிதி மாறன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தொழிலதிபராகி இருப்பார்......காரணம்....அவருடைய பார்வையும், இன்னோவேட்டிங் ஐடியாவும், அட்டிடியூட் என்னும் மனப்பாங்கும்தான் காரணம்...........

வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!

ஆமாம் சார்.....ரொம்பவும் மன உறுதியோட மனசு புல்லா நம்பிக்கையோ வாள் வீசிக் கொண்டிருக்கும் போராளிதான் நாமும்...

எது எப்படி இருந்தாலும் நாம ஜெயிக்கணும்....!ஜெயிப்போம்....!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...) Saturday, May 21, 2011

புதிய சட்டசபையை மாற்றியது சரியா? ஒரு விரிவான அலசல்..!அரசியல் மாற்றங்கள், அதிருப்திகள், வெற்றிகள், தோல்விகள் தாண்டி சில சத்தியங்களை மீறுவதில் காழ்ப்புணர்ச்சிகளை காட்டுவதில் தமிழகத்தில் இருக்கும் மிக முக்கிய இரண்டு கட்சிகளிடம் இருக்கும் மனப்பக்குவங்கள் மிகவும் கேவலமானது என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ஈழப்பிரச்சினையையும் ஊழலையும் குடும்ப அரசியலையும் பொறுக்க முடியாமல் மக்கள் அரியணையில் ஏற்றிய அ.தி.மு.க அரசு தனது முதல் செயல்பாட்டின் மூலம் மீண்டும் தங்களின் கோர முகத்தை காட்டியிருப்பது கொஞ்சம் பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக வடிவமைக்கப் பட்டிருந்த சட்டசபையை அதை தி.மு.க அரசு நிர்மாணித்தது என்ற ஒரே காரணத்துக்காக புறக்கணித்து விட்டு மீண்டும் பழைய கோட்டைக்கு சென்றிருக்கும் தமிழக முதல்வர் இன்னும் தான் ஒரு பணக்கார கான்வென்ட் பள்ளியின் மாணவியைப் போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார என்ற சந்தேகமும் வருகிறது.

இந்த சூழலில் புதிய சட்டசபை கட்டிடத்தின்  சிறப்பம்சங்களை தொகுத்து நமது வாசகர்களுக்கு கொடுப்பதில் கழுகு பெருமிதம் அடைகிறது.


ருமை நண்பர்களே!!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று கட்டிய காரணித்தினாலேயே இன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  தனிப்பட்ட கோபம் ,விரோதம் பூண்டு அவரின் இடது கையால் புறக்கணிக்கப்படும்  இந்த சட்டசபைக் கட்டிடம்,  எத்தனை ஆயிரம் ? தொழிலாலர்களின், பொறியாளர்களின், கட்டிடக் கலைஞர்களின், உழைப்பை, வியர்வையை, தொழில்நுட்ப அறிவை, திட்டமிடுதலை, கட்டிட வடிவமைப்பாற்றலை, உலகத்தரமான கட்டிட விதிகளை , சிறப்பம்சங்களை,  தன்னுள் வாங்கி இறுதியாக இவ்வடிவத்தை பெற்றிருக்கிறது  என்று தெரியுமா?!!!

1200 கோடிகள் செலவழித்து இந்த நவீன சட்ட சபையை கட்டிவிட்டு அதைப் பயன்படுத்த வில்லை என்றால் யாருக்கு நட்டம்?!!! மக்களுடைய வரி பணம் தானே விழலுக்கு இறைத்த நீராகும்?!!!. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு  பரம விரோதி தான், ஆனால் அந்த கட்டிடம் கருணாநிதியின் பணத்தில் கட்டவில்லையே ?!!!, ஜெயலலிதா பெருந்தன்மையுடன் தன் பிடிவாதத்தை துறந்து சட்டசபையின் கூட்ட தொடரை   புதிய சட்டமன்றத்தில் கூட்ட வேண்டும் என்பதே, உழைக்கும் வர்க்கத்தின் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.


து நடக்குமா?!!! கனவிலும் நடக்கவே நடக்காது  , இதே முதல்வர் ஜெயலலிதாவின்  நிலையில் கருணாநிதியை வைத்துப் பார்ப்போம், அவர் ஒரு வேளை இத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயித்து வந்திருந்தால் எதிரி ஜெயலலிதாவே இதைக் கட்டியிருந்தாலும், அரசுப் பணம் தானே?! ,  என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு  நிச்சயம் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் ஜம்மென்று  இதே சட்டசபையில் தன் நாற்காலியில் போய் அமர்ந்திருப்பார்.   பின்னர் அவர், அவரின் விருப்பத்திற்கேற்ப வண்ணங்களையும் உள் அலங்காரங்களையும் வேண்டுமானால் மாற்றியிருப்பார். இது போல ஒரே அடியாக சட்டசபையையே புறக்கணித்து பழைய சட்டசபையை 100 கோடி ரூபாய் கொண்டு புதுப்பிக்கும்  செயலை அவர் ஆரம்பித்திருக்கவே மாட்டார். இந்த விஷயத்தை கேள்விப்படும் வேற்று மாநிலத்தவர்   யாருமே வாயால் சிரிக்க மாட்டார்கள்!!! , கட்சிக்கொரு சட்டசபை வேண்டுமென்றால் இடத்துக்கும், பொருளுக்கும் எங்கே போவது?!!! சில நண்பர்கள் இந்த கட்டிடத்தின் அருமை பெருமைகளை சிறப்பம்சங்களை முழுக்க உணராது அது தண்ணீர் தொட்டி போல இருக்கிறது , பெட்ரோல் ரிஃபைனரியைப் போல இருக்கிறது, பாண்டிச்சேரி மாநில போலீசாரின் தொப்பியைப் போல இருக்கிறது என்று ஏளனம் செய்வது நகைப்புக்கிடமே. நல்லவை எங்கிருந்தாலும்  எடுத்துக்கொள்வது தான் நல்ல பண்பு.

சரி!,புதிய சட்டசபை கொண்டிருக்கும் சிறப்பம்சங்களை சற்று பார்ப்போமா?.
சென்ற ஆண்டு திறக்கப்பட்ட, தமிழக புதிய சட்டசபை கட்டடம், உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் [க்ரீன் பில்டிங்] என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகங்களின், "தங்க தர நிர்ணயச் சான்றிதழும்' [கோல்ட்] இந்த கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது பசுமை விதிமுறைகளை   தீவிரமாக கடைபிடித்து 100 க்ரெடிட்டுகளுக்கும் மேலாக வருமாறு பார்த்துப்பார்த்து வடிவமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.


30 க்ரெடிட்டுகள் [பாயிண்டுகள்] வருவதற்கே லீட் கன்சல்டண்ட்களும் ஏனைய பொறியாளர்களும் மண்டையை உடைத்துக் கொள்வர், 100 பாயிண்டுகள் வாங்குவது அத்தனை சுலபமல்ல, இது க்ரீன் பில்டிங்காக அதுவும் 100 க்ரெடிட்டுகளுடன் திகழ்வதால் தான் இதை கட்ட இத்தனை செலவு பிடித்திருக்கிறது,ஆனால் அத்தனையும் இயற்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடையே, 100 இயற்கைக்கு கேடு விளைவிக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது, கார்பனை வெளியேற்றத்தை எவ்வளவு முடியுமோ  அவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டிடம் இது. அங்கே கட்டிட நிலப்பரப்பில் இருந்து  கட்டிட வேலைகளின் பொழுது அகற்றப்பட்ட மரங்கள், அதே சட்டசபை நிலப்பரப்பில் கட்டிடம் எழும்பிய பின்னர் மாற்று இடத்திலோ அல்லது தோட்டத்திலேயோ திரும்ப நடப்பட்டுள்ளன.


ட்டசபை கட்டடத்தில் 3.4 லட்சம் சதுர அடியில் பசும்புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கட்டிடத்தின் கூரைகள் எல்லாவற்றிலும்  லேண்ட்ஸ்கேப்ட் கார்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. "ரீ-சைக்கிளிங்' முறைப்படி தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் செடிக்கு பாசனக்காரர்கள்  தேவையில்லை, குறித்த நேரத்திற்கு பாசனக்கருவிகள் இயங்கி செடிகளுக்கு நீரைப் பாய்ச்சும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கட்டிட உபயோகத்துக்கு கிடைக்கும். 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அருமையாக இக்கட்டிடத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படும் வகையில், ஆட்டோ சென்சார் முறைகொண்டு இயங்கும் யூரினல்கள்,வாஷ்பேசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தண்ணீர் தேவை 52 சதவீதம் குறையும்.கட்டிடத்தின் வெளிப்புற வார்ப்பு பலகைகளில் நவீன கோலங்கள் கொண்ட டிசைன் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

கோலங்களில் உள்ள சிறிய புள்ளிகள் மூலம் வெளிச்சம் உட்புகும்; வெப்பம் உள்ளே வராதவாறு அமைந்ததும் இதன் சிறப்பு. 60 சதவீத வெப்பத்தை உட்புக விடாமல் வெளியேற்றும் வகையில், கட்டிடத்தின் ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. கட்டிட வளாகத்தில் இயற்கையாகவே வெளிச்சம் நிறைந்திருக்கும்.பகலில் மின்சார விளக்குகளுக்கு தேவையே இருக்காது என்பதும் இன்னொரு சிறப்பு.
ந்த அறையிலுமே ஆட்கள் இல்லை என்றால் ஐந்து நிமிடத்திற்குள், விளக்குகள், மின்விசிறிகள்  தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். மின் சிக்கனத்தை மனதில் கொண்டு, இந்த நடைமுறை எல்லா பகுதிகளிலுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் தேவை குறையும். சென்னையின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூரில் உள்ள செடிகளே லேண்ட்ஸ்கேப்டு கார்டன்களில்  வைக்கப்படுகின்றன.ச்செடிகள் இரண்டு ஆண்டுகள் வளர்ந்தபின்னர் தண்ணீர் தேவைப்படாது. கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றி 800 கி.மீ., தூரத்திற்குள் வாங்கப்பட்டவை என்பதும் சிறப்பு. சுகாதாரம் பேணுதல், மின், குடிநீர் சிக்கன முறை கையாளுதல் என ஒவ்வொன்றுமே பசுமை விதிகளின் படியே கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே பசுமை விதிகளின் கீழ் கட்டப்பட்ட ஆட்சி மன்ற கட்டடம் என்ற பெருமை, இந்த வகை சிறப்பம்சங்களால் தான் தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகத்தின் நீண்ட ஆய்வுக்கு பின்னர், "தங்க தர நிர்ணயச் சான்றிதழ்' கிடைத்துள்ளது.  தலைமைச் செயலக கட்டிடம் வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுளளது என்பது மற்றொரு சிறப்பம்சம்.  


து தமிழகத்தின்  பிரமாண்டமான கட்டுமானப் பணி ஆகும். கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி 5.9.08 அன்று திறக்கப்பட்டது. 12.11.08 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 18 மாதங்களுக்குள், அதாவது 11.5.10-க்குள் புதிய சட்டசபையை கட்டி முடிப்பதற்காக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.2010-11-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டினை புதிய சட்டசபையில் தாக்கல் செய்துவிடவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக சட்டமன்ற மண்டபத்தை மட்டுமாவது முழுவதுமாக கட்டிமுடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.அதன்படியே மார்ச் 10-ம் தேதி முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. தலைமைச் செயலகம் கட்டிடத்தின் இறுதிகட்ட  பணிகளும்  துரித வேகத்தில் நடந்து வருகின்றன.


ப்போது புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. முதல் பகுதி ஏ பிளாக் என்று அழைக்கப்படுகிறது.  ஏ பிளாக், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 4 பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  இது 9 லட்சம் சதுர அடிபரப்பில், ரூ.425.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்து மத கோட்பாடின் படி, கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவும் வட்ட வடிவிலான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. பொது விதிகளின் படி,  உலகின் எந்த ஒரு மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம் போன்றவை வட்ட வடிவத்தில்தான் கட்டப்படுகின்றன. அது போலவும், இந்துமத தர்மப்படி சக்கரம் என்பதை அடிப்படையாக வைத்தும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள 4 கட்டிடங்களும் சக்கரம் போல் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.


கூவம் ஆற்றை ஒட்டிய சுவாமி சிவானந்தா சாலையின் (சென்னை தொலைக்காட்சி நிலைய சாலை) அருகில் முதல்-அமைச்சர் வட்டத்தில் (சி.எம். சர்க்கிள்) தொடங்கி, நூலக வட்டம் (லைப்ரரி சர்க்கிள்), சட்டப்பேரவை வட்டம் (அசம்ப்ளி சர்க்கிள்) என தொடர்ந்து, வாலாஜா சாலை அருகே பொது வளாகம் (பப்ளிக் பிளாசா) என நீள்வட்ட வடிவத்தில் இந்த ஏ பிளாக் பகுதி போய் முடிவது இதன் சிறப்பு. இரண்டாவது பகுதியான பி பிளாக்கில், தலைமைச் செயலக அலுவலகங்கள் அமைந்திருக்கின்ற். 7 மாடிகளை கொண்ட ஏழு தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பி பிளாக் கட்டுமானப் பணிகள் இந்த 2011 மே மாதத்தில் முடிக்கப்படவுள்ளது.


 பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களும் 6 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை அமையவுள்ள சட்டப்பேரவை வட்டத்தில் 100 அடி உயரம் கொண்ட 6 மாடி கட்டிடத்தின் மீது, அதே அளவு உயரம் (100 அடி) கொண்ட பிரமாண்ட மேற்கூரை (டோம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டோமின் மீது கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற அரங்கினுள் நேரடியாக சூரிய வெளிச்சம் கிடைக்கும். இந்த கூரையை சட்டமன்ற அரங்கில் தரைத்தளத்தில் அமர்ந்தபடியே பார்த்து ரசிக்கமுடியும். இது ஒரு ஆட்ரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மேற்கூரையை, துருப்பிடிக்காத வகையில் தயாரித்துள்ளதும் மற்றொரு சிறப்பு, ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து  மற்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகளும்,  இந்த மாத இறுதியில் முடிக்கப்பட்டுவிடும்.  


ட்டப் பேரவை கட்டிடத்தின் தரைத்தளத்தில் சட்டசபை (285 எம்.எல்.ஏ. இருக்கைகள்), சபாநாயகர் அறை, சட்டமன்றக் கட்சி அலுவலக அறைகள் (5 அறைகள்), முதல்வரின் செயலக அறை, கொறடா அறை, சார்புச் செயலாளர் அறை, எதிர்கட்சித் தலைவர் அறை, துணை சபாநாயகர் அறை, ஒப்பனை அறை ஆகியவைஅமைந்துள்ளன.முதல் தளத்தில் கூட்ட அரங்கு, பொதுப்பணித் துறை பராமரிப்பு அலுவலகம், பிரிவு அலுவலகம், பத்திரிகையாளர் கேலரி, சார்புச் செயலாளர் பிரிவு, உணவுக் கூடம், ஒப்பனை அறை;2-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பார்வையாளர் கேலரி, ஒப்பனை அறை.3-வது தளத்தில் சார்புச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, கூடுதல் துறைச் செயலாளர் அறை, பிரிவு அலுவலகம், பார்வையாளர் அறை, வெளிநாட்டவர் பதிவு செய்யும் அறை, உணவுக் கூடம், ஒப்பனை அறையும் அமைக்கப்பட்டிருக்கிறது..

4-வது தளத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பிரிவு அலுவலகம், சார்புச் செயலாளர் அலுவலகம், ஒப்பனை அறை.5-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, இணைச் செயலாளர் அறை, ஒப்பனை அறை. 6-வது தளத்தில் செயலாளர் அறை, இணைச் செயலாளர் அறை, முதல்-அமைச்சர் செயலக அலுவலகம், கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறையின் மின்பராமரிப்புப் பிரிவு, பார்வையாளர்கள் அறை, ஒப்பனை அறை ஆகியவை அமைந்துள்ளன. இதுபோல், முதல்வர் வட்டம், நூலக வட்டம், பொது வளாகம் ஆகியவற்றிலும் பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும் வகையில் தனித்தனி 6 மாடி கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி, இந்த மாபெரும் வளாகத்துக்குள் வந்துசெல்லவேண்டும் என்று முதல்வர் விரும்பியதால், வாலாஜா சாலையை ஒட்டிய பகுதியில் பொது வளாக பகுதி (பப்ளிக் பிளாசா) அமைகிறது. இதில் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்லலாம்.


பொதுமக்கள் இங்கே வந்து சுற்றிப்பார்த்து விட்டு உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களும்   நீர்நிலைகளும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தாண்டி சட்டசபைக்குள்ளே நுழைய முடியா வகையில் உறுதியான உடையாத கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் ஒவ்வொரு தளமும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் இணையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் உடன் கூடிய சோதனை வாசல்கள் உள்ளன.  சோதனைக்குப் பிறகே அடுத்த கட்டிடத்துக்குள்ளே செல்ல முடியும். அதிகாரிகளுக்கான நுழைவு வாயில், சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்திருக்கிறது.இக்கட்டிடம் மிகவும் இன்றைய முக்கிய தலைவலியான, பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழாவண்ணம் பலத்த பாதுகாப்பு  நடவடிக்கைகளை  கருத்தில்  கொண்டு உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளன .


புதிய சட்டசபை வளாகத்துக்கு (ஏ பிளாக்) தனி துணை மின்நிலையம், தனி தொலைபேசி இணைப்பகம், தகவல் தொழில்நுட்ப வசதிகளை நிர்வகிப்பதற்காக எல்காட் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கை அமைப்பதற்கு மட்டுமே இரவு பகல் பாராமல் நாள் ஒன்றுக்கு  4 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் ஒரு வருடம்   உழைத்துள்ளனர். முதல்வர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் சுவாமி சிவானந்தா சாலை-அண்ணா சாலை சந்திப்பு அருகே அமைந்திருக்கிறது. முதல்வரின் அலுவலக அறை, இந்த மாடியின் 6-வது தளத்தில் அமைந்துள்ளது. அவர் அறையின் வலது பக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கும், இடது பக்கத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கும் அமைந்திருக்கிறது.


பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை, திட்டங்கள் துறை, சட்டத் துறை ஆகிய முக்கியத் துறையின் செயலாளர்களில் அலுவலக அறைகள் ஏ பிளாக்கில் அமைந்திருக்கிறது. சட்டசபை செயலாளரின் அலுவலக அறை சட்டசபைக்கு அருகே தரைத் தளத்தில் அமைந்திருக்கிறது. மற்ற செயலாளர்களின் அலுவலக அறை, 6-வது தளத்தில் அமைந்திருக்கிறது.முதல்வரின் அறைக்கு எதிரே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அழகிய மாடிப் பூந்தோட்டம் அமைந்திருக்கிறது. பூங்கா போல் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்படும். ஓய்வு எடுப்பதற்கும், காற்றோட்டமாக உரையாடுவதற்கும் இத்தோட்டத்தை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. இந்த தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பிற்காக கண்ணாடிச் சுவரும் அமைக்கப்பட்டிருக்கிறது.


ற்றொரு ரூப் கார்டன் நூலக வட்டத்துக்கான கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 9 ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம் வந்தாலும்., சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக் கட்டிடங்கள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.தீவிபத்துக்கள் முற்றிலுல் தவிர்க்கும் வண்ணம் அபாரமான பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில், இந்த கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற கட்டிடமாகும். இதை புறக்கணிப்பது மிகவும் நகைப்புக்குரிய செயல் அன்றி வேறில்லை.
                                                     கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff
ருவரை,ஒருவரின் படைப்பை பற்றி குறை சொல்லும் முன்னர் அவரின் படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு பேசத்துவங்குவதே சாலச்சிறந்தது.சென்னை சட்டசபை வளாகத்தை திறம்பட வடிவமைத்தவர் இந்த படத்தில் இருக்கும் பெர்லினைச் சேர்ந்த  தலைமை கட்டிடக்கலை வல்லுனர்Hubert Nienhoff  என்பவராவார். அவரது gmp- von Gerkan, Marg und Partner Architectsஇணையதளத்தின்  சுட்டி  இது. உள்ளே சென்று சிறிது நேரம் செலவிட்டு அவர்களின் போர்ட் ஃபோலியோவையும்,கேலரியையும் பார்வையிடுங்கள். இந்த நிறுவனத்தினர் உலகெங்கிலும் இது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டசபை வளாகங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது , சட்டசபை கட்டிட வடிவமைப்பில் இவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றால் மிகையில்லை. முன்னாள் அமைச்சர் உரை முருகன் செய்த உருப்படியான செயல் இவர்களை வடிவமைக்க கூட்டிக் கொண்டுவந்தது தான். சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் இந்த வடிவமைப்பு வேலைக்கு உள்நாட்டு வல்லுனரை அழைக்காமல் இப்படி அந்நியரை கூட்டி வந்துள்ளனரே?!!! என்று எனக்கு மிகுந்த கோபம் இருந்தது. ஆனால் அதன் கண்டெம்பொரரியான,கார்பொரேட் லுக் பொருந்திய தோற்றத்தையும் ஏனைய ஒப்பில்லாத சிறப்பம்சங்களையும் எண்ணிப் பார்க்கையில் இக்கட்டிட வல்லுனர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புரிகிறது. 

ஒரு கட்டிடத்தை இவ்வளவு துரிதமாக வடிவமைப்பதும், அதை இவ்வளவு துரிதமாக சிறப்பாக கட்டி முடிப்பதும் அத்தனை எளிதல்ல என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்கிறேன்!!!
கழுகிற்காக
கீதப்ப்ரியன் 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes