அடுத்தடுத்து பள்ளியில் விபத்து, உயிரிழப்பு, என மாணவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லாமலிருக்கிறது. என் வீட்டருகிலிருக்கும் பள்ளியில் சக மாணவர் தாக்கியதில் மாணவன் ஒருவன் அதே இடத்திலே உயிரிழந்தான். ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம், இப்பொழுது மாணவி ஒருவர் பஸ்லிருந்து தவறி விழுந்துள்ளார். இப்படி அடிக்கடி மாணவர்கள் உயிர் இழப்புக்கு காரணம் பள்ளி நிர்வாகமா அல்லது மாணவர்களின் செயலா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது.
பள்ளியில் நிகழும் மரணங்களுக்கு பள்ளியே பொறுப்பு எனது வீட்டருகிலிருக்கும் பள்ளி மிகவும் பிரபலமானது. K.Cசங்கரலிங்கம் (KCS) என்றால் அனைவரும் அறிந்திருப்பார்கள், மைதானத்தில் சக மாணவன் தாக்கியதில் அந்த இடத்திலேயே மாணவன் உயிர் இழந்தார். ஆனால் மாணவன் மயக்க நிலையில் இருக்கிறானென்று ஒரு ஓரமாக படுக்க வைத்திருக்கிறார்கள். ஒரு மாணவன் எந்த நிலையிலிருக்கிறான் என்பது கூட தெரியாமல் இருந்திருக்கிறார்கள்..
பள்ளி நிர்வாகத்திடமிருந்து வந்த பதில். இந்த விசயத்தை பெரிது படுத்த வேண்டாம். பேசித்தீர்த்து கொள்வோமென்று... பணம் பதில் பேசுகிறது.. அந்த மாணவனை எந்த மாணவன் தாக்கினான் என்பதை கூட மறைக்கிறது பள்ளி நிர்வாகம். இப்படி ஆங்காங்கே பள்ளியில் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பள்ளி நிர்வாகமோ தவறை திருத்தி கொள்ளாமல் பணத்தால் பதில் பேசுகிறது....
பள்ளி பேருந்தில் மரணம், பள்ளியை கேட்டால் அது தனியார் வாகனம் எங்களுக்கு தொடர்பில்லையென்பது எவ்வளவு பொறுப்பற்ற பதில். பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் வாகனம் தரமானதாக இருக்கின்றதா என்று பார்ப்பது பள்ளியின் வேலை தானே..?? அதுவும் தரச்சான்றிதழ் வாங்கி (FC) இருபத்தி மூன்று நாட்களில் இப்படியொரு விபத்து நிகழ்ந்திருக்கிறதென்றால் தவறு எங்க நடந்திருக்கிறதென்று நம் அனைவருக்கும் தெரியவருகிறது. எங்கேயும் அலட்சியம். எதிலும் அலட்சியம். ஒருவன் லஞ்சம் வாங்கியதால் தவறு எப்படியெல்லாம் நிகழ்கிறது..
இப்படியொரு தவறு நிகழும் பொழுது நமது கோபம் அந்த நொடி மட்டுமே இருக்கிறது. அடுத்த நொடி எங்கே செல்கிறதென தெரியவில்லை... விபத்து நடந்ததும் பேருந்தை கொளுத்தி கோபத்தை வெளிபடுத்தி கொண்டால் போதுமா..?? அந்த பேருந்திற்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எத்தனை பேர் போராடி கொண்டிருகிறார்கள்...? அந்த பேருந்தின் உரிமையாளரை தண்டிக்க வேண்டும். அவர் இனி பேருந்துகள் வைத்திருக்க தடை விதிக்கவேண்டுமேன்று எத்தனை பேர் போராடி கொண்டிருக்கிறோம்... நமது கோபமெல்லாம் அந்த நிமிடம் மட்டுமே... அடுத்து நமது வேலையை பார்க்க சென்று விடுகிறோம். அடுத்து இது போல் குழந்தைகள் பலியாகாமல் இருக்க வேண்டுமல்லவா..?? விபத்துகள் நடந்து முடிந்த பிறகு வரும் கோபம் எதற்கு..??
பள்ளியின் மீது மட்டும் தவறென்று சொல்ல கூடாது. நமது குழந்தை எப்படியாவது பள்ளிக்கு செல்லவேண்டுமென்று நினைக்கிறோமே தவிர எப்படி செல்கிறதென்று நினைப்பதில்லை. நான்கு பேர் செல்ல வேண்டிய வாகனத்தில் பத்து நபர்களுக்கு மேல் அனுப்பி வைப்பது. பிறகு விபத்து நிகழ்ந்து விட்டால் வாகன ஓட்டியை தாக்குவது. இப்படிதான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம். ஏன் மாணவர்களை தொலைவில் உள்ள பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டுமா நமது வீட்டருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தால் என்ன..? நமது வீட்டருகில் இருந்தால் நாமே பள்ளிக்கு அழைத்து செல்லலாம் இல்லையா..?? நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் என்கிறீர்களா...?! படிக்கும் குழந்தைகள் எங்கிருந்தாலும் படிக்கும்... நாமே பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டும். நாமே அழைத்து வரவேண்டும் என்ற எண்ணமெல்லாம் நம்மிடமில்லை. நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறை தவறாகவே உள்ளது. குழந்தைகளை ஒரு முதலீடு போல்தான் வளர்த்து வருகிறோம்..
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் அத்துடன் நமது வேலை முடிந்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறோம்... நம்மில் எத்தனை பேர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் எப்படி செல்கிறார்களென்று திடீர் விஜயம் செய்து பார்த்ததுண்டு..?? அல்லது பள்ளியில் ஏதாவது சரியில்லையென்றால் கேள்வி கேட்டதுண்டா..?? எல்லாம் நடந்து முடிந்ததற்கு பிறகு கேட்டு என்ன பயன்..? நமக்கு கேள்வி கேட்பதற்கு பயம். எங்கே பள்ளியிலிருந்து மாணவர்களை நீக்கி விடுவார்களோ என்று...
அப்படியே கேள்வி கேட்டேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறீர்களா..?! அப்படியெனில் பள்ளியை மாற்றுங்கள். மாற்றி விட்டு அந்த பள்ளியின் மீது புகார் கொடுங்கள். கல்வித்துறைக்கு எழுதிப்போடுங்கள். எதுவும் செய்யாமல் அரசாங்கத்தின் மீது நமது கோபம் வந்து என்ன பயன் என்பதை யோசித்தீர்களா..??
பள்ளியை நாம் அடிக்கடி சோதனை செய்வதில் தவறில்லை. நமது குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடும் பொழுது நமது குழந்தைகளுக்கு ஏதும் ஆகாமல் இருக்குமா, அல்லது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் நமது குழந்தைகளால் தப்பிக்க முடியுமாயென நாம் யோசித்திருக்கிறோமா..?? பள்ளியில் தீ அணைப்பு கருவி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறோமா..?? இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. நமது வேலையில்லை என்கிறீர்களா..?? அட.. அது என்ன அரசாங்கத்தின் குழந்தையா..?! நமது குழந்தை. நமக்கு தான் அக்கறை வேண்டும். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து படிக்க வைக்கிறோம். நமக்கு கேள்வி கேட்க உரிமையில்லை என்கிறீர்களா... முதலில் கேள்வியை கேளுங்கள். அதற்கு தீர்வு கிடைக்கும் கோபத்தில் மட்டும் ஒருங்கிணைந்தால் போதாது. கேள்வி கேட்பதிலும் இருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் மீதும் தவறிருக்கிறது. அரசு ஒரு சுற்றறிக்கை மட்டும் அனுப்பினால் போதாது. திடீரென்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தவறிழைக்கும் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைதான் அடுத்த விபத்தை குறைக்கும். இப்போது நடந்த விபத்திற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதென்று பார்ப்போம். கைதுகள் மட்டும் தீர்வாகாதென்பது மட்டும் நிச்சயம்.
அரசாங்கம் இப்பொழுது அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறதென்றல் நம் கோபமும் எழுச்சியும் தான் காரணம். இதே கோபம் எழுச்சியும் எந்த விபத்து நிகழும் முன்பே நடந்தால் உயிரிழப்புக்கள் நிகழாமலிருக்கும் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியை இனி நாமாவது கண்காணிப்போம் நமது குழந்தைகளை நாமே காப்போம்
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)