Tuesday, December 18, 2012

பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு சரியா? ஒரு எதார்த்தப் பார்வை...!


சுற்றி நிகழும் ஓராயிரம் சூழல்களையும் உள்வாங்கிக் கொண்டு சரியான தெளிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதையே நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம். மிகைப்பட்ட நம்மைச் சுற்றிய முரண்களைப் பற்றி எழுதுவது கைப்புண்ணிற்கு கண்ணாடி வைத்து காட்டுவதைப் போன்ற தேவையற்ற நிகழ்வாகி விடும் என்பதாலேயே பல நேரங்களில் அடர்த்தியான மெளனத்தை சுமந்த படியே நாங்கள் சிறகடிக்க வேண்டியும் இருகிறது.

சமீபத்தில் நாம்  அறிந்த  ஒரு விடயத்திலிருக்கும் முரணை எழுத்தாக்கி உங்களிடம் சேர்க்கும்  விதமாய் எங்களின் கழுகு குழுமத்தில் விவாதித்த செய்தியின் சாரம்சத்தை கட்டுரையாக்கி இருக்கிறோம்...! கட்டுரையின் மையக்கருத்திலிருந்து மாறுபடும் நண்பர்களின் ஆரோக்கியமான கருத்துரைகளை நாங்கள் வரவேற்பதோடு....நேர்மையான  விவாதங்கள் மேலும் பல புதிய கதவுகளை திறந்து விடும் என்பதையும் திண்ணமாய் நம்புகிறோம்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கான ஓட்டெடுப்பு நேற்று ராஜ்யசபாவில் வெற்றி பெற்றிருக்கிறது.. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இச்சூழலில் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஒட்டரசியலில் வென்றும்  இருக்கிறது.

இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே மறு சீரமைப்பு தேவைப்படும் ஒரு சூழல் இப்போது உருவாகிப் போயிருப்பதை தெளிவான பார்வைகள் கொண்டோர் யாரும் மறுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கார் எழுதிய சட்டம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 25 ஆண்டுகள் முடிந்த பின்னால் அந்த சூழலை ஆராய்ந்து அப்போதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் பொதுப்பிரிவினர் அளவிற்கு சமமாய் இல்லாவிடில் மேலும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிக் கொள்ளாம் என்றுதான் அம்பேத்கார் எழுதிய சட்டம் சொல்கிறது.

ஆனால் 25 வருடங்கள் கழிந்த பின்னால் உண்மையான ஆய்வுகள் செய்து இச்சட்டம் நீட்டிக்கப்படாமல் ஓட்டரசியலுக்காய் தொடர்ச்சியாய் மத்திய அரசால் பத்து பத்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.....

உண்மையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களில் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெற்றர்களோ அவர்களின் குடும்பங்களே தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு சாரார் மட்டுமே இட ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொண்டு தங்கள் பிரிவில் இருக்கும் மற்றவர்களுக்குத் தடையாகவும் இருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஏஎஸ் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் மட்டுமே  இனி அந்த இட ஒதுக்கீட்டை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் அந்தப் படிப்பிற்கு என்னென்ன தேவையோ அதனை மிகத் தெளிவாக தங்கள் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து விடுகின்றனர். (ஆரம்பத்தில் முற்பட்ட வகுப்பினர் இப்படிச் செய்து தங்கள் வகுப்பினர் மட்டுமே அரசுப் பணிகளில் நீக்கமற நிறைந்திருந்தது போல)

ஆனால் அதே வகுப்பைச் சேர்ந்த இது வரையிலும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஒரு தினக்கூலியின் பிள்ளை இந்த முன்னேறிய ஆதிதிராவிடர்களின் பிள்ளைகளோடு போட்டி போட்டு அந்த ஐஏஎஸ் பதவியை அடைய முடியாத நிலை தான் இன்று உள்ளது.

ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இது வரை அந்த பலனை அனுபவித்தவர்களின் வாரிசுகள் இனி மேல் பொதுப் பிரிவுக்கு மாறி விட வேண்டும் என்ற வகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும். மற்ற எந்த வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிற்கும் இதை பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும்..

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வகையான இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது அந்தந்த சமூகத்தினரின் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே என்பதை சட்டமாக இயற்ற வேண்டும்.  இட ஒதுக்கீட்டையே இப்படியாய் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பார்வையை உங்களுக்காக நாங்கள் பகிரும் இந்த வேளையில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் எபதை எப்படி  ஏற்று கொள்வது என்று நீங்களே கூறுங்கள்...?

இந்தச் சட்டத்தினால் அரசுப் பணியாளர்கள் மத்தியில் மனநிலை சமச்சீர் கெட்டுப் போய், அரசு இயந்திரம் ஒட்டு மொத்தமாக முடக்கப்படும் பெரும் ஆபத்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு அதிகாரியின் கீழே குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்து அவரிடம் வேலை பயின்ற ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு சமமாகவும், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரை வேலை வாங்கும் உயரதிகாரியாகவும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் உயரும் போது, அரசுப் பணியாளர்கள் 82 சதவிகிதத்தினர் மத்தியில் ஒருவித கோபத் தீ ஏற்படும். அது ஒரு வித ஒத்துழையாமையை ஏற்படுத்தி அரசு எந்திரம் அப்படியே ஸ்தம்பித்துப் போகவும் வழி வகுக்கும்.

மேலும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் ஒரு துறையின் அதிகாரியாக உயரும் ஒருவர், எப்படி அவசர காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? அனுபவம் இல்லாத முடிவுகளால் முழுக்க முழுக்க முரண்பட்ட அசாதரண சூழல் ஏற்பட்டுப் போய்விடாதா?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கண்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு யாதொரு மாற்றுக் கருத்துகளும் இல்லை என்பதை வலுவாக பதிவு செய்யும் அதே நேரத்தில் இது போன்ற பதவி உயர்வுக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்று ஓட்டரசியலுக்காய் அரசியல் கட்சிகள் நடத்தும் குட்டிக் கலாட்டாக்கள் அரசையும், அரசு நிர்வாகத்தையும், அதன் விளைவுகள் கடுமையாய் மக்களாகிய நம்மையும் பாதிக்கப் போவது உறுதி....!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Monday, November 12, 2012

அலட்சியமான அதிமுக ஆட்சியும்.. இருண்டு போன தீபாவளியும்... ஒரு பார்வை...!


பேராசை பெரு நஷ்டமென்பது யாருக்கு சரியோ இல்லையோ இப்போது தமிழக மக்களுக்குச் சரியாய் அது பொருந்தும். திமுக கழக ஆட்சியை தோற்கடிப்பதற்கு எதுவெல்லாம் காரணமாய் இவர்களுக்குப் பட்டதோ அதுவெல்லாம் அதிமுக ஆட்சியில் எட்டு மடங்கு பூதாகரமாய்  இடியாய் தலையில் இறங்க, திருவாளர் பொது ஜனம் இப்போது தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

மொத்த தமிழகமும் இருளில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவலைகள் எல்லாம், கவர்ச்சிகரமான திட்ட அறிவிப்புகளோடு குப்பை லாரியில் ஏற்றப்பட்டு விடுகின்றன. இருக்கின்ற மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமலும் முழுமையாகப் பயன்படுத்தாமலும் வருங்காலத்தை எண்ணிக் கனா காணச் சொல்கிறார். இந்த வலி சென்னை தவிர்த்த தமிழக குடிமக்களிடம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மோசமான நிர்வாகத்தைப் பொறுத்தவரை கலைஞர் ஆட்சியில் இருந்ததை விட, என்று ஒரு ஒப்பீடு வைத்துப் பார்த்தால் , கலைஞர் ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்த அம்மையார் ஜெயலலிதாவை நாம் பாராட்டுகிறோமோ இல்லையோ திமுகவின் தலைமை கண்டிப்பாய் பாராட்டியே ஆகவேண்டும்.

தலை சிறந்த நிர்வாகி என்று பத்திரிக்கைகள் எல்லாம் எப்படித்தான் இன்னமும் வெட்கங்கெட்டுப் போய் எழுதிக் கொண்டிருக்கின்றன என்ற ஒரு கேள்வி உங்களுக்கும் எனக்கும் எழத்தான் செய்கிறது, ஆனாலும் எழுதுபவனின் கரங்கள் முறிக்கப்பட்டு ஏதேனும் ஒரு அவதூறு வழக்குப் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீன் வாங்கிக் கொண்டு வழக்குகளுக்கு நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்கவேண்டும்...என்ற அவர்களின் நியாயமான பயத்தையும் நாம் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தில் பத்திரிக்கைகளின் சுதந்திரம் என்பது எவ்வளவு வேகமாய் ஆளும் கட்சிகளுக்கு ஜால்ரா தட்டுவது என்பதை, அறியாமல் நானும் நீங்களும் இதுவரையில் இருந்ததுதான் நமது மடமை எனக்கொள்க; குஜராத்திலிருந்து குதித்து வரும் மின்சாரத்தையும், பல திட்டங்களின் மூலம் பகுமானமாய் வரும் மின்சாரத்தையும் எதிர்பார்த்து, எதிர்ப்பார்த்து  வாக்கிட்ட கையை தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக் கொண்ட கையாய் நினைத்து இருளில் மூழ்கிப் போனான் என் அப்பாவித் தமிழன்.

வரலாறு ஒரு முறை தன்னை மாற்றி எழுதிக் கொண்டு களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் பொற்காலமாகவும்,  தற்காலத்தை தமிழகத்தின் இருண்டகாலமாகவும் அறிவித்துக் கொள்ளத்தான் வேண்டும். எல்லா விலைவாசிகளும் விண்ணைத் தொட்டு விட்டிருக்க, நமது சகோதரியின் அரசு நமக்கெல்லாம் ஆப்படித்த வெட்கங்கெட்ட கதையை தோளில் சுமந்து கொண்டு....

இதோ நாமெல்லாம் தயாராகி விட்டோம் சுபிட்ச தீபாவளி கொண்டாடுவதற்கு....

அரியணையிலேறி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டாலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத, தீர்க்கத் தெரியாத ஒரு அரசாய், மக்கள் தொடர்புகள் அற்ற ஒரு அரசாய் நகர்ந்து கொண்டிருக்கிறது நமது தமிழக அரசு, ஆனால் ஓராண்டுக்குள் தமிழத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கி இருப்பதாக ஆங்காங்கே இருக்கும் அவரின் கட்சி விசுவாசிகள் போஸ்டர் வேறு அடித்து ஒட்டி சதாரண மக்களை இன்னமும் வெறுப்பேற்றுகிறார்கள்.

அப்படியாய் அவர்கள் போஸ்டர் அடிக்க மின்சாரம் இல்லாமல் எத்தனை நாள் காத்திருந்து அச்சடித்திருப்பார்கள் என்பது அவரவர் மனசாட்சிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

தமிழகத்தின் முதன்மைப் பத்திரிக்கைகள் எல்லாம் அம்மாவின் ஆட்சியை முடிந்த மட்டும் தூக்கி நிறுத்தி எல்லாம் சரியாகும் என்ற ரீதியில் தொடர்ச்சியாய் பரப்புரைகள் செய்து கொண்டிருப்பதையே வழமையாகக் கொண்டிருக்க, அவரின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் நிமிர்ந்து கூட நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடத்திற்குள்ளாக பந்தாடப்பட்ட தலைகளை கணக்கில் வைத்துக் கொண்டு பவ்யமாய் பவனி வரும் மாண்புமிகுக்களை தனிப்பட்ட முறையில் யாரேனும் வாழ்த்தி போஸ்டர் அடித்து விடக்கூடாதே என்ற பெருங்கவலை அவர்களுக்கு...

இங்கே மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட அவர்களுக்கு எங்கே நேரமிருக்கப்போகிறது...? அரசு என்பது மக்களை நிர்வகிப்பதற்கு, ஆள்வதற்கு என்பதன் தாத்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டு தனிநபர்கள் மக்களை ஆளும் மன்னராட்சி முறைதான் இன்னமும் ஜனநாயகம் என்ற பெயரில் நமது நாட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

உதயகுமார்கள் தலைமறைவாய் இருக்கிறார்கள், விலைவாசிகள் அனலாய் கொதிக்கின்றன, மின்சாரம் இல்லை, சரியான நேரத்தில் வரவேண்டிய  காவேரித் தண்ணீர் வராமல், மொத்தமாய் மழையோடு சேர்த்து  கொடுக்கப்பட்ட ஆற்று நீரில் விவசாயிகளின் வாழ்க்கை மூழ்கிப் போய்விட்டது, மக்களை அடக்க துப்பாக்கிச் சூடு என்பதும், உளவுத்துறை என்பது சொந்தக்கட்சிக்காரர்களை கண்காணிக்க மட்டுமே என்பதும், போராடுபவர்களின் மீது துரோக வழக்குகள் என்பதும் வழமையாகிப் போய் விட்டது....டாஸ்மாக்குகளின் வாசலிலேயே தமிழனின் வாழ்க்கை பெரும்பாலும் குடி கொண்டிருக்க....

இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களை எல்லாம் எந்த எழுத்து எப்போது வாரி விடுமோ, எப்படியான கதைகள் எதிர்காலத்தில் புனையப்படுமோ என்ற பயமென்னும் அரக்கன் கருத்து சுதந்திரத்தின் குரல்வளைகளை பூட்ஸ் கால்களால் அழுத்தி வேறு கொண்டிருக்கிறான்.

ஈழப்போர் நடந்த போதும் சரி, கலைஞர் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்ட பின் அவரை விமர்சித்த போதும் சரி பரிபூரண சுதந்திரத்தை இணையத்தில் எழுதுபவர்கள் கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். போன அரசினை விமர்சிக்கையில் தாவிக் குதித்து ஓடி வந்த வார்த்தைகளை ஏதோ ஒரு அச்சம் சூழ்ந்திருக்கும் அசாதாரண சூழலைத்தான் எதிர்காலத்தில் கருத்து சுதந்திரத்தின் மீது பாயக் காத்திருக்கும் அரக்கனாய் நாம் பார்க்கிறோம்...

எது எப்படியோ, என்று.....மனதைத் தேற்றிக்கொண்டு...

தீபாவளி வாழ்த்துக்களை கூறியும், புதுத்துணி எடுத்து, பட்சணங்கள் செய்து கொண்டாடுகிறீர்களோ இல்லையோ  கொஞ்சம் பட்டாசு வாங்கி கொண்டாடுங்கள்...

அது நம்மை  எதிர்பார்த்து முதலீடு செய்திருக்கும்... சிறுதொழில் முதலீட்டார்களுக்குப் பயனை அளித்து....அதன் மூலம் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு எழுச்சியான எதிர்காலத்தை உருவாக்கட்டும்....!

தீபாவளி வாழ்த்துக்கள் என்று நாங்களும் சொல்லித்தான் ஆகவேண்டும்.....வலக்கையால் கை அசைத்து.. இடக்கையால் கண்ணீரைத் துடைத்தபடியே...!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)Monday, October 29, 2012

சின்மயி விவகாரமும் சமகால இணையச் சூழலும்.....ஒரு கழுகுப் பாய்ச்சல்...!

வலைப்பதிவுகளும், சமூக இணைவு தளங்களும் வருங்காலத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை இந்த சமூகத்தில் விதைக்கவிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய் நம்மைச் சுற்றிலும் நிறைய நிகழ்வுகள் நடைபெறத்தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வலைப்பக்கங்களும், அவற்றின் இணையதள ஆதரவுப் பக்கங்களும் என்று களை கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வலையுலகில்....

தனித்துப் பறக்கும் கழுகுகளின் பயணம் சற்றே சிரமம்தான் என்றாலும்....அந்த சிரமத்தை மிகப்பெரிய வரமாகவே நாம் கருதுகிறோம்.

சின்மயிக்களின் வசீகரக் குரல்கள் சினிமாப் பாடல்களில் நம்மை வசீகரித்தாலும் சமூகம் நோக்கிய அவர்களின் பார்வைகள் கர்ண கொடூரமானவைகள்தான். அதிகார சக்திகள் இணையத்தை ஆக்கிரமித்து சாமானியர்களின் கருத்துக் குரல்வளைகளைப் பிடித்து இரத்தம் குடிக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினாலும், கருத்துக்களை பகிர்வதில், விவாதிப்பதில் அப்படியாய் விவாதிப்பவர் உச்ச பட்ச நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டில் யாதொரு மாற்றமும் இல்லை.

நமக்கு எதிரே நம்மோடு யார் வாதிடுகிறார் என்பதைப் பொறுத்து நமது கருத்துப் புலிகள் பாய வேண்டுமே அன்றி சின்மயிக்கள் போன்ற அரசியல், சமூக விசால பார்வைகள் இல்லாத பிள்ளைப் பூச்சிகளின் மீது பாய்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எமது நிலைப்பாட்டினையும் இங்கே வலுவாக பதிய விரும்புகிறோம். வார்த்தைகளின் விளையாட்டை நஞ்சாக்க தெரிந்த சகோதரி சின்மயி கட்டி விட்ட பெருங்கதைகளை எப்படி இணைய புலனாய்வுக் காவல்துறை ஏற்றுக் கொண்டது? சின்மயி போன்ற பிரபலமல்லாதவர்களின் குரல்களுக்கு இதே போன்ற அழுத்தங்களை  கொடுக்குமா என்பது போன்ற கேள்விகள் நம்மை புருவம் உயர்த்த வைக்கின்றன.

பெண்களின் மீது கரிசனம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஆதாரமற்ற பாலியல் புகார்களைக் கையிலெடுத்துக் கொண்டு  சாமானியர்களைச் சிறையிலடைத்து வாழ்வை அழிக்கும் போக்குகள் அதிகாரவர்க்கத்தால் கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்பதையும் நாம் இங்கே உணரவேண்டும்.

சாதியைப் பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் என்ன மாதிரியான அறிவின் உயரத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் தெளிவாக உணரும் அதே நேரத்தில் ஒரு மீனவனின் உயிரை அவன் மீன் பிடித்தொழிலோடு தொடர்புபடுத்தி உணர்ச்சியும் வலிகளும் கொண்ட மனித உயிரை துச்சமென எண்ணி அவர் பகிர்ந்திருக்கும் கருத்துக்களை முக்காலமும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு வன்மையாகக் கண்டிக்கவும் தக்கது என்பதை இச்சமயத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.

அன்பான தமிழ் உறவுகளே....

இணைய உலகத்தை ஆதிக்க, அதிகார, மதவாத, சாதீய சக்திகள் ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. தவறான கருத்துக்கள் மிகையாக மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகின்றன. சரிகளையும், தவறுகளையும் ஏதோ ஒரு நிலைத்தகவலையோ அல்லது புறணி பேசும் கட்டுரையையோ வைத்து நீங்கள் முடிவு செய்து விடாதீர்கள். இணையம் கடந்து பல ஊடகத்தகவல்களையும் வாசித்து, கேட்டு உண்மைச் செய்தியை அறிய உங்கள் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு பிறகு முடிவுகளை எடுங்கள்.

இங்கே புள்ளி விபரங்கள் கொடுப்பவர் எல்லாம் புத்தர்கள் அல்ல... மாறாக புள்ளி விபரங்களை வைத்துக் கொண்டு அரைக்கிலோ அரிசி கூட நம்மால் வாங்கவும் முடியாது. செய்திகளை வாங்கிக் கொள்வதிலும், வெளியிடுவதிலும் மனசாட்சியோடு நில்லுங்கள். இந்த சமூகம் வெகு விரைவான சீர்கேட்டினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் ஒன்று கூடித்தான் மாற்றியாக வேண்டும். பொதுவெளியில் அநாகரீகமாய் பேசுபவர்களையும், பொறுமை இல்லாதவர்களையும், சட்டையை மடித்துக் விட்டு நாக்கை மடித்துக் கொண்டு கண் உருட்டி கோபம் காட்டும் பொறுமை இல்லாதவர்களையும்...

உல்லாச ஓய்வுகளுக்காய் மலைத் தோட்டங்களில் மாளிகைகளைக் கட்டிக் கொண்டு அங்கே பஞ்சு மெத்தையில், குளிர் காற்றை வாங்கிக் கொண்டு நம்மை, நமது பிள்ளைகளை இருளில், புழுக்கத்தில் தொழிலற்றுப் போகவேண்டும் என்று சபித்தவர்களையும், தத்தமது குடும்பத்திற்காய் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டவர்களையும், இனத்தின் பெயர் சொல்லி பரந்து விரிந்த மானுட சமூகம் நாமென்ற எண்ணத்தை குறுக்கி, நம்மை வெறி கொள்ளச்செய்து ஒன்று கூடச் சொல்பவர்களையும்.... நமக்கு அரசியல் தலைவர்களாக, வழிகாட்டுபவர்களாக கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கே இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது.

உயிர் பயத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எல்லாம் தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது, தேசத்துரோகிகள் என்ற பட்டம் சுமத்தப்படுகிறது. தண்ணீர் கேட்டு பிச்சைக்காரர்களாய் நாம் கதறினாலும் கொடுக்காத கல் நெஞ்சக்காரர்களை நாம் எனது தேசத்தவன்  என்று கூறிக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருக்கிறது. இங்கே வேசம் போட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர்கள் தங்களின் சேமிப்பு போதவில்லை என்று ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சிகளையும் திருடிக் கொள்கிறார்கள்.

சாதாரண மக்களாகிய நாம் எப்போதும் மயக்கத்தில் இருக்கிறோம்.

விழித்தெழுங்கள் எம் பிள்ளைகளே....!!!!!! கட்டற்ற நமது இணையப் பெருவெளியில் அறிவாயுதம் ஏந்திச் சீறிப்பாயுங்கள்....!!!!! அறநெறிக்கு எதிராய் அகங்காரத்தோடு கருத்துக்களை பரிமாறும் எவராயிருந்தாலும் வார்த்தைகளால் அவர்களின் அகங்காரம் என்னும் குரல்வளையில் எழுத்து வாள்களைப் பாய்ச்சுங்கள்..

முறையற்ற அரசியல் பேசும் யாவராய் இருந்தாலும்..... இது எமது இடம்.. எமது மொழி....நெறியற்ற பண்பாடற்ற கருத்துக்களை இங்கே பேசாதீர்கள்... மேலும்.....பொய்ச்செய்திகளை உங்களின் அதிகாரத்தால், ஆணவத்தால் எம்மக்களிடம் பரப்புரை செய்யாதீர்கள் என்று விழி உருட்டி.....மீசை முறுக்கி.....அளப்பரிய கருத்துக்களால் அதட்டி வெளியேறச் சொல்லுங்கள்...!

தமிழ் வலைப்பதிவுலகமும், சமூக இணைவுத்தளங்களும் எம் பிள்ளைகளுக்கான களங்கள்....!!!!! இங்கே நச்சினை விதைப்பவர்கள் எவராய் இருப்பினும் எம் பிள்ளைகளின் அறிவுச் சுடரில் எரிந்தே போவீர்கள் என்ற எச்சரிக்கையை கற்றறிந்த மூத்தோரே நீவிர் கடை பரப்பிப் போடுங்கள்...! நல்ல அரசியலுக்கு பரப்புரைகள் தேவையில்லை உம்மின் செயல்களின் விளையும் நன்மைகள் பேசும் உம்மின் பெரும்புகழ் பற்றி என்று நயமாய் எடுத்துக் கூறுங்கள்.

சரியில்லாத கருத்துக்களை பதிவு செய்யும் ஆதிக்க சக்திகளை, அதிகார மனிதர்களை அறிவால் விரட்ட இக்கணமே சூளுரை கொள்வோம்....!தெளிவான கற்றறிந்த அறிவுச் சமூகத்தின் பிரதிநிதிகள் நாங்கள் என்று அறிவார்ந்த நமது ஆக்கங்களால் வெளிப்படுத்திக் கொள்வோம்.....என்ற சூளுரையோடு சமகாலச் சூழலுக்கான எச்சரிக்கையாய் இந்தக் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பித்து தற்காலிகமாய் வாய் மூடிக் கொள்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)Monday, September 17, 2012

புலவர். சா. இராமாநுசம் அவர்களுடன் ஒரு பேட்டி..வயதில் மூத்தவன் என்றாலும் வலைப்பதிவுகள் எழுதுவதில் நான் இளையவன் தானே என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்ட தமிழ்ப் புலவர் ஐயா. இராமாநுசம் அவர்களிடம் இளைய தலைமுறையினர் மட்டும் இன்றி பெரியவர்களுமே கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. காலத்தின் போக்கில் கவிஞர்கள் கட்டுகளின்றி உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை புதுக்கவிதைகள் என்ற பெயரிலும், பின் நவீனத்துவ கவிதைகள் என்ற பெயரிலும் நிறையவே  எழுதத் தொடங்கிவிட்டாலும் தமிழ் இலக்கண மரபினை உள்ளடக்கி எழுதப்படும் மரபுக் கவிதைகள் எப்போதுமே வாசிக்க சுகமாய்த்தான் இருக்கும். 

மொழியின் வளமையினை எடுத்தியம்பும் மரபுக் கவிதைகளைப் தமிழ் வலையுலகில் படைக்கும் ஐயா இராமநுசம் அவர்கள் பல காரணங்களுக்காகப் போற்றப்படவேண்டியவர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைபபதிவர் திருவிழாவை வெற்றிக்கரமாய் நிகழ்த்திக் காட்டிய மிக முக்கியமானவர்களில் இந்த 81 வயது இளைஞரும் அடக்கம். தமிழ்ப் பதிவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு சங்கம் ஒன்று தொடங்க வேண்டும் என்ற ஐயாவின் எண்ணத்தை கழுகு மிகப்பெரிய கருத்துப் புரட்சிக்கான விதையாய்ப் பார்க்கிறது. வயதும் அனுபவமும் எப்போதும் இளையரை வழி நடத்தும் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த ஐயா இராமானுசம் அவர்களின் பேட்டி இதோ உங்களுக்காக...
1)  வலைப்பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது ஐயா?

வலைப்பதிவு  என்று, ஒன்று இருப்பதோ,அதுவும் நமக்கென சொந்தமாக வலையொன்று தொடங்கலாம் என்பதோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை நான் அறியாத ஒன்றே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என் உயிரினும் மேலான என் துணைவி, என்னை விட்டு  மறைந்த பின் என் வாழ்வேமுற்றிலும் முடங்கிப் போய்விட்டது. என் நிலை கண்டு வருந்திய என் இளைய மகள் என்னை ஆற்றுப் படுத்த,என துயரின் வடிகாலாக, இவ் வலையைத் தொடங்கிக் கொடுத்ததோடு,உரிய பயிற்சியும் தந்தாள்

2) தமிழ் புலவர் படிப்பினை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம்..?

  1- தமிழ் மீது நான்  கொண்டிருந்த பற்று 
  2-இயற்கையாகவே கவிதை எழுதும் ஆற்றல்.
  3- அக்காலக் கட்டத்தில் வீறு கொண்டு விளங்கிய திராவிட                           இயக்கங்களின் தாக்கம். 
  4 என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில சூழ்நிலை மாற்றங்கள்.

3) தமிழர்கள் தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்காமலிருக்க காரணம் என்ன?

இதற்குப் பதில் சொல்வது என்றால் நீண்ட கட்டுரையே எழுத வேண்டும் ஒன்றா, இரண்டா பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

தமிழ் வாழ்க! இந்தி ஒழிக எனப் போராடி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தாய் மொழியாகிய தமிழுக்கு உரிய முக்கியத்தைத் தராமல்,மறைமுகமாக ஆங்கிலமொழி மோகத்திற்கே துணை       நின்றதே முக்கிய காரணம். அதன் விளைவாக பட்டித் தொட்டி முதல் மாநகரங்கள் வரை மழலையர் பள்ளி தொடங்கி  மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கில மொழியில் போதனா முறைப் பள்ளிகள் புற்றிசல் போல் 
வளரத் தொடங்கின. 

மேலும்   அப்பா, அம்மா என்று குழந்தைகள் அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கருதும் பெற்றோர்களும்                    

ஊடகங்களான செய்தித் தாள்களும் தொலைக்காட்சி பெட்டிகளும் கூட முக்கிய காரணங்கள் என்று சொன்னால் மிகையல்ல! இன்னும் பல இதுபோல உள!
           

4) மரபுகளை உடைத்து எழுதப்படும் கவிதைகளை பற்றி தங்கள் கருத்து..?

இது, காலத்தால் ஏற்பட்ட மாற்றம்! இன்று மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்துவிட, புதுக்கவிதை எழுதுவோர் மிகுந்து விட்டனர்  நல்ல மரபுக் கவிதைகளை எழுதும் சிலர்கூட  புதுக்கவிதை எழுதுவதைக் காண்கிறோம். இது காலத்தின் கட்டாயம் போலும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்பதுதானே இலக்கணம்! எனவே இதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

5) அறிவியலை அறிய தமிழ் மொழி அவ்வளவு வளமானது அல்ல என்று கூறுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?

இக் கூற்று சரியானதல்ல! தமிழ் மொழிபோல் சொல்வளம் மிக்க மொழி வேறு எதுவுமில்லை! நம்முடைய முயற்சியற்ற தன்மை, ஆங்கிலம் தான் ஏற்றது என்ற பெரும்பான்மை மக்களின் குருட்டுத் தனமான எண்ணம் தனித்தமிழ் ஆர்வலர்களின் விட்டுக் கொடுக்காத முரட்டுப் பிடிவாதம்!
               இப்படி எத்தனையோ காரணிகளால் ஏற்பட்டுள்ள, நம்முடைய இயலாமைக்குத் தமிழை இவ்வாறு கூறுவதை ஆணித்தரமாக மறுப்பதோடு வன்மையாக கண்டனம் செய்கிறேன்.

6) பதிவுலகம்....உங்கள் பார்வை என்ன?

 இன்று பதிவுலகம் மக்களால் கவனிக்கப் படும்ஒன்றாக ஆகிவிட்டது  கருத்து சுதந்திரம் தமக்கு இருக்கின்ற காரணத்தினால் பதிவர் தடம் மாறி கண்டபடி எழுதுவதோ, நாகரிக மற்ற வார்த்தைகளை எழுதுவதோ தவிர்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
        
7) பதிவர் சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதின் காரணம் என்ன?

இதற்கு நான் பதில் சொல்வதை விட ஓராண்டுக்கு முன் நான் எழுதிய பதிவை உரிய பதிலாக இங்கே வெளியிடுகிறேன்.
        
         பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

     
அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
          வணக்கம்!
விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில் அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது   அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்  முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை  எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும். இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்

தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும் என்று சொல்வார்கள். நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும் தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால் இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்

"உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்" என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)   பெயரிலோ செயல்படலாம்
       
8) பல அணியாய் இருக்கும் பதிவர் சங்களை விட.. ஒரே சங்கம் தமிழகம் முழுதும் என்று  கொண்டு வந்துவிட்டால் அதனால் என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும்...?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கேற்ப, நாம் அனைவரும்  ஒரே அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ள இயலும். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சிக் காரர்களால் நாம் முறியடிக்கப் படுவோம்


9) தங்கள் அனுபவத்திலிருந்து இளைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

இன்றைய இளைய தலைமுறையினருக்கு, நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், சேவை மனப் பான்மையும் கட்டாயம் தேவை  மேலும் நாடு முன்னேற, நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று எண்ண வேண்டுமே தவிர, நாடு நமக்கு என்ன செய்தது என்று, கேட்கக் கூடாது என்பதே!


10) பதிவர் சங்கத்தை வேண்டாம் என்று எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது

 கட்டுண்டோம்! பொறுத்திருப்போம் காலம்  மாறும்.


11) பதிவர் சங்கம் மூலம் என்ன சாதிக்க முடியும்..?? பதிவர் சந்திப்பில் வெறும் கூடி கலைவது மட்டும் போதுமா..
    
இதற்குரிய பதிலை மீண்டும் சொல்வது, கூறியது கூறலாகும்.

அடுத்தது நாங்கள் நடத்திய முதல் பதிவர் சந்திப்பே கூடிக்கலையும்  ஒன்றாக இல்லையே! கவிதை நூல் வெளியீடு கவியரங்கம் என்றுதானே    நடத்தினோம்.

12)  தற்போது நடந்த பதிவர் சந்திப்பில் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை மிகுதியானவர்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்திருக்கலாமே....?

சிலரைப் போல நீங்களும் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்றே கருத வேண்டியுள்ளது. 

தற்போது நடந்த பதிவர் சந்திப்பும் அதன் மாபெரும் வெற்றியும் முன்னின்று நடத்திய நாங்களே எதிர் பாராத ஒன்று, ஏதோ மூன்றுபேர் என் இல்லத்தில் கூடி நான்,மதுமது,மின்னல்)திட்டமிட்டுப் போட்ட விதை முளைத்து ஆலமரமாகத் தழைக்கும் என்று கனவிலும் கருத வில்லை.  சென்னைப் பித்தனையா அவர்களையும் கலந்து, திட்டமிட்டே   நாளைக்குறிப்பிட்டு  பதிவர் சந்திப்புக்கு வருக என, எங்கள் வலைகள்     வழியாக அழைப்பும் கொடுத்து வருபவர் தங்கள் பெயர்களைப் பதிய      வேண்டினோம். காரணம் வருபவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி      செய்வதற்காக.

பொதுவாக, பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டினோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.அப்படி ஓர் எண்ணம் எங்களுக்குத் தோன்ற வில்லை என்பதே உண்மை.

மற்றபடி, யாரையும் புறக்கணிக்கவோ, உதாசீனப்படுத்தவோ எள்ளவும் எண்ணவில்லை. மேலும் தங்களின் ஆதங்கம் நியமானது என்றாலும் தங்கள் கழுகு குழுமத்தைச் சார்ந்த, இங்குள்ள, யாரேனும் ஒருவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு இது பற்றி விளக்கியிருந்தால் மிக, சிறப்பாக இருந்திருக்குமே! நாங்களும் வரவேற்று வாழ்த்தியிருப்போமே!

 இது, தங்கள் கேள்விக்குரிய பதில் மட்டுமல்ல என், தன்னிலை விளக்கமாக எடுத்துக்கொள்ளும்படி, தங்களையும், தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலரையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
                                      
    
13) பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..? அல்லது ஒன்று சேர்க்க முடியுமா.?

பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..?  இவ்வாறு ஆய்வு செய்வதே உள்ள ஒற்றுமைக்கு ஊறு செய்வதாகும் என்பதே என் கருத்தாகும்! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தானே சனநாயகம். பயிரிட நினைக்கும் விவசாயி களை முளைக்குமே என்று கவலைப்பட இயலுமா?
           நம்பிக்கை தானே வாழ்கை! முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்கலாமா?! முயல்வோம் வெற்றி பெறுவோம்!

14) வலைப்பூக்களில் எழுத வந்த பின் ஏன் எழுத வந்தோம் என்று எண்ணி இருக்கிறீர்களா?

ஆம்! சில நேரங்களில் நினைத்ததுண்டு .காரணம், உள்ளமல்ல! உடல்!  முதுமையின் காரணமாக முகுவலி வரும்போது மட்டுமே இவ்வாறு தோன்றுவதுண்டு
   
15) பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கிறதா? குறைகிறதா..?

என்னைப் பொறுத்தவரையில், பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் முற்றிலும் இல்லை என்றே சொல்லவேண்டும்! இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இன்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருப்பதே பதிவுலகம்தான்!

நான் உண்ணும் உணவோ, உட் கொள்ளும் மருந்தோ காரணமல்ல, என் உயிரினும் இனிய வலையுலக அன்பு உறவுகள் என்பால், (மறுமொழி வாயிலாக) காட்டும் பரிவும், பற்றும், பாசமும்,நேசமும் தான் என்பதை இங்கே உரைக்கக் கடமைப் பட்டுள்ளேன்

முடிவாக, என்னைப் பல கேள்விகள் கேட்டு, முடிந்தவரைபதில் சொல்ல வைத்த தங்களை, நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான 

வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!

                           காரணம் எதுவாகினும், உங்களுக்கு உளங்கனிந்த நன்றி! நன்றி!(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, September 12, 2012

வெடிக்கும் மக்கள் புரட்சி, மிரண்டு நிற்கும் அரசாங்கம்....பதட்டமாய் கூடங்குளம்...!

ஒரு நல்ல அரசு என்பது மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும், இயன்றவரையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து, விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுக்கச் செய்து காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் காந்திய வழியில் தங்களின் வாழ்வுரிமைக்காக போராட வந்த கூடங்குளம் பகுதி மக்களின் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தி எதேச்சதிகாரமாய் நடந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை வன்மையாகக் கண்டிக்கிறது.

சுமார் 50,000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் நிறைய பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும், காண முடிந்தது. அணு உலை பற்றிய நுணுக்கமான விசயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை விட அவர்கள் ஒவ்வொருவரின் கண்ணிலும் தெரிந்த உயிர் பயம் நமக்கு  கலவரத்தை உண்டு பண்ணியது. தாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் அணு உலை என்ற பெயரில் தங்கள் கண்ணெதிரில் தங்கள் சந்ததியினர் தழைக்க முடியாமல் போக ஒரு கல்லறையை கட்டிக்கொண்டிருக்கிறதே இதை எப்படி தடுக்கப் போகிறோம் என்ற கவலை தெரிந்தது.

அறிவு ஜீவிகளான அணு விஞ்ஞானிகளும், ஆளும் அரசுகளும் இந்த பயத்தையும், கலவரத்தையுமாவது குறைந்த பட்சம் நீக்கிவிட்டு மேற்கொண்டு பணிகளைச் செய்திருக்க வேண்டுமா இல்லையா? அடிப்படை பயத்தை நீக்கக் கூட முடியாத கையாலாகாத அரசுகள் சொல்வதை எப்படி நாம் நம்புவது? அல்லது அவர்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற பயம் ஒவ்வொரு பாமரனுக்குள்ளும் வருமா...? வராதா?

யுரேனியம் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அணுவிஞ்ஞானம் என்றால் என்ன என்று புரியாது. பாதுகாக்க நீங்கள் செய்து வைத்திருக்கும் முறைகள் ஒரு கணத்தில் பொய்த்துப் போகும் என்பதைக் கூட நாங்கள் விட்டு விடுகிறோம் ஆனால் உலக நாடுகள் எல்லாம் கைவிட்டு விட்ட ஒரு திட்டத்தை, அதுவும் ஜப்பான் போன்ற நாடுகளில் பேரழிவு ஏற்படுத்திய ஒரு விசயத்தை ரஷ்யாவோடு நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக செயல்படுத்த முயல்வது....

எங்களின் உயிரோடு விளையாடும் முயற்சி என்பதை ஏன் நீங்கள் இன்னும் உணரவில்லை....?

40 நிமிடத்தில் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவர்கள் வந்து சுற்றிப் பார்த்து விட்டு பாதுகாப்பானது என்று கூறிச் செல்கிறார்களே...? அணு பாதுகாப்பானது என்று சொல்லும் விஞ்ஞானி ஒரு விஞ்ஞானிதானா? கணக்குப் பார்த்து கூட்டிக் கழித்து பழக்கப்பட்டுப் போன விஞ்ஞான மூளைகளுக்கு இரத்தமும் சதையுமான உணர்வுள்ள மனிதர்கள் கேட்கும் கேள்விகள் எப்படிப் போய்ச் சேரும்...?

அச்சத்தில் நாங்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு அறிவியலார் கொடுத்த பதிலுக்கு மறுபடி கேள்வி கேட்டால்... எங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்.. என்று கூறும் மனிதத் தன்மையற்றவர்கள்தான் எங்களை வழி நடத்தும் தலைவர்களா? பேரிடர் பயிற்சி கொடுக்கிறேன் பேர்வழி என்று அரசு நடத்திய கேலிக் கூத்தினை எங்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டோம்..? என்ன எதுவென்று அறியும் முன்னே அவசர அவசரமாய் சென்று விட்ட பயிற்சியாளர்கள் நிரந்தரமாய் கூடங்குளத்தில் குடியேறத் தயாரா?

என்றெல்லாம்.. அப்பாவி கூடங்குளம் பகுதி மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு மேதாவிகள் உலகம் பதில் சொல்லப் போவதில்லை. மக்களின் போராட்டங்களை எல்லாம் அதிகாரவர்க்கம் எப்போதும் அடக்கி ஒடுக்கி மிரட்டி மறுத்து விடலாம் என்று காணும் கனவுகள் எல்லாம் மறு பேச்சில்லாமல் கிழித்து எறியப்படும் என்பதுதான் வரலாறு.

தேர்தலுக்காய் ஓட்டுக் கேட்கப் போகும் போது ஒரு பேச்சு....அரியணையில் ஏறிய பின் ஒரு பேச்சு என்று நேரத்துக்கு நேரம் மாறும் பச்சோந்திகளின் வர்ணங்கள்....அடுத்த தேர்தலில் அழித்து ஒழிக்கப்படும் என்பதை அதிகாரவர்க்கம் மறக்கக் கூடாது. 

கூடங்குளத்தில் நடப்பது வெறும் போராட்டம் அல்ல.. அது உயிர்ப்பிரச்சினை...! 

வெறுமனே தடியடி நடத்தி அச்சமூட்டி அம்மக்களை கலைத்துவிட்டு போராட்டக்காரகள் தலைமறைவு என்று அரசு சொல்வதை ஊடகங்களில் எழுதி  பரப்புரை செய்வதன் மூலம் இந்த பிரச்சினை முடிவடைந்து விடாது. மத்திய மாநில அரசுகள் சரியாய் இந்தப் பிரச்சினையை அணுகி மக்களை அரவணைத்து இதற்கு ஒரு சுமூகமான முடிவு காணாவிட்டால்.....இந்திய தலைப் பகுதி பற்றி எரிவது போல தென்கோடி இந்திய மூலையிலும் அணைக்கமுடியாத பெரு நெருப்பு பற்றி எரியும் அது இந்தியா என்னும் தேசத்திற்கு பெரும் சவாலாய் அமையும் என்பதும் உறுதி.

துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவ சகோதரரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு...., துப்பாக்கிச் சூட்டினை நடத்திய அரசுக்கு கடுமையான கண்டனங்களையும் இக்கட்டுரையின் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes