Saturday, July 30, 2011

ஆரோக்கியமே....முதல் விழிப்புணர்வு..! உடல் வலிகள் பற்றிய பார்வை..!


வாழ்க்கையின் ஒட்டம் பொருளீட்டும் திசையில் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவசரமான வாழ்க்கை முறையில் நாம் உடல் நலனையும் பேண வேண்டியிருக்கிறது என்ற உண்மையினை மறந்து விட்டு...உடலில் வரும் சிறு சிறு வலிகளைக் கூட நாம் அசட்டையாக கவனிக்காமல் விட்டு விடுகிறோம். சாதரணமாய் ஒன்றும் நிகழாது என்ற எண்ணம் எல்லோரிடமு மேலொங்கி இருக்கும்...ஆனால் மிகப்பெரிய விடயங்களின் ஆரம்பம் கவனக் குறைவின்று நாம் கடந்து செல்லும் ஆரம்ப நிலைகள்தான் என்பதனை இக்கட்டுரை வாயிலாக உங்களிடம் பகிர்கிறோம்.




பொதுவாக  நமக்கு தலைவலி போன்ற வலிகள் வரும் ஒரு மாத்திரை  போடுவோம்...வலி குறைந்ததும் அடுத்து வலி வரும் வரை இதை மறந்துவிடுவோம். ஆனால் எந்த வலி/நோயாக இருந்தாலும் சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்க வேண்டும். நோய் முற்றியபின் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும். சிறிதாக இருக்கும் போதே எப்படி கண்டுபிடிக்கலாம், அறிகுறிகள் என்ன என்ன...!!? சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

  
தலை வலி


காலம் போகிற போக்கில் நம்மில் பல கை வைத்தியர்கள் உருவாகி விட்டனர். நம்மை அடிக்கடி வந்து பார்த்து செல்லும் விருந்தாளிகளில் ஒருவர் தான் தலைவலி.  பெரும்பாலும் தலைவலிகள் சாதாரணமாய் வந்து செல்லக் கூடியவை என்றாலும் அடிக்கடி மருத்துவரின் ஆலோசனைகள் இன்றி அதிகமாக மாத்திரைகள் உட்கொள்வது நல்லது அல்ல. தொடர் தலைவலிகள்  இருப்பின் மருத்துவரை கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டும். சில அறிகுறிகளின் மூலம் தலைவலிகளால் வரும் பெரிய விளைவுகளை முன்னரே கண்டு சரி செய்து கொள்ளலாம்.


அறிகுறிகள்:



வலதுபக்கம் தலைவலி இருந்தால் இடது பக்கம் கை கால்கள் மரத்து போய் உணர்ச்சிகள் குறைந்து விடும், கை கால்கள் வலி இருக்கும், இடது தோள்பட்டை வலி இருக்கும், வாந்தி மயக்கம், இடது கண் பார்வை குறைபாடு வரும். என்ன சாபிட்டாலும் வாந்தி வந்து விடும் தண்ணீர் குடித்தால் கூட, வலிப்பு (பிட்ஸ்) வரும்.   



இடது பக்கம் தலை வலி வந்தால் அதே போல் வலது பக்கம் அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நிச்சயம் தலையில் கட்டி இருக்கலாம்...! 




என்ன செய்யலாம்: எந்த மாத்திரைகளையும் உங்களின் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளாமலும், கைப்பக்குவங்களைப் பின்பற்றாமலும் உடனடியாக மருத்துவரை பார்த்தல் அவசியமாகிறது.


தோள் பட்டை வலி


வண்டி ஓட்டும் பலரும் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய ஒன்று இந்த தோள் பட்டை வலி. சிலருக்கு தோள் பட்டை வலி இருக்கும் ஆனால் அது தோள் பட்டையால் ஏற்படுவது இல்லை, நமது கழுத்து வலி தான் தோள்பட்டை வலியாக உணரப்படும்,  முதுகுதண்டு எலும்புகளை டிஸ்க் 1,டிஸ்க் 2 என்று சொல்வார்கள்.கழுத்தில் இருக்கும் ஒரு டிஸ்க் மூலம் ஏற்படுவது தான் இந்த வலி. தோள்பட்டை வலி வந்தால் அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால், ஒரு பக்கம் கை தளர்ந்து விடும் எதையும் அந்த கையால் பிடிக்க முடியாது. தோள் பட்டைவலியை அறுவை சிகிச்சை செய்யாமலும் சரி செய்ய முடியும்.



அறிகுறிகள்: கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்து இருந்தால் மரத்து போய், அது தன்னை மீறி கீழே விழுந்து விடும், கை விரல்கள் செயலிழந்து போகும், வாந்தி, மயக்கம், குனிந்து கீழே பார்க்க முடியாது.

என்ன செய்யலாம்:



கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். வண்டி ஓட்டி முடித்த பிறகு தலை மற்றும் கைகளை கொஞ்சம் ஆஸ்வாசபடுத்திக்கொள்வதும் சிறப்பு. இப்படி செய்தால் தோள் பட்டை வலி வராமல் தவிர்க்கலாம்



முதுகு வலி


இது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் பிரச்னை முதலில் சிறு வலியாக இருக்கும். அதை நாம் கவனிக்க தவறினால் பெரிய பிரச்னை ஆகிவிடும், மேல்முதுகுவலி, கீழ்முதுகு வலி, என்ற இரண்டு வகைகள் மிகவும் கவனிக்கபடவேண்டியவை, அனைவருக்கும் சாதாரணமாக வரும் முதுகு வலி என்றால், உடனே சரி ஆகிவிடும், ஆனால் தொடர்ந்து சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.

அறிகுறிகள் : 



இரவில் தூக்கமின்மை, கால் மரத்து போய் விடும், கால் பெருவிரல் தானாக  அசையும், தன்னால் சிறுநீர் வந்து விடும் அடக்க முடியாது, கீழே  குனியமுடியாது, எப்போதும் கால்கள் மரத்தது போல் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தும், பிசியோ தெரபிஸ்ட் செய்தும் வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யவேண்டியது வரும். 




ஆனால் அறுவை சிகிச்சை செய்தால், ஒருவேளை பக்கவிளைவுகள் ஏற்படலாம், சில சமயம் அறுவை சிகிச்சையில் தவறு நடந்தாலும், (முடக்குவாதம்) இடுப்புக்கு கீழே  உணர்ச்சி இல்லாமல் போய்விடும். கால்களை அசைக்க முடியாது. அதனால் முதுகு வலி தொடர்ந்து இருந்தால் உடனே கவனிப்பது நல்லது....       


  
என்ன செய்யலாம்: 

*  தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்


*  உறங்கும் போது நேராக படுக்க வேண்டும். முதுகு நன்றாக படுக்கையில் படுமாறு நேராக இருக்கவேண்டும். சிறிய ஒரே ஒரு தலையணை மட்டும் வைத்தால் நல்லது (தரையில் உறங்கவும்.)


*  இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகதடை, மற்றும் மேடு பள்ளத்தில் வேகம் குறைவாக செல்லவேண்டும்


*  கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்



*  எடை அதிகம் உள்ள பொருளை தூக்க கூடாது 

 முதுகு வலி குறைய : 



தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.






எல்லா பிரச்சினைகளின் மூலமும் கவனக்குறைவு மட்டுமல்ல அலுப்புப் பட்டுக் கொண்டு மருத்துவரை நாம் பார்க்காமல் காட்டும் அலட்சியம்தான். சிறு சிறு விசயங்களையும் விழிப்புணர்வோடு அணுகி நோயற்ற பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



Friday, July 29, 2011

விளையாட்டை அரசியலாக்கும் கேவலம்...... ஒரு விழிப்புணர்வு பார்வை....!


 அரசியலை விளையாட்டாய் ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளையாட்டை அரசியலாய் மாற்றுவது எம்மாத்திரமாய் ஆகி விடப் போகிறது. 100 கோடிக்கும் மேல் மக்கள் வளம் கொண்ட ஒரு தேசத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் எத்தனை தங்கப் பதக்கங்கள் நம்மால் பெறப்படுகிறது? விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுக்காத அரசும், பணம் ஈட்டும் வழிகளில் மட்டும் கவனத்தை செலுத்தும் ஸ்பான்ஸர்களாலும், மிகைப்பட்ட பேர்கள் பொதுப்புத்தியில் ஊறிப் போன விளையாட்டாய் தலைமுறையாய் பார்த்து ரசிக்கா விட்டால் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று நாகரீகத்துக்காக விளையாட்டினை பார்க்கும், பேசும் எம் இளையர்களும் இருக்கும் வரை எல்லா விதமான விளையாட்டுக்களும் எங்கணம் வளரும்.

கிரிக்கெட் என்னும் அசுரனால நிறைய லாபம் பார்த்த இந்திய வியாபரிகள் அதைக் கட்டிக் கொண்டு அழுவதின் விளைவு மற்ற விளையாட்டுக்களை நசுக்கித்தான் விட்டது என்று கோபப் பார்வை பார்க்கும் இந்தக் கட்டுரை சற்றே உங்கள் புருவங்களை உயர்த்தி விழிப்புணர்வு பார்வை கொள்க என்ற வேண்டு கோளையும் வைக்கிறது.




விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார வகையிலும் பெருமைபடுத்தும் வகையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. எது எடுத்தாலும் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகள் இந்த விளையாட்டு துறையையும் விட்டுவைப்பதில்லை. இது நாம் எல்லோரும் அறிந்ததே.!




கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நம் நாட்டில் இதுவரை வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுத்ததில்லை. விடுமுறை நாட்கள் என்று வந்துவிட்டால் கையில் மட்டையை தூக்கிகொண்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கிரிக்கெட் விளையாட ஓடிவிடுவர். இதனால் பல கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட்டை சார்ந்த அரசியல்வாதிகளும் கிரிக்கெட்டை நமது தேசிய விளையாட்டாக மாற்ற முற்பட்டனர்.




இதுதான் ஒரு அரசியல்வாதியின் பாங்கா.!? இப்படிதான் நடந்துகொள்வதா.!? தூங்கிகொண்டிருப்பவனை உயர்த்துவது சிறப்பா அல்லது உயரத்தில் இருப்பவனை தூக்கி தலையில் வைத்து ஆடுவது என்பது சிறப்பா.!?




கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக மாற்ற வேண்டும் என்று பேச்சு நடந்த போது பிரபல ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை அவர்களை சந்தித்தேன்.‘’ஹாக்கியில் சாதிக்கவில்லை என்று சொல்லும் அரசு எங்களுக்கு சரியான ஊக்கத்தை தர மறந்திருப்பது தெரியாதா!? சாதாரண போட்டிக்காக கிரிக்கெட் வீரர்கள் சவேரா ஹோட்டலில் தங்கும் அதே நேரம் ஜன்னல் ஓரத்தில் சாக்கடைகள் ஓடும் மின் விசிறி கூட அற்ற ஒரு அரசாங்க பள்ளிகூடத்தில் கொசுக்கடியில் ஆசிய கோப்பைக்காக தங்கியிருந்தோம் நாங்கள். இது மனதளவில் ஒரு விளையாட்டு வீரனை பாதிக்காதா.!?’’ என்றார்.




உண்மைதானே.! ஒரு விளையாட்டில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் ஒரு வீரனால் எப்படி சாதிக்க முடியும்.!? அந்த ஈடுபாடை சீர்குலைக்கும்படி நடப்பது ஒரு அரசுக்கு சிறப்பா!?


பரப்பளவில் நம் தமிழகத்தின் அளவு கூட வரமுடியாத எத்தனையோ நாடுகள் ஒலிம்பிக்கில் சாதிக்கும் போது ஒற்றை தங்க பதக்கத்தை வைத்துகொண்டு உளமாற மகிழ்வது போல நடிப்பது தான் நாம் தேடுகின்ற பெருமையா.!?




எத்தனையோ திறமை வாய்ந்த வீரர்கள் ஸ்பான்சர்கள் இல்லாமலும், சிறப்பான வழிகாட்டுதல் இல்லாததாலும் எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து சராசரி மனிதனாக மாறிவிடுகின்றனர்.




எனது பள்ளி பருவத்திலே நான் ஹாக்கி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு என் பள்ளி ஹாக்கி அணியில் சேர்ந்தேன். சோனல், டிஸ்ட்ரிக்ட், டிவிசன் என எல்லாத்திலும் ஜெயித்து முத்திரை பதித்தது எங்கள் அணி. எங்கள் பள்ளியின் கிரிக்கெட் அணி சோனலின் பைனலில் தோற்றது. அவர்கள் படத்தை பெரிதாக போட்டு எங்கள் பள்ளி இதழில் ‘ரன்னர்ஸ் அப் என்று போட்டது மட்டுமல்லாது தினமணியில் படத்தோடு செய்தியும் வந்தது. இந்த இரண்டு அங்கீகாரமும் எங்கள் உழைப்புக்கு இல்லாமல் போனது. எங்கள் அணியில் இருந்த திறமையான வீரர்கள் பலரும் இப்போது மாற்றுத் துறையில் இருக்கின்றனர்.




இதுபோன்று தான் ஒவ்வொரு வீரனும் மழுகடிக்கப்படுகிறான். இரண்டு வருடம் முன்பு படித்த ஒரு செய்தியில் பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க விடாததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என்று இருந்தது. அதற்கு காரணம் என்ன என்று விசாரித்த போது மாணவன் தேர்வில் சரியான மதிப்பெண் பெறாததால் விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டதாக சொன்னர். என்ன இது.!? ஒழுங்காக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அங்கீகாரம் தருவேன் என்று பள்ளிகள் இருப்பது சரியா.!?




பெரிதாக சாதிக்கும் மனிதரை தான் ஏத்துவோம்.! பெரிதாக சாதிக்கப்படும் விளையாட்டில் தான் கவனம் செலுத்துவோம் என்று மக்கள் அடம்பிடிப்பது சரியா.!? அப்படி இருந்தால் நம் ‘கபடி என்ன ஆனது. கபடி உலக கோப்பை தொடங்கிய முதல் இன்று வரை மூன்று முறை நாம் தானே கபடி சாம்பியன்ஸ். 1990ல் இருந்து இன்று வரை நாம் தானே ஆசிய சாம்பியன்ஸ். 1985லிருந்து(1993 தவிர்த்து) இன்று வரை நாம் தானே தெற்கு ஆசிய சாம்பியன். இதுவரை பங்கெடுத்த பெரிய போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு முறை தான் தோற்றிருக்கிறது. மத்தபடி 1985முதல் நாம் தான் கபடியில் முத்திரை பதிக்கிறோம். IPL என்று பணம் பறக்கும் போட்டி நாம் அறிவோம். KPL-அதாவது கபடி ப்ரமியர் லீக் என்று ஒன்று சமீபத்தில் ஜூன் 8 முதல் 16 வரை நடந்ததை யாராவது அறிவீர்களா.!? அசைக்க முடியாத வலிமையான அணி கபடியில் இந்தியா. அதன் வீரர்கள் இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கின்றனர்.




சமீபத்தில் இருங்காட்டுக்கோட்டையில் நடந்த ஒரு ரேஸ் நிகழ்ச்சியில் பிரபல பைக் ரேஸர் ரஜினியை சந்தித்தேன். அவர், ‘‘ நான் ஒரு சாதாரண மெக்கானிக். எனக்கு ரேஸில் கலந்துகொள்ள ஸ்பான்சர் கிடைக்க படாத பாடு பட்டேன். கிரிக்கெட் என்றால் ஓடும் பலர் ரேஸ் என்றால் வரவே மறுக்கின்றனர். அதுவும் தப்பி தவறி வரும் ஸ்பான்சர்களும் கார் பக்கமே போகின்றனர். பைக் ரேஸ் என்பதற்கு ஸ்பான்சர் கிடைப்பதற்குள் இறந்து மறுபிறவி எடுக்கவேண்டும்’’ என்றார். பணத்திற்காக ஸ்பான்சரிங் இல்லாமல் ஊக்குவிக்க ஸ்பான்சர் செய்யும் யாராவது ஒருவர் இங்கு இருக்கின்றனரா.!? இல்லை.




சமீபத்தில் பதிவுலகின் நண்பர் ஒருவர் கூறுகையில், ‘‘ எங்கள் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு அமைப்பு தொடங்க போறோம். அதன் மூலம் ஸ்பான்சர் இல்லாது தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உதவ போகிறோம்’’ என்றார்.




ஆம்..!! நாம் மற்றவர்களை குறை சொல்லும் நேரத்தில் இது போன்ற செய்கைகளில் ஈடுபட்டால் என்ன.!? அவர்களும் திருந்தமாட்டார்கள் நாமும் குறை சொல்வதை விடமாட்டோம் என்று இருந்தால் இனி நாம் குறைகளை மட்டுமே அடுக்கிகொண்டு போகவேண்டியது தான்.

அனைத்தையும் ரசிப்போம்.! அனைவரையும் ஊக்குவிப்போம்.!




கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 

Thursday, July 28, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (28.7.2011)




பஞ்ச் 1:
சமசீரு மேல அப்டி என்னங்கம்மிணி கோவம் ஒங்களுக்கு? கலிஞர் சார் கொண்டு வந்துட்டார்ன்ற கோவத்துல அவர எதுக்குறதா நினைச்சுகிட்டு மொத்த புள்ளைங்க படிப்பையும் க்ளோஸ் பண்ணிப்போட்டு போயிடுவீங்க போல இருக்கே சிஎம்ங்க...! 

உயர் நீதிமன்றத்த மிதிச்சு உச்ச நீதி மன்றத்துக்குப் போனா அவிங்களும் பின்னால எட்டி உதச்சு அடிச்சு வெரட்டி உடனே அமல்படுத்து தாயின்னு ஒரு தீர்ப்ப சொல்லிப் போட்டாங்க..! அல்லாத்துக்கும் பொறவும் சட்ட திருத்த மசோதா அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டே இருக்காம கொஞ்சம் ஈகோவ விட்டுக் கொடுத்துடுங்கம்ணி. புள்ளக் குட்டிய எல்லாம் இன்னமும் ஒரு வெவரமும் தெரியாம முழிச்சுகிட்டு நிக்கிறத  பாத்தா பாவமா தெரியலீங்களா?

ஒரு வெவரம் கேள்விப் பட்டோமுங்க நெசந்தானுங்களா....? நம்மளுக்கு வாதாடுன வக்கீலே நீங்க வெவரமில்லாமத்தான் ஆலோசனை எல்லாம் கேட்டு தெர்ஞ்சுக்காம வழக்கு போட்டீங்க அப்பால திருத்தம் கொண்டு வந்தீங்கன்னு சொன்னாராமே.. ! மனிசன் கொஞ்ச ரோசிச்சுப் பாத்துருப்பாரு போலிங்க அம்மணி....... ஆனா நீங்க மட்டும் ரோசிக்காம ஏனுங்கம்ணி இம்புட்டு புடிவாதம்?



பஞ்ச் 2:

ராம்தாஸ் அப்போ அப்போ சோக்கு அடிச்சிகிட்டு இருக்கிறத தமிழ்நாட்ல இருக்க சனங்க கண்டுக்கோணும் சாமியோவ்! சாரு ஐயா கலிஞரு வந்துடுவாருன்னு ஒரு தெனாவெட்ல கூட்ணி வச்டாங்கண்ண, இப்ப ஆப்ப அசைச்ச கொரங்கு கனக்க என்ன பண்றதுன்னு தெர்யாமா முழிக்கிறாங்க...! அம்மாகிட்ட போனாக்க எட்டி  மூஞ்சி மேல மிதிச்சு வெளில தொரத்தி விட்ரும்னு பயந்துகிட்டு இனிமே வர்ற எலிக்சன்ல எல்லாம் கூட்டணி ஆர் கூடயும் வைக்க மாட்டாறுங்கலாமா?

ராம்தாஸ் மாமா ...ராம்தாஸ் மாமா... சும்மாகாச்சுக்கும் தான மாமா சொன்னிங்க..! அடுத்த தேர்தலுக்கு நல்ல தூரம் இருக்கு இப்ப என்னமாச்சும் சொல்லி வைப்போம்னு தானே சொன்னீங்க மாமா...! ஒன்ற கட்சிய காப்பத்த எப்டியெல்லாம் பேச வேண்டியிருக்குனு நெனச்சு  பாக்கையில் வெட்கமாதனுங்க மாமா இருக்கு..!

2016 பாமக ஆட்சி வந்துருங்களா மாமா

பஞ்ச் 3:
அது என்னங்கனா எவனோ ஒருத்தன் ராசபக்சேக்கு எதிரா கையெழுத்து வாங்குறது, நாங்களும் அரசியல்வாதிகளாக்கும், வருங்கால சிஎம் ஆக்கும் ...பொசுக்கு பொசுக்குனு வந்து கேட்டா எப்டீங்கண்ணா கையெழுத்து போட முடியும்னு நினைச்சிடீங்களானு சொல்லுறாரு இளைய தளபதிங்கண்ணா....

மேடேல ஏறிலாம் வீராப்பா பேசினீங்க.. சினிமாவுல எல்லாம் பாட்டு பாடி செம்ம கலக்சன் பாத்தீங்க...ஏனுங்கண்ணா ஒத்த கையெழுத்துதானுங்களே போட்டு விட்டு மறுக்கா வேற வேலைய பாப்பீங்களா...மாட்டேன் கீட்டேனு சொல்லிக்கிட்டு.. ! சொத்த எழுதி கேட்டாக் கூட கொடுப்பீங்கன்னு உங்க ரசிகப்புள்ளைங்க எல்லாம் நெனைக்கிற அளவுக்கு பில்டப்கொடுத்துட்டு

ச்ச்சீ போங்க்ண்ணா நீங்க இன்னமும் சின்னப்புள்ளையாட்டமா இருக்கீங்க...! ஒரு வெசயங்கண்ணோவ்.....இனி எலங்க பெரச்சனை பத்தி பேசீடாதிங்க...பொறவு ஒருத்தன் ரெண்டு பேரு ஒங்க படம் பாக்க வரதும் கெட்டுப் போயிரும் ஆமா...!


பஞ்ச் 4: 

ஊரு ஒலகமே இலங்கை மேல பொருளாதார தடை விதிக்க ரெடியாயிடுச்சுங்களாமா...ஆனா இந்தியா அப்டீன்ற அமைதிப் பூங்கா சமாதானத்தின் தூதுவரு, ஜனநாயக பெரும்புள்ளி, மதச்சார்பில்லா மாமேதை மட்டும் கம்முனு இருப்பாங்களாமா...? என்ன நாயமுங்க இது

நடு நிலை நாடு, நடு நிலை நாடுன்னு நாட்டாமை நாயத்த பேசுற இந்தியாவ மண்ண தோண்டி பொதச்சுப்புடுச்சுங்க இந்த காங்கிரசு கட்சி!  ஐரோப்பிய நாடு எல்லாம் எலங்கையில் இருந்து வர்ற பொருள்களுக்கு கொடுக்குற வரிய ரத்து பண்ணிடுச்சி, அமெரிக்கா கூட பொருளாதர உதவிகளை நிறுத்த போறதா சொல்லிடுச்சுங்க...

ஆனா நம்ப அண்ணாரு இந்தியா மட்டும் கம்முனு கைய கட்டிகிட்டு கண்ணாடிய போட்டுகிட்டு டர்பன கட்டிக்கிட்டு இட்டாலிக்காரம்மா இடுப்புல உக்காந்துகிட்டு வேடிக்க பாத்துகிட்டு இருக்கறது என்ன நாயமுங்கண்ணா?

8 கோடி தமிழங்க வாழுற ஒரு நாடு ...இப்படி நடந்துகிறதுலயே தெரியலயா நம்மள எல்லாம் புண்ணாக்கு மடையன்னு அவிங்க (அதாங்க இந்தியாக்காரங்க) நினைக்கிறாங்கன்னு?

 பஞ்ச் 5: 

முக்கியமான வெசயமுங்க....கழுகுல அதிரடியான கட்டுரைகளும் வித்தியாசமான் தொடர்களும் தொடர்ந்து வர்றதுக்கு நீங்க அல்லாரும்தானுங்கண்ணா காரணம். கழுகு  வலைப்பூவோட வருகை அதிமாயிருக்குனு ஏதேதோ ரேட்டிங் எல்லாம் சொல்லுதுங்கண்ணா..அதயெல்லாம் மனசுல வச்சிகிட்டு நாம போகலிங்கண்ணா இருந்தாலும் எல்லா வேலைய செய்யிறதுக்கும் நமக்கு உற்சாகம் வேணும்தானுங்களே...

உங்க உற்சாகத்துனால கழுகு இன்னும் வேகமா சீறிப்பாயுதுங்கண்ணா...! மனசு நெறய சந்தோத்தோட உங்க எல்லாருக்கும் நன்றியோ நன்றிங்கண்ணா...! ஏதாச்சும் குத்தம் குறை இருந்துச்சுண்ணா ரோசிக்காம நமக்கு எழுதிப்போட்டுடுங்க மக்கள்ஸ்!!!!


கழுகிற்காக
 தேவா 



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



Wednesday, July 27, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (27.7.2011)



" என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே....." டீக்கடையின் ரேடியோ கடும் சத்தத்தோடு பாடிக் கொண்டிருக்க....யோவ் டீ பட்டறை சத்தத்தை கொறையுமய்யா......அவரு பாட்டுக்கு பாடிட்டு போய்ட்டாரு...நீதி மறைஞ்சு மறைஞ்சு வரது வாடிக்கையா போச்சு...என்று கூறிக் கொண்டே இரண்டு டீ சொல்லிவிட்டு ரிப்போர்ட்டர் ரெங்குவும், கனகுவும் அமர்கிறார்கள்....



ரி.ரெ: என்னயா வெயிலு, கனகு இப்புடி கொளுத்துது ஓய்...! உமக்கு இந்த குளோபல் வார்மிங் பத்தி தெரியுமாய்யா?



கனகு: ஆமாய்யா பூமி சூடேறிகிட்டே போகுதாம்....புவி வெப்பமடைதலுக்கு காரணம் ஓசோன் அடுக்குல விழுந்து இருக்குற ஓட்டை... ஓசோன்ல ஓட்டை விழக் காரணம் நாம் பயன் படுத்துற வேதிப் பொருட்கள்ள இருந்து வெளியாகுற கதிரியக்கம்...இதுக்காகத்தான் மரங்களை நடுங்க...மழை நீரை சேமியுங்கன்னு சொல்லி பெரியவங்க எல்லாம் காக்கையா கரையுறாங்க யாரு கேட்டா? இன்னிக்கு நான் நல்லா இருந்தா போதும் எம்புள்ளை, குட்டியெல்லாம் எக்கேடு கெட்டுப் போனா என்னனு நினைக்கிறானுவோ....!



ரி.ரெ: வாஸ்தவம்தான் ஓய்...!  இன்னிக்கு வாழ்றத மட்டும் பாத்துட்டு இருக்குற சுயநல மக்கள்ஸ் ஜாஸ்தியாயிட்டாங்க...நம்ம காங்கிரஸ் கட்சி மாதிரி...



கனகு: என்னவோய் காங்கிரசுக்கு?



ரி.ரெ: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சார் சொல்லிருக்கார், தமிழ்நாட்ல அவுங்க கட்சி தோத்ததுக்கு காரணம் தி.மு.க தானாம்? கொடுமைய பாத்தியா?



கனகு: அய்யா இதைக் கேட்டு திருந்திரப் போறாராக்கும்....! ஆப்பசைச்ச குரங்கு மாதிரி போச்சய்யா டமிலினத் தலிவரு நெலமை...! ஆனா...அம்மா என்னதான் டப்பாங்குத்து ஆட்டம் ஆடினாலும் பொழைக்கத் தெரிஞ்ச ஆளுய்யா...

ரி.ரெ: எதவச்சுயா சொல்றா...?



கனகு: சரியான நேரத்துக்கு டமிலினத்துக்கு குரல் கொடுக்குறாங்களே அதச் சொன்னேன்...! ஹிலாரி கிளிண்டன் வந்தப்ப இலங்கை அரசு மேல போர்க்குற்றம் சுமத்தணும் பொருளாதாரத் தடை விதிக்கணும்னு கண்டிச்சு சொல்லியிருக்காங்க அதை ஹிலாரியும் க்ளியரா கேட்டுக்கிட்டாங்களாம்....நான் சொல்லலை ஓய்...நம்மூரு பத்திரிக்கைகளும் சொல்லல...அமெரிக்கன் மேகசீன்ல வெளியான ஒரு தகவல் இது...



ரி.ரெ: சரியான நேரத்துல அடிச்ச சிக்ஸர்யா இது.. ! 8 கோடி தமிழர்களை ஆளும் ஒரு அரசு இப்படி வேண்டுகோள் வைக்கிறது வரவேற்கவேண்டிய விசயம்தான்...அதே நேரத்துல தமிழ்நாட்டு மேல இன்னும் அம்மாவுக்கு அக்கறை வேணும்யா....புதிய அரசியல் நகர்வுகள், திட்டங்கள்...இப்படி புதுமையான தமிழகத்தை படைக்க ஆவண செய்யணும்...அரச்ச மாவையே அரைச்சு கிரண்டரும் மிக்ஸியும் கொடுத்தா என்னவோய் புரட்சித் தலைவி...!



கனகு: இப்போதைக்கு ஹீரோ விஜயகாந்த்தான் ஓய்...கட்சி ஆரம்பிச்ச குறுகிய காலத்துலயே எதிர்கட்சில உட்கார்ந்துட்டார்...காலமும் அவருக்கு கை கொடுத்துடுச்சு...! இப்போ கேப்டன் சார் ...சிஎம். போஸ்ட்டுக்கு குறி வெச்சிட்டு ரவுண்டு கட்டிகிட்டு இருக்காராம்...!!



ரி.ரெ: என்ன ரவுண்டுயா...? சரி சரி எந்த ரவுண்டா இருந்தாலும் சரி..பப்ளிக்ல டீசண்டா பிகேவ் பண்ணினா சரிதான்யா! வைகைப் புயல் தான் பாவம் அரசியல் புயல்ல எங்கயோ பிச்சிகிட்டு போய்ட்டாராம்...



கனகு: ஆமா லேட்டஸ்ட்டா எதுலயோ படிச்சேன்....விகடன் விழாவுல கலந்துகிட்டு மாணவர்கள் கிட்ட உரையாடினப்ப எல்லோரும் அரசியல் கேள்வியா கேட்டு தொலைச்சுப்புட்டாங்களாம்...நம்ம ஆளு....அரசியல ஆப் பண்ணிட்டேன் அப்பு...ஏதாச்சும் என் வாயைப் புடுங்கி ஆப்பு அடிச்சிடாதிய அப்புன்னு ஓடிட்டாராம்....



ரி.ரெ: அவர் அரசியல் பேசுனது ஒண்ணும் தப்பு இல்லை ஓய்....! இப்ப அதுக்காக வருத்தப்படுறதுதான் தப்பு...! சுதந்திர நாட்ல யாரு யாரவேணா ஆதரிச்சு பேசலாம்யா...., ஆனா ஒரு அமைச்சரவையில மத்திய அமைச்சரா இருந்து புட்டு, தான் செஞ்ச செயல்களுக்கு தான் காரணம்கிறத ஒத்துக்காம எல்லாமே..பிரதமருக்கு தெரிஞ்சுதான் செஞ்சேன்னு சொல்லியிருகாரே..இவர்....அவர பத்தி என்ன நினைக்கிற...?



கனகு: யாரு ராசாவ சொல்றியாய்யா...! ஏய்யா அந்தாள புடிச்சு பேசிகிட்டு ...எய்தவனெல்லாம் எங்கோ இருக்க அம்பை ஏன் நாம நோகணும்....! ஆனா சன்டிவி கிட்ட அம்மா பண்ற வம்பு மட்டும் செம ரகளையா இருக்குய்யா....



ரி.ரெ: நேத்தோட டைம் முடிஞ்சு போச்சு கலாநிதி மாறன் இன்னும் போலிஸ்ல ஆஜர் ஆகலை....! சக்சேனாவ உள்ள வச்சுட்டு முதல்ல மெதுவா கலாநிதிய கல கலக்க வைக்கிறாங்க பாத்தியா...! எல்லாமே.......அரசியலுங்கோ...



கனகு: டீ குடிச்சு எம்புட்டு நேரமாச்சு.....காச கொடுத்துட்டு ஓடு ஓய்....இன்னிக்கு ஏதோ புது படம் ரிலீசாம் போய் ரசிகர்கள் கிட்ட விமர்சனம் கேட்டு போடு.....எடிட்டர்கிட்டயும் சொல்லு நம்ம கழுகுல போடச் சொல்லி....நான் கிளம்புறேன்...தலைக்கு மேல வேலை கிடக்கு...



ரி.ரெ: ரைட்யா....மீ டூ எஸ்கேப்பு....! ஜினிமா சேதியா கழுகுலயா ...போய்யா போ...வேற வெனையே வேணாம்...என் வேலைக்கி வக்கிற பாத்திய டீசண்டா ஆப்பு.....மீ ஜூட் சாரே.....!

கழுகிற்காக
 தேவா 



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes