மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்கும் ஒரு சுற்றுப் புற சூழலில் தமிழத்தின் மிக முக்கிய பிரச்சினையாக சட்டென்ற மழைக்காளான்கள் போல ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கி இருந்த துணிகர கொள்ளைச் செயல்கள் தமிழக மக்களை திடுக்கிடத்தான் செய்தன. விலைவாசி ஏற்றம், மற்றும் கடுமையான மின்வெட்டு , இன்னபிற பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வாழும் சூழலும் மக்களைத் தொற்றிக் கொள்ள ஒரு அசாதரண நிலைக்கு சட்டென்று தமிழகம் தள்ளப்பட்டது.
இப்படியான ஒரு சூழலில் அரங்கேறியதுதான் வேளச் சேரியில் நடந்த என்கவுண்டர் என்று காவல்துறையால் வர்ணிக்கப்படும் 5 கொலைகள். பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் இருப்பிடத்தை காவல் துறை புலனறிந்து, நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் தங்கிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்து அவர்களைச் சரணடையச் சொல்லியதாகவும், கொள்ளையர்கள் சரணடைய மறுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவல்துறையினர் மீது குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்டதாகவும், தங்களின் தற்காப்பிற்காகவும், சுற்றி இருந்த மக்களின் பாதுகாப்பிற்காகவும்..........கொள்ளையர்களை சுட்டுக் கொன்றோம் என்று காவல்துறை கூறுகிறது.
எந்த ஒரு என்கவுண்டரையும் காவல்துறை நியாயப்படுத்த கூறும் அதே வார்த்தைகள் இந்த கொலைகளுக்கும் பயன்பட்டிருப்பதோடு கூடுதலாய் மக்களை பாதுகாக்கவும் சுட்டோம் என்று அலங்காரமும் செய்யபட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் காவல்துறையினர் மிகப்பெரிய கதாநாயகர்கள் போலவும், அவர்கள் உயிரினைத் துச்சமாக நினைத்து கொள்ளையர்களைக் கொன்றது போலவும் ஒரு போலித்தோற்றம் இருப்பினும்...
என்கவுண்டர் கொலைகள் சுத்த வன்முறை என்பதையும் அது மனித உரிமை மீறல் மற்றும் காவல்துறை தனது கையில் வைத்திருக்கும் துப்பாக்கியின் தோட்டக்களை வெடிக்கச் செய்தது மூலம் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டது என்பதைவிட காவல்துறையின் திட்டமிடும்திறன்., வியூகம் அமைத்து செயல்படும் திறன் எந்த அளவு மழுங்கிப்போயிருக்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கையில் இயந்திரத் துப்பாக்கியோடு கொலை வெறித்தாக்குதலை எதிர்பாரத நேரத்தில் மும்பை ரயில் நிலையத்தில் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் திருப்பிச் சுட்டதும், கொன்றதும் தேவையின் அடிப்படையில் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அப்படியான சூழலில் கூட இயன்றவரை போராடி அஜ்மல் கசாப்பினை உயிரோடு பிடித்து இன்று வரை எந்த சிறையில் வைத்து பாலூட்டி சீராட்டி வருகிறோம். கண்ணெதிரே பலபேரைக் கொன்றதை பல பேர் கண்ட சாட்சிகளாகவும், காணொளிக் காட்சிகளின் சாட்சிகளாகவும் இருந்தும்....
சட்டம் இன்னும் விசாரித்துக் கொண்டிருப்பதும் இதே தேசத்தில்தான் நிகழ்ந்தேறி இருக்கிறது என்பதை அறிக எம் மக்களே...!
கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டினை சுற்றி இருக்கும் மக்கள் ஊடகங்களில் தொடர்ச்சியாக தெரிவிக்கும் எதார்த்தமான விவரணைகள் காவல்துறையின் ஜோடனை விவரணைகளோடு ஒத்துப் போகாமல் இருக்கும் இடத்தில் மெல்ல தலை நீட்டி தன் கோரப்பற்களை காட்டிச் சிரிக்கிறது இந்த திட்ட மிட்ட கொலைகளின் கோரவடிவம்.
சுமார் இரவு பத்தரை மணிக்கே அந்த பகுதிக்கு வந்து விட்டிருந்த காவலர்கள், வெகு சுலபமாக அந்த தெருவில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி அந்த பகுதிக்கே முத்திரை வைத்து மிக பாதுகாப்பாக கொள்ளையர்களை மிரட்டியோ, அல்லது, காத்திருந்து கை கால்களில் சுட்டோ பிடித்திருக்க முடியும். கொள்ளையர்கள் அந்த வீட்டின் சிறிய ஜன்னலின் வழியே சுட்டு காவல்துறையினரைக் காயப்படுத்தி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சொல்வது சிரிப்பைத்தான் வரவேற்கிறது.
ஒரு இரவு முழுதும் சாதாரண உடையில் அந்த வீட்டினைச் சுற்றி காவல்துறையினர் விழித்திருந்து மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு காலையில் அவர்கள் வெளியே வரும் போது கோழியைப் பிடிப்பது போல பிடித்து அமுக்கி இருக்க முடியும். ஏனெனில் கொள்ளையர்களுக்கு காவல்துறையினர் தங்களை நெருங்கி விட்டனர் என்று தெரியாதுதானே....
கொடும் காட்டு விலங்குகளை எல்லாம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் மிருக நேயம் கொண்டவர்களும் வாழும் இந்த பூமியில் மனிதர்களைக் கொன்றுதான் பிடிக்க முடியும் என்பது பல முறைகளில், முயன்று வேறு வழியில்லாமல் எடுத்த கடைசி ஆயுதமாய் இருந்திருக்க வேண்டும், ஆனால் வேளச்சேரியில் காவல்துறை எடுத்த முதல் ஆயுதமே....கடைசி ஆயுதமாய் இருப்பதால் தான் இது மனித உரிமை மீறல் மற்றும் திட்டமிட்டு நியாயம் என்னும் வேடமிட்ட கொலை என்று நாம் கூறுகிறோம்.
தொடர்ச்சியான கொள்ளைகளை தடுத்து நிறுத்த கொள்ளையர்களைச் சுட்டாவது பிடித்து விடுங்கள் அது மற்ற கொள்ளையர்களுக்கு ஒரு பாடமாய் இருக்கவும் வேண்டும் மற்றும் மக்களுக்கும் காவல்துறையினர் மீது மரியாதையும் வருவதோடு, இது போன்ற துணிர கொள்ளைகளை இந்த அரசு எப்படி எதிர்கொள்ளும் என்னும் அச்சுறுத்துலை அரங்கேற்றும் விதமாக இருக்க வேண்டும் என்று சினிமானத்தனமாய் திட்டமிட்ட மூளையின் செயல்பாட்டு விளைவே இந்த என்கவுண்டர் என்னும் கொலைகள்...
இதன் பின்னணியில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பை காவல்துறை தன் கையாலேயே அழித்துவிட்டது...வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் செய்தது போலத்தான் தெரிகிறது. சம்பந்தபட்ட மாநிலமும் எந்த அக்கறையும் கொண்டதாக தெரியவில்லை. உள் நாட்டிலேயே இப்படி என்றால் வெளிநாட்டில் அந்நாட்டு போலீஸ் நம்மவர்களைக் கொன்றால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது? நல்லவேளை அப்படி நடப்பதில்லை...
சட்டத்தை யாதொரு தனி மனிதனும் கையில் எடுக்ககூடாது என்பதற்காகவே இந்திய தேசத்தின் சட்ட வடிவமைப்புக்களில் விசாரணைகள், சாட்சிகள் என்ற் இழுத்தடித்து கால அவகாசங்கள் கொடுத்து நீதியை வழங்கும் ஒரு இயல்பான அமைப்பு கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வேளச்சேரி என்கவுண்டர் மக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைத்தான் கொடுத்திருக்கிறது என்பதை அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.
சட்டத்தை யாதொரு தனி மனிதனும் கையில் எடுக்ககூடாது என்பதற்காகவே இந்திய தேசத்தின் சட்ட வடிவமைப்புக்களில் விசாரணைகள், சாட்சிகள் என்ற் இழுத்தடித்து கால அவகாசங்கள் கொடுத்து நீதியை வழங்கும் ஒரு இயல்பான அமைப்பு கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வேளச்சேரி என்கவுண்டர் மக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைத்தான் கொடுத்திருக்கிறது என்பதை அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.
காவல்துறையினர் நினைத்தால் என்கவுண்டர் என்னும் அடையாளத்தோடு யாரை வேண்டுமானலும் சுட்டு விட்டு அந்த சூழலை விவரிக்க எப்படியான கதைகளை வேண்டுமானலும் கட்டலாம் என்ற அசாதரணப் போக்கிற்கு இது போன்ற் சம்பவங்கள் ஒரு முன்னுதரணமாய் அமைந்து விடக் கூடாது.
அரசியல் விளையாட்டுக்களை நிறைவேற்றிக் கொள்ள ஓராயிரம் வழிமுறைகள் இருக்கும் போது இது போன்ற மனித உயிர்களோடு விளையாடும் அதிகார துஷ்பிரயோக ஸ்டண்ட்களை ஒருகாலமும் மக்கள் ஏற்கப்போவது கிடையாது.
பரமக்குடியில் நடந்த அரச வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இன்னும் பதில் தெரியாமல் கையைக் கட்டிக் கொண்டு பயந்து கிடக்கும் மக்களுக்கு இந்த வேளச்சேரி என்கவுண்டர் இன்னும் பயத்தை அதிகரித்திருக்கிறது. ஆட்சிப் பொறுபேற்று இன்னும் இரண்டு வருடங்களைக் கடந்திராத அதிமுக அரசின் நிர்வாகச் சறுக்கல்களில்
பரமக்குடி துப்பாக்கிச் சூடும்....
வேளச்சேரி என்கவுண்டர் கொலைகளும்
வேளச்சேரி என்கவுண்டர் கொலைகளும்
சர்வ நிச்சயமாய் நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவிர்க்க முடியதா சூழலில்தான் காவல்துறையால் அவை நடத்தப்பட்டது என்ற நேர்மையான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது.
காவல்துறையினர் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் உயிர் இருக்கிறதுதானே அவர்களும் மனிதர்கள்தானே என்பன போன்ற வாதங்கள் மேலோட்டமாய் வாதிட அழகானவை, ஆனால் கொள்ளையர்களும், வன்முறையாளர்களும், மக்களை காக்க உறுதி பூண்டவர்கள் அல்ல...! காவல்துறையினர் இயன்றவரை மக்களை காத்து, குற்றவாளிகளைக் சட்டத்தின் முன் பிடித்து நிறுத்தி சட்டத்தின் மூலம் தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டிய ஒரு நெறிமுறையைக் கொண்டவரக்ள்.
நேர்மையாய் இந்த வழக்கினை விசாரித்து, இந்த ஐந்து கொள்ளையர்களையும் சுட்டுக் கொன்றுதான் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை தெளிவாக மக்களுக்கு அரசு விளக்க வேண்டும்.
இல்லையெனில்.....
காவல்துறையினரை வைத்துக் கொண்டு அதிகாரவர்க்கம் எப்போது வேண்டுமானலும் யாரை வேண்டுமானலும் கொன்று விட்டு அதற்கு என்கவுண்டர் சாயமடித்து நியாயப்படுத்தும் ஒரு புதுவழிமுறைக்கு இந்த சம்பவம் நமது சமூகத்தை கூட்டிச் சென்று விடும் என்ற நடுக்கமான உண்மையை அறிவிப்பதோடு இந்தக்கட்டுரை தற்காலிகமாக் வாய்மூடிக் கொள்கிறது.
கழுகு
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)