Wednesday, August 31, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (31.8.2011)







வெகு நேரமாய் ரெங்குவின் வருகைக்காக காத்திருந்து, காத்திருந்து,டீ கடைக்கு தனியே சென்றார் கனகு. 
டீக்கடைவாசலில் நின்று கொண்டு செல்பேசியை எடுத்து நம்பரை தட்டினார்.. கனகு..
 
அவள் வருவாளா, அவள் வருவாளா.. ரிங் டோன் ஒலிக்க..

 
கனகு : ஹலோ ரெங்கு.. என்னய்யா கழுகுக்காக விழுந்து விழுந்து வேலை செய்றீயா..?? இன்னும் ஆளயே காணோம் 

 
ரெங்கு : யோவ் இதோ தெரு முனைக்கு வந்துட்டேன் அங்கேயே இரு...


 
வண்டியை விட்டு முனங்கிக் கொண்டே வர ...




கனகு : அட என்ன ரெங்கு முனங்கிட்டே வரே என்ன ஆச்சு..?
 
ரெங்கு : ஒரே ட்ராபிக்.. நம்ம மக்கள் செய்ற போராட்டத்தால் தான் 

கனகு : ஆமாப்பா பேரறிவாளன் நியூஸ் ஏதாவது கரண்ட் நியூஸ் சொல்லுப்பா...


 
ரெங்கு : இந்த விஷயத்தில் வாயே திறக்காத அம்மா இப்போ தான் வாய்திறந்து இருக்காங்க, மேதகு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், என்னால் ஒன்றும் செய்ய முடியாது சொன்ன அம்மா மறுநாளே தண்டனையை குறைக்கனும் சொல்லி தீர்மானம் போட்டுட்டாங்க..  மக்களுடைய போராட்டத்தை பார்த்து பயந்துட்டாங்க போல் 

 

கனகு :  இந்தம்மா பயப்படுவாங்க போய்யா போய்யா இந்தம்மா யாரையும் பயமுறுத்தாம இருந்தா சரி தான், ஏன் இந்தம்மா முதல் நாளே இந்த தீர்மானத்தை போட்டா என்ன..?? எல்லாம் கலைஞ்ர் அய்யா என்ன சொல்றார் பார்த்துட்டு அப்பறம் முடிவெடுக்கலாம் நினைச்சு இருப்பாங்க...
 
 ரெங்கு : அத விட இன்னொரு காரணமும் இருக்கு வோய்.. கோர்ட்டுல இப்படி ஒரு தீர்ப்பு வர போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சு இருக்கும்.. அதான் கோர்ட் சொல்லிட்டா ..அப்பறம் கோர்ட் நல்ல பேர் வாங்கிடும் அதான் அம்மா முந்திடாங்க...!! 


 

கனகு : அட அதான் அடுத்தடுத்து தீர்மானம், தீர்ப்பு வந்துதா, அம்மா நல்லா தெளிவாகிடாங்கடோய்... நான் கூட மக்கள் போராட்டம் பார்த்து நல்லது செய்றாங்ளோ நினைச்சேன்.. அம்மா இன்னும் ஒரு படி மேல போய் தண்டனையை ரத்து செய்யவில்லையென்றால் பதவியை ராஜினாம செய்றேன் சொன்னா.. தமிழ் மக்களுக்கு அம்மா தான் விடிவெள்ளி.. 
 
ரெங்கு : அட போய்யா விடி வெள்ளி கடி வெள்ளி சொல்லிட்டு ஒரு கொடுமையான நியூஸ் கேளு .இதையெல்லாம் சொல்லவே கஷ்டமா இருக்கு... 


 
கனகு : என்ன ரெங்கு சொல்ற 
 

ரெங்கு : என்ன ஆச்சு ஆமாய்யா மூன்று பேரை தூக்கில் போடக் கூடாதுன்னு.. சொல்லி ஒரு பொண்ணு தீ குளிச்சிருச்சு தோழர் முத்துகுமாரன் உடல் தமிழகத்தை எழுப்பியதை போல் தன் உடல் இந்த தமிழகத்திற்கு பயன் படட்டும்னு சொல்லி லட்டர் எழுதி வைச்சு இருக்கு..



கனகு : என்ன கொடுமையா இது.. இப்படி பட்ட தற்கொலைய யாரும் அனுமதிக்க கூடாது.. தற்கொலை பிரச்சனைக்கு தீர்வாகாதுனு எப்போ தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ..!!!  இன்னும் அந்த பொண்ணு சடலத்தை அடக்கம் செய்யாமல் அரசியல் செயராங்கய்யா,, இது அந்த தற்கொலைய விட கொடுமை, இந்த பேரறிவாளன் விஷயத்தில் என்ன நடக்குதோ இல்லையோ.. நல்லா அரசியல் நடக்குது.. 


ரெங்கு : நாடே பதற்றத்தோடு இருக்கும் போது ஒரு ஆள் மட்டும் காமெடி பண்ணிட்டு திரியுறார்..
 
கனகு : அட யாருய்யா அந்த காமெடியன்..??  
 
ரெங்கு : விஜய்..
 
கனகு : என்ன விஜய்யா.. என்னய்யா அவர் டெல்லி போனதை சொல்றியா...


ரெங்கு : யோவ் என்ன சொல்ல விடுய்யா இது வேற மேட்டரு...

 
கனகு : சரி சரி சொல்லு நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்..

ரெங்கு : விஜய் அவங்க அப்பா தானய்யா காமெடி பண்ணிட்டு திரியுறார்

கனகு : என்னய்யா சொல்றார் அவரு... 

ரெங்கு : அவர் ரயில் இன்ஜின்னாம், ரசிகர்கள், ரயில் பெட்டியாம், விசய் ...சிக்கனல் காட்டுறவராம் 

கனகு : நிறுத்து நிறுத்து ஆமா யார் கரி அள்ளி போடுவா அதையும் விசயே செய்வாரா 

 
ரெங்கு : யோவ் வாய்ய மூடுய்யா..அவர் சிக்னல் காட்டிணா  போயிடுவாராம் ... ஆனா எங்க போவார் தான் டவுட் 

 
கனகு : இதுல என்ன டவுட் காசி ராமேஸ்வரம் போவார். இது என்னய்யா ரயில் கதை அவர் படத்தை விட மோசமா இருக்கு..

ரெங்கு : யோவ் பேசிட்டு இருக்க டீய சொல்லு...  

 
கனகு : அண்ணாச்சி ஒரு டீ.. சரி சரி நீ நியூஸ் சொல்லு 
 
ரெங்கு :  சீமான் பேச்சு ரொம்ப ஓவராதான்ய்யா இருக்கு அந்த ஆளு பேசுறதே சரி இல்லை மக்களை தூண்டி விடுற மாதரி பேசுறார்,  சிதம்பரத்தை ஆந்திராவில் கால் வைச்சு பார் சொல்றார், தண்டனையை குறைக்காம இருந்தா ராஜீவ் கொலையில் கமா போட்டு விடுவோம் சொல்றாய்யா..
 
 கனகு : என்னய்யா இப்படியெல்லாம் பேசிருக்கார்... என்னமோ சீமான்க்கு நேரம் சரி இல்லை போல,
 
ரெங்கு : இந்த மாதரி கலைஞர் ஆட்சியில் சீமான் பேசியிருந்தா.. அம்மா ஆட்சியை கலைக்கனும் சொல்வாங்க .. இப்போ வேடிக்கைப் பார்க்குறாங்க...
 
 கனகு : என்னய்யா உனக்கு அம்மா பத்தி தெரியலை அம்மா இப்போ சும்மா தான் இருப்பாங்க அப்பறம் இந்த ஆள ஓட ஓட விரட்டுவாங்க...  இன்னும் ஒரு வருஷம் பொறுத்திருந்து பாரு...


 
ரெங்கு : மாநாடு நடத்திய ராமதாஸ்.. 8 லட்சம் பேரோட வேலூர் சிறைய முற்றுகையிட போறாராம்...
 
கனகு : என்ன ராமதாஸ் மாநாடு நடத்தினாரா..?? அவர் கட்சி மாநாடா..??


 
ரெங்கு : இது தூக்கு தண்டனைய முற்றிலுமா ரத்து செய்யணும்னு சொல்லி மாநாடு..
 

 கனகு : என்ன தூக்கு தண்டனைய முற்றிலும  தடுக்கனுமா..?? அப்போ தீவிரவாத செயல்ல ஈடுபடுபவர்களையும் கொழந்த பசங்களை ரேப் பண்றவங்களையும் என்ன செய்றதாம்... தூக்கு தண்டனையை ரத்து செய்ய கூடாதுனு அதில் சில வழிமுறைகளைக் கொண்டு வரணும்.... எல்லோருக்கும் தூக்கு கிடையாதுன்னு அரசாங்ககம் சொல்லும்மா.. பார்ப்போம்..

 
ரெங்கு : நீ சொல்றது யோசிக்க வேண்டியவிஷயம் தான் கனகு. இந்த காலத்திற்கேற்ப தண்டனை கொடுக்கணும் இந்த விஷயத்தில் அரசு கொஞ்சம் மாற்றம் கொண்டு வரணும், அரசாங்கம் என்ன தான் செய்துன்னு பொறுத்திருந்து பார்க்கணும்... 




நான் இப்போ டீ ய பாக்குறேன்  



 அந்த டீ ய கொடுங்க..




கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Tuesday, August 30, 2011

நிரந்தரமாய் நிறுத்தப்படுமா தூக்கு தண்டனைகள்?




குற்றமும் அதன் பின்னணியும் சரியாய் ஆராயப்படாமல் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கிலே மரண தண்டனை தீர்ப்பினை மூன்று பேருக்கு உச்ச நீதி மன்றம் கொடுத்திருக்கிறது. ஜெயின் கமிசன் போன்றவற்றின் அறிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் மூவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு 28.04.2000 ஆம் ஆண்டு அதாவது 11 வருடங்களுக்கு முன்பே கருணை வேண்டி கடிதம் அனுப்பினர்.

விசாரணைகள் முடிந்த ஒரு வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு ஒரு வழக்கில், கருணை வேண்டி மனு செய்த பின்பு அந்த கருணை மனுக்களை பாரத ஜனாதிபதி எடுத்து படித்து ஆராய்ந்து விசாரித்து தனது கருத்தினை கூற 11 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது தோழமைகளே..? 

திரு. ராஜிவ் காந்தி அவர்கள் தனது தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக மே 21 ஆம் தேதி 1991ல் ஸ்ரீபெரும்புதூர் வருகிறார். இரவு பத்து மணிக்கு பேச வேண்டிய மேடையிருக்கும் திடலுக்கு அருகே இருக்கும் தனது அன்னையின் சிலைக்கு சுமார் இரவு பத்துமணி அளவில் மாலையிட்டு விட்டு மேடையை நோக்கி வரும்போது இரவு 10:10க்கு மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்படுகிறார்.

ஜவஹர்லால் நேருவின் பேரர், அன்னை இந்திராவின் புதல்வர், முன்னாள் பாரதப் பிரதமர், அகில இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் இவ்வாறு கொல்லப்படும் போது ஒரு மாநில அல்லது தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கூட உடனில்லை என்பது நம்முள் எழும் சாதாரண கேள்வி தானே? 


இன்று ராஜிவ் கொல்லப்பட்டார் என்று தூக்கு தண்டனையை நிறைவேற்றச் சொல்லும் திரு. தங்கபாலு எங்கே போயிருந்தார், மூப்பனார் எங்கே போனார், வாழப்பாடியார் கூடவே வந்து சட சடவென்று மேடையில் ஏறி நின்று கொண்டதன் பின்னணியில் இருந்த ரகசியம் என்ன?


ஜெயந்தி நடராஜனும், தமிழர்களின் குல விளக்கு இப்போதை பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு சிதம்பரம் ஐயா எங்கே போனார்?


ஒரு வட்டச் செயலாளர் வந்தாலே அவரைச் சுற்றி அவரின் அபிமானிகள் நெருக்கமாக வரும் போது, திரு ராஜிவ் காந்தியைச் சுற்றி ஏன் ஒரு காங்கிரஸ் தலைவர்கள் கூட இல்லை....? பாமர மக்களாகிய நமக்குள் எழும் இந்தக் கேள்விகளை எல்லாம் ஒரு நாட்டின் சிபிஐயும் நீதிமன்றங்களும் ஏன் கேட்கவில்லை...?


கொஞ்சமேனும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கின் நேரடிக் குற்றவாளிகளாகிய வெடிகுண்டை இயக்கிய தானு என்னும் பெண், சிவராசன் மற்றும் சுபா இவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்டார்கள். இந்தக் கொலையை இயக்கியதாக கூறும் விடுதலைப்புலிகளின் இயக்கமும் அதன் தலைமையும் இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கையால் வேறு விதமாக பழி வாங்கப்பட்டார்கள்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூவரும் கொலைக்கு உடந்தையாய் இருந்தனர் என்று கூறும் சிபிஐ. அந்தக் கொலை நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்த சாட்சியத்தையும் கூறவில்லை. அதிலும் பேரறிவாளனின் மீது சுமத்தப்பட்ட குற்றம் வெடி குண்டினை இயக்குவதற்கு 9 வால்ட் மின்கலம் வாங்கிக் கொடுத்தார் என்பது.....

வெடிகுண்டின் பெல்ட்டையே  யார் செய்தது? எங்கு செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் சிபிஐ,  அந்த வெடிகுண்டை இயக்கத்தான் பேரறிவாளன் 9 வால்ட் மின்கலம் வாங்கிக் கொடுத்தார் என்று கூறுவது முரண்பட்ட செய்தியாகத்தானே இருக்கிறது.

மேலே சொன்ன விடயங்களை எல்லாம் கூட கழித்து விடுங்கள்...அவையெல்லாம் ஒரு தகவலுக்காக கூறப்பட்டது....


 20 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு வேதனையை அனுபவித்த மூன்று உயிர்களும் 20 ஆண்டுகள் இருந்தன என்பதை விட, எந்த நாளில் என்று தனது உயிர் போகுமோ என்ற அச்சத்திலேயே வைத்திருந்தது தூக்கினை விட கடும் கொடிய தண்டனை தானே?


வழக்கு, வழக்கின் நுட்பங்கள் இவையெல்லாம் விடுத்து ஒரு மனிதநேயப் பார்வை கொண்டு உற்று நோக்கினால் எந்த ஒரு நாகரீகமான சமுதாயத்திற்கும் தூக்குத் தண்டனை என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாய்த்தான் தெரியும். நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில் நாமெல்லாம் எவ்வளவோ வளர்ந்து விட்டோம்...


இன்னமும்,.....

மனிதர்களை தூக்கிலிட்டு தமது வக்கிரத்தினை தீர்த்துக் கொள்ளும் மிருக மனோநிலைதான் நம்மிடம் எஞ்சியிருக்கிறது என்றால் நாமெல்லாம் மனிதர்கள் என்று மார்தட்டிக் கொள்வது அவமானம். இன்னும் சொல்லப் போனால்...


மரணம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி தண்டனையாகும்? மரணம் என்பது வாழ்வின் முடிவு. தண்டனை என்பது குற்றவாளி தன்னை உணர்ந்து திருந்தி மீண்டும் வாழ கொடுக்கும் ஒரு வாய்ப்பு.


காவல்துறைகளும் சட்டமும் தண்டிப்பதை மட்டுமே செய்யுமெனில் அந்த சமுதாயம் எப்படி உருப்படும்?  மாறாக விழிப்புணர்வினைக் கொடுத்து அது குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க வேண்டும்.


செப்டம்பர் 9 தூக்கு என்ற வார்த்தைகளை தத்தம் காதுகளில் கேட்ட போது  அவர்களின் உயிர் அடைந்திருக்கும்  வலி என்னவென்று உணரக்கூட முடியாத சூழலில் ஒரு சமுதாயம் இருக்குமெனில் அது சபிக்கப்பட்ட சமுதாயம். ஒரு செயல் செய்யும் போது அது யாருக்கேனும் பாடமாய் அல்லது தீர்வாய் இருக்குமெனில் அது ஒரு நியாயமான முடிவாக இருக்கும்,  ஆனால் மூன்று பேரையும் தூக்கிலிடுவதால் சில பிடிவாதக்கார மிருகங்களின் ஈகோவினை திருப்திப் படுத்த முடியுமே அன்றி.....


அது நமது சமுதாயத்தின் தலையில் விழும் பெரும் சாபக்கேடு.

ராஜிவ் பேர் கூறி, விடுதலைப் புலிகளின் நகர்வுகளை தமிழகத்தில் தடை செய்தோம், பல நூறு பேர்களின் வாழ்க்கையை தடா, பொடா என்று இறையாண்மைக் கத்திகளை வைத்து கிழித்தெறிந்தோம்.


அரக்கன் ராஜபக்ஷேக்கு அதிகாரப்பூர்வ உதவிகளைச் செய்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை அகதிகளாய் பல்வேறு தேசங்களுக்குள் உலாவ விட்டோம். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் முதியவர்கள் என்று பொதுமக்களை எல்லாம் கொன்று இரத்தம் குடித்து ருசி பார்க்க அனுமதித்தோம்


கடும் சித்ரவதைகளையும் கற்பழிப்புக்களையும் அகோரக் கொலைகளையும் அரக்கன் ராஜபக்ஸே நிகழ்த்த உதவி செய்தோம்..., ஒரு இயக்கத்தினை வேரறுத்தோம்....முள் கம்பிகளுக்குள் முடங்கிப் போய் வாழ்விழந்த பல்லாயிரக்கணக்கானவர்களைப் பார்த்துக் கொண்டே பழி வாங்கி திருப்திக் கொண்டோம்....


போதாதா என் இந்திய தேசமே....! இன்னமும் உனது பசி தீராமல் போனதா என்ன? இந்த மூன்று உயிர்களையும் நீ குடித்து விட்டால் என்ன திருப்தி அடையப்போகிறாய்? 


மூன்று பேரையும் இந்த தேசம் தூக்கிலிடுகிறது என்றால் அது ஏழரை கோடித் தமிழர்களையும், மனித நேயத்தையும், சத்தியத்தையும், சேர்த்தேதான் தூக்கிலிடப்போகிறது என்று அறிக மக்களே...!


இந்த நிகழ்வு நிகழ்ந்தேறினால்....தமிழகம் தனித்து விழுந்து தேசத்திலிருந்து பிரிந்து விழும். இளைஞர்கள் எல்லாம்... வெறுப்பில் புரட்சித் தீயை தமது கைகளில் ஏந்த தயங்கமாட்டார்கள்....


இனி....

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நமது இந்த சோக நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டே பிறக்கும். வஞ்சம் தீயாய் எரியும்......அறிக எம் இந்தியாவே...!


இறுதியாய்.......

கடுமையான மக்கள் போரட்டங்களின் வலிமை கோட்டை கொத்தளங்களையும் அசைத்துப் பார்த்திருப்பதை உணர முடிகிறது. தொடர்ச்சியான மக்கள் எழுச்சியும் வலுவான தொடர் வலியுறுத்தல்களையும் தொடர்ந்து,


தமிழக சட்டசபையில் தூக்கினை நிறுத்தி அதனை ஆயுள் தண்டனையாய் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்றியிருப்பதை அறிய முடிகிறது. 



மேலும் உயர் நீதிமன்றமும் தூக்கில் போடுவதற்கு இடைக்கால தடையை எட்டு வார காலங்களுக்கு அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது என்றாலும் ராஜிவ் கொலை வழக்கினை நேர்மையான பார்வைகளோடு, தெளிவாக  மேற்கொண்டு நடத்தினால் பெரிய ,பெரிய இந்திய அரசியல் தலைகளும், பல வி.வி.ஐ.பிக்களும்,  இதில் சிக்குவார்கள் என்பது சத்தியமான உண்மை....! 

இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து கருத்துக்கள் கூறியும் போராட்டங்கள் நடத்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்த அத்தனை அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை கூறும் இந்தக் கட்டுரை 

நேர்மையான முறையில் வழக்கினை உயர் நீதி மன்றம் அணுகி எட்டு வார காலங்களுக்குப் பிறகு இந்திய தேசத்திலேயே வழங்கப்பட்ட ஒரு ஒப்பற்ற தீர்ப்பாய் தண்டனைகளை ஆயுள் தண்டனையாய் மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினையும் எம்மளவில் வைக்கிறது


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 




உயிர்களைக் காத்தருளுவோம்...! மனித நேயத்தை காப்பாற்றுவோம்..!



Monday, August 29, 2011

உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்....! விவசாயம் பற்றிய ஒரு பார்வை!


தாய் மண், தாய் மண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பல்வேறு விடயங்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். மேம்போக்காய் இந்த பதத்தை நாம் பயன் படுத்த புறக்காரணங்களாக ஓராயிரம் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் நிகழ்கின்றன. நிஜத்தில் விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நாம் என்பதையே காலத்தின் போக்கில் மறந்து விட்டோம்.


மண்ணோடு மண்ணாக கிடந்து உழவு செய்து, தானியங்களை விளைவிக்கும் ஒரு மிகப்பெரிய விவசாய நாட்டின் மைந்தர்கள் நாம் இன்று விவாசயம் என்றாலே ஏதோ கிராமத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் ஒரு பிற்போக்கு நிகழ்வாக கருதி நமது புத்திகளை பல்வேறு பட்ட நவீன விடயங்களோடு பொருத்திக் கொண்டு நவநாகரீக மனிதனாக நம்மைக் காட்டிக் கொள்ள பொய்யாய் முனைந்து கொண்டிருக்கிறோம்.

நாகரீகம் என்பது மேலை நாட்டவரின் கண்டுபிடிப்புக்களை உபயோகம் செய்வதோ, நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரையாடுவதோ, புது புது ஆடை அலங்காரங்கள் செய்து கொண்டு சிலிர்த்துக் கொண்டு திரிவதோ, சனிக்கிழமை இரவுகளில் டேட்டிங், டிஸ்கொத்தே சொல்வதோ அல்ல.

நாகரீகம் மற்றும் கலாச்சாரம் என்பது உடையில், நடையில் பாவனையில் நம்ம மேலை நாட்டவர் போல காட்டிக் கொள்வது என்ற பொது புத்தி தவறாக அதுவும் கடந்த இருபது வருடங்களில் மிகுதியாக ஒவ்வொரு மூளைகளிலும் பதியம் போடப்பட்டிருக்கிறது.

அறிவியலையும் வளர்ச்சியினையும் நமது கையில் எடுத்துக் கொண்டு நாம் நின்று கொண்டிருக்கும் தேசத்தின் பாரம்பரியமான தொழில் வளத்தையும், கட்டுக் கோப்பான வாழ்க்கை முறையையும் சீரான முறையில் பின்பற்றி உலக சமுதாயத்திற்கு முன்னால் அவற்றை எடுத்துக்காட்டி வாழ்வதுதான் நாகரீகம். 

தமிழர்களாகிய நமக்கு நாகரீகமாக காலமெல்லாம் அடையாளம் காட்டப்படும் இரண்டு விடயங்கள்,  இப்போது நவீனத்தின் வருகை என்ற பெயரில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருப்பதை உணரக்கூட நமக்கு நேரமில்லாமல் நம்மை ஏதேதோ விடயங்கள் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.

1)விவசாயம்

2)விருந்தோம்பல்
சுபிட்சமான தன்னிறைவான சமுதாயத்தின் மக்கள்தான் வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பலை எடுத்தோம்ப முடியும். என்ன தான் வணிகம், வெவ்வேறு தொழில்கள் என்று நாம் விரிந்து பரந்து நமது இறக்கைகளை விரித்தாலும், எல்லா வித வசதிகளையும் பெற்று விட்டாலும் மூன்று வேளை உணவு என்னும் விடயத்தை விட முடியாதுதானே?

இப்படி நவீன மயமாக்கள், தொழிற்சாலைகளின் வரவுகள், ரியல் எஸ்டேட் என்னும் பொன் முட்டையை எடுக்கும் முயற்சியில் நிலங்களைக் கூறு போடுதல்,  என்று நாம் விவசாயம் என்ற ஒன்றினை விட்டுத் தடம் புரண்டு இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர் காலத்தில் நமது உணவு தானியங்களையும், காய்கறிகளையும் சீனாவில் இருந்து இறக்கு மதி செய்து தான் சாப்பிட வேண்டும்..!

கணிணியின் முன் அமர்ந்து கொண்டு மேலை நாட்டு காபி பொடி கலந்த சூடான் ஒரு காபியோடு சீனாவின் அரிசியையும் காய்கறியையும் அதிக விலை கொடுத்து வாங்கி நாம் உண்ணப் போகும் சூழல் சர்வ நிச்சயமாய் அமைந்து விடும்  இப்போதே நமது தேசத்து இளைஞர்களுக்கு விவாசய சாகுபடி பற்றிய விழிப்புணர்வு கொடுக்காவிட்டால்.

1) ஏற்கெனவே அரசியல் சூதுவாதுகளால் மறுக்கப்படும் காவிரி நீரால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் விவசாயத்தை மெல்ல மெல்ல கைவிட்டு விட்டு வெவ்வேறு தொழில்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

2) தமிழகத்தின் தென் கோடி மாவட்டங்களான மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் கிடையாது.  மழைக்காலத்தில் பெய்யும் பெரும் நீரைத் தேக்கி கண்மாய்களில் வைத்தும், வானம் காட்டும் கருணையையும் நம்பி இவர்களின் விவசாயம் இருக்கிறது. அதுவும் மிகைப்பட்ட கண்மாய்கள் எல்லாம் வெகுகாலமாக தூர் வாறாமலும், மண் அரிப்பு ஏற்பட்டிருப்பதாலும் மெல்ல மெல்ல செத்து அழிந்து கொண்டிருக்கிறது. அலுத்துப் போன விவசாயிகளும் எத்தனைக் காலம்தான் இந்த மண்ணோடு போராடிக் கொண்டிருப்பது என்று சாட்டிலைட் தொலைக்காட்சி காட்டும் ஒரு மாயா வாழ்க்கையை நாம் ஏன் வாழக் கூடாது என்று தங்களது பிள்ளைகளை வயல்வெளிப் பக்கமே வரவிடாமல் கல்லூரி வரை படிக்க வைத்து பட்டணத்துக்கு துரத்தி விடுகிறார்கள்

3) வட மாவட்டங்களில் மிகைப்பட்ட தொழிற்சாலைகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதோடு, கொடி கட்டிப் பறக்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் செதுக்கி ஒழிக்கப்படுகின்றன விளை நிலங்கள்.

இதற்கெல்லாம் காரணம் விவசாயத்தைப் பற்றி மிகப்பெரிய புரட்சியையும் விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் பதிய ஊடகங்களும், அரசும், ஏன் மக்களுக்குமே இதில் அக்கறை இல்லை. உழுது, விதைத்து, தண்ணீர் இறைத்து சேற்றிலும் சகதியிலும் முட்களிலும் நடந்து, வெயிலையும் மழையையும் இயற்கையின் எல்லா மாற்றங்களையும் கண்டு சந்தோசித்து பயந்து ஒரு விவசாயி ஏதோ ஒரு தானியத்தை விளைவித்து அதை சந்தைக்கு கொண்டு வருகையில் அதற்கான விலை நிர்ணயத்தை அவனால் செய்ய முடிவதில்லை.

”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற கூற்றினை எல்லாம் ஏட்டோடு வைத்து விட்டு ஒரு உழவனை இந்த சமுதாயம் இப்போதெல்லாம் கொண்டாடுவதில்லை. விவசாயி என்றாலே....ஒரு வித பார்வை இறக்கங்கள் கொடுத்துப் பார்க்கும் அவலநிலை நமது தேசத்திற்கு கொடுக்கப்பட்ட சாபமாகவே இந்தக்கட்டுரை பார்க்கிறது.

திருடன், அயோக்கியன், பணபலம் கொண்ட அடாவடி மனிதர்களை எல்லாம் அண்ணே என்று கைகூப்பும் என் சமுதாயம் ஒரு விவாசாயியை எப்போதும் இப்படி சிறப்பித்தது இல்லை. மதிப்பும் மரியாதையும் மனித மனத்தின் தேடல் அது எங்கே கிடைக்கிறதோ அதை நோக்கியும் எதனால் கிடைக்கிறதோ அதை செய்தும் காலமெல்லாம் மனிதன் நகர்ந்து கொண்டிருக்கிறான்.

ஒரு அந்தஸ்தினையும், சமுதாய சமநிலையையும் கொடுக்காத விவசாயத்தினை விட்டு மிகைப்பட்ட பேர்கள் நகர்ந்து செல்ல இது ஒரு காரணம். இன்று நகரத்தில் இருப்பவகள் அனைவருமே ஊரிலே தமது வீட்டையும் விளை நிலத்தையும் அனாதையாக விட்டு வந்தவர்களே....

விவாசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு இது பற்றிய விழிப்புணர்வினை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், நலிந்து போயிருக்கும் இதனை மீட்டெடுக்க நாமும் நமது பிள்ளைகளை ஊக்குவித்து விவசாய புரட்சியினை நமது தேசத்தில் நிகழ்த்திக் காட்ட வேண்டும்.

விவாசயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களும் விலை நிர்ணயங்களும் சலுகைகளும் அதிரடியாய் அதிகரிக்கப்பட்டு ஒவ்வொரு உழவனையும் அரசும் போற்ற வேண்டும். பார்வைகள் தாழ்த்திப் பார்ர்கும் பாவனைகள் போய்...அவர் உழவர், விவசாயி எழுந்து இடம் கொடுங்கள்......என்று கை கூப்பி எல்லோரும் தொழ வேண்டும்.

" உண்டி கொடுத்தோர்.........உயிர் கொடுத்தோர் அல்லவா....?

கழுகின் சீரிய சிறகடிப்பில் தொடர்ந்து விவசாய தொழிநுட்பங்களையும் அதன் முறைகளை வாசகர்களுக்கு வரும் வாரங்களில் அளித்துக் கொண்டே இருப்போம்!

வாழ்க விவசாயம்!  வளர்க விவசாயிகள்!



கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 




Thursday, August 25, 2011

பஞ்ச்' சாமிர்தம் 25.08.2011 (நூறு நாள் அதிமுக ஆட்சி, நேரு கைது.. இன்னும் நிறைய..!)




பஞ்ச் 1:

சினிமாவுல ஒவ்வொரு பிரேம்லயும் வந்து நின்னு மூச்சு விடாம பக்கம் பக்கமா வசனகர்த்தா எழுதி கொடுத்த வசனங்கள கண்ணு செவக்க பேசிட்டுப் போற விஜயகாந்த், அதிமுக ஆட்சி பற்றி ஒரு வருசத்துக்கு பேசமாட்டேன்னு சொல்லியிருக்கறது 2011 சூப்பர் காமெடியாவே அறிவிக்கலாம்.

எலக்சன் நேரத்துலயே முன்னுக்குப் பின் முரணா பிரச்சாரம் செஞ்சு, ஏகப்பட்ட குளறுபடிகள செஞ்சு இருந்தாலும், இத்தனை சீட்டுக்கள கொடுத்து மக்கள் ஜெயிக்க வச்சதுக்கு காரணம் புதுசா ஒருத்தன் வந்து ஏதாச்சும் செய்யமாட்டானா? அப்டீன்ற ஒரு எதிர்ப்பார்ப்பு +கடந்த ஆட்சி மேல இருந்த வெறுப்பு அப்டீன்றத விசய்காந்த் சார் புரிஞ்சுக்கணும். கேக்க வேண்டிய கேள்விகளை சரியான நேரத்துல கேக்காம இருக்கறதும் தப்புன்னு வெளங்கிகிட்டு, 

மக்கள் பிரச்சினைகளை பேசவும் ஆளுங்கட்சியோட முரண்களை சுட்டிக் காட்டவும் நேரம், நாளு குறிக்க வேண்டியதில்லைன்னும் உணரணும்..!

பஞ்ச் 2:

100 நாள் ஆட்சிய அம்மா நிறைவு செஞ்சு இருக்கும் இந்த வேளையில் சாமானியப் பார்வையாகப் பார்த்தால்  காவல்காரர்களை எல்லாம் சுதந்திரமா யாருக்கும் பயப்படாம அம்மாவுக்கு மட்டுமே பயந்து நடக்குறதால சட்டம் ஒழுங்கை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தது, அரசியல் ஸ்டண்ட் என்று எல்லோரும் வர்ணித்தாலும் கூட தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு மாத உதவியை ரூபாய் 400ல் இருந்து 1000 ஆக உயர்த்தியது, சட்ட சபையில் அரக்கன் ராஜ பக்சேக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது மேலும் பொருளாதரத் தடையை இந்தியா விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது, வாக்களித்த படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்று கொண்டிருப்பது, மற்றும் தனது கடந்த இரண்டு ஆட்சிகளை விட மிக எளிமையாய் தற்போது பவனி வருவது ....என்று மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் கை கொடுத்து பூங்கொத்துக்களை நாம் கொடுக்கும் அதே நேரத்தில்....

கடந்து போன ஆட்சியின் திட்டங்களை தேடித் தேடி மாற்ற முயலுவது, சமச்சீர் கல்வி விவகாரத்தில் தனது வழமையான பிடிவாதக் கொம்புகளை வெளிக்காட்டி சறுக்கி விழுந்தது, புதிய தலைமைச் செயலகத்தை சீர்படுத்தி அதை தலைமைச் செயலகமாகவே பயன்படுத்த முயலாமல், மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்து மற்றுமொரு வழக்கினை எதிர் கொண்டிருப்பது என்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருக்கும் சில விசயங்களுக்காக....

நறுக்...நறுக்..நறுக் என்று குட்டவும் நமக்கு உரிமையிருக்கிறது. 

பஞ்ச் 3:

மீடியாக்கள் எல்லாம் கொஞ்சமாச்சும் மாற்று சிந்தனையோட விசயங்களை ப்ளாஷ் பண்ணணும். எப்போ பாத்தாலும் ஒரு நடிகன், அரசியல்வாதி பத்திரிக்கையாளன் அல்லது செல்வாக்கு உள்ளவங்க சொல்ற கருத்தை மட்டும் அல்லது அவர்களின் செயல்களை மட்டும் கொட்டை கொட்டைஎழுத்துல பேப்பர்ல போட்டு மூஞ்சியை டிவில காட்டி தங்களோட வியாபாரத்தை பெருக்கிக்க மட்டும் சுயநலமா நடந்துக்க கூடாது.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவா வயல்ல கடும் வேலை செய்ற ஏழை விவசாயிகளும், தனியார், மற்றும் அரசு அலுவலர்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுபவர், காய்கறி விற்பவர் என்று எல்லா பொது மக்களும் ஆதரவு தெரிவிச்சு, உண்ணாவிரதம் இருந்து ஆக்ரோசமா பேசுறத எல்லாம் ப்ளாஸ் பண்ணாதா மீடியா....சினிமா நடிகர்கள் உண்ணாவிரத்தையும், அவுங்க சொன்ன கருத்துக்களையும், ப்ளாஷ் பண்ணி சமூக அக்கறை என்னமோ அவுங்களுக்கு மட்டும்தான் இருக்குற மாதிரி காட்டுறது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது.

சினிமா நடிகர்கள் உண்ணாவிரதமும், ரஜினி ஆதரவு தெரிவிச்சதும் விஜய் சார் டெல்லி போறதையும் ப்ளாஷ் பண்ணினா மட்டும் போதாது மீடியாஸ்....,சாமானிய மக்களையும் எடுத்துக் காட்டுங்க....!

நல்லாருக்கு உங்க பத்திரிக்கை தர்மம் எல்லாம்...!

பஞ்ச் 4:

முன்னாள் அமைச்சர் நேருவையும் நில அபகரிப்பு வழக்குல கைது பண்ணி இருக்காங்க. தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் கைது ஆகிட்டு இருக்கறத பாத்தா...சராசரியா சில கேள்விகள் மனசுல எழுறத தடுக்க முடியலை.

1) போன ஆட்சில இவர்கள் குற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்களா அல்லது அப்போது காவல்துறை ஆளும் கட்சிதானே என்று கண்டும் காணாமல் இருந்ததா?


2) முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் போது தற்போதைய ஆளும் அரசு நியாயத்தைதான்  கடைபிடிக்கிறது என்பதற்கு கொடுக்கும் அத்தாட்சிகளின் உண்மைத் தன்மையை நீதி மன்றங்கள் நடுநிலையோடு ஆராயுமா?



3) இப்போது அதிமுக பக்கம் அடிக்கும் நியாத்தின் ஒலி மீண்டும் ஆட்சி மாறினால் திமுக பக்கம் அடித்து அப்போது அதிமுக அமைச்சர்கள் எல்லாம் இப்படி வரிசையாக கைது செய்யப்படுவார்களா?

இப்படியெல்லாம் மனசுல தோனுற கேள்விகள் தோணும் போதே... யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு தெரிஞ்சுக்க முடியாம ஒரு குழப்ப நிலையிலயே மக்கள் இருப்பதுதான் அவலத்தின் உச்சமா இருக்கு!

பஞ்ச் 5:

நம்மை மாதிரியே மக்கள் வளம் அதிகமா இருக்குற ஒரு நாடு சீனா, ஒரு 20 வருசத்துக்கும் முன்னாடி மக்கள் தொகை பெருக்கத்த மைனஸா சொல்லி எல்லோரும் விமர்சனம் பண்ணிட்டு இருந்தாங்க, ஆனா அதே மக்கள் தொகையை மனிதவளத்தை வச்சே தன்னோட உற்பத்தியைப் பெருக்கி இன்னிக்கு ஆசிய பிராந்தியத்துல அசைக்க முடியாத சக்தியா நிக்கிறதோட பல வல்லரசு நாடுகளுக்கும் அச்சத்தை கொடுக்கும் பெரும் சக்தியா மாறி இருக்கு.

நம்ம நாட்லயும் மக்கள் வளம் இருக்கு, இயற்கைவளம் இருக்கு, இன்னும் சொல்லப் போனா சீனாவை விட, இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாடுகளையும் விட இளைஞர்களை அதிகமா கொண்டிருக்கிறோம் இருந்தாலும் கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளாலும், ஊழல் பெருச்சாளிகளாலும், சரியான பார்வையில் விடயங்களை விளங்கிக் கொள்ளாத மக்கள்களாலும் நாடு குட்டிச் சுவரா போய்க்கிட்டு இருக்கு...

மக்களின் பார்வைகள் தெளிவா மாறி, தான் திருந்தறதோட, தப்பு செய்றவங்களுக்கு சப்போர்ட் பண்ணாம விழிப்புணர்வு கொண்டவர்களா மாறவேண்டியது நம்ம நாட்டோட ஒரு உடனடி தேவை...!




கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes