எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் தன்னை ஒரு அரசியல் சக்தியாக வெளிப்படுத்தி காட்டிக் கொண்ட காலத்திலிருந்து தனக்கென மிகப்பெரிய அடையாளமாக செல்வி ஜெயலலிதா அன்று முதல் இன்று வரை கொண்டிருப்பது பிடிவாத குணம். 1989ல் திமுக வென்று கிட்ட தட்ட 13 வருட கால இடைவெளிக்குப் பிறகு அரியாசனத்தில் ஏறிய போது 27 இடங்களை அதிமுக ஜெ அணி பிடித்த போதுதான் அதிமுக தொண்டர் பலம் ஜானகி எம்.ஜி.ஆரின் பக்கம் இல்லை. அது மீண்டும் ஒரு திரை வசீகரமான ஜெயலலிதாவையே சுற்றியுள்ளது என்று அப்போதைய அரசியல்வாதிகளுக்கே தெரியவந்தது.
எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரால் பெரிதும் மதிக்கப்பட்ட முக்கிய தலைவர்களை எல்லாம் எட்டி உதைக்கும் போக்குடனே செயல்பட்டு வந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசியல் அனுபவத்தையும், திராவிட பராம்பரியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. சாதுர்ய அரசியல் நடத்தத் தெரியாத, சமயோசித குள்ள நரித்தனங்கள் அறிந்திராத ஐயா திரு.நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் முதலில் திமுவிற்குள்ளேயே திரு கருணாநிதியின் கால்கள் தன்னை மிதித்துக் கடந்து திமுகவின் தலைமை பொறுப்பிற்கு செல்ல அனுமதித்தார். பிறகு எம்.ஜி.ஆரின் வசீகர அதிரடி அரசியலில் கெளரவமாய் அரசியல் நடத்தவும் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வேறு வழியின்றி சிக்கிக் கொண்ட நாவலர் உள்பட பல மூத்த திராவிட தலைவர்கள், உதிர்ந்த முடி, பிய்ந்த செருப்பு, மற்றும் தெரு நாய் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு பல முறை கட்சியிலிருந்து வெளிச் செல்வதும் பின் மீண்டும் உள்வருவதுமாயிருந்தனர்.
எம்.ஜி.ஆரை எதிர்த்து நமது கழகம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கி பின் மீண்டும் எம்.ஜி.ஆரிடமே அடைக்கலம் புகுந்த ஐயா திரு. எஸ்.டி.எஸ் அவர்களும் இதில் அடக்கம்.
காலம் போகிற போக்கில் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட 1991ல் செல்வி ஜெயலலிதா ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராகி தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவும் செய்தார். அவருடைய பிடிவாத குணம் 80 சதவீதம் அவருடைய மைனஸ் என்றால் 20 சதவீதம் அதுவே அவருடைய பிளஸ் ஆகவும் இருந்தது. 1991 - 1996ல் தமிழகத்தில் என்ன நடந்தது, அம்மையாரின் அடாவடிகள், ஆடம்பரம், மற்றும் ஊழல், லஞ்ச லாவண்யம் என்னவென்று இந்தக் கட்டுரை மீண்டும் ஒரு முறை எழுதாமல் உங்களுக்கு ஞாபகப்படுத்துவதோடு மெல்ல அடுத்த விடயத்திற்கு நகர்கிறது.
வரலாறு காணாத ஊழலுக்கு வித்திட்டு கருணாநிதியின் கடந்த கால ஊழல்களை எல்லாம் மைக்ரோ லெவலுக்கு கொண்டு சென்ற பெரும் பெருமையை தனது 1991 - 1996 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா நிகழ்த்திக் காட்டினார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாய் 1996 ஆம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலிலும் அமைந்தது.
1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார். இந்தக்கட்டுரையை ஜெயலலிதாவை மையம் கொண்டு நகர்வதால் திமுகவையும் அதன் தலைமையையும் நாம் சைட் ரோலிலேயே வைத்துக் கொள்வோம். 1996 - 2001ல் எவ்வளவோ நல்ல விடயங்களைக் கருணாநிதி அரசு செய்ய முயன்றது அல்லது செய்தது என்பதை நடுநிலையாளர்கள் அறிவர்....அதே நேரத்தில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாய் மிக எச்சரிக்கையாய் காய்களை நகர்த்திய கருணாநிதி தனது அதிரடி பழிவாங்கும் படலங்களை தொடங்கிய காலமும் இதுதான்...! அதிமுக அமைச்சர்கள் எல்லாம் கைதானார்கள்.. ஜெயலலிதா உள்பட...
2001ல் ஆட்சிப் பொறுப்பிற்கு ஜெயலலிதா வந்ததற்கு முழு முதற்காரணமாய் வலுவான கூட்டணி அவருக்கு உதவி செய்ததுடன், வழக்கமான தமிழ்மக்களின் பரிதாபத்தில் ஒரு ஐயோ பாவம் ஏழைச் சகோதரி என்ற ஒரு இரக்க மனப்பான்மையும், திமுக ஆட்சியில் கைதாகி இன்னலுற்றார் என்ற ஒரு பச்சாதாபமும், திமுகவை தொடர விடாமல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா... மக்களுக்கு என்ன என்ன செய்யலாம் என்று யோசிக்கும் முன்னரே ஒரு நாளாவது கருணாநிதியை சிறையிலடைக்க வேண்டும் என்ற வஞ்சத்தை முதலில் தீர்த்துக் கொண்டார்.
மக்கள் இப்படி மாறி மாறி திமுகவையும் அதிமுகவையும் அரியணையில் ஏற்றிப் பார்த்தது தனிப்பட்ட அந்த அந்த தலைவர்களின் சிறப்பிற்காகவோ அல்லது அந்த அந்த கட்சியின் திறமையான ஆட்சிக்காகவோ அல்ல என்பதை சாமன்ய தமிழர்களே தெளிவாக அறிவர்.
திரு. கருணாநிதியின் கடந்த ஐந்தாண்டு கால தமிழ்த் துரோக ஆட்சியில் தமிழன் வெகுவாய் பாதிக்கப்பட்டுதான் போனான். தமிழ்த்துரோக ஆட்சி என்று கூறுவது ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உதவவில்லை என்பதற்காக மட்டும் கூறவில்லை...மாறாக நிர்வாக குளறுபடிகளால், வரலாறு காணாத மின்பற்றாகுறை, மற்றும் சாமானிய மக்களின் அடிப்படை தேவைகளை, வாழ்வாதாரங்களை கொடுக்காத திட்டங்களை தீட்டியது, இலவசம் என்ற கவர்ச்சி அரசியல் விஷத்தை தமிழகத்தில் பரவவிட்டது....என்று அடுக்கிக் கொண்டே போகலாம்...!
ரியல் எஸ்டேட் துறை என்று மட்டுமில்லாமல் தமிழகத்தின் எல்லா தொழில் துறையிலும் திமுக தலைமையின் குடும்பத்தினர் மற்றும் திமுகவினரின் கைகளே தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கையில் சாமானிய மக்கள் விக்கித்துப் போய் நின்று கொண்டிருக்கையில்தான் ஸ்பெக்ட்ரம் என்னும் மிகப்பெரிய மோசடி விளையாட்டில் திமுக சிக்கி அதன் உச்சகட்ட தலைவர்கள் எல்லாம் கைதாகவும் செய்தார்கள்...!
அன்றாடங்காய்ச்சிகள் தெருவில் பசியோடு திரிந்து கொண்டிருக்கையில்,. ஆயிரக்கணக்கான கோடிகளில் திமுகவினரின் கை நேரடியாக இருந்ததை ஜீரணிக்கவே முடியாத தமிழர்களும், ஈழத்தில் போர் நடந்த போது காங்கிரசோடு கை கோர்த்துக் கொண்டு இழைத்த துரோகத்தை மறக்க முடியாத தமிழர்களும், ஏற்கெனவே தொழில் ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்சார பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள்...
வேறு வழியின்றி குத்திய சின்னம்தான் இரட்டை இலை.
ஜெயலலிதாவின் அரசியல் திறத்துக்கோ அல்லது கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாய் அவர் கொடநாட்டில் படுத்துக் கொண்டு போராடிய போராட்டங்களுக்கு நன்றியாகவோ, தமிழன் அவருக்கு வாக்களிக்க வில்லை. வேறு வழி இல்லை....வேறு ஆளும் இல்லை என்று தமிழன் நினைத்த போது அடித்த பம்பர் குலுக்கலில் தான் தமிழக முதல்வரானார் செல்வி.ஜெயலலிதா...!
அவருடைய கல்வியும், அதிரடியான முடிவுகளும் எவ்வளவு வசீகரமானவையோ அவ்வளவு கொடூரமானவை என்பதையும் தற்போது தமிழகத்துக்கு அவர் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழக் முதல்வராய் இருக்கும் செல்வி.ஜெயலலிதா கொஞ்சம் புத்திசாலித்தனமாக தனது ஹிட்லர் தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பது மட்டுமே ஒரே ஒரு பரிணாம வளர்ச்சியன்றி வேறு எள் அளவும் அவர் மாறவில்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்களை நாம் அடுக்கி வைக்க முடியும்...
சமச்சீர் கல்வி விடயத்தில் அவர் நடந்து கொண்ட சிறுபிள்ளைத்தனம், சட்டசபை, நூலகம், மக்கள் நலப்பணியாளர்கள் விடயம் என்று விரிந்து கொண்டே செல்வதும், ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் அவரது தலையில் நறுக் நறுக் என்று கொட்டி திருத்துவதும், அவருக்கு அவமானமாக தெரிகிறதோ இல்லையோ....ஏழரை கோடி பேர்களை ஆளும் ஒரு தலைவர், அந்த ஏழரை கோடி பேர்களில் நாமும் ஒருவர் என்பதால் நமக்கு அவமானம் பிடுங்கித் திங்கத்தான் செய்கிறது.
நில மோசடிகளுக்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகளில் பழிவாங்கும் தன்மை இருக்கிறதோ, இல்லையோ ஆனால் திமுக அமைச்சர்கள் இதில் மிதமிஞ்சி விளையாடி இருக்கிறார்கள் என்பதால் அதை நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் என்றாலும் இதிலும் அவர் மக்கள் நலனுக்காக செய்கிறார் என்பது குறைந்த சதவீதம்தான் என்பதையும் நாம் உணரவேண்டும்.
முழு மெஜாரிட்டியோடு அரியணை ஏறியது யாருக்காக என்று முதல்வர் இன்றுவரை அறிந்திடவில்லை என்பதற்கான சாட்சியங்கள்தான் அடுப்படி தேவைகளான பால் மற்றும், பேருந்து கட்டணங்களின் உயர்வு. நிர்வாகத் திறமையால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் எங்கெங்கே நுட்பமாக வரி கூட்ட வேண்டுமோ அல்லது யாரிடம் இருந்து பெறவேண்டுமோ என்று மக்களின் வாழ்வியல் தரத்தை மையப்படுத்தி அவர் ஏதேனும் செய்திருந்தால் அது நிர்வாகத் திறமை..அதற்கு நாம் சபாஷ் போடலாம்...!
குப்பனையும், மாரிமுத்துவையும், ஜோசப்பையும், பாட்ஷாவையும் நீங்கள் மேலும் தர்ம சங்கட சூழலுக்கு தள்ளிவிட்டு வறுமை அரக்கனை அவர்கள் மீது ஏவி விட்டிருக்கிறீர்கள் என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வர் அவர்களே...?
கடந்த காலத்தில் உள்ளவர்கள் கஜானாவை காலியாக்கி சென்று விட்டனர் என்றால் அது எப்படி மக்கள் பிரச்சினை ஆகும்...? அது சட்டப்பிரச்சினை அல்லவா? ஆதாரப்பூர்வமாய் புள்ளி விபரங்களை எடுத்து கடந்த ஆட்சியாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து ஆதாரப்பூர்வமாய் நிரூபித்து நஷ்ட ஈடு வாங்குங்கள்.. இல்லையேல் அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இனியும் ஏறவிடாமல் செய்ய வழி வகை செய்யுங்கள்...
எங்களை பொறுத்த வரையில் நிர்வாகம் செய்யத் தெரியாத ஒரு தான்தோன்றித்தனமான, சாமன்ய மக்களின் குரல்வளையை நெறிக்கும் ஒரு கட்சியை நாங்கள் ஆட்சி பொறுப்பில் ஏற்றிவிட்டோம் என்ற சங்கடமும் எரிச்சலும்தான் வருகிறது.
திமுக சரியில்லை என்று அதிமுகவிடம் வந்தால் நீங்களும் சரியில்லாதவர் என்று பறை அறிவித்து தெரிவிப்பதோடு அல்லாமல் எங்கள் நெஞ்சுகளில் எட்டி மிதிக்கச் செய்து விட்டு நான் எங்கே செல்வேன் உங்களிடம்தானே வருவேன் என்று பிச்சைக்காரனை போல கையேந்துகிறீர்கள்? ஓட்டுக்கும் கையேந்தல்தான்....அரசு நடத்தவும் கையேந்தல்தான்....இப்படி கையை ஏந்திவிட்டு உங்களுக்கு மக்கள் மீது பயமில்லாமல் போயும் விடுகிறது.....விளைவு பரமக்குடி துப்பாக்கிச் சூடு....ஆறு ஏழு பேர் பழி..
எந்த ஒரு பிரச்சினையின் தீர்வும் எல்லோருக்கும் சுகமாய் முடிய வேண்டும்...அப்படி முடிவெடுப்பது ஒரு நல்ல தலைமைக்கு அழகு...! ஆனால் தமிழக முதல்வரின் முடிவுகள் எல்லாம் யாரோ ஒருவரை கொன்று கிழிக்கும்...துரதிருஷ்ட வசமாக அந்த யாரோ ஒருவர் எப்போதும் மக்களாகிப் போகின்றனர்.
ஈழப் பிரச்சினைக்கு முன் வாசலில் ஆதரவு தருகிறார்....கொல்லைப் புறத்தில் கழுத்தை நெரிக்கிறார். மூவர் தூக்கிற்கு வேண்டாம் என சட்ட சபையில் தீர்மானம் போடுகிறார். பின்னாளில் தலைமைச் செயலக அதிகாரி மூலம் நீதிமன்றத்தில் தூக்கில் போட யாதொரு தடையும் தமிழக அரசு சொல்லவில்லை என்று பல்டி அடிக்கிறார்...
விலைவாசியை ஏற்றி விட்டு.... தான் மட்டும் சுகவாசியாய் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்று விடுகிறார்...! அம்பேத்கார் போன்ற தலைவர்கள் எல்லாம் எம் மக்கள் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் விழித்திருக்கிறேன் என்று நள்ளிரவு வரை உறங்காமல் இருந்திருக்கிறார்கள்....
ஆனால்....
தமிழக மக்களை நடு ரோட்டில் திண்டாட விட்டு விட்டு தமிழக மக்களின் தலைவர் ஒய்வெடுக்கச் சென்று விட்டார்....! செல்வி ஜெயலலிதா மாறவில்லை என்பதை தமிழக மக்கள் தெளிவாக உணரும் அதே தருணத்தில் மீண்டும் இவரிடம் வாங்கிய அடி தாங்க முடியாமல் திமுக கொட்டாரத்துக்கு ஓடிச்சென்று காலில் விழுந்து விடாமல் இனி வரும் காலங்களில் சமயோசிதமாய் ஒவ்வொரு தமிழனும் நடந்து கொள்ளவேண்டும்....அப்படி நடந்து கொள்ள உயரிய புரிதலும், விழிப்புணர்வும் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தலோடுஅடுத்த தேர்தல் வரை நம்மால் பொறுத்திருக்கத்தான் முடியும் எனக்கூறிகட்டுரையை நிறைவு செய்கிறோம்.
கழுகிற்காக
தேவா
தேவா
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)